Sunday, April 27, 2014

Robert Langdon is back..! - Paradise - 18

ஏறக்குறைய ஒரு வருடமாகப் போகின்றது இந்த இழையைத் தொடங்கி. ஆனாலும் இன்ஃபெர்னோ நூலைப் பற்றி விஷயங்கள் இருந்து கொண்டேயிருக்கின்றன எனக்கு .. பகிர்ந்து கொள்ள!

இன்றும் ஒரு ஓவியம் தான் பதிவில் இடம் பெருகின்றது.

டிவைன் கோமெடி எழுதிய டாண்டேவின் மனம் தனது காதலி பியாட்ரிஸை மறந்ததில்லை என்றே இவர்களைப் பற்றி குறைப்பிடும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 9 வயதில் இவர் முதன் முதலில் பியாட்ரிஸை ஒரு தேவாலயத்தில் சந்திக்கின்றார். அதனைப் பற்றி முந்தைய ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். 

இவர்களின் காதல் கைகூடவில்லை. ஆனால் டாண்டேயின் பெற்றோர்கள் இவர் இன்னொரு குடும்பத்தின் பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தீர்மாணம் எழுதிக் கொண்டுத்து விடுகின்றனர். என்ன காரணம்..?  தேடித்தான் பார்க்க வேண்டும். இப்போதைக்கு விடுவோம். ஆனால் பிரச்சனை என்னவென்றால் இந்த ஒப்பந்தத்தால் டாண்டேயின் மகிழ்ச்சி மறைந்து போய்விடுகின்றது.

அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலை எழுகின்றது. அதே போல பியாட்ரிஸும் இன்னொரு ஆடவரை திருமணம் செய்து வாழும் நிலை ஏற்படுகின்றது.

ஆனால் இறந்த பின்னர் இருவர் கல்லரையும் ஒரே இடத்தில் தான் அமைத்திருக்கின்றனர்.  வாழும் போது இணைந்து வாழ விடாத சட்டங்களும் குடும்பத்தார் அபிலாஷைகளும் இறந்த பின்னர்தான் இவர்களுக்கு கை கூடியிருக்கின்றது.  25 வயதிலேயே பியாட்ரிஸ் இறந்து விடுகின்றார். ஆனால் டாண்டேயின் எழுத்துக்களிலெல்லாம் அதிலும் குறிப்பாக பாரெடைஸ் எனக் குறிக்கும் சொர்க்கத்தின் நிகழ்வுகளிலெல்லாம் டாண்டேயுடன் உலா வருபவள் பியாட்ரிஸ். அதிலும் குறிப்பாக டிவைன் காமெடியின் இன்ஃபெர்னோ  பகுதியில் பியாட்ரிஸின் குறிப்பும் இருப்பதாக அறிகிறேன். வாசித்துப் பார்க்கவில்லை. ஆனால் டான் ப்ரவ்னின் கதையின் மையமே டாண்டே என்பதால் பியாட்ரிஸுடன் டாண்டே பயணிக்கும் பாரெடைஸ் பயணங்களை விவரிக்கும் ஒரு ஓவியமே இன்றைய ஓவியம்.


இதுவும் முந்தைய பதிவில் வெளிவந்த ஓவியக் கலைஞர் ​குஸ்தோவ் டோர அவர்களின் உருவாக்கத்தில் வரைந்த சித்திரம். சொர்க்கத்தை நோக்கி பியாட்ரிஸ் பயணிக்க தேவ தூதுவர்கள் வந்து வரவேற்கின்றனர். பியாட்ரிஸைப் பின் தொடர்ந்து டாண்டே செல்கின்றார்.

இனிய காதல் ஜோடிகளின் சோகக் கதை இது!

சுபா

Saturday, April 26, 2014

என் வீட்டுத் தோட்டத்தில்..!

கோடை காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

இம்முறை பீன்ஸ் செடி வளர்க்க விரும்பி விதைகளை வாங்கி வந்து நட்டு வைத்திருக்கின்றேன். இப்போது சில செடிகள் முளைத்திருக்கின்றன.



இன்னும் 2-3 மாதங்களில் காய்கள் காய்க்கின்றதா என பார்க்க வேண்டும். :-)

சுபா

Thursday, April 24, 2014

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 67

அன்றைய நாள் திருவாவடுதுறை என்னும் அவ்வூர்  ஒளியிழந்திருந்தது. 

ஆனால் காலம் என்னும் ஒரு மருந்து போல் வேறொன்றுமில்லை. அது வேதனைகளையும் பிரிவுகளையும் மாற்றம் என்ற ஒன்றினை அறிமுகப்படுத்தி, அதனுள்ளே நம்மை முழுதுமாகத் தள்ளி நம்மை அப்போதைக்கு வாட்டி துன்புறுத்தும் அல்லல்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கச் செய்து விடும் ஒரு மாமருந்து. 

இத்தோடு துன்பத்திற்கு விடுதலை ஏற்படுமா? .... என்றால் அதற்கும் ஒரு முடிவில்லை என மீண்டும் மீண்டும் இன்ப துன்பத்தை காட்டியும் மறைத்தும் காலச் சக்கரம் சுழன்று கொண்டேதான் இருக்கின்றது.

உ.வே.சா வின் வாழ்வில் பிள்ளையவர்கள் மறைவுக்குப் பின் ஏற்படுவது வேறொரு வகையானதொரு வாழ்க்கை. 

வயதும் வளர .. உலக அறிவும் விசாலமாகிய காலகட்டம் அது..இந்தப் புதிய வாழ்க்கையில் அதிகமாக தாமே சுயமாக  பொறுப்பேற்றுக் கொண்டு சம்பாதித்து தன்னை நம்பியிருக்கும் குடும்பத்தைப் பேணுவது.. தனது கணவுகளை நனவாக்குவது என்ற வகையில் பயணித்த வாழ்க்கை பயணம் அது. அதன் தொடர்ச்சிகளை அடுத்தடுத்த பதிவுகளில் வழங்குகின்றேன்.

பிள்ளையவர்கள் மறைவுக்குப் பின்னர் மடத்தில் இருந்து வரும் வாய்ப்பிற்கு தமக்கு ஏதேனும் பிரச்சனை வந்து விடுமோ என்ற அச்சம் உ.வே.சாவின் மனதை வாட்டாமல் இல்லை. ஆனால் ஆதீனகர்த்தர் சுப்ரமணிய தேசிகர் அவரை அங்கேயே தொடர்ந்து இருக்க அனுமதி வழங்கியதோடு தொடர்ந்து தம்மிடமே இவரும் ஏனைய சில மாணாக்கர்களும் பாடம் படித்து வரலாம் என்றும் புதிதாக பாடம் கேட்க வருவோருக்கு பாடம் சொல்லும் பணியையும் மேற்கொள்ளலாம் என அனுமதி வழங்க தங்குமிடம், தமிழ்ப்பாடம் பற்றிய கவலைகள் மறைந்து அன்றாட வாழ்க்கையின் அலுவல்கள் தொடர்ந்தன.

அபய வார்த்தை என்ற அத்தியாயத்தில் எதிர்கால சிந்தனையை நினைத்து ஏற்பட்ட அச்சத்திற்கும்  தனது மனக்கவலைகளுக்கும் தேசிகர் வழங்கிய அன்பு வார்த்தைகள் அபய வார்த்தைகளாக அமைந்தமையை உ.வே.சா இப்படி குறிப்பிடுகின்றார். 

பிள்ளையவர்களோடு எப்போதும் இருந்து பாடம் கேட்டுக் கொண்டும் எழுதிக்கொண்டும் சுகமாகக் காலத்தைக் கழித்தோம். இனிமேல் நாம் என்ன செய்வது? இம்மடத்திற்கும் நமக்கும் என்ன உறவு இருக்கப் போகிறது? நம் நிலை இனி என்ன ஆகும்?” என்ற ஏக்கம் தலைப்பட்டது. “ஒரு பெருந்துணையாக விளங்கிய பிள்ளையவர்கள் மறைந்ததால் வேறு பற்றுக் கோடில்லாமல் அலைந்து திரியும் நிலை நமக்கு வந்து விடுமோ” என்று அஞ்சினேன்.

இக்குழப்பத்தில் அங்கே நிற்பதைவிட ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரைப் பார்த்து வருவது நலமென்றெண்ணி மடத்தினுள்ளே சென்றேன்.

அங்கே ஒடுக்கத்தில் அவர் அமர்ந்திருந்தார். அவரைக் கண்டவுடன் அதுகாறும் என்னுள் அடங்கியிருந்த துக்கம் பொங்கவே கோவென்று கதறி விட்டேன். என்ன முயன்றும் விம்மல் அடங்கவில்லை. அடக்க முடியாமல் எழுந்த என் வருத்தத்தைக் கண்ட தேசிகர், “வருத்தப்பட்டு என்ன செய்வது! மாற்ற முடியாத நஷ்டம் நேர்ந்துவிட்டது! நமக்கும் வருத்தம் அதிகமாக இருக்கிறது; வெளிப்படுத்தாமல் இருக்கிறோம். உமக்குத் தாங்க முடியவில்லை. உம்மிடத்தில் அவருக்கு இருந்த அன்பை வேறு எங்கே பார்க்க முடியும்?”
என்றார்.

..
பிள்ளையவர்களுடைய அன்பில் வளர்ந்த எனக்கு மற்றவர்களது அன்பின் நிலையை அறிந்துகொள்ளச் சந்தர்ப்பமும் நேரவில்லை. பிள்ளையவர்கள் பிரிந்த பிறகு தேசிகருடைய அன்பின் சிறப்பானது தெளிவாக விளங்கத் தொடங்கியது.

அன்பு மேலீட்டுடன் ஆதரித்து வந்த ஆசிரியர் மறைவுக்குப் பின் வாழ்க்கை முற்றுப் புல்ளையைக் அடைந்து விடவில்லை. புதிய கதவுகள் திறக்க புதிய வாய்ப்புக்களும் தம்மை அடையாளம் காட்ட ஆரம்பித்தன உ.வே.சாவின் வாழ்க்கையில்.

தொடரும்..

சுபா

Thursday, April 10, 2014

திருநாகைக்காரோணப்புராணம் நூல் தொடர்பான சில தகவல்கள்

கடந்த 6ம் திகதி மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் பிறந்த தினத்தன்று அவர் எழுதிய திருநாகைக்காரோணப்புராணம் நூலை மின்னூலாக வெளியிட்டேன். நண்பர் ஒருவர் மின்தமிழில் இந்த நூல் உருவான பின்னனியைக் கேட்டிருந்தார். 

அது தொடர்பான விஷயங்களை சிறு பதிவாக மின் தமிழில் வழங்கினேன். அப்பதிவு இதோ.


இந்த நூல் தொடர்பான சில குறிப்புக்கள் உ.வே.சா எழுதிய மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரிதம் நூலில் இடம்பெறுகின்றன. அதில் வரும் செய்திகளிலிருந்து கீழ்க்காணும் தகவல்களை அறிய முடிகின்றது.

1868ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாகப்பட்டணத்தில் ஓவர்ஸியராக இருந்த அப்பாத்துரை முதலியாரும் அவருடன் செல்வாக்கு பெற்ற இன்னும் சிலரும், தேவாரக் திருக்கூட்டத் தலைவராகிய வீரப்ப செட்டியாரும் பிள்ளையவர்கள் நாகைக்கு ஒரு புராணம் பாட வேண்டும் என்ற விருப்பத்தை இவரைச் சந்தித்து தெரிவித்தனர். அதனை பிள்ளையவர்கள் ஏற்றுக் கொண்டார். அவர் ஒரு கோயிலின் புராணம் பாடுவதற்கு முன்னர் அத்தலத்திற்கு நேரடியாகச் சென்று அங்கு இருந்து, பார்த்து, மக்களிடம் பேசி விவரங்கள் பெற்று, அங்கிருக்கும் பெரியோர்களிடமும் பேசி நகரச் சிறப்புக்களை அறிந்து கொள்வது பொதுவான வழக்கம். அதே போல நாகைக்கு புராணம் எழுது முன்னர் அங்கே சென்று தங்கியிருந்து இந்தத் தொடக்கப் பணிகளைச் செய்ய உத்தேசம் கொண்டு தயாரிப்பு ஏற்பாடுகளைச் செய்து கொண்டார்.

ஏற்கனவே இருந்த இத்தலத்திற்கான வடமொழி புராணத்தை ஸ்ரீ மகாதேவ சாஸ்திரி என்பவரைக் கொண்டு தமிழில் வசன நடையாகவும் மொழி பெயர்த்து வைத்துக் கொண்டார். 

காஞ்சி புராணத்தில் சிவஞான முனிவர் சித்திரக்கவிகளை அமைத்தது போல இப்புராணத்திலும் இருக்க வேண்டும் என சில நண்பர்கள் கேட்டுக் கொண்டதால் இப்புராணத்தில் நந்திநாதப் படலத்தில் சித்தாச்சிரம வருணனையில் சில சித்திரக் கவிகளை இவர் செய்திருக்கின்றார்.

இந்த நூலை பிள்ளையவர்கள் பாடத்தொடங்கியபோது இதனை ஏட்டில் எழுதி வந்தவர் முத்தாள்புரம் கோபால பிள்ளை என்னும் ஒருவர். காலை 7 மணிக்கு ஆரம்பித்து 10 மணிக்கு செய்யுள் சொல்வதை முடிப்பாராம்.

இந்த முத்தாள்புரம் கோபால பிள்ளைக்கு தாம் வெகு விரைவாக செய்யுள் எழுதுகின்றோம் என அகம்பாவம் இருந்திருக்கின்றது. ஒரு நாள் பிள்ளையவர்கள் புராணத்தில் சுந்தரவிடங்கப்படலத்தை விரிவாக செய்யுளாக்கிப் பாட கோபால பிள்ளைக்கு கைவலி எடுத்து விட்டது. பகல் 12 மணியாகியும் பிள்ளையவர்கள் செய்யுட் சொல்வதை நிறுத்தாமல் தொடர்ந்திருக்கின்றார். தனது கை வலி மிக அதிகமாகச் சுவடிக்கட்டை கீழே வைத்து விட்டு பிள்ளையவர்கள் பாதத்தில் விழுந்து வணங்கினாராம் இந்த கோபால பிள்ளை. தம்மை போல எழுதுவோர் யாருமில்லை என நினைத்திருந்த தன் அகம்பாவம் இன்று நீங்கியது என்று சொல்லி உருகினாராம்.

தேவரீர் எந்த தெய்வத்தின் அவதாரமோ, எந்த பெரியவர்களின் அம்சமோ என சொல்லி வியந்தாராம். 

​இந்த நாகைப் புராணம் 1869ம் ஆண்டில் சுந்தரவிடங்கப் படலமும் இன்னும் சில பகுதிகளும் நிறைவடைந்தவுடன் தைமாதத்தில் நாகை தலத்திலேயே அரங்கேற்றம் பண்ணுவதென முடிவாக இவர் தம் மாணாக்கர்களுடன் அங்கு சென்று சேர்ந்திருக்கின்றார். 

முத்தி மண்டபம் எனும் மண்டபத்திலே தான் அரங்கேற்றத்தைத் தொடங்கியிருக்கின்றார்.

இந்தப் புராணப் பிரசங்கமும் அரங்கேற்றமும் ஒரு வருட காலம் நடைபெற்றிருக்கின்றது. இப்போது நினைத்துப் பார்க்க இப்படியும் நிகழ்ந்திருக்குமா என ஆச்சரியம் மேலிடுகின்றது. 

இந்த நிகழ்வு நடந்து வரும் வேளையில் ஸ்ரீ சங்கராச்சரிய சுவாமிகள் நாகப்பட்டினத்துக்கு விஜயம் செய்திருக்கின்றார். பிள்ளையவர்கள் புராணப் பிரசங்கம் நடைபெறுவதைக் கேட்டு அவரை பார்க்க விருப்பம் கொள்ள பிள்ளையவர்களும் மகாதேவ சாஸ்திரிகளுடன் வந்திருந்து  ஸ்ரீ சங்கராச்சரிய சுவாமிகளை சந்தித்திருக்கின்றார். பிரசங்கம் செய்யும் புராணத்திலிருந்து சில பாடல்களை பிள்ளையவர்கள் சொல்ல இவர் கேட்டு மகிழ்ந்திருந்திருக்கின்றார். கம்பராமாயணத்திலிருந்து சில பாடல்கள் கேட்க ஆசைப்பட அதனையும் பிள்ளையவர்கள் சொல்லியிருக்கின்றார். 

இப்புராண அரங்கேற்றம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் தான் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் ஸ்ரீ அம்பலவாண தேசிகர்  பூரணம் எய்தினார்கள். அவரை அடுத்து இளைய பட்டமாக இருந்த சுப்பிரமணிய தேசிகர் ஆதீனப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள்.  இந்த நிகழ்வினால் புராணப் பிரசங்கத்தின் இடையில் பிள்ளைவர்கள் திருவாவடுதுறை சென்று மீண்டும் வந்து புராண பிரசங்கத்தைத் தொடர்ந்திருக்கின்றார்.  

பிள்ளைவர்கள் நாகப்பட்டினத்தில் இருக்கும் சமயத்திலேயே மாயூரத்திலிருந்த அரங்ககுடி முருகப்பிள்ளை என்பவரின் குமாரர் வைத்தியலிங்கம் பிள்ளை என்பவரின் உதவியால் மாயூரப் புராணமும் அப்பாத்துரை முதலியார்  உதவியால் நாகைக் காரோணப்புராணமும் சோடசாவதானம் சுப்பராய செட்டியாருடைய (இவரும் பிள்ளையவர்களின் மாணாக்கர்களில் ஒருவர்)  மேற்பார்வையில் அச்சிடப்பெற்று நிறைவேறின.

அரங்கேற்றி முடிவதற்குள் திருநாகைக் காரோணப் புராணமும் பதிப்பிக்கப்பட்டது என்பதும் தனிச் சிறப்பு.

புராண அரங்கேற்றம் முடிந்த அந்த நன்னாளில் புராணச் சுவடி பல்லக்கில் வைக்கப் பெற்று மிகச் சிறப்பாக  ஊர்வலமாக கொண்டுவரப்பட்டதாம்.

ஒரு வருடத்திற்கும் மேல் நாகையில் இருந்து 1870ம் ஆண்டின் ஆரம்பத்தில் தான் பிள்ளையவர்கள் மீண்டும் மாயூரத்திற்கு வருகின்றார்.  பிள்ளையவர்கள் மாயூரம் திரும்பி விட்டார்கள் என்ற செய்தி அறிந்து தான் உ.வே.சா தன் தந்தையை அழைத்துக் கொண்டு பின்னர் இவரிடம் மாணவராக சேரதேடி வருகின்றார். இது பற்றிய தகவல்களை எனது உ.வே.சாவுடன் உலா பதிவில் வழங்கியிருக்கின்றேன்.

உ.வே.சாவின் குறிப்புப்படி பிள்ளையவர்களின் புராணக் காப்பியங்களிலேயே மிகச் சிறந்ததாகக் கருதப்படுவது திருநாகைக்காரோணப் புராணம் தான். தமிழ் காப்பியத்தின் இலக்கணம் முழுவதும் உள்ளதாய் பலவகையில் நயம் சிறந்து விளங்கும் இக்காப்பியத்தை பெறுவதற்கு  தமிழ் நாடு தவம் செய்திருக்க வேண்டும் என்கின்றார் உ.வே.சா.

அன்று அப்பாத்துரை முதலியார்  உதவியால், சோடசாவதானம் சுப்பராய செட்டியாருடைய மேற்பார்வையில் அச்சிடப்பெற்று நிறைவேறிய அந்த நூல்களில் ஒன்று அதிலும் திருவாவடுதுறை மடத்து சேகரங்களில் ஒன்றே இன்று நமது மின்னூல்களில் சேகரத்தில் இணைந்திருக்கின்றது என்பதை நினைத்துப் பார்க்கும் போதே மனம் பேரானந்தம் கொள்கின்றது.

எல்லோரும் இந்த நூலை படிக்காவிட்டாலும் கூட ஒரு முறையாவது இதனை திறந்து பார்த்து இக்காப்பியத்தின் சிறப்பை உணர வேண்டும்.

சுபா

Tuesday, April 8, 2014

Robert Langdon is back..! - Legs - 17

அண்மையில் ஜெர்மனிக்கு அருகாமையில் இருக்கும் ப்ரென்ச் நகரமான ஸ்ட்ராஸ்புர்க் சென்று வந்தேன். கலைகளுக்குப் புகழ் மிக்க இந்த நகரத்தின் சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும்  கலைஞர் ஒருவரும் டாண்டேயின் டிவைன் காமெடி நூலில் உள்ள விஷயங்களுக்குச் சித்திரங்களைப் படைக்கும் பணியைச் செய்திருக்கின்றார். அவரைப் பற்றியும் அவரது ஒரு கலை படைப்பையும் இந்த பதிவில் சொல்கிறேன்.

குஸ்தோவ் டோர (Gustave Doré 1832 - 883) ஒரு ப்ரென்சு சிற்பக் கலைஞர். பால்ஸேக், மில்டன் போன்ற பிரபலமான கலைஞர்களின் படைப்புக்களைச் சித்திரமாக்கும் பணியை மேற்கொண்டவர் இவர். அதில் டாண்டேயின் டிவைன் காமெடி நூலின் காட்சிகளும் அடங்குகின்றன.

இன்ஃபெர்னோவின் முதல் அத்தியாயத்தில் வரும் ஒரு காட்சியை இவர் சித்திரமாக்கியிருக்கின்றார். இந்த ஓவியத்தின் பெயர் Legs. அந்த ஓவியம் கீழே.

Inline image 1

டான் ப்ரவுன் இதனை இப்படி தன் நூலில் விவரிக்கின்றார்

When Langdon raised his eyes again to the veiled woman, the bodies at her feet had multiplied. There were hundreds of them now, maybe thousands, some still alive, writhing in agony, dying unthinkable deaths.... consumed by fire, buried in feces, devouring one another. He could hear the  mournful cries of human suffering echoing across the water.
...
she pointed now to a writhing pair of legs, which protruded upside down from the earth, apparently belonging to some poor souls who had been buried headfirst to his waist. The man's pale thigh bore a single  letter - written in mud - R.

நரகத்தில் கிடைக்கக்கூடிய தண்டனைகளை டாண்டே நன்கு கற்பனை செய்திருக்கின்றார். தலைக்கிழாக புதைத்து வைத்து வதைப்பதும் இவ்வகை நரகக் காட்சிகளின் கற்பனைகளில் அடங்குகின்றன. கற்பனை செய்து பாருங்கள்... இப்படிப் பார்க்கின்ற ஒரு மனிதனின் காலில் ஒரு குறியீடு. அக்குறியீடு எதைச் சொல்ல வருகின்றது என சஸ்பென்ஸ் கலந்த தேடல். 

தேடல் தேடல் தேடல்.. 

ஓய்வில்லாத தேடல் நிறைந்த  வாழ்க்கையில் குறியீடுகளும் மறைபொருள்களும் காட்டி இழுக்கும் சாகஸங்களும் அழைத்துச் செல்லும் பாதையும் என்றுமே சுவாரஸியம் தான்.

ஏறக்குறைய 150 ஆண்டுகளாகிய பின்னரும் கூட குஸ்தோவின் டாண்டெயின் இலக்கியத்துக்கான சித்திரங்கள் புகழ் பெற்று திகழ்கின்றன. 


Wednesday, April 2, 2014

பயணங்கள் தொடர்கின்றன – தென் கொரியா (2003) - மின்னூல்

என் வாழ்க்கை எனும் தொடர் பயணத்தில்…

….. இது மேலும் ஒரு பயணம் அவ்வளவே..!

குறிப்பு:  2003ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தென் கொரியாவிற்கு நான் மேற்கொண்ட சுற்றுலா பயணக் குறிப்பு இது.  பயணக் குறிப்பாக அப்போது இதனை என் வலைப்பூவில் வெளியிட்டேன். இன்று மின்னூலாக இது வடிவம் பெறுகின்றது!

முனைவர்.க சுபாஷிணி