Wednesday, May 30, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 4


பகுதி 4

இசையுடன் தமிழ் செய்யுட்களைப் பாடி திருவாவடுதுரை ஆதீனகர்த்தரின் அன்பைப் பெற்றவர் உ.வே.சா அவர்கள். தமிழ் கற்க அவருக்கிருந்த ஆர்வம் அளப்பறியது. சங்கீதம் பயிற்சி என்பது இடையில் தடைபட்டாலும் பாரம்பரியமாகக் கற்ற இசை அவரது தமிழ்ப்பணிக்கு மெருகூட்டியது என்பதை என் சரித்திரம் நூலில் பல இடங்களில் வாசகர்கள் உணர முடியும். நந்தனார் சரித்திர கீர்த்தனம் இயற்றிய கோபால கிருஷ்ண பாரதியாரிடமும் ஒரு சில சமயம் இவர் பாடம் படித்திருக்கின்றார்.

இப்படி சங்கீதத்தில் நாட்டம் என்பது இவருக்கு தந்தையின் தாக்கத்தால் ஏற்பட்டது என்று சொன்னால் மிகையாகாது. வேங்கட சுப்பையர் கனம் கிருஷ்ணையரிடத்தில் பாடம் கேட்டவர். ஆக கனம் கிருஷ்ணைய்யரைப் பற்றிய சிறு குறிப்பும் வழங்குவது தேவை என்று நான் கருதுவதால் அவரைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

கனம் கிருஷ்ணையரைப் நமக்கு அறிமுகம் செய்யும் போது "சென்ற நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இருந்த புகழ் பெற்ற சங்கீத வித்துவான்களுள் ஒருவர்"  என்றே உ.வே.சா குறிப்பிடுகின்றார். இவர் தந்தை வழி சொந்தமும் கூட என்பதை 2ம் பகுதியில் குறிப்பிட்டிருந்தேன்.

கனம் கிருஷ்ணையர் சங்கீத பரம்பரையில் பிறந்தவர். தன் தந்தையாரிடமும் அப்பால் தஞ்சாவூர் சமஸ்தான சங்கீத வித்வானாக இருந்த பச்சைமிரியன் ஆதிப்பையரிடமும் சங்கீத பயிற்சி பெற்று பின்னர் சமஸ்தானத்து சங்கீத வித்வானாக ஆனார். தமிழ்நாட்டில் கன மார்க்கம் வழக்கத்தில் இல்லாத காலம் அது.அப்போது பொப்பிலி சமஸ்தானத்தைச் சேர்ந்த கேசவையா என்ற சங்கீத வித்வான் தஞ்சாவூர் சமஸ்தானத்துக்கு வந்து கன மார்க்கத்தைப் பாடிக் காட்ட அந்த இசையில் மயங்கிய அரசர் "இந்த வித்துவானுடைய உதவியால் யாரேனும் இந்தக் கனமார்க்க சங்கீத கலையைக் கற்றுக் கொண்டு வருகின்றீர்களா" எனக் கேட்க, கிருஷ்ணையர் தான் இந்தப் பய்ற்சி மேற்கொள்வதாகச் சொல்லி கபிஸ்தலமென்னும் ஊருக்குச் சென்று அங்கே இராமபத்திர மூப்பனாரென்னும் செல்வந்தர் ஒருவருடைய ஆதரவில் பொப்பிலி கேசவையாவிடம் கன மார்க்க சங்கீதத்தின் இயல்புகளைக் கற்றுக் கொண்டார். பின்னர் தஞ்சை சமஸ்தானம் திரும்பி அரசரின் அவையில் பாடிக்காட்ட அன்றிலிருந்து அவருக்கு கனம் கிருஷ்ணையர் என்ற பெயர் அமைந்தது.


கோபால கிருஷ்ண பாரதியாரும் கனம் கிருஷ்ணையரிடம் சில கீர்த்தனைகளைக் கற்றுக் கொண்டிருக்கின்றார் என்ற செய்தியையும் தெரிந்து கொள்ள முடிகின்றது.

கன மார்க்க சங்கீதத்தைப் பயிற்சி செய்ய நல்ல உடல் பலமும் தேக ஆரோக்கியமும் முக்கியமாம். தன் மகன் வேங்கட சுப்பையரை தனது தமையனார் கனம் கிருணையரிடம் செல்லத்தம்மாள் ஒப்படைத்தபோது வேங்கட சுப்பைய்யர் மிக மெலிந்ததேகத்தோடு இருந்ததாகவும் "இவனுக்கு புஷ்டி போதாது. நன்றாகச் சாப்பிட வேண்டும், உடம்பு வளைந்து வேலை செய்ய வேண்டும்" என்று சொன்னதையும் உ.வே.சா குறிப்பிடுகின்றார். "இனிமேல் மண் வைத்து ஒட்டிப் புஷ்டிப் படுத்த முடியுமா? இருக்கிற உடம்பைச் சரியாக காப்பாற்றிக் கொண்டால் போதும்" என்று சொல்லிவிட்டு சில நாட்கள் அங்கே தங்கியிருந்து வேங்கட சுப்பையரை சங்கீத குருகுலத்தில் விட்டு வந்தார் உ.வே.சாவின் பாட்டியார்.

கனம் கிருஷ்ணயர் வேங்கட சுப்பையரை அன்புடன் நடத்தினாலும் கண்டிப்புடனும் பயிற்சி கொடுத்து வளர்த்தார்.சமஸ்தானத்தில் கனம் கிருஷ்னையருக்கும் ஜமீந்தாரைப்போன்ற வரவேற்புதானாம். கனம் கிருஷ்ணையர் குதிரை மேல் சவாரி செய்து செல்வாராம். ஜமீந்தார் அன்பளிப்பாக வழங்கிய குதிரை அது.

முறையாக இரவும் பகலும் சங்கீதம் பயிற்சி பெற்றார் வேங்கட சுப்பையர். கனம் கிருஷ்ணையர் வித்வான்கள் அடங்கிய சபையில் பாடும் போது வேங்கட சுப்பையரும் இணைந்து பாடுவாராம்.. ஜமீந்தாருக்கும் வேங்கட சுப்பையர் மேல் அன்பு உண்டாகிற்று.

வேங்கட சுப்பையருக்கு திருமணம் செய்ய நினைத்து பெண் தேடிக் கொண்டிருக்கையில் கனம் கிருஷ்ணையருக்கு உடல் நிலை மோசமாகியது. ஆதலால் ஜமீந்தாரிடம் சொல்லி அனுமதி பெற்றுக் கொண்டு உடையார்பாளையத்தை விட்டு தனது சொந்த ஊராகிய திருக்குன்றத்திற்குச் சென்றார் கனம் கிருஷ்ணையர். திருக்குன்றத்திலேயே அவர் இறுதி காலம் அமைந்து. அதற்குப் பிறகு வேங்கட சுப்பையர் உடையார் பாளையம் திரும்பி சமஸ்தானத்திலே இணைந்து கொண்டார்.அப்போது ஜமீன்தார் கனம் கிருஷ்ணையருக்கு பிறகு அவரது ஸ்தானத்திற்கு ஒருவரை தேடிக்கொண்டிருக்க சாமா சாஸ்திரிகளின் குமாரராகிய சுப்பராயரென்னும் வித்துவானைத் தருவித்து அவரை சமஸ்தான வித்துவானாக நியமித்தார் ஜமீன்தார் . அப்போது வேங்கட சுப்பையர் சமஸ்தானத்து வித்துவான்களில் ஒருவராக இருந்து வந்தார்.

இந்த சங்கீத பயிற்சியும் அனுபவமும் வேங்கட சுப்பையருக்குப் பிற்காலத்தில் கதாக்காலட்சேபங்களும் இசைக் கச்சேரிகளும் நடத்தும் வாய்ப்புக்களை அமைத்துத் தந்தன. பலமான சங்கீத அஸ்திவாரம் கனம் கிருஷ்ணையரிடம் மேற்கொண்ட பயிற்சியினால் வேங்கட சுப்பையருக்கு அமைந்தது. இதுவும் அவர் செய்த சிவ பூஜையின் பலன்தானோ?

தொடரும்...
சுபா

Monday, May 28, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 3


பகுதி 3

மாதாமகர் என்ற ஒரு சொல் ப்ரயோகத்தை இந்த நூலில் தான் தெரிந்துகொண்டேன். தாயாரின் அப்பா, அதாவது தாத்தாவை இச்சொல் குறிக்கின்றது. தனது மாதாமகரைப் பற்றியும் அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளைப் பற்றியும் உ.வே.சா என் சரித்திரத்தில் குறிப்பிடுகின்றார்.

உ.வே.சா அவர்களது மாதாமகரின் பெயர் கிருஷ்ணசாஸ்திரிகள் என்பது. வாழ்நாள் முழுதும் சிவ பூஜையும், ஜபமும், கர்மானுஷ்டானங்களுமே புரிந்து வருவது சாதாரண காரியமல்லவே! ஆனால் தனது தாத்தா சிவ பூஜையே கதியென்று இருந்தார் என்று சொல்லி வியக்கின்றார் உ.வே.சா.

"வண்டின் ரீங்காரத்தைப் போல உள்ள அந்தச் சிவ நாமத்திலே நான் இளமையில் ஈடுபட்டேன். என்னை அறியாமல் நானும் சிவநாம ஜபம் என் ஆறாம் பிராய முதலே செய்யத் தொடங்கினேன். இன்றளவும் ' நின்றும் இருந்தும் கிடந்தும்' அந்த ஜபத்தை செய்து கொண்டு வருகின்றேன்" என்று தனது 85ஆவது வயதில் உ.வே.சா குறிப்பிடுகின்றார்.

"இளமையில் கிருஷ்ண சாஸ்திரிகளுடைய திருவாக்கிலிருந்து எழுந்த அந்த நாமத்தின் இனிமை என் கருத்தில் மிகவும் நன்றாகப் பதிந்து விட்டது. பிறகு நான் முறையாகப் பல மந்திர ஜபங்களை உபதேசம் செய்து கொண்டேன். எல்லாவற்றிற்கும் முன் எனக்கு முதல் உபதேசமாக என் நெஞ்சில் தானே ஊன்றியது சிவநாமந்தான். அதை ஊன்ற வைத்த முதற் குரு என் மாதாமகராகிய கிருஷ்ண சாஸ்திரிகளேயாவார்" என்கின்றார்.

கிருஷ்ண சாஸ்திரிகள் புதுக்கோட்டைக்கு அருகே ஆரணப்பட்டி என்னும் ஊரில் இருந்தவர். கைம்பெண்ணாக குழந்தைகளுடன் பிறந்த வீடு திரும்பிய தனது தமக்கையாரிடம் வீடு நிலம் ஆகியவற்றை ஒப்படைத்து விட்டு தன் மனைவியாருடன் சோழ நாட்டின் காவிரிக்கரை பக்கத்திலுள்ள ஊர்களில் சிவபக்தி செய்து வர எண்ணி புறப்பட்டு விட்டார்.

இறைவழிபாடு செய்து கொண்டு உடையார்பாளையம் வந்து சேர்ந்தார். உடையார்பாளையத்தில் அப்போது சமஸ்தானதிபதியாக இருந்த கச்சிக் கல்யாண ரங்கப்ப உடையார்ரிடம் தானாதிகாரியாக இருந்த ஸ்ரீசுப்பராய சாஸ்திரிகள் கிருஷ்ண சாஸ்திரிகளை வரவேற்று தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்று உபசரித்தார். சமஸ்தானத்தைச் சேர்ந்த இடத்தில் கிருஷ்ண சாஸ்திரிகளை நலமாக வைத்திருக்க ஏதாகிலும் உதவலாம் என்றெண்ணி அருகிலிருந்த கங்கை கொண்ட சோழபுரம் சிவாலயத்தில் அவரை அத்தியாபகராக நியமித்தார். கிருஷ்ண சாஸ்திரிகளுக்கும் இது மகிழ்ச்சியும் மன நிறைவும் அளிப்பதாகவே நிச்சயம் இருந்திருக்கும்.

இந்த கங்கை கொண்ட சோழபுரத்து சிவாலயம் முதலாம் இராஜேந்திரன் கட்டிய கற்றளி கோயில். இக்கோயிலின் பெயர் கங்கை கொண்ட சோழீச்சுரம் என்பதாகும். சிற்பக்கலையின் அற்புதங்கள் நிறைந்தது இக்கோயில். மிகப்பெரிய வடிவத்தில் இறைவன் லிங்க வடிவத்தில் இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ளார். இந்த ஆலயத்திலேயே சிங்கக் கிணறு என்று குறிப்பிடப்படும் ஒரு தீர்ர்த்தமும் உண்டு. கங்கை வரை போர் செய்து சென்று அங்கே வென்று வந்த முதலாம் இராஜேந்திரன், தன்னிடம் தோல்வி கண்ட அந்த வட நாட்டு மன்னர்களின் தலையில் கங்கை நீரை ஏற்றிக் கொண்டு வந்ததாகக் கூறுவர். இந்த சிங்கக் கிணற்றில் அந்த கங்கை நீரை விடும்படி இராஜேந்திரன் பணித்ததால் இந்தச் சிங்கக் கிணறுக்கு கங்கை என்றும் ஒரு பெயர் உண்டு.

இந்த கங்கை கொண்ட சோழீச்சுரத்தில் சேவகம் செய்து கொண்டிருந்த போது அவருக்கும் அவர் மனைவிக்கும் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தனர். அவர்களுக்கு முறையே லக்‌ஷ்மி, பாகீரதி. சரஸ்வதி எனப் பெயரிட்டனர். இதில் சரஸ்வதி என்பவரே உ.வே.சா அவர்களது தாயார்.

சில காலங்களுக்குப் பின்னர் அவர் தனது சுற்றத்தாருடன் மீண்டும் இணைந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டதால் கங்கை கொண்ட சோழபுரத்தை விட்டு புறப்பட்டு மீண்டும் சூரிய மூலைக்குத் தன் குடும்பத்துடன் திரும்பினார். சூரியமூலையில் (சூரியமலையென்று தற்சமயம் வழங்குவதாக உ.வே.சா குறிப்பிடுகின்றார்) சிவ வழி பாடு செய்து கொண்டு நிலங்களை குத்தகைக்கு விட்டு அதில் வரும் பணத்தைக் கொண்டு ஜீவித்துக் கொண்டு சிவ பூஜையே கதியென்று மீண்டும் தன் வாழ்க்கையை நடத்தி வந்தார். சூரியமூலைக்கு வந்த பின்னரும் அவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் சுப்பலக்‌ஷ்மி, சிவராமையர், மீனாஷி ஆகியோர்.

இந்த காலகட்டத்தில் வேங்கடசுப்பையர், அதாவது உ.வே.சா அவர்களின் தகப்பனாருக்குத் திருமணம் செய்விக்க ஏற்பாடும் பெண் தேடலும் நடந்து கொண்டிருந்த போது கிருஷ்ண சாஸ்திரிகளைப் பற்றி கேளிவிப்பட்டிருந்தபடியால் அவரது மூன்றாவது மகளான சரஸ்வதியை திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்தனர். உடையார் பாளையம் ஜமீந்தார் பொருளதவி செய்ய, பெற்றோர் இந்தத் திருமணத்தை இனிதே நடத்தி வைத்தனர்.

குறிப்பு:இப்பதிவு தொடர்பான குறிப்புக்கள் 7 அத்தியாயத்தில் உள்ளன.

தொடரும்..

சுபா

Friday, May 18, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 2


பகுதி 2

 “ ”எப்போதும் சிவ பக்தி பண்ணிக் கொண்டிரு” என்பது என் தந்தையார் எனக்குக் கடைசியில் கூறிய உபதேசம். அந்த உபதேசத்தை நான் கடைபிடிப்பதனால் இந்த அளவில் தமிழ்த் தொண்டு புரியவும் அன்பர்களுடைய ஆதரவைப் பெறவும் முடிந்ததென்று உறுதியாக நம்பிருக்கின்றேன். ” என்று உ.வே.சா என் சரித்திரத்தில் 6ம் அத்தியாயத்தில் கூறுகின்றார்.

உ.வே.சா அவர்களின் தந்தையாரைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கருதுகின்றேன். உ.வே.சாவின் வாழ்க்கையில் அவர் வளர்ச்சிக்குப் பெரிதும் துணையாக நின்றவர் அவர் தந்தையார். அவரைப் பற்றிய சில ஆரம்பகால செய்திகளை வாசிப்பதும் உ.வே.சாவின் இளமை காலத்தையும் வாழ்க்கைச் சூழலையும் தெரிந்து கொள்ள உதவும்.

உ.வே.சா அவர்களது தந்தையின் இயற்பெயர் வேங்கட சுப்ரமணிய ஐயர். இது வேங்கடசுப்பையரென்று வழக்கில் மறுவி விட்டது. முன்னோர்களின் பெயரை அது ஒத்திருந்தமையால் அவரை வீட்டில் எல்லோரும் ஸாமி என்றே அழைப்பார்களாம். வேங்கட சுப்ரமணிய ஐயருக்கு ஒரு சகோதரரும் ஒரு சகோதரியும் இருந்தனர். சகோதரரின் பெயர் ஸ்ரீநிவாஸ ஐயர். அவரை சின்னஸாமி என்றே அழைப்பார்களாம். இவர்கள் இருவருக்கும் உ.வே.சா அவர்களின் தாத்தாவே இளமையில் தமிழ் மொழியையும் வடமொழியையும் கற்பித்தார். பாட்டியார் சங்கீத ஞானம் கொண்டிருந்தமையால் தானே சங்கீதத்தைத் தாயாரிடம் கற்றுக் கொண்டார் உ.வே.சாவின் தந்தையார். பின்னர் கனம் கிருஷ்ணையாரிடம் சங்கீதப் பயிற்சி மேற்கொண்டமைப் பற்றி இன்னொரு பதிவில் எழுதுகின்றேன்.

உ.வே.சா அவர்களின் தாயாரின் பெயர் ஸரஸ்வதி. அக்காலகட்டத்தில் திருமணம் செய்யும் போது மணமகன் வீட்டாருக்கே செலவு அதிகமாகுமாம். ஒரு மகனுக்குத் திருமணம் செய்து வைப்பது பெரிய காரியமாக 19ம் நூற்றாண்டில் இருந்திருக்கின்றது. இந்த 180 வருஷ கால இடைவெளியில் நிகழ்ந்துள்ள ஒரு சமூக மாற்றமாகவும் இதனைப் பார்க்கத் தோன்றுகிறது.இப்போது காலம் எவ்வளவோ மாறிவிட்டது அல்லவா?

உ.வே.சா குறிப்பிடுகின்றார். “ என் தந்தையாருக்குக் கலியாணம் செய்யும் பருவம் வந்தது. அக்காலத்தே இவ்விஷயத்தில் பிள்ளை வீட்டாருக்குத்தான் செலவு அதிகம். விவாகச் செலவிற்கும் கூறை முதலியவற்றிற்கும் ஆபரணங்களுக்கும் பிள்ளை வீட்டுக்காரர்களே பணம் கொடுப்பது வழக்கம். ஒரு திருமாங்கலியம் மட்டும் பெண் வீட்டார் பெண்ணுக்குக் கொடுப்பார்கள். ஆதலின் கலியாண விஷயத்தில் இந்தக் காலத்தைப் போலப் பெண் வீட்டார் பொருளில்லையே என்ற கவலை கொள்ள மாட்டார்கள்.”

மகனுக்குக் கலியாணம் முடிக்க வேண்டுமே என கவலைப்பட்ட பாட்டி செல்லத்தம்மாள் சும்மா இல்லாமல் மகன் வேங்கட சுப்ரமணியரை தனது சகோதரர் கனம் கிருஷ்ணைய்யரிடம் ஒப்புவித்தார். சங்கீதப் பாடமும் சொல்லிக் கொடுத்து திருமணமும் செய்து வைத்து இவரைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஒப்படைத்து விட்டார். அது வேங்கட சுப்ரமணியரின் வாழ்க்கையில் சங்கீத ஞானத்தையும் மணவாழ்க்கையயும் அமைத்து வைத்தது.

உ.வே.சா அவர்களுக்குத் தனது தந்தையாரின் பால் அளவற்ற அன்புண்டு. தனது தந்தையைப் பற்றி குறிப்பிடும் போது அவர் தனது நூலில் “இளமையில் எனக்கு ஒரு தக்க ஆசிரியரைத் தேடித் தந்ததும், பின்பு தமிழ்ச்சுவடிகளே கதியாகக் கிடந்த எனக்கு லௌகிகத் தொல்லை அணுவளவேனும் இல்லாமற் பாதுகாத்ததும், சிவ பக்தியின் மகிமையைத் தம்முடைய நடையினால் வெளிப்படுத்தியதுமாகிய அரிய செயல்களை நான் மறக்கவே முடியாது” என்கின்றார்.

இந்தக் குறிப்புக்கள் அனைத்தும் 6ம் அத்தியாயத்தில் உள்ளன.

தொடரும்...

Monday, May 14, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 1


23 அல்லது 24 ஆண்டுகளுக்கு முன்னர்..

அவ்வப்போது தஞ்சாவூரிலிருந்து மலேசியாவிற்கு தனது அக்காவை, அதாவது என் அம்மாவைப் பார்க்க வரும் எனது மாமா சம்பத் கையோடு சில புத்தகங்களும் கொண்டு வருவார். கவிதை நூல்களும் இருக்கும், சித்தர் நூல்களும் இருக்கும். கதை, நாவல்களும் இவற்றுள் இருக்கும். பொதுவான வாசிப்பு நூல்களும் சில இருக்கும். ஒரு முறை இப்படி கொண்டு வந்த நூல்கட்டில் கந்தபுராணம், திருப்புகழ், என் சரித்திரம் மூன்றும் சேர்ந்திருந்தன. இவை மூன்றையும் அப்போதே விடாது படித்து முடித்ததால் இந்த நிகழ்ச்சி இன்னமும் ஞாபகம் இருக்கின்றது. அதிலும் கந்தபுராணம் நூலின் அட்டைப்படத்தில் மயிலின் மேல் இளம் முருகன் வேலுடன் அமர்ந்தவாறு இருக்கும் காட்சி கூட இன்னமும் மனதில் நிழலாடுகின்றது. ஆக, அப்போது முதன் முதலாக என் சரித்திரம் நூலை முழுதாகப் படித்து முடித்தேன். நூலிலிருந்த ஒரு சில செய்திகள் மட்டும் தான் ஓரளவு ஞாபகத்தில் இருந்தன.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை சென்றிருந்தபோது நான் புத்தகக்கடையில் தேடி என் சரித்திரம் நூலை வாங்கிக் கொண்டேன். வாசிக்கலாம் என நினைத்தால் அதற்கும் தகுந்த வேளை வரவேண்டும் போல.. இந்த முயற்சி தள்ளிக் கொண்டே போய்விட்டது. இந்த முறை விடுமுறையில் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது இதனையும் எடுத்து வைத்துக் கொண்டேன்.

முன்னர் வாசித்ததற்கும் இப்போது வாசிப்பதற்கும் மிகப் பெரிய வித்தியாசத்தை எனது புரிதலில் உணர முடிந்தது.

நல்ல விஷயங்களை அதிலும் தமிழ் மொழி, தமிழ் நூல்கள் பாதுகாப்பு, ஆவணப்பாதுகாப்பு, கலை பண்பாட்டுச் சிறப்புக்கள் மின்னாக்கம் என ஈடுபட்டு வரும் நம் குழுவினருடன் என் சரித்திரத்தை மீண்டும் பகிர்ந்து கொள்வது வாசிப்போருக்கும் நன்மை பயக்கும் என்பதால் இதனை ஒரு இழையாகத் தொடங்க வேண்டும் என்று நூலை வாசிக்கும் போதே மனதில் தோன்றியது. அதன் அடிப்படையில் அமைவதே இந்த இழை.

என்னிடம் தற்சமயம் உள்ளது 2008ம் ஆண்டில் வெளிவந்த 7ம் பதிப்பு. மொத்தம் 776 பக்கங்கள் அடங்கியது.

என் சரித்திரம் உருவான விதத்தையும் தெரிந்து கொள்வது நமக்கு பயனளிக்கும் அல்லவா? 1935ம் ஆண்டு மார்ச்சு 6ம் தேதி உ.வே.சா அவர்களின் 80ம் ஆண்டு பூர்த்தி சதாபிஷேகத்தின் போது கலந்து கொண்ட நண்பர்களின் எண்ணத்தில் இந்தக் கருத்து உதித்திருக்கின்றது. உ.வே.சா அவர்கள் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் சுயசரிதத்தை எழுதி வெளியிட்டிருந்தார்கள். பிள்ளையவர்களின் சரித்திரமே இவ்வளவு அருமையாக வந்திருக்கின்றதே. அவரது சுய சரித்திரதையும் உ.வே.சா அவர்கள் எழுத வேண்டும் என்ற நண்பர்களின் நோக்கத்தை உ.வே.சா அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். நண்பர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டாலும் குருந்தொகை பதிப்பிப்பதில் தனது கவனத்தைச் செலுத்தியதால் இந்த முயற்சி தொடங்கப்படாமலேயே இருந்தது. ஆனாலும் அவ்வப்போது நண்பர்கள் பலர் இவருக்கு ஞாபகம் ஊட்டத் தவரவில்லை.

ஒரு நூலாக அமைத்து வெளியிட நீண்ட காலமாகும் என்பதால் ஒரு பத்திரிக்கையில் வாராவாரம் வரும் வகையில் பதியலாமே என்ற எண்ணம் நண்பர்களுக்கும் இவருக்கும் தோன்றியிருக்கின்றது. அப்போது ஆனந்த விகடன் பத்திரிக்கை பிரதம ஆசிரியராக இருந்த ஸ்ரீ ரா.கிருஷ்ணமூர்த்தி ஐயரவர்கள் ஸ்ரீ எஸ்.எஸ்.வாசன் அவர்களுடன் வந்து உ.வே.சா அவர்களுடன் பேசி வாரந்தோறும் ஒவ்வொரு அத்தியாயம் வரும் வகையில் ஏற்பாடு செய்திருக்கின்றனர். அதன் அடிப்படையில் 1940 ஜனவரி முதல் சுயசரிதை எழுதும் பணி இவரது 85ஆவது அகவையில் தொடங்கியது. முதல் அத்தியாயம் 6.1.1940 அன்று ஆனந்த விகடனில் வெளிவந்தது.

இந்தத் தொடர் வாரந்தோறும் ஒரு அத்தியாயம் என்ற வகையில் 1942ம் ஆண்டு மே மாதம் வரையில் சுயசரிதம் என்ற தலைப்பில் வெளிவந்தது. 28.4.1942 அன்று உ.வே.சா அவர்கள் மறைந்தார்கள். உ.வே.சா அவர்கள் முன்னரே குறிப்புக்கள் எடுத்து வைத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளவராதலால் அவரது எழுத்தில் இறுதியாக வந்த அத்தியாயம் மே மாதத்துடன் முற்றுப்பெறாமலேயே நிறைவடைந்தது. ஆக 122 அத்தியாயங்களுடன் என் சரித்திரம் முற்றுப் பெறாத சரித்திரமாகவே நம் கையில் தவழ்கின்றது. 1942க்குப் பின்னர் பல தடங்கல்களைத் தாண்டி 1950ம் ஆண்டு உ.வே.சா அவர்களின் திருக்குமாரன் திரு.சா.கலியாணசுந்தர ஐயர் அவர்களால் நூலாக வெளியிடப்பட்டது.

உ.வே.சா அவர்கள் தனது வாழ்க்கை நிகழ்வுகளை அவ்வப்போது குறித்து வைத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளவராகவே இருந்திருக்கின்றார். 1898க்குப் பின்னர் தனது தந்தையார் வாழ்க்கையில் நடந்த விஷயங்களைத் தொகுத்து நூலாக வெளியிடும் எண்ணத்தை இவரது திருமகனார் திரு.சா.கலியாணசுந்தர ஐயர் அவர்கள் கொண்டிருந்ததாகவும் இந்த முயற்சி நடைபெறுவதற்கு முன்னரே அவர் மறைந்ததையும் சுட்டிக் காட்டி "நாம் செய்த தவக்குறைவால் அவரும் மறைந்தார்" என்று தனது பதிப்புரையில் குறிப்பிடுகின்றார் திரு.ம.வே.பசுபதி. இது முற்றிலும் உண்மை! நமது தவக்குறைவால் மேலும் பல தகவல் பதிவாவதை நாம் இழந்திருக்கின்றோம் என்பதில் எனக்கும் ஐயமில்லை.

உ.வே.சா எனவும் தமிழ்த்தாத்தா எனவும் அழைக்கப்படும் திரு.உத்தமதானபுரம் வேங்கடசுப்பையரின் திருக்குமாரன் சாமிநாதன் அவர்களின் வாழ்க்கையை மூன்று முக்கிய பகுதிகளாகப் பிரிக்கலாம். முதலில் அவரது குழந்தைப் பருவம்- தந்தையைச் சார்ந்திருந்து குடும்ப பொருளாதார சூழலுக்கேற்ப அமைந்த வாழ்க்கை, அவரது தமிழ்க்கல்வி மீதான காதல், இசைப்பயிற்சி போன்றவற்றை மையமாகக் கொண்டது. இரண்டாவது பகுதி மகாவித்துவான் திரு.மீனாட்சி சுந்தரம் பிள்ளயவர்களின் மாணவராகச் சேர்ந்தது, கல்வி வாழ்க்கை, ஆசிரியருக்கும் இவருக்குமிடையிலான பேரன்பு, தமிழ்க் கல்வி, திருவாவடுதுறை ஆதினத்துடனான பழக்கமும் ஈடுபாடும் என்பதைக் கொண்டது. மூன்றாவதாக அமைவது திருவாவடுதுறை ஆதீனத்தில் முக்கியப் பணிகளையும் பொறுப்புக்களையும் ஏற்றுக் கொண்டதோடு கும்பகோணம் கல்லூரியில் பணி பின்னர் சிந்தாமணிப் பதிப்பு, சங்க இலக்கியங்கள், மணிமேகலை பதிப்பு என்பதாக அமைகின்றது.

இவர் கடந்து வந்த வாழ்க்கை படிகள் இன்றைக்கு ஏறக்குறைய 180 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதால் அக்கால வழக்கங்கள், தமிழ்க்கல்வியின் நிலை, தரம், சைவ ஆதீனங்களின் தமிழ்ப் பணி, தமிழ் நூல் அச்சு பதிப்பாக்க முயற்சிகள் போன்றவை பற்றி பல விஷயங்களை இந்த நூலின் வழியாக அறிந்து கொள்ள முடிகின்றது.

ஒவ்வொரு பகுதியையும் படிக்கும் போது எளிய தமிழில் அவை அமைந்துள்ளமையால் வாசகங்களோடு ஒன்றித்து போய் உ.வே.சாவின் உணர்வுகளையும் அறிந்து பயணிக்கும் நிலையை ஒவ்வொரு அத்தியாயங்களை வாசிக்கும் போதும் உணர்ந்தேன். இந்த நூல் ஒரு அரிய பொக்கிஷம். கல்லூரிகளில் எல்லா நிலை மாணவர்களுக்கும் கட்டாய பாடம் என்று ஒன்று வைத்து படிக்க வேண்டிய சில முக்கிய நூல்கள் என பட்டியலிட்டால் இதனை கட்டாயம் அதில் இணைக்க வேண்டும் என்று நான் முன் மொழிவேன். இந்த நூல் முழுமையிலும் ஒரு மாணவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை தனது அனுபவத்தாலேயே உணர்த்துகின்றார் உ.வே.சா.

தொடரும்...

அன்புடன்
சுபா