Monday, October 21, 2013

இலை உதிர்ந்தாலும் ..

வசந்த காலமும் கோடை காலமும் கொடுக்கும் இயற்கை அழகு மனதைக் கொள்ளைக் கொள்வது என்றாலும் இலையுதிர் காலத்தின் அழகு தனித்துவம் வாய்ந்தது.

2 வாரங்களில் மாயம் செய்தது போல பச்சை நிறத்து பசுமை வனங்கள் இந்த இலையுதிர் காலத்தில் நிறம் மாறி இலைகளை உதிர்த்து மொட்டையாகி புதுக் கோலம் தரித்துக் கொள்கின்றன. இக்காட்சியைப் பார்ப்பவர்களுக்கு அவரவர் மன நிலைக்கு ஏற்ப கற்பனை சிறகடிக்கும்.

நேற்று லியோன்பெர்க்கில் (என் வீட்டிற்கு அருகே)  சிறிய நடைப்பயணம் சென்ற போது செல்போனில் பதிந்த படங்கள் சில.. இயற்கை விரும்பிகளுக்காக !










Friday, October 18, 2013

Robert Langdon is back..- Dante Illuminating Florence with his Poem - 11

டான் ப்ரௌனின் இன்பெஃர்னோவில் ரோபெர்ட் சியென்னா இருவரும் செல்வதாக காட்டப்படும் இத்தாலியின் ப்ளோரன்ச், வெனிஸ் நகரங்களின் கட்டிடங்களையும் துருக்கிய இஸ்தான்புல் கட்டிடம் பற்றியும் முந்தைய பதிவுகளில் சில குறிப்புக்கள் கொடுத்திருந்தேன்.

இனி வரும் பதிவுகளில் இந்த நூலில் குறிப்பிடப்படும் சில முக்கிய ஓவியங்களைப் பற்றி எழுத ஆவல் எழுந்தமையால் அவ்வப்போது சில தகவல்கள் பகிர்ந்து கொள்கின்றேன்.

நூலின் இக்கால கதாநாயகன் ரோபர்ட் லாங்டென் என்றாலும் நூலினை ஆக்கிரமித்திருக்கும் முக்கிய பாத்திரம் டாண்டெ அலெக்ரி (Dante Alighieri) தான்.


Courtesy: http://mubi.com/lists/kenjis-gallery-of-great-paintings

இங்கு இணைக்கப்பட்டுள்ள சித்திரம் ப்ளோரன்ஸ் டோம் Cathedral  (Duomo) உள் சுவற்றில் இருப்பது. இந்த டோம் பற்றி முன்னர் பதிவில் குறிப்பிட்டிருக்கின்றேன்.

இப்படத்தில் டாண்டெ தன் ஒரு கையில் தனது divine comedy  நூலை  வைத்திருப்பது போலவும் நரகத்தின் வாசலுக்கு அருகில் நிற்பது போலவும் காட்டப்பட்டுள்ளது.  அவருக்குப் பின்னே ப்ளோரன்ஸ் நகரத்தில் ஏழு அடுக்குகளில் ப்ருகேட்டரி மலை இருப்பதைக் காணலாம்.

இந்த ஓவியத்தை வரைந்தவர் டோமெனிக்கோ டி மிஷெலினோ (Domenico di Michelino). இத்தாலியின் ப்ளோரன்ஸ் நகரிலேயே பிறந்து வாழ்ந்து மறைந்தவர். இவருக்குப் ப்ளோரன்ஸ் டோம் உள்ளே இந்த சித்திரத்தை ஒரு ப்ரெஸ்கோ சித்திரமாக வரையும் வாய்ப்பு அமைந்தது. இதே கத்திட்ரெலில் இன்னும் 2 படங்களையும் இக்கலைஞர் வரைந்திருக்கின்றார். அவற்றைப் பற்றி அடுத்த பதிவில் தகவல் தருகின்றேன்.

சுபா

Thursday, October 3, 2013

ஜெர்மானிய சமையல்... எப்படியிருக்கும்..? - மூஸ்லி

 4 பேருக்குத் தேவையான அளவில் மூஸ்லி தயாரிப்பு. இது காலை உணவு வகையில் அடங்கும்.


தேவையான பொருட்கள்:

  1. பால் - 1 க்ளாஸ் சூடாக்காத குளிர்ந்த பால்
  2. தேன் - விரும்பும் அளவு
  3. ஜேம் - 8 தேக்கரண்டி சிவப்பு/ கருஞ்சிவப்பு நிறத்தில் கிடைக்கும் ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக்பெர்ரி பழ ஜேம்
  4. தயிர் - கெட்டியான தயிர்.
  5. பழம் - உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு பழம் - ஸ்ட்ராபெர்ரி, மாம்பழம் வாழை என எதுவானாலும் பரவாயில்லை.
  6. மூஸ்லி பாக்கெட் 300க்ராம். - மூஸ்லி கிடைக்கும் என்றே நினைக்கின்றேன். அப்படி கிடைக்கவில்லையென்றால் ஓட்ஸ், கோர்ன்ப்ஃளெக்ஸ், பாதாம், உலர்ந்த பழங்கள் ஆகியவற்றை கலந்தால் மூஸ்லி தயார். 


செய்முறை

  • கண்ணாடி பாத்திரம் அல்லது க்ளாஸ் எடுத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் வர்ணங்களின் அழகு நன்கு தெரியும்.
  • முதலில் ஒரு தனி பாத்திரத்தில்  8 தேக்கரண்டி ஜேமை எடுத்து தனியாக வையுங்கள். அதனை நன்கு மசித்துக் கொள்ளுங்கள். மசித்த இந்த ஜேமை நான்கு க்ள்ஸ்களுக்குள்ளும் மெதுவாக அளவாக முதலில் இடுங்கள்.
  • மற்றொரு பாத்திரத்தில் 300க்ராம் மூஸ்லியை கொட்டி அதில் 1 க்ளாஸ் பாலை சேர்த்து 200க்ராம் தயிரைசேர்த்து கலந்து வையுங்கள். இது ஓரளவு கெட்டியாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் தயிர் மிக மெல்லியதாக இருந்தால் பால் சேர்க்க வேண்டாம். இங்கு கெட்டித் தயிர் கிடைப்பதால் நான் பாலும் சேர்க்கின்றேன்.
  • இப்போது ஒரு கரண்டியால் இந்த மூஸ்லிக் கலவையை ஏற்கனவே ஜேம் விட்ட க்ளாஸ்களில் மெதுவாகச் சேருங்கள். க்ளாஸில் பாதிவரும் வரை சேருங்கள்.
  • பின்னர் அதன்மேல் ஒரு கரண்டி கெட்டித்தயிரை விடுங்கள்.
  • அதன்மேல் உங்களுக்கு பிடித்த அளவு தேனை மெலிதாக ஊற்றுங்கள்.
  • அதன்மேல் உங்களுக்குப் பிடித்த ஏதாகினும் ஒரு பழத்துண்டு வைத்து விடுங்கள்.


அவ்வளவே!

செய்து 30 நிமிடங்கள் வைத்து விட்டு பின்னர் சாப்பிட்டால் சுவை மிக நன்றாக இருக்கும்.

சுபா