Friday, August 31, 2012

மலேசிய தேசிய மலர்


நேற்று மலேசியாவின் 55ம் ஆண்டு சுதந்திர தினம். இந்த நாளில் மலேசிய தேசிய மலர் என் வீட்டில் பூத்திருப்பதால் இன்றைய என் வீட்டு தோட்டத்துப் பரிசாக இங்கே சிவப்பு நிற செம்பருத்திப் பூ.




சென்ற ஞாயிற்றுக் கிழமை ஒரு மலர் பூத்திருந்தது. இன்று இரண்டு மலர்கள்.





செம்பருத்தி மலர் மலேசியாவில் நாடெங்கிலும் காணக்கிடைப்பது. பல வர்ணங்களில் இது பூத்து அலங்கரித்தாலும் சிவப்பு நிற செம்பருத்திப் பூவே தேசிய மலராக மலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்களால் தேர்ந்தெடுத்து ப்ரகடனப்படுத்தப்பட்டது.  சிவப்பு நிறம் வீரத்தைக் குறிப்பதாகவும் மலரில் உள்ள 5 இதழ்களும் தேசிய கோட்பாடுகள் ஐந்தினைக் குறிப்பதாகவும் குறிக்கப்படுவது.

அன்புடன்
சுபா

இப்பதிவுக்கு கிடைத்த கவிதை.. கவிஞருக்கு நன்றி!


இயற்கை பூவோடு உரையாடினால்... 

குளிக்கும் போது நீராவேன்
களிக்கும் போது நகையாவேன்
அளிக்கும் போது வானாவேன்
துளிர்க்கும் போது கதிராவேன். 

நீ ஆனதெல்லாம் ஆகி 
என்னையும் எழில்பூவாக்கி 
உன்முடியில் எனைச் சூடி 
என்மடியில் நீவளர்தல் வியப்பேயம்மா ! 
 --ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 


Sunday, August 26, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 17



உ.வே.சாவின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தி அவரது வாழ்க்கைப் பாதையை அமைத்ததாக நான் கருதுவது அவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களைச் சென்றடைந்த அந்த நிகழ்வையேயாகும். இன்று உ.வே.சா அவர்கள் தன் குருநாதர் மேல் கொண்ட ஆரா பற்றினால் எழுதிய நூலின் முதல் பகுதியைத் தமிழ் மரபு அறக்கட்டள சேகரித்தில் இணைத்து வெளியிட்டிருக்கின்றோம். இந்த நன்னாளில் உ.வே.சா அவர்களுக்கு  மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் அறிமுகமான விஷயத்தைப் பற்றி ஆரம்பிப்பதுவும் சாலத் தகும் எனக் கருதுகிறேன்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் அறிமுகமாகும் அத்தியாயத்திற்கு உ.வே.சா ஏக்கமும் நம்பிக்கையும் என பெயரிட்டிருக்கின்றார்.

தமிழில் பல நூல்களைப் பலரிடம் கற்றிருந்தாலும், பலரிடம் பாடங்கேட்டு வந்தாலும் கூட மன நிறைவினை அடைய முடியாத நிலையிலேயே உ.வே.சா அவர்களின் மன அமைப்பு இருந்தது. அவரது தமிழ்க் கல்வி மேலான அளவு கடந்த ஏக்கத்திற்கு நிறைவளிக்கும் வகையில் ஆசிரியர் அமையாத நிலையிலேயே இனி என்ன செய்யப் போகின்றோம் என்ற கவலை அவரை வாட்ட ஆரம்பித்து விட்டதை இவ்வத்தியாயத்தில்  றிப்பிடுகின்றார்.திருமணம் ஆகி சில நாட்கள் கடந்த நிலை.  அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலரிடம் பாடம் கேட்பதுவும் தந்தையாருடன் இணைந்து ராமாயணப் ப்ரசங்கத்தில் ஈடுபடுவது எனவும் இவரது நாட்கள் கழிந்து கொண்டிருந்தன. அச்சமயத்தில் இறையருள் கருணையின் வெளிப்பாடாக  மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பற்றி அறியும் வாய்ப்பு இவருக்கு கிட்டுகின்றது. அந்த நிகழ்வை இப்படி விவரிக்கின்றார்.

"படித்த பழம் புஸ்தகங்களைத் திருப்பித் திருப்பிப் படித்து வந்தேன். ஆனாலும் திருப்தி பிறக்கவில்லை. புதிய முயற்சி செய்வதற்கும் வழியில்லை.இப்படியிருக்கையில் ஒரு நாள் பெரும்புலியூரைச் சார்ந்த அரும்பாவூரிலிருந்த நாட்டாராகிய பெருஞ் செல்வரொருவர் அரியிலூருக்குப் போகும் வழியில் குன்னத்தில் எங்கள் ஜாகையில் தங்கினர். அவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களுடைய நண்பர். தமிழ்ப் பயிற்சி உடையவர். அவர் என்னோடு பேசிவருகையில் எனக்கிருந்த தமிழாசையை உணர்ந்தார் பிள்ளையவர்களுடைய பெருமையை அவர் பலபடியாக விரித்து உரைத்தார். என் தந்தையாரைப் பார்த்து, “தமிழில் இவ்வளவு ஆசையுள்ள உங்கள் குமாரரை வீணாக இச்சிறிய ஊரில் ஏன் வைத்திருக்கிறீர்கள்?
பிள்ளையவர்களிடத்தில் கொண்டு போய் விட்டுவிட்டால் இவர் நன்றாகப் படித்து விருத்திக்கு வருவாரே இப்படியே இவர் இருந்தால் ஏங்கிப் போய் ஒன்றுக்கும் உதவாதவராகி விடுவாரே. இப்படி வைத்திருப்பது எனக்குத் திருப்தியாக இல்லை” என்றார்."

அச்செல்வந்தர் இப்படிக் கூறினாலும் உடனே மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் உ.வே.சாவை மாணவராக ஏற்றுக் கொள்ள சம்மதிப்பாரா என்ற ஐயம்  இவரின் தந்தைக்கு ஏற்படாமலில்லை. அக்காலத்தில் ஒருவரிடம் மாணவராகச் சேர்வது என்பது சுலபமான காரியமல்ல.அதிலும் மிகப் புகழ்பெற்ற ஞானமிக்க வித்துவான்களிடம் மாணாக்கர்களாகச் சேர்வது என்பது மிகச் சிரமமான விஷயம். பல  நூல்களைப் பிழையறக் கற்றிருக்க வேண்டியதும் செய்யுட்களுக்குப் பொருந்தும் வகையில் பொருள் கூறும் திறமை பெற்றிருப்பதும் மிக மிக அவசியமான தகுதிகளாகக் கருதப்பட்டது.

ஆனாலும் அச்செல்வந்தர் மிகுந்த நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளைச் செல்லி மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களைச் சென்று பார்த்து வரச் சொல்லி தைரியமும் ஊக்கமும் வழங்கியமையால் உ.வே.சாவிற்கும் அவர் தந்தையாருக்கும் நன்மையே நடக்கும் என்ற நம்பிக்கை மனதில் பதிய ஆரம்பித்தது.

வாழ்க்கையில் சில நேரங்களில் நாம் எதிர்பார்க்காத வேளைகளில் சில நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அவ்வகை நிகழ்வுகளில் சில நமது வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைக்கும் திறம் கொண்டவையாக அமைந்தும் விடுகின்றன. அவ்வகை நிகழ்வில் ஒன்றாக உ.வே.சா வாழ்க்கையில் திருப்பத்தை அமைத்த அந்த தருணத்திற்காக ஏக்கத்துடன் காத்திருக்கலானார் உ.வே.சா.

"இங்ஙனமே வேறு சிலரும் பிள்ளையவர்களுடைய நற்குணத்தையும் புலமைச் சிறப்பையும் எங்களிடம் கூறி வந்தனர். அதனால் எனக்கு அப்புலவர் பிரானைப் பற்றிய தியானமே பெரிதாகி விட்டது, கடவுள் திருவருள் கை கூட்டுமோ என்று ஏங்கலானேன்."



தொடரும்..
சுபா

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 16


உ.வே.சாவின் திருமணம், அதனையொட்டி நடைபெற்ற நிகழ்வுகள், அந்த நேரத்தில் அவர் சந்தித்த மாந்தர்கள், காலச்சூழல் போன்றவற்றை விளக்குவதாக அமைகின்றது என் சரித்திரம் நூலில் உள்ள அத்தியாயம் 22.

திருமண ஏற்பாடுகளில் ஊருக்கு ஊர், சமூகத்துக்குச் சமூகம் பல வேற்றுமைகளைக் காண்கின்றோம். இன்றைக்கு நமது வழக்கத்தில் இருக்கின்ற திருமண முறைகளிலிருந்து சில குறிப்பிட்ட விஷயங்களில் வேறுபட்டு இருந்தமையை என் சரித்திரம் நூலில் அறிந்து கொள்ள முடிகின்றது. திருமண ஏற்பாடு, வந்து செல்லும் உறவினர், ஊர்க்காரர்கள், சுற்றத்தார் போக்கு, உணவு உபசார முறைகள், உடைகள், திருமணம் ஆகும் பெண் ஆண் ஆகியோரின் வயது என குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இன்றைக்கு ஏறக்குறைய 180 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தமை இக்குறிப்புக்களால் அறியக் கிடைக்கின்றன.

உ.வே.சா அவர்களுக்குத் திருமணம் நடைபெற்ற சமயம் அவருக்கு வயது 14. மணமகள் மதுராம்பிகைக்கு அகவை எட்டு. இக்காலத்தில் இப்படி ஒரு திருமண வயதை நினைத்துப் பார்க்க முடியுமா?

திருமணம் அல்லது குடும்ப விழாக்கள் என்றாலே உறவினர்களாலும் சுற்றத்தாரினாலும்  ஏற்படும் நன்மையும் தீமையும் கலந்தே தான் வருகின்றன. என்னை விட தமிழக சூழலில் உள்ளவர்கள் நன்கு அனுபவித்து அறிந்த விஷயம் இது.  திருமணத்திற்கு வருவோர் மனம் வருந்தாமல் உபசாரம் செய்து அவர்களது மனம் நிறைய வைத்து அனுப்ப வேண்டும் என்பதில் மணமக்களின் பெற்றோர் முழு கவனம் வைத்து செயல்படுகின்றனர் இக்காலத்தில். ஒவ்வொருவரின் எதிர்பார்ப்புக்கள் மாறுபடுகின்ற  காரணத்தினால் மணமக்களின் பெற்றோர்களுக்குப் பெரும்பாலும் விருந்தினர்களை உபசரித்து அனுப்புவதிலேயே பல சங்கடங்கள் மனக்கஷ்டங்கள் வந்து விடுவதற்கும் வாய்ப்புக்கள் அமைந்து விடுகின்றன.  அதோடு திருமண ஏற்பாடுகளைக் கவனிக்க தனித்தனியாக வேலைக்கு ஆட்களை நியமித்து திருமணமும் அதனை ஒட்டி நிகழும் ஏனைய அனைத்து நிகழ்வுகளும் சிறப்பு குறையாமல் நடைபெற ஏராளமான பணத்தை செலவு செய்ய வேண்டிய நிர்பந்தமும் மணமக்களின் பெற்றோருக்கு அமைந்து விடுகின்றது. இது தமிழக சூழலில் பெற்றோருக்கு ஒதுக்கப்பட முடியாத ஒரு கடமையாகவே அமைந்து விடுகின்றது என்பதில் மறுப்பில்லை.

உ.வெ.சா திருமணம் நடைபெற்ற காலகட்டத்தில் உள்ள நிலமையை இப்படி விளக்குகின்றார்.

"அக்காலத்தில் ஒரு குடும்பத்தில் கல்யாணம் நடப்பதாயிருந்தால் ஒரு மாதத்துக்கு முன்பே சில பந்துக்கள் வந்து விடுவார்கள். ஒரு வாரத்துக்கு முன்பு பலர் வருவார்கள். வந்தவர்கள் தாங்கள் உபசாரம் பெறுவதில் கருத்துடையவர்களாக இருக்கமாட்டார்கள். தங்கள் தங்களால் இயன்ற உதவிகளை வலிந்து செய்வார்கள். பந்தற்கால் நடுவது, பந்தல் போடுவது, பந்தலை அலங்கரிப்பது முதல் கல்யாணம் ஆன பிறகு பந்தல் பிரிக்கும்
வரையில் நடக்கும் காரியங்களில் ஊரினரும் கல்யாணத்திற்காக வந்தவர்களும் கலந்து உதவி புரிவார்கள். கல்யாண வீட்டின் அகலத்திற்குத் தெருவை யடைத்துப் பந்தல் போடுவார்கள். பெண்மணிகள் சமையல் செய்தல், பரிமாறுதல், ஒருவரை யொருவர் அலங்கரித்தல் முதலிய உதவிகளைச் செய்வார்கள். ஆதலின் வேலைகளைச் செய்வதற்காக வேறு மனிதர்களைத் தேடி அலைய வேண்டிய சிரமம் இராது. எல்லோரும் சேர்ந்து ஈடுபடுவதனால் எவரும், “எனக்கு உபசாரம் செய்யவில்லை” என்ற குறை கூற இடமிராது. ஆயினும் சம்பந்திகளுக்கிடையே மனஸ்தாபம் நேர்வது எங்கும் இருந்தது. "

திருமண நிகழ்வின் பணச் செலவு என்று வரும் போது இரு வீட்டாரும் செலவை பிரித்து பங்கிட்டு செய்து கொள்வதைப் பற்றியும் சில விஷயங்களுக்கு மணமகனின் வீட்டாருக்கே பொருட்செலவு அதிகம் என்பது பற்றியும் மேலும் இப்படி குறிப்பிடுகின்றார்.

"அக்காலத்தில் சிலவகையான செலவுகள் குறைந்திருந்தன. முதல்நாள் நிச்சயதாம்பூலம் வழங்கப்பெறும். முதல்நாள் இரவு கல்யாணம் சொல்வதும். மாப்பிள்ளையை அழைப்பதும் அவை காரணமாக நேரும் செலவுகளும் பெரும்பாலும் இல்லை. கல்யாணத்திலும் பந்தற் செலவு, பூரி, தக்ஷணை, மேளம் முதலிய செலவுகளில் பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் பாதிப்பாதி ஏற்றுக்கொள்வார்கள். நான்காம் நாள் நடைபெறும் கிராமப் பிரதக்ஷணச் செலவு முழுவதும் பிள்ளை வீட்டாருடையது. "

திருமண நிகழ்வை விட திருமணத்தில் வழங்கப்படும் உணவை ப்ரதாணமாக வைத்துப் பார்ப்பதுவும் இன்று ஒரு விஷயமாக ஆகிவிட்டது. திருமணத்தில் மணமக்கள் சாப்பிட்டார்களா என்பதை விட வந்திருந்தவர்கள் மனம் வருந்தாமல் குற்றம் குறை சொல்லாத வகையில் விருந்து உபசாரம் இருந்ததா என்பதைக் கவனத்துடன் கவனிக்க வேண்டிய பெறும் பொறுப்பும் தற்காலத்தில் மணமக்களின் பெற்றோர்களுக்குத் தவிர்க்க முடியாத டென்ஷனை ஏற்படுத்துகின்ற விஷயமாக அமைந்து விடுவதை மறுக்க முடியாது.

அக்காலத்தில் விருந்துபசாரம் எப்படி இருந்தது என்பதை உ.வே.சொல்வது வாசித்து அறிந்து கொள்ளும் நமக்கு வித்தியாசமாக இருக்கின்றது.

"காலையில் காப்பி என்பது அக்காலத்தினர் அறியாதது. துவரம் பருப்புப் பொங்கலும் பரங்கிக்காய்க் குழம்புமே காலை ஆகாரம்; கருவடாம், அப்பளம்,  வற்றல்கள் இவை அந்த ஆகாரத்துக்குரிய வியஞ்சனங்கள். சிலர் பழையதும் உண்பதுண்டு. ஆண்டில் இளைய பெண்மணிகளும் அவற்றை உண்பார்கள். பிற்பகலில் இடைவேளைச் சிற்றுண்டி உண்ணும் வழக்கமும் அக்காலத்தில் இல்லை. குழந்தைகள் பசித்தால் அன்னம் உண்பார்கள். மத்தியான விருந்துக்குப் பின் இராத்திரிப் போஜனந்தான். பன்னிரண்டு மணிக்குப் பிறகே
பகற் போஜனம் நடைபெறும். பெரியவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய பூஜை முதலியவற்றை நிறைவேற்றிய பின்பே இலை போடுவார்கள். எல்லோரும் ஒருங்கே உண்பார்கள். இக்காலத்தைப்போல வந்தவர்கள் தங்கள் தங்கள் மனம் போனபடி எந்த நேரத்திலும் வருவதும் உள்ளே சென்று இலை போடச் செய்து அதிகாரம் பண்ணுவதும் இல்லை. அப்பளம், ஆமவடை, போளி என்பவைகளே அக் காலத்துப் பக்ஷியங்கள். "

உ.வே.சாவின் பிற்காலத்திலேயே திருமணச் சடங்குகளில் பல மாற்றங்கள் நிகழ ஆரம்பித்து விட்டன. இக்காலத்திலோ பணம் இல்லையென்றால் திருமணம் இல்லை எனும் அள்விற்கு நிலமை ஆகிவிட்டது. உதவும் உறவினர்களும் குறைவு. தத்தம் வாழ்க்கையைக் கவனித்துக் கொண்டு இவ்வகை குடும்ப திருமண வைபவங்களுக்கு விருந்தாளிகள் போல வந்து சென்று, தனக்கு கிடைக்க வேண்டிய மரியாதையில் ஒரு சிறிதும் பெற்றுச் செல்ல வேண்டும் என்று நினைக்கும் உறவினர்களின் எண்ணிக்கையே அதிகரித்து விட்டது.  எல்லா சிரமத்திலும் மிக மிக சிரமமான ஒரு சிரமம் ஒன்றுண்டென்றால் அது உறவினர்களின் மனதை திருப்தி செய்வித்து எந்த மனக்கசப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதுதான்.  ஆனால் பல்வேறு புதிய பிரச்சனைகள் திருமணங்களிலேயே முளைக்க ஆரம்பிக்கின்றன. யாரையும் திருப்தி படுத்த முடியாது என்பது உண்மையாக இருக்கின்ற வேளையில் எதற்காக பணத்தைக் கடன் வாங்கி கொட்டி செலவழித்து வாழ்நாளில் பெரும் பகுதியை கடன் சுமையில் கழிக்க வேண்டும் என்னும் கேள்வியே என் மனதில் எழுகின்றது.


தொடரும்...

சுபா

Sunday, August 19, 2012

பெகோனியா


நண்பர்களே,

பெகோனியா என்னும் செடி வகை மனதைக் கவரும் பல வர்ணங்களிலான மலர்களைத் தரக்கூடிய ஒரு செடி. இது கோடை காலத்தில் மட்டும் முளைத்து குறிப்பாக ஜூலை முதல் செப்டம்பர் வரை பூத்துக்குலுங்கும் செடி. இதில் நம் கை அளவை விட பெரிய மலர்கள் உள்ள செடி வகைகள் உண்டு. மிக மிகச் சிறிதான பூக்கள் உள்ள செடி வகைகளும் உண்டு.

நான் கடந்த 2 ஆண்டுகளாக பெகோனியா கிழங்குகளை வாங்கி தொட்டியில் வைத்து வளர்த்து வருகின்றேன். வெள்ளை, சிவப்பு, ரோஸ் நிறங்களில் இந்த மலர்கள் உள்ளன. கடந்த ஆண்டு மஞ்சள் நிறப்பூச்செடியும் இருந்தது.

இன்று அதில் சிவப்பு நிற மலர் செடி ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக அமைகின்றது.



பெகோனியா மலரின் மொட்டு




இரண்டு மலர்கள்.. ரோஜாவைப் போல சற்று தோன்றினாலும் இது வேறு விதமான ஒரு மலர்





இரண்டு கைகளின் அளவில் உள்ள ஒரு பெரிய பெகோனியா மலர்



இம்மலர் வகையைப் பற்றி மேல் விபரங்கள் அறிந்து கொள்ள விக்கி செல்லலாம். http://en.wikipedia.org/wiki/Begonia

சுபா

இந்தப் பதிவுக்கு மின்தமிழில் கிடைத்த கவிதை..!


நமுட்டுச் சிரிக்கும் செவ்விதழ்! 
நாணிக் கவிழும் பூவிதழ்! 
திமிறும் இயற்கைத் தூண்டெழல் 
தீந்தேன் பாயும் அகவிதழ்.

     - ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 15



தமிழ் சமூகத்தில் திருமணம் என்ற பேச்சு எழும் போது பெண்கள் பல வேளைகளின் பரிதாபத்திற்குரிய நிலையில் இருப்பது இக்கால நிலை. வரதட்சனை என்பது வற்புறுத்தியோ அல்லது விரும்பியோ பெண் வீட்டார் கொடுக்கும் நிலை தற்கால நிதர்சனம். குடும்ப கௌரவம், அந்தஸ்து என்பதற்காக வரதட்சனை கொடுப்பது என்பது ஒரு காரணமாகக் கொள்ளப்படுகின்றது. இதில் தமிழகத்தில் வரதட்சனை என்பது சட்டத்திற்குப் புறம்பான ஒன்றாக இருக்கின்ற இக்கால நிலையில் சட்டத்திற்கு வெளியே இவை எழுதப்படாத சட்டங்களாக நடப்பில் இருக்கின்றன.

இன்றைக்கு 180 வருடத்திற்குப் பின்னோக்கிப் பார்த்தோமேயானால் அங்கே நிலை வேறாக இருப்பதைக் காணமுடிகின்றது. இதற்குச் சான்றாக அமைவது என்.சரித்திரம்.  உ.வே.சாவின் எழுத்திலிருந்தே வாசிப்போம்.

"எனக்குப் பதின்மூன்றாம் பிராயம் நடந்தபோதே என் தந்தையாருக்கு என் விவாகத்தைப்பற்றிய கவலை உண்டாகி விட்டது. அக்காலத்தில் பெண்ணுக்காகப் பிள்ளையைத் தேடும் முயற்சி பெரும்பாலும் இல்லை; பிள்ளைக்காகப் பெண்ணைத் தேடும் முயற்சியே இருந்தது. “பெண்ணுக்கு வயசாகி விட்டதே” என்ற கவலை பெற்றோர்களுக்கு இருப்பதில்லை; “எங்கே இருந்தாவது ஒருவன் வந்து கல்யாணம் பண்ணிக்கொண்டு போவான்” என்ற தைரியம் இருந்தது. பிள்ளையைப் பெற்றவர்களோ தங்கள் பிள்ளைகளுக்குத் தக்க பருவம் வருவதற்கு முன்பே நல்ல இடத்தில் பெண் தேடி விவாகம் செய்விக்கவேண்டுமென்ற கவலையுடன் இருப்பார்கள்.

கல்யாணத்தில் பிள்ளை வீட்டினருக்கே செலவு அதிகம். குன்னத்தில் பெற்ற ஆதரவினால் ஊக்கமடைந்த என்
தந்தையாருக்கு முன்பெல்லாம் குடும்பக்கடனை அடைக்க வேண்டுமென்ற நோக்கம் இருந்து வந்தது. நாளடைவில் அந்த நோக்கம் மாறி, “நிலத்தையேனும் விற்றுக் கடனை அடைத்து விடலாம்; இவனுக்கு
எப்படியாவது கல்யாணத்தைப் பண்ணி வைத்துவிட வேண்டும். வரும் பணத்தை அதற்காகச் சேர்க்க வேண்டும்” என்ற எண்ணமே வலியுற்றது. ஒருபால் பெண்ணைத் தேடும் முயற்சியும், ஒருபால் என் கல்யாணத்துக்குரிய பொருளைத் தேடும் முயற்சியும் நடைபெற்று வந்தன. இந்த முயற்சிகளில்
தந்தையாரோடு என் சிறிய தந்தையாரும் சேர்ந்துகொண்டனர்."

இதே நிலை உ.வே.சாவின் தந்தையாருக்குத் திருமணம் செய்விக்க நிகழ்ந்த போதும் இருந்தது என்பதனை முந்தைய பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருக்கின்றேன். இந்த 200 வருட இடைவெளியில் எப்படி இப்படியானதொரு மாற்றம் சமூகத்தில் நிகழ்ந்தது என்பது யோசிக்க வைக்கின்றது. காலம் காலமாக பெண் வீட்டார் வரதட்சனை தந்தே ஒரு பெண்ணுக்குத் திருமணம் செய்விக்க முடியும் என்ற ஒரு சிந்தனையை இப்போது மக்கள் கொண்டிருக்கின்றனர். இதில் உண்மையில்லை என்பதுவும், சற்று, அதாவது 200 ஆண்டுகளுக்கு முன் வரை கூட இன்னிலையில்லாது ஆண் சமூகம் திருமணச் செலவு அனைத்தும் செய்து ஒரு திருமணம் நடைபெற்றது எனபதனையும் இவ்வகைப் பதிவுகளின் வழி காண முடிகின்றது.

ஒரு திருமணத்திற்கானச் செலவு, அதில் வரதட்சணை போன்றவை காலத்திற்கு காலம் மாறுபட்டு சமூகம் எப்படி மாற்றி அமைத்துக் கொள்கின்றதோ அதற்கு தக்க வகையில் மாற்றம் அடைகின்றது என்று தான் புரிந்து கொள்ள முடிகின்றது. அந்த வகையில் பார்க்கும் போது ஆணும் பெண்ணும் இருவரும் கல்வி கற்று, தத்தமக்கென தொழிலைத் தேர்ந்தெடுத்து அவர்கள் வாழ்க்கைக்கான வருமானத்தைத் தேடிக் கொள்ளும் தகுதி படைத்தவர்களாக ஆகியிருக்கின்ற இக்கால நிலையில் வரதட்சணை என்ற சொல்லே திருமணம் என்னும் விஷயத்திலிருந்து நீக்கி விடவேண்டிய ஒரு சொல் என்பது என் கருத்து.

திருமணம் என்பது இருவர் இணைந்து புதிதாக தங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கும் ஒரு சடங்கு. இதில் ஆயிரம் பேர் வந்து வாழ்த்து சொன்னாலும் ஐந்து பேர் வந்து வாழ்த்து பரிமாறிக் கொண்டாலும் திருமண பந்தத்தை ஏற்றுக் கொண்டு குடும்பத்தை அமைத்து அக்குடும்பத்தை இயன்ற அளவு முறையாக வழி நடத்திச் செல்ல வேண்டியவர்கள் அத்திருமணம் புரிந்து கொள்ளும் ஆணும் பெண்ணுமே  என்ற நிலையில் சமூகத்தின் மதிப்பிற்காகவும் போலி ஆடம்பரத்திற்காகவும் லட்சக் கணக்கில் செலவு செய்து பின்னர் கடனில் மூழ்கி இனிமையாக ஆரம்பிக்க வேண்டிய  வாழ்க்கையில், வாழ்க்கையின் ஆரம்ப காலம் அனைத்தையும் கடன் தரும் சோகத்தில் கடத்துவதில் என்ன பயன்?

உ.வே.சா. மேலும் குறிப்பிடுகின்றார்.

"விவாகம் பண்ணிக்கொண்டு கிருகஸ்தன் என்று பெயர் வாங்கிக் கொள்வதில் அக்காலத்தில் ஒரு பெரிய கௌரவம் இருந்தது, பதினாறு வயசுடைய ஒருவன் விவாகமாகாமல் பிரமசாரியாக இருந்தால் ஏதோ பெரிய குறையுடையவனைப் போல அக்காலத்தவர் எண்ணினார்கள்."

இந்த நிலையில் இன்று ஓரளவிற்கு மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஆணோ அல்லது பெண்ணோ, ஒருவர் பிரமச்சாரியாக இருந்தால் ஒன்று அவர் சாமியாராக இருக்க வேண்டும் அல்லது ஏதாவது ஒரு பிரச்சனை அந்த மனிதருக்கு உள்ளது என்ற சிந்தனை பொதுவாக மக்கள் மத்தியில் உள்ளது. மற்ற சமூகங்களை விட ஆசிய நாடுகளில் மக்களின் சிந்தனையில் இவ்வகை எண்ணம் ஆழமாக உள்ளது என்பது என் அனுபவத்தில் நான் அறிந்து கொண்ட ஒரு விஷயம். ஒரு திருமணமாக ஆணையோ பெண்ணையோ நமது சமூகம் வருத்தத்துடன் தான் காண்கின்றது. எப்படியாவது ஒரு திருமணத்தைத் செய்து வைத்து விட்டால் அம்மனிதரின் வாழ்க்கையில் முழுமை அடைந்து விட முடியும் என்ற சிந்தனையை அடிப்படையாகக் கொண்டே இந்த நிலை அமைந்திருக்கின்றது. இதற்கு மாற்றாக, ஐரோப்பிய சூழலில் அதிலும் ஜெர்மனியிலும் ப்ரான்ஸிலும் உள்ள சமூகத்தில் பலர் பொதுவாக பல ஆண்டுகள் திருமணம் செய்து கொள்ளாமல் 40க்கும் மேல் 50க்கும் மேல் 60க்கும் மேல் என சிலர் திருமணம் செய்து கொள்கின்றனர். சிலர் திருமணமே செய்து கொள்ளாமல் தங்கள் வாழ்க்கையை ஏதோ ஒரு விஷயத்தில் ஈடுபடுத்திக் கொண்டு வாழ்கின்றனர்.  இதில் இது தவறு என்றோ இது சரி என்றோ கூறுவது என் நோக்கமன்று. நிலை இப்படி இருக்கின்றது. அந்த வேறு பாட்டினைக் காண்கின்றோம்.

சரி.. இனி உ.வே.சாவின் திருமணத்தை பார்ப்போம்.

பல முயற்சிகளுக்குப் பிறகு உ.வே.சாவிற்கு வரன் அமைந்தது. மாளாபுரத்தில் உள்ள கணபதி ஐயரென்பவரின் மகள் மதுராம்பிகையின் ஜாதகம் பொறுந்தவே பேசி சம்மதம் தெரிவித்து திருமணத்தை ஏற்பாடு செய்தனர் இரு வீட்டாரும். இதில் உ.வே.சா தமிழ் படிக்கின்றார் என்பது ஒரு கூடுதல் சிறப்பாக இருந்தது என்பதும் ஒரு செய்தி.

"நான் தமிழ் படித்து வருகிறேனென்றறிந்து, “எப்படியாவது பையன் பிழைத்துக் கொள்வான்” என்று நம்பிப் பெண்ணைக் கொடுக்கச் சம்மதித்தார்கள். “அந்தப் பிள்ளை பார்க்க லக்ஷணமாயிருக்கிறான்; தலை நிறையக் குடுமி இருக்கிறது; நன்றாகப் பாடுகிறான்” என்று அந்த வீட்டிலிருந்த முதிய பெண்பாலார் திருப்தியடைந்தனர்."

திருமணச் செலவுக்காக கதாகாலட்சேபத்தின் வழி சேர்த்த தொகையொடு சிதம்பரம் உடையார் திருமணக் கொடையாகக் கொடுத்த நூற்றைம்பது ரூபாயும் சேர்த்து திருமண ஏற்பாட்டை செய்தனர்.


தொடரும்..

சுபா

Saturday, August 18, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 14


இலக்கியம் படைக்க விரும்பும் இளைஞர்கள் பலர் தங்களை ஈர்த்த அறிஞர்களின் பாணியைப் பின்பற்றுவது என்பது  பெரும்பாலும்  சகஜம். வாசிக்கின்ற நூல்கள்,  அந்த நூல்களில் உள்ள சொற்கள், எழுத்து நடை, சிந்தனையோட்டம், பார்வை போன்றவற்றால் கவரப்பட்டு அதே பாணியில் எழுதுவது ஆரம்ப காலங்களில் பலருக்கும் ஏற்படும் ஒரு நிலைதான். எனது அனுபவத்திலும் இது நடந்ததுண்டு. மீண்டும் மீண்டும் தீவிரமாக மனதை ஆழமாக வைத்து வாசிக்கும் நூல்கள், அதிலுள்ள சொற்பயன்பாடு ஆகியவை எனது எழுத்துக்களிலும் பிரதிபலிப்பதை நான் கவனித்ததுண்டு.

புதுமையை படைக்க விரும்பும் போது இந்த நூல்களையெல்லாம் விட்டு கடந்து நமது சிந்தனையை அதில் செலுத்தி அதில் வெளிப்படும் கருத்தாங்களைச் சொல்லில் கொண்டுவருவது புதுமை படைப்பதாக அமையும்.  ஒரு நூலில் சொல்லியவற்றையே மீண்டும் வேறு சொற்களில் புகுத்தி அதனைமீண்டும் நூலாக கொண்டுவருவதால் என்ன பயன்?

உ.வே.சா அவர்களும்இளம் பிராயத்தில் இலக்கியம் படைக்க முயன்று இவ்வகை முயற்சிகளைச் செய்தவர்தாம் என்பதை என் சரித்திரம் காட்டுகின்றது.  தாம் பாடம் கேட்ட ஆசிரியர்கள் வடித்த செய்யுட்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு அவரும் செய்யுள் இயற்ற ஆரம்பித்திருக்கின்றார்.

"யாப்பிலக்கண விதிகளோ எனக்குத் தெரியா. சதகப் பாட்டுக்களைப் போன்ற விருத்தங்களைப் பாடலானேன். குன்னத்திலுள்ள ஆதிகும்பேசுவரர் விஷயமாகவும், மங்களாம்பிகை விஷயமாகவும், ஆயிரவல்லி என்னும்
துர்க்கையின் விஷயமாகவும் சில பாடல்களை இயற்றினேன். தாயுமானவர் பாடல், பட்டினத்துப்பிள்ளையார் பாடல் முதலியவற்றிலே கண்ட கருத்துக்களை அவற்றில் அமைத்தேன். “நான் பெண்களின் அழகிலே ஈடுபட்டுக் காலத்தைக் கடத்தி விட்டேன். அவர்கள் மயக்கத்திற்பட்டு வாழ்க்கையை வீணாக்கினேன்” என்றும், “செல்வரைப் புகழ்ந்து பாடி அலைந்து துன்புற்றேன்” என்றும் கருத்துக்களை அமைத்துச் செய்யுட்களை இயற்றினேன். பழம்பாடல்களின் ஓசையை மாதிரியாக வைத்துக்கொண்டதைப்போலவே அவற்றின் கருத்துக்களையும் அப்படியே அமைத்துக் கொள்வதை ஒரு பெருமையாக நான் கருதினேன்."

ஆர்வத்துடன் தான் இயற்றிய செய்யுட்களை தனது தந்தையாரிடம் காட்டி அவரது பாராட்டுதலைப் பெற வேண்டும் என்ற ஆர்வம் உ.வே.சாவுக்கு இருந்திருக்கின்றது. இதனால் ஒரு நாள் அவரது தந்தையிடம் தான் இயற்றிய செய்யுட்களை வாசித்துக் காட்டியிருக்கின்றார். தந்தையார் இவரைப் பாராட்டி உற்சாகம் கொடுத்து மீண்டும் மீண்டும் இவ்வகைச் செய்யுட்களை அவர் இயற்ற வேண்டும் என்று சொல்லுவார் என்று நினைத்திருக்கின்றார். ஆனால் நடந்ததோ வேறு.

உ.வே.சா அந்த நிகழ்வைச் சொல்கின்றார்.

" “அட பைத்தியமே! இப்படியெல்லாம் பாடாதே” என்றார். “அவர்களெல்லாம் பாடியிருக்கிறார்களே; நான் பாடுவதில் என்ன தவறு?” என்று நான் கேட்டேன்.

“நீ சிறு பையன்; அவர்கள் உலக அனுபவத்தில் கஷ்டப்பட்டவர்கள். அவர்கள் சொன்னவற்றையெல்லாம் நீயும் சொல்வது பொருத்தமன்று, பெண்மயலிற் சிக்கி வருத்தப்பட்டேனென்று அவர்கள் சொல்லலாம்; நீ சொல்லலாமா?” என்றார்."

தக்க நேரங்களில் தக்க ஆலோசனைகள் கிடைப்பதும் கூட இறைவன் கருணைதான். எழுதும் பழக்கத்தையும், சிந்தனையை கருத்தாக வடிக்கும் முறையையும் செம்மை படுத்த தக்க ஆலோசனைகள் உதவுபவை.

உ.வே.சா மேலும் கூறுகின்றார்.
"அவர் சொன்ன தடை அப்போது எனக்கு நன்றாக விளங்கவில்லை. என் பாட்டில் என் அனுபவந்தான் இருக்க வேண்டுமென்பதை நான் தெரிந்துகொள்ளவில்லை. பெண் மயலிற் சிக்குவதற்குரிய பிராயமே வராத நான் அதிற் சிக்கி உழன்று வைராக்கியம் பிறந்தவனைப்போலே பாடுவது பேதமையென்பதை நன்றாக உணரவில்லை. அவர்கள் பாடினார்கள்; நானும் பாடினேன். அவர்கள் பாட்டை அடிக்கடி சொல்லுவது, அதன் ஓசையை ஒட்டி நானும் பாடுவது, அவர்கள் பாட்டிலுள்ள கருத்தைச் சிறிது மாற்றி வைப்பதுஎன்னும் இந்த முயற்சிகளைத் தவிர, என் மனத்தில் யோசித்துக் கற்பனை செய்து ஒரு கருத்தை அமைக்க நான் முயலவில்லை: நான் இயற்றிய செய்யுட்களைப் பல முறை சொல்லிச் சொல்லி இன்புறுவேன்; அவற்றைச் சொல்லும்போது ஒரு வகையான பெருமிதத்தை அடைவேன்."

தனது குறைபாடுகளை நோக்கி எவ்வகையில் தனது படைப்புக்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என சிந்தித்து  தமது படைப்புக்களையும் எழுத்து முயற்சிகளையும் செம்மைப் படுத்திக் கொண்டவர் உ.வே.சா.

தொடரும்..

சுபா

Sunday, August 12, 2012


சில நாட்கள் தோட்டத்தை கவனிக்காமல் விட்டால் புற் செடிகள் வளர்ந்து விடுகின்றன. அதிலும் கோடை காலத்தில் வெகு சீக்கிரமாக புற்செடிகள் வளர்ந்து மற்ற செடிகளின் இடைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொள்கின்றன.

இன்று என் சிறிய தோட்டத்தில் மூலையில் வளர்ந்திருந்த ஒரு செடி.. கண்ணை உருத்தவே எடுத்து பிடுங்கிப் போட்டுவிடலாம் என நினைத்துப் பார்த்தால் பூவின் நடுவில் அமர்ந்து தேன் உண்டு கொண்டிருக்கும் வண்டு ஒன்று..





புல் செடியாக இருந்தாலும் அதன்  பூ அழகு.. அதிலும் அதன் நடுவே அமர்ந்து தேன் உண்ணும் வண்டு .. இதனைப் பார்த்தவுடன் புல் செடியைப் பிடிங்கிப் போடவா மனம் வரும்..? கேமரா எடுத்து படம் பிடித்து இணைத்திருக்கின்றேன்.


மின் தமிழில் இப்படத்திற்கு கிடைத்த கவிதை..


பூவின்தேன் உண்டாடும் வண்ண வரிவண்டே 
நோவின் வலியுண்ணக் கல்.  - மோகனரங்கன்


பார்க்க.. ரசிக்க..!

சுபா

Friday, August 10, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 13


உ.வே.சா அவர்களுக்கு நன்னூல் அறிமுகமானது பற்றி இப்பதிவில் சொல்லலாம் என நினைக்கின்றேன்.

குன்னத்திலிருந்து மீண்டும் குடும்பத்துடன் புறப்பட்டு கார்குடிக்கு வந்து சேர்ந்தனர் உ.வே.சா குடும்பத்தினர். இங்கே இவரகள் ஸ்ரீநிவாசயங்கார் என்ற ஒரு செல்வந்தர் வீட்டில் தங்கிக் கொண்டனர். கார்குடிக்கு வந்த இப்புதியவர்களை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி அவர்களை ஆதரித்தனர் அக்கிரகாரத்து மக்கள்.

இப்போதெல்லாம் இப்படி நடக்குமா என நினைத்துப் பார்க்க முடியவில்லை. புதிதாக ஊருக்கு வருபவர்கள் தடுமாறி நிற்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் பொருளாதாரத்தைக் கணக்கில் கொள்ளாமல் தங்களுக்கு இருப்பதைப் பகிர்ந்து கொண்டு வாழ்ந்த மக்கள், சுயநலமற்ற  மக்கள் தமிழகத்தில் இன்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கின்றார்கள் என்பதே ஒரு விஷயம். தற்கால சூழ்நிலையும், மக்களின் அவசர வாழ்க்கை முறையும் இவ்வகை நிலமைகளை உருவாக்க வழி வகுப்பதில்லை  என்றே தோன்றுகின்றது.

நன்னூல் மட்டுமன்றி பல பல நூல்களைத் கற்றுத் தேர்ந்தவராகவும் பல நூல்களை தானே சுவடியில் முழுதும் எழுதி வைத்து அவற்றை பிறருக்குப் பாடம் சொல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தவராகவும் கஸ்தூரி ஐயங்கார் திகழ்ந்திருக்கின்றார். கார்குடிக்குச் சென்று கஸ்தூரி ஐயங்காரிடம் பாடம் கேட்கச் சென்றிருந்த சமயத்தில் இவ்வாறு அவர் கைப்பட சுவடிகளில் எழுதி வைத்த இராமாயணம், பாரதம், பாகவதம் போன்ற நூல்களைத்  தாம் பார்த்ததைப் பற்றி என் சரித்திரத்தில் உ.வே.சா அவர்கள் குறிப்பிடுகின்றார். குன்னத்தில் இருந்த போது  வேறொரு ஆசிரியரிடம் முதலில் மகாலிங்கையர் இலக்கணத்தைப் பாடம் கேட்டதாகக் குறிப்பிடுகின்றார். இந்த மகாலிங்கையர் இலக்கணம் என்பதை நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை.  கூகளில் தேடினால் மழவை மகாலிங்கையர் என்ற குறிப்பு கிடைக்கின்றது.  இதே தமிழறிஞறின் இலக்கண நூலைத்தான் உ.வே.சா. அவர்கள் குறிப்பிடுகின்றாரோ என்ற ஐயம் தோன்றுகின்றது.

"குன்னத்திலிருந்த போது தஞ்சையிலிருந்து வந்த ஸ்ரீநிவாஸையங்காரென்பவரிடம் மகாலிங்கையர் இலக்கணத்தைப் பாடம் கேட்டேன். நன்னூல் முதலிய இலக்கணங்களைத் தொடர்ந்து கேட்க வேண்டுமென்ற விருப்பம் எனக்கு இருந்து வந்தது. அதனால் முதல் முதல் அவரிடம் நன்னூல் பாடங் கேட்கலானேன். விசாகப் பெருமாளையர் இயற்றிய காண்டிகையுரையை ஒருவாறு பாடம் சொல்லி அதன் கருத்துரை, விசேஷ உரை முதலியவற்றை எனக்குப் பாடம் பண்ணி வைத்துவிட்டார். தினந்தோறும் நன்னூல் முழுவதையும் ஒருமுறை நான் பாராமற் சொல்லி வந்தேன். நிலவில் பொருள்கள் காணப்படுவது போல் நன்னூலிலுள்ள இலக்கணங்கள் எனக்குத் தோற்றின; அந்நூலைச் சிக்கறத் தெளிந்து கொள்ளவில்லை. படித்தவர் யாரேனும் வந்தால் கஸ்தூரி ஐயங்கார் எனக்குப் பாடம் சொல்லிய நன்னூல் சூத்திரங்களையும் உரையையும் என்னைச் சொல்லும்படி செய்வார். அவற்றை நான் ஒப்பிப்பேன். இப்பழக்கத்தால் அவை என் மனத்திற் பின்னும் நன்றாகப் பதிந்தன."

நன்னூலைப் படித்தவர்களை அதுவும் தெளிவுடன் கற்றுத்தேர்ந்தவர்களையே அக்காலத்தில் நல்ல தமிழ் புலவரென்று ஏற்றுக் கொள்ளும் வழக்கம் இருந்துள்ளது. தற்காலத்தில் நன்னூல் என்றால் என்ன என்று கேட்கும் தமிழாசிரியர்கள் நம்மை அதிசயிக்க வைக்கின்றனர்.

பொதுவாகவே இலக்கணத்தை விட இலக்கியம் எப்போதுமே பலரைக் கவர்வதாகவே உள்ளது. மலேசியாவில் இருந்த சமயத்தில்  தமிழ் பயிற்சி மேற்கொள்ள நினைத்து நான் மேற்கொண்ட முயற்சியில் எனக்கு இலக்கணத்தை ஓரளவு அறிமுகப் படுத்தி வைத்தவர் வேங்கடம்மாள் என்ற ஒரு ஆசிரியை. காலங்கள் பல கடந்து விட்டாலும் அவரது பெயர் மனதில் நிலைத்து நிறகின்றது. தமிழ் இலக்கணத்தை எனக்கும் ஏனைய சில மாணவர்களுக்கும் சுவைபட விளக்குவார். அவரது தூண்டுதாலால் தான் ஆ.கி.பரந்தாமனாரின் நல்ல தமிழ் எழுத வேண்டுமா நூலை வாங்கிக் கொண்டேன். இந்த நூல் இன்றளவும் என்னிடம் இருக்கின்றது. தமிழ் இலக்கணத்திற்குள் சென்று மேலும் மேலும் அலசுவதற்கு எனக்கு தொழில் முறையில் வாய்ப்பு அமையாது போய்விட்டது என்ற போதிலும் அவ்வப்போது  இலக்கணம் தொடர்பான் சில விஷயங்களை வாசித்துத் தெரிந்து கொள்வதில் இன்றளவும் எனக்கு ஆர்வம் இருக்கத்தான் செய்கின்றது.

நன்னூல் அதன் பொருட்டு உ.வே.சா. அவர்கள் மேலும் இப்படி குறிப்பிடுகின்றார்.

"இலக்கியப் பயிற்சியிலேயே பெரும்பாலோருக்குக் கவனம் சென்றதேயன்றி இலக்கணப்பயிற்சியிற் செல்லவில்லை. இந்த நிலையில் நான் நன்னூற் சூத்திரங்களையும் உரையையும் மனனம் பண்ணித் தமிழில் ‘இலக்கண வித்துவான்’ ஆகக்கூடுமென்ற எண்ணம் என்னைக் கண்டோருக்கு உண்டாக்கினேன். அத்துறையில் நான் பின்னும் எவ்வளவோ தெரிந்துகொள்ள  வேண்டியதுண்டென்பதை  நான் மறக்கவில்லை."

குறிப்பு: இப்பகுதியில்  பயன்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் 19ம் அத்தியாயத்தில் இடம்பெறுகின்றன. 

தொடரும்...

சுபா

Friday, August 3, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 12


என் சரித்திரம் நூலை வாசிக்கையில், அதில் உ.வே.சா அவர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்த பலரையும் நூல் வழியாக நான் சந்திக்கின்ற வேளைகளில் அவர்களின் குணங்களைக் கண்டு மனம் லயித்துப் போய் நின்று விடுகின்றேன். இவர் உலகத்தில் கல்வி.. அதிலும் தமிழ்க் கல்வியே உயர்ந்த ஸ்தானத்தைப் பெற்றிருந்தது. அந்த உலகத்தில் உ.வே.சாவோடு நெருக்கமாக உலவி வந்தவர்களைப் பற்றி நினைக்கும் போது அவர்களின் சிந்தனை, வாழ்க்கை முறை ஆகியவை என்னை பல முறை அவர்களைப் பற்றி சிந்திக்க வைத்தது என்றே சொல்வேன்.

அன்பை வகைப்படுத்தும் போது தாயின் அன்பை உயர்த்திப் பிடிக்கின்றோம். தந்தையின் அன்பும் மனதை கலங்க வைக்கக் கூடியது என்பதை என் சரித்திரம் நிரூபிக்கின்றது. மகனின் நலனிற்காக தன் வாழ்க்கையையே அமைத்துக் கொண்ட ஒரு தந்தை வேங்கட சுப்பையர்.

குன்னத்தில் சிதம்பரம் பிள்ளையவர்கள் உ.வே.சா குடும்பத்தை ஆதரித்து வந்த போது அங்கே ஒரு கல்யாண விஷேஷத்திற்காக வந்திருந்த கஸ்தூரி ஐயங்காரைப் பற்றியும் அவர் தம் தமிழ் புலமை அறிந்து அவரிடம் பாடம் கேட்க தாம் ஏங்கியிருந்த வேளையில் அவரை சந்திக்கும் வாய்ப்பமைந்து தன்னிடம் பாடம் கேட்க வரலாம் என அவர் சம்மதம் தெரிவித்துச் செல்லும் பகுதியில் உ.வே.சா தன் தந்தையைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகின்றார்.

"கஸ்தூரி ஐயங்கார் சென்ற திக்கையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் தூரத்தில் மறைய மறைய என் மனத்துள் கார்குடியைப் போன்ற தோற்றம் ஒன்று உண்டாயிற்று. என் தமிழ்க் கல்வியின்  பொருட்டு எந்த இடத்துக்குச் செல்வதற்கும் என் தந்தையார் சித்தமாக இருந்தார்."

இப்படிப்பட்ட அர்ப்பணிப்பையும் மகனின் கல்வி வளர்ச்சிக்காக எங்கு செல்லவும் தயாராக இருந்த நிலையையும் காணும் போது இறையருள் கருணை அவரது தந்தையார் ரூபத்தில் இருந்தமை நன்கு புலப்படுகின்றது. உ.வே.சாவின் மிக இளமை காலத்தில் மட்டுமல்லாது பின்னர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்க அழைத்துச் சென்ற காலத்திலும்  உ.வே.சா திருவாவடுதுறை ஆதீனத்தில் இணைந்த காலங்களிலும் மகனது கல்வி மேண்மைக்காக வேங்கட சுப்பையர் மேற்கொண்ட முயற்சிகள் தந்தையின் அன்பிற்குச் சான்று கூறி நிற்கின்றன.

தொடரும்...

அன்புடன்
சுபா