Thursday, September 26, 2013

Robert Langdon is back..- Church of Dante - 10

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ரோபர்ட் லாங்டன் ஞாபகத்திற்கு வர இன்று மேலும் ஒரு பதிவு.

போபோலி கார்டனைப் பற்றி முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இன்று ஒரு தேவாலயத்தைப் பற்றியதாக இப்பதிவு.

இன்பெர்னோ கதாநாயகன் டாண்டேவின் வாழ்வில் இடம்பெற்ற முக்கிய நிகவுகளில் அவரது காதலியுடனான முதல் சந்திப்பு அவர் மனதை விட்டு அகலாத ஒன்றாகப் பதிந்து அந்த காதல்  நினைவுடனேயே இறந்தார் எனவே குறிப்புக்கள் சொல்கின்றன.. டாண்டேவின் காதலி பியாட்ரிஸ்!

டாண்டே-பியாட்ரிஸ் காதல் நிறைவேறவில்லை. டாண்டேவின் இறுதி காலம் வரை அவர் மனதை விட்டு அகலாமல் மனதில் குடிகொண்டிருந்தவர் பியாட்ரிஸ். இதனை தனது இலக்கியமான  The Devine Cemedy யிலே வெளிப்படுத்துகின்றார் டாண்டே. டாண்டேவைப் போலவே பியாட்ரிஸ் நிலையும் அதுவாகத்தான் இருக்கும் என்பதை நம்மால் ஊகிக்கத்தான் முடியும்.

பியாட்ரிஸ்

இந்தக் காதலர் முதலில் சந்தித்த நேர்ந்த இடம் ஒரு தேவாலயம். The church of Santa Margherita dei Cerchi என்பதே அது. ப்ளோரன்ஸ் நகரின் மைய வர்த்தகப் பகுதியைக் கடந்து ரயில் நிலையம் நோக்கிச் செல்ல முற்படும் போது தென்படும் ஒரு சிறு சாலையில் கட்டிடங்களுக்கிடையே அமைந்திருக்கும் ஒரு தேவாலயம் இது. டாண்டேவின் முக்கியத்துவம் அறியாமலேயே நான் சென்று பார்த்து வந்த இடம் இது எனும் போது ஒரு ஏமாற்றம் மனதில் தோன்றுகின்றது. டாண்டேவின் பின்னனியை அறிந்து கொண்டு இந்த தேவாலயத்தை பார்க்கும் போது இந்த தேவாலயத்தின் ஒவ்வொரு பகுதியும் எனக்கு ஒரு தனி கதை சொல்லும் என்பது உறுதி.

The church of Santa Margherita dei Cerchi  என அழைக்கப்பட்டாலும் Church of Dante  என்றே பரவலாக அறியப்படுவது இது.

பியாட்ரிஸ் -டாண்டே முதல் சந்திப்பு


இந்த தேவாலயம் செர்ச்சி, டோனாட்டி, அடிமாரி ஆகிய குடும்பத்தினருக்குச் சொந்தமான ஒரு தேவாலயம். இதனுள் டோனாட்டி குடும்பத்தினர் சிலரது கல்லறைகளும் உள்ளன.    டாண்டேவின் காதலி பியாட்ரிஸ் போர்ட்டினரி குடும்பத்தைச் சேர்ந்தவர். டாண்டே ஒரு குடும்ப நிகழ்வில் தான் முதல் முதலாக பியாட்ரிஸை இந்த தேவாலயத்தில் காண்கின்றார். முதல் பார்வையே காதலாக மலர்ந்ததாம். ஆனால் அவர் மணந்ததோ கெம்மா டொனாட்டி என்ற பெண்ணை. பியாட்ரிஸின் தந்தை போல்கோ போர்ட்டினரியின் கல்லறையும் இந்த தேவாலயத்தினுள்ளே இருக்கின்றது.


தேவாலயம்

1032ம் ஆண்டில் கட்டப்பட்டதாக இந்த தேவாலயம் அறியப்படுகின்றது. ஆனாலும் கட்டப்பட்டு 400 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு நடைபெறும் நிகழ்வுகளும் அதற்கு மூல காரணமாக இருக்கும் டாண்டேவின் பெயரைச் சொல்லும் ஒரு சிறப்பிடமாக இந்த தேவாலயம் விளங்குவதே ஒரு தனிச்சிறப்பு.

இந்த தேவாலயத்திற்கு மேலும் ஒரு சிறப்பு உண்டு. காதலித்துக் கொண்டிருப்பவர்கள் தங்கள் காதல் நிறைவேற விரும்பி ஒரு கடிதம் எழுதி பியாட்ரிஸுக்கு தெரிவிப்பது என்பது இங்கு ஐதீகமாக இருக்கின்றது. டாண்டே-பியாட்ரிஸ் காதல் நிறைவேறாவிட்டாலும் பியாட்ரிஸ் பிறரது காதல் நிறைவேற ஆசிர்வதித்து உதவுகிறார் என்பது இங்கு நம்பிக்கையாக இருக்கின்றது.


பியட்ரிஸுக்கு காதலர்கள் அனுப்பும் வேண்டுதல் கடிதங்கள்

இன்பர்னோவில் நூலாசிரியர் ப்ரவுன், ரோபெர்ட்டும் சியன்னாவும் இங்கே சில நிமிடங்கள் செலவிடுவதைக் குறிப்பிடுகின்றார். ஐந்து நிமிடங்களே என்றாலும் அந்த 5 நிமிடங்களுக்கு அவர் தரும் விளக்கமும் இந்த தேவாலயம், டாண்டேவின் வரலாற்றுப் பின்னனி என எல்லாமுமே நம்மை இந்த தேவாலயத்தின் பால் ஓர் ஈர்ப்பைத் தரத் தவறுவதில்லை. சரி நண்பர்களே.. வாசித்து விட்டீர்களா .. இன்பெர்னோவை..??

சுபா
குறிப்பு - படங்கள் இணையத்தில் எடுக்கப்பட்டவை.

Sunday, September 22, 2013

என் வீட்டுத் தோட்டத்தில்...!

தோட்டத்திலிருந்து....

பெகோனியா மலர்..

இன்றைய நாள் இனிய நாளாக நல்வாழ்த்துக்கள்..!



சுபா

மண்ணில் விளைந்த மலர்ச்சி 
விண்ணின் கண்ணுக்கு விருந்தாகும் 
எண்ணில் திளைத்த மகிழ்ச்சி 
கண்ணில் அரும்பி மலராகும். 

*** Mohanarangan V Srirangam

Friday, September 20, 2013

என் வீட்டுத் தோட்டத்தில்...!

டாலியா மலர்கள் மலர்ந்து எழில் கொடுக்கும் காலம் இது. என் வீட்டுத் தொட்டிகளில் நட்டுவைத்தவற்றில் இரண்டு வகை டாலியாக்கள் மலர்ந்திருக்கின்றன. அதில் ஒரு செடியின் மலர்களின் படங்கள் இன்று மலர் விரும்பிகள் உங்களுக்காக..!






இன்றைய நாள் அனைவருக்கும் இனிய நாளாக மலரட்டும்.

சுபா

Tuesday, September 17, 2013

என் வீட்டுத் தோட்டத்தில்...!

அழையாத விருந்தாளிகளில் மேலும் ஒருவர்..

வண்ணத்துப்பூச்சி போல காட்சியளித்தாலும் இது வேறொரு வகை.  பறவை போல வேகமாகச் சிறகடித்து வந்து தேன் உண்ண வரும் இந்தப் பூச்சியை படம் எடுக்க செய்த முயற்சியில்  ஓரளவு வெற்றியே கிடைத்தது.

சென்ற வார இறுதியில் எடுத்த 2 படங்கள்..




சுபா

வண்ணத்தை தேர்ந்தெடுத்து

தீட்டிவைத்தவன் யார்?

அந்த தீற்றலில் உயிர் கொஞ்சம்

ஊற்றி வைத்தவன் யார்?



பச்சை நிறம் அழகு என்று

படித்து வந்தானா?

அதில் இளம்பச்சை

சேர்க்க என்று ரசித்து சென்றானா?



அதற்கென்று  சோடி நிறம்

தேர்ந்தெடுத்தானா?

மலர் மையத்தில் பொட்டு வைத்து

அதிசயித்தானா?



விருந்துண்ணா பட்டாம்புச்சிக்கு

அழைப்பு விட்டானா?

விருந்தோம்பல் செய்யவென்று

அருகில் நின்றானா?



தேடுகிறேன் அவ்விடத்தில்

அவன் இல்லையே...!

என் தேகக் கண்பார்வையிலே

படவில்லையே...!



கண்மூடும் போது

உடல் படும் காற்றானான்

கண் திறந்த போது

பதுங்கும் மழலையானான்



நேசத்தை பதுக்கி வைத்தேன்

அவன் மீதினிலே...!

அதை உணர்ந்த அவன்

அருகில் நின்றான் மனத்தேரினிலே...!



உருவம் எங்கே என்று

கேள்வி கேட்டு வைத்தேன்

அதன் இயக்கம் நானே


என்று பதில் நகை புரிந்தான்.

Thamil Selvi 

Friday, September 13, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 57

திருப்பெருந்துறை புராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட இறுதி நாட்களில் உ.வே.சா மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களுடன் உடன் இருக்க வில்லை. திருப்பெருந்துறையில் ஆசிரியருடனும் ஏனைய மாணவர்களுடனும் தங்கியிருந்து ஒவ்வொரு நாளும் அரங்கேற்றம் செய்து வரும் வேளையில் இடையே உடல் நலக் குறைவு ஏற்பட திருப்பெருந்துறையில் இருந்து தேக ஆரோக்கியத்தைச் சரி செய்வதற்கும் உதவிக்கு ஏற்ற துணை இல்லாத நிலையில் ஆசிரியரிடம் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து தனது உத்தமதானபுரத்தில் பெற்றோர் இல்லத்திற்கு உ.வே.சா அவர்கள் திரும்பி விடுகின்றார்கள். அறங்கேற்றத்தின் இறுதி நாட்களில் அங்கிலாது போன நாட்கள் அவர் மனதில் பதிந்து ஆழமான வருத்ததை ஏற்படுத்தியிருக்கின்றது. உடல் நலம் தேறி ஓரளவு சரியான பிறகு உடனே அவர் ஆசிரியரிடம் திரும்பவில்லை. வீட்டில் குடும்பத்தில் ஏற்பட்ட கடன் தொல்லைகளை உடனே சீர் செய்ய வேண்டிய நிலையில் பெரம்பலூர் (இந்த நகரம் முன்னர் பெரும்புலியூர்  என அழைக்கப்பட்டது) தாலுகாவிலுள்ள காரை என்ற ஓர் ஊரில் சின்னப்பண்ணை கிருஷ்ணசாமி ரெட்டியார் மற்றும் அவர் நண்பர்களின் விருப்பத்தின்படி தங்கியிருந்து திருவிளையாடற் புராணத்தை பாடம் நடத்தி பொருளீட்டிக் கொண்டிருந்தார். பாடம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஆசிரியை மீண்டும் காணும் ஆவலில் ஓரிருமுறை திருவாவடுதுறைக்குச் சென்றும் வந்திருக்கின்றார்.

இன்றும் கூட கல்வி கற்கும் வேளையிலேயே மாணவர்கள் உழைத்து தமது தேவைகளுக்கும் குடும்பத்தார் தேவைகளுக்கும் பொருளீட்டும் நிலையைக் காண்கின்றோம். இவ்வகை முயற்சிகள் மாணவ்ர்களுக்கு நல்ல வாழ்க்கை பாடத்தையும் அளிக்கக் கூடியது என்பதை அனுபவத்தில் நானும் உணர்ந்திருக்கின்றேன். மாணவர்கள் ஏதாகிலும் ஒரு வகையில் கல்வியைக் கைவிடாது பொருளீட்டுதலையும் மேற்கொள்ளும் போது சம்பாதிக்கும் பணத்தின் அருமையை உணர்ந்தவர்களாக நிச்சயமாக இருப்போம். ஒவ்வொரு சிறு தொகையும் எத்தகைய கடின உழைப்பின் அடிப்படையில் நமக்குக் கிடைத்தது என்பதை நினைக்கும் போது அது நமக்குத் தரும் சுய நம்பிக்கைக்கு ஈடு இணை இல்லை.

திருப்பெருந்துறைப் புராணத்தின் இறுதி நாள் அரங்கேற்றம் ஒரு சுபதினத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றிருக்கின்றது. இக்குறிப்புக்களை ஸ்ரீ மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் வரலாறு முதலாம் பாகத்தில் விரிவாகக் காணமுடிகின்றது.  இந்த அறங்கேற்ற நிகழ்வுக்காகப் பட்டுக்கோட்டைத் தாலூகாவிலிருந்த பாலைவனம், நகரம் ஆகிய ஜமீன்களிலிருந்து பிரதிநிதிகளும், பல உத்தியோகஸ்தர்களும், நாட்டுக் கோட்டைத் தனவைசியப்பிரபுக்கள் பலரும், ஏனைய பொது மக்களும் கலந்து சிறப்பித்திருக்கின்றனர்.

புராண நூலை ஒரு தேரில் வைத்து ஊர்வலமாகக் கொண்டுவர சுப்பிரமணியத்தம்பிரான் ஏற்பாடு செய்திருந்த செய்தியையும் அறிகின்றோம். இந்தத் தேர் ஊர்வலம் ஒரு அரச குடும்பத்து திருமண வைபவம் போன்று நடைபெற்றதாம். அக்கால கட்டத்தில் ஒரு நூலுக்கு எத்தகைய மதிப்பு இருந்தது என அறிய வரும் போது அக்கால கல்விகற்றோரின் சிந்தனையை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிகின்றது.

இந்த நூல் பூர்த்தியாகியமையால் முன்னர் வாக்குறுதி அளித்திருந்தபடியே சுப்பிரமணியத் தம்பிரான் அவர்களும் ரூபாய் இரண்டாயிரத்தைப் பிள்ளையவர்களுக்குக் கொடுத்திருக்கின்றார்கள். அத்துடன் இருந்து விடாமல் பிள்ளையவர்களின்  மாணாக்கர்கள் ஒவ்வொருவருக்கும் தனிச் சன்மானமும் மரியாதையும் செய்து அனுப்பி வைத்திருக்கின்றார். இந்தப் பணம் அனைத்தும் தம்பிரானின் சொந்தச் சம்பளத்திலிருந்து கொடுக்கப்பட்ட தொகை என்பதையும் உ.வே.சா குறிப்பிடுகின்றார்.

இவ்வளவு அன்பும் பரிவும் காட்டிய சுப்பிரமணிய தம்பிரான் அரங்கேற்றத்திற்கு முன்னர் பிள்ளையவர்களுடன் ஒரு சிறிய விஷயத்திற்காகப் பிணக்குடன் இருந்திருக்கின்றார். அதனைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோமே!

நாள்தோறும் பகல் மூன்று தொடங்கி ஐந்து வரை அரங்கேற்றம் நடைபெறுமாம். ஒரு நாள் அப்படி இருக்கையிலே தம்பிரான் வந்து காத்திருக்க வேறு ஒரு சிலர் இன்னும் வராது இருப்பதைப் பார்த்த பிள்ளையவர்கள் அவர்களும் வந்து விடட்டுமே. சற்று பொறுத்து தொடங்கலாம் எனச் சொல்ல இது தம்பிரானை வறுத்தப் படுத்தி விட்டதாம். அதனால் அடுத்த நாட்கள் அரங்கேற்றத்திற்கு வராமல் இருந்திருக்கின்றார். எல்லோரும் வந்து காத்திருக்க தம்பிரான் வரவில்லையென்றால் தொடங்க முடியாதல்லவா? ஆக தம்பிரனைத் தேடிக் கொண்டு பிள்ளையவர்களும் உ.வே.சாவும் சென்றிருக்கின்றார்கள்.

தோட்டத்தில் பின்புறத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த திருப்பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்த  தம்பிரானிடம் சென்ற இவர்களை அவர் ஏறெடுத்தும் பார்க்காமல் வேறொரு இடத்திற்குச் சென்று விட்டாராம். இதனால் மனம் உடைந்து போன பிள்ளையவர்கள் அங்கிருந்து நகர மனமில்லாமல் அங்கேயே நின்று விட்டார்களாம். ஆசிரியரின் மன நிலையை அறிந்த உ.வே.சா தம்பிரானிடம் சென்று முகத்தை வாட்டத்துடன் வைத்துக் கொண்டு பேசாமல் நின்று கொண்டிருந்திருக்கின்றார். இதனைக் கண்ட தம்பிரான்,
என்ன ஐயா? உங்கள் பிள்ளைக்கு மரியாதையே தெரியவில்ல. நான் வந்து காத்திருக்கையில் யாரோ சிலபேர்கள் வரும் வரையில் பொறுத்திருமென்று சொன்னாரே. அப்படிச் சொல்லலாமா? ஊரார் என்னை என்ன நினைப்பார்கள்? என்னை மதிப்பார்களா? அவர் செய்தது என் முகத்திற் கரியைத் தீற்றியது போல இருந்தது. அவரை புராணம் பாடும்படி செய்து அரங்கேற்றத்திற்கு வருவித்து உபசரிக்கின்றவன் நானா அவர்களா? என்று சொல்லி மண்டபத்திற்கு வராமல் நின்று விட்டாரம். இதனால் அடுத்த சில நாட்கள் திருப்பெருந்துறை புராண அரங்கேற்றம்  தடைபட்டுப் போயிருக்கின்றது. அதற்குப் பின்னர் சிலர் பேசி தம்பிரானைச் சமாதானம் செய்து பின்னர் அவர் வர எல்லாம் இனிதே நடைபெற்றிருக்கின்றது.

இறுதியில் திருப்பெருந்துறையை விட்டு பிரியும் போது இந்த பிணக்குகள் எல்லாம் மறைந்து ஆரத்தழுவி பிரியமனமில்லாமல் பிள்ளையவர்கள் சுப்பிரமணியத் தம்பிரானிடமிருந்து விடைபெற்றிருக்கின்றார்கள்.

இவ்வளவு சிறப்புக்களுடன் அரங்கேற்றம் கண்ட இத்திருப்பெருந்துறை புராண அமைப்பை பற்றிய சில தகவல்கள் கிடைக்கின்றன. முதலில் கடவுள் வாழ்த்தும் அதன் பின்னர் அவையடக்கமும் அதனை அடுத்து திருநாட்டுப் படலம் என பிள்ளையவர்கள் எழுதியிருக்கின்றார்கள். உருவம், அருவம், அருவுருவமென்னும் மூவகைத் திருமேனிகளிலே சிவபெருமானே எழுந்தருளி விளங்கும் இடமாகத் திகழ்வது திருப்பெருந்துறை.  இதனை விரிவாக்கி புராணமெங்கும் பல இடங்களில் இவ்விஷயங்கள் வரும் வகையில் இப்புராணத்தை பிள்ளையவர்கள் அமைத்தார் என்பதை உ.வே.சாவின் குறிப்புக்களிலிருந்து காண்கின்றோம்.

தொடரும்...

சுபா

Saturday, September 7, 2013

என் வீட்டுத் தோட்டத்தில்

நட்டு வைத்து நீரூற்றி பாதுகாத்து வளர்க்கும் செடிகள் பூப்பூத்து எழில் தரும் போது மனம் மகிழ்கின்றோம். நட்டுவைக்காமலேயே திடீரென்று அதிசயமாக ஒரு பூ பூத்தால் எப்படி இருக்கும்..? இதுவும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி தானே..!

தோட்டத்தில் நேற்று பார்க்கையிலே ஒரு பெரிய காளான் முளைத்திருந்தது. செடியே பூவாக!

தாவர பிரியர்களுக்காக அக்காளான் செடியின் படங்கள்.





Friday, September 6, 2013

என் வீட்டுத் தோட்டத்தில்

இதனை டோய்ச் மொழியில் Sonnenhut  என அழைக்கின்றோம். அதாவது சூரியதொப்பி என மொழி பெயர்க்கலாம்.:-)  வெயிலுக்குத் தலையில் தொப்பி போட்டுக் கொள்கின்றோமே அது போல இது இருக்கின்றதாம். நடுப்பகுதியைப் பாருங்கள். தொப்பி போல இருக்கும். இது மிக விரிவாகப் பரவக்கூடிய ஒரு வகை தாவரம். ஒரு சிறு கொத்தாக ஐந்தாறு செடிகள் மாமனார் வீட்டிலிருந்து கொண்டு வந்து நட்டு வைத்ததேன்.  இப்போது அப்பகுதி முழுமையையும் வியாபித்துக் கொண்டு விட்டது.  இணையத்தில் பார்த்ததில் இதனை (Echinacea )டெய்சி என்றே வகைப்படுத்துகின்றனர். இதில் இளம் சிவப்பு, வெள்ளை ஆகிய வர்ணங்களும் உண்டு.