Sunday, September 30, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 23


பதிவு 23

சென்ற பதிவில் வித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் நாகப்பட்டின புராணம் இயற்றிய பின்னர் நாகையிலிருந்து புறப்பட்டு மாயூரம் வந்தடைந்த செய்தியறிந்து அவரை நேரில் சென்று காண உ.வே.சா அவர்களின் குடும்பத்தினர் புறப்பட செய்த ஆயத்தங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தேன். உறவினர்களையும்  தமக்கு உதவி செய்த செல்வந்தர்களையும் தமிழாசிரியர்களையும் சந்தித்து இந்த விபரங்களைத் தெரிவித்து ஆசி பெற்றுக் கொண்டு இறுதியாக கருவுற்றிருந்த தாயாரை  உத்தமதானபுரத்தில் விட்டு விட்டு அங்கிருந்து தந்தையும் மகனும் மட்டும் மாயூரம் வந்து சேர்ந்தனர். மாயூரம் வருவதற்குக் கையில் பணமில்லாது இருந்த போது தந்தையாரின் நண்பர் சாமு மூப்பனார் என்பவர் அளித்த தொகையைக் கொண்டு பிரயாணம் மேற்கொண்டு மாயூரம் வந்தடைந்தனர். மாயூரத்திலே தான் இவரது சிற்றப்பாவும் சின்னம்மாவும் இருந்தனர். ஆகையால் தங்கிக் கொள்ளவும் உணவிற்கும் வழி இல்லையே என்ற கவலை இல்லாமல் போயிற்று.

உ.வே.சாவின் மனதில் தனது நெடுநாள் ஆசைகள் நிறைவேறப்போகும் நாளை நினைத்து நினைத்து ஆனந்தம் சூழ்ந்திருந்தது. மாயூரம், வந்த நாள் முதல் மாயூரத்தின் வேறு எந்த விஷயங்களும் அவரது மனதை கவர்வதாக இல்லை. மனம் முழுதும் வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களைக் காணப்போகும் தருணத்தை எதிர்பார்த்து அந்த எண்ணங்களிலேயே லயித்திருந்தது. இவர்கள் மாயூரம் வந்த சமயத்தில் அந்த ஊரில் நந்தனார் சரித்திரம் எழுதிய கோபால கிருஷ்ண பாரதியார் மாயூரத்தில் தான் இருந்தார். ஆனால் அவரையும் கூட சென்று சந்திக்க வேண்டும் என்ன எண்ணம் தோன்றாமல் முழு மனதும் தனக்கு வரப்போகும் தமிழ் ஆசானைப் பற்றியதாகவே ஆக்ரமித்திருந்தது உ.வே.சாவுக்கு. இதனை இப்படிக் குறிப்பிடுகின்றார்.

"பல நாட்களாக நினைந்து நினைந்து எதிர்பார்த்து ஏங்கியிருந்த நான் ஒரு பெரிய பாக்கியம் கிடைக்கப் போகிறதென்ற எண்ணத்தால் எல்லாவற்றையும் மறந்தேன். அக்காலத்தில் கோபால கிருஷ்ண பாரதியார் மாயூரத்தில் இருந்தார். அச்செய்தியை நான் அறிவேன். வேறு சந்தர்ப்பமாக இருந்தால் நான் மாயூரத்தில் அடி வைத்தேனோ இல்லையோ உடனே அவரைப் போய்ப் பார்த்திருப்பேன்; மாயூரத்திலுள்ள அழகிய சிவாலயத்திற்குச் சென்று சுவாமி தரிசனம் செய்திருப்பேன்; அந்நகரிலும் அதற்கருகிலும் உள்ள காட்சிகளைக் கண்டு மகிழ்ந்திருப்பேன். அப்போதோ என் கண்ணும் கருத்தும் வேறு ஒரு பொருளிலும் செல்லவில்லை."

என் சரித்திரம் எழுதத்தொடங்கிய 80 வயதிலும் கூட இந்த நிகழ்வுகள் அனைத்தும் அவர் மனதிலே அழியாத ஓவியங்களாக நிலைத்திருந்தன என்பதனை அவர் மிகுந்த ஈடுபாட்டுடன் விளக்கும் இந்தத்தன்மையினால் அறிந்து கொள்ள முடிகின்றது.

ஒரு மாணவருக்கு தனது ஆர்வம் எதை நோக்கியதாக அமைந்திருக்கின்றது என்பதை அறிந்து கொள்வது மிக முக்கியமானதும் அவசியமான ஒன்றும் கூட. பிறர் கூறும் வழிகளை விட தனது அறிவும் சிந்தனையும் ஆர்வமும் எந்தத் துறையில் ஊன்றி ஆழமாகப் பதிந்திருக்கின்றதோ அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து அதனில் ஈடுபடுவது மனதிற்கும் முழுமையான தொழிற் வாழ்விற்கும் நிறைவளிக்கும் தன்மையினதாக அமையும்.

தற்காலத்தில் இந்தெந்த துறைகள் வருமானம் தரக் கூடியனவாக இருக்கும் என்ற எண்ணத்தில் அந்தத் துறைகளை மட்டும் தேர்ந்தெடுத்து கல்வி கற்று உத்தியோகம் பெறுவது சிறப்பு என நினைக்கும் மனப்போக்கினைப் பரவலாகக் காண்கின்றோம். குழந்தைகள் விருப்பம் என்ன? எந்தத் துறையில் அவர்கள் ஆர்வம் நிறைந்திருக்கின்றது என்பதை அறிந்து கொள்ள முனைவதை விட தங்கள் விருப்பம் என்னவோ அதனை குழந்தைகளின் மனதில் விதைத்து அதனை அவர்களின் விருப்பமாக மாற்றிப் பார்க்க நினைக்கும் பெற்ரோர்களே அதிகம். பெற்ரோர்களின் எண்ணமும் அவர்களின் நிலைப்பாடும் குழந்தைகளுக்கு நல்ல வழிகாட்டிகளாக அமைய வேண்டும் என்பதை விடுத்து  குழந்தைகளின் வாழ்க்கையயே நிர்ணயிர்ப்பவர்களாக இருப்பதில் நோக்கம் கொண்டவர்களாக இருப்பதைக் காண்கின்றோம். இது குழந்தைகள் தங்கள் சுயம் என்பதையே இழந்து பெற்றோர் காட்டும் வழியில் மட்டுமே நடக்கின்றவர்களாக மாற்றி அமைத்து சுய கருத்துக்கள் அற்றவர்களாக அவர்களை ஆக்கி விடுகின்றது.   இதனால் பிற்காலத்தில் தனது சுய தேடுதல் ஆரம்பிக்கும் போது மனதில் ஆழமான வேதனையும், நிராசையையும் மனம் லயிக்காத தொழில் வாழ்க்கையும் அமைந்து விடுவதை தவிர்க்க இயலாது.

பிறருக்காகத் தேர்ந்தெடுத்து நாம் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் இவ்வகைக் கல்வி மனதிற்கு முழுமையான திருப்தியை வழங்கி விடுவதில்லை. நாம் செய்யும் தொழிலானது மனதிற்கு மகிழ்ச்சியைத்  தருவதாக அமைந்திருப்பதும் மிக அவசியம். நம்மில் ஒவ்வொருவரும் ஒரு நாளின் எல்லா முக்கிய நேரங்களையும் நமது தொழிலுக்காகத் தான் செலவிடுகின்றோம். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்ற நமது தொழில் வாழ்க்கை வெறும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருப்பதை விட்டு மனதிற்கு மகிழ்ச்சியும் நிறைவும் அளிப்பதாகவும் சிந்தனை வளர்ச்சியைத் தருவதாகவும் அறிவு மேம்பாட்டைத் தூண்டிக் கொண்டே இருப்பதாகவும் அமையும் போது  வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் பயனுள்ளதாக அமைகின்றது.

உ.வே.சாவின் மாணவர் பருவத்தில் அவரது சுற்றத்தார் பலரது விருப்பங்கள் இவர் இவ்வழியில் செல்லவேண்டும் அவ்வழியில் செல்ல வேண்டும் என்று அங்கும் இங்கும் இழுத்துக் கொண்டுதானிருந்தது. தமிழ்க் கல்வி ஒன்றே தனக்கு மனதிற்கு நிலையான இன்பமும் நிறைவும் தரக்கூடியது என அவர் உறுதியாக இருந்தார்.

உ.வே.சா எழுத்துக்களிலேயே அவரது மன நிலையை வாசிப்போமே..!

"ஒரு நல்ல காரியத்திற்கு எத்தனை தடைகள் உண்டாகின்றன! நான்  தமிழ் படிக்க வேண்டுமென்று தொடங்கிய முயற்சி வறுமையாலும் வேறு காரணங்களாலும் தடைப்பட்டுத் தடைப்பட்டுச் சோர்வடைந்தது. ஆனாலும் அப்படியே நின்றுவிடவில்லை. பந்துக்களில் பலர் நான் ஸம்ஸ்கிருதம் படிக்க வேண்டுமென்று விரும்பினார்கள். இராமாயண பாரத பாகவத காலக்ஷேபம் செய்து ஸம்ஸ்கிருத வித்துவானாக விளங்க வேண்டுமென்பது அவர்கள் கருத்து. வேறு சில கனவான்களோ நான் இங்கிலீஷ் படித்து விருத்திக்கு வர வேண்டுமென்று எண்ணினார்கள். உதவி செய்வதாகவும் முன் வந்தனர். நான் உத்தியோகம் பார்த்துப் பொருளீட்ட வேண்டுமென்பது அவர்கள் நினைவு. என் தந்தையாரோ சங்கீதத்தில் நான் வல்லவனாக வேண்டுமென்று விரும்பினார். அவர் விருப்பம் முற்றும் நிறைவேறவில்லை; எல்லாருடைய விருப்பத்திற்கும் மாறாக என் உள்ளம் இளமையிலிருந்தே தமிழ்த் தெய்வத்தின் அழகிலே பதிந்து விட்டது. மேலும் மேலும் தமிழ்த்தாயின் திருவருளைப் பெற வேண்டுமென்று அவாவி நின்றது. ஸம்ஸ்கிருதம், தெலுங்கு, இங்கிலீஷ் இவற்றுள் ஒன்றேனும் என் மனத்தைக் கவரவில்லை. சில சமயங்களில் அவற்றில் வெறுப்பைக்கூட அடைந்தேன். சங்கீதம் பரம்பரையோடு சம்பந்தமுடையதாகவும் என் தந்தையாரது புகழுக்கும் ஜீவனத்துக்கும் காரணமாகவும் இருந்தமையால் அதன் பால் எனக்கு அன்பு இருந்தது. ஆனால் அந்த அன்பு நிலையாக இல்லை. என் உள்ளத்தின் சிகரத்தைத் தமிழே பற்றிக்கொண்டது; அதன் ஒரு மூலையில் சங்கீதம் இருந்தது. எந்தச் சமயத்திலும் அந்தச் சிறிய இடத்தையும் அதனிடமிருந்து கவர்ந்துகொள்ளத் தமிழ் காத்திருந்தது."

தொடரும்..

சுபா

Saturday, September 22, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 22


பதிவு 22

தனக்கு ஒரு சிறந்த ஆசிரியர் அமையப்போகின்றார் என்ற நம்பிக்கை மனதில் வந்தவுடன் உ.வே.சா அவர்களின் கற்பனைக் கோட்டை அந்த ஆசிரியரின் வடிவத்தை அவரது மனதிலேயே செதுக்கி வைத்துப் பார்க்க ஆரம்பித்து விட்டது. அவரோடு தாம் பழகப்போகும் நாட்கள், அத்தருணங்கள், ஆசிரியருடன் தான் கழிக்கும் பொழுதுகள், கற்பனை நிகழ்வுகளை எல்லாம் அவர் மனம் கனவு காண ஆரம்பித்து விட்டது.  இந்தப் பகுதியை மிக அழகாகக் குறிப்பிடுகின்றார் உ.வே.சா.

"உத்தமதானபுரம் பள்ளிக்கூட உபாத்தியாயராகிய சாமிநாதையர் முதல் செங்கணம் விருத்தாசல ரெட்டியார் வரையில் யாவரும் அவ்வப்போது சொன்ன விஷயங்களால் என் மனத்துக்குள்ளே பிள்ளையவர்களைப் போல ஓர் உருவத்தைச் சிருஷ்டி செய்து கொண்டேன். ஆசிரியர்களுக்குள் சிறந்தவர், கவிகளுக்குள் சிகாமணி, குணக் கடல் என்று அவரை யாரும் பாராட்டுவார்கள். அவர் எனக்குப் பாடம் சொல்லுவது போலவும், நான் பல நூல்களைப் பாடம் கேட்பது போலவும், என்னிடம் அவர் அன்பு பாராட்டுவது போலவும் பாவனை செய்து கொள்வேன்; கனாவும் காண்பதுண்டு."

இக்கனவு நனவாகிப் போகாமல் பலித்தது. இதற்கு உ.வே.சாவின்  மன உறுதியும், உள்ளார்ந்த ஆர்வமும் இறைவனின் கருணையும் தான் காரணம் என்றால் அது மிகையல்ல.

இந்த விஷயங்களெல்லாம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் நாகபட்டினம் சென்று அங்கேயே தங்கியிருந்து  நாகபட்டின புராணம் இயற்றிக் கொண்டிருந்தார்கள் என்பதை இன்னூலில் உள்ள குறிப்பால் அறிகிறோம். இந்த புராணம் எழுதும் பணி சிறப்புற முடிந்து அவர் மாயூரம் திரும்புகின்றார் என்ற செய்தியை உ.வே.சா குடும்பத்தினர் கேள்வியுற்றனர். இதுவே அவரைச் சென்று காண தக்க தருணம் என்னும் எண்ணம் உதிக்க செங்கணத்தை விட்டு புறப்பட்டுச் செல்ல ஆயத்தமாகினர்.

கல்விக்காகவும் பணிக்காகவும் ஓரிடத்திலிருந்து ஓரிடம் செல்வது என்பது இப்போது மட்டும் உள்ள வழக்கமல்ல இன்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னரும் பலர் தங்கள் வாழ்க்கை தேவைகளுக்க்காக ஆங்காங்கே செல்ல நேரிடுவது வழக்கமாகத்தான் இருந்திருக்கின்றது என்று தெரிகிறது.

இப்படி செங்கணத்திலிருந்து புறப்பட்ட உ.வே.சா குடும்பத்தினர் நேராக மாயூரம் செல்லவில்லை. உறவினர், முன்னாள் ஆசிரியர், ஆதரித்து வந்தோர் ஆகியோரையெல்லாம் சந்தித்து  வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று அங்கு சில நாட்கள் தங்கியிருந்து இவ்வாறு உ.வே.சா மகாவித்துவானிடம் படிக்கப்போகின்றார் என்று சொல்லி ஆசி பெற்றுச் சென்ற விவரத்தையும் காண்கின்றோம். செங்கனத்திலிருந்து புறப்பட்டு குன்னம் சென்று பின்னர் அரியலூர் சென்று அங்கே தனது முதல் ஆசிரியர் சடகோபையங்காரிடமும் ஆசி பெற சென்றிருந்தார் உ.வே.சா. அங்கே நடந்த ஒரு நிகழ்வையும் குறிப்பிடுவது தகும் என்று கருதுகிறேன்.

ஆசிரியர் சடகோபையங்காரிடம் ஆசி பெற சென்றிருந்த நாளில் அவர் வீட்டில் ஒரு நூலை ஏதேச்சையாகக் காண்கின்றார். அதனை எடுத்து வைத்துப் பார்க்கும் போது அது மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய நூல் என்பது தெரியவருகின்றது. அதனை இப்படி குறிப்பிடுகின்ரார்.

"அப்புஸ்தகத்தை எடுத்துப் பார்த்தேன். அது பிள்ளையவர்கள் இயற்றிய திருநாகைக்காரோணப் புராணமாக இருந்தது. நான் பிள்ளையவர்களுடைய புலமையைப் பற்றிக் கேட்டிருப்பினும் அவர் இயற்றிய நூல் எதனையும் பார்த்ததில்லை. அப்புராணம் அச்சந்தர்ப்பத்தில் கிடைத்ததை ஒரு பெரிய நன்னிமித்தமாக எண்ணினேன். அதில் ஒவ்வோர் ஏடாகத் தள்ளிப் பார்த்தேன்; சில பாடல்களையும் படித்தேன். யாப்பிலக்கணத்தை நன்றாகப் படித்து முடித்த சமயமாதலால் அச்செய்யுட்களின் அமைப்பையும் எதுகை மோனை நயங்களையும் ஓசை இன்பத்தையும் தெரிந்து அனுபவித்து மகிழ்ந்தேன். பலவிடங்களில் திரிபுயமகங்களும் சித்திர கவிகளும் அதில் அமைந்திருந்தன. “இந்த நூலையும் இது போன்ற பல நூல்களையும் இயற்றிய மகா புருஷரிடம் படிக்கப் போகிறோம்” என்று எண்ணி எண்ணி நான் பெருமிதம் அடைந்தேன்."

அரியலூரிலிருந்து புறப்பட்டு கீழைபழுவூர் வந்து அங்கே செல்வந்தராகிய சபாபதிப்பிள்ளை அவர்களைச் சந்தித்து அங்கே ஒரு வாரம் தங்கியிருந்தனர். அவ்வேளையில் திரு.சபாபதிப்பிள்ளையவர்கள் தஞ்சை வாணன்கோவை மூலமுள்ள புஸ்தகத்தையும் வேறு சில புஸ்தகங்களையும் உ.வே.சா வுக்கு அன்பளிப்பாக வழங்கினார். அந்த நூல்களை சில நாட்களிலேயே வாசித்து முடித்தார். பயணத்தின் போதும் கிடைக்கின்ற நூல்களை வாசிப்பதில் இவருக்கு அலுப்பு இருக்கவில்லை. எதையும் தள்ளிப் போடாமல் கிடைக்கும் நூல்களையெல்லாம் வாசித்து தனது புலமையை நாளுக்கு நால் அதிகரித்துக் கொண்டே வந்தமை தெளிவு. அங்கிருந்து புறப்பட்டு உத்தமதானபுரத்திற்கு வந்து சேர்கின்றனர். இந்த சமயத்தில் உ.வே.சா அவர்களின் தாயார் கருவுற்றிருந்தமையால் உத்தமதானபுரத்திலேயே அவரை விட்டு விட்டு தந்தையாரோடு மாயூரம் புறப்படுவது என ஏற்பாடாகியது.

தொடரும்....

குறிப்பு: இப்பகுதியில் கையாளப்பட்டுள்ள குறிப்புக்கள் 26ம் அத்தியாயத்தில் உள்ளன.

அன்புடன்
சுபா

Sunday, September 16, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 21


பதிவு 21

ஏதோ ஒரு விஷயத்தில் ஆவலோடும் ஆர்வத்துடனும் இருக்கும் சமயத்தில் அந்த ஆர்வத் தீயில் எண்ணெய் வார்ப்பது போல மேலும் மேலும் நம் கவனத்தைத் தாக்கும் செய்திகளையே கேட்கும் வாய்ப்பு எழுந்தால் அந்த விஷயத்தின் பால் உள்ள தீவிரம் நிச்சயமாகக் கூடும்.  மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களிடம் சென்று சேர்ந்து பாடம் கேட்பதுவே உ.வே.சாவின் தமிழ் தாகத்திற்கு சரியான தீர்வு என அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பேச்சுக்கள் நிகழ்ந்தாலும் விருத்தாசல ரெட்டியாரின் ஆர்வமும் இதே போக்கில் செல்ல நேர்ந்த போது வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் சென்று பாடம் கேட்டே ஆக வேண்டும் என்னும் எண்ணம் உ.வே.சா மட்டுமன்றி அவரது தந்தைக்கும் தீவரமாகி உறுதியானது.

பாடம் சொல்லிக் கொண்டே விருத்தாசல ரெட்டியார் மீனாட்சி சுந்தரம் பிள்ளைவர்களைப் பற்றி குறிப்பிடுவதை உ.வே.சா இப்படிச் குறிப்பிடுகின்றார்.

"திருக்குறள் முதலிய நூற்பதிப்புகளில் உள்ள அவருடைய சிறப்புப்பாயிரங்களின் நயங்களை எடுத்துக் காட்டிப் பாராட்டுவார். “அந்த மகானை நான் பார்த்ததில்லை; ஆனால் அவர் பெருமையை நான் கேள்வியுற்றிருக்கிறேன். அவர் காவேரிப் பிரவாகம் போலக் கவி பாடுவாராம். எப்பொழுதும் மாணாக்கர்கள் கூட்டத்தின் நடுவேயிருந்து விளங்குவாராம். அவருக்குத் தெரியாத தமிழ்ப் புஸ்தகமே இல்லையாம். எனக்குச் சில நூல்களிலும் உரைகளிலும் சந்தேகங்கள் இருக்கின்றன. அவற்றை அவரிடம் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று தனியே குறித்து வைத்திருக்கிறேன். எப்பொழுது சந்தர்ப்பம் நேர்கிறதோ தெரியவில்லை” என்று சொல்லிவிட்டுத் தாம் சந்தேகங்களைக் குறித்து வைத்திருந்த ஓலைச்சுவடியை என்னிடம் காட்டினார்."

இதுவரைப் பார்த்திராத ஒரு கல்விமானின் மேல் விருத்தாசல ரெட்டியார் வைத்திருந்த மதிப்பும் பண்பும் மனதைத் தொடுகின்றன. என்றாவது ஒரு நாள் காண்போம். அப்போது தனது ஐயங்களைத் தெளிவு செய்து கொள்வோம் என்ற நம்பிக்கையில் ஏட்டுச் சுவடியில் தனது சந்தேகங்களுக்கான குறிப்பை விருத்தாசல ரெட்டியார் எழுதிக் கொண்டே வந்திருக்கின்றார் என்ற விஷயத்தையும் இந்தக் குறிப்பின் வழியாக அறிந்து கொள்ள முடிகின்றது.

உ.வே.சா மட்டுமின்றி பல்வகை சிறந்த பண்புகளும் கல்வியின் மேல் தீராத ஆர்வமும் கொண்ட பல மனிதர்களையும் அறிமுகப்படுத்துவதாலேயேயும் கூட "என் சரித்திரம்" கல்வி கற்கும் நிலையிலுள்ள எல்லா மாணவர்களுக்கும் சிறந்ததொரு  வழிகாட்டியாக அமைகின்றது என்பது எனது திடமான எண்ணம்.

அவ்வப்போது பிள்ளையவர்களைப் பற்றி விருத்தாசல முதலியார் வழங்கும் பிரஸ்தாபங்கள் உ.வே.சா வின் ஏக்கத்தை அதிகரித்து எப்போது அந்த மகானைக் காண்போம் என்ற எண்ணத்தில் திளைக்க வைத்துக் கொண்டிருந்தது. பிள்ளையவர்களிடம் சென்று சேர்ந்து கல்வி கற்க வேண்டும் என்று தனது மனதில் இருந்த ஆசைகளையும், அதற்காக தான் கயிறு சார்த்திப் பார்த்த விஷயங்களையும் விருத்தாசல ரெட்டியாரிடம் பகிர்ந்து கொண்ட போது அவரது ஆசை நியாயமானது என்பதைக் குறிப்பிட்டு விருத்தாசல ரெட்டியார் கூறுவதை இப்படி குறிப்பிடுகின்றார் உ.வெ.சா.

"இரண்டு பேரும் பிள்ளையவர்களைப் பற்றிய பேச்சிலே நெடுநேரம் கழிப்போம். ரெட்டியாரும், “ஆம், அவரிடம் போனால்தான் இன்னும் பல நூல்களை நீர் பாடம் கேட்கலாம்; உமக்குத் திருப்தி யுண்டாகும்படி பாடம் சொல்லக் கூடிய பெரியார் அவர் ஒருவரே. நாங்களெல்லாம் மேட்டு நிலத்தில் மழையினால் ஊறுகின்ற கிணறுகள். என்றும் பொய்யாமல் ஓடுகின்ற காவிரி போன்றவர் அவர். அவரிடம் போய்ப் படிப்பதுதான் சிறந்தது” என்று சொல்லிவரத் தொடங்கினார். "

செங்கணத்தில் அப்போது உ.வே.சா குடும்பத்தினர் விருத்தாசல ரெட்டியாரின் ஆதரவில் இருந்து வந்தனர். தம்மால் இயன்ற அளவிற்கு உ.வே.சா குடும்பத்தினரை ஆதரித்து வந்ததோடு உ.வே.சாவிற்குப் பாடமும் சொல்லிக் கொடுத்து அவரது வாழ்வில் ஒரு கால கட்டத்தில் ஒளியேற்றி வைத்தவர் விருத்தாசல ரெட்டியார். இப்படி ஒரு ஆதரவும் அன்பும் கொண்ட மனிதர்களை இப்பொழுது எங்கு தேடினும் கிடைப்பது மிக அரிது.மகேசன் சேவை மக்கள் கல்வியை வளர்த்தல் என்ற பண்பு கொண்ட இவ்வகை மனிதர்களை நினைத்துப் போன்ற வேண்டியதும் நம் கடன்.

"என் தந்தையார் அவர் சொன்னவற்றைக் கேட்டுவிட்டு, “எங்கே போனாலும் எல்லோரும் இந்தத் தீர்மானத்துக்குத்தான் வருகிறார்கள். ஈசுவர ஆக்ஞை இதுதான் என்று தோன்றுகிறது. இனிமேல் நாம் பராமுகமமாக இருக்கக் கூடாது. எவ்வாறேனும் இவனைப் பிள்ளையவர்களிடத்திற் கொண்டு போய்ச் சேர்ப்பது அவசியம்” என்று நிச்சயம் செய்தார். ரெட்டியாரிடம் தம்முடைய தீர்மானத்தைத் தெரிவித்துச் செங்கணத்தை விட்டுப் புறப்படச் சித்தமாயினர்."

தொடரும்..

குறிப்பு: இப்பகுதியில் கையாளப்பட்டுள்ள குறிப்புக்கள் 25ம் அத்தியாயத்தில் உள்ளன.

அன்புடன்
சுபா

Saturday, September 15, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 20


பதிவு 20

சில குறிப்பிட்ட நூல்களை நாம் பல காலமாகத் தேடிக் கொண்டிருப்போம்.திடீரென்று யார் வழியாகவோ அந்த நூல் நமக்குக் கிடைக்கும். அது நமக்கு அளவில்லா மகிழ்ச்சியைத் தரும் ஒரு நிகழ்வாக அமைந்துவிடும். அப்படித்தானே தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் சேகரத்திற்கும் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் வரலாறு நூல் கிடைத்தது.

நமக்குப் பிடித்த சில விஷயங்களை நாம் மிகக் கடினமான விதிகளையும் மேற்கொண்டு அதனை அடைய முயற்சிக்கின்றோம். பலன் சாதகமாக அமைந்தால்  முயற்சியும் அதற்கான நமது உழைப்பும் அர்த்தமுள்ளதாகிப் போகின்றது. முதலில் ஒரு குறிக்கோள் மனதில் இருக்க வேண்டும். குறிக்கோள் இல்லாத வாழ்க்கையின் பலன் தான் யாது? அடைய வேண்டிய விஷயம் அதனை அடையும் வழி ஆகியவை தெளிவோடு இருக்கும் போது தான் நாம் அமைத்துக் கொள்ளும் பாதையும் வெற்றியை நோக்கி நம்மை இட்டுச் செல்லும்.

உ.வே.சாவின் கனவும் குறிக்கோளும் தமிழ்க் கல்வி என்ற ஒன்றே. அதனை அடைய, தனது ஐயங்களுக்குத் தெளிவைப் பெற அவர் வெவ்வேறு நூல்களைத் தேடித்தேடி அவற்றைப் பெற்று, அன்னூல்களைக் கற்றோரிடம் பாடம் கேட்டு அதில் கிடைக்கும் தெளிவில் மனம் அமைதியுற்று பின்னர் மீண்டும் எழும் ஐயங்களுக்காகப் புதிய நூல்களைத் தேடுவதும் தகுந்த ஆசிரியரைத் தேடுவதும் என்ற நிலையிலேயே அவரது நிலை சென்று கொண்டிருந்தது.

விருத்தாசல ரெட்டியாரிடம் இருந்த  ஒரு திருக்குறள் நூலை உ.வே.சா படிக்க ஆரம்பித்திருந்தார். தன்னிடமும் ஒரு திருக்குறள் நூல் இருந்தால் செல்லும் இடமெல்லாம் எடுத்துச் சென்று வாசிக்க உதவியாக இருக்குமே என்ற எண்ணம் மனதில் தோன்றி அது நாளுக்கு நாள் வளர தனக்கும் ஒரு திருக்குறள் நூல் வேண்டும் என்ற எண்ணம் மனதில் வலிமை பெற ஆரம்பித்து விட்டது. ஒரு நூலை வாங்குவதற்கு அதிலும் அச்சுப் பதிப்பு நூலை வாங்குவதற்கான பொருளாதார வசதி உ.வே.சாவிற்கு இல்லை. முன்னர் குன்னத்தில் இருந்த பொழுதில் குன்னத்தில் சந்தித்த பெரும்புலியூர் பள்ளிக்கூடத்தில் தலைமையாசிரியராக இருந்த ராயர் ஒருவர்  தன்னிடம் ஒரு திருக்குறள் அச்சுப் பிரதி இருப்பதாகவும் தன்னிடம் வந்து அதனை உ.வே.சா பெற்றுக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆக அந்த ஞாபகம் வந்ததும் அந்த நல்ல மனிதரைத் தேடிச் சென்று அவர் தருவதாகச் சொல்லியிருந்த நூலை வாங்கி வர வேண்டும் என்ற எண்ணம் மனதில் உதித்தது உ.வே.சாவிற்கு.

அவர் இருந்தது பெரும்புலியூர் என்னும் ஒரு ஊரில். இந்த ஊர் எவ்வளவு தூரம் என்று தெரியவில்லை. ஆனாலும் நெடு தூரம் நடந்து சென்றால் தான் அந்த  ஊரை அடைய வேண்டியிருக்கும் என்றும் ஒரே நாலில் சென்று பெற்று வந்ததாக வாசிக்கும் போது ஏறக்குறைய 15 கிமீ தூரத்திற்குள் இருக்கலாம் என்றே தோன்றுகின்றது.

விருத்தாசல ரெட்டியாரும் ஒரு வித்தியாசமான மனிதர். அவருக்கு நூல்கள்.. நூல்கள்.. நூல்கள்.. தான் வாழ்க்கையே. நூல்களை வாசிப்பதும் அதனை பாடம் சொல்வதும் தமிழ்பிரியர்களோடு சம்பாஷிப்பதுமே அவருக்குத் தொழில். உ.வே.சாவின் தமிழ்க்காதல் விருத்தாசல ரெட்டியாருக்கு இவர் பால் நிறைந்த அன்பினை ஏற்படுத்தியிருந்தது.

ஆக ஒரு நாள் உ.வே.சா தான் பெரும்புலியூர் சென்று அங்கிருந்து திருக்குறள் நூலை பெற்று வரச் செல்லப்போவதாகத் தெரிவித்ததும் இவரும் சேர்ந்து பேசிக் கொண்டே பெரும்புலியூர் சென்று வாக்களித்திருந்த அந்த நல்ல மனிதர் ராயரிடமிருந்து திருக்குறள் நூலைப் பெற்றுக் கொண்டு இருவரும் மீண்டும் திரும்பினர்.

இதே போல வேறொரு தருணத்திலும் உ.வே.சா ஒரு நூலைப் பெறுவதற்காக ஒரிடத்திற்கு பல மணி நேரங்கள் நடந்து சென்ற கதையினை என் சரித்திரம் நூலில் அடுத்தடுத்த அத்தியாயங்களில் காண முடிகின்றது.


தொடரும்..
சுபா

Sunday, September 9, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 19


பதிவு 19

மீனாட்சி சுந்தரம் பிள்ளயவர்களிடம் பாடம் கேட்கும் தருணத்திற்காகக் காத்திருந்த வேளையிலும் உ.வே.சா புதிய நூல்களைக் கற்கும் முயற்சியை விட்டு விடவில்லை.  இடையில் விருத்தாசல முதலியார் என்னும் ஒரு பண்டிதரிடம் சில நூல்களைப் பாடம் கேட்கும் வாய்ப்பினைப் பெற்றார். அதிலும் குறிப்பாக சில இலக்கண நூல்களைப் பாடம் கேட்டு தனது செய்யுள் இயற்றும் திறனை வளர்த்துக் கொள்வதில் ஈடுபட்டிருந்தார்.

விருத்தாசல ரெட்டியார் வழியாக இவருக்கு யாப்பருங்கல காரிகை நூல் அறிமுகமானது. அதிலும் அச்சு வடிவத்தில். அச்சில் நூல்கள் வெளிவருவது அக்காலத்தில் சற்றே அறிமுகமாகியிருந்த சமயம் அது. ஏட்டுச் சுவடிகள் என்பது மாறி அச்சுப் புத்தகங்களுக்கு வரவேற்பு இருந்த காலம் அது. அச்சு வடிவத்திலான யாப்பருங்கல காரிகை நூலை விருத்தாசல ரெட்டியார் இவருக்கு அளித்தார். அது மட்டுமன்றி வேறு சில ஏட்டுச் சுவடி நூல்களையும் இவருக்கு வழங்கினார். உ.வே.சாவின் தமிழ் கற்க வேண்டும் என்ற விருப்பமும் ஈடுபாடும் விருத்தாசல ரெட்டியார் போன்ற செல்வந்தர்கள் இவரைப் போற்றி அரவணக்கும் பண்பினை வழங்கிற்று. தனக்கு விருத்தாசல ரெட்டியார் மூலமாக கிடைத்த நூல்களைப் பெரும் செல்வமாக போற்றி நினைத்து உ.வே.சா பெருமைப்படுவதைக் காண்கின்றோம்.

அக்காலத்தில் தமிழ் கற்றோர் பலர் தாங்கள் பாடம் கேட்டு கற்ற நூல்களைத் தாங்களே ஏட்டுச் சுவடிகளில் எழுதி வைக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பதை என் சரித்திரம் நூலில் ஆங்காங்கே காண்கின்றோம். அந்த  வகையில் விருத்தாசல ரெட்டியாரும் சில நூல்களை தம் கையாலேயே ஏட்டுச் சுவடியில் எழுதி வைத்திருந்திருக்கின்றார். இதனைக் குறிப்பிடும் வகையில் 25ம் அத்தியாயத்தில் உ.வெ.சா இப்படி குறிப்பிடுகின்றார்.

"செவ்வைச் சூடுவார் இயற்றிய பாகவதத்தில் அவருக்கு நல்ல பழக்கம் உண்டு. தம் கையாலேயே அந்நூல் முழுவதையும் ஏட்டில் எழுதி வைத்திருந்தார். ஓய்ந்த நேரங்களில் நான் அப்புஸ்தகங்களை எடுத்துப் பார்ப்பேன்; படிப்பேன். அவற்றிலுள்ள விஷயங்களை ரெட்டியாரிடம் கேட்பேன். அவர் சொல்லுவார். இத்தகைய பழக்கத்தால் தமிழ்க் கடலின் ஆழமும் பரப்பும் பல நூற்பகுதிகளும் சில வித்துவான்களுடைய சரித்திரங்களும் விளங்கின. தண்டியலங்காரம் திருக்குறள், திருக்கோவையார் என்னும் நூல்களை நானே படித்தேன். கம்ப ராமாயணத்திலும் பல பகுதிகளைப் படித்து உணர்ந்தேன்."

யாப்பருங்கல காரிகையை முழுமையாக பாடங் கேட்டு முடித்த பின்னர் விருத்தாசல ரெட்டியார் உ.வே.சாவுக்குப் பொருத்த இலக்கணங்களையும் பிரபந்த இலக்கணங்களையும் பாடம் சொல்லத் தொடங்கினார். இலக்கணத்தில் சிறந்த புலமை பெற்றவராக விளங்கியவர் விருத்தாசல ரெட்டியார். தன் வீட்டின் சுவற்றிலேயே பல இடங்களில் இரட்டை நாகபந்தம், அஷ்ட நாகபந்தம் முதலிய சித்திர கவிகளை எழுதி வைத்திருப்பாராம்.

நாக பந்தம் எனச்சொல்லப்படும் செய்யுள் வகையிலான நூலை எனக்கு திரு.சுந்தர் பரத்வாஜ் வழங்கி அறிமுகப்படுத்தினார். சித்திரக்கவிமாலை என்னும் அந்த நூல் நமது மின்னூல்கள் சேகரிப்பில் 218வது நூலாக உள்ளது. வியக்க வைக்கும் வடிவிலான சித்திரங்களும் அதற்குள்ளே கவிதைகளும் என்ற வகையில் உருவாக்கப்பட்டதொரு அற்புதமான ஒரு நூல் அது. இதைப் போலத்தான் விருத்தாசல ரெட்டியாரின் வீட்டுச் சுவரும் இருந்திருக்கும் போல.

ஏட்டுச் சுவடிகளிலிருந்து அச்சுப் பிரதியாக கொண்டுவரும் செயல் என்பது மிகக்கவனமாக கையாளப்பட வேண்டிய ஒன்று. பதிப்பியல் பற்றி பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையவர்கள் கூறியிருப்பதையும் இங்கே நினைவு கூறுதல் கடமையாகின்றது. ஏட்டுச் சுவடியிலிருந்து அச்சுப் பதிப்புக்குச் செல்லும் போது சில வேளைகளில் பாட பேதங்களை கவனியாது, செய்யுட்களை முறையாக ஆராயாது அப்படியே கிடைக்கின்ற நூலில் உள்ள செய்யுட்களை அச்சுப் பதிப்பாக கொண்டு வந்துவிடும் நிலை பல முறை நிகழ்ந்துள்ளது. உ.வே. போன்ற அறிஞர்கள் ஒரு நூலின் பல பிரதிகளை ஆராய்ந்து பின்னர் முறையான அச்சுப்பதிப்பை கொண்டு வர பாடுபட்டவர்கள் என்பதை நாம் காண்கின்றோம். கம்ப ராமாயண அச்சுப் பதிப்பில் தனது அனுபவத்தில் தாம் கண்ணுற்ற ஒரு நிகழ்வைப் பற்றி உ.வே.சா இப்படி குறிப்பிடுகின்றார்.

"ஒரு நாள் வழக்கம்போல ரெட்டியாருடைய மூத்த குமாரராகிய நல்லப்பரெட்டியார் கம்ப ராமாயணம் படித்துத் தம் தந்தையாரிடம் பொருள் கேட்டு வந்தார். அன்று படித்தது கும்பகருணப் படலம். அவர் திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை பதிப்பித்திருந்த அச்சுப் புஸ்தகத்தை வைத்துக் கேட்டு வந்தார். நானும் அவ்வூர்ப் பட்டத்துப் பண்ணையாராகிய முதியவர் ஒருவரும் உடன் இருந்தோம். அம்முதியவருக்கு எழுபது பிராயம் இருக்கும். படித்து வரும்போது இடையிலே ஓரிடத்தில் அம்முதியவர் மறித்து, “இந்த இடத்தில் சில பக்கங்களை அவசரத்தில் தள்ளி விட்டீரோ?” என்று நல்லப்ப ரெட்டியாரைக் கேட்டார். “இல்லையே; தொடர்ச்சியாகத்தானே படித்து வருகிறேன்” என்று அவர் பதில் கூறினார். “இவ்விடத்தில் சில பாடல்கள் இருக்க வேண்டும். அவற்றை நான் படித்திருக்கிறேன். அவை இப்புஸ்தகத்தில் விட்டுப் போயின. என் பிரதியில் அப் பாடல்கள் உள்ளன” என்று சொல்லிப் பாடம் முடிந்தவுடன் என்னையும் நல்லப்ப ரெட்டியாரையும் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று தம் வீட்டுக் கம்பராமாயணப் பிரதியை எடுத்துக் கும்ப கருணப் படலம் உள்ள இடத்தைப் பிரித்துக் காட்டினார். அவர் கூறியபடியே அவ்விடத்தில் அச்சுப் பிரதியிலே காணப்படாத சில பாடல்கள் இருந்தன. அவற்றைப் படித்துப் பார்த்தோம். அம்முதியவருக்குக் கம்ப ராமாயணத்தில் இருந்த அன்பையும் அதை நன்றாகப் படித்து இன்புற்று ஞாபகம் வைத்திருந்த அருமையையும் உணர்ந்து வியந்தோம். பரம்பரையாகக் காப்பாற்றப்பட்டு வரும் ஏட்டுப் பிரதிகளின் பெருமையையும் தெளிந்தோம்."

தொடரும்..

சுபா

Saturday, September 1, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 18


ஏதாவது ஒரு சங்கடம் வரும் போதோ சஞ்சலம் தோன்றும் போதோ சாஸ்திரம் பார்க்க வேண்டும், ஜோதிடரை சென்று பார்த்து பலன் அறிந்து வரவேண்டும் என்று ஒரு வழக்கம் நமது சமூகத்தில் காலம் காலமாக இருந்து வருகின்றது. ஜோதிடம் பார்க்காவிட்டாலும் கூட பல்லி, பூனை, மாடு என பிராணிகளைச் சகுனங்களுக்குக் காரணமாக வைத்து மனிதர்கள் நாம் நல்ல சகுனமா கெட்ட சகுனமா என்று வகுத்துப் பார்க்கும் பண்புடையவர்களாக இருக்கின்றோம். இறைவனின் திருவருள் எண்ணம் எப்படி இருக்கின்றது, நல்லவை நடக்குமா..? பிரச்சனைகள் விலகுமா? சோதனை காலம் முடியுமா? நினைத்த காரியம் கைகூடுமா ? என்பதே ஒவ்வொருவர் மனதிலும் எதிர்கால நற்பலன்களை ஏக்கத்தோடு எதிர்பார்க்க வைத்து விடுகின்றது. அதில் ஜோதிடர் நல்ல பலனைச் சொல்லி விட்டாலோ சகுனம் நல்லபடியாக அமைந்து விட்டாலோ நமது மனம் முழு திருப்தி அடைந்து விடுகின்றது. சஞ்சலம் குறைந்து நம்பிக்கையும் தோன்றுகின்றது. இந்த நம்பிக்கை தானே வாழ்க்கை பயணத்தின் ஆதாரம்.

குறி பார்ப்பது என்னும் கலை நமது தமிழ் சமுதாயத்தில் எல்லா நிலை மக்களிடமும் சமூகத்திலும் இருப்பதைக் காண்கின்றோம். கயிறு சார்த்திப் பார்த்தல், பூவை இறைவனின் பாதத்தில் வைத்து எந்தப் பூ வருகின்றதோ அதற்கு ஒரு பலனை கற்பனை செய்து கிடைக்கின்ற பூவிற்குக் கொடுத்த பலனே தனக்கு வருவதாக எடுத்துக் கொள்ளும் செயல், கோடாங்கி வந்து சொல்லும் காலை நேரத்து நல்ல-கெட்ட செய்திகள், கிளி ஜோசியக்காரர் கூறும் விளக்கம் -  இவையெல்லாமே சகுனத்தை அறிந்து கொள்ள நாம் வழக்கத்தில் இன்றளவும் வைத்திருக்கும் சில நடைமுறைகளாகவே உள்ளன.

உ.வே.சாவின் வாழ்க்கையிலும் சஞ்சலம் வந்து குடி புகுந்த தருணங்கள் உண்டு. அதற்கு ஒரு உதாரணம் பற்றியே இப்பதிவு அமைகின்றது.

வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பற்றி கேள்விப்பட்ட நாளிலிருந்து அவரிடம் பாடம் கேட்கச் செல்லும் நாளை எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கின்றார் உ.வே.சா. முதலில் தன்னை மாணவராக அவர் ஏற்றுக் கொள்வாரா? ஏற்றுக் கொண்டாலும் கல்வி கற்க ஏற்படும் செலவுகளை எப்படி சமாளிப்பது? வீட்டிலிருந்து வித்துவான் இருக்கும் இடம் சென்று அங்கு கல்வி கற்கச் செல்வது சாத்தியமா? குடும்பத்தாரை விட்டு பிரிந்திருக்க வேண்டுமே. உணவிற்கும் தங்கும் இடத்திற்கும் என்ன செய்வது என பல கவலைகள் உ.வே.சா அவர்களையும் அவர் குடும்பத்தாரையும் வறுத்திக் கொண்டிருந்தது. எப்படியாகினும் கல்வியை வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் கற்றாக வேண்டும் என்ற எண்ணமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரலாயிற்று. இந்த நிலையில் உ.வே.சா அவர்கள் தனக்கு பலன் எப்படி அமையப் போகின்றது என்று சோதித்துப் பார்க்கின்றார்.

"ஒரு நாள் காலையில் திருவிளையாடற் புராணத்தைப் படிக்கலாமென்று எடுத்தேன். அப்போது மிகவும் நைந்து அயர்ந்து போன என் உள்ளத்தில் ஓர்
எண்ணம் தோற்றியது. “இந்தப் புஸ்தகத்தில் கயிறு சார்த்திப் பார்ப்போம்” என்று நினைந்து அவ்வாறே செய்யலானேன். இராமாயணம் திருவிளையாடல் முதலிய நூல்களில் வேறு ஒருவரைக் கொண்டு கயிறு சார்த்திப் பிரித்து அப்பக்கத்தின் அடியிலுள்ள பாடலைப் பார்த்து அச்செய்யுட் பொருளின் போக்கைக் கொண்டு அது நல்ல பொருளுடையதாயின் தம் கருத்து நிறைவேறுமென்றும், அன்றாயின் நிறைவேறாதென்றும் கொள்ளுதல் ஒரு சம்பிரதாயம். 

நான் ஒரு சிறுவனைக் கொண்டு கயிறு சார்த்தச் செய்து புஸ்தகத்தைப் பிரித்தேன். சென்ற துர்மதி டு பங்குனி மாதம் பதிப்பிக்கப் பெற்ற அப்பழம்
புஸ்தகத்தில் 160-ஆம் பக்கம் கிடைத்தது. ‘வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படல’மாக இருந்தது அப்பகுதி. சில முனிவர்கள் வேதத்தின் பொருள் தெரியாது மயங்கி மதுரைக்கு வந்து அங்கே எழுந்தருளியுள்ள தக்ஷிணாமூர்த்தியைப் பணிந்து தவம்புரிய, அவர் எழுந்தருளி வந்து
வேதப்பொருளை விளக்கி அருளினாரென்பது அப்படல வரலாறு. நான் பிரித்துப் பார்த்த பக்கத்தில், தக்ஷிணாமூர்த்தி ஓர் அழகிய திருவுருவமெடுத்து
வருவதை வருணிக்கும் பாடல்கள் இருந்தன. அந்தப் பக்கத்தின் அடியில் 23 என்னும் எண்ணுடைய செய்யுளை நான் பார்த்தேன்.

“என் உள்ளக் கருத்து நிறைவேறுமா, நிறைவேறாதோ” என்ற பயத்தோடு நான் மெல்லப் புஸ்தகத்தைப் பிரித்தேன். பிரிக்கும் போதே என்
மனம் திக்குத் திக்கென்று அடித்துக் கொண்டது நல்ல பாடலாக வரவேண்டுமே!’ என்ற கவலையோடு அப்பக்கத்தைப் பார்த்தேன்.

“சீதமணி மூரல்திரு வாய்சிறி தரும்ப 
மாதவர்கள் காணவெளி வந்துவெளி நின்றான்
நாதமுடி வாயளவி னான்மறையி னந்தப்
போதவடி வாகிநிறை பூரணபு ராணன்”

என்ற பாட்டைக் கண்டேனோ இல்லையோ எனக்கு மயிர்க் கூச்செறிந்தது. என் கண்களில் நீர் துளித்தது மிகவும் நல்ல நிமித்தம் உண்டாகிவிட்டது. ஒரு குருவை வேண்டி நின்ற எனக்கு, தக்ஷிணாமூர்த்தியாகிய குருமூர்த்தி வெளிப்பட்டதைத் தெரிவிக்கும் செய்யுள் கிடைத்ததென்றால்,
என்பால் பொங்கிவந்த உணர்ச்சிக்கு வரம்பு ஏது? “கடவுள் எப்படியும் கைவிடார்” என்ற நம்பிக்கை உதயமாயிற்று. “மதுரை மீனாட்சி சுந்தரக் கடவுள்
முனிவர்களுக்கு அருள் செய்தார். எனக்கும் அந்தப் பெருமான் திருநாமத்தையுடைய தமிழாசிரியர் கிடைப்பார்” என்ற உறுதி உண்டாயிற்று.
என் தந்தையார் பூஜையிலுள்ள மூர்த்தியும் ஸ்ரீ மீனாட்சி சுந்தரக் கடவுளே என்ற நினைவும் வந்து இன்புறுத்தியது. உவகையும் புதிய ஊக்கமும் பெற்றேன். இந்நிகழ்ச்சியை என் தந்தையாரிடம் கூறினேன். அவரும் பெரு மகிழ்ச்சி அடைந்தார்."

இப்பகுதியை வாசித்து முடித்த போது வரிக்கு வரி உ.வே.சா அவர்களின் எழுத்திலிருந்து அவரது மனப்போக்கை நான் மனமார உணர்ந்தேன்.  நல்லாசிரியருக்காக தவம் செய்த இம்மாணவருக்கு இறையருள் கருணை கிட்டாமலா போகும்? நல்லன நினைத்து அதே சிந்தனையில் தவம் புரிபவர்களுக்கு அருள் கிட்டத்தானே செய்யும்!

பிற்காலத்தில் வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் தலை மாணவராகத் திகழ்ந்து அவர் இறக்கும் தருவாயிலும் அவருடன் இருக்கும் பாக்கியம் பெற்றவராக இருந்தார் உ.வே.சா என்பதைக் காண்கின்றோம். நல்ல எண்ணங்கள் செயலாக்கம் பெரும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

சுபா