Friday, November 23, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 32


நேற்று திருவாவடுதுறை குருமகா சன்னிதானம் அவர்கள் சிவபதம் அடைந்த செய்தியை மின்தமிழில் நண்பர்கள் பகிர்ந்து கொண்டதன் வழி அறிந்து கொண்டேன்.  இந்தச் செய்தியோடு உ.வே.சாவும் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சிந்தனையும் மனதில் வந்து  போகின்றது.

பிள்ளையவர்கள் திருவாவடுதுறை ஆதீனத்தின் மகாவித்துவானாக தனது இறுதி காலம் வரை இருந்து தமிழ்ப்பணி செய்தவர் என்பதை பதிவு 29ல் குறிப்பிட்டிருந்தேன். அவரது மறைவுக்குப் பின்னர் உ.வே.சா அவர்களுக்கும் திருவாவடுதுறை ஆதீனத்தின் தொடர்பு மிக அணுக்கமானதாகவே இருந்து வந்தது. இதனைப் பற்றி பின்வரும் பதிவுகளில் குறிப்பிடலாம் என எண்ணுகின்றேன். இந்தப் பதிவில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கும்  திருவாவடுதுறை ஆதீனத்திற்கும் இடையிலான நெருக்கத்தைப் பற்றி மேலும் சில விஷயங்கள் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றுவதால் அது தொடர்பான சில தகவல்களைப் பதிகின்றேன்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் முதலில் திருவாவடுதுறை சென்று பாடங் கேட்டது அப்போது அங்கே ஆதீன கர்த்தராக இருந்து வந்த அம்பலவாண தேசிகரிடம் தான். அங்கே  அது சமயம் சின்னபட்டமாக இருந்தவர் சுப்பிரமணிய தேசிகர். இவர் நிறைந்த கல்வி ஞானம் மிக்கவர்.  பல நூல்களைப் பாடங்கேட்டவர். மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் மடத்திற்கு வரும் சமயத்தில் இருவருக்கும் நல்ல அன்பும் நட்பும் தோன்றியது.

பிள்ளையவர்களின் தமிழ் ஞானப் பரப்பையும் ஆளுமையையும் அறிந்தவராக இருந்த  சுப்பிரமணிய தேசிகர் பிள்ளையவர்களை மடத்திலேயே தங்க வைத்து அங்கேயே தம்பிரான்களுக்கும் மற்ற மாணவர்களுக்கும் பாடம் போதிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைத்தார். அதற்காக அவர் ஆதீன கர்த்தர் அம்பலவாண தேசிகரிடம் தனது எண்ணத்தை வெளியிட்டு சம்மதத்தையும் பெற்று மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களை மடத்திலேயே தமிழ் வித்துவானாக இருக்கும் வகை ஏற்படுத்திக் கொடுத்தார் என்பது குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம்.

இது தொடர்பாக அம்பலவாண தேசிகருக்கும் சுப்பிரமணிய தேசிகருக்கும் இடையே நடக்கும் உரையாடலாக அமையும் பகுதி நூலில் மிக சுவாரசியமாகவும் அதே வேளை இருவரது சிந்தனை ஓட்டங்களையும் பிரதிபலிப்பதாகவும் உள்ளது.

திரிசிரபுரம் மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ள நகரங்கள் மட்டுமன்றி சென்னையிலும் கூட இந்தக் கல்விமாணுக்குச் சிறந்த பெயரும் மதிப்பும் இருப்பதை சுப்பிரமணிய தேசிகர் எடுத்துச் சொல்கின்றார்.  தோற்றத்தைப் பார்க்கும் போது மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் மிக சாதுவாக இருக்கின்றாரே என அம்பலவாண தேசிகர் வினவும் போது  “நன்றாகப் படித்தவர்கள் அவ்வாறே இருப்பார்கள். பிறர் தாமே அறிந்து தங்களை உபசரித்தால்தான் தம்முடைய ஆற்றலை அவர்கள் புலப்படுத்துவார்கள்” என்று பதில் கூறுகின்றார் சுப்பிரமணிய தேசிகர்.

சரி என்று ஒத்துக் கொள்ளும் அம்பலவாண தேசிகர், ”இவரிடம் அதிகமான மாணவர்கள் சேர்ந்தே இருக்கின்றனரே. இவர்கள் அவரை விட்டு நீங்கமாட்டார்கள் போலிருக்கின்றதே. இவரோடு எல்லோரும் இங்கே இருந்தால் அதிக செலவாகுமே”  என வினவ அதற்கு  சுப்பிரமணிய தேசிகர் சொல்லும் பதில் சுவையானது.

”அவ்வளவு பேரும் இவருடைய மாணாக்கர்கள். இவர் எங்கே இருந்தாலும் உடனிருப்பார்கள். அவர்களுள் முன்னமே படித்தவ்ர்கள் சிலர்; இப்பொழுது படிப்பவர்கள் சிலர்; இனிப் படிப்பதற்கு முயற்சி செய்பவர்கள் சிலர்; அவர்களுக்குள்ளே பந்தியிலே உண்ணத்தக்கவர்களுக்குப் பந்தியிலும், ஏனையவர்களுக்கு அவரவர்க்கு ஏற்றபடியும் ஆகாரம் செய்விக்கலாம். இங்கே சாப்பாட்டுச் செலவில் ஒன்றும் குறைவில்லையே.  படித்த வித்துவான்கள் இருத்தலும் அவர்களைக் கொண்டு  பலரைப் படிப்பித்தலும் மடத்துக்கு ஏற்றவையாகும்.”

இப்படி சொல்லி விளக்கிய பிறகு அவருக்குத் தக்க சம்பளம் கொடுக்க வேண்டி வருமே என வினவும் அம்பலவாண தேசிகரிடம் சுப்பிரமணிய தேசிகர் இப்படிச் சொல்கின்றார். “அதைப் பற்றி கவலை சிறிதும் வேண்டாம்.  இவருடைய மாணாக்கர்களைப் போஷித்துப் பாதுகாத்தலே போதும். அதனாலேயே இவர் மிகவும் திருப்தியடைவார். அதற்கு மேல் ஒன்றும் வேண்டாம் “.

இப்படி ஒருவர் தன்னலம் விடுத்து, மாணாக்கர்கள் நலமே தன் வாழ்க்கை என இருந்திருக்கின்றார் என வாசித்து அறியும் போது என் மனம் அதிசயத்திலும் அதற்கு அடிப்படையாக அமைந்த அவரது எல்லையில்லா அன்பிலும் நெகிழ்ந்து போகின்றது.

இப்படிக் கூறி சம்மதம் பெற்று மடத்தின் முக்கிய அதிகாரிகளுக்கு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களை ஆதீன வித்துவானாக நியமித்தமை குறித்து தகவலளித்து அவருக்கு வேண்டிய வசதிகளைத் தயார் செய்து கொடுக்கும் படி ஏற்பாடுகளையும் செய்வித்தார் சுப்பிரமணிய தேசிகர். அத்துடன் இவருக்கு இரண்டு  தவசிப்பிள்ளைகளையும் ஏற்பாடு செய்து தந்திருக்கின்றார். மடத்திலிருந்து மாதச் சம்பளத்தை ஏற்பாடு செய்தும் கொடுத்திருக்கிருக்கின்றார்.

அடுத்த சில நாட்களில் அம்பலவாண தேசிகர் மீது ஒரு கலம்பகம் ஒன்றை மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றியிருக்கின்றார். பல வித்துவான்கள் முன்னிலையில் அரங்கேற்றம் கண்டது அந்த நூல்.

இந்த அரங்கேற்ற நிகழ்வின் போது, திருவாவடுதுறை தொடர்பாக பல நூல்கள் இருந்தாலும் கூட இந்த நூல் பல புதிய விஷயங்களை ஆழ்ந்த பொருளுடன் இனிய தமிழில் விளக்கும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றதே என அதனைக் கேட்ட அனைவரும் புகழ்ந்திருக்கின்றனர். இதற்காகவேனும் இவரைச் சிறப்பிக்க வேண்டும் என மடத்துப் பெரியோர்கள் விரும்ப, அதனை ஏற்றுக் கொண்ட அம்பலவாண தேசிகர் சுப்பிரமணிய தேசிகருடன் கலந்தாலோசித்து விட்டு இவருக்கு ”மகாவித்துவான்”  எனும் பட்டத்தை அந்த நிகழ்வில் வழங்கினார்.

அம்பலவாண தேசிகருக்குப் பின்னர் ஆதீன பொறுப்பை ஏற்றுக் கொண்ட சுப்பிரமணிய தேசிகருக்கு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் மேல் அளவற்ற அன்பு. அவரது கல்வி ஞானத்தின் மேல் மிகப் பெரிய நம்பிக்கை; ப்ரமிப்பு; வியப்பு. ஒரு உரையாடலில் இப்படிக் குறிப்பிடுகின்றார். “ உங்கள் கவித்துவத்தையும் புகழையும் யாரால் மறைக்க முடியும்? சூரியனை மறைப்பதற்கு யாரால் இயலும் ? ” (பக் 234)

பிற்காலத்தில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் நாகப்பட்டினத்தில் இருந்து கொண்டு திருநாகைப் புராணம் இயற்றி வரும் வேலையில் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் அம்பலவாண தேசிகர் சிவபதம் அடைந்தார். இது 1869ம் ஆண்டு நிகழ்ந்தது.

தொடரும்..


அன்புடன்
சுபா

Sunday, November 18, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 31


பதிவு 31

திருவாவடுதுறை ஆதீனத்தில் பிள்ளையவர்களுக்கு ஏற்பட்ட பிணைப்பின் தொடக்கத்தை முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இந்தப் பதிவில் தொடர்ச்சியாக அவர் வாழ்வில் நடந்த சில குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளைப் பற்றி சொல்வது தொடருக்குப் பயனளிக்கும்  என்று நினைக்கின்றேன்.

பிள்ளையவர்களின் 29வது வயதில் அவருக்கு ஒரு மகன் பிறந்தார். தனதுதந்தையின் பெயரையே அக்குழந்தைக்குச் சூட்டி மகிழ்ந்தார் பிள்ளையவர்கள். இந்தக் குமாரனின் திருமணத்திற்கு உ.வே.சா சென்று வந்தமை பற்றி என் சரித்திரம் நூலில் குறிப்பிடுகின்றார்.

பிள்ளையவர்கள் எப்போதுமே தனக்குக் கிடைக்கும் வருமானத்தையெல்லாம் மாணாக்கர்களைப் பராமரிப்பதற்காகவே பெரும்பாலும் செலவு செய்பவராக இருந்திருக்கின்றார். குடும்பஸ்தராகிவிட்ட இவருக்கு சொந்தமாக ஒரு வீடு கூட இல்லாத நிலையில் அவரது 33-வது வயதில் மலைக்கோட்டை தெற்கு வீதியில் இவருக்கு ஒரு மெத்தை வீடொன்றை அருணாசல முதலியார் வாங்கித் தந்து ஆதரித்திருக்கின்றார். இதனைக் குறிப்பிடும் உ.வே.சா, "திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களென்று உலகமெல்லாம் கொண்டாடும் வண்ணம் செய்தது இந்த அருணாசல முதலியாருடைய உதவியே" என்று குறிப்பிடுகின்றார்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சென்னைக்குச் சென்று அங்கு தமிழ் கற்றோரைச் சென்று சந்தித்து அவர்களுடன் அளவளாவி வரவேண்டும் என்று பெறும் ஆவல் கொண்டிருந்தார். அதற்கும் ஒரு நல்ல வாய்ப்பு அமையவே சென்னைக்குச் சென்று அங்கு சில காலங்கள் தங்கியிருந்து பல தமிழ்க்கல்விமான்களுடன் அளவளாவும் வாய்ப்பும் பெற்று அவர்களுடனான நட்பையும் ஏற்படுத்திக் கொண்டு வந்தார். சென்னையில் இவரைச் சந்தித்த  பலரும் இவரது கல்வி ஞானத்தக் கண்டு வியந்து போற்றி இவரை ஆதரித்தும் வந்தனர். பின்னர் பெங்களூருக்கும் மீண்டும் சென்னைக்கும் சென்று வந்திருக்கின்றார். இததகைய பயணங்களின் போது தமிழ்ச்சங்கங்களின் தலைமைப் பொறுப்பிலிருப்பவர்கள் பல அறிஞர்களுடனான தொடர்பு இவருக்கு ஏற்பட்டமையையும் இந்த மீனாட்சி சுந்தம் பிள்ளை வரலாறு நூலில் விளக்கமாகக் காணமுடிகின்றது.

பிள்ளையவர்களின் சிறந்த கல்வி ஞானத்தைப் போற்றி கௌரவிக்கும் வகையில் சில கல்விமான்களும் செல்வந்தர்களும் அவருக்கு வித்துவான் என்ற பட்டத்தினை வழங்கினர். அது முதல் அவர் வித்துவான் பிள்ளையவர்கள் என்றேஅழைக்கப்பட்டு வரலானார். இந்த  வித்துவான் பட்டம் கிடைக்கப்பட்ட பின்னர் அவர் இயற்றிய நூல்கள்  அனைத்திலும் இவர் பெயருக்கு முன்னால் வித்துவான் என்ற சொல் சேர்ந்திருக்கும். முதலில் அப்படி பெயர் சேர்த்து வெளிவந்தது குசேலோபாக்கியானம் எனும் நூல்.

இவர் சைவ பாரம்பரியத்தைச் சேர்ந்தவராயினும் சிவ தீட்ஷை பெற்று சிவ நாமம் சொல்வதில் மனம் நிறைந்தவராக இருந்து வந்தாலும் பிற சாதியைச் சேர்ந்தோரையும்  பிற மதத்தைச் சேர்ந்தோரையும் போற்றி அரவணைத்து வருவதில் சிறிதளவும் பாரபட்சம் காட்டாதவராகவே திகழ்ந்திருக்கின்றார் என்பதை உ.வே.சா எழுதியிருக்கும் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் வரலாறு நூலில் பரவலாகக் காண முடிகின்றது. அதிலும் குறிப்பாக 16ம் அத்தியாவத்தில் மாணவர்கள் வகை என்ற பகுதியில் குறிப்பிடத்தக்க சில விபரங்களை உ.வே.சா எழுதியிருக்கின்றார். உ.வே.சா இப்படிக் குறிப்பிடுகின்றார்.
"இவர் தம்பால் யார் வந்து கேட்பினும் அவர்களுக்குப் பாடஞ் சொல்வார். இவரிடம் படித்தவர்களிற் பல சாதியினரும் பல சமயத்தினரும் உண்டு. பிராமணர்களில் ஸ்மார்த்தர்கள், வைஷ்ணவர்கள், மாத்வர்கள் என்னும் வகுப்பினரும், வேளாளரிற் பல வகுப்பினரும், பிற சாதியினரும், கிறிஸ்தவர்களும், முகம்மதியர்களும் இவர்பாற் பாடங்கேட்டதுண்டு."

அவ்வகையில் குறிப்பிடத்தக்கவர் புதுச்சேரியிலிருந்து வந்து பாடங்கேட்ட சவராயலு நாயகரென்னும் ஒரு கிறிஸ்துவர். இவர் வீரமாமுனிவர் என்று அறியப்படும் பெஸ்கிபாதிரியார் இயற்றிய தேம்பாவணி, திருக்காவலூர்க் கலம்பகம் போன்ற கிறிஸ்துவ சமய தமிழ் நூல்களைப் பாடங் கேட்க  விருப்பங்க் கொண்டு பிள்ளையவர்களிடம் வந்தார். பிள்ளையவர்கள் இத்தகைய பிற மத நூல்களைப் பாடம் சொல்லக்கூடாது என்று வாதிட்டவர்களும் அக்காலத்தில் இருந்தனர். ஆனால் அதிலும் இருப்பது தமிழே என அவர்களுக்கு உரைத்து மாணவர்களின் தேவையறிந்து பாடம் சொல்லிக் கொடுத்திருக்கின்றார் பிள்ளையவர்கள். சவராயலு நாயகர் விஷயத்தில் பிள்ளையவர்களும் அவரை பரீட்சித்துவிட்டு மேலும் சில அடிப்படை நூல்களை பாடம் சொல்லி பின்னர் தேம்பாவணி, திருக்காவலூர்க் கலம்பகம் இன்னும் சில நூல்களையும் பாடஞ்சொல்லி நன்கு பயிற்சி தந்து அனுப்பி வைத்தாராம்.

தமிழ் உலகம் நன்கறிந்த முன்சீப் வேதநாயகம் பிள்ளையவர்களும் இவரிடம் தாம் படித்து வந்த பல நூற்களுக்கு விளக்கம் கேட்டு தனது ஐயங்களைத் தெளிந்து கொண்டார். பிள்ளையவர்களுடனான நட்பு வேதநாயகம் பிள்ளையவர்களுக்குப் பல காலம் தொடர்ந்தது என்பதையும் குறிப்பிட  வேண்டும்.

தொடரும்....


அன்புடன்
சுபா

Saturday, November 10, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 30




திருவாவடுதுறை ஆதீன வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பாடங் கேட்க வந்த உ.வே.சா மாணாக்கராக அவரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விபரங்களைக் கொடுத்து அதன் தொடர்ச்சியாக மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் வாழ்க்கையின் சில பகுதிகளைச் சுருக்கமாக சில பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். அதில் இன்று திருவாவடுதுறை ஆதீனத்துடனான தொடர்பு எவ்வாறு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கு அமைந்தது என்பதை சிறிது கூறலாம் என நினைக்கின்றேன்.

பிள்ளையவர்களின் தந்தையார் சிவபக்தர்; அதே வழியில் சிவபக்தி கொண்டிருந்ததோடு ஆலய தரிசனங்கள் சென்று கண்டு வருவதிலும் மிகுந்த விருப்பம் கொண்டவராக இருந்தார் இவர்.சிவனை தினந்தோரும் நியமங்களின் படி பூஜிக்க விரும்பமும் கொண்டிருந்தார். அதனால் முறையாக தீட்சை பெற மிகுந்த ஆவல் எழுந்தது இவருக்கு. திரிசிரபுரத்திலிருந்தசெட்டிபண்டாரத்தையா என்பவர் தீட்ஷை செய்விக்க அது முதல் பிள்ளையவர்கள் முறையாக சிவபூஜையை செய்து வரலானார். பூஜைகளுடன் நூல்களைப் படித்து இறையுணர்வில் ஆழ்ந்திருப்பத்ல் மிக  விருப்பம் கொண்டவராக இருந்தார்.

அவ்வாறு படித்து வருகையில் திருவாவடுதுறையாதீனத்து வித்துவான் ஸ்ரீ கச்சியப்ப முனிவரால் இயற்றப்பட்ட திருவானைக்காப்புப்ராணம் படிக்கும் வாய்ப்பும் இவருக்குஅமைந்தது. ஏனைய புராணங்களை விட இது முற்றிலும் வேறுபாட்டுடன் அமைந்திருப்பதைக் காணவே அவரது வேறு பிற வேறு நூல்களையும் தேடி வாசிக்கலானார். அதில் அமைந்துள்ள சைவ சித்தாந்த சாஸ்திர கருத்துக்கள் மனதைக் கவரவே மனம் அந்த ஆராய்ச்சியிலேயே சென்று கொண்டிருந்தது. அப்போது அவருக்கு இருபத்தியோரு வயது.

இதன் விளைவாக திருவாவடுதுறை ஆதீனம் செல்ல வேண்டும்; அங்குள்ள தேசிகர்களிடமும் பண்டிதர்களிடமும் பாடங்  கேட்க வேண்டும் என்ற பேராவல் இவருக்கு உருவாயிற்று. தன்னுடைய மாணவர் ஒருவரையும் அழைத்துக் கொண்டு திருவாவடுதுறை ஆதீனத்திற்குப் புறப்பட்டு விட்டார். வழியில் காண்கின்ற தலங்களிலெல்லாம் வழிபாடு செய்து கொண்டே திருவாவடுதுறை ஆதீனம் வந்து சேர்ந்தார். இடையில் பட்டீச்சுரத்திலும் சில நாட்கள் இருக்கும் வாய்ப்பு அமைந்தது.

இந்தப் பயணத்தில் இவர் அறிந்து கொண்ட பட்டீச்சுரத்து நல் உள்ளம் கொண்ட மக்களுடனான தொடர்பு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கு முதுமை காலம் வரை நீடித்தது. இங்கு இருந்த போது பட்டீச்சுரம் ஸ்ரீ தேணுபுரீசுரர் மீது ஒரு அந்தாதியை  இவர் இயற்ற வேண்டும் என்று அன்பர்கள் கேட்டுக் கொள்ள இங்கே பட்டீச்சுரம் ஸ்ரீ தேணுபுரீசுரர் பழசைப் பதிற்றுப் பத்தந்தாதி என்னும் நூலை மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றி அங்கே அறங்கேற்றமும் செய்தார்.

அது சமயம் திருவாவடுதுறை அதீனத்தில்வேளூர் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் அவர்கள் ஆதீனகர்த்தராக இருந்தார். இவரே இந்த மடத்தின் 14ம் பட்டத்து ஆதீனகர்த்தர். தமிழ் வடமொழி இரண்டிலும் தேர்ந்தவர். பிரசங்கம் செய்வதில் சக்தி வாய்ந்தவர் எனவும் பாடஞ் சொல்வதிலும் மிகவும் விருப்பம் உடையவர் என்றும் புகழ்பெற்றவர்.திருவாவடுதுறை மடத்தில் தற்சமயம் வரை சம்பிரதாயமாக கடித முறைகளில் உள்ள சட்ட திட்டங்கள்  அவர் புதுப்பித்து அறிமுகப்படுத்தியவையே. இப்பெரும் தேசிகரைக் காண வேண்டும் என்ற பேராவல் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கு இருந்தது.

ஆதீனத்தை அடைந்து தனது விருப்பத்தை அங்குள்ளோரிடம் தெரிவிக்கவே, தேசிகரை தரிசிக்க இவருக்கு அழைப்பு வந்தது. அவரை கீழே விழுந்து வணங்கி திருநீறு பெற்றுக் கொண்டு அவருக்காக இயற்றி வந்த சில செய்யுட்களையும் வாசித்துக் காட்டினார். அவற்றில் நாட்டம் கொண்ட தேசிகர் இவரது வரலாற்றை விசாரிக்க தன்னைப் பற்றி சுருங்க  விவரித்துக் கொண்டு நூல்களில் தனக்குள்ள ஈடுபாட்டை வெளிப்படித்தினார். தேசிகரும் இவர் நாட்டத்தைப் புரிந்து கொண்டு மடத்தில் இருந்து வர அனுமதி அளித்தார். காலை மாலை தேசிகரை சந்தித்துப்  பாடங் கேட்டு வந்தார் பிள்ளையவர்கள்.  அங்கு சில காலங்கள் இருந்து பின்னர் மீண்டும் திரிசிரபுரம் மீண்டார்.

இப்படித்தான் திருவாவடுதுறை ஆதீனத்தோடு பிள்ளையவர்களுக்குத் தொடர்பு உண்டாகிற்று. இத்தொடர்பு அவர் இறக்கும் தருவாயிலும் இருந்தது என்பதும் அவர் உயிர் பிரிந்ததும் இந்த திருவாவடுதுறை அதீனத்திலேதான் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயங்கள்.

தொடரும்..

குறிப்பு: இப்பதிவில் குறிக்கப்படும் செய்திகள் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் வாழ்க்கை வரலாறு பாகம் 1 நூலில் இருக்கும் விஷயங்களின் அடிப்படையில் எழுதப்படுகின்றது.

டூலிப் வெங்காயங்கள் - அடுத்த வருடத்துக்காக ஆயத்தம்


இன்று என் தோட்டத்திலிருந்து ஏதும் மலர்கள் இங்கே வரப்போவதில்லை. குளிர் காலம் தான் ஆரம்பித்து விட்டதே!

அதிசயம் என்னவென்றால் குளிரிலும் கூட தாக்குப் பிடித்து நிற்கும் பைன் மரங்கள் போல சில செடி வகைகளும் கூட அதிகக் குளிரிலும் பனி கொட்டும் காலத்திலும் கூட விளைகின்றன என்பதே. ஒரு முறை ப்ளேக்ஃபோரெஸ்ட் தெற்குப் பகுதி நகரமான ப்ரைபெர்க் பகுதியில் டிசம்பர் மாதம் ஒரு நடைப்பயணம் மேற்கொண்டோம். அப்போது அங்கே சில வகைச் செடிகள் அந்தக் குளிரிலும் கூட பூத்திருப்பதைப் பார்த்து வியந்தேன். அது தொடங்கி அவ்வகைச் செடிகள் சிலவற்றை குளிர்காலத்துக்கக நான் ப்ரத்தியேகமாக வாங்கி நட்டு வைப்பது உண்டு. ஆனால் இன்றைய பதிவு அதைப் பற்றியல்ல.

கடுமையான குளிர் காலம் நெருங்கும் முன்னதாகவே இங்கே தோட்டத்தை தூய்மை படுத்தி வசந்த காலச் செடிகளின் வருகைக்காக தயார் செய்ய வேண்டியது அவசியம். நான் டூலீப் செடிகளையும் க்ரோக்கெட்ஸ் எனப்படும் செடிகளின் பூக்களையும் விரும்புவதால் அவற்றின் வெங்காயங்களை வாங்கி இலையுதிர் காலத்தில் நட்டு வைப்பது வழக்கம்.



பொதுவாக ஒரு முறை நட்டு விட்டால் அவை வருடா வருடம் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும். ஆனாலும் சில காரணங்களுக்காக கோடை காலத்தில் இந்த வெங்காயங்கள் சேதப்பட்டிருந்தால் இவை மீண்டும் முளைப்பதற்கு வாய்ப்பில்லை என்பதால் முடிந்த வரை நான் ஒவ்வொரு ஆண்டும் இலையுதிர் காலத்தின் இறுதியில் புதிய டூலிப் வெங்காயங்களை வாங்கி நட்டு வைத்து விடுவேன்.



குளிர் மிக அதிகமாக ஆரம்பிப்பதற்கு முன்னரே இவை நடப்பட வேண்டும். அதனால் மழை நீர் பட்டு வேர்கள் முளைக்க ஆரம்பித்து விடும். குளிர் கடுமையாவதற்கு முன்னர் இலைகளைப் போட்டு மூடி வைத்து விடுவேன். டிசம்பர், ஜனவரி, பெப்ரவரி ஆகிய மூன்று மாதங்களும் இங்கே கடுமையான குளிர் இருக்கும். குளிர் இவற்றை சேதப்படுத்தாமல் இருக்க பஞ்சு போன்று அமையும் இலைகள் உதவுகின்றன.



இந்த வருடம் புதிய கலவை வர்ணங்களில் சில வெங்காயங்களை நட்டு வைத்திருக்கின்றேன். ஏப்ரல் மாத இறுதியில் இவை வளர்ந்து பெரிதாகும் போது இம்மலர்களை பார்த்து ரசிக்கலாம்.

அன்புடன்
சுபா

Sunday, November 4, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 29


இளம் பிராயத்திலேயே தந்தையாரை இழக்கும் நிலையை அடைந்தவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள். ஒரு விரோதி ஆண்டில் சிதம்பரம் பிள்ளையவர்கள் சிவபதம் அடைந்தமையை நினைத்து அப்போது மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்  மனம் வருந்தி சில செய்யுட்கள் இயற்றினாராம். அவற்றில் உ.வே.சா அவர்களுக்கு கிடைத்த ஒரே ஒரு பாடல் இது.

"முந்தை யறிஞர் மொழி நூல் பலநவிற்றும்
தந்தை யெனைப்பிரியத் தான்செய்த - நிந்தைமிகும்
ஆண்டே விரோதியெனு மப்பெயர்நிற் கேதகுமால்
ஈண்டேது செய்யா யினி "

தந்தையார் மறைவுக்குப் பின்னர் தொடர்ந்து அங்கேயே குடும்பத்தாருடன் இருந்து வந்த மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கு அடுத்த சில ஆண்டுகளில் காவேரி ஆச்சியென்னும் ஒரு பெண்ணைத் திருமணமும் செய்து வைத்தனர் அவ்வூரார். திரிசிரபுரம் சென்றால் தனது கல்வித்தேடலுக்கு அது உறுதுணையாக இருக்கும் என நினைத்த மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் மீண்டும் ஊரார் சம்மதத்தைப் பெற்றுக் கொண்டு திரிசிரபுரம் வந்தடைந்தார்.

திரிசிரபுரத்திலும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலும் கல்வி கற்ற ஆசிரியர்கள் சிலர் இருந்தமையால் இவர் அவர்களைச் சென்றடைந்து பாடம் கேட்டு தனது தமிழ் புலமையின் ஆழத்தை விரிவாக்கிக் கொண்டிருந்தார். அவர்களில் குறிப்பாக

  • உறையூர் முத்துவீர வாத்தியார்
  • திரிசிரபுரம் சோமசுந்தரமுதலியார்
  • வீமநாயக்கன்பாளையம் இருளாண்டி வாத்தியார்
  • பாலக்கரை வீரராக செட்டியார்
  • கொட்டடி ஆறுமுகம் பிள்ளை
  • கற்குடி மருதமுத்துப் பிள்ளை
  • திருநயம் அப்பாவையர்
  • மருதநாயகம் பிள்ளை

ஆகியோர் அக்காலத்தில் திரிசிரபுத்த்திலும் அதன் அருகாமையிலும் இருந்த பிரபலமான வித்துவான்கள்.

ஒரு சமயம் திருவாவடுதுறை ஆதீன மடத்தில் முறையாக பல நூல்களைக் கற்றுத் தேர்ந்த வேலாயுத முனிவரென்பவர் திரிசிரபுரம் வந்திருக்கின்றார். அச்சமத்தில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் அவர் பால் வந்து சில நூற்களைப் பெற்று ;சுயமாகப் படியெடுத்துக் கொண்டு காலையிலும் மாலையிலும் வந்து பாடங்கேட்டுச் செல்வாராம்.

தண்டியலங்காரம் படிக்க வேண்டும்  என்று மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் விரும்பினார். ஆனால் அச்சமயத்தில் அவ்வூரில் இந்த நூலை அறிந்து பாடம் சொல்லத் தகுதியானவர்கள் வேறெவரும் இருக்கவில்லை.  ஒரே ஒருவர், அவ்வூரில் உள்ள ஒரு பரதேசி, ஒவ்வொரு நாளும் வீடு வீடாகச் சென்று  பிச்சைக் கேட்டு வருபவர். அவருக்குத் தமிழ் நூல்களில் பரிட்சயம் உண்டு என்றும் அதிலே தண்டியலங்காரத்தில் ஆழ்ந்த புலமை கொண்டவர் என்றும் அறிய வர, அவரை அனுகி  தனக்குப் பாடம் சொல்ல முடியுமா எனக் கேட்டிருக்கின்றார். அந்த பரதேசியானவர் வேறு யாருக்கும் பாடம் சொல்லித் தந்த அனுபவம் இல்லாதவர். தாம் இருந்த மடத்தில் மட்டும் சில நூற்களைச் சேமித்து வைத்திருந்திருக்கின்றார். அதில் தண்டியலங்கார நூலும் இருந்திருக்கின்றது.

இந்த நூலைப் பெற்று பாடங்கேட்க வேண்டும் என்று உறுதியெடுத்துக் கொண்ட மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் அந்தப் பரதேசியானவர் வரும் நேரமாகச் சென்று அவர் பிச்சையெடுக்க வரும் நேரம் தெருத்தெருவாக அவருடனேயே பேசிக் கொண்டே சென்றும், அவருக்குப் பிரியமான கஞ்சாவை வாங்கி வைத்திருந்து  அவருக்குத் தேவைப்படும் வேளைகளில் அதனைக் கொடுத்தும், அவர் மகிழ்ச்சியாக இருக்கும் சமயத்தில் புத்தகத்தைப் பெற்று படியெடுத்துக் கொண்டு பாடமும் விளக்கமும் கேட்டு வந்தாராம். இப்படி பணிவுடன் தன்னோடு தொடர்ந்து வரும் இந்த இளைஞரைப் பார்த்த அப்பரதேசிக்கும் திருப்தி ஏற்பட்டிருக்கின்றது. இதனால் தன்னிடம் இருந்த மேலும் சில நூல்களையும் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் அப்பரதேசி கொடுத்திருக்கின்றர.

இப்படி தமிழ்க்கல்வி கற்க எங்கெங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் சென்று பல்வேறு முயற்சிகள் செய்து தமிழ் இலக்கியங்களையும், பிரபந்தங்களையும் இலக்கணங்களையும் கற்று வந்திருக்கின்றார் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்.  மேலும் மேலும் கற்க வேண்டும் என விரும்புவோருக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாக இருந்திருக்கின்றார் இவர்.

தொடரும்..

அன்புடன்
சுபா