Tuesday, December 28, 2004

நூல் விமர்சனம்: சில நேரங்களில் சில மனிதர்கள்

நாவல்: சில நேரங்களில் சில மனிதர்கள்
நாவலாசிரியர்: ஜெயகாந்தன்

இந்திய அரசின் பெறுமை மிகுந்த பரிசான சாகித்திய அகாதமி பரிசு பெற்ற, இந்த நாவல் தொடர்கதையாக வெளிவந்த காலத்திலும் சரி, பின்னர் புத்தகமாக வெளிவந்த பிறகும், அதற்கு பின்னர் திரைப்படமாக வெளிவந்த பிறகும் மிகுந்த சர்ச்சையை உருவாக்கிய, இன்றளவும் உருவாக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு நாவல் இது. பல ஆண்டுகளுக்கு முன்னர் இதனை வாசித்த ஞாபகம் உண்டு; திரைப்படத்தை பார்த்ததில்லை; நாவலை மீண்டும் வாசிப்போமே என்று நினைத்து இதனை இணையத்தின் வழி அண்மையில் வாங்கியிருந்தேன்.

இந்த நாவலின் முதல் பதிப்பு 1970ல் வெளிவந்து இப்போது நான் வாங்கியிருக்கும் இந்த வெள்ளைத்தால் பதினாறம் பதிப்பு வரை மறுபதிப்பு கண்டிருக்கும் இந்த நாவல் வியாபார அடிப்படையிலும் வெற்றிகண்டிருக்கின்றது. விலை ரூ100. தினமணிக் கதிரில் காலங்கள் மாறும் என்ற தலைப்பில் தொடராக இந்த நாவல் வெளிவந்து பின்னரே புதுப் பெயருக்கு மாற்றம் கண்டிருக்கின்றது.

நாவலின் ஆரம்பத்திலேயே ஜெயகாந்தன் சமுதாயத்தின் மேல் தனக்கிருக்கும் நிலைப்பாட்டை கதைக்கு முன்னுரை தருவது போல விளக்கிவிடுகின்றார்.

மனிதர்களை அதிலும் பெண்களுக்கு புனித நிலையை வழங்கி புனிதத்தன்மையோடு பார்க்க விரும்பும் தமிழ் (இந்திய) வாகர்களுக்கு /பிரியர்களுக்கு மனிதர்கள் இப்படியும் இருக்கின்றார்கள் என்று நிதர்சன வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியை இந்த நாவல் காட்டி அவர்களை சிந்திக்க வைத்திருக்கின்றது. மனித வாழ்க்கை புராணக் கதைகளில் வருகின்ற நாயகன் நாயக இலக்கணத்திற்கு உட்பட்ட ideal நிலைப்பாட்டுடன் அமைவதில்லை. வெளியே சிரித்துப் பேசிக்கொண்டு பற்பல விதமான முகமூடிகளைத் தேவைக்கேற்ப அணிந்து கொண்டிருக்கும் நம் எல்லோருக்குமே ஒரு தனிப்பட்ட ஒரு வாழ்க்கை இருக்கின்றது. அதில் அழகும் இருக்கின்றது; அசிங்கமும் இருக்கின்றது. வாழ்க்கை இப்படி அமைந்தால் நன்றாக இருக்குமே என கணவு காண முடியும்; அதற்கான முயற்சிகளில் இறங்கி ஓரளவு வெற்றியும் பெற முடியும்; ஆனால் இப்படித்தான் அமைந்திருக்க வேண்டும் என்று சட்டம் போடுவது அபத்தம். ஒருவருக்கு சரியான ஒரு நியாயம் மற்றவருக்கு வேறுபட்ட நிலைப்பாட்டை கொடுக்க முடியும். ஒரு நாட்டு மக்களுக்கு சரியாகப் படுகின்ற ஒரு நீதி மற்ற இன மக்களுக்கு வேடிக்கையான அல்லது ஒவ்வாத ஒரு விஷயமாகப் படலாம்.

ஆக இப்படி வேறுபட்ட நிலையிலான பல்வேறு மக்களுடன் நாம் ஒவ்வொரு கணமும் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் இந்த நாவல் காட்டுகின்ற பிரச்சனை ஒரு தனி ரகம்.
நாவலின் முடிவு மனதை வேதனையுடன் பிசைந்தாலும் உண்மையை உண்மையாகப் பார்க்க வேண்டும் என்று ஆரம்பத்திலேயே ஜெயகாந்தன் போடுகின்ற கட்டளை கொஞ்சம் உதவுகின்றது.
இந்த நாவல் முழுவதுமே உளவியல் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்ட உண்மை சம்பவம் போல தோன்றுகின்றது. படிக்கின்ற ஒவ்வொரு வாசகரின் மன நிலை, பக்குவ முதிர்ச்சி, அடிப்படை, இதனைப் பொறுத்து வேறுபட்ட சலனங்களை வாசகர்களுக்கு இந்த கதை கொடுத்திருக்கின்றது என்பதை ஜெயகாந்தனின் முன்னுரையிலேயே தெரிந்து கொள்ள முடிகின்றது.

"ஒரு பாத்திரத்தின் மீது அர்த்தமில்லாத வெறுப்பும் அல்லது அசட்டுத்தனமான அனுதாபமும் கொள்ளுகின்ற வாசகர்கள் இலக்கியத்தின் மூலம் வாழ்வை புரிந்து கொள்ள மறுத்து விடுகின்றார்கள். இப்படியெல்லாம் நடக்குமா? இப்படியெல்லாம் நடக்கிறதா? இப்படியெல்லாம் நடக்கலாமா? என்கின்ற கேள்விகளுக்கெல்லாம் ஆம் ஆம் என பதில் கூறுகின்றது" என்று இந்த நாவலை முன்வைக்கின்றார் ஜெயகாந்தான்.

அருமையான நாவல்; வாசித்து முடிந்து மூன்று நாட்களாகியும் கங்காவும் பிரபுவும் என் மனதை விட்டு நீங்கவில்லை!

Saturday, January 17, 2004

Jana

இணையத் தொடர்பு இருப்பதனால் நமக்குக் கிடைக்கின்ற பல நண்மைகளைப் பற்றி பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

அதில் மிக முக்கியமாக நான் கருதுவது உறவுகளையும் நண்பர்களையும் நாம் தொடர்பு கொள்ள இணையம் சார்ந்த தொழில் நுட்பம் நமக்குக் கொடுத்திருக்கும் வாய்ப்புதான். இணையத் தொடர்புகளின் வழி மின்னஞ்சல் வசதிகள் வந்த பிறகு குடும்பத்தாரை விட்டு பிரிந்திருப்பதோ நண்பர்களை விட்டு தூரத்தில் இருப்பதோ மிகப் பெரிய மனக்கவலையாகத் தெரிவதில்லை. அதற்கும் லாக புத்தம் புதிய நண்பர்கள், இதுவரை நாம் முகம் ர்த்திராத நண்பர்கள் நமக்கு அறிமுகமாகி ழ்க்கையில் மேலும் மகிழ்ச்சியை நமக்கு அளிப்பதை நினைக்கும் போது இனையத் தொழில்நுட்பத்திற்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை.


கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதவாக்கில் சன் தொலைகாட்சியில் ஒரு சிறப்பு அறட்டை அறங்கம் நிகழ்ச்சி வழி அழகி மென்பொருள் உருவாக்கிய விஷியைக் காண முடிந்தது. அப்போது அவரது விடா முயற்சியைப் பாராட்டி நானும் அவரது வலைப்பக்கத்தில் வாழ்த்து அனுப்பியிருந்தேன். இப்போது அவர் வழியாக மனதை நெகிழவைக்கும் ஒரு தகவலைத் தெரிந்து கொள்ள முடிந்ததை நினைத்து உண்மையில் மகிழ்ச்சியடைறேன்.

அழகி வலைப்பக்கத்தில் ஒரு பகுதியில் ஜனா என்ற 13 வயது சிறுவனைப் பற்றிய ஒரு சிறப்புப் பக்கத்தையே விஷி உருவாக்கியிருக்கின்றார். ஒரு சிறுவனுக்கு முழு வலைப்பக்கமே உருவாகியிருக்கின்றது என்றால் நிச்சயமாக அவன் ஒரு அசாதாரணமான ஒரு சிறுவனாகத்தானே இருக்க முடியும்! ஆமாம்! நிச்சயமக அவன் ஒரு அசாதாரணமான ஒரு சிறுவன் தான்!

இங்கு ஜெர்மனியிலுள்ள எனது இலங்கைத் தமிழ் நண்பருடன் நேற்று பேசிக் கொண்டிருந்தேன். ஒரு மாத விடுமுறைக்குப் பிறகு பேசுவதால் வாழ்த்துக் கூறி ஆரம்பிக்கலாமே என ஆரம்பித்த எனக்கு அவரது அழுகை தோய்ந்த குரலைக் கேட்டு அதிர்ச்சியாகிட்டது. அவரது 17 வயது மகன் பள்ளி விடுமுறையில் வேலைக்குச் சென்றவன், தவறுதலாக பலகை வெட்டும் இயந்திரத்தில் கையைவிட்டதால் விரல்களை இழந்திருக்கின்றான். 28 மணிநேர அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு துண்டாகிப் போன 4 விரல்களில் 3 விரல்களை மருத்துவர்கள் வெற்றிகரமாக இணைத்திருக்கின்றனர். இருந்தும் சுட்டு விரலை நாழி கடந்ததால் இணைக்க முடியவில்லை. இளைஞனான அவனுக்கு இப்போது மன அமைதிக்கு ஆறுதல் வார்த்தைகள் தான் மருந்து என்று நேற்று வருத்தத்தோடு தெரிவித்துக் கொண்டிருந்தனர் அவனது அன்பான பெற்றோர்கள். இந்த நிகழ்வு மனத்திறையில் இருந்து அகலாத நிலையிலேயே விஷ் மின்னஞ்சலில் எனக்குச் சுட்டிக்காட்டியிருந்த வலைப்பக்கத்திற்குச் சென்று காண்போமே என்று வலைப்பக்கத்தைத் தட்டிய எனக்கு பெரிய ஆச்சரியம்.

மிகப் பெரிய விபத்திற்குப் பிறகு தனது கைகளையும் காலையும் இழந்த நிலையிலிருக்கும் ஜனா கைகள் இல்லாத நிலையிலேயே மிக சிறப்பாக ஓவியம் வரைய ஆரம்பித்திருக்கின்றான். அவனது ஆர்வம் பள்ளியளவில் நின்றுவிடவில்லை. மாறாக பற்பல போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளையும் தட்டிச் சென்றிருக்கின்றான் ஜனா.

உடல் ஊணம் கணினி தொழில் நுட்பத்தில் ஈடுபடுவதற்கு நிச்சயமாகத் தடையாக இருக்கக் கூடாது. தாளிலும் பென்சிலும் வர்ணமும் கொண்டு சித்திரம் தீட்டிக் கொண்டிருக்கும் ஜனா கணினியிலும் மென்பொருட்களைப் பயன்படுத்தி ஓவியங்களை உருவாக்க முடியும் என்பதை இந்த வலைப்பக்கம் குறிப்பிட்டுக் காட்டியிருக்கின்றது. இம்மாதிரியான முயற்சிகள்
ஊக்குவிக்கப்படவேண்டும்.

ஜனாவைப் பற்றிய மேலும் பல தகவல்கள், அவனது வெற்றிப் பட்டியல், அவனது ஓவியங்கள் இப்படிப் பல விஷயங்கள் இந்தப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன ( http://www.azhagi.com/jana/ ). அனைவரும் நிச்சயமாக பார்க்க வேண்டிய ஒரு பகுதிதான் இது. வாழ்க்கையே போராட்டம் நிறைந்ததுதான். அந்தப் போராட்டங்களை மனிதர்கள் நாம் எப்படி எதிர்கொள்கின்றோம் என்பதைப் பொறுத்துத்தான் நமது வெற்றியின் அளவு அடங்கியிருக்கின்றது. அந்த வகையில் ஜனா ஒரு வெற்றியாளர் தான். அவன் மேலும் மேலும் வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டுமென்றால் வெறும் வாழ்த்துகள் மட்டும் போதாது. மாறாக கணினி, மற்றும் இணையகல்வி அறிமுகங்கள் அவனுக்குக் கிடைக்க உலகத் தமிழர்கள் நாம் நிச்சயமாக உதவவேண்டும் என்று நினைக்கின்றேன்.

[ Thanks http://www.azhagi.com ]

Friday, January 16, 2004

Your own piece of land on Moon!!!!

நாகரிகம் கண்ட அனைத்து மனித இனமும் அண்டத்தைப் பற்றியும் கோள்களைப் பற்றியும் தேடுதல் முயற்சிகளில் இறங்கியிருக்கின்றன. அதில் தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியில் நடந்துவரும் பல்வேறு வகையான வியக்க வைக்கும் ஆய்வுகள் புதிய விஷயங்களை நாளுக்கு நாள் அறிவித்துக் கொண்டிருக்கின்றன. புதிய விஷயங்கள் நமக்குக் கிடைக்கும் போது அதில் அடிப்படையிலேயே எதிர்பார்ப்பும் ஆச்சரியங்களும் சேர்ந்தே வருகின்றன என்பதுதான் உண்மை.

பூமிக்கு மிக அருகிலிருக்கு நிலவில் கால் பதித்ததோடு நின்று விடவில்லை மனிதனின் ஆர்வம். மற்ற மற்ற கோள்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முயற்சிகள் வெகு துரிதமாக தொடர்ந்து நடந்து வருகின்றன. அதிலும் கடந்த சில வருடங்களில் விண்ணுக்கு அனுப்பப்பட்டு வரும் செயற்கைகோள் எண்ணிக்கை, அதோடு வேற்று கிரகங்களுக்கு அனுப்பப்படும் ரோபோட் இயந்திரங்கள் போன்றவை இதனை நிரூபிப்பவனவாகவே இருக்கின்றன.

12 வருடங்களாக பல கோள்களைச் சுற்றி வந்த Voyager-II இதில் முக்கியமான ஒன்று. பூமிக்கு வெளிச்சுற்றில் உள்ள ஏனைய 5 கிரகங்களில் 4 கிரகங்களுக்குச் சென்று இறுதியாக 1989ல் Neptune அடைந்தது Voyager-II. இந்த மிகப்பெரிய கோளச் சுற்றுலாவிற்குப் :-) பிறகு பூமிக்கு அருகிலிருக்கும் ஏனைய கிரகங்களைப் பற்றிய பயனுள்ள கற்பனையற்ற உணமைத் தகவல்களைப் பெற முடிந்தது அறிவியல் உலகில் நிச்சயமாக ஒரு சகாப்தம் என்றே சொல்ல வேண்டும்.



நிலவுக்குச் செல்ல வேண்டும்; அங்கு மனிதன் கால் வைத்து நடக்க வேண்டும்; அங்கு உயிரினங்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய வேண்டும் என்ற எண்ணம் ன்றியதற்கும் செவ்வாய் கிரகத்திற்குத் தொடர்ந்து பல ஆய்வு போட்கள் அனுப்பப்பட்டு வருவதற்கும் அடிப்படையில் ஒற்றுமையைக் காட்டக்கூடிய சில விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. மனிதனுக்கு பூமிக்கு அருகிலிருக்கும் மற்ற கோள்களில் உயிரினங்கள் இருக்கின்றனவா என்பதைத் தெரிந்து கொள்வதில் தீவிர அவா இருக்கின்றது. ஆழ்மனத் தேடலோடு விஞ்ஞானமும் சேர்ந்து கொள்வதால் இது அறிவியல் தேடலாக பெயர் ண்டுவிடுகின்றது. அடுத்ததாக, மிக அற்புதமான வகையில் வியக்க வைக்கும் வகையில் வளர்ந்து வரும் கணினி இயந்திரத் ழில்நுட்பம் அண்டங்களை கணினி இயந்திரத் தொழில்நுட்பத்தின் துணையோடு அறிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை வழங்கியிருக்கின்றது. பற்பல ண்வெளி முயற்சிகள் தோல்வி கண்டிருக்கின்ற நிலையிலும், இவ்வகை ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருப்பதற்கு இதுதான் அடிப்படையில் காரணமாக இருக்கின்றது.


பூமியில் இடம் இல்லாத போது, அல்லது பூமி மனிதர்கள் வாழ்வதற்குத் தகுயில்லாமல் போகும் போது வேற்று கிரகங்களுக்குச் சென்று வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்குமா என சிந்திக்கும் மனிதர்கள் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றனர். இந்த மனதில் எழும் எண்ணத்தைக் கடந்து, நிலவிலும் மற்றும் அருகிலுள்ள மற்ற கிரகங்களிலும் நிலங்களை வாங்கி இப்போதே நாம் சொத்துக்களைச் சேர்ப்போமே என்ற முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளும் தொடங்கியிருக்கின்றன. அமெரிக்கரான டென்னிஸ், MoonEstates.com வழி இங்கிலாந்து மக்கள் இந்த நிலங்களை வாங்க முடியும் என்று அறிவித்து வலைபக்கத்தின் வழி இந்த விற்பனையைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றார். இந்த வலைப்பகத்தில் உள்ள தகவலின் படி, நிலவில் உள்ள ஒரு ஏக்கர் நிலம் 16.75 இங்கிலாந்து பவுனுக்குக் கிடைக்கின்றது. இந்த சுவையான தகவலைத் தெரிந்து கொள்ள http://www.moonestates.com சென்று பாருங்களேன்.

Thursday, January 15, 2004

Mars - Spirit and the Opportunity


சனிக்கிழமை இரவு செவ்வாய் கிரகத்தில் கால்வைத்து அறிவியல் உலக தேடலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கின்றது நாசாவின் Spirit Rover. இந்த முயற்சி உலகளாவிய அளவில் பெரிய எதிர்பார்ப்பினை கொடுத்திருக்கின்றது.

1958ல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட நாசா பல்வேறு விண்வெளி ஆராச்சிகளுக்கு இடையில் செவ்வாய் கிரகத்தின் ஆராய்ச்சியில் தனி கவனத்தை செலுத்தி தனது ஆய்வுகளை மெற்கொண்டு வருகின்றது. பூமியைப்ப் போலவே இந்த கிரகத்திலும் உயிரினங்கள் இருக்கக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் மிக முக்கியமானதாகக் கருத்தப்படுவது 1997ல் அனுப்பப்பட்ட நாசாவின் Path Finder ரோபோட். மனிதர்கள் யாருமின்றி தனியாகவே தகவல்களைச் சேகரிக்கும் வகையில் இந்த நுணுக்கமான ரோபோட் அங்கு சென்றுவந்தது.



இப்போது அதற்கும் ஒரு படி மேலாக செயல்படும் அளவிற்கு Spirit ஊவாக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் Spirit நாசாவின் ஆராச்சிக் கூடத்திற்கு அனுப்பிக்கொண்டிர்க்கும் தகவல்கள் செவ்வாய் கிரகத்தின் தரைமட்டத்தை, மணல் வெளியை, அதன் தன்மையை நுணுக்கமாக படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றது. இதற்கு அடுத்ததாக செல்லவிருக்கின்ற Opportunity ரோவர் வரும் 24ம் தேதி செவ்வாயைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹோலிவூட் பட நிறுவனத்தினர் பலரும் செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்கு வருகின்ற மனிதர்களை வைத்து கதைகளைப் பின்னி படம் எடுத்திருக்கின்றனர். 1953ல் ஹோலிவூட் தயாரிப்பாக வெளிவந்த The War of The worlds இத்தகையதே. தற்போதைய கலிபோர்னியா மேயர் Arnold Schwazeneger ன் படமான Total Reacall (1990) கூட செவ்வாய் கிரகத்தில் நடமாடக்கூடிய ஒரு வகை ரோபோட்டை வைத்து பின்னப்பட்ட கதையே. "பூமியைப் போலவே செவ்வாய் கிரகத்திலும் மனிதர்கள் வாழக்கூடும். அவர்களும் பூமியில் உள்ள மனிதர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்யக் கூடும்" என்ற கதைகளை வளர்க்கும் சில நாடகத் தொடர்களை StarTrak - The Next Generation வழங்கியது. இப்படங்களைப் பார்த்த பொழுது பள்ளி மாணவியாக இருந்த எனக்கும் செவ்வாய் கிரகத்தில் பயங்கர வடிவிலான மனிதர்கள் இருக்கக்கூடிய சாத்தியம் இருக்குமோ என்ற எண்ணம் இருந்து வந்தது.

இண்டெர்நெட் யுகத்தில் பள்ளி மாணவர்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு எல்லைகளைக் கடந்ததாதவே இருக்கின்றது. நாசாவின் பல்வேறு தரப்பட்ட ஆய்வுக் குழுக்கள் இளம் வயதிலேயே சிறுவர்களும் பலவகையான அறிவியல் கண்டுபிடிப்புக்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை வழங்கி வருகின்றன. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படவுள்ள 2 ரோவர் ரோபோட்களுக்கு பெயரிடும் வகையில் 9 வயதிலிருந்து 12 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களுக்குப் போட்டி ஒன்று கடந்த ஆண்டு வைக்கப்பட்டிருந்தது. சிறந்த கட்டுரை எழுதி அதன் வாயிலாக இந்த 2 ரோவர்களுக்கும் பெயர்களை தேடும் வகையில் இந்த போட்டி உருவாக்கப்பட்டிருந்தது. இதில் வெற்றி பெற்று, இந்த இரண்டு ரோவர்களுக்கும் பெயர் சூட்டியவர் Sofi என்ற பெயர் கொண்டு 9 அயது சிறுமி. இந்த இரண்டு ரோவர்களுக்கும் Spirit, Opportnity என்று இவர் பெயரிட்டு எழுதிய சிறிய கட்டுரை இதோ.

"I used to live in an orphanage. it was dark and cold and lonely. At night, I lookd up at the sparkly sky and felt better. I dreamed could fly there. In America, I can make all my dreams come true. Thank you for giving me the 'Spirit' and the 'Oportunity".

சோபி சைபீரியாவில் பிறந்தவள். தனது இரண்டு வயது வரையில் ஒரு அனாதை இல்லத்தில் வாழ்ந்து வந்தவள். இவளை அமெரிக்க பெண்மனியான லாரி கோலிn தத்தெடுத்து தனது மகளாக ஆக்கிக் கொண்டார். இருவரும் இப்போது அமெரிக்காவில் அரிஸோனாவில் இருக்கின்றனர். Spirit ரோவர் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட அன்று சோபிக்கும் அவள் தாயாருக்கும் நாசா பிரத்தியேக விமான டிக்கட்டுகளை வழங்கி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கியிருந்தது. சோபிக்கு இப்பொழுதே விண்வெளி வீராங்கனையாக வரவேண்டுமென்பதுதான் கனவாக, எதிர்கால ஆசையாக இருகின்றதாம். இவளைப் போன்ற பல இளம் சிறார்கள் நாசாவின் திட்டங்களில் பல்வெறு வகையில் சேர்ந்து கொண்டு தனது கணவுகளை வளர்த்து வருகின்றனர்.

பண்டைய காலத்தில் தமிழர்களைப் போலவே ரோமானியர்களும் ஒவ்வொரு கிரகத்திற்கும் பெயரளித்து அதற்கு ஒரு கடவுளையும் உருவாக்கியிருக்கின்றனர். அந்த வகையில் செவ்வாய் கிரகத்தின் கடவுள் ஒரு போர்வீரராகவே கருதப்பட்டார். முதலில் இந்தக் கடவுள் வேளாண்மை செய்யக்கூடியவராக, வேளாண்மை செய்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடியவராகவே கருதப்பட்டுவந்தார். ஆனால் நாளடைவில் இந்த கருத்தில் மாற்றம் ஏற்பட்டு போர் வீரராக மாற்றம் கொண்டார். இந்தக் கடவுளுக்கான பிரத்தியேகமான விழாக்களும் கூட உண்டு.

Kids, Visit this interesting web site to get more information about Mars - http://marsprogram.jpl.nasa.gov/funzone_flash.html

Tuesday, January 6, 2004

பொய்யில் பூத்த நிஜம் - வாஸந்தி

நீண்ட தூர பயணங்கள் அலுப்பைத் தரக்கூடியவை. எப்போதும் தூரம் பயணம் செல்லும் போது கையில் புத்தகத்தை எடுத்துச் செல்வது எனக்கு வழக்கமாகி விட்டது. இந்த முறை தென் கொரியா பயணத்தின் போதும் சில புத்தகங்கள் கைவசமிருந்தன. நாவல்கள் படித்து வெகு நாட்கள் ஆகிவிட்டதால் வாஸந்தியின் புத்தகம் ஒன்றை வாங்கியிருந்தேன். பொய்யில் பூத்த நிஜம் எனபது இந்த புத்தகத்தின் பெயர். கங்கை புத்தக நிலையத்தின் வெளியீடாக மலர்ந்திருக்கின்றது இந்த நாவல்.

ஈராண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை வாஸந்தியை நேராகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அப்போது அவர் இந்தியா டுடே பத்திரிக்கையின் தமிழ்ப்பகுதியின் ஆசிரியராக பொறுப்பேற்றிருந்த நேரம். சென்னையிலிருக்கும் அவரது அலுவலகத்தில் அவரை சந்தித்து உரையாடிக் கொண்டிருந்ததும், அருமையான ஒரு உணவகத்தில் அவரோடு சேர்ந்து மதிய உணவுக்குச் சென்றதும் மறக்க முடியாதவை. அப்போது அவரது கைவசமிருந்த 'யுக சந்தி' என்ற நாவலை கையெழுத்துப் போட்டு கொடுத்தார். ஜெர்மனி திரும்பி வரும் வழியில் அதனை படித்து முடித்து மகிழ்ந்தேன். இப்போது இந்த நாவல்!

நிச்சயமாக வித்தியாசமான ஒரு கதைதான். வாஸந்தியின் தமிழ் நடையைப் பற்றி விபரிப்பதற்கு நான் ஒரு எழுத்தாளரே அல்ல. அதனால் கதையின் கருவை மட்டுமே கொஞ்சம் தொட்டு எழுதலாம் என்று நினைக்கின்றேன். இப்போது மாறிக் கொண்டு வரும் வாழ்க்கை முறைகளைப் பற்றி கதை செல்கின்றது. அன்பினைப் பகிர்ந்து கொள்ள திருமணம் தேவையா என்பதே கதையின் கரு. ஜெர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த 5 ஆண்டுகளில் இவரது கதையையும் இந்தக் கருத்தையும் புரிந்து கொள்வதில் எனக்கு எந்த வித சிரமமும் இல்லை. ஜெர்மனியின் ழ்க்கை முறையில் திருமணம் செய்து கொள்ளாமல் நண்பர்களாகவே இருவர் சேர்ந்து வாழ்வது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்ட ஒரு நிலை. இதனை தமிழக மற்றும் மலேசிய சூழ்நிலையில் ஏற்றுக்கொள்வது என்பது சிரமமான ஒன்று என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அதே நேரத்தில் திருமண பந்தத்தில் இருக்கின்றோம் என்பதற்காக உலகத்திற்காக போலி வாழ்க்கை வாழ்ந்து வாழ்க்கையையே தொலைத்து நிற்கும் தம்பதிகளின் நிலையைப் பற்றியும் மிக அழகாக வெளிக்காட்டியிருக்கின்றார் வாஸந்தி. திருமணத்தின் பயனாக எஞ்சி நிற்பது விரக்தியும் வெறுப்பும் மட்டும்தான் என்ற நிலையை விட திருமணமே செய்து கொள்ளாமல் இருப்பது ஆறுதல் என்பதையும் இந்த நாவலைப் படிக்கும் போதே சிந்திக்க முடிகின்றது.
தனி மனித உள்ளத்திற்குள் நடக்கும் போராட்டங்களை புதைத்து விட்டு வெளியே நடத்தும் போலி வாழ்க்கையை சமுதாயம் ஏற்றுக் கொள்கின்றது; ஆனால் வெளிப்படையாக வாழ்க்கையைப் புரிந்து கொண்ட பின்னர் குடும்பம் எனும் கட்டமைப்பிலிருந்து சற்று மாறுபட்டு உருவாக்கிக்கொள்ளும் உறவுகளை சமுதாயம் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. இங்கு சமுதாயம் என்பது யார் என்பதும் கேள்வியாகின்றது. சிந்தனைக்கு வேலை கொடுக்கும் ஒரு கருவைத்தான் வாஸந்தி கதையாக்கியிருக்கின்றார்.

இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களில் முக்கியமானோர் சகுந்தலா, ராஜமோகன், சரவணன், காமாட்சி, விவேக், சுதிர், mrs.Malhothra, அதோடு குந்தலாவின் பாட்டி. சகுந்தலா வேலை செய்வதால் வாழ்கையில் தான் சந்திக்கும் பெரும் இடியை தாங்கிக் கொண்டு வாழ்க்கையை சமாளிக்க முடிகின்றது. சமுதாயத்தில் பெண்களின் கருத்துக்களுக்கும் மதிப்பு கிடைக்க வேண்டுமானால் கல்வி, கல்வியைச் சார்ந்த உத்தியோகம், சுயமாக சம்பாதித்து சுயகாலில் வாழ்க்கை நடத்துவது போன்ற அம்சங்கள் அடிப்படைத் தேவை என்பதையும் இந்த நாவல் மறை முகமாக உணர்த்துகின்றது என்பதை படிக்கின்ற வாசகர்கள் உணரமுடியும்.
Mrs.மல்ஹோத்ராவின் கதாபாத்திரம் சிறப்பாக இருக்கின்றது. கதைக்கு அவ்வளவு முக்கியமில்லாத கதாபாத்திரம் என்றாலும் கூட, இந்த பாத்திரத்தின் தன்மை உயர்ந்த மனம் படைத்த மக்களின் அன்பை வர்ணிப்பது சிறப்பாக அமைந்திருக்கின்றது. மேலும் சில குட்டி குட்டி கதாபத்திரங்கள் இடையிடையே வந்து செல்கின்றன. இந்தக் கதையின் திருப்பங்களையெல்லாம் பார்க்கும் போது, அதிலும் குறிப்பாக முடிவுப் பகுதியைப் படிக்கும் போது, இதனை ஒரு சினிமா படமாக எடுத்தால் (சரியான இயக்கத்துடன்;;:-) ) நன்றாகவே ஓடும் என்று தெரிகின்றது.

ஆக மொத்தத்தில் வெறும் நாவலாக மட்டுமில்லாமல், படித்த பிறகும் அந்த கதாபாத்திரங்களை மனதில் அசை போடவைப்பதில் வாஸந்தி வெற்றி பெற்றிருக்கின்றார் என்றே சொல்லவேண்டும்.