Thursday, May 30, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 51

ஒரு நூல் உருவாக்கம் பெற்று முழுமை அடைவது என்பது ஒரு ஆபூர்வமான விஷயம் தான். இது எப்படி அபூர்வமான ஒன்றாகலாம் என சிலர் நினைக்கலாம்.  பலருக்கும்    திடீரென்று ஒரு மாயஜாலத்தைச் செய்வதும் அதனால் கண்களுக்கு ஒரு வித்தியாசத்தைக் காட்டி மறைப்பதும் அபூர்வமான விஷயங்களாகப் படலாம். எனக்கு பொதுவாகவே இப்படிப்பட்ட விஷயங்கள் அபூர்வம் என்ற வரையறைக்குள் சென்று சேர்வதில்லை. ஒரு கருத்து உதிக்க, அது சிந்தனைக்குள்ளே ஒரு வடிவம் பெற்று பின்னர் இடையில் ஒலியாக உருவம் கொண்டு பின்னர் எழுத்தாக வடிவம் பெற்று முழுமை பெற்று சீரான கருத்துக்குவியலாக வந்து சேர்ந்து முழுமை பெறுவது ஒரு அபூர்வமான விஷயம் அல்லவா?

கடந்த வார இறுதியில்தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடாக மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் திரு அம்பர் புராணத்தை வெளியிட்டிருந்தேன். திருவாவடுதுறை மடத்தில் நேரில் சென்று தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னாக்கப் பணியினால் பொது மக்கள் வாசித்துப் பயன்பெறும் வண்ணம் பிள்ளையவர்களின் நூல்களை மின்பதிப்பாக்கம் செய்து வைக்க அவர்களின் ஒத்துழைப்பை நாடிய போது மடத்தின் நிர்வாகத்தினர்  சம்மதம் கொடுத்தனர். அவர்களின் ஒத்துழைப்பினால் மடத்தின் நூலகத்தின் புராண நூல்களில் தேடி அவற்றை எடுத்து நூலின் ஒவ்வொரு பக்கங்களையும் மின்பதிப்பு செய்தோம்.

அதில் குறிப்பிடத்தக்க ஒரு நூல் இந்தத் திரு அம்பர்புராணம். நான் என்னிடம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த பட்டியலில் திருஅம்பர்புராண நூலின் பெயரையும் குறித்து வைத்திருந்தேன். மண்டபத்தின் தலபுராண அல்லது புராண நூல்களின் பட்டியலில் இருக்கும் ஏறக்குறைய இரண்டாயிரம் நூல்களின் பெயர்களில் திருஅம்பர்புராணத்தின் பெயரை கண்டுபிடித்து அது இருக்கும் அலமாரி எண்ணைச் சென்று பார்த்து தேடினால் வரிசையில் புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கவில்லை. ஆனாலும் கையில் வைத்துக் கொண்டிருந்த டார்ச் லைட்டைக் கொண்டே தேடுதல் பணியைச் செய்தோம். முதல் நாள் நூல் கிடைக்கவில்லை. மறுநாள் சென்ற போது மின்சாரமும் இருந்ததால் திருஅம்பர்ப்புராணத்தோடு மேலும் இரண்டு நூல்களும் கூட கிடைத்தன.

இந்தத் திரு அம்பர்ப்புராணத்தை நான் தேடியதற்குக் காரணம் ஏற்கனவே நான் என் சரித்திரம் நூலில் இந்த நூலைப் பற்றி வாசித்திருந்தமையால் தான்.ஒரு வரலாற்று விஷயம் சுவாரசியமாகப் பதிவாக்கப்பட்டிருக்கும் போது அதனை மேலும் அருகில் சென்று அறிந்து கொள்ள மனம் மிகுந்த ஈடுபாடு காட்டுகின்றது. அந்த உந்துதலில் இந்த நூலை திருமடத்திலேயே பார்த்து விட வாய்ப்பமைந்தால் எவ்வளவு  சிறப்பாக இருக்கும் என நினைத்துச் சென்றது வீண் போகவில்லை. அத்தியாயம் 45லும் 46லும் திருஅம்பர்புராணத்தைப் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. அதனை மீண்டும் வாசித்து இப்பதிவில் இணைப்பதும் இந்த நூலைப் பற்றிய மேலதிக விபரத்தை அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு உதவலாம்.

திருஅம்பர்புராணம் உ.வே.சா அவர்கள் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் மாணவராக இருந்த போது எழுதி முற்றுப் படுத்தப்பட்ட ஒரு நூல். ஏற்கனவே தொடங்கி செய்யுள்களை எழுதியிருந்தார். ஆனாலும் நூல் முற்றுப் பெறவில்லை. திருவாவடுதுறையிலும் திருமடத்திலும் தான்  இந்த நூல் முழுமை அடைந்தது. இது முழுமை பெற்ற விதத்தை என் சரித்திரத்தின் குறிப்பிலிருந்தே  வாசிப்போமே.

" ஒரு நாள் ஆசிரியர் தம் புஸ்தகக் கட்டில் உள்ள ஒர் ஏட்டுச் சுவடியை எடுத்து வரச் சொன்னார். அவர் முன்னமே பாடத் தொடங்கி ஓரளவு எழுதப்பெற்று முற்றுப் பெறாதிருந்த அம்பர்ப் புராண ஏட்டுச் சுவடி அது; ‘திருவம்பர்’ என்னும் தேவாரம் பெற்ற சிவஸ்தல வரலாற்றைச் சொல்லுவது. அதை முதலிலிருந்து என்னைப் படித்து வரும்படி சொன்னார். நான் மெல்லப் படித்தேன். அவ்வப்போது சில திருத்தங்களை அவர் சொல்ல அவற்றை நான் சுவடியிற் பதிந்தேன். இரண்டு மூன்று தினங்களில் அதில் உள்ள பாடல்கள் முழுவதையும் படித்துத் திருத்தங்களும் செய்தேன். “இந்த நூலை ஆரம்பித்து ஒரு வருஷமாகிறது. அடிக்கடி இடையூறு ஏற்படுகிறது. இதை முன்பு நான் சொல்லச் சொல்ல ஒருவர் எழுதினார். அவர் திருத்தமாக எழுதக் கூடியவரல்லர். நான் ஏதாவது சொன்னால் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் சில இடங்களில் வேறாக எழுதியிருக்கிறார். இப்படி இவர்
செய்திருப்பாரென்று சந்தேகப்பட்டுத்தான் மறுபடியும் படிக்கச் சொன்னேன். சொல்வதைச் சரியாக எழுதுவோர் கிடைப்பது அருமையாக இருக்கிறது” என்று சொல்லிவிட்டு, “இனி இந்தப் புராணத்தை விரைவில் முடித்துவிடவேண்டும். நீர் ஏட்டில் எழுதலாமல்லவா?” என்று என்னை ஆசிரியர் கேட்டார்."

இதனைச் செய்யக் காத்திருக்கின்றேன் என்றுகூறிய உ.வே.சாவிடம் விரைவில் திருவாவடுதுறை சென்று அங்கே காத்திருக்கும் தம்பிரான்களுக்குப் பாடம் சொல்லும் போது இந்த நூலை முடித்து விடலாம் என்று பிள்ளையவர்கள்  கூறிவிட்டார்கள். இதில் உ.வே.சாவுக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சி.

புறப்பட்டு  மாயூரம் எல்லையைத் தாண்டிமாட்டு வண்டியில் திருவாவடுதுறை சென்று கொண்டிருக்கும் போது பிள்ளையவர்களுக்கு ஏதோ சிந்தனை. அருகில் சவேரிநாதப் பிள்ளையும் உ.வே.சாவும் இருக்கின்றனர்.

" “அம்பர்ப் புராணச் சுவடியை எடும்” என்று ஆசிரியர் கூறவே நான் அதனை எடுத்துப் பிரித்தேன். “எழுத்தாணியை எடுத்துக் கொள்ளும்” என்று அவர் சொன்னார். நான், “முன்னமே முழுவதையும் வாசித்துக் காட்டித் திருத்தங்களைப் பதிந்தோமே” என்று எண்ணினேன்.

ஏட்டைப் பிரித்து அம்பர்ப் புராணத்தில் எழுதப் பெற்றிருந்த இறுதிச் செய்யுளை வாசிக்கச் சொன்னார். பிறகு சிறிது நேரம் ஏதோ யோசித்தார். அப்பால் புதிய பாடல்களைச் சொல்ல ஆரம்பித்தார். “பெரிய ஆச்சரியமாக அல்லவா இருக்கிறது இது? வண்டியிலே பிரயாணம் செய்கிறோம். இப்போது மனம் ஓடுமா? கற்பனை எழுமா? கவிகள் தோன்றுமா? அப்படித் தோன்றினாலும் நாலைந்து பாடல்களுக்கு மேற் சொல்ல முடியுமா?” என்று பலவாறு நான் எண்ணமிடலானேன். 

அவர் மனப் பாடம் பண்ணிய பாடல்களை ஒப்பிப்பது போலத் தடையின்றி ஒவ்வொரு செய்யுளாகச் சொல்லி வந்தார். வண்டிமெல்லச் சென்றது. அவருடைய கவிதை வெள்ளமும் ஆறு போல வந்துகொண்டிருந்தது. என் கையும் எழுத்தாணியை ஓட்டிச் சென்றது. வண்டியின் ஆட்டத்தில் எழுத்துக்கள் மாறியும் வரிகள் கோணியும் அமைந்தன. அவர் சொன்ன
செய்யுட்களோ திருத்தமாகவும் பொருட் சிறப்புடையனவாகவும் இருந்தன."

இந்தத் தலபுராணம் ஒரு சிவஸ்தலத்தின் சிறப்பை மட்டும் விளக்குவதன்று. தான் பார்த்து வழிபட்ட பல சிவஸ்தலங்களின் அருமை பெருமைகளை உட்புகுத்தி இதனை ஒரு சிவஸ்தலக் கருவூலமாக தனது செய்யுள்களின் வழியாக பிள்ளையவர்க்ள் உருவாக்கித் தந்திருக்கின்றரகள். வட இந்தியாவிலிருந்து நந்தன் எனும் ஒரு அரசன் திருஅம்பர் சிவஸ்தலத்தில் வழிபட்டுச் செல்ல வந்து போகும் போது வழியில் தான் காணும் சிவஸ்தலங்களையெல்லாம் தரிசித்து அவற்றைப் பற்றி கூறுவது போல அமைந்தது இந்தப் புராணம்.தனது அனுபவத்தில் தனது தேடலில் தான் சேகரித்து வைத்திருக்கும் விஷயங்களை ஒரு கதாபாத்திரத்தின் வாயிலாக வெளிப்படுத்தும் வகையில் சிவாலயங்களின் பெருமைகளை தலபுராணம் என்னும் வடிவில் உருவாக்கியிருக்கின்றார் பிள்ளையவர்கள்.

உ.வே.சா தனது வியப்பை மேலும் இப்படிக் குறிப்பிடுகின்றார்.

"வண்டியிலே போவதை நாங்கள் மறந்தோம். தம் கற்பனா உலகத்தில் அவர் சஞ்சாரம் செய்தார். அங்கிருந்து ஒவ்வொரு செய்யுளாக உதிர்த்தார். அவற்றை நான் எழுதினேன். எனக்கு அவருடைய உருவமும் அவர் கூறிய செய்யுட்களுமே தெரிந்தன. வேறொன்றும் தெரியவில்லை. ஒரு பாட்டை அவர் சொல்லி நிறுத்தியவுடன் சில சில சமயங்களில் அந்த அற்புத நிகழ்ச்சிக்குப் புறம்பாக நின்று நான் சில நேரம் பிரமிப்பை அடைவேன். ஆனால் அடுத்த கணமே மற்றொரு செய்யுள் அவர் வாயிலிருந்து புறப்பட்டு விடும். மீண்டும் நான் அந்த நிகழ்ச்சியிலே கலந்து ஒன்றி விடுவேன். "

இப்படி பிரயாணத்தின் போதே திருஅம்பர்ப்புராணம் வளர திருவாவடுதுறை மடத்தின் வாயிலை வந்தடைந்து விடுகின்றனர்.

" “சரி, சுவடியைக் கட்டிவையும்; பின்பு பார்த்துக் கொள்ளலாம்” என்று ஆசிரியர் உத்தரவிட்டார். அவரை வாயாரப் பாராட்டிப் புகழும் நிலையும் அதற்கு வேண்டிய ஆற்றலும் இருக்குமாயின் அப்போது நான் ஒர் அத்தியாயம் சொல்லி என் ஆசிரியர் புகழை விரித்து என் உள்ளத்தே இருந்த உணர்ச்சி அவ்வளவையும் வெளிப்படுத்தியிருப்பேன். அந்த ஆற்றல் இல்லையே! " 

இப்படி ஒரு பயணத்தின் போது உருவாகிய  திருவாவடுதுறை மடத்தில் முற்றுப் பெற்ற இந்த நூலை திருவாவடுதுறை மடத்திலேயே நேராகப் பெற்று மின்னாக்கம் செய்த போது என் உள்ளம் அளவில்லா மகிழ்ச்சியில் நிறைந்தது. இந்த இரண்டு பெரியோர்களின் சிந்தனை என்னை முழுமையாக ஆக்கிரமித்திருக்க இந்த நூலை மின்னாக்கம் செய்து முடித்தேன், தமிழ் மரபு அறக்கட்டளையின்  மின்னூல்கள் வரிசையில் இடம் பெறும் இந்த நூலின் உள்ளடக்கம் மட்டுமன்றி இந்த நூல் உருவான வரலாறும் கூட வித்தியாசமானது தான். அதனை உணர்ந்து வாசிக்கும் போது ஒரு பரவசம் மனதில் ஏற்படத்தான் செய்கின்றது.

திருஅம்பர் புராணம் நூலை வாசிக்க இங்கே செல்க!


தொடரும்..

சுபா

Sunday, May 19, 2013

Robert Langdon is back..! -1


http://www.npr.org/2013/05/18/183902954/dan-brown-inferno-is-the-book-that-i-would-want-to-read

டான் ப்ரவ்னின் புதிய நூல் Inferno வெளிவந்து விட்டது. டான் ப்ரவுன் நூல் விசிறிகளுக்கு இது மேலும் ஒரு பெரிய பரிசாக அமையும்.. டா வின்சி கோட் தொடங்கி ஹார்வெர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ரோபெர்ட் லாங்டன் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணமும் ஆய்வுகளும் தேடல்களும்  பயங்கர அனுபவங்களும் அவை அனைத்தும் தொடர்பு கொண்டுள்ளதாய் அமையும் சமய பின்புலங்களும் இந்த நாவல்களின் மையமாக அமைந்திருக்கும்.

இம்முறை வெளிவந்திருக்கும்  Inferno - 14ம் நூ இலக்கியவாதி Dante கவிதைகளை மையமாகக் கொண்டுள்ளதாகவும் அதற்காக இத்தாலியின் ப்ளோரன்ஸ் மானிலத்தில் பல மாதங்கள் ஆய்விற்கு செலவிட்டு இந்த நூலை எழுதியிருப்பதாகவும் தெரிகின்றது.  ப்ளோரன்ஸ் ஒரு மிஸ்டிக்கல் நகரம். இவ்வாண்டு 4 நாட்களை அங்கு நான் செலவு  செய்தேன். 11 - 15ம் நூற்றாண்டு வரை இத்தாலிக்கு மட்டுமல்லாது ஐரோப்பிய கத்தோலிக்க மதப்பரப்பலுக்கு மையமாக திகழ்ந்த நகரம் இது. இன்றும் இதன் சிறப்பு ஈடு செய்ய முடியாதது.

நூலைப் பற்றிய மேல் தகவல்களுக்கு...
http://www.danbrownofficial.co.uk/?gclid=CMTexOW2orcCFerHtAodK3wA3A டான் ப்ரவ்னின் அதிகாரப்பூர்வ இணைய பக்கங்களில் ஒன்று.

ஒரு நூலை நேற்று அமேஸோன் பக்கத்தில் வாங்கியிருக்கின்றேன்.


சுபா

Saturday, May 18, 2013

மனம் எந்த விதமான நிலையிலிருந்தாலும் மலர்களைப் பார்க்கும் போது புத்துணர்ச்சி தோன்றும்.

இன்று சிலருக்கு பிறந்த நாளாக இருக்கலாம். சிலருக்குப் பொழுது மிக மனம் நிறைந்து  மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்திருக்கலாம்.சிலருக்கு ஏமாற்றம் தரும் வகையில் இருந்திருக்கலாம், சிலருக்கு கவலையும் வேதனையும் தோல்வியும் கூட அமைந்திருக்கலாம்.

எல்லாருக்கும் இன்றைய நாள் இனிய நாளாக அமைய எனது தோட்டத்து டூலிப் மலர்களை இங்கே தருகின்றேன்.









டூலிப்களில் பல விதங்களைச் சோதனை செய்ய நினைத்து சென்ற ஆண்டு நட்டு வைத்த முயற்சியின் பலனாக அமைப்பிலும் வர்ணத்திலும், வடிவத்திலும் வெவ்வேறு வகையான மலர்கள் தோட்டத்தில்  இப்போது மலர்ந்து எழில் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

சுபா

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 50


வாசிக்கும் போதே அந்த சூழலில் நம்மையும் இருக்கின்றபடி செய்துவிடும் தன்மை கொண்டது இந்த என் சரித்திரம் நூல். பல நேரங்களில் கதை சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு நண்பருடன் இணைந்து உலா வருவது போலத்தான் நான் இதனை வாசிக்கும் போது உணர்கின்றேன். இதனை வாசித்திருக்கும் ஏனையோருக்கும் கூட இப்படி ஒரு உணர்வு தோன்றியிருக்கலாம்.

சில நேரங்களில் சில பகுதிகளைப் படிக்கும் போது நான் சிரித்துக் கொள்வதுண்டு. அவ்வளவு ஹாஸ்யமான விஷயங்களைச் சீரியஸாக சொல்வது போல எழுதியிருக்கின்றார் உ.வே.சா. இது ஒரு ரசிக்கத்தக்க எழுத்து நடைதான்!

45ம் அத்தியாயத்தில் செய்யுள் தானம் என்ற ஒரு பகுதி உள்ளது. குருபூஜை நிகழ்வுகளின் பதிவுகளின் தொடர்ச்சி அது. இதில் ஒரு சுவாரசியமான நிகழ்வு. இதனைப் பற்றி இன்றைய பதிவு அமைகின்றது.

குருபூஜை நிகழ்வுகளெல்லாம் முடிந்து விழாவில் பங்கெடுத்துக் கொள்ள வந்திருந்த பல்வேறு கலைஞர்கள், வித்துவான்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், கனவான்கள் என அனைவரும் திருவாவடுதுறை மடத்திற்கு வந்து குருமகா சன்னிதானத்திடம் குடும்பத்துடன் வந்து விடைபெற்றுச் செல்லும் சடங்கு அது. வந்திருப்போர் எல்லோருக்கும் அவர்களின் பங்களிப்புக்கு ஏற்ற வகையில் அவர்களுக்குச் சன்மானம் வழங்கி அவரகளை வழி அனுப்பி வைப்பதும் சன்னிதானத்தின் சடங்கு முறையில் அடங்கும். அந்த வகையில் ஒவ்வொருவராக அம்மாலை வேளையில் வந்து ஆதீன கர்த்தரைச் சந்தித்து அவருக்கு மரியாதைச் செலுத்தி விடைபெற்றுச் செல்லும் போது சன்மானமும் பெற்றுச் சென்று கொண்டிருந்தனர். மாலை கடந்து இரவு வேளையும் வந்து விட்டது.

இப்படி சன்னிதானத்திடம் சன்மானம் பெற்றுச் செல்ல வருபவர்களைப் பற்றியும் மடத்தின் கொடையைப் பற்றியும் பிள்ளையவரகளும் ஏனையோரும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தும் கேட்டும் உ.வே.சாவிற்கு ஆச்சரியமாக இருக்கின்றது. ஆசிரியர் பக்கத்திலேயே அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றார். அப்போது அங்கே ஒரு பெரியவர் வந்து பிள்ளையவர்களிடம் பேசி தனக்கு ஒரு பாடல் எழுதித்தருமாரும் அதனைச் சன்னிதானத்திடம் பாடிக்காட்டி சன்மானம் பெற விரும்புவதாகவும் கூற பிள்ளையவர்களும் ஒரு பாடலை எழுதிக் கொடுத்து விட்டு உறங்க ஆரம்பிக்கின்றார்.

சற்று நேரத்தில் இன்னொருவர் வந்து தனக்கு ஒரு செய்யுள் வேண்டும் என்று கேட்கின்றார். முன்னவர் சொன்ன அதே தேவைதான். பிள்ளையவர்களும் அவருக்கும் ஒரு பாடல் எழுதிக் கொடுத்து விட்டு உறங்கச் செல்கின்றார். ஆனால் மக்கள் அவரை விட்ட பாடில்லை. ஒவ்வொருவராக வந்து பாடல் எழுதித்தரச் சொல்லி கேட்டுக் கொண்டேயிருக்கையிலேயே உ.வே.சா உறக்கம் கொண்டு தூங்கி விடுகின்றார். மறு நாள் விடியற்காலையில் எழுந்த போது இந்த சேவை தொடர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றார்.

இங்கே ஆசிரியரிடம் செய்யுள் பெற்றுச் சென்றவர்கள் அங்கே சன்னிதானத்திடம் சென்று வணங்கி  வாசித்துக் காட்டி சன்மானம் பெற்றுச் செல்லும் செயலும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. இடையில் சுப்ரமண்ய தேசிகரும் ஸ்னானம் முடித்துக் கொண்டு மீண்டும் தொடர்ந்து சன்மானம் வழங்கும் சடங்கைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்.

பிள்ளையவர்கள் உ.வே.சா மற்றும் சிலருடன் அவ்விடத்திற்குச் செல்கின்றார். பிள்ளையவர்களைப் பார்த்த சுப்ரமணிய தேசிகரின் முகத்தில் புன்னகை. இந்த இடத்தில் நடக்கும் உரையாடல் வாசிப்போரையும் சிரித்து விட வைக்கின்றது.

“இராத்திரி பலபேர் தங்களுக்குச் சிரமம் கொடுத்து விட்டார்கள்போல இருக்கிறதே!” என்று தேசிகர் கேட்டார். ஆசிரியர் புன்னகை பூத்தார்.

ஒவ்வொருவர் கொண்டு வந்த  செய்யுளும் பிள்ளையவர்கள் இயற்றிய செய்யுள் தான் என்பது சுப்ரமண்ய தேசிகருக்கு நன்கு தெரிந்திருந்தது.

“ஒவ்வொருவரும் பாடல் சொல்லும்போது நமக்குப் பரமானந்தமாகி விட்டது. என்ன பாட்டு! என்ன வாக்கு! எங்கிருந்துதான் விளைகிறதோ!” என்றார் தேசிகர்.

“எல்லாம் மகாஸந்நிதானத்தின் திருவருட் பலந்தான்” என்று பணிவோடு கூறினார் ஆசிரியர்.

“நாச்சலிக்காமல் பாடும் உங்கள் பெருமையை நேற்று இரவு நன்றாகத் தெரிந்து கொண்டோம்”

“கை சலிக்காமல் கொடுக்கும் ஸந்நிதானத்தின் கொடையினால் தான் எல்லாம் பிரகாசப்படுகின்றன.”

புலவரும் புரவலரும் பேசிக்கொள்ளும் வார்த்தைகளுக்கு அளவுண்டோ?

என்று குறிப்பிடுகின்றார் உ.வே.சா.

பாடல்கள் எழுதியது பிள்ளையவர்கள் தான் என்பது தெரிந்திருந்தும் சன்மானம் எதிர்பார்த்து வந்து நிற்பவர்கள் மனம் கலங்காமல் சன்மானம் அளித்து உற்சாகப்படுத்திய சன்னிதானத்தின் பண்பை  நினைத்து வியக்கும் அதே வேளை தன் புலமைக்கு உரிமை கொண்டாடும் எண்ணம் சிறிதும் இல்லாமல் எல்லோரும் நன்மை பெறட்டும் என தன் உடலை வருத்தித்  தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு வந்து கேட்டவர்களுக்கெல்லாம் பாடல்கள் எழுதித் தந்த பிள்ளையவர்களின் செயலை நானும் வியக்கின்றேன்.

தொடரும்..
சுபா

என் வீட்டுத் தோட்டத்தில்


மனம் எந்த விதமான நிலையிலிருந்தாலும் மலர்களைப் பார்க்கும் போது புத்துணர்ச்சி தோன்றும்.

இன்று சிலருக்கு பிறந்த நாளாக இருக்கலாம். சிலருக்குப் பொழுது மிக மனம் நிறைந்து  மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்திருக்கலாம்.சிலருக்கு ஏமாற்றம் தரும் வகையில் இருந்திருக்கலாம், சிலருக்கு கவலையும் வேதனையும் தோல்வியும் கூட அமைந்திருக்கலாம்.

எல்லாருக்கும் இன்றைய நாள் இனிய நாளாக அமைய எனது தோட்டத்து டூலிப் மலர்களை இங்கே தருகின்றேன்.






டூலிப்களில் பல விதங்களைச் சோதனை செய்ய நினைத்து சென்ற ஆண்டு நட்டு வைத்த முயற்சியின் பலனாக அமைப்பிலும் வர்ணத்திலும், வடிவத்திலும் வெவ்வேறு வகையான மலர்கள் தோட்டத்தில்  இப்போது மலர்ந்து எழில் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

சுபா

Friday, May 17, 2013

என் வீட்டுத் தோட்டத்தில்



இன்று மேலும் ஒரு வசந்த கால செடி வகையின் படத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். என் தோட்டத்தில் சென்ற வார இறுதியில் எடுத்த  படங்கள்.


இது நார்ஸீஸன் அல்லது wild Daffodil  என்ற பெயர் கொண்டது. பொதுவாக முழுதும் மஞ்சளாக, அல்லது மஞ்சளில் ஆரஞ்சு கலந்து, வெள்ளையில் மஞ்சள் கலந்து அல்லது வெள்ளையில் மஞ்சள் கலந்து என அமைந்திருக்கும்.

ஐரோப்பாவில் ஜெர்மனி, ஸ்பெயின், போர்த்துக்கல், இங்கிலாந்து  ஆகிய நாடுகளில் அதிகம் வசந்த காலங்களில் குறிப்பாக ஏப்ரல் மாததில் மலர்ந்து காட்சியளிக்கும் மலர் வகை இது. இந்த மலர், இச்செடி வகை பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புபவர்கள் விக்கியில் http://en.wikipedia.org/wiki/Narcissus_pseudonarcissus காணலாம்.

டூலிப் மலர்களைப் போலவே இவற்றை வளர்க்க சிறிய வெங்காயங்களை இலையுதிர் கால ஆரம்பத்தில் நட்டு வைக்க வேண்டும். குளிர் காலம் வருவதற்கு முன்னரே செடியின் வெங்காயத்தில் வேர் முளைத்துவிடும். குளிர்காலத்தில் பனிக்குள் எந்த  வளர்ச்சியும் இல்லாது இருந்து பின்னர் வசந்த காலத்தில் நன்கு வளர்ந்து பெரிதாகி பூப்பூக்கும்.


மேலும் சில மலர்களுடன் மீண்டும் வருகின்றேன்.

சுபா

Saturday, May 11, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 49



இன்று மீண்டும் என் சரித்திரம் நூலில்   முன்னர் வாசித்த போது அத்தியாயம் 44க்கு பின்னர் நான் கோடிட்டுக் குறிப்பு எழுதி வைத்திருந்த சில பக்கங்களை  நோக்கினேன். அதில் சில விஷயங்கள் சுவாரசியமாகவும் குருபூஜை நிகழ்வின் தொடர்ச்சியாகவும் அமைந்திருந்தமையால் அந்த நிகழ்வுகளைப் பற்றிய ஒரு பதிவாக இது அமைகின்றது.

குருபூஜை நிகழ்வுக்கு வருவதற்கு முன்னர் தனது உறவினர்களைக் காணச் சென்று  பின்னர் அங்கே உடல் நலம் குன்றி மீண்டும் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இருக்கும் இந்தக் குருபூஜை நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் மண்டபத்த்திற்கு அவரைத்தேடிக் கொண்டு உ.வே.சா வருகின்றார். உடல் நலம் குன்றியமையாலும் நெடுநாள் குடும்பத்தாரோடு இருக்க குருகுல வாசத்தைப் பிரிந்தமையாலும் அவருக்கு ஏற்கனவே மனதில் வருத்தம். அவ்வருத்தத்தோடு அப்பிரிவினால், நெடுநாட்கள் பாடம் கேட்காத நிலை ஏற்பட்டமையால் மனதில் வேதனை உணர்வு நிறைந்திருந்தமையை இந்தஅத்தியாயத்தில்  ஆங்காங்கே விவரிக்கின்றார்.

குருபூஜையில் ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டிருந்த  கச்சேரிகள், இசை நிகழ்ச்சிகள், பேச்சுக்களில் அவரது ஆர்வம் செல்லவில்லை. தன் ஆசிரியரைத் தேடிக் கொண்டு வருகின்றார். ஆசிரியரைத் தேடிக் கண்டுபிடிப்பது அக்கூட்டத்தில் சுலபமான காரியமாக இல்லை. ஒவ்வொரு தெருவாகச் சென்று தேடிச் செல்கையில் தன் நிலையை இப்படி விவரிக்கின்றார்.

" இடையிடையே காண்போரை, ‘பிள்ளையவர்கள் எங்கே தங்கியிருக்கிறார்கள்?” என்று கேட்போம். “அவர்கள் எங்கும் இருப்பார்கள்; பண்டார ஸந்நிதிகளோடு சல்லாபம் செய்து கொண்டிருப்பார்கள்; வித்துவான்கள் கூட்டத்தில் இருப்பார்கள், இல்லாவிட்டால் மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லி வருவார்கள்” என்று விடை கூறுவர். “மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லுவார்கள்” என்பதைக் கேட்கும்போது எனக்கு ஒருவிதமாக வேதனை உண்டாகும். “அக்கூட்டத்தில் சேராமல் இப்படி நாம் தனியே திரிந்து கொண்டிருக்கிறோமே!” என்ற நினைவு எழும். உடனே காலடியை வேகமாக எடுத்துவைப்பேன்."

ஒருவழியாகப் பிள்ளையவர்களை ஒரு மண்டபத்தில் கண்டு சந்தித்ததும் உடல் நலத்தை விசாரித்துச் சாப்பிட்டாயிற்றா? குருபூஜை நிகழ்ச்சிகளைப் பார்த்தாயிற்றா என்று அன்புடன் வினவும் ஆசிரியரின் பண்பையும் இப்பகுதியில் குறிப்பிடுகின்றார்.

“இந்த மாதிரி விசேஷம் எங்கும் இராது. எல்லாம் ஸந்நிதானத்தின்பெருமையினாலும் கொடையினாலுமே நடக்கின்றன.”
“இனிமேல் பாடம் கேட்க வரலா மல்லவா?”

“நான் காத்திருக்கிறேன்.”

“குருபூஜை யானவுடன் மாயூரத்திற்குப் போவேன். அங்கே போனவுடன் பாடம் ஆரம்பிக்கலாம்” என்று ஆசிரியர் கூறியபோது என் உள்ளம் குளிர்ந்தது.”

இது வேண்டும் வேண்டும் என ஒரு விஷயத்தை ஆழமாகத் திடமாகத் தியானித்துக் கொண்டிருக்கும் மனத்திற்கு வேண்டுவன கிடைப்பது என்பது நடக்கமுடியாத விஷயமல்லவே!
பாடம் மயூரத்திற்குச் செல்லும் முன்பே தொடங்கி விட்டது.

எதிர்பாராத விதமாக அன்று மாலையே ஒரு புதிய பாடம் துவங்கியது. மாலை மண்டபத்தில் இவர்கள் இருக்கும் போது அங்கு வந்த குமாரசாமித்தம்பிரானும் பரமசிவத் தம்பிரானும் இந்த நல்ல நாளில் பிள்ளையவர்களிடம்  பாடம் கேட்க தமக்கு விருப்பம் இருப்பதை விண்ணப்பிக்க.. அதற்கென்ன தொடங்குவோம் என அன்றே ஒரு புதிய பாடத்தை ஆரம்பிக்கின்றார் பிள்ளையவர்கள். இருவரும் காசிக் கலம்பகம் கேட்க விருப்பம் தெரிவிக்க காசிக்குச் சென்று வந்த காசிச்சாமியான குமாரசாமித்தம்பிரான் விருப்பத்தை நிறைவேற்ற ஆரம்பிக்கின்றார் ஆசிரியர்.

சுவடி நூலை வாசிக்க இவர்கள் ஒரு குளக்கரைப் பக்கமாக சென்று விடுகின்றனர். அங்கே உ.வே.சாவே நூலை  வாசிக்க காசிக்கலம்பகத்திற்கு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் விளக்கமளிக்கின்றார். இதனை உ.வே.சா  இப்படி விவரிக்கின்றார்.

“அந்தப் பெரிய குருபூஜை விழாவில் வெளியில் அங்கங்கே வாத்திய கோஷங்களும் கொண்டாட்டங்களும் ஸந்தோஷ ஆரவாரங்களும் நிரம்பியிருக்க, நாங்கள் ஒரு குளத்தங் கரையில் சிறிய சவுகண்டியில் காசி மாநகர்ச் சிறப்பையும் கங்கையின் பெருமையையும் ஸ்ரீ விசுவநாதரது கருணா விசேஷத்தையும் காசிக்கலம்பகத்தின் மூலம்
அனுபவித்து வந்தோம். ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் வாக்காகிய அக்கலம்பகம் சொற்சுவை பொருட்சுவை நிரம்பியது. சில காலமாகப் பிள்ளையவர்களையும் தமிழ்ப் பாடத்தையும் விட்டுப் பிரிந்திருந்த எனக்கு அன்று பிள்ளையவர்களைக் கண்ட லாபத்தோடு பாடம் கேட்கும் லாபமும் சேர்ந்து கிடைத்தது.“

பாடங்கேட்டலிலும் தமிழ்க்கல்வியிலும் தீராத விருப்பம் கொண்ட உ.வே.சாவிற்குச் சுற்றுச் சூழலில் நடந்து கொண்டிருக்கும் ஏனைய விஷயங்களில் இல்லாத  ஈர்ப்பும் மன்மகிழ்ச்சியும் இந்தக் காசிக்கலம்பக நூல் பாடம் கேட்டதில் இருந்தமையைக்  காண்கின்றேன். எத்தனையோ விஷயங்கள் நம்மைச் சுற்றிலும் நடந்து கொண்டேதானிருக்கின்றன. ஆனால உள்ளம் தேடும் ஆழ்மன விருப்பம் உள்ள ஒரு சில குறிப்பிட்ட விஷயத்தை மட்டுமே நம மனம் காண்கின்றது. அதனில் மட்டுமே நம் மனம் ஈர்ப்பு பெறுகின்றது; லயிக்கின்றது.

தொடரும்...
சுபா