Friday, October 31, 2003

Dr.Robot



Dr.Robot பற்றி கேள்விப் பட்டிருக்கின்றீர்களா? கனடாவின் Ontario வைச் சார்ந்த மார்க்ஹாம் நிறுவனத்தாரின் உருவாக்கம் இந்த இயந்திர மனிதன். ஜப்பானியர்கள் மிக அதிகமாக மனிதர்களுக்குத் துணையாக இருக்கும் ரோபோட்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். வியக்கத்தக்க வகையில் மனிதர்கள் செய்யக்கூடிய சில காரியங்களைச் செய்கின்ற பல இயந்திர மனிதர்கள் உருவாகி விட்டன. [எனது Robotics in Tamil பகுதியில் மேலும் இதனைப் பற்றிய விபரங்களைக் காணலாம்.] அந்த வகையில் Dr.Robot இன்னொரு வரவு.

Dr.Robot என்னவெல்லாம் செய்ய முடியும் தெரியுமா? மனிதர்களைப் போலவே நடக்க முடியும், பேசும், நாட்டியம் ஆடும், நமது நடவடிக்கைகளைக் குறித்துக் கொள்ளும், நமக்கு பொருளாதார ஆலோசனைகள் வழங்கும். அதற்கும் மேலாக நாம் வீட்டில் இல்லாத போது வீட்டின் பாதுக்காப்பிற்காகவும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும். எவ்வளவு வசதியாக போய்விட்டது பார்த்தீர்களா! இந்த இயந்திர மனிதனின் விலை இன்னமும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனாலும் $1500 லிருந்து $3,000 வரை இருக்கலாம் எனத் தெரிகின்றது. wireless தொடர்பைப் பயன்படுத்தி இணையத் தொடர்பையும் உருவாக்கிக் கொள்ளும், Dr.Robot.

இயந்திரத்தனம் தெரியும் வகையில் உருவாக்கப்படும் ரோபோட்களைப் போலில்லாமல் பொம்மையைப் பார்ப்பது போன்ற எண்ணத்தை உருவாக்கும் வகையில் இதன் உருவம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. Dr.Robot 60 cm உயரம் இருக்குமாம்.

Wednesday, October 29, 2003

Online Book Shop's for Tamil books

நமது சொந்த நாட்டை விட்டு வெளியே வந்த பிறகு பற்பல சௌகரியங்களை இழந்து விட்டது போன்ற பிரம்மை சில வேளைகளில் தோன்றுகின்றது. சமயலுக்குக் கரிவேப்பிலை வேண்டுமென்றாலும் கூட இலங்கையிலிருந்து வருகின்ற விமானத்திற்காகக் காத்திருக்க வேண்டிய சூழ் நிலை. கரிவேப்பிலை மாத்திரம் இங்கு பிரச்சனை இல்லை. ஒரு புதிய தமிழ் புத்தகம் படிக்க வேண்டும் என நினைத்தால் என்ன செய்ய முடியும்? ஜெர்மனியில் இருக்கின்ற தமிழ் கடைகளிலெல்லாம் சஞ்சிககள் தான் கிடைக்கின்றன. அதிலும், India Today, விகடன், ராணி, துக்ளக் போன்றவை தான் கிடைக்கின்றன. இலக்கிய சஞ்சிகைகளைப் பற்றி கேட்டால் கடை வைத்திருக்கும் தமிழர்கள் நம்மைப் பார்த்துய் பயந்தே ஓட்டி விடுவார்களோ என அச்சப்படும் வகையில் நம்மிடமே சில நேரத்தில் சண்டைக்கு வந்து விடுகின்றனர்.

புதிய வரவுகள், சிந்தனைகளைப் பற்றிய பிரக்ஞயே இல்லாதவர்களாக ஆகிவிடுவோமோ என சில நேரங்களில் எண்ணத்தோன்றுகின்றது. இணையத்தில் வணிகத்திற்கு மிகச் சிறந்த வாய்ப்புக்கள் இருக்கின்ற இக்காலத்தில் தமிழ் புத்தக விற்பனை ஏன் அவ்வளவாக இல்லை என்பது கேள்விக்குறியாகவே தோன்றுகின்றது. வலைப்பக்கங்களைத் தேடும் போது, Amazon.com போல தமிழ் நூல்களுக்கும் இணையத் தளங்கள் இருக்கக்கூடாதா என மனம் ஏங்குகின்றது.
சுலேகா வலைத்தளத்தில் சுஜாத்தாவின் நாவல்களை வாங்க முடிகின்றது. இதேபோல சில நாட்களுக்கு முன்னர் நா.கண்ணனின் புத்தகத்தைக் கூட மானசராவ் வலைத் தளத்தில் பார்க்க நேர்ந்தது. ஆனால் இப்போது அந்த URL -ஐ கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கின்றது.

நண்பர்களே, உங்களுக்குத் தெரிந்த ஏதாவது Online Tamil Bookshop இருந்தால் எனக்கு அதன் URL -ஐ தெரியப்படுத்துங்கள்.

Tuesday, October 28, 2003

JK's Letters to the Schools - 7

[1 october 1982]
"We all want security physically as well as emotionally and this is becoming more and more difficult and painful." - J.K.

எனது சிந்தனை....

எதிரிகளிடமிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதுதான் இன்றைய பல அரசாங்கங்களின் முக்கியப் பிரச்சனை. புறத்திலே மட்டும் இந்தக் கவலையில்லை. மனத்திலே நாம் ஒவ்வொருவருக்கும் இந்த கவலை இருந்து கொண்டுதான் இருக்கின்றது.

நமக்கு ஏற்படுகின்ற அத்தனை பிரச்சனைகளுக்கும் மூல காரணமாக இருப்பது அச்ச உணர்வே. பாதுகாப்பு இல்லாத பட்சத்தில் மனதில் பயம் தோன்றுகின்றது. பய உணர்வு ஏன் தோன்றுகின்றது என்பதற்கு எத்தனையோ காரணங்களைச் சொல்லலாம். ஆனால் மிக முக்கியக் காரணமாக அமைவது பாதுகாப்பு இல்லாமை தான். பாதுகாப்பு இல்லாமல் நாம் தனிமைப் படுத்தப்பட்டு விடுகின்ற சமயத்தில் மனத்திலே பயம் பூதாகாரமாக வியாபித்து விடுகின்றது.


மனம் பல வகையில் கற்பனை செய்யும் திறமையை பெற்றிருக்கின்றது. உண்மையில் நடக்காத பல விஷயங்களை மனத்தால் கற்பனை செய்து பார்க்க முடியும். அந்த கற்பனையை மீண்டும் மீண்டும் செய்து மனதிலே பதிய வைக்கும் போது அந்த கற்பனை மனதிலே நிஜமாகிப் போய் விடக்கூடிய சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன. மனத்திலே காண்கின்ற விஷயங்களை மீண்டும் மீண்டும் நினத்துப் பார்த்து அந்த நினைவுகளையே நிஜம் என நினைக்கும் ஒரு நிலையை அடைந்தவர்களால் நிஜமாக புற உலகில் நடப்பதைக் காணமுடியாது. மனம் அடிப்படையில் அமைதியாகவும் இன்பமாகவும் இருப்பதையே விரும்புகின்றது. அளவுக்கு மீறிய பிரச்சனைகள், கவலைகள் தோன்றும் போது அந்தப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் திறன் இல்லாதவர்கள், கற்பனை செய்து, அந்தக் கற்பனை உலகில் வாழ்வதையே பாதுகாப்பாக நினைக்கும் நிலைக்கு வந்து விடுகின்றனர். சில வேளைகளில் தங்களையே வருத்திக் கொள்ளும் வகையில் கூட கற்பனைகள் அமைந்து விடுவதுண்டு. இது ஒரு வகையான திரிபு நிலை. உண்மையை உண்மையாகக் காணமுடியாத நிலை.

உறவுகள், சுற்றத்தார், குடும்பத்தினர் என சொந்தங்களை விரும்பி அமைத்துக் கொள்வதும் இந்தப் பாதுகாப்பை எண்ணித்தான். பொதுவாக திருமணப் பேச்சை எடுப்பவர்கள் கூட, பிற்காலத்தில் பாதுகாப்பிற்காக ஒரு துணை தேவை என வலியுறுத்தியே திருமண பந்தத்தையே ஆரம்பித்து வைக்கின்றனர். குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கும் கூட, பிற்காலத்தில் வயதான காலத்தில் பிள்ளகள் உதவுவார்களே என நினைப்பவர்களும் உண்டு. சுற்றத்தாரின் அரவணைப்பில் இருக்கும் போதும் நமக்கு பாதுகாப்புக் கிடைப்பதாக நினைத்துக் கொள்கின்றோம்.

ஆனால் உண்மையில் அப்படி இருப்பதில்லை. எனது வாழ்க்கையில் நடக்கின்ற அனைத்து விஷயங்களுக்குமே நானே மூல காரணமாக அமைகின்றேன். எனது துன்பங்களை என் உறவினர்களால் ஓரளவு தீர்த்து வைக்க முடியுமே தவிர முற்றாக ஒழித்து விட முடியாது. அவர்களால் ஆறுதல் சொல்ல முடியுமே தவிர வேதனையிலிருந்து என்னை வெளியேற்றி உடனே ஒரு தீர்வினை எனக்குத் தந்து விட முடியாது. இதுதான் உண்மை. அவரவர் வாழ்க்கைக்கும் அவரவரே பொறுப்பு. ஆக மனதில் உறுதியையும், தெளிவையும், தன்னம்பிக்கையையும் சேர்த்துக் கொள்ளும் போதுதான் படிப்படியாக பய உணர்வை போக்கிக் கொள்ள முடிகின்றது.

Sunday, October 26, 2003

Jensy

இளையராஜாவின் இசையில் இனிய பாடல்களைப் பாடியவர் ஜென்ஸி. இவரது பாடல்கள் அனைத்துமே பிரசித்தி பெற்றவை. ஆனால் இந்தப் பாடகியை இன்றுதான் ஜெயா தொலைகாட்சியின் ராகமாலிகா நிகழ்ச்சியின் வழி பார்க்க முடிந்தது. மிகவும் குறைச்சலாகவும் மலையாளம் கலந்த தமிழிலும் பேசுகின்றார்.

என் வானிலே ஒரே வென்னிலா
மீன் கொடி தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான்
ஆயிரம் மலர்களே மலருங்கள்
மயிலே மயிலே உன் தோகை எங்கே.

போன்றவை என்னால் மறக்கமுடியாதவை!

இவரது பாடல்களின் சிறு பட்டியல் ஒன்று இந்த வலைப்பகுதியில் இருக்கின்றது. ஆனால் பாடலைக் கேட்கமுடியவில்லை. http://www.raajangahm.com/ric/song/VoiceOfJNC.html
[ யாருக்காவது இவரது பாடல்களின் Link இருந்தால் எனக்கு எழுதுங்கள். ]

Friday, October 24, 2003

Happy Diwali




இருளை விலக்கும் நல்லொளி உள்ளம் முழுதும் நிறைந்திட
இனிய தீபாவளியைக் கொண்டாடுவோம்.

Sunday, October 19, 2003

Azhagi Tamil Software

இன்று தொலைக்காட்சியில் பார்த்த ஒரு விஷயத்தைப் பற்றி பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். விசுவின் அரட்டை அரங்கத்தில் இந்திய தேசிய தினத்தன்று நெய்வேலியில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியின் வழி ரு அருமையான விஷயத்தை அவர் நம் எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டார். தமிழகத்தைச் சார்ந்த திரு விஷ்வநாதன் உருவாக்கியிருக்கும் அழகி என்ற தமிழ் மென்பொருளைப் பற்றிய ஒரு அறிமுக நிகழ்ச்சியைத் தனது நிகழ்ச்சியிலேயே ஒரு அங்கமாக வைத்து, வந்திருந்த பார்வையாளர் அனைவரும் அந்த மென்பொருளை அறிந்து கொள்ளும் படி செய்து விட்டார் விசு. "தமிழில் கணினிகளில் பயன்படுத்த எத்தனையோ மென்பொருட்கள் வந்து விட்டன. ஆக இதில் என்ன விஷேஷம் இருக்கின்றது" என்று கேட்கத் தோன்றுகின்றது இல்லையா?

இந்த மென்பொருளை உருவாக்கியிருக்கும் இளைஞரான திரு. விஷ்வநாதான் உடல் நோயினால் வாடுபவர். தனது மனைவி மற்றும் குடும்பத்தாரின் அரவனைப்பின் வழி, வெளி உலக தொடர்புகளைப் பெற்று தனது கணினில் மென்பொருளை உருவாக்கி வெற்றி கண்டிருக்கின்றார். விசுவின் இந்த அரட்டை அரங்கம் நிகழ்ச்சிக்கு வருவதற்குள் உடல் உபாதையின் கரணமாக பல முறை வாந்தியெடுத்து சிரமப்பட்டிருக்கின்றார். 7 km தூரம் வெளியே செல்வதே இவருக்கு நினைத்துப் பார்க்க முடியாத சிரமமான ஒரு காரியம். எப்போழுதும் தனது நோயின் காரணத்தால் அறையிலேயே அடைந்து கிடக்கும் திரு. விஷ்வநாதானுக்குக் கணினியில் அதுவும் தமிழில் எதாவது செய்தே தீரவேண்டும் என்ற தனியாத ஆர்வத்தினால் தமிழில் எழுத வழிவகுக்கும் இந்த 'அழகி' மென்பொருளை உருவாக்கியிருக்கின்றார்.

இந்த மென்பொருளைப் பற்றி தெரிந்து கொள்ள http://www.azhagi.com/ என்ற வலைப்பக்கத்துக்குச் சென்று பாருங்கள். இந்த மென்பொருளின் விலை மிகவும் மலிவாகவே இருக்கின்றது. சோதனை செய்து பார்க்க ஏதுவாக free download பகுதி ஒன்றும் வழங்கியிருக்கின்றார். இந்த மென்பொருளைப் பயன்படுத்தி Microsoft Office மென்பொருட்களிலும் மேலும் Yahoo, MSN chat போன்றவற்றையும் தமிழிலேயே செய்ய முடியும். இது ஒரு பாராட்டப்படக் கூடிய ஒரு சாதனை என்பதை மறுக்கவே முடியாது.

எத்தனையோ திறமைகள் வெளி உலகத்துக்குத் தெரியாமலேயே முடங்கி விடுகின்றன. இம்மாதிரியான திறமைகளை வெளி உலகத்துக்குக் கொண்டுவந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தொலைக்காட்சிகள் அதிகமாகவே பங்கு வகிக்க முடியும். அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் விசுவின் சேவை ஒரு நல்ல உதாரணம். அவரது சேவைத் தொடர வேண்டும்.

Tuesday, October 14, 2003

JK's Letters to the Schools - 6



15 February 1982 அன்று எழுதப்பட்ட ஒரு கடிதத்திலிருந்து சில வரிகள்....

"What are you going to become as a human being? ..... Are you going to become a mediocre human being without any passion, in conflict with yourself and with the world? This is really a serious question you have to ask yourself."
- by J.K



நான் பல முக மூடிகளை வைத்திருக்கின்றேன். மற்றவரின் தேவைகேற்ப முக மூடிகளை மாற்றிக் கொண்டு நான் என்னை அவர்களுக்கு வெளிக்காட்டிக் கொள்கின்றேன். பிறர் விரும்பும் வகையில் என்னைக் காட்டிக் கொள்வதுதான் சரி என்று நினைக்கின்றேன். அதனால் எனக்கு இந்த முகமூடிகள் தேவைப்படுகின்றன. இந்த முகமூடிகள் இல்லாமல் இருந்தால் எங்கே, நான் என்னோடு பழகும் பிறரை திருப்தி படுத்தமுடியாமல் போய்விடுமோ என்று அஞ்சுகின்றேன். ஆனால் என்னோடு நான் சம்பாஷித்துக் கொள்ள எனக்கு முகமூடி தேவையா என்ற கேள்வியை எனக்குள்ளே கேட்க மறந்து விடுகின்றேன். சில வேளைகளில் நான் அணிந்திருந்த முகமூடிதான் உண்மையில் நான் என்று என்னையே நான் பொய்யாக நினைத்துக் கொள்கின்றேன். முக மூடிகள் இல்லாமல் நான் என்னைக் காண எனக்கு தைரியம் இருக்கின்றதா? முகமூடிகள் இல்லாமல் நான் என்னை மற்றவர்களுக்கு வெளிப்படுத்திக் கொள்ள எனக்கு தைரியம் இருக்கின்றதா?

என்னை யாரும் குறை சொல்லி விடக்கூடாது என்று நான் அஞ்சுகிறேன். உலகமே என்னைத்தான் பாரட்ட வேண்டும் என்று விரும்புகின்றேன். என்னை நான் மிகவும் தூய்மையானவராக, உயர்ந்த சிந்தனை உடையவராக, அன்புள்ளம் படைத்தவராக, அதோடு 'எல்லாம்' தெரிந்தவராக காட்டிக் கொள்ள விரும்புகின்றேன். இந்த மாயத்திரையை பிறர் கிழித்தெரியும் போது திகைத்து நிற்கிறேன்.

என்னுடைய எல்லா முகமூடிகளும் கிழிந்து விட்ட நிலையை அந்த கணத்தில் தான் நான் உணர்கின்றேன். இதுவரை நான் போட்டிருந்த அனைத்து முகமூடிகளும் நிறந்தரமற்றவை என்பதை உணரும் போது ஆள்மனத்தில் மாபெரும் சலனம் தோன்றுகின்றது. அப்படியென்றால் எதுதான் நிரந்தரம்?முகமூடிகளைத் தூக்கி எறிந்து விட்டு என்னை, எனது சிந்தனைகளை, எனது முகமூடியற்ற முகத்தை நானே எந்த விதமான மாயாஜாலங்களும் இன்றி பார்க்கின்றேன். நான் என் இப்படி இருக்கின்றேன்?

நான் ஏன் இப்படி சிந்திக்கின்றேன் என்று என்னையே நான் கேள்விகள் கேட்கின்றேன். என்னை இப்போது என்னால் சரியாகப் பார்க்க முடிகின்றது. ஒரு தந்தைக்கும் தாய்க்கும் மகளாக அல்ல; ஒரு தோழனுக்கும் தோழிக்கும் தோழியாக அல்ல; ஒரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் ஒரு சகோதரியாக அல்ல; ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பொறியியலாளராக அல்ல; ஒரு மனிதராக என்னை நான் காண்கின்றேன். இந்த முகமூடிகளையெல்லால் தூக்கி வீசிவிட்டு, நான், எனது ஆன்மாவின் சிந்தனை, எனது அபிலாஷைகள் யாவை என்பதை சிந்திக்கின்றேன். இப்போது எனக்கு எந்த வித மாயையும் அற்ற நிலையிலேயே என்னை பிடிக்கின்றது. இதில் சலனம் இல்லை. என் முகமூடி கிழிந்துவிடுமோ என்ற அச்சம் இல்லை!

Immense Beauty!




பார்க்கும் இடமெல்லாம் அழகு நிறைந்திருக்கின்றது, இந்த உலகில். இயற்கையின் எழில் வார்த்தைகளினால் விளக்கமுடியாத ஒன்று. இறைவன் இயற்கையாய் என்னோடு கலந்திருக்கும் போது மனம் ஆனந்ததில் லயிக்கின்றது.

எல்லாம் நல்ல நாளே! அதில் இன்று எனக்கு ஒரு இனிய நாள்!


பாரதி இப்படிப் பாடுகின்றான்.

இறைவா! இறைவா!


பல்லவி

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் - எங்கள்
இறைவா! இறைவா! இறைவா! (ஓ - எத்தனை)

சரணங்கள்

சித்தினை அசித்துடன் இணைத்தாய் -அங்கு
சேரும்ஐம் பூதத்து வியனுல கமைத்தாய்.
அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய
மாகப் பலபலநல் லழகுகள் சமைத்தாய். (ஓ- எத்தனை)

முக்தியென் றொருநிலை சமைத்தாய் - அங்கு
முழுதினையு முணரும் உணர் வமைத்தாய்
பக்தியென் றொரு நிலை வகுத்தாய் - எங்கள்
பரமா! பரமா! பரமா! (ஓ - எத்தனை)


குறிப்பு: இந்தப்பாடலை பேகடா ராகத்தில் நித்யஸ்ரீ பாடியிருக்கின்றார். அவரது Divine Melodies கேட்டுப் பாருங்கள்!

Monday, October 13, 2003

Vajrayana

"Tantric Grounds and Path" என்ற தலைப்பிலான ஒரு புத்தகம் ஒன்றினை சென்ற ஆண்டு கலிபோர்னியா சென்றிருந்தபோது வாங்கி வந்திருந்தேன். புத்த தத்துவத்தை விளக்கும் ஒரு வழியான வஜ்ராயனாவை விளக்கும் நூல் இது. "வஜ்ராயனா எனும் இந்த வாழ்க்கைப் பாதையை கடைபிடிப்பது அசாதாரணமான ஒன்று. இதனை கடைபிடிக்க விரும்பினால் மிகவும் உயர்ந்த யோக நிலையை கடைபிடிக்க வேண்டும். அதோடு 'Prayer of the stages of the Path' எனப்படும் இந்த இறைவாழ்த்தையும் மனனம் செய்து உணர்ந்து படித்து கடைபிடிக்க வேண்டும்" என்று இந்த நூல் ஆரம்பிக்கின்றது.

அதில் சில வரிகள்; இவை மனதை கவர்ந்தவை:

When I become a pure container
Through common paths, bless me to enter
The essesnce practice of good fortune,
The supreme vehicle, Vajrayana

வஜ்ரயனா எனும் இவ்வழி, சாத்திரங்களை படிப்பதன் வழியாக ஒருவன் புத்தராக முடியாது; மாறாக தந்திரங்களை முறையாகக் கற்று அதனை அனுஷ்டிக்க வேண்டும் என்று கூறுகின்றது. படிக்கப் படிக்க பல புதிய விஷயங்களை இன்நூல் ஆசிரியர் கையாளும் விதம் சிறப்பாக இருப்பதை அதுவும் சித்தர்களின் சிந்தனைகளோடு மிக மிக ஒத்திருப்பதை உணர முடிகின்றது.

Sunday, October 12, 2003

JK's Letters to the Schools - 5

" ..that very learning is order...... In a school, routine is necessary but this is not order. A machine that is well put together functions effectively. How will an educator, if he has deeply learned all this, convey to the student the nature of order? if his own inward life is in disorder and he talks about order, he will not only be a hypocrite, which in itself is a conflict, but the student will realize this is a double-talk..... When one is very honest, that very hoesty is transmitted to another." - by J.K.

இந்தப் பகுதி ஒழுக்கம் ஒழுங்கு என்பனவற்றைப் பற்றிப் பேசுகின்றது. பொதுவாகவே நல்ல சிந்தனை நல்ல செயல் என்று பேசும் போது நமக்குப் எப்போதும் பிறருக்கு அறிவுறைக் கூறி "இப்படி நடந்து கொள், நீ செய்வது தவறு, இப்படி மாற்றிச் செய், என்னைப் போல இருக்கப்பழகிக் கொள்" என்று பலவாறாக நம்மை சிறந்தவர்களாகக் காட்டிக் கொண்டு மற்றவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுக்கவே நமது எண்ணமும் மனமும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஓரிடத்தில் ஒரு தவறு நிகழ்ந்து விட்டால் அந்தத் தவறுக்கு நான் தான் காரணமாக இருக்கின்றேன் என்பதைப் பார்க்க மனது தயங்குகின்றது. பிறரின் மீது அந்த தவற்றுக்கான காரணத்தைச் செலுத்தி மற்றவர்கள் தான் அந்தப் பிரச்சனை உருவாகக் காரணமானவர்கள் என்று கூறி தப்பித்துக் கொள்ளும் ஆசாமிகளாகவே நாம் பெரும்பாலும் இருக்கின்றோம். நமது சுய தவறுகளை மணக்கண்ணைக் கொண்டு நன்றாகப் பார்த்து நானும் தவறு செய்தவர் தான்; நான் தான் அந்தத் தவறு நடப்பதற்குக் காரணமாக இருந்தேன் என்று நமது மனசாட்சியிடம் பேசக்கூடிய தைரியமற்ற கோழைகளாகவே பெறும்பாலும் நாம் இருக்கின்றோம்.



ஒழுங்கு என்பது வெளியில் காட்டிக் கொள்ளக் கூடிய ஒன்று மட்டுமல்ல. அது மனதின் அடித்தளத்திலேயே இருக்க வேண்டும். பிறருக்காக ஒழுங்காக இருப்பதாக என்னை நான் வெளியே காட்டி கொண்டே உள்ளே, மனத்தில் ஒழுங்கீனத்தை வளர்த்துக் கொண்டு வந்தால் அங்கே உண்மையற்று போய்விடுகின்றது. யாருக்காக நான் இந்த உலகில் வாழ்கின்றேன் என்ற கேள்வியை நான் அடிக்கடி கேட்டுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றேன். பிறர் என்னைப் பாராட்ட வேண்டுமே என்ற காரணத்திற்காக நான் எனக்குப் பிடிக்காத ஒன்றை அது மனசாட்சிக்கு முறன்பாடான ஒன்றாக இருப்பினும் அதை நான் செய்யலாமா..? அதனை நான் செய்வதனால் என்னுடைய மனதிற்கு நான் ஒழுங்கானவராக இருக்கின்றேனா?


மனம் முழுவதிலும் அழுக்கையும் அசுத்தத்தையும் வைத்துக் கொண்டு மற்றவர்களிடம் நான் எப்படி ஒழுக்கத்தைப் பற்றிப் பேச முடியும். நான் என்னளவில் நல்ல எண்ணங்கள் இல்லாத நிலையில் பிறரிடம் நல்லெண்ணத்தைப் பற்றி பேசுவதற்கு எந்த விதமான தகுதியும் இல்லதவராகி விடுகின்ற நிலையில் எப்படி நான் பிறருக்கு ஒழுக்கத்தைப் பற்றி சொல்லிக் கொடுக்க முடியும். வீட்டில் வேலை செய்யும் தனது வேலைக்காரியிடம் அன்பு காட்ட முடியாத ஒரு ஆசிரியை பள்ளியில் மாணவர்களிடம் அன்பைப் பற்றி பாடம் நடத்துவது என்பது எப்படி சாத்தியமாகும்?

நாம் பெரும்பாலும் பிறருக்காக வாழ்வதாகவே எனக்குத் தோன்றுகின்றது. பிறருக்காக வாழ்வது என்பது நல்ல சிந்தனை; அது பிறருக்கு உபயோகப்படும் வகையில் பிறரின் நல்வாழ்வுக்கு உதவுவது, பிறர் மேன்மைக்கு உதவுவது போன்ற நல்ல உதாரணங்களுக்குப் பொருந்தும். ஆனால் என்னுடைய வாழ்க்கையே பிறர் புகழ்வதற்காகவும், பிறர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்பதற்காக பயந்து அஞ்சி ஒரு முகமூடியைப் போட்டுக் கொண்டு வாழ்வதுமாக இருந்தால் அதனால் எனக்கு என்ன பயன்? நானே என்னை, எனது சிந்தனைகளை, எனது வாழ்க்கை முறையை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் அகத்திலே ஒரு வாழ்க்கையும் புறத்திலே மற்றொரு வாழ்க்கையும் என்று இரண்டு வாழ்க்கையை வாழும் நிலைதானே எனக்கு ஏற்படும். ஏன் இந்த conflict? என் மனதில் தோன்றும் எண்ணங்கள், உண்மையான, சரியான ஒன்று தான் என்பதில் முதலில் எனக்கு நம்பிக்கை வரவேண்டும். அந்த நம்பிக்கை உறுதியைத் தரும் போது உள்ளே ஒரு வாழ்க்கை வெளியே வேறு ஒரு வாழ்க்கை என்ற நிலை தோன்ற வழியில்லையே.

அப்போதுதானே மனதுக்கு அமைதியும் நிம்மதியும் கிடைக்கும்!

Thursday, October 9, 2003

JK's Letters to the Schools - 4

"Time to us is very important. We live in the past, in past memories, past hurts and pleasuers. Our thought is the past. It is always modifying itself as a reaction to the present, projecting itself into the future, but the deep rooted past is always with us and this is the binding quality of time.." - by J.K.

என்னுடைய மனதை சோதித்துப் பார்க்கின்றேன். என் மனதில் எண்ணற்ற விஷயங்கள் அடங்கிக் கிடக்கின்றன. பல்லாயிரக்கணக்கான விஷயங்கள். பல வேறு பட்ட விஷயங்கள். என்னுடைய வாழ்வில் இதுவரை நான் கடந்து வந்த அனுபவங்கள், பார்த்துப் பழகிய மனிதர்கள், அவர்களைப் பற்றிய எனது அபிப்ராயம், அவர்களோடு நான் நடத்திய உரையாடல், அந்த உரையாடல்களுக்குப் பிறகு அவர்கள் மேல் நான் கொண்டிருக்கும் அபிப்ராயம் எனப் பலப் பல விஷயங்கள் மனதிற்குள் அடங்கிக் கிடக்கின்றன. அடங்கிக் கிடக்கின்ற இந்த தகவல் வங்கியைப் பயன்படுத்திக் கொண்டு நிஜத்தில் வாழ்கின்றேன்.


எனது சிந்தனை எப்போதும் புதிதாக இருப்பதில்லை. ஒருவர் என் உள்ளத்தை வேதனைப் படுத்தி விட்டார் என்றால் அந்த வேதனையும் கவலையும் என் மனதை விட்டு வெகு சீக்கிரமாக விலகி விடுவதில்லை. அந்த வேதனை உணர்வும், அந்த உணர்வு ஏற்படக் காரணமாக இருந்த அந்த நிகழ்வும் மனக்கண்ணில் நினைத்துப் பார்த்தால் தோன்றும் அளவுக்கு மனதில் பதிந்திருக்கின்றன. அதே போலத்தான் சந்தோஷமான நிகழ்வுகளும். என் மனதிற்கு மகிழ்ச்சி அளித்த ஒரு நிகழ்வினை மீண்டும் சிந்தித்துப் பார்க்கும் போது என் மனம் மகிழ்கின்றது. முகம் சந்தோஷத்தில் மலர்கின்றது.




நினைவுகளைக் கொண்டு ஒரு அனுபவத்திற்கு உயிர் கொடுத்து, அதனை நிஜமாக்கி, அது தரும் உணர்வுகளை அனுபவிக்க முடிகின்றது. எனது ஆழ் உள்ளத்தில் தேங்கிக் கிடக்கும் அனுபவங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு நிகழ்கால வாழ்க்கையை நடத்துகின்றேன்; அனுபவத்தின் மூலம் கிடைத்த கற்றலை வைத்துக் கொண்டும் இன்றைய பொழுதின் தேவைகளை சமாளிக்கின்றேன்.

நடக்கின்ற அனைத்திலுமே காலத்தின் தொடர்ச்சியைக் காணமுடிகின்றது. ஒரே பொருளை நேற்று நான் பார்க்கும் போது எனக்கு அது வேறு விதமாகத் தோன்றுகின்றது. அந்த தோற்றத்தின் அடிப்படையில் இன்று கிடைத்த அனுபவத்தோடு சேர்த்துக் கொண்டு பார்க்கும் போது இன்று வேறொறு விதமாகத் தோன்றுகின்றது. ஒரு புதிய நபரைப் பார்க்கின்றேன். முதல் சில நாட்கள் பேசிப் பழகும் போது அமைகின்ற அபிப்ராயம் வேறு விதமாக இருக்கின்றது. குறுகிய காலத்தில் அவரோடு பழகிய அனுபவத்தை வைத்து அவரைப் பற்றி எடைபோட்டு மனதில் அவரைப் பற்றிய ஒரு image
ஒன்றினை உருவாக்கி வைத்துக் கொள்கின்றேன். அடுத்த முறைப் பார்க்கும் போது நான் அவரைப் பற்றி தயாரித்து வைத்திருக்கும் அந்த image -ன் அடிப்படையை வைத்துக் கொண்டே அவரோடு பழகுகின்றேன்; உரையாடுகின்றேன். ஆனால் நன்றாகப் பேசிப் பழகிய பின்னர், அவரைப் பற்றி மேலும் புரிந்து கொண்ட பின்னர், அவருடைய வாழ்க்கை அனுபவங்கள் எனக்கு நெருக்கமாக வருவதை உணர்ந்த பின்னர் நான் அவரைப்பற்றி உருவாக்கி வைத்திருந்த image-ல் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் ஏற்படுகின்றது. பழகித் தெரிந்து கொள்ள வாய்ப்பு அமையாத போது முன்பிருந்த அந்த பழைய image அப்படியே மனதில் தங்கிக் கிடக்கின்றது.

என் மனம் மட்டுமல்ல; நம் அனைவரின் மனங்களிலும் அனுபவப் பழமை கொட்டிக் கிடக்கின்றன. இந்த அனுபவங்களை, இந்த பழமைகளை, நாம் காலத்தைக் கடக்கும் நிலையை எட்டும் போது மட்டும் தான் தொலைக்க முடியும்!

Wednesday, October 8, 2003

JK's Letters to the Schools - 3

"Learning has been the ancient tradition of man, not only from books, but about the nature and structure of the psychology of a human being. As we have neglected this entirely, there is disorder in the world...."

கல்வி என்பது ஒருவரை தொழிலுக்குத் தயார் செய்யும் ஊடகமாக தற்பொழுது பெரும்பாலும் எடை போடப்படுகின்றது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பரீட்சைக்குத் தயார் செய்வதிலேயே ஆசிரியர்களும் பெற்றோர்களும் குறியாக இருக்கின்றனர். ஏன் பள்ளிப் படிப்பு என்றால், ஒரு குறிப்பிட்ட வேலை செய்வதற்காக என்பதும், அந்த குறிப்பிட்ட வேலை எதற்காக என்றால் அதிகமாக பணம் சம்பாதிக்கலாம், நல்ல வரன் அல்லது பெண் கிடைப்பாள் என்ற உலகியல் காரணங்களுக்காக கல்வி தேவை என்ற எண்ணம் நமது மனதின் அடித்தளத்தில் அமர்ந்திருக்கின்றது. வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் கற்கின்றோம்; புதியவர்களைப் பார்க்கும் போது, புதிய இடங்களுக்குச் செல்லும் பொது, பிரச்சனைகளை எதிர் நோக்கும் போது, இயற்கையை ரசிக்கும் போது என எப்போழுதும் ஒன்றினை கற்றுக் கொண்டேயிருக்கின்றோம். ஆனால் அதுவும் கற்றல் தான் என்பதை நினைக்க மறந்து விடுகின்றோம். வாழ்க்கை மிக மிக அவசரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது; இந்த அவசர உலகில் நமது மனதின் ஓட்டங்களை அதன் தேவைகளை பூர்த்தி செய்கின்றோமா என்று கேட்டுக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.


கல்வி அல்லது ஞானம் என்பது நமது மனதிற்கு ஒழுங்கினை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய மிகப் பெரிய ஆற்றலைக் கொண்டிருக்கின்றது. சிந்தனையைத் தூண்டும் நூல்களை வாசிக்கும் போது நமது உள்ளத்தில் எழுகின்ற பல கேள்விகளுக்கான விடைகளை கண்டெடுத்துக் கொள்ள முடிகின்றது. சில வேளைகளில் நமது சிந்தனைக்குத் தோன்றாத, நாம் இதுவரை நினைத்திராத சில விளக்கங்கள் பிறரது அனுபவத்திற்கும் சிந்தனைக்கும் எட்டி அது எழுத்து வடிவில் நமக்குக் கிடைக்கும் போது அந்த அனுபவத்தையும் நாம் எடுத்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்கின்றது.

புத்தகங்கள் மட்டுமன்றி அனுபங்களையும் உலகையும் வாசிக்க நாம் பழகும் போது இதுவரைக் காணாத அனுபவத்தைப் பெறமுடிகின்றது. இயற்கையில் கிடக்கும் அதிசயங்களைச் சிந்திக்கும் போது, நம்மைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் பலப் பல விஷயங்களையும் கூர்ந்து நோக்கி அதற்கு தெளிவு காணும் போது நமது மனம் கற்பதை உணர முடிகின்றது.

பெரும்பாலும் நமது எண்ணங்கள் பிறரை சுற்றியே வலம் வருகின்றன. எனது அண்டை வீட்டுக்காரர், எனது மேலாளர், எனது தோழர்கள், எனது உறவினர், எனது மனைவி, எனது கணவர், இப்படி மற்றவர்கள் என்ன செய்கின்றார்கள், ஏன் இப்படி செய்கின்றார்கள் என்று பிறரது குறைகளைக் கண்டு பிடிப்பதிலேயே நமது சிந்தனையைச் செலவிடுபவர்களாக
இருக்கின்ற நிலையை மாற்றிக் கொண்டு நமது சுய சிந்தனை போகின்ற போக்கினை கவனிக்க ஆரம்பித்தால், நமது உள் மனத்தோடு சம்பாஷிக்கப் பழகும் ஆற்றலைப் பழக்கிக் கொண்டால், நமது மனதின் sensitivity கூடுகின்றது. இது உணரக்கூடிய ஒன்று; எழுத்துக்களால் விளக்கப்பட முடியாத ஒன்றும் கூட!

Tuesday, October 7, 2003

JK's Letters to the Schools - 2

J.K. 15 December 1981 அவர்கள் 'Letter to the Schools" அன்று எழுதிய ஒரு கடிதம். அதனை ஒட்டிய சில சிந்தனைகள்." A school is a place of learning and so it is sacred. The temples, churches and mosques are not sacred for they have stopped learning. They believe, they have faith and that denies entirely the great art of learning......" - by J.K. எங்கே புனிதம் ஒருக்கின்றது என்று சமுதாயத்தை நோக்கி சிந்தனையைத் தூண்டும் கருத்தினை வைக்கும் முயற்சி இது என நான் நினைக்கின்றேன். மனிதர்கள் வாழ் நாள் முழுதும் கற்க வேண்டும். கற்றல் இருக்கின்ற இடத்திலே தான் வளர்ச்சி இருக்கும். கற்கின்ற மனிதர் தான் சிந்திக்கும் வாய்ப்பினைப் பெறுகின்றார். கற்கின்ற வாய்ப்பு என்பது எப்போதும் யாருக்கும் தானாக வந்துவிடுவதில்லை. சமுதாய அமைப்புக்கள் கொடுக்கின்ற வாய்ப்புக்களின் வழியாகத்தான் ஒரு தனி நபர் வாழ்க்கையில் கற்க முடிகின்றது.


பள்ளிக்கூடம் என்பது அறிவை கூர்மையாக்கி சிந்தனையைச் தூண்டச் செய்கின்ற இடம். கற்பித்தல் என்ற ஒரு நடவடிக்கை அங்கு இருந்தாலும் 'கற்றல்' தான் அங்கு மிக முக்கியமான ஒரு அம்சம். ஒரு பள்ளி எனப்படும் இடத்தில் மாணவர்கள் மட்டும் கற்பதில்லை; மாறாக ஆசிரியர்களும் கற்கின்றனர் என்பதை மறுக்கமுடியாது. எண்ணங்கள் உயர்ந்தனவாக இருப்பதற்கும், வாழ்க்கையின் போராட்டங்களை சமாளிப்பதற்கும் மனதை தயார்படுத்திக் கொள்ளும் பயற்சிக்கூடமாக அமைகின்ற ஆரம்பகால இடமாக இருப்பதும் பள்ளி தான்.

மதங்களும் சமய நெறிகளும் ஞானத்தைப் புகட்டுவதற்காகவும், அல்லல் படும் மனித வர்க்கத்தின் மனதிற்கு ஆறுதலும் விளக்கமும் தந்து அறிவினில் தெளிவை உருவாக்கவும் தோன்றின. ஆனால் இன்றைய நிலையில் அவற்றின் நோக்கங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு விட்டமை கண்கூடான ஒன்று. ஆலயங்கள் வணிக நிறுவனங்களாக மாறி செயல்படுவதும், மூட நம்பிக்கைகளை வளர்க்கும் பயிற்சிக் கூடங்களாக மாறிக் கொண்டிருப்பதும் உலகம் முழுதும் நாம் காணக்கூடிய ஒன்றாகத் தான் இருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.

எப்போது 'எனக்கு எல்லாம் தெரியும்' என்ற சிந்தனை என் உள்ளத்தில் தோன்றுகின்றதோ அப்போது நான் சிந்திக்கும் திறனையும் கற்கும் ஆற்றலையும் இழந்து விடுகின்றேன். பல சமய நிறுவனங்கள் இப்போது அப்படித்தானே இயங்கிக் கொண்டிருக்கின்றன! "இதைத்தான் செய்ய வேண்டும். மாற்றி செய்யக்கூடாது.

அப்படி செய்து விட்டால் உனது சமயத்திற்கு நீ பாவம் இழைக்கின்றாய். ஏன் எதற்கு என்ற கேள்வியெல்லாம் சமயத்தின் புனிதத்தை அழிக்கக்கூடியவை" என்று பயம் காட்டுவதும், "இதைச் செய்தால் இந்தப்பலன் கிடைக்கும்; அதைச் செய்தால் உன் பாவங்கள் அழிக்கப்படும்" என்று வித்தை காட்டும் கூடாரங்களாகவும் மாறி 'இறை' எனும் புனிதத்தை மறந்து விட்ட நிலையில் தான் உள்ளன. மனிதனை மதத்தின் பெயரால் பிரித்துப் பார்க்கவும், பல வேறான சாதிகளில் பிரித்து வைத்துப் பார்க்கவுமே சமயம் விரும்பினால், குலம் கோத்திரம் கேட்டுத்தான் இறைனிடம் அறிமுகம் செய்து வைக்கமுடியும் என்று கூறினால், அதை விட வேறு என்ன மடமை இருக்க முடியும்? இந்த மடமையையும் தலையை ஆட்டிக்கொண்டு ஏற்றுக் கொண்டு அவற்றை நியாயப்படுத்தகாரணங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் சமுதாயம் வளர்ந்து கொண்டே சென்றால் அன்புதான் என் சமயத்தின் அடிப்படை என்று எப்படி சொல்லிக்கொள்ள முடியும்?

Monday, October 6, 2003

JK's Letters to the Schools - Part 1

கடந்த வெள்ளியன்று வார இறுதி நாட்களோடு கூடுதலாக கிடைத்த ஒரு நாள் விடுமுறையையும் பயன்படுத்திக் கொண்டு இத்தாலிக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தேன். [இந்த பயணத்தைப் பற்றிய தகவல்களையும் படங்களையும் http://subaonline.log.ag - Germany in Focus வலைப்பூவில் காணலாம்] பயணம் சுகமான அனுபவம் என்றாலும், சில மணி நேரங்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணம் செய்வதிலேயே செலவிட வேண்டிய நிர்பந்தம் இருப்பதால், பெரும்பாலும் ஏதாவது புத்தகத்தைக் கையோடு கொண்டு செல்வது எனது வழக்கம். இந்த முறை என் கைக்குக் கிடைத்தது தத்துவச் சிந்தனையாளர் ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் 'Letters to the Schools - Volume Two' என்ற சிறிய புத்தகம்.


இது ஒரு வித்தியாசமான நூல். சிறிய சிறிய கட்டுரைகளாக 1981 லிருந்து 1983 வரையில் அவர் எழுதிய சில கடிதங்களின் தொகுப்பே இது. புத்தகத்தின் தலைப்பு Letters to the Schools என்றிருந்தாலும் வெறும் பள்ளி மற்றும் ஆசிரியர்கள் இவர்களை மனதில் கொண்டு மட்டுமே எழுதப்பட்டவை என்று நினைக்க முடியாது. கடிதங்கள் தானே என சாதாரணமாக இந்த நூலை எடை போட்டு விட முடியவில்லை. நூலின் ஆரம்பத்தில் மிகச் சிறிய அறிமுக உறை ஒன்றை ஜே.கே தருகின்றார். அதில் "These letters are not meant to be read casually when you have a little time from other things, nor are they to be treated as entertainment. These letters are written seriously and if you care to read them, read them with intent to study what is said as you would study a flower by looking at the flower very carefully..." என்று ஆரம்பிக்கின்றார்.

முதல் கடிதத்தைப் படிக்க ஆரம்பித்து ஒவ்வொன்றாகப் படிக்கப் படிக்க எனக்கு ஆச்சரியம். எவ்வளவு ஆழமான சிந்தனை. உலகை எப்படி நோக்க வேண்டும்; எப்படி சிந்திக்க வேண்டும்; எதனை சிந்திக்க வேண்டும், கல்வி என்றால் என்ன போன்ற பல பல விஷயங்களை வரிக்கு வரி மனதைத் தாக்கி சிந்திக்கத் தூண்டும் வகையில் இந்த கடிதங்களில் தனது எண்ணங்களை இந்த சிந்தனையாளர் வெளிப்படுத்துவது அபாரம். அழகுக்காக அல்லது வார்த்தைகளை நிரப்பி கட்டுரையை அமைக்க வேண்டுமே என்ற சிந்தனையோ எந்த முயற்சியோ இன்றி வரிக்கு வரி கருத்துக் குவியல்கள். இந்தக் கடிதங்களை இத்தாலியின் அழகிய நகரான Milan-லிருந்து Rome சென்று சேரும் வரை கிடைத்த நான்கு மணி நேரத்தில் படித்து முடித்தேன். படிக்கப் படிக்க என்னுள்ளே எழுந்த சிந்தனைகளை எழுத்து வடிவாக்கித் தருவதற்காகவே இந்த முயற்சி.. தினம் தொடரும்..!

Wednesday, October 1, 2003

சாமி ஆட்டம்..:-)

கோயில் திருவிழாக்களில் கலந்து கொள்வது நம் அனைவருக்குமே பிடித்தமான ஒன்று தானே. எங்கள் ஊரில்..அதாவது பினாங்கில் (ஜெர்மனிக்கு சென்று விட்ட பிறகும் பினாங்கு தான் என் ஊர்..:) ) தைப்பூசத் திருவிழா தான் மிக மிக பிரசித்தி பெற்ற ஒரு சமயத் திருவிழா. இது தவிர வேறு சில கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டும் பல திருவிழாக்கள் நடைபெறுவதுண்டு. திருவிழாக்கள் என்றால் நமக்கு எத்தனையோ விஷயங்கள் ஞாபகம் வரும் இல்லையா..? ஆனால் எனக்கு மனதில் தோன்றுவது இந்த திருவிழாக்களின் போது சில 'பக்தர்களுக்கு' சாமி வந்து அவர்கள் போடும் ஆட்டம்தான்.

இளம் வயதில், தைப்பூசத் திருவிழாவில் வேடிக்கைப் பார்க்கச் செல்லும் போதெல்லாம் யாராவது சாமி வந்து ஆடிக்கொண்டிருந்தால் என் பெற்றோர்கள் பின்னால் ஓடி ஒளிந்து கொள்வேன் அவ்வளவு பயம். சிலர் நீண்ட அலகுக் கம்பியை வாயில் செறுகிக் கொண்டு சாமி வந்து ஆடுவதை பார்க்க பயமாகத்தான் இருக்கும்.

அப்போது எனக்கு வயது 14 இருக்கும். தைப்பூசத்திற்கு மறுநாள் பினாங்கில் வழக்கமாக தண்ணீர்மலையிலுள்ள இடும்பன் ஆலயத்தில் ஒரு விஷேஷமான பூஜை செய்வார்கள். அதற்கு இடும்பன் பூஜை என்று பெயர். யாரெல்லாம் தைப்பூசத்தில் காவடி எடுத்தார்களோ அவர்கள் எல்லாரும் அந்த இடும்பன் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும் என்பது ஒரு ஐதீகம். அந்த பூஜையைப் பார்ப்பதற்காக நாங்கள் குடும்பத்தோடு சென்றிருந்தோம்.

பூஜையெல்லாம் முடிந்து குருக்கள் இடும்பன் சுவாமிக்கு தீபாராதனை காட்டும் சமயத்தில் நீளமான அலகு போட்டிருந்த ஒரு ஆசாமிக்கு சாமி வந்து விட்டது. தட்டில் இருந்த சாட்டையை எடுத்து தன்னுடைய உடம்பில் சுற்றி மாற்றி மாற்றி அடித்துக் கொண்டார்.எனக்குத்தான் இதைப் பார்த்தால் பயமாயிற்றே. என் அம்மாவின் பின்னால் ஓட்டி ஒளிந்து கொண்டேன். அந்த சாமி வந்தவர் அத்தோடு நிற்கவில்லை; சாட்டையை கீழே போட்டுவிட்டு குருக்களின் கையிலிருந்த தட்டை வாங்கிக் கொண்டு கோயிலைச் சுற்றி ஒட ஆரம்பித்து விட்டார். இந்த கோயில் மிகச் சிறிய ஒரு கோயில். அவர் சுற்றி வரும் போது அவரது அலகு என் மேல் பட்டு விட்டது. அவ்வளவுதான். என்னைத்தான் அவர் விரட்டுகின்றார் என நினைத்து நான் பயந்து ஓட ஆரம்பித்து விட்டேன். ஆசாமி என்ன நினைத்தாரோ தெரியவில்லை. இப்போது நான் ஓட என்னை விரட்டிக் கொண்டு அவர் ஓட் ஆரம்பித்து விட்டார். பயத்தில் அலறிக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு சுற்று ஒடி வந்துவிட்டேன். என் அப்பா அதற்குள் என்னை தேடிப் பிடித்துக் கொண்டார். சாமி வந்த ஆசாமி கோயிலுக்குள் மீண்டும் சென்று இடும்பன் சுவாமியின் வீர வசனம் பேச ஆரம்பித்து விட்டார். அதற்குள் சிலர் அவரைப் பிடித்து அவருக்கு விபூதியை நெற்றியில் தேய்த்து அவருக்குப் பிடித்திருந்த இடும்பன் சாமியை மலையேற்றி வைத்தனர்.

இந்த நிகழ்வுக்குப் பிறகும் பல முறை சாமி வந்து ஆடுபவர்களைப் பார்த்திருக்கின்றேன். அப்போதெல்லாம் இந்த நிகழ்ச்சிதான் கண்முன்னே வந்து நிற்கும். இப்படி முட்டாள்தனமாக பயந்திருக்கின்றேனே என்று நினைத்துக் கொண்டாலும் வேடிக்கையான ஒரு அனுபவமாகத்தான் தோன்றும். பல முறை இதை நினைத்து நானே சிரித்துக் கொள்வதுண்டு!