Saturday, February 23, 2013

கணையாழி விருது விழா


கணையாழி கலை இலக்கிய மாதாந்திர இதழின் சார்பில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கணையாழி நிர்வாகக்குழு உறுப்பினர் தமனி பிரகாஷ், கவிதைக்கான "ஆண்டாள் விருது' பெற்ற கவிஞர் தீபச்செல்வன், கட்டுரைக்கான "சிவத்தம்பி விருது' பெற்ற பேராசிரியர் க.பஞ்சாங்கம், கணையாழி நிர்வாகக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், விருது வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு, சிறுகதைக்கான "ஜெயகாந்தன் விருது'க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட செங்கை ஆழியானுக்குப் பதிலாக விருதினைப் பெற்ற பத்மநாபன், எழுத்தாளர் ஜெயகாந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கணையாழி நிர்வாகக்குழு உறுப்பினர் சுபாஷிணி டிரெம்மல்.

தமிழனின் வீரத்துக்கும் உறுதிக்கும் பெருமைக்கும் எடுத்துக்காட்டு புலம்பெயர்ந்த தமிழர்கள் என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் கூறினார்.

கணையாழி இதழின் சார்பில் கணையாழி விருதுகள் வழங்கும் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் தீபச்செல்வன் (கவிதை) ஆண்டாள் விருதையும் பேராசிரியர் க. பஞ்சாங்கம் (கட்டுரை) கா. சிவத்தம்பி விருதையும் பெற்றனர். ஜெயகாந்தன் விருது செங்கை ஆழியானுக்கு (சிறுகதை) வழங்கப்பட்டது. விருதுகளை நீதிபதி கே. சந்துரு வழங்கினார்.

இந்த விழாவுக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். விழாவில் அவர் பேசியது:-

புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்பான படைப்புகள் விருது பெற்றுள்ளன. புலம்பெயர்ந்த தமிழர்களால்தான் தமிழ் மொழி உலகுக்கு அறிமுகமாகியுள்ளது. தமிழ், தமிழனின் வீரம், உறுதி, பெருமை ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டு புலம்பெயர்ந்த தமிழர்கள்தான் என்பதில் சந்தேகம் இல்லை.

கணையாழி விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயகாந்தன்.

வாழ்த்துரை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தன் வாழ்க்கையை பற்றி எழுதுவதுதான் உண்மையான கவிதை, பிறர் உணர்வை தன் உணர்வாக கருதி எழுதுவது சிறந்ததாக இருக்காது. உணர்வுகளுக்கு அருகில் உள்ள படைப்புகளைத்தான் விருதுகளுக்கு தேர்வு செய்ய தூண்டும்.

இலங்கைப் பிரச்னையை பல அரசியல் கோணங்களில் பார்க்கிறோம். அது பல்வேறு தளங்களில் அரசியல் ஆக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் உணர்வுகளை உணரவேண்டும் என்றார்.

நீதிபதி கே. சந்துரு: விருது பெற்றவர்களை வாழ்த்திய நீதிபதி கே. சந்துரு, ஃபேஸ்புக்கில் விமர்சனம் எழுதினால்கூட கை விலங்கு மாட்டப்படுகிறது. இப்போது உள்ள சூழ்நிலையில் மாற்றுக் கருத்துகூட கூறமுடியாது. கருத்துச் சுதந்திரத்தை அரசு மட்டுமல்லாமல் சில குழுக்களும் பறிக்கின்றன என்றார்.

விருது பெற்றவர்களை சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறை பேராசிரியர் வீ. அரசு, எழுத்தாளர்கள் பி. லெனின், கி.அ. சச்சிதானந்தம், கணையாழி நிர்வாகக் குழு உறுப்பினர் சுபாஷிணி டிரெம்மல், பத்திரிகையாளர் ரங்கஸ்ரீ ஸ்ரீநிவாஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

முன்னதாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் கணையாழி இதழை நடத்துபவருமான ம. ராஜேந்திரன் வரவேற்றார். இந்த விழாவில் பல்வேறு எழுத்தாளர்களும் அறிஞர்களும் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.

நன்றி:- தினமணி

Friday, February 15, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 45


தமிழ் மரபு அறக்கட்டளை தலபுராணங்களை மின்பதிப்பாக்குதல் என்ற ஒரு திட்டத்தை 2005ம் ஆண்டு ஆரம்பித்தோம். 30க்கும் குறையாத தல புராணங்களை இத்திட்டத்தின் வழியாக மின்பதிப்பாக்கம் செய்து முடிக்க முடிந்தது. தமிழக வரலாறு தமிழ் மரபு சார்ந்த தகவல்கள் மின்னாக்கம் என ஆர்வம் காட்டி வரும் நான் தமிழகத்தின் சிறப்புகளிலேயே அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுவது ஆலயங்களையும் அது தாங்கி நிற்கும் வரலாற்றுப் படிமங்களையும் என்று உறுதியாகக் கூறுவேன்.

ஒரு ஆலயத்தைத் தெரிந்து கொள்ள முயற்சிக்கும் போது நமது கருத்துக்கு விருந்தாக பற்பல விஷயங்கள் கிடைக்கும் பெரும் வாய்ப்பு அமைகின்றது.

ஆலயத்தின் அமைப்பு, அதனைக் கட்டிய அரசன் அல்லது ஒரு சமூகத்தில் உயர்மதிப்பு பெற்ற ஒருவர் பற்றிய வரலாற்றுச் செய்திகளை அறிய இது ஒரு வாய்ப்பாகின்றது. ஒரு அரசன் அதனைக் கட்டியிருக்கும் பட்ஷத்தில் அந்த அரசன் அரசாண்ட கால கட்டம்,  அந்த ஆலயத்தில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்கள், அக்கல்வெட்டுக்கள் அமைந்துள்ள லிபி, கல்வெட்டுக்கள் குறிக்கும் வரலாற்று நிகழ்வுகள், வரலாற்று நிகழ்வில் பெயர் குறிப்பிடப்படும் பெயர்கள், அவர்களுக்கிடையிலான உறவுகள், அந்த அரசனின் ஆர்வம், வெற்றிச் சிறப்புக்கள் எனப் பல விஷயங்களை அறிந்து கொள்ள நமக்கு வாய்ப்பமைகின்றது.

ஆலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும்  சிற்பங்களிலிருந்து அச்சிற்பங்கள் காட்டி நிற்கும் பொருள், அக்காலக் கதைகள், சிற்ப அமைப்பு, சிற்ப அமைப்பின் சிறப்பு என்பன போன்ற விஷயங்களை அறிந்து கொள்ள முடியும்.

ஆலயங்கள் என்பன  வழிபாட்டுத் தலங்கள் மட்டுமன்று. அவற்றின் தேவை விரிந்த பரப்பைக் கொண்டிருப்பதை ஆலயத்தின் பண்புகளை நோக்கும் ஒருவர் உணர்ந்து கொள்ள முடியும். ஆலயங்களைப் பக்திக்கு மட்டுமே என நினைத்து மதிப்பிடுபவர்கள் அதன் முழு பரிணாமத்தை உணராதவர்கள் என்பதே என் கருத்து.

ஒவ்வொரு ஆலயமும் ஒரு வாழும் ஆவணம்; வரலாற்றுச் சின்னம்; சிற்பக் கலைக்கூடம் என்பதோடு ஒர் சமூகத்தின் வேர்களைப் பிரபலித்துக் கொண்டு நிற்கும் வரலாற்றுச் சான்று என்பதையும் பல வேளைகளில் பார்க்கத் தவறி விடுகின்றோம்.

சில ஆலயங்கள் தமிழகத்தில் பொது வழக்கில் இல்லாத சில விஷயங்களையும் பதிந்து வைத்த ஆவணங்களாகத் திகழ்கின்றன.  சில கோயில்கள் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு உரிமையானதாக இருந்து பின்னர் வேறொரு சமயத்து வழிபடு ஸ்தலமாக உருவாகிய நிலையையும்  கூடக் காண்கின்றோம்.

கோயில்கள் பள்ளிக்கூடங்களாக, கலைக்கூடங்களாக, சமூக விஷயங்களைக் கலந்து பேசும் அமைப்புக்களாக, சிற்பக் கூடங்களாக இருந்த நிலையையும் காண்கின்றோம்.

மொழி, சமயம், வரலாற்று விஷயங்கள், இறைவனின் பல்வேறு வகை வடிவங்கள் அவ்வடிவங்களுக்கான புராணக் கதைகள் என்ற வகையிலே ஒரு வாழும் உயிருள்ள ஆவணமாக ஒரு கோயில் திகழ்கின்றது என்பதை அக்கோயிலை இரு கண்களைத் திறந்து, கருத்தில் கவனம் வைத்துப் பார்க்கும் போது புரிந்து கொள்ள முடியும்.

ஆனால்  ஆலயத்தைப் பார்க்கும் நம் பார்வை இப்படி அமைகின்றதா என்றால் இல்லை என்பதே பதிலாக அமையும். நம் வாழ்க்கைத் தேவைகளுக்குப் பிரார்த்தனை செய்து இறைவனை வேண்டிச் செல்லவும், பயத்தின் அடிப்படையில் சில விஷயங்களுக்குத் தீர்வு காண சடங்குகளை மேற்கொள்ளவும், திருமணம், குடும்ப விழாக்கள் என்ற வகையில் சில விஷயங்களை நிகழ்த்திக் கொள்ளும் இடமாக கோயில் பொது மக்கள் சிந்தனையில் குறுகிய இடத்தை மட்டுமே வகிக்கின்றது. இத்தகைய ஒரு நிலையால் கோயிலின் முழுமையான சிறப்புக்கள் மறக்கப்பட்டு ஒரு சிறு பகுதி மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டுள்ள நிலையைக் காண்கின்றோம். இதற்கு ஒரு மிக முக்கியக் காரணமாக அமைவது பொது மக்கள் மத்தியில் தல புராணங்களைத் தெரிந்து கொள்ள ஆர்வம்  இல்லாமையும் ஆலயச் சிறப்புக்கள் பற்றிய ப்ரக்ஞை இல்லாமையுமே என நான் கருதுகின்றேன்.  இந்த நிலையைப் போக்க வேண்டியது சமூக அமைப்புக்களின் ஒரு கடமை என்றும் கருதுகின்றேன்.

என் சரித்திரம் நூலை வாசிக்கையிலே மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் கோயில்களின் தலபுராணங்கள், வரலாற்றுச் செய்திகள் பற்றிய பரந்த அறிவை உ.வே.சா குறிப்பிடுவதைக் காண்கின்றோம்.  மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கே ஒரு கோயிலைக் கண்டாலும் அக்கோயிலின் ஸ்தல புராணத்தைத் தம்மோடு வரும் மாணக்கர்களுக்குச் சொல்வாராம். இந்தச் செய்தியை அத்தியாயம் 40ல் ஓரிடத்தில் உ.வே.சா குறிப்பிடுகின்றார்.

" பிள்ளையவர்கள் எந்த இடத்திற்குப் போனாலும் அந்த இடத்தைப்பற்றிய சரித்திரச் செய்திகளையும் ஸ்தலமானால் அதன் சம்பந்தமான புராண வரலாறுகளையும்  உடனிருப்பவர்களுக்குச் சொல்லுவது வழக்கம். ஸ்தல வரலாறுகளைத் தெரிந்துகொண்டு சமயம் நேர்ந்தபோது தாம் இயற்றும் நூல்களில் அமைத்துக் கொள்ளும் இயல்புடைய அவர் தமிழ் நாட்டு ஸ்தலங்களைப் பற்றிய பல விஷயங்களைத் தெரிந்திருந்தார்."

மீண்டும் தல புராணம் அறிந்து ஆலயம் செல்லும் ஒரு சமூகமாக நாம் மாற வேண்டும். அது மிக முக்கியம்.  நம் உறவினர் ஒருவரை நாடிச் செல்வதாக இருந்தாலும்,  அவர் யார்? அவர் என்ன செய்கின்றார்? எதற்காக அவரை நாடிச் செல்கின்றோம் ? எத்தனை நாள் அங்கிருக்கின்றார் ?  என்று தெரிந்து கொண்டு செல்கின்ற நாம்  நூற்றாண்டுகளாக  நிலைத்து நின்று சமூகத்தின் தேவைகளுக்குத் துணையிருப்பதோடு ஒரு சமூகத்தின் வாழ்க்கையில் முக்கிய அங்கத்தை வகித்து நிற்கும் ஆலயங்களைப் பார்க்கச் செல்ல அதன் அருமை பெருமை அறிந்து செல்வது தானே சிறப்பு.

ஆனால் நாம் விரும்பினாலும் கூட தலபுராணங்களை அறிந்து கொள்வதும் வாசிப்பிற்குக் கிடைப்பதும் சிரமம் என்ற நிலை தான் கண்கூடு. அப்படியே தலபுராணம் கிடைத்தாலும் அது அதிசயங்களையும் கதைகளையும் முன் வைத்து  அமைக்கபப்ட்டதாகத்தான் உள்ளதே தவிர வரலாற்று விஷயங்களை, ஆலய கட்டுமான விவரங்களை, ஊரின் வரலாற்றை, கல்வெட்டின் சிறப்புக்களை விளக்குவனவாக இல்லை என்பது நாம் மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டிய பெறுங் குறை!

தொடரும்...

அன்புடன்
சுபா

Sunday, February 10, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 44



என்னதான் பயிற்சி செய்து ஒன்றுக்குப் பலமுறை என சொல்லிப் பார்த்து பழக்கி வைத்துச் சென்றாலும் சில நேரங்களில் தயக்கம் அச்சம் பயம் எல்லாம் கலந்து வந்து நாம் செய்ய வந்த காரியத்தை சரி வரச் செய்யாமல் ஆக்கி விட்டு விடும். மாணவர் பருவத்தில் இப்படி  ஏறக்குறைய நாம் எல்லோருமே இவ்வகை அனுபவத்தைப் பெற்றிருப்போம்.

என் ஆரம்பப்பள்ளிக் காலங்களில் இப்படி சில சுவையான சம்பவங்கள் எனக்கும் நடந்ததுண்டு. கட்டுரை பேச்சுப் போட்டிக்கு மனனம் செய்து வைத்துக் கொண்டு போய் பேச சென்றால் மேடையில் நிற்கும் போதே கை கால்கள் நடுக்கம் எடுத்து பேச வந்த சொற்கள் வாயிலிருந்து வெளிவராமல் நம்மை நமக்கே பயமுறுத்திக் கொண்டிருக்கும்.  மேடையின் கீழ் அமர்ந்து நம்மையே பார்த்துக் கொண்டிருப்பவர்களைப் பார்க்கும் போது ஏதோ நமக்கு தண்டனை கொடுக்கக் காத்திருப்பவர்கள் போல ஒரு தோற்றம் மனதில் எழும். பயத்தில் உடம்பெல்லாம் சில்லென்று ஆகி சொற்கள் சரியாக வாயிலிருந்து வெளிவராமல் மனனம் செய்து வைத்ததில் சிலவற்றைச்சொல்லி சிலவற்றை மென்று முழுங்கி விட்டு, சிலவற்றை முதலில் வரவேண்டியதை கீழேயும் இடையில் வரவேண்டியதை முதலிலும் எனச் சொல்லி உளறி வைத்துக் கொண்டு நின்ற அனுபவமும் ஏற்பட்டதுண்டு.

அத்தைகைய தருணங்களில் ஏற்பட்ட நடுக்கம் இப்போது சுவையான அனுபவமாக மனதில் படுகின்றது. தினம் தினம் கற்கும் இவ்வாழ்க்கையில் இப்படி ஒவ்வொரு சின்னச் சின்ன அனுபவங்கள் அனைத்தும் சேர்ந்து தான் நம் மனதை திடப்படுத்தி உறுதியை வளர்த்து நம்மை வளர்க்கின்றன என்பதை காலப்போக்கில் தானே உணர முடிகின்றது!

முதல் முறை சரியாகச் செய்ய முடியவில்லையென்றாலோ, அல்லது முதல் முறை தோல்வி ஏற்பட்டாலோ அது வாழ்க்கையின் முடிவாகி விடாது. பல தோல்விகளைச் சந்தித்தாலும் பல விஷயங்களில் தப்பும் தவறுமாக செய்து முடித்தாலும் அவை அனைத்துமே வாழ்க்கை எனும் பாதையில் நாம் கடந்து வர வேண்டியவையே என்பதில் மனதில் நம்பிக்கை இருக்க வேண்டும். ஒரு முறை தோல்வியை சந்தித்து விட்டாலே குழந்தைகளைத் தீட்டித் தீர்ப்பதும், அதனை ஒரு பெரிய அவமானமாகக் கருதி குழந்தைகள் மனதில் ஏதோ குற்றம் செய்தவர் போன்ற மனப்பான்மையை வளர்ப்பதும் பெற்றோர்கள் பலர் செய்யும் தவறான ஒரு வழிமுறை. தங்கள் சுய பெருமைக்கு முக்கியத்துவம் கொடுத்து அது நிறைவேறாத போது அந்த ஏமாற்றத்தை தங்கள் குழந்தைகள் மேல் காட்டுவதால் குழந்தைகள் பல வகையில் உளவியல் பிரச்சனைகளுக்கு உள்ளாகவும் நேர்கின்றது.  இது அவர்களைப் பிற்காலத்தில் மனதில் உள்ளதைத் தெளிவுற சொல்லவும் தயக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றது.

என் சரித்திரம் படிக்கும் போது ஓரிரு இடங்களில் உ.வே.சா தான் இப்படி பெரியோர் முன் நடுங்கி நின்ற நிலையை தயங்காமல் விவரிக்கின்றார். இயல்பாக அவர் விளக்கும் தனது அனுபவங்கள் இந்த  நூலை வாசிக்கின்ற மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை தரக்கூடியதாக நிச்சயமாக அமையும்.

முதன் முதலில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களைப் பார்க்கும் வேளையில் அவருக்கு செய்யுள் சொல்லும் போது தான் எப்படி நாகுளறி தடுமாறினார் என்று குறிப்பிடுகின்றார். அதே போல திருவாவடுதுறை சன்னிதானத்தை முதன் முதல் சந்திக்கும் வேளையில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததையும் பதிகின்றார். இதில் என்ன முக்கியத்துவம் இருக்கின்றது என சிலருக்குத் தோன்றலாம். ஆனால் முதன் முதல் நடுக்கம் ஏற்படுத்தினாலும் படிப்படியாக தன்னை தயார்படுத்திக் கொண்டு தமிழ்க்கல்வியில் உயர்ந்து வளர்ந்த உ.வே.சா கூட இத்தகைய படிகளைத் தாண்டித்தான் வந்திருக்கின்றார் என்னும் ஒரு விஷயம் இளையோர் மனதில் இத்தகைய சம்பவங்களை வாசிக்கும் போது நிச்சயமாக தன்னம்பிக்கையை வளர்க்கக் கூடியவையே!

உ.வே.சாவின் குறிப்பில் அத்தியாயம் 36லிருந்து ஒரு பகுதி இதனை விளக்குவதாக அமைந்திருக்கின்றது. அதனைப் பார்ப்போம்.

"“நீர் படித்த நூலிலிருந்து ஏதாவதொரு பாடல் சொல்லும்” என்று தேசிகர் கட்டளையிட்டார்.
...
குரல் ஏழவில்லை; உடம்பு நடுங்கியது; வேர்வை உண்டாயிற்று. ஆனாலும் நான் சோர்வடையவில்லை, மெல்லத் திருவாவடுதுறை யமக அந்தாதி (துறைசையந்தாதி)யிலிருந்து, ‘அரச வசனத்தை’ என்ற செய்யுளைச் சொன்னேன். கட்டளைக் கலித்துறை யாதலால் நான் பைரவி ராகத்தில் அதைச் சொல்லி நிறுத்தினேன்.

“பொருள் சொல்ல வருமா?” என்று தேசிகர் கேட்டார்.

“சொல்வார்” என்று என் ஆசிரியர் விடையளித்தார். அந்த விடை தேசிகர் வினாவுக்கு விடையாக வந்ததன்று; நான் பொருள் சொல்லவேண்டுமென்று தாம் விரும்புவதையே அந்த விடையால் அவர் புலப்படுத்தினார். நான் அக்குறிப்பை உணர்ந்தேன்.

அர்த்தம் சொல்லி வரும்போது என் நாக்குச் சிறிது தழுதழுத்தது. “பயப்பட வேண்டாம்; தைரியமாகச் சொல்லும்” என்று பிள்ளையவர்கள் எனக்கு ஊக்கமளித்தார். நான் சிறிது சிறிதாக அச்சத்தை உதறிவிட்டு எனக்கு இயல்பான முறையில் சொல்லத் தொடங்கினேன். துறைசையந்தாதியில் மேலும் சில செய்யுட்கள் சொன்னேன்.

“இன்னும் பாடல்கள் தெரிந்தால் சொல்லும்” என்று தேசிகர் கட்டளையிட்டார்.

அப்போது நான் நல்ல தைரியத்தைப் பெற்றேன். நடுக்கம் நீங்கியது ".

முதலில் சுப்பிரமணிய தேசிகரைப் பார்க்கும் போதே அவரது வசீகரமான தோற்றத்தைக் கண்டு வியக்கின்றார் உ.வே.சா. அவரது தூய்மையும் தவக்கோலமும், கவலை என்பதையே அறியாத ஒரு செல்வரது முகத்தோற்றப்பொலிவும், அவரது காவி உடையும், ஜபமாலை ஆபரணங்களும் அவரை உ.வே.சாவின் கண்களுக்கு துறவிகளுள் அரசராக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இது கூட அவரது தயக்கத்திற்கும் பயத்திற்கும் காரணமாக அமைந்தது எனலாம். ஆனாலும் ஆசிரியரின் துணையுடன், மனதில் தான் ஏற்படுத்திக் கொண்ட தைரியமும் கைகொடுக்க அங்கிருந்தோர் முன்னிலையில் செய்யுட்களை இசையுடன் சொல்லி நற்பெயரையும் பெற்றுக் கொண்டார் உ.வே.சா.


தொடரும்...
சுபா

Sunday, February 3, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 43


ஓலைச் சுவடிகளிலிருந்து அச்சுப்பதிப்பாக்கம் செய்வது என்பது ஒன்றிலிருந்து ஒன்றினைப் பார்த்து அப்படியே அச்சுப் பதிப்பாகக்  கொண்டு வரக்கூடிய எளிமையான காரியம் அல்ல. அச்சுப் பதிப்புக்கு வரும் போது ஒரு சுவடி நூல் பிரதியை மாத்திரம் வைத்துக் கொண்டு அதன் அடிப்படையில் ஒரு நூலை பதிப்பிப்பது என்பது அந்நூலை முழுமையான ஒரு நூலாகக் கொண்டு வர உதவாது.

அச்சு நூல்களின் எளிமையும் அச்சு இயந்திரங்களின் கணிசமான பயன்பாடும் பரவத்தொடங்கியதுமான  19ம் நூற்றாண்டில் தமிழகத்தில் பல தமிழறிஞர்கள் சுவடி வடிவிலிருந்த  நூற்களை அச்சுப் பதிப்புக்களாகக் கொண்டு வர முயற்சித்து வெற்றி கண்டனர். இவர்களில் பலரது அயராத உழைப்பினை மறந்த சமூகமாக நமது சமூகம் இன்றைக்கு மாறிவிட்டது. தமிழக சினிமாத்துறையினரின் எல்லா வாழ்க்கை குறிப்புக்களையும் அன்றாடம் கடமையாகக் கொண்டு அலசி ஆராயும் நமது சமூகத்தில் நமது பண்டைய இலக்கியங்களையும் இலக்கணங்களையும் செய்யுட்களையும் காப்பியங்களையும் அச்சு வடிவுக்குக் கொண்டு வந்த தமிழறிஞர்களை அறியாத, அறிந்து கொள்ள ஆர்வம் காட்டாத சமூகமாக நமது சமூகம் இருப்பது தெளிவு. குறிப்பாக மாணவர்கள் சூழலில் இத்தகைய விஷயங்களை அவர்கள் அறிந்திருக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதும் இதில் எள்ளலவும் அக்கறையின்மையினையே காண்கின்றோமே என்பதுவும் ஒரு  வகையில் ஏமாற்றத்தைக் கொடுப்பதாக அமைகின்றது.

அச்சு வடிவத்தில் நூல் பதிப்பு முறை எனும் போது பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை மிகக் கட்டுப்பாடான கடுமையான நெறிமுறைகளை தமது அச்சுப் பதிப்பாக்க முயற்சிகளில் மேற்கொண்டிருந்தார் என்பதை டாக்டர்.ராதா செல்லப்பனின் ஆய்வு நெறியும் வையாபுரியும் என்ற நூலிலும் பு.ஜார்ஞ் அவர்களின் பேராசிரியர் ச.வையாபுரியின் பதிப்புப்பணி என்ற நூலிலும் காண்கின்றோம். ராவ்பகதூர் சி.வை தாமோதரம் பிள்ளை, உ.வே.சா., ஆறுமக நாவலர்  போன்றோர் ஒன்றுக்குப் பலவாக ஒரே நூலின் ஏட்டுப் பிரதிகளை வாசித்து அதனில் சரியானவற்றை மட்டுமே தேர்ந்தெடுத்து பதிப்பித்து வந்தனர். இப்படி பல தமிழறிஞர்கள் உழைத்து நமக்களித்த தமிழ்ச்செல்வங்களே இன்றைக்கு நமக்கு கிடைத்திருக்கின்றன.

அச்சுப் பதிப்புக்கு வரும் வேளையில் பிழை நிறைந்த அல்லது செய்யுட்கள் விட்டுப்போன, அல்லது இடைச்சேர்கைகள் நிறைந்த ஓலைசுவடிகளைப் பிழைகளுடன் அச்சுப் பதிப்புக்குக் கொண்டு வந்த நிலையையும் காண்கின்றோம். ஒரு நூல் அச்சு வடிவத்திற்கு வந்து விட்டதென்றால் அத்துடன் அப்பணி நிறைவடைந்தது என்று எடுத்துக் கொள்ளவும் முடியாத நிலை இதனால் ஏற்படுகின்றது. தொடர்ந்து நூலை ஆய்வது, கால ஆய்வு செய்வது, பாடலின் பொருள் பொருந்தும் வகையுள்ளமையை நிர்ணயிப்பது போன்றவை தொடர்ந்த முயற்சிகளாக நடைபெற வேண்டியதும் இதனால் அவசியமாகின்றது.

என் சரித்திரம் நூலில் ஒரு சம்பவத்தை உ.வே.சா குறிப்பிடுகின்றார். அக்காலகட்டத்தில் அச்சுப்பதிப்பாக வெளிவந்திருந்த பெரிய புராணத்தை பாடம் கேட்கும் போது அவருக்கு ஒரு அனுபவம் இப்படி அமைகின்றது.

"  என் ஆசிரியரும் சலிப்பின்றிப் பாடம் சொல்லி வந்தார். நாங்கள் அக்காலத்திற் கிடைத்த அச்சுப் புஸ்தகத்தை வைத்துப் படித்து வந்தோம். கண்ணப்ப நாயனார் செயலைக் கண்டு சிவகோசரியார் வருத்தமுற்றதாகச் சொல்லும் சந்தர்ப்பம் வந்தது. நாங்கள் மேலே படித்தோம். உடனே பிள்ளையவர்கள், “இங்கே சில செய்யுட்கள் இருக்க வேண்டும். சிவபெருமான் கண்ணப்ப நாயனாரது அன்பின் பெருமையைச் சிவகோசரியாருக்கு வெளியிடுவதாக அமைந்துள்ள பகுதியில் சில அருமையான செய்யுட்களைப் பதிப்பிக்காமல் விட்டு விட்டார்கள்” என்று சொல்லித் தம் பெட்டியில் இருந்த பெரியபுராண ஏட்டுப் பிரதியை என்னை எடுத்து வரச்செய்து அதனைப் பிரித்துப் பார்த்தார். அவர் கூறியபடியே அங்கே ஐந்து செய்யுட்கள் காணப்பட்டன. அவற்றைப் படிக்கச் செய்து பொருள் கூறினார். நாங்கள் யாவரும் அந்த உயிருள்ள புஸ்தகசாலையின் ஞாபகசக்தியை அறிந்து வியந்தோம்."

ஆசிரியரின் ஞாபகசக்தியை வியந்து போற்றும் உ.வே.சாவைக் காணும் அதே வேளையில் இவ்வகையில் விடுபட்டுப் போன செய்யுட்கள் கொண்ட வகையில் அச்சு நூற்கள் வெளிவந்தமை பற்றிய தகவல்களும் இவ்வகைக் குறிப்புக்களினால் அறிந்து கொள்ள முடிகின்றது.

தொடரும்...

சுபா

Saturday, February 2, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 42



அன்பை வகைப்படுத்தி அதற்கு ஒரு பெயர் கொடுத்து அதற்கு சில நியதிகளைக் கற்பித்து ஒரு வரையறையை உருவாக்கி சமூக சூழலில் அதனை எளிமைப் படுத்திக் கொள்ள பெரும்பாலும் நம் மனம் விரும்புகின்றது. அன்பில் கூட தாயின் அன்பு உயர்வா? தந்தையின் அன்பு உயர்வா? எனக் கேட்பதும் உறவுகளுக்கும் நட்புக்கும் இடையிலான அன்பின் அளவை சோதிப்பதிலும் சமூகம் என்றும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றது. குடும்பங்கள் எனும் போது எந்த எதிர்பார்ப்புமற்ற அன்பு என்பது குடும்ப உறுப்பினர்களுக்குள்ளே என்றும் இருக்கும் என்ற ஒரு நம்பிக்கையையும் சமூகம் ஏற்படுத்தி விட்டது. இந்த நம்பிக்கை  பல சூழ்நிலைகளில் ஏமாற்றங்களைத் தரும் போது  வாழ்க்கைப் பாடங்களாக அவை அமைந்து நம்மை சிந்திக்க வைக்கின்றன.

அன்பை பரிமாறிக்கொள்ளவும், உணரவும், அனுபவிக்கவும், காரணங்கள் கற்பிக்கக்கூடிய வகையில் அமைந்த ஒரு பந்தம் ஒன்றால் மட்டுமே இயலும் என நம்பிக்கொள்வது பல வேளைகளில் மனித சமூக சிந்தனைகளை அறிந்து கொள்வதற்கும் வகைப்படுத்தலுக்கும் எளிமையாக இருக்கலாம். ஆனால் வகைப்படுத்தக் கூடிய உறவுகளுக்குள் மட்டுமே அமைந்து விடுவதல்ல அன்பு என்பதை வாழ்க்கைப் பாதையில் மனிதர்கள் நாம் நம் அனுபவங்களின் வழியாக பல முறை பல்வேறு வகை பாடங்களை அனுபவக் கல்வியாகக் கற்றுக் கொண்டே வருகின்றோம்.

ஆசிரியர் மாணவர் என்ற அடிப்படையிலான அன்பு என்பதைக் கடந்து அதிலும் மேலான ஒரு பிணைப்பினை உ.வே.சாவிற்கும் பிள்ளையவர்களுக்கும் இடையில் நான் காண்கின்றேன். இது  பிள்ளையவர்கள் அவர் தம் மாணாக்கர்கள் மேல் கொண்ட அளவற்ற அன்பின் காரணத்தால் வந்ததா? அல்லது உ.வே.சாவிற்கு பிள்ளையவர்கள் மேல் கொண்ட பிரமிப்பின் அடிப்படையில் எழுந்ததா? என்றெல்லாம் காரண காரியம் கற்பித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதை விட இவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு ஆழமான அன்பு இருந்தது என்பதும் அதன் ஆழம் எல்லையற்றதாக இருந்தது என்பதும் இது என் சரித்திரம் எனும் இந்த நூலை அதன் ஆழம் அறிந்து வாசிக்கும் வாசகர்களையும்  உணரத்தக்கதாக அமைந்திருக்கின்றது என்பதையும் நிச்சயம் நான் குறிப்பிட வேண்டும்.

மிக முக்கியமாக, பிள்ளையவர்களின் இறுதிக்கட்ட நிகழ்வில் இதனை நாம் உணர்ந்தாலும் ஆங்காங்கே உ.வே.சா பிள்ளையவர்கள் மேல் தான் கொண்டிருந்த எல்லையற்ற பாசத்தை எழுத்தில் காட்டி விடுகின்றார். உதாரணமாக அத்தியாயம் முப்பத்து மூன்றைச் சொல்லலாம்.

இந்த அத்தியாயத்தில் உ.வே.சா 17.7.1871ம் ஆண்டில் தனக்கு ஒரு இளைய சகோதரன் பிறந்த நிகழ்வைக் கூறுகின்றார். இச்சமயத்தில் பிறந்த குழந்தையையும் நெடு நாட்களாகப் பிரிந்திருக்கும் தாயையும் மனைவியையும் ஏனைய குடும்பத்தாரையும் பார்க்கச் செல்லும் நிகழ்வினையும் குறிப்பிடுகின்றார். இச்செய்தியைப் பிள்ளையவர்களுக்கு நேரில் சொல்லி உ.வே.சாவை கையோடு சூரியமூலைக்கு அழைத்துச் செல்கின்றார் தந்தையார். சூரியமூலையில் சில நாட்கள் செல்கின்றது. குடும்பத்தாரோடு இருக்கும் காலகட்டத்திலும் அவர் மனம் பிள்ளையவர்களை நினைக்கின்றது. அவரே சொல்கின்றார் இப்படி.

"தமிழ்ப்பாடம் ஒருபுறம் இருக்க, பிள்ளையவர்களைப் பிரிந்திருப்பதில் என் உள்ளத்துக்குள் ஒரு விதமான துன்பம் உண்டாகியிருப்பதை உணர்ந்தேன். தாயார் தகப்பனார் முதலியவர்களோடு சேர்ந்திருப்பதனால் உண்டாகிய சந்தோஷ உணர்ச்சியினூடே அந்தத் துன்ப உணர்ச்சி தலைகாட்டியது. இப்புதிய அனுபவத்தில் எனக்கு ஓர் உண்மை புலப்பட்டது: “ஆண்டவன் என் ஆசிரியர் உள்ளத்திற்கும் என் உள்ளத்திற்கும் மிகவும் நுண்மையான பிணைப்பை அன்பினால் உண்டாக்கிவிட்டான். அப்பிணைப்பு என்னை அறியாமலே என்னைக் கட்டுப்படுத்திவிட்டது! அவர் எனக்காகப் பிரார்த்திக்கிறார். நான் என் தாயார் அருகிலிருந்தும் அவரருகில் இல்லாத குறையை உணர்கிறேன்” என்பதுதான் அது. “இந்த அன்பு நிலைத்திருக்க வேண்டும்” என்று அந்தரங்க சுத்தியோடு நான் பிரார்த்தித்தேன். "

தொடரும்...