Sunday, October 22, 2017

மகளிர் மட்டும்

இன்று மகளிர் மட்டும் திரைப்படம் பார்த்தேன். கதை நன்றாக இருந்தது. 3 நாட்கள் வெளியே சென்று வந்தால் எல்லாம் மாறிவிடும் என்பது கற்பனை தான். ஆனாலும் 3 நாளில் இதுவரை தான் இயந்திரமாக தன்னை மறந்து தன் குடும்பம், பொருளாதாரம் என்ற இரண்டினை மட்டுமே சிந்திக்கும் தமிழ்ப் பெண்களின் சிந்தனையில் மாற்றம்தர இத்தகைய ஒரு கதையை இயக்குனர் தேர்ந்தெடுத்தது சிறப்பு.
பொதுவாகவே ஆணோ பெண்ணோ அவ்வப்போது பயணம் செல்ல வேண்டும். அப்போதுதான் இயந்திரம் போல குறிப்பிட்ட சில வேலைகளியே மூழ்கிக் கிடக்கும் நமக்கு ஒரு மாற்று அனுபவம் ஏற்படும்.
இந்தப் படத்தில் பானுப்பிரியா கேரக்டர் போல தமிழகத்தில் நான் சில பெண்களைச் சந்தித்திருக்கின்றேன். உடுத்த சேலையும், போட்டுக்கொள்ள நகையும் சென்று வர காரும் இருக்கும். ஆனால் தான் எதற்காக வாழ்கின்றோம் என்பதையே மறந்து கணவன் பிள்ளைகள் தேவையை மட்டும் இந்த வகைப் பெண்கள் செய்து கொண்டிருப்பர். வீடு, குறிப்பாக சமயலறையிலே அவர்கள் வாழ்வு. இதனை மீறி வெளியே விடுமுறை சென்று ஊர் சுற்றிப்பார்த்து வருகின்றோம் என வாயைத் திறந்து சொல்லி விட முடியாது. அதன் பின்னர் வீடு நரகமாகிவிடும்.
ஆனால் கணவனுக்கோ வெளி உலக தொடர்பு.. பறந்த அனுபவங்கள்.. பல செய்திகள்.. தனது
திறமையை வளர்த்துக் கொள்ள நிறைய வாய்ப்புகள் என அமைந்துவிடும். அதற்கு அடித்தளமாக மனைவி இருக்க வேண்டும்.
தனக்கும் ஒரு உயிர் இருக்கின்றது. அந்த உயிருக்கும் ஓர் ஆசை இருக்கின்றது. தன் சிந்தனைகளையும் விரிவாக்கிக் கொள்ள வேண்டும் என நினைத்தாலும் அதனை இவ்வகை கணவன்மார் அனுமதிப்பதில்லை. வெளியுலகம் தனக்கு. பணம் சம்பாதித்து தருகிறேன். உனக்கு என்ன வேண்டுமோ தருகிறேன். பிறகு எதற்கு வெளியே போக வேண்டும்? என்பதுதான் இத்தகைய கணவன்மார்களின் எண்ணம்.
இத்தகையோர் தனது மனைவிகளும் ஒரு உயிர் தான் என்பதை மறந்து விடுகின்ரனர்.
உலகைச் சுற்றி ப்பார்த்தால் காக்கை குருவி, விலங்கினங்கள் கூட சுதந்திரமாக நடமாடுகின்றன. ஆனால் பல தமிழ்ப்பெண்கள் வீட்டிற்குள்ளேயே ஒரு வகை சிறைவாசம் தான் வாழ்கின்றனர். ஏழை குடும்பங்களில் இந்த நிலை இல்லை. ஆணும் பெண்ணும் உழைக்கின்றனர். குறிப்பாக சற்று வசதிபடைத்த நடுத்தரவர்க்கத்திற்கும் மேலே இருக்கும் குடும்பங்களில் இன்றும் இத்தகைய நிலை தொடர்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.
இத்தகைய பெண்களின் நிலை பாவம். சிறிய வட்டத்திற்குள்ளேயே அவர்கள் வாழ்க்கை அடங்கி விடுகின்றது.
சுபா

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 137

மணிமேகலை ஆராய்ச்சிக்காகப் பௌத்தத்தை அறிந்து கொள்ளும் முயற்சியை உ.வே.சா தொடங்கியிருந்தார். தனக்குப் பரிச்சயமில்லாத பௌத்த கொள்கைகளை அறிந்து கொள்ள நூல்களை வாசிப்பதும், அவரது கல்லூரியில் பணியாற்றிய ரங்காசாரியாருடன் கலந்துரையாடுவதும் தினம் தினம் நடந்து கொண்டிருந்தது. பௌத்தக் கொள்கைகளை அறிந்து கொள்வதற்காக ரங்காச்சாரியாருடன் உ.வே.சாவுக்கு ஏற்பட்ட நட்பு தொடர்ந்தது. ஆங்கிலத்தில் அமைந்த பல பௌத்த நூல்களை உ.வே.சாவிற்கு மொழி பெயர்த்து அவர் கூறுவார். மணிமேகலையை அதன் தொடர்போடு இணைத்துப் பார்த்து புரிந்து கொள்ள அது மிக உதவியது என்றே கூற வேண்டும்.


ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் இதே போல மணிமேகலை ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருந்தது. அந்த வேளையில் ரங்காச்சாரியாருக்குக் கல்லூரியில் பணிமாற்றம் கிடைக்கவே அவர் சென்னைக்குச் செல்ல வேண்டிய சூழல் அமைந்தது. செல்லும் போது மணிமேகலை அச்சுப்பதிப்புப் பணியை உ.வே.சா கண்டிப்பாக முடித்து விட வேண்டும் என உறுதியாகக் கேட்டுக் கொண்டார் ரங்காச்சாரியார். ஏனெனில் அவர் உள்ளத்தில், தமிழில் இத்தகைய அறிய பௌத்த நூல் ஒன்று இருப்பது ஏனையோருக்கும் சென்றடைய வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்திருந்தது. உ.வே.சாவும் சென்னை வந்து அங்கேயும் ரங்காச்சாரியாருக்கு அன்புத்தொல்லைக் கொடுத்து இந்த நூலைக் கட்டாயமாக அச்சுப்பதிப்பாகக் கொண்டு வந்து விடுவதாக உறுதியளித்தார்.


இவர்கள் இருவரது ஆய்வின் போதும் மணிமேகலையில் இலங்கை தொடர்பான பல செய்திகளையும் அறிந்து கொள்ள முடிந்தது. இலங்கையில் உள்ள இடங்களின் பெயர்கள் மணிமேகலையில் குறிப்பிடப்பட்டிருந்தமையால் அவை எங்கே இருக்கிறன என்று அறிந்து கொள்வதில் இவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. இலங்கையில் வசித்த பொ.குமாரசாமி முதலியாருக்கு இந்த இடங்களைப் பற்றிய தகவல் தெரிந்திருக்கலாம் என எண்ணி அவருக்குக் கடிதம் எழுதினார் உ.வே.சா. அதுமட்டுமன்றி இலங்கையில் பௌத்தம் பற்றிய தகவல்களையும் அவர் வழங்க வேண்டும் எனவும், இந்தப் பணியில் யாரேனும் உதவ முன்வந்தால் அவர்கள் தொடர்பினைத் தருமாறும் கேட்டுக் கொண்டார்.


இந்த முயற்சிகளின் வழி இலங்கையில் வித்யோதய கலாசாலையில் முதல்வராக இருந்த பௌத்த மத ஆசிரியர் சூமங்களர் என்ற பெரியவர் ஒருவருடைய தொடர்பு கிட்டியது. உ.வே.சாவிற்கு எழுந்த சந்தேகங்களை அவர் கடிதங்களின் வழி விளக்கமளித்துத் தெளிவினை ஏற்படுத்தினார் என்பதையும் உ.வே.சா வின் குறிப்புக்களின் வழி அறிய முடிகின்றது.
இத்தகைய பல்வகைப்பட்ட ஆய்வு முயற்சிகளினால் பௌத்த மதக் கொள்கைகள் பற்றிய அடிப்படைத் தகவல்களை உ.வே.சா சிறிது சிறிதாக கற்கும் சூழல் உருவாகியது. இதனால் மணிமேகலையை நன்கு புரிந்து அந்தப் புரிதலுடன் அதன் அச்சுப்பதிப்பாக்கப் பணியை ஆரம்பிக்க இந்த முன்னேற்பாடுகள் உறுதியான அடிப்படையை அமைத்துக் கொடுத்தன.
மணிமேகலையின் எந்த விளக்கமும் பொருளுரையும் இல்லாத மூலம் மட்டும் 1891ம் ஆண்டு திருமயிலை வித்துவான் சண்முகம் பிள்ளை என்பவரால் அச்சுப்பதிப்பாக வெளியிடப்பட்டிருந்தது. இது உ.வே.சா மணிமேகலையைப் பதிப்பிப்பதற்கு முன்னரே வந்த மணிமேகலை அச்சுப் பதிப்பாகும். ஆனால் அதில் பொருள் வரையறை ஏதும் இல்லாமல் ஏட்டுச் சுவடியிலுள்ள பாடங்களை அவர் அச்சாக்கி இருந்தார். அதனை வாசிப்போருக்கு மணிமேகலையை அறிந்து கொள்வதில் சிரமம் இருந்தது. ஏட்டில் உள்ளதை அப்படியே அச்சாக்குவது மட்டும் பதிப்புப் பணியாகாது. அதோடு அச்சிடுபவர் சரியாகத்தான் அச்சுப்பதிப்பாக்கத்திற்குத் தயார் செய்கின்றாரா என்பதும் மிக மிக முக்கியம். இந்தப் பதிப்பைப் பற்றி உ.வே.சாவின் நண்பர் தி.த.கனகசுந்தரம் பிள்ளை ஒரு கடிதத்தில் குறிப்பிடும் போது ‘எட்டி குமரனிருந்தோன்றன்னை’ என்பது ‘எட்டிருமானிருந்தோன்’ என்றும், ‘ஆறறி யந்தணர்’ என்பது ‘ஆற்றி யந்தணர்’ என்றும் அச்சிடப்படுமாயின் அதனால் விளையும் பயன் யாதென்பதைத் தாங்களே யறிந்து கொள்ளவும்” (29-3-1891) என்று குறிப்பிடுகின்றார்.


ஆக, ஏட்டிலிருந்து தாளில் அச்சுப்பதிப்பாக கொண்டு வருவது மட்டும் அச்சுப்பதிப்புப் பணியல்ல. நூலை, அது உருவாக்கப்பட்ட காலகட்டத்தின் சூழலையும் பின்புலத்தையும் அறிந்து, சொற்களுக்கானப் பொருளை அறிந்து தெளிந்து, விடுபட்ட அல்லது உடைந்த பகுதிகளை அப்படியே விட்டு வைத்து அதனை வாசிப்போருக்குத் தெளிவு படுத்தி பதிப்புக்கும் போதுதான் உண்மையான பதிப்புப் பணி என்பது நிகழும். இல்லையென்றால் ஒரு நூலைத் தவறான கருத்து தரும் படி மாற்றிய குற்றமே பதிப்பாசிரியருக்கு வந்து சேரும். இதுவரை வெளிவந்த அச்சுப்பதிப்பு அனைத்தும் குறைகள் அற்றவை எனக் கொள்வதே தவறு. பல நூல்கள் இடைச்சேர்க்கை, பிழையான பதிப்பு முயற்சி என்ற காரணங்களினால் பொருள் மாற்றம் ஏற்பட்டிருக்க மிகுந்த வாய்ப்புள்ளமையால் இதுகாறும் பதிப்பிக்கப்பட்ட நூல்களையும் தமிழறிஞர்கள் மீண்டும் மீண்டும் ஆய்வு செய்து காலச் சூழலை மனதில் கொண்டு அந்த நூல்களில் உள்ள பிழைகளை நீக்கி மறுவாசிப்பும் மறுபதிப்பும் கொண்டு வருவது தற்காலத்திலும் தேவையான ஒன்றே. இதனை உலகளாவிய அளவில் இயங்கும் கல்விக்கூடங்கள் கவனத்தில் கொண்டு இத்தகைய பணிகளையும் தொடக்க வேண்டியது அவசியம் என்றே கருதுகிறேன்.

தொடரும்...

சுபா

Friday, October 20, 2017

ஜாதகப் பொறுத்தம்

திருமணத்திற்கு சாதியெல்லாம் பிரச்சனை இல்லை.. இப்போது ஜாதகப் பொறுத்தம் தான் பிரச்சனை என குமுறுகிறார்கள் பலர்..
சரி.. ஜாதகம் பார்த்து கல்யாணம் கட்டினா என்ன பார்க்காமல் கட்டினா என்ன? கணவன் மனைவிக்குள் வரும் பிரச்சனையும் மனித குலத்துக்கே உள்ள எல்லா பிரச்சனைகளும் வரத்தானே போகின்றன..!!
பிறகு எதற்கு இந்தத் தேவையற்ற ஜாதகத்தைப் பார்த்து பல இளம் ஆண்களையும் பெண்களையும் திருமணம் செய்ய விடாமல் தடுக்கின்றார்கள் “பெரியவர்கள்”..?
ஜாதகம் பார்த்து திருமணம் செய்தவர்கள் ஒரு பிரச்சனை இல்லாமல் என்றும் ஆனந்தக் கடலில் நீந்திக் கொண்டே பயணம் செய்கின்றார்களா என்ன?
ஜாதகம் பார்க்காமல் கல்யாணம் செய்து வாழும் பல கோடி மக்கள் அனைவரும் துன்பக் கடலில் தவிக்கின்றார்களா என்ன??
-சுபா

ஆண்களுக்குத் திருமணம்

தமிழகத்தில் தற்சமயம் ஆண்களுக்குத் திருமணம் நடைபெறுவதில் பலத்த சிரமம் இருப்பதாக ஒரு பிம்பம் காட்டப்படுகின்றது. குருக்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குப் பெண் கிடைக்கவில்லை. ஆக, கணினித் தொழிலுக்குச் சென்றிருந்தால் பெண் கிடைத்திருக்குமே என ஒரு புலம்பல். கணினித் தொழிலில் இருந்தாலும் ஆசிரியர் தொழிலில் இருந்தாலும் கூட பெண் கிடைக்கவில்லையே என இன்னுமொரு புலம்பல்.
அதில் குறிப்பாக தம்மை மேல்தட்டு சாதி வர்க்கம் என நினைப்போர் அல்லது நடுத்தர சாதியினர் என்ற நிலையில் இருப்போர் என்ற சூழலில் இது அதிகமாக உள்ளது.
எனக்குத் தெரிந்த சூழலிலேயே திருமணத்தை நாடும், ஆனால் திருமணம் நடைபெறாத பெண்கள் பலர் இருக்கின்றனர். நன்கு படித்தும் உயர் பதவியிலும் கூட இருக்கின்றனர். ஏழ்மையான சூழலில் எளிமையான வாழ்க்கையை நடத்தும் பெண்களும் இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை.
எனக்குத் தெரிந்து இதற்கு முக்கிய காரணம் சாதி மட்டும் தான்.
பெண் கிடைக்கவில்லை எனச் சொல்லும் ஒவ்வொரு ஆண் மகனும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தோரும் தங்கள் மனதைத் தொட்டு உண்மையைப் பேச முன் வரவேண்டும். இத்தகையோர் பட்டியலில் இருப்பது கீழ்க்காணும் வரிசை மட்டுமே:
1. தன் சாதியில், அப்படி இல்லையென்றால் தனக்கு உயர்ந்த சாதியில் இல்லையென்றால் தன் சாதியிலிருந்து அடுத்த நிலையில் உள்ள ஒன்று இரண்டு நிலை சாதியில்.
2. பெண் வசதியான குடும்பத்தைச் சார்ந்திருக்க வேண்டும். தனக்கு பொருளாதார ரீதியாக உதவும் குடும்ப பின்புலம் இருக்க வேண்டும்.
3.பார்க்க வெள்ளைத்தோலுடன் இருக்க வேண்டும். ஒல்லியாக இருக்க வேண்டும்.
2ம் 3ம் இருந்தாலும் 1 இல்லையென்றால் அந்தப் பெண் பட்டியலில் இடம் பெற மாட்டார். ஏனென்றால் அம்மா தற்கொலை செய்து கொள்வார், அப்பாவின் மானம் போய்விடும், குடும்பத்தார் வெளியே தலைகாட்ட முடியாது... இன்னும் இன்னும்..எனக் காரணங்கள் சொல்வர்.
ஆக, இப்படி ஆண்கள் ஒரு வரையறையை வைத்துக் கொண்டு பெண் கிடைக்கவில்லையே என ஏன் புலம்புகின்றீர்கள். நியாயமாக இருக்கின்றதா?
சாதி என்ற ஒரு சிந்தனையைக் கடந்தால் எத்தனையோ பொருத்தமான பெண்கள் உங்கள் கண்முன் தென்படுவார்களே..
இன்னும் எத்தனை காலத்திற்குத் தான் திருமணமாகாத ஆண்கள் இந்த பூசி மெழுகும் பொய்க்காரணத்தைச் சொல்லிக் கொண்டு தன்னையே ஏமாற்றிக் கொண்டிருப்பரோ..!
சுபா

Monday, October 16, 2017

அதிரசமே, கலிங்கத்து காதே (Kuih telinga keling )மலேசிய சடங்கு முறைகளிலும் சரி, உணவுப் பழக்கவழக்கங்களிலும் சரி, அதிகமாகத் தமிழ்ப்பண்பாட்டின் தாக்கம் இருப்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். திருமணத்தில் தூவப்படும் மஞ்சள் அரிசி, மன்னருக்குக் கொடுக்கப்படும் மஞ்சள் நிறத்துக்கான அதிக மதிப்பு, வெற்றிலைப் பாக்கு வைத்து சடங்குகளைச் சிறப்பிப்பது என்பவை அவற்றுள் சில. பலகாரங்களை எடுத்துக் கொண்டால் தமிழ்ப்பலகாரங்கள்  பலவற்றை மலாய்க்காரர்கள் இயல்பாகச் செய்வது மலேசியாவில் மிக இயல்பான ஒன்று. அப்படிப்பட்ட சில பலகாரங்களில் ஒன்றுதான் அதிரசம்.

சர்வ சாதாரணமாக சாலையோரக்கடைகளில் ப்ளாஸ்டிக் பைகளில் விற்கப்படும் அதிரசங்களை மலேசியக் கடைகளில் காணலாம். குறிப்பாக நெடுஞ்சாலை உணவகங்களின் கடைகளில் இவை கிடைக்கும்.

நாம் பழகிவிட்ட அதிரசங்களைப் போன்ற வடிவத்திலும் குட்டி குட்டியாக சிறிய வடிவத்திலும் இவை கிடைக்கும்.

மலாய் மொழியில் இதனை  Kuih Adhirasam அதாவது அதிரசப் பலகாரம் என அழைப்பர். இதற்கு வேறு பெயர்களும் உண்டு.  நடுவில் ஒரு ஓட்டை போட்டு வடை போல நாம் சுடும் அதிரசத்தைச் சற்று மாற்றி, நடுவில் 3 அல்லது 4 ஓட்டைகளை ஏற்படுத்தி எண்ணையில் சுட்டு எடுப்பார்கள். மாவு தயாரிப்பு நமது அதிரசத்துக்குச் செய்யும் அதே தயாரிப்புத்தான். இந்த சற்றே வித்தியாசமான இந்த அதிரசத்தை மலாய் மொழியில்   Kuih denderam அல்லது Kuih paniaram என்றும் அழைப்பர். அதை விட அதற்கு இன்னுமொரு சிறப்புப் பெயரும் இருக்கின்றது. அதுதான் Kuih telinga keling என்பது.

ஏன் telinga keling என்று அழைக்கின்றனர் எனத் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா.. ? telinga என்றால் மலாய் மொழியில் காது என்று பொருள். keling என்றால் கலிங்கர்கள்,  அதாவது மலாய் மக்கள் தமிழர்களைக் ”கலிங்கர்கள்”, ”கெலிங்கா”,  என்றுதான் சுட்டிக் காட்டுவர். முன்னர் இயல்பான அடையாலச் சொல்லாக இருந்த இந்த ”கெலிங்கா” என்ற சொல் இன்று  தவறான சுட்டிக் காட்டுதல் என்ற அடிப்படையில் பொது இடங்களில் பேசக்கூடாத ஒரு சொல்லாக மலேசிய சூழலில் உள்ளது.

ஒரு தமிழரை நோக்கி ”கெலிங்கா” என்று ஒரு சீனரோ மலாக்காரரோ சொன்னால் அது ஒரு தமிழரை அவமானப்படுத்தும் சொல் என்ற வகையில் மூவினங்கள் சேர்ந்து வாழு ம்மலேசிய சூழலில் தவிர்க்கப்பட வேண்டிய சொல்லாக இன்றைய நிலையில் இச்சொல் கையாளப்படுகின்றது. ஆனால் வரலாற்றை நாம் அறிந்து கொண்டால் அது கலிங்கத்திலிருந்து வந்தவர்களை அடையாளப்படுத்த மலாய் மக்கள் பண்டைய காலம் தொட்டு பயன்படுத்திய சொல் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஆக தமிழர்களின் காது போல இந்த அதிரசம் இருக்கின்றதாம். அதனால் இதற்கு Kuih telinga keling என்று பெயர் வைத்து விட்டனர் மலாய்க்காரர்கள்.

மலாய்க்காரர்களில் பலர் இதனை தமிழ்ப்பலகாரம் என்றே மறந்து விட்டனர். தங்களது பண்டைய பாரம்பரிய உணவில் ஒன்று இது என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

ஆக, தீபாவளி நாளில் அதிரசம் சாப்பிடுவோர் இதன் மலாய் மொழி பெயரையும் நினைத்துக் கொண்டே சாப்பிடுங்கள். நம் அதிரசம் நம் பாரம்பரிய உணவு.  அதனை மறக்கலாமா?

அன்புடன்
சுபா

Sunday, October 15, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 136

சைவ சமய பின்புலத்தோடு வளர்ந்தவர் உ.வே.சா. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடத்துப் பயிற்சி பெற்று பின்னர் திருவாவடுதுறை மடத்தில் தேசிகரிடம் கற்றவர். ஆகையினால் வலுவான சைவ சமயப் பின்னணி அவருக்கு நிறைந்திருந்தது. அவ்வப்போது மடத்திற்கு வருகின்ற வைஷ்ணவ அன்பர்களிடமிருந்தும் மகாவித்வானிடமிருந்தும் வைஷ்ணவ நூல்களையும் கற்றிருந்ததால் வைணவ நெறிகளைப்பற்றிய பின்புலத்தையும் அவர் பெற்றிருந்தார். சீவக சிந்தாமணி பதிப்புக்கான ஆராய்ச்சியின் போதுதான் உ.வே.சாவிற்குச் சமண சமய நெறிகளைப் பற்றிய அறிமுகம் கிட்டியது. பல சமண நண்பர்களின் துணையும் கிடைத்ததால் சமண நூல்களைப் படித்தும் அவர்களுடன் கலந்துரையாடியும் அந்த நெறி பற்றிய விசயங்களையும் மதக் கொள்கைகளையும், வழிமுறைகளையும் அறிந்து கொண்ட பின்னரே சீவக சிந்தாமணியை உ.வே.சா பதிப்பித்தார். 

பௌத்தமத பின்புலம் என்பது உ.வே.சாவிற்கு பரிச்சயம் அற்றது. மணிமேகலையை அச்சுப்பதிப்பாக்க வேண்டும் என்று ஆர்வத்தில் முதலில் தயாரிப்புப் பணிகளை ஆரம்பித்து விட்டார். வாசிக்க ஆரம்பித்ததும் அது எந்தச் சமய பின்னணியில் அமைந்த நூல் என்பதே அவருக்குப் பிடிபடவில்லை. கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியராக இருந்த மளூர் ரங்காசாரியர் என்பவர் மணிமேகலை பௌத்த சமயத்தைச் சார்ந்த நூல் எனச் சொல்லி விளக்கிய போதுதான் அது தனக்கு அன்னியமான ஒரு மதம் சார்ந்த ஒரு நூல் என்ற விசயமே அவருக்குப் புலப்பட ஆரம்பித்தது. 

முதலில் இது என்ன சமயத்து நூல் என அறிந்து கொள்ள முடியாமல் தவித்த தவிப்பை விட இப்போது கூடுதல் கவலை அவருக்கு வந்து விட்டது. பௌத்தம் நமக்குத் தெரியாத மதமாயிற்றே. புத்தமதமே இந்தியாவில் இல்லையே. பௌத்தர்களை நாம் எங்கே போய்த்தேடி உதவிக் கேட்பது என அவருக்கு மிகுந்த வருத்தம் உண்டாயிற்று. 

உ.வே.சாவின் இக்குறிப்பை வாசிக்கும் போது இன்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்பான கால கட்டத்தில் பௌத்தம் பற்றிய பேச்சுக்களும் செய்திகளும் வழிபாடுகளும் மிக அருகிப்போய் இருந்த காலகட்டமாக அது திகழ்ந்திருக்கின்றது என்பதை அறிய முடிகின்றது. அந்த அளவிற்குத் தமிழகத்தை விட்டே பௌத்த சமயம் ஏறக்குறைய முற்றும் முழுதுமாய் அழிக்கப்பட்ட நிலை இருந்திருக்கின்றது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் தலைகள் கொய்யப்பட்ட, முகங்கள் சிதைக்கப்பட்ட புத்தர் சிலைகள் கிடந்தாலும் இவை இன்ன இன்ன சிலைகள் எனக் கண்டறியும் திறனும், பௌத்த மதம் அழிக்கப்பட்ட வரலாறும் பொதுவாகவே மக்களை எட்டாத நிலையே இருந்திருக்கின்றது என்பதை ஊகித்து அறிய முடிகின்றது. 

மணிமேகலையை வெளியிட வேண்டுமென்றால் முதலில் பௌத்தத்தை அறிய வேண்டும். ஆனால் அதற்கு நூல்கள் ஏதும் தன்னிடம் இல்லையே என வருந்திக் கொண்டிருந்த உ.வே.சாவிற்கு ரங்காசாரியர் கைகொடுத்தார். 
“நீங்கள் பயப்பட வேண்டாம்; பௌத்த மத சம்பந்தமான புத்தகங்கள் நூற்றுக் கணக்காக இங்கிலீஷில் இருக்கின்றன. வெள்ளைக்காரர்கள் ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள். நான் பலவற்றைப் படித்திருக்கிறேன். பாராதவற்றை நான் படித்துப் பார்த்து உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார். 

பௌத்த மதத்தை அறிந்து கொள்ளவேண்டும் என்ற தீவிர நாட்டம் உ.வே.சாவிற்கு எழுந்தது. முதலில் தன்னால் இயன்றவரை தாம் இதுகாறும் கற்ற தமிழ் நூல்களில் எங்கெங்கெல்லாம் பௌத்தம் பற்றிய குறிப்பும் மறுப்பும் வருகின்றன எனத் தேடி பட்டியலிடலானார். பௌத்தக் கருத்துக்கள் அடங்கிய நூல்களைத் தேடி வாசித்து ஆராயத்தொடங்கினார். நீலகேசியின் உரையில் பௌத்த மத கண்டனம் வருகின்ற பகுதிகளில் புத்தரின் வரலாறும் பௌத்த கொள்கைகளும் சொல்லும் செய்திகளைத் தனியே தொகுத்து எடுத்து எழுதிக் கொண்டார். புத்த மித்திரர் என்ற தமிழ்ப்புலவர் இயற்றிய வீரசோழியம் என்னும் இலக்கண நூலின் உரையில் புத்தபிரானைப் பற்றிய பல செய்யுட்கள் உள்ளன. அவற்றையும் வாசித்து தனியாகப் பட்டியலிட்டுக் கொண்டார். சிவஞான சித்தியார் என்ற சைவ நூலில் பரபக்கத்தில் பௌத்தத்திற்கு ஆசிரியர் வைக்கும் கண்டனங்களை வாசித்துத்தொகுத்துக் கொண்டார். இவை தவிர வேறெந்த தமிழ் நூல்களும் பௌத்தம் பற்றிய தமிழ் நூல்கள் என்ற வகையில் உ.வே.சாவிற்குக் கிடைக்கவில்லை. 

ஆங்கிலத்தில் மானியர் வில்லியம்ஸ், மாக்ஸ் முல்லர், ஓல்டன் பர்க், ரைஸ் டேவிஸ் ஆகியோர் எழுதிய புத்தகங்களை ரங்காசாரியார் வாசித்து தமிழில் மொழி பெயர்த்து உ.வே.சாவிற்கு விளக்குவார். அவற்றை உ.வே.சா குறிப்பெடுத்துக் கொள்வார். 

மேலும் சில புதிய புத்தகங்களை உ.வே.சா வாங்கிக் கொண்டார். பௌத்தம் பற்றிய ஆழமான பார்வை மணிமேகலையை அச்சுப்பதிப்பாகக் கொண்டுவர தனக்கு அவசியம் என்பதை உ.வே.சா உணர்ந்திருந்தார். 

மணிமேகலையின் செய்யுட்களைத் தொடர்ந்து வாசித்து வந்தார். முன்னர் தெளிவற்று இருந்த செய்யுட்களுக்கு இப்போது வெளிச்சம் பாய்ச்சினார்போன்ற புதுத் தெளிவு உ.வே.சாவிற்குக் கிட்டியது. இப்போது வாசிக்கும் போது பௌத்த சமயக் கருத்துக்கள் எளிய தமிழிலேயே அங்கே இருப்பதை உ.வே.சா அறிந்து கொண்டார். வாசித்து உள்ளம் மகிழ்ந்தார். உ,வே.சா வாசிப்பது,  ரங்காச்சாரியாருடன் அதனைச் சொல்லி கலந்து பேசி மகிழ்வதுமாக இந்த ஆய்வு வளரத் தொடங்கியது. அதனை உ.வே.சா இப்படிக் கூறுகின்றார். 

"புலப்படாமல் மயக்கத்தை உண்டாக்கிய பல விஷயங்கள் சிறிது சிறிதாகத் தெளியலாயின. இனிய எளிய வார்த்தைகளில் பௌத்த சமயக் கருத்துக்கள் அதிற் 
காணப்பட்டன. அவற்றைப் படித்து நான் இன்புற்றேன். ரங்காசாரியர் கேட்டுக் கேட்டுப் பூரித்துப் போவார். “ஆ! ஆ! என்ன அழகாயிருக்கிறது! 
மொழிபெயர்ப்பு வார்த்தைகள் எவ்வளவு பொருத்தமாக அமைந்திருக்கின்றன!” என்று சொல்லிச் சொல்லிப் பாராட்டுவார் புத்தரைப் புகழும் இடங்களைப் பல 
முறை படித்துக் காட்டச்சொல்லி மகிழ்ச்சியடைவார். “நான் இங்கிலீஷில் எவ்வளவோ வாசித்திருக்கிறேன்; ஆனால் இவ்வளவு இனிமையான பகுதிகளை 
எங்கும் கண்டதில்லை” என்று சொல்லுவார்." 

பௌத்த சமத்தின் நான்கு சத்தியங்களாகிய துக்கம், துக்கோற்பத்தி, துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் ஆகிய நான்கையும் மணிமேகலை இப்படிச் சுருக்கமாக எளிதாகக் கூறுகின்றது. 
“பிறந்தோ ருறுவது பெருகிய துன்பம்; 
பிறவா ருறுவது பெரும்பே ரின்பம்; 
பற்றின் வருவது முன்னது; பின்ன 
தற்றோ ருறுவ தறிக” 

மணிமேகலை உ.வே.சாவின் அச்சுப்பதிப்பாக்கத்தில் ஒரு மணிமகுடம். ஆதலால் அவரது எழுத்துக்களிலேயே அவரது அச்சுப்பதிப்பாக்க அனுபவங்களை நாம் வாசிப்பது இந்தப் பதிவிற்குப் பொருத்தமாக இருக்கும் எனக் கருதி கீழே சில பகுதிகளை வழங்குகிறேன். 

உ.வே.சா சொல்கிறார். 
"புத்த பிரானைப் புகழும் பகுதிகள் பல. தயாமூல தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்த அவர் திறத்தை நன்கு வெளிப்படுத்தும் அடிகளை நான் படிக்கும்போதெல்லாம் என் உடல் சிலிர்க்கும். 

‘தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன், மாரனை வெல்லும் வீரன், தீநெறிக் கடும்பகை கடிந்தோன், பிறர்க்கற முயலும் பெரியோன், துறக்கம் 
வேண்டாத் தொல்லோன்’ என்பன முதலிய தொடர்களால் பாராட்டி இருக்கிறார் மணிமேகலை ஆசிரியர். இடையிடையே பிற தமிழ் நூல்களிற் கண்ட தமிழ்ப்பாடல்களைச் சந்தர்ப்பம் வந்தபோது நான் எடுத்துச் சொல்லுவேன். புத்தர் பிரான் நிர்வாண மடைந்த காலத்தில் அவர் அருகில் இருந்தோர் புலம்புவதாகக் கொள்ளுதற்குரிய செய்யுள் ஒன்று வீரசோழிய உரையில் மேற்கோளாகக் காட்டப் பெற்றிருந்தது; 

“மருளறுத்த பெரும்போதி மாதவரைக் கண்டிலமால் 
என்செய் கேம்யாம் 
அருளிருந்த திரு மொழியா லறவழக்கங் கேட்டிலமால் 
என்செய் கேம்யாம் 
பொருளறியு மருந்தவத்துப் புரவலரைக் கண்டிலமால் 
என்செய் கேம்யாம்” 

என்னும் அச் செய்யுளை வாசித்தபோது படிக்க முடியாமல் நாத்தழுதழுத்தது. ரங்காசாரியரும் அதில் நிரம்பியுள்ள சோகரஸத்தில் தம்மை மறந்து உருகினார். 
இவ்வாறு புத்த சரித்திரத்திலே ஈடுபட்டு உருகியும் பௌத்த மத தத்துவங்களை அறிந்து மகிழ்ந்தும் பெற்ற உணர்ச்சியிலே மணிமேகலை ஆராய்ச்சி நடந்தது." 

உ.வே.சா ஒரு சிறந்த ஆய்வாளர். மதங்களைக் கடந்த ஆராய்ச்சி நெறிமுறைகளை அவர் கடைப்பிடித்தார் என்பதோடு வேற்று மதங்களின் மேல் காழ்ப்புணர்ச்சியற்ற தமிழ் ஆராய்ச்சி பார்வையையே அவர் கொண்டிருந்தார். இத்தகைய ஆராய்ச்சி நெறிமுறை இருந்தமையினால் தான் அவரால் சீவக சிந்தாமணி, மணிமேகலை, சங்கத்தமிழ் நூல்கள் போன்ற பல தமிழ் நூல்களை இன்றைய தலைமுறைக்கு அச்சுப்பதிப்பாக தந்து செல்ல முடிந்தது. 

பௌத்த எழுச்சி மீண்டும் கடந்த நூற்றாண்டில் தமிழகத்தில் தொடங்கப்பட்டதில் அயோத்திதாசப் பண்டிதர் போன்றோர் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றனர். அந்த வரிசையில் பௌத்த காவியமாகிய மணிமேகலையை ஆராய்ந்து அச்சிட்டு தமிழ் உலகுக்கு அளித்த உ.வே.சா குறிப்பிடத்தக்கவரே.

தொடரும்... 
சுபா 

Sunday, October 8, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 135சிலப்பதிகாரம், புறநானூறு ஆகிய நூல்களைப் பதிப்பிக்க ஆய்வில் ஈடுபட்டிருந்த வேளையில் புறப்பொருள் வெண்பாமாலை தொடர்பான சுவடிகளும் உ.வே.சாவிற்குக் கிடைத்திருந்தன. ஆக, தன்னிடம் இருந்த சுவடி நூல்களின் பாட பேதங்களை அவர் ஆராயத்தொடங்கினார். அந்த நூலின் இலக்கண விளக்கங்களை வாசித்து ஆராயத் தொடங்கினார். அந்த நூலின் உரைகளை ஆராயும் போது யார் எழுதிய உரை என்பது முதலில்  தெரியாமல் இருந்து பின்னர் அதன் உரையை எழுதியவர் இளம்பூரனார் என்பதையும் அறிந்து கொண்டார். தயாரிப்பு வேலைகள் முடிவுற்றதும் அவற்றை எடுத்துக் கொண்டு சென்னைக்குப் புறப்பட்டுச் சென்று அச்சகத்தில் கொடுத்துவிட்டு கும்பகோணம் வந்து சேர்ந்தார். ஏனைய முந்தைய நூல்களுக்கு இருந்த சிரமம் போன்று இந்த நூலுக்கு இல்ல. ஏற்கனவே ஆராய்ச்சிக்குத் தேவையான பல நூல்கள் கைவசம் இருந்தமையாலும், பதிப்புத் துறையில் ஓரளவு அனுபவம் கிடைத்திருந்தமையாலும் புறப்பொருள்வெண்பாமாலை நூல் அச்சுப் பதிப்பாக்கம் விரைவாக நடைபெற்றது. 

திருவாவடுதுறை ஆதீன திருமடத்தில் பல சுவடிகள் இருந்தன. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை தொடங்கி, பல தம்பிரான்களும் புலவர்களும் தேடிச்சேகரித்தவை, கைப்பட எழுதியவை என இங்குப் பல சுவடி நூல்கள் இருந்தன. ஆனால் அக்காலத்தில் மடத்தில் ஒரு நூலகம் என்ற அமைப்பு இல்லாமல் இருந்தது. அன்று ஆதீனகர்த்தராக இருந்த அம்பலவாண தேசிகர் இதனை மனதில் கொண்டு ஒரு நூலகத்தைத் திருவாவடுதுறை ஆதீன திருமடத்தில் அமைக்க வேண்டும் என விரும்பினார். அந்த நூலகத்தில் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலுமான நூல்கள் இருக்க வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. ஆக, அதனை மனதில் கொண்டு இன்று நாம் திருமடத்தில் காணும் சரசுவதி மகால் கட்டிடத்தை அவர் கட்டுவித்தார். 

நூலகம் உருவாகிய பின்னர் அதில் வைப்பதற்காக நூல்கள் தேவைப்பட்டன. இருக்கின்ற சுவடிகள் மட்டுமன்றி பல நூல்கள் இருந்தால் நூலகம் சிறப்புப் பெறும் என்பது தேசிகரின் விருப்பமாக இருந்தது. ஆக அந்த நூலகத்திற்குத் தேவையான நூல்களை வாங்க மடத்தைச் சேர்ந்த சிலரையும் உ.வே.சாவையும் தேசிகர் சென்னைக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் சென்னைக்குச் சென்று புத்தகக் கடைகளில் நூல்களைத்தேடி வாங்கி வரவேண்டுமென கட்டளை இருந்தது. அதுமட்டுமன்றி இராமநாதபுரம் ராஜா பாஸ்கர சேதுபதி அவர்களையும் தொடர்பு கொள்ளச் சொல்லி இந்த நூலகத்துக்குப் பொருளுதவி செய்யக் கேட்க வேண்டுமென்றும் எண்ணம் இருந்தது. 

சென்னைக்கு நூல்கள் வாங்க வந்த உ.வே.சா அங்குச் சென்னையில் தங்கியிருந்த மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்களையும் பார்த்து திருமடத்தின் நூலகச் செயல்பாடுகள் குறித்துத் தெரிவித்தார். மன்னரும் மனம் மகிழ்ந்து அந்த நூலகத்திற்கு வருகை தருவதாகவும் உதவி செய்வதாகவும் ஒப்புக் கொண்டார். இந்த நல்ல செய்தியை உடனே உ.வே.சா அவர்கள் தேசிகருக்குத் தெரிவித்தார். பின்னர் சென்னையில் அவர்கள் 5000 ரூபாய் பெறுமானமுள்ள நூல்களை வாங்கினர். வாங்கிய நூல்களையெல்லாம் ரயில்வண்டியில் ஏற்றி மடத்திற்கு அனுப்பி வைத்தனர். அன்றைய நாளில் ரூ.5000 என்பது பெரிய தொகை தான். ஆக நூலகத்திற்கு எவ்வளவு நூல்களை வாங்கியிருப்பர் என்பதை நம்மால் ஊகித்துப் பார்க்கலாம், அல்லவா?

2013ம் ஆண்டு நான் திருவாவடுதுறை மடம் சென்றிருந்த போது சரசுவதி மகாலில் தேடி எடுத்த மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் நூல்களை மின்னாக்கம் செய்தேன். அதுமட்டுமன்றி அந்த மடத்தின் பெரும்புலவர்கள் கைப்பட எழுதிய ஓலைச்சுவடி கட்டுகளை நேரில் பார்வையிட்டதோடு தமிழ் மரபு அறக்கட்டளை வரலாற்றுப் பதிவு ஒன்றினையும் பதிவாக்கி வெளியீடு செய்திருந்தேன். 

சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள நூல்கள் தமிழ் கூறு நல்லுலகத்தின் பொக்கிஷங்கள் எனலாம். பலரது அரியத் தேடலின் பலனாகச் சேர்க்கப்பட்ட சுவடிகள் அங்குப் பாதுகாக்கப்படுகின்றன. அவை மின்னாக்கம் செய்யப்பட வேண்டும் என்ற எனது கருத்தினை அங்கு நான் சென்றிருந்த போது குறிப்பிட்டேன். மடத்தின் தம்பிரான்களும் புலவர்களும் இப்பணியில் ஆர்வத்துடன் இருப்பதை அவர்களது ஆர்வம் எனக்கு உணர்த்தியது. 


தொடரும்..
சுபா