Friday, November 15, 2013

Robert Langdon is back..- Dante! - 12

இன்ஃபெர்னோவில் வருகின்ற ஓவியங்களைப் பற்றியும் அவற்றை உருவாக்கிய கலைஞர்களைப் பற்றியும் பேசலாமே என்ற சிந்தனையில் சென்ற பதிவினை வெளியிட்டேன். இன்ஃபெர்னோ துப்பறியும் நாவலாக அமைந்த போதிலும் ரெனைஸான்ஸ் மற்றங்களில் தம்மை ஆழ ஈடுபடுத்திக் கொண்ட கலைஞர்களைப் பற்றியும் அவர்களின் படைப்புக்களைப் பற்றியும் நன்கு அறிமுகப்படுத்துகின்றது. இவ்வோவியங்களுக்கு மீண்டும் உயிர் வந்தது போல டான் ப்ரவுனின் விளக்கக் குறிப்புக்கள் அமைந்து விடுவதால் அவற்றை தேடிக் காணும் ஆர்வமும் அக்கால சூழலைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமும் என்னை தொற்றிக் கொண்டு விட்டன.  சென்ற பதிவில் நான் பதிந்திருந்த ஓவியத்தை நேரிலேயே ப்ளோரன்ஸ் டோமில் பார்த்திரிக்கின்றேன். டாண்டெ பற்றி அறியாது இந்த ஓவியத்தை பார்த்த போது இந்த ஓவியம் எந்த உணர்வுகளையும்  என்னுள் ஏற்படுத்தவில்லை. ஆனால் இப்போது இன்ஃபெர்னோ வாசித்து டாண்டெ பற்றி ஓரளவு அறிந்து இந்த ஓவியத்தைப் பார்க்கும் போது அக்காட்சி எனக்கு வேறு விதமாகத் தான் அமைகின்றது.

இந்த ஓவியத்தை நன்கு நுணுக்கமாக பார்த்து புரிந்து  கொள்ள விரும்புபவர்கள் இந்த வலைப்பக்கம் நிச்சயம் செல்ல வேண்டும். http://www.worldofdante.org/ The World of Dante  என்ற சிறப்பு பக்கம்  divine comedy யை அறிந்து கொள்ள விரும்புவோருக்கு சுருக்கமான விளக்கத்தை அளிப்பதாக இருக்கின்றது.  அதில் Maps & Charts  பகுதியில் நரகத்தின் படிகள் என விளக்கம் விசித்திரமாக அதே வேளே வியப்படைய வைக்கும் வகையில் நம் சிந்தனையை இட்டுச் செல்வதாக அமைந்திருக்கின்றது.

டான் ப்ரவுனின் இன்ஃபெர்னோ மீண்டும் டாண்டெயின் பெயருக்கு  ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது என்பதில் மறுப்பில்லை. Inferno Revealed என்ற தலைப்பில் ஒரு புதிய நூல் வெளிவந்திருக்கின்றது.   அது டான் ப்ரவுன் குறிப்பிடாமல் விட்ட டாண்டெ பற்றிய தகவ்ல்களை ஆராய்வதாக அமைந்திருப்பதை இதே பக்கத்தில் வாசித்து தெரிந்து கொண்டேன்.

இன்று மேலும் ஒரு ஓவியம். .. டாண்டெ!
ப்ளோரன்ஸ் டோமில் இருக்கும் அவரது ஒரு சித்திரம்


டாண்டெ!
போட்டிசெல்லி (Sandro Botticelli)  வரைந்த ஓவியம் இது. 

சுபா

Wednesday, November 13, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 58

திருப்பெருந்துறை புராணம் உருவாகிக் கொண்டிருந்த வேளையில் உடல் நலம் குன்றி உ.வே.சா அவர்கள் தமது சொந்த ஊரான உத்தமதானபுரத்திற்குச் சென்றார்கள் என்பதனையும் அறங்கேற்றத்தின் போதும் உடன் இருக்க முடியாத நிலையே அமைந்தது என்பதனையும் முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன்.

திருப்பெருந்துறையில் தங்கியிருந்து பிள்ளையவர்கள் புராணத்தை இயற்றிக் கொண்டிருந்த வேளையில் தனக்கு உடல் நிலை மிகவும் மோசமான நிலையை அடையும் வரையிலும் செய்யுள்களை ஆசிரியர் சொல்லச் சொல்ல சுவடிகளில் எழுதி வந்தவர் உ.வே.சா தான். ஜுரம் அதிகமாகி உடல் வருத்தம் அதிகரித்து விட்ட வேளையில் தம்மால் ஆசிரியருக்கும் ஏனையோருக்கும் சிரமம் ஏற்பட்டு விடக்கூடாதே என்று உ.வே.சாவின் மனம் கலங்குகின்றது. மாணவரின் மனக்கலக்கம் ஆசிரியரையும் வாட்டுகின்றது. உ.வே.சா இந்த நிகழ்வை என் சரித்திரத்தில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.

இனி அங்கே இருந்தால் எல்லோருக்கும் அசௌகரிய மாயிருக்குமென்பதை உணர்ந்த நான் ஆசிரியரிடம், “என் ஊருக்குப் போய் மருந்து சாப்பிட்டுக் குணமானவுடன் திரும்பி வருகிறேன்” என்று சொன்னேன்.

அதைக் கேட்டவுடன் அவருக்குத் துக்கம் பொங்கியது. “பரமசிவம் நம்மை மிகவும் சோதனை செய்கிறார் நீர் சௌக்கியமாக இருக்கும்போது இங்கே இருந்து உதவி செய்கிறீர். இப்போது அசௌக்கியம் வந்ததென்று ஊருக்கு அனுப்புகிறோம். அசௌக்கியத்தை மாற்றுவதற்கு நம்மால் முடியவில்லை. உம்முடைய தாய் தந்தையர் என்ன நினைப்பார்களோ!” என்றார்.

ஆசிரியரிடம் திருப்பெருந்துறையில் விடைபெற்றுக் கொண்ட உ.வே.சா சில நாட்கள் பெற்றோருடன் தங்கியிருந்து உடல் நிலை சரியான பின்னர் உடனே பிள்ளையவர்களிடம் திரும்பவில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் தொழில் புரிந்து பொருள் ஈட்ட வேண்டிய கட்டாயத்தில்  சில காலங்கள் புராணப் பிரசங்கம் செய்து பொருள் ஈட்ட முடிவு செய்தார். தம் தந்தையாருக்கு நன்கு அறிமுகமான செங்கணம் சென்று அங்கே  அறிந்தோர் உதவியுடன் சில காலம் புராணப்பிரசங்கம் செய்து பொருள் ஈட்டுவது குடும்ப சூழ் நிலையை சமாளிக்க உதவும்; அத்தோடு தமது திருமணத்திற்காக வாங்கிய கடனையும் தீர்த்தது போலாகும் என்று அவர் மனதில் சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. கடமை ஒரு புறம் அழைத்தாலும் பொருளீட்டச் சென்று விட்டால் பிள்ளையவர்களிடம் கற்று வந்த கல்வியில் தடையேற்படுமே என்ற வருத்தமும் மனதை வாட்டாமல் இருக்கவில்லை.

நம்மில் பலருக்கும் வாழ்வில் கடந்து வந்த ஒரு அனுபவம் தான் இது. கல்வியைத் தடையின்றி தொடர்வதா? அல்லது குடும்பத்தின் பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டு குடும்ப பொறுப்பை எடுத்துக் கொண்டு அதனை நிறைவேற்றுவது உசிதமா? என்பது நம்மில் பலரை அவ்வப்போது வந்து தாக்கிச் செல்லும் கேள்விகளாகவே அமைந்து விடுகின்றன.  உ.வே.சாவும் இத்தகைய சூழ்நிலையில் மாட்டிக் கொண்டார். தமது அப்போதைய இந்த இக்கட்டான மன நிலையை அவர் இப்படி விவரிக்கின்றார்.

எல்லாம் உண்மைதான். ஆனால், என் தமிழ்க் கல்வி அதனோடு நின்றுவிட வேண்டியதுதானா? கிடைத்தற்கரிய பாக்கியமாகப் பிள்ளையவர்களுடைய அன்பையும் அவர் மூலமாகத் திருவாவடுதுறை யாதீனப் பழக்கத்தையும் பெற்ற பின் அவற்றை மறந்து ஊர் ஊராய் அலைந்து வாழ்வது நன்றா? இறைவன் இந்த நிலையிலே விட்டு விடுவானா?

தமிழ்ச்சேவையே தன் உயிர்மூச்சு என நினைக்கும் உ.வே.சாவை இறைவன் கைவிடுவாரா?

செங்கணம் சென்று அங்கே திருவிளையாடற்புராணத்தை பிரசங்கம் செய்வது என முடிவெடுத்து பெற்றோருடன் செங்கணம் புறப்படுகின்றார் உ.வே.சா. அத்திட்டம் அங்கே நிறைவேறவில்லையெனினும் செங்கணத்திலிருந்து புறப்பட்டு காரை எனும் ஊர் சென்று அங்கு திருவிளையாடற்புராணம் பிரசங்கம் செய்து வந்தார். காரை செல்லும் முன் செங்கணத்தில் இருக்கும் போது  தனக்கும் தன் தந்தையாருக்கும்  முன்னர் அறிமுகமான தமிழறிஞர்கள், பண்டிதர்கள் பெரியோர்கள் பலரை சந்திக்கும்படியாகின்றது. அவர்கள் எல்லோருமே இப்போது உ.வே.சா பிள்ளையவர்களின் மாணவர் என்பதை அறிந்திருந்தனர். முன்னர் அனுபவித்திராத வரவேற்பும், மதிப்பும், அன்பும், உபசரிப்பும் இப்போது மிக அதிகமாகவே கிடைக்கின்றது இவருக்கும் இவர்கள் குடும்பத்தினருக்கும். அடிப்படையிலேயே தமிழின் மேல் ஆராத பற்று கொண்டவர்கள் இம்மனிதர்கள். மீனாட்சி சுந்தரம் பிள்ளயவ்ர்களின் தமிழ்ப்புலமையும் பெருமையும் அறிந்து வியந்து போற்றி வருபவர்கள். அப்படிப்பட்ட இம்மனிதர்கள் அவரது மாணவர் ஒருவர், அதிலும் தங்கள் ஊரிலே நன்கு அறிமுகமான  ஒருவரின் குமாரன் தங்கள் ஊரிலே வந்து தங்கியிருக்கின்றார்  என்பதனை அறியும் போது அவருடன் உரையாடிய தருணங்களை இறைவன் தமக்களித்த நல்ல தருணங்களாகவே நினைத்து மகிழ்கின்றார்கள்.

நான் பிள்ளையவர்களிடம் பாடங்கேட்டவனென்பது எனக்கு ஒரு தனி மதிப்பை உண்டாக்கியது. பிள்ளையவர்களுடைய கல்விப் பெருமை, கவித்துவம் முதலியவற்றைப் பற்றி யாவரும் கதை கதையாகப் பேசினார்கள். அவரிடத்தில் தங்களுக்குத் தெரிந்த ஒருவர் மாணாக்கராக இருக்கிறாரென்பதில் அவர்கள் ஒரு திருப்தியையும் பெருமையையும் அடைந்தார்கள். ......

புக்ககம் போய் நல்ல பெயர் வாங்கிய ஒரு பெண் பிறந்த வீட்டுக்கு வந்தால் அங்குள்ளவர்கள் எவ்வளவு அன்போடும் பெருமையோடும் உபசரிப்பார்களோ அவ்வளவு உபசாரம் எனக்கு நடந்தது. நான் பிள்ளையவர்களுடைய பெருமையை எடுத்துச் சொல்லும்போதெல்லாம் திறந்தவாய் மூடாமல் அங்கேயுள்ளவர்கள் கேட்பார்கள். பிள்ளையவர்கள் இயற்றிய நூல்களிலிருந்து அரிய பாடல்களைச் சொல்லிப் பொருள் கூறும்போது என் ஆசிரியரது புலமையையும் நான் அவராற் பெற்ற பயனையும் உணர்ந்து உணர்ந்து ஆனந்தமடைந்தார்கள்.

தொடரும்...
சுபா