Monday, October 20, 2014

என் டைரியிலிருந்து.... சில குறிப்புகள்..!

Change does not roll in on the wheels of inevitability, but comes through continuous struggle. And so we must straighten our backs and work for our freedom. 
-Martin Luther King, Jr.

இதனை வாசித்த போது என் மனதில் எழுந்த சிந்தனை...

போராட்டங்கள் எப்போதுமே வெற்றியில் தான் முடிய வேண்டுமா? தோல்வியும் கூட அடுத்த கட்ட பரிமாணத்தை முன் வைப்பதாக அமைய வாழ்க்கை காட்டும் வழிதான்!

ஒரு சுதந்திர நிலையை நோக்கியதாக அமைகின்ற பயணங்கள் எதுவும் சுலபமாக கைக்குக் கிடைத்ததாக உலக வரலாறு காட்டிக் கொண்டிருக்கவில்லை. தொடர்ந்த போராட்டம்.. அதில் சில வெற்றிகள், பல தோல்விகள்.. இவை அனைத்தும் கொடுக்கும் அனுபவப் பாடங்கள்.. இவையே கண் முன் தெரியும் நிதர்சனம்.

தோல்வி கொடுக்கும் பாடங்கள் அடுத்த கட்ட வெற்றியை அமைக்கும் படிகளாகத் தான் அமைகின்றன. தோல்வியின் சுவடுகள் நம் மனத்தை நோகச் செய்ய நாமே அனுமதிக்க வேண்டாம்.. நம் சிந்தனை, நமது சுய லட்சியத்தை அடைய வேண்டும் என்ற இலக்கை நோக்கியதாக மட்டும் இருக்கட்டும்!

சுபா

Sunday, October 19, 2014

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 74

அக்காலத்தில் யாத்திரை செய்வது என்பது இன்று போன்று சுலபமான ஒரு காரியம் இல்லை என்பதை நம்மால் ஊகித்தறியமுடியும். இன்றைக்கு போல வாகன வசதிகள் அல்லாத காலகட்டம் அது. மடங்களிலிருந்து ஆதீனகர்த்தர் பயணிக்கவேண்டும் என்றால் அதற்கு நீண்ட நாளைய ஏற்பாடுகள் செய்ய வேண்டியது மிக அவசியம். தை மாதத்தில் ஒரு பிரயாணம் அப்படி ஏற்பாடாகி இருந்தமையையும் அதில் தானும் உடன் பங்கு கொண்டமையையும் விரிவாக உ.வே.சா அத்தியாயம் 72ல் குறிப்பிடுகின்றார்.

தஷிணம் பெரிய காறுபாறு வேணுவன லிங்கத் தம்பிரான் அம்பாசமுத்திரத்துக்கு அருகில் உள்ள செவ்வந்திபுரத்தில் ஒரு மண்டபம் ஒன்றை அச்சமயம் கட்டியிருக்கின்றார். அதற்கு சுப்பிரமணிய தேசிக விலாசம் என பெயரிட்டு சிறப்பு செய்திருக்கின்றார். ஆதீனத்தோடு தொடர்புடைய மண்டபம் என்பதால் இம்மண்டபம் இன்னமும் இங்கு இருக்கக் கூடிய சாத்தியம் இருக்கின்றது என்றே கருதுகின்றேன்.

இந்தத் தம்பிரான் தேசிகரை தமது குழுவினருடன் இந்தப் பகுதிக்கு  வருகை தந்து சிறப்பிக்க வேண்டும் என மிக விரும்பி விண்ணப்பம் அளித்திருந்தார். அதே சமயம் மதுரை மீனாஷி சுந்தரேசுவரர் ஆலயத்திற்கு வந்து சிறப்பிக்க வேண்டுமென்று மேலும் ஒரு சிறப்பு அழைப்பும் அவருக்கு வேறொருவரிடமிருந்து கிடைத்திருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு அவ்வருடம் தை மாதம் மதுரைக்கு ஒரு பிரயாணம் செல்ல தேசிகர் திட்டம் அமைத்தார்.

செல்லும் வழிகளில் இருக்கும் கனவாண்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் ஆதீனகர்த்தரின் வருகையைப் பற்றிய செய்தி அனுப்பிவைக்கப்பட்டது. செல்லும் வழியில் தாம் சந்திக்கும் நபர்களோடு உரையாட தம்மோடு சிலரையும் கூட்டிச் செல்ல தேசிகர் உத்தேசித்திருந்தார். அதில் உ.வே.சாவிற்கு முக்கிய பணிகளையும் மனதில் நினைத்திருந்தார். அதாவது வழியில் சந்திப்போருடன் உரையாடும் போது செய்யுட்கள் சொல்லவும் தமிழ் இலக்கிய விளக்கங்களை அளிக்கவும் என்ற வகையில் தேசிகரின் குழுவில் இருக்கும் தம்பிரான்களுடன் இணைந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். இந்தப் பயணத்தின் போது கல்லிடைக் குறிச்சியில் இருந்த சின்னப்பட்டம் ஸ்ரீ நமசிவாய தேசிகருக்கு மதுரையில் வந்து சேர்ந்து கொள்ளும்படி சுப்பிரமணிய தேசிகர் செய்தி அனுப்பியிருந்தார். இந்தச் செய்தி அனுப்புதல் என்பதை உ.வே.சா 'திருமுகம் அனுப்பினார்' எனக் குறிப்பிடுகின்றார். அந்த யாத்திரையின் போது வழியில் தேவைப்படும் தங்கும் வசதி உணவு ஆகியவற்றிற்கான ஏற்பாடுகளும் நடந்திருக்கின்றன.

தம்மோடு தமது தந்தையும் இந்தப் பயணத்தில் உடன் வருவதை உ.வே.சா விரும்பினாலும் வேங்கடசுப்பையருக்கு அதில் உடன்பாடு காட்டவில்லை. காரணம் அப்போதுதான் மதுரைக்கு முதன்முதலாகப் புகை வண்டி அறிமுகம் செய்யப்பட்ட காலம். பிரயாணத்தின் போது தாமும் பிறரும் புகை வண்டியில் பிரயாணம் செய்ய நேரும்.  வேங்கட சுப்பையர் இதில் பயணம் செய்யமாட்டார். ஆக அதனால் அவரையும் உடன் அழைத்துச் செல்வது என்பது நடக்காத காரியம் என்றும் உணர்ந்து திருவாவடுதுறையிலேயே அவரை குடும்பத்தாருடன் விட்டுச் செல்வது என முடிவானது.

தைப்பூசத்திற்கு முதல் நாள் தேசிகர் தம் பரிவாரங்களுடன் யாத்திரையைத் தொடங்கியிருக்கின்றார். திருவிடைமருதூரில் அச்சமயம் பிரமோத்ஸவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கே போய் தேசிகர் திருத்தேரை நிலைக்குக் கொண்டு வந்து பூஜை செய்து அங்கே அனைவரும் வழிபட்டனர். 

உ.வே.சாவிற்கு பயணத்திற்கு தேவைப்படும் என்று கித்தான்பை (இது என்ன வகை பை என்று தெரியவில்லை) ஒன்றையும் பட்டால் செய்யப்பட்ட தலையணையையும் ஜமக்காளம் ஒன்றினையும் தேசிகர் கொடுத்திருக்கின்றார். பிறகு தனக்க்ருகில் அமர வைத்து அன்புடன் ஒரு தம்பிரானிடம் சொல்லி கொணர்ச் செய்த கௌரீசங்கரம் வைத்த கண்டி ஒன்றை உ.வே.சாவின் கழுத்திலே அணிவித்து ஒரு சால்வையைப் போர்த்தி இதே கோலத்தில் பெற்றோரிடம் சென்று பார்த்து அவர்கள் மனம் குளிர வைத்து ஆசிபெற்று வரும் படி சொல்லி அனுப்பியிருக்கின்றார்.

இதனை உ.வே.சா என் சரித்திரம் நூலில் இப்படிக் குறிப்பிடுகின்றார். 

பிறகு என்னைச் சமீபத்தில் வந்து உட்காரச் செய்து, “நாம் யாத்திரை செய்யும் இடங்களிலெல்லாம் உமக்குத் தொந்தரவு கொடுக்க நேரும். தமிழபிமானிகளாகிய கனவான்கள் பலர் வருவார்கள். அவர்களுக்குத் திருப்தி உண்டாகும்படி தமிழ்ப் பாடல்களைச் சொல்ல வேண்டியது உமது கடமை” என்று கூறினார். “அப்படிச் செய்வது என் பாக்கியம்” என்றேன் நான்.

அவர் கட்டளையின்படி உடனே ஒரு தம்பிரான் கௌரீசங்கரம் வைத்த கண்டி ஒன்றைக் கொணர்ந்து என் கழுத்திலே போட்டு ஒரு சால்வையை என் மேல் போர்த்தினார். நான் அச்சமயத்தில் ஆனந்த மிகுதியால் ஸ்தம்பித்துப் போனேன்; மயிர்க் கூச்செறிந்தது “இப்படியே திருவாவடுதுறைக்குப் போய்த் தந்தையாரிடம் விடை பெற்றுக் கொண்டு இங்கு வந்து விடும். நம்மோடு புறப்படலாம்” என்று தேசிகர் சொல்லி என்னைத் திருவாவடுதுறைக்கு அனுப்பினார்.

இப்படி தேசிகரிடம் அன்பையும் பெருமையையும் பெற்ற நாட்கள் உ.வே.சாவின் வாழ்நாளில் மறக்க முடியாத தருணங்கள் என்பதில் ஐயமில்லை. தமிழ் மேல் தீவிர பற்று கொண்ட உ.வே.சா என்ற அந்த இளைஞன் மீது   தேசிகர் கொண்டிருந்த அன்பும் நம்மை உருகச் செய்கின்றது.

தொடரும்...
சுபா

Monday, October 13, 2014

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 73

உ.வே.சாவின் வாழ்க்கை திருவாவடுதுறையிலேயே தொடர்ந்தது. தனது பெற்றோரையும் மனைவியையும் பிரிந்து அவர் திருவாவடுதுறை ஆதீனத்திலேயே தங்கியிருந்து மாணாக்கர்களுக்குத் தமிழ்ப்பாடம் சொல்லிக் கொடுப்பதைத் தொடர்ந்து வந்தார். அதே வேளை சுப்ரமணிய தேசிகரிடத்திலும் பாடம் கேட்பதைத் தொடர்ந்து வந்தார்.நாளுக்கு நால் இவரது அறிவின் விசாலம் விரிவடைந்து வந்தது. மடத்திற்கு வரும் பல கல்விமான்கள், செல்வந்தர்கள் ஆகியோர் நட்பும் கிடைக்கப்பெற்றது. 

மடத்தில் இருக்கும் தம்பிரான்களில் இவரிடம் பாடம் படிக்கும் சிலர் உ.வே.சா மடத்திலேயே நிரந்தரமாக தங்கி விட்டால் தங்களுக்கு அது தமிழ் கற்றலில் மிக உதவும் என நினைத்து சுப்பிரமணிய தேசிகரை அணுகி மடத்திலேயே அவர் பணி தொடர தேசிகர் உதவ வேண்டும் என அவ்வப்போது கேட்டு வந்தனர். தேசிகர் மனத்திலும் இந்த விருப்பம் இருந்திருக்க வேண்டும். 

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் பாடம் கற்றவர் என்ற ஒரு பெருமையுடன் உ.வே.சாவின் தமிழ்க் கல்வி ஞானமும் அதன் மேல் அவர் கொண்டிருந்த பற்றும் தேசிகரிடம் அவர் காட்டிய பணிவும் அன்பும், மரியாதையும் தேசிகரை மிகக் கவர்ந்திருந்தன. ஆக திருமடத்திற்குத் தகுந்ததொரு புலவர் உருவாகிக் கொண்டிருக்கின்றார் என்ற எண்ணம் அவர் மனதிலும் இருந்து வளர்ந்து வந்தது.

இந்த நிலையில் குடும்பத்தாரைப் பிரிந்து தனியாக உ.வே.சா வாழ்க்கையைத் தொடர்வது சரியல்ல என முடிவெடுத்து திருவாவடுதுறையிலேயே அவருக்கு ஒரு தனி வீட்டினை கட்டும் பணியை மடத்து அதிகாரிகளுக்குப் பிறப்பித்தார் தேசிகர். இந்த வீடு உருவாகி முடியும் வரை இது உ.வே.சா குடும்பத்தினருக்குத் தான் என்பது உ.வே.சாவிற்கே தெரியாது. புது மனை கட்டி முடிவானதும் பெற்றோருக்குக் கடிதம் போட்டு வரச் சொல்லும் படி பணித்தார் தேசிகர். 

திருவாவடுதுறை வந்து சேர்ந்த உ.வே.சாவின் குடும்பத்தினருக்கு ஆனந்தம் நிறைந்த ஆச்சரியமாக இந்த விஷயம் அமைந்தது. பொருளாதார நிலைக்கு ஏற்ப ஒவ்வொரு ஊராக மாறி மாறி நாடோடி போல சில காலங்கள் தமது குடும்பத்தை வழி நடத்தி வந்த உ.வே.சாவின் தந்தையாருக்கு இனி நிரந்தரமாகக் குடும்பத்துடன் தங்க ஒரு இடம் கிடைத்தது மாபெரும் மகிழ்ச்சி என்பதில் ஐயமேது ? எக்காலத்து செய்த நற்செயலோ, பூர்வ ஜன்ம புண்ணியமோ திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் வடிவில் அவர்கள் வாழ்வில் ஒரு நிலைத்தன்மை கிடைத்திருக்கின்றதே என அவர்கள் மனம் மகிழ்ந்து போனார்கள்.

ஒரு சுப நாளில் புது மனைக்குச் சென்று தனது புது வாழ்க்கையை தனது பெற்றோர் மனைவியுடன் தொடங்கினார் உ.வே.சா.

சாமிநாத ஐயர் என உ.வே.சாவை அப்போது மடத்திலும் சரி ஏனைய தமிழ்ப் புலவர்களும் சரி, நண்பர்களும் சரி அழைப்பது வழக்கம். அது பிறகு திருவாவடுதுறை சாமிநாத ஐயரென்று வழங்குவது மரபாக உருவாகியது. இது ஒரு ஊர்ப் பெயராக இருப்பினும் தமது பெயரோடு இணைத்து வழங்கப்படுவதைக் கேட்கையில் உ.வே.சாவிற்கு மனம் கொள்ளா மகிழ்ச்சி ஏற்பட்டதென்று தனது குறிப்புக்களின் வழி என்.சரித்திரத்தில் அவர் தன் மனதின் மகிழ்ச்சியைக் குறிப்பிடுகின்றார்.

”என்னைத் திருவாவடுதுறைச் சாமிநாத ஐயரென்று வழங்குவது உறுதியாயிற்று. திருவாவடுதுறையென்பது ஊர்ப் பெயராக இருந்தாலும் அதை என் பெயரோடு சேர்த்தபோது எனக்கு ஒரு கௌரவப் பட்டம் கிடைத்தது போன்ற மகிழ்ச்சி உண்டாயிற்று. ”

ஆதீனத்தில் நெடுங்காலம் இருக்கும் நிலை உவே.சாவிற்கு வாய்க்கவில்லை. ஆதீன வித்வானாக இல்லாத போதிலும் சில பதிப்புக்களில் தேசிகர் உ.வே.சா வை ஆதீன வித்வான் எனக் குறிப்பிட்டு எழுதியமையைப் பெருமையாகக் கருதி அதனைக் குறித்து வைக்கின்றார் உ.வே.சா.

”சுப்பிரமணிய தேசிகர், ஆதீன வித்துவான் என்று போடவேண்டுமென்று சொன்னதே எனக்கு உத்ஸாகத்தை உண்டாக்கிற்று. அவர் என்னைப் பற்றிக் கொண்டுள்ள அபிப்பிராயத்தை அறிந்தேன். அப்பெயரை அப்பொழுது மும்மணிக் கோவைப் புஸ்தகத்தில் அச்சிடாவிட்டாலும், தேசிகர் பிற்காலத்தில் தம் விருப்பத்தை நிறைவேற்றி விட்டார். நான் கும்பகோணம் காலேஜில் உத்தியோகம் பெற்ற பிறகு அவர் எனக்கு எழுதிய கடிதங்களிலும், அனுப்பிய புஸ்தகங்களின் முன் பக்கங்களிலும், “நமது ஆதீன வித்துவான்”, “ஆதீன மகா வித்துவான்” என்றெல்லாம் எழுதுவதை வழக்கமாக வைத்துக் கொண்டார்.”

ஆதீன வித்வானாகவோ புலவராகவோ ஆவதற்கு முன்னரே அவருக்கு மற்றொரு வாய்ப்பு அமைந்தது. இதுவே அவரது வாழ்க்கை பயணத்தில் மூன்றாவது மிகப் பெரிய மாற்றத்தை அவருக்கு உருவாக்கி அமைத்தது. இளம் வயது இளைஞனாக இருந்த உ.வே.சா கல்வி கற்ற அறிஞராக,  ஒரு பணியை பொறுப்புடன் எடுத்து அதன் முக்கியத்துவத்தை அறிந்து செயலாற்றும் பணிக்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும் வல்லமை பெற்றவராக அவர் வாழ்க்கையில் புதிய அடிகளை எடுத்து வைக்கும் புதுப் பயணம் தொடங்கிற்று..!

தொடரும்...

சுபா

Monday, October 6, 2014

ஜெர்மானிய லூதரன் மதபோதகர்களின் தமிழ் பங்களிப்புக்கள்

கட்டுரை ஆசிரியர்: முனைவர்.க.சுபாஷிணி



அறிமுகம்

இந்திய நிலப்பரப்பில் ஐரோப்பிய நிலப்பரப்பில் உருவாக்கம் கண்ட லூதரன் பாதிரிமார்கள் சபையின் சமய நடவடிக்கைகள் 17ம் நூற்றாண்டில் தொடங்கி 18ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டங்களில் நிகழ்ந்தன. இரண்டு மறை ஓதும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட பாதிரிமார்களின் தமிழகத்துக்கான வருகையே இதற்கு தொடக்க நிலையை உருவாக்கிய வரலாற்று நிகழ்வாக அமைகின்றது.

லூதரன் கிருஸ்துவ மத பாதிரிமார்கள் மதம் பரப்பும் நோக்கத்துடன் இந்தியாவின் தெற்குப் பகுதிக்கு வருவதற்கு இரு நூற்றாண்டுகளுக்கு முன்னரே கத்தோலிக்க பாதிரிமார்கள் தென்னிந்தியப் பகுதிகளுக்கு வருகை தந்து தென்தமிழகத்தில், அதில் குறிப்பாக தூத்துக்குடி பகுதியில் கத்தோலிக்க கிறிஸ்துவ மதம் பரவ ஆரம்ப நிலை பணிகளை மேற்கொண்டனர். இந்தப் பாதிரிமார்களின் தீவிர மதம் பரப்பும் பணிகளின் பலனாக அமைந்ததுதான் தமிழின் முதல் அச்சு வடிவம் பெற்ற நூலாக விளங்கும் தம்பிரான் வணக்கம். தமிழ் மட்டுமன்றி இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக அச்சு வடிவம் பெற்ற ஒரு இந்திய மொழி நூல் என்ற பெருமையும் இந்த நூலுக்கு உண்டு. இந்த நூல் அச்சு வடிவம் பெற்று  வந்த பின்னர் தொடர்ச்சியாக மேலும் சில நூல்கள் அச்சுப்பதிப்பாகி வெளிவந்தன

1612ம் ஆண்டில் டேனிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி தஞ்சாவூரின் தரங்கம்பாடி பகுதியில் ஒரு சிறு பகுதியைப் பெறும் உரிமையை ஆண்டுக் கட்டணமாக இந்திய ரூ.3111 செலுத்தி பெற்றனர்.  அச்சமயம் தஞ்சையை ஆண்டு கொண்டிருந்த ரகுநாத நாயக்க மன்னரின் (இவருக்கு அச்சுதப்ப நாயக்கர் என்ற பெயரும் உண்டு) அனுமதியோடு இந்த உரிமை பெறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த அரச ஆணையின் படி 19.11.1620ம் நாள் தரங்கம்பாடியில் டென்மார்க்கின் டேனிஷ் கொடி ஏற்றப்பட்டு தரங்கம்பாடியில் டேனிஷ் தொடர்பு உறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டேனீஷ் வர்த்தகர்கள் தரங்கம்பாடி வந்திறங்கினர். வர்த்தகம் செய்வது மட்டுமே ஜெர்மனியின் மார்ட்டின் லூதர் உருவாக்கிய லூதரேனியன் சமயத்தைப் பின்பற்றத் தொடங்கியிருந்த டேனிஷ் அரசின் நோக்கமாக அமைந்திருக்கவில்லை. வர்த்தகத்தோடு மதம் பரப்பும் சேவையையும் செய்ய வேண்டும் என்பதை மன்னர் விரும்பினார். 18ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் தமிழகத்தின் தரங்கம்பாடிக்கு டேனிஷ்  அரச ஆணையுடன் முதல் அதிகாரப்பூர்வ மதம் பரப்பும் சமயக் குழு ஒன்று வந்திறங்கியது.

சீகன்பால்க் (1682 –1719)

1706ம் ஆண்டு ஜூலை மாதம் 9ம் தேதி டென்மார்க்கிலிருந்து  அப்போதைய அரசர் மாமன்னர் நான்காம் ஃப்ரெடெரிக் அவர்களது உத்தரவில் இந்தியாவின் தமிழகத்தின் தரங்கம்பாடி நகருக்கு வந்திறங்கிய கப்பலில் ஜெர்மானிய லூத்தரன் சபையைச் சார்ந்த பாதிரியார் சீகன்பால்க் அவர்களும் ப்ளெட்சோவ் அவர்களும் வந்தனர். பாதிரியார் சீகன்பால்க் தனித்துவம் மிக்க மதபோதகராகத் திகழ்ந்தவர். மதம் பரப்பும் பணியில் ஈடுபடுவது சிரமம் நிறைந்த, கட்டுப்பாடுகள் பல நிறைந்த காரியமென்பதால் வர்த்தகத்தில் ஈடுபடுவதை  மட்டும் நோக்கமாக  கொண்டிருந்தது டேனிஷ் குழு. ஆக மத போதனை செய்து தமிழகத்தின் இந்து மக்களை மதமாற்றம் செய்யும் பணிக்காக ஜெர்மனியில் ஹாலெ, ட்ரெஸ்டன் பகுதிகளில் ஃப்ரான்க்கன் நிறுனத்தைச் சார்ந்த பாதிரிமார்களின் உதவியை நாடியது டேனீஷ் அரசு.

இங்கிருந்து தான் லூதரன் கொள்கைகளைப் பரப்பும் பாதிமார்கள் கல்வி பயின்று ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் மதம் பரப்பும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் ட்ரெஸ்டன் ஹாலே நிறுவனமே முக்கிய மைய நகரமாகவும் விளங்கி வந்தது. இந்த முயற்சியின் பலனாக சீகன்பால்க் முதல் லூதரன் மிஷனரியாக டேனிஷ் அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் தரங்கம்பாடியில் வந்திறங்கினார்.

தமிழ் மட்டுமே அறிந்திருந்த  உள்ளூர் மக்களை மதமாற்றம் செய்ய பாதிரிமார்களுக்கு அதி முக்கியமாகத் தேவைப்பட்டது தமிழ் மொழி அறிவே. சீகன்பால்கைப் பொருத்தவரை அவர் தனது தாய்மொழியான ஜெர்மானிய மொழியும் லத்தீன் மொழியும் மட்டுமே அறிந்தவர். இந்தியா வந்து சேர்ந்தவுடன் அவருக்கு இருந்த பெரும் சோதனை மொழியறியா உலகில் தனது குறிக்கோளை நிறைவேற்ற மொழித்தடையாக அமைந்ததே. ஆக சீகன்பால்க் தமிழ் மொழியை எழுதவும் பேசவும் கற்பதையே தனது முதல் பணியாக எடுத்துக் கொண்டு செயலில் இறங்கினார்.


சீகன்பால்கின் குறிப்புக்களின் வழி அக்காலகட்டத்தில் தமிழ் மொழியை எழுதப் படிக்கத் தெரிந்த உள்ளூர் மக்கள் மிகச் சொற்பமான எண்ணிக்கை தான். 2% மக்களே கல்வியறிவு பெற்றோராக இருந்தனர் என்று அவர் தனது குறிப்புக்களில் எழுதி வைத்திருக்கின்றார்.  கல்வி கற்றல் என்பது குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே அளிக்கப்பட்ட உரிமையாக அக்கால கட்டத்தில் இருந்தது. ஆக அந்த நிலையில் அயல் நாட்டைச் சேர்ந்த சீகன்பால்க் தமிழ் மொழியைக் கற்பது என்பது எளிமையான காரியமாக அமையவில்லை. கற்க சரியான ஆசிரியர் கிடைப்பது என்பது ஒரு சோதனையாக இருந்த அதே பொழுது அயல் நாட்டினரான இவர் தமிழ் மொழி கற்பதையும் சிரமங்களுக்கிடையே மேற்கொள்ள வேண்டியிருந்தது.  சீகன்பால்க் முதலில் போர்த்துக்கீஸிய மொழியைக் கற்க ஆரம்பித்தார். ஏனெனில் முன்னரே தமிழகம் வந்திருந்த போர்த்துக்கீஸிய பாதிரிமார்களின் முயற்சியால் உள்ளூர் மக்களில் சிலர் போர்த்துக்கீஸிய மொழியைக் கற்றிருந்தனர். ஆக போர்த்துக்கீஸிய மொழியும் உள்ளூர் மக்களுடன் தொடர்பினை ஏற்படுத்த உதவும் என்ற காரணத்துடன் போர்த்த்துக்கீஸிய மொழியைக் கற்றார் சீகன்பால்க்.

அதன் பின்னர் உள்ளூரில் தமிழ் பாடம் போதித்துக் கொண்டிருந்த ஒரு ஆசிரியரை தனது வீட்டிற்கு வரவழைத்து அங்கு அவர் தனது மாணவர்களையும் அழைத்து வந்து பாடம் நடத்தலாம் எனச் சொல்லி அனுமதி வழங்கி தனது வீட்டிலேயே தமிழ்ப்பாடம் நடக்கும் படி ஏற்பாடு செய்தார். அப்படி தமிழ்ப்பாடம் நடக்கும் போது அதில் மாணவராக இணையாமல் முழு பாடம் நடக்கும் போதும் உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டு தமிழ் மொழியைக் கற்க ஆரம்பித்தார்.  அவருக்கு அலெப்பா என்ற ஒரு தமிழ் உதவியாளரும் அமைய அவருடன் தமிழில் பேசியும் உள்ளூர் விஷயங்களை அவர் வழியாக போர்த்திக்கீஸிய மொழிக்கு மாற்றம் செய்தும் அறிந்து கொண்டார் சீகன்பால்க். முதல் மூன்று ஆண்டுகள் தமிழை மட்டுமே வாசிப்பது பேசுவது என்று கட்டுப்பாட்டை உறுதியாக வைத்துக் கொண்டார். அக்கால கட்டத்தில் எந்த ஜெர்மானிய நூலையும் லத்தீன் மொழி நுலையும் தாம் படிக்கவில்லை என தமது நாட்குறிப்பு நூலில் குறிப்பிடுகின்றார்.



தமிழகத்தில் தான் இருந்த தனது முதல் இரண்டு ஆண்டுகளில் தான் சேகரித்த 161 தமிழ் புத்தகங்களை இவர் கோப்பன்ஹாகன் நகரில் இருக்கும் அரச தலைமையகத்திற்கு  அனுப்பி வைத்திருக்கின்றார். இவற்றுள் 16 நூல்கள் சீகன்பால்க் தாம் கைப்பட எழுதிய தமிழ் நூல்கள். அக்காலகட்டத்தில் தாம் சந்தித்த ஒரு தமிழ் விதவை பெண்மணியிடமிருந்து பெற்ற ஓலைச்சுவடி நூல்களையும் இவர் கோப்பன்ஹாகன் நகரின் அரச தலைமையகத்திற்கு அனுப்பி வைத்தார்.  வெகு விரைவில் பல தரப்பட்ட தமிழ் நூல்களை வாசிக்கும், புரிந்து கொள்ளும் திறனைப் பெற்றதோடு தமிழ்ச் சொற்களை நூல்களில் வாசிக்கும் போது பட்டியலிட்டு குறித்து வைத்தார். இதன் அடிப்படையில் தான் இவரது முதல் தமிழ் லத்தின் மொழி அகராதி உருவாக்கம் பெற்றது. ஒவ்வொரு நாளும் எட்டரை மணி நேர தீவிர தமிழ் பயிற்சி மேற்கொண்ட சீகன்பால்க் தமிழ் மொழியில் பேசவும் நூல்களை எழுதும் திறனும் பெற்றார். இந்த வளர்ச்சின் விளைவாக 1708ம் ஆண்டில் தரங்கம்பாடியில் தேவாலயத்தில் தமிழில் முதன் முதலாக தனது மத உரையை ஆற்றி தமிழில் லூதரேனியன் சமய சேவையைத் தமிழகத்தில் தொடக்கினார்.

சீகன்பால்கின் தமிழ் நூல்கள்

ஒரு மொழியைக் கற்க அம்மொழியின் இலக்கணம் இன்றியமையாதது. ஆக இலக்கண நூலை உருவாக்குவதை தமது முக்கிய கடமையாகக் கொண்டார் சீகன்பால்க்.  தமிழ் படிக்க ஆரம்பித்த தருணத்திலேயே தனது இலக்கண நூல் தயாரிப்புப் பணியிலும் ஈடுபட்டார்.  1716ம் ஆண்டில் ஜெர்மனியின் ஹாலெ நகரில் இவரது முதல் நூலான Grammatica Damulica அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.




இந்த நூல் எட்டு பகுதிகளைக் கொண்டது.  இந்த நூலின் அணிந்துரையை சீகன்பால்க் தாம் நோர்வே நாட்டில் 1715ம் ஆண்டில் சில மாதங்கள் தங்கியிருந்த காலகட்டத்தில் எழுதினார். இந்த அறிமுக உரை லத்தீன் மொழியில் அமைந்தது.  நூலின் முதற் பகுதி  தமிழ் எழுத்துக்களை அறிமுகப்படுத்தும் பகுதி.  இரண்டாம் பகுதி தமிழ் சொற்களின் உச்சரிப்பை விளக்கும் பகுதி.  மூன்றாம், நான்காம், ஐந்தாம் பகுதி இலக்கண விதிகளை விளக்கும் பகுதி. ஆறாம் பகுதி வினைச்சொல்லை விளக்கும் பகுதி.  ஏழாம் எட்டாம் பகுதிகள் சொற்களின் அமைப்பை விளக்குவன.  ஆக மொத்தம் 128 பக்கங்களைக் கொண்ட ஒரு நூல் இது .

லத்தீன் மொழியைக் கொண்டு ஒவ்வொரு தமிழ் எழுத்தையும் விளக்கும் விதமாக இந்த நூலை இவர் உருவாக்கியிருக்கின்றார். லத்தீன் மொழியிலேயே ஒவ்வொரு சொல்லின் பொருளும் விளங்குமாறும் அமைத்திருக்கின்றார். இந்த நூலில் முழுமையாக நாம் புள்ளிகளற்ற தமிழ் மொழி எழுத்தை தாம் காண்போம்.

எழுத்தின் மேல் புள்ளி வைத்து மெய்யெழுத்துக்களை எழுதும் வழக்கத்தை அறியத் தவறிய சீகன்பால்க் தாம் அறிந்த முறையிலேயே  இந்த இலக்கண நூலைப் பிழையுடனேயே தயாரித்தார் என்பது வரலாற்று உண்மை. இதற்கு அடிப்படை காரணம், தாம் தமிழ் கற்ற வேளையில் ஓலைச்சுவடியில் பாடத்தை எழுதி கற்பித்த ஆசிரியர் பனை ஓலையின் தன்மை நிலைக் கருதி புள்ளி வைப்பதைத் தவிர்த்த போக்கின் அடிப்படை காரணத்தை அறியாது தானும் இவ்விஷயத்தில் போதிய தெளிவில்லாமலேயே அச்சு வடிவத்திலும் புள்ளிகளை நீக்கிய தமிழ் எழுத்துக்களை எழுதியே அதனைத் தமிழ் என அறிமுகப்படுத்தி இந்த நூலின் வழியாக ஐரோப்பிய சமூகத்துக்குக் குறிப்பாக டேனிஷ் ஜெர்மானிய சமூகத்துக்கு தமிழை அறிமுகப்படுத்தினார்.

இதே தவற்றை முந்தைய கத்தோலிக்க பாதிரிமார்களின் முயசிகளிலும் நாம் காண்கின்றோம். போர்த்துக்கீஸிய பாதிரியார் ஹெண்ட்ரிக் அடிகளாரின் தம்பிரான் வணக்கம் நூலும் கிரிஸ்தியாயினியும் கூட மெய்யெழுத்துக்கள் புள்ளிகள் நீங்கிய வடிவத்திலேயே தாம் அமைந்திருக்கின்றன.

சீகன்பால்க் Grammatica Damulica வை அடுத்து ஒரு சொற்பொருள் அகராதி ஒன்றினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு முதலில் 20,000 சொற்கள் கொண்ட ஒரு லெக்ஸிகனை உருவாக்கினார். சமயம், இலக்கியம், வானியல், சமூகம், மருத்துவம் என பல்வேறு வகைப்பட்ட நூல்களை வாசித்து அவற்றிலிருந்து சொற்களைத் தேர்ந்தெடுத்து பட்டியலிட்டு இந்த லெக்ஸிகனை அவர் உருவாக்கினார். இந்த லெக்ஸிகன் மூன்று பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி தமிழ்சொல்லை வரிசைப்படுத்துவது. இரண்டாம் பகுதி இந்தச் சொல்லை உச்சரிக்கும் விதம் லத்தீன் மொழியிலும் மூன்றாவது பகுதி அதே சொல்லின் ஜெர்மானிய மொழி விளக்கமும் என்ற வகையில் அமைந்த நூல் இது. ஆரம்பத்தில் 20,000 சொற்களுடன் உருவாகிய இந்த நூல்  1712ம் ஆண்டில் 40,000 சொற்களுடன் விரைவடைந்தது என்பதை அறிகின்றோம்.

தமிழ் இலக்கியங்களின் முக்கியத்துவத்தைத் தமிழ் நிலப்பரப்பில் வாழும் கால கட்டத்தில் சீகன்பால்க் தாம் உணர்கின்றார். ஆக இலக்கிய செழுமையை விளக்கும் சொற்கள் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களிலிருந்தும் பேச்சு சொற்களிலிருந்தும் மாறுபடுவதை உணர்ந்து கவித்துவம் நிறைந்த இலக்கியச் சொற்களின் பட்டியல் ஒன்றை தாம் தயாரிக்க வேண்டும் என சீகன்பால்க்  விரும்பினார்.  பொதுவாக இலக்கிய நூல்கள் சமய நூல்களாக சமய சார்புடன் அமைந்தவையாக இருப்பதனால் அச்சொற்களையும் தாம் அறிந்து அதனையும் அறிமுகப்படுத்த ஒரு நூல் அவசியம் எனக் கருதி இந்த முயற்சியில் ஈடுபட்டார்.  இந்த முயற்சியின் விளைவாக 1708ம் ஆண்டில் 17,000 சொற்கள், குறிப்பாக இலக்கியச் செழுமை வாய்ந்த சொற்களின் தொகுப்பாக ஒரு லெக்ஸிகனை உருவாக்கினார் சீகன்பால்க்.  இந்த நூலே தமிழில் இருக்கின்ற எல்லா இலக்கிய நூல்களையும் ஐரோப்பியர் வாசித்துப் படித்து கற்றுக் கொள்ள வழி செய்யும் திறவுகோலாக அமையும் என்றும் நம்பிக்கை கொண்டிருந்தார் சீகன்பால்க்.  இதனைச் செயல்படுத்த நான்கு புலவர்களைத் தேடி அழைத்து வந்து அவர்களுக்குச் சம்பளம் கொடுத்து நான்கு மாதங்கள் பணியில் அமர்த்தி அவர்களுடன் இணைந்து பணியாற்றி இந்த 17,000 சொற்களைப் பட்டியலிட்டு புரிந்து கொண்டு லத்தீன், ஜெர்மன் மொழியில் உச்சரிப்பும் விளக்கமும் எழுதி அதனைத் தயாரித்தார்.

இதனை தாம் தயாரித்த போது அனைத்தையும் ஓலைச்சுவடியிலேயே எழுத்தாணி கொண்டு எழுதியிருக்கின்றார் என்பது தமிழைக் கற்றுக் கொள்வதில் அவர் காட்டிய தீவிரத்தை உணர்த்துவதாக அமைகின்றது. ஜெர்மனியின் ஹாலே ஃப்ரான்கன் நிருவனத்தின் அறிக்கையில் குறிப்படப்படும் செய்திகளின் அடிப்படையில், 1712ம் ஆண்டில் தாம் பனை ஓலைச் சுவடிகளில் எழுதி சேகரித்த இந்த  சொற்களஞ்சியமானது 1726ம் ஆண்டில், அதாவது சீகன்பால்க் மறைந்து சில ஆண்டுகள் கடந்த பின்னர் தான் நூல் வடிவம் பெற்றது என்ற செய்தியை அறிகின்றோம்.


இது தவிர தனது இந்தியாவிற்கான இரண்டாவது கடற்பயணத்தின் போதும் சீகன்பால்க் ஒரு நூலை உருவாக்கினார். இது லத்தீன் தமிழ் சொற்றொடர் களஞ்சியம். இந்த நூல் சற்றே வித்தியாசமானது. பொது மக்கள் பயன்பாட்டில் புழங்கப்படும் சொற்றொடர்களின் தொகுப்பாக அமைவது இந்த நூல்.  இந்த நூலில் ஒருமை பண்மை, வேற்றுமை உருபுகளின் பயன்பாடு என்பன எளிமையாக விளக்கப்பட்டிருக்கும். இந்த நூலிலும் மெய்யெழுத்துக்கள் புள்ளியின்றியே அச்சு வடிவத்திலும் எழுதப்பட்டன.



சீகன்பால்கின் புகழ் கூறும் மேலும் ஒரு  நூல் Bibliotheca Malabarica. இது பல தமிழ் நூல்களின் தகவல் அடங்கிய ஒரு அட்டவணை என்றும் கூறலாம். இந்த நூலை நான்கு பகுதிகளாக சீகன்பால்க் பிரித்திருக்கின்றார்.



முதல் பகுதி தமிழில் அமைந்த லூதரேனியன் மத நூல்களின் பட்டியல். இரண்டாம் பகுதியாக அமைவது தமிழில் கிடைத்த கத்தோலிக்க மத நூல்களின் பட்டியல். அடுத்ததாக வருவது 119 தமிழ் ஹிந்து மத, சமண மத நூல்களின் பட்டியல். இந்த பட்டியல் வியக்கத்தகும் வகையில் தமிழ் நூல்களை நமக்கு அறிமுகப்படுத்தும் ஆவணமாகவும் திகழ்கின்றது. இந்த நூல்கள் யாரிடமிருந்து பெறப்பட்டன என்ற பின்புலக் குறிப்புக்களையும் இந்த நூலின் முன்னுரை பகுதியில் சீகன்பால்க் வழங்கியிருக்கின்றார்.  இறுதிப் பகுதியாக அமைவது இஸ்லாமிய தமிழ் நூல்களின் பட்டியல்.

முக்கிய லூதரன் பாதிரிமார்கள்

க்ருண்ட்லர் தமிழ் மொழி ஐரோப்பிய பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தவர் என்ற வகையில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றார். தமிழ் இலக்கணம் என்பதை விட தமிழ் மருத்துவத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தவர் குருண்ட்லர். இவர் மருத்துவ ஓலைச் சுவடிகளை வாசித்து அவற்றை புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் Malabar Medicus என்ற ஒரு லத்தீன் மொழி நூலை ஐரோப்பியர் பயன்பாட்டிற்காக எழுதினார். இவர் தனது மிஷனரி பணிக்காலத்தில் கணிசமான  எண்ணிக்கையில் தமிழில் அமைந்த பனை ஓலைச் சுவடிகளைச் சேகரித்து கோப்பன்ஹாகன் அரசு மையத்திற்கு அனுப்பி வைத்தார். இவை இப்பொழுதும் டென்மார்க் அரசு ஆர்க்கைவிலும் மற்றும் ஜெர்மனியில் ஹாலே ஃப்ராங்கன் நிறுவனத்தில் பாதுகாப்பில் உள்ளன.

பெஞ்சமின் ஷூல்ட்ஸெ (Benjamin  Schultze) தமிழ் மட்டுமன்றி தெலுங்கு ஹிந்துஸ்தானி மொழியிலும் பாண்டியத்துவம் பெற்ற பாதிரியார்.  தமிழில் மிகச் சரளமாக உரையாற்றக் ஊடிய திறமை பெற்றவர் இவர். இவரே பைபிளை தெலுங்கிலும் ஹிந்துஸ்தானி மொழியிலும் முதன் முதலாக மொழி பெயர்த்தவர் என்ற  பெருமையைப் பெறுபவர். இவர் தமிழ், தெலுங்கு மொழிகளின் இலக்கியச் செழுமையை ஜெர்மன் டடேனிஷ் மொழிகளோடு ஒப்பீடு செய்து  எழுதியவர்.  ஷூல்ட்ஸெ பல ஜெர்மானிய கவிதைகளைத் தமிழில் மொழி பெயர்த்தார். Hymnologia Damulica  என்ற இவரது தமிழ் மொழியாக்க நூல் 1723ம் ஆண்டில் வெளியிடப்படது.  சீகன்பால்க் பைபிளை தமிழில் மொழி பெயர்க்க ஆரம்பித்து அப்பணி முடியாமலேயே மறைந்த நிலையில், அப்பணியின் தொடர்ச்சியை மேற்கொண்டு  பைபிளை தமிழில் மொழி பெயர்த்தார் இவர்.  இவரது மொழி பெயர்ப்பு பணிகளின் போது சமஸ்கிருத மொழிக்கும் லத்தீன், கிரேக்க, ஜெர்மானிய மொழிக்கும் தொடர்பு இருப்பதாக தாம் அறிவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.




வால்தர் (Christoph Theodosius Walther 1699 - 1741),  தேம்பவாணி எழுதிய வீரமாமுனிவரின் தமிழ் இலக்கண நூலை பிழை திருத்தம் செய்து வெளியிட்ட ஜெர்மானிய லூத்தரன் மிஷனரி  என்ற பெருமையைப் பெருபவர். தமிழ் இலக்கணத்தில் மிக ஆழமான புலமைக் கொண்டிருந்தவர். லூதரன் பாதிரிமார்களின் வரிசையில் தனியிடம் பெறுபவர் இவர். இவரது Grammatical Observationes (1739) நூல் இவரது தமிழ் இலக்கணத் திறனை வெளிப்படுத்தும் சான்று. கத்தோலிக்க பாதிரியார் வீரமாமுனிவரின் (Jesuit C.J. Beschi) சமகாலத்தவர் இவர். வீரமாமுனிவரின் நூலை பிழை திருத்தி முன்னுரை எழுதியவர் என்ற பெருமையும் பெருபவர் இவர் என்றால் இவரது தமிழ் புலமையை ஓரளவு ஊகிக்க முடிகின்றது அல்லவா?

ரைனூஸ் Rhenius (1790 - 1838) 22 ஆண்டுகள் தமிழகத்தில் இருந்து தமக்கு முந்திய லூதரன் பாதிரி மார்களின் இலக்கண நூல் உருவாக்க முயற்சிகளை ஆய்ந்து அவற்றை மேலும் செம்மையாக்கி தனது தமிழ் இலக்கணப் படைப்பாக  A Grammar of the Tamil language with an Appendix  என்ற 300 பக்க நூலை உருவாக்கினார். இந்த நூல் 1836ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

முடிவுரை
ஜெர்மானிய லூதரன் பாதிரிமார்களின் தமிழகத்திற்கான வருகையும் அதன் பின்னர் அவர்கள் தீவிர ஈடுபாட்டுடன் தமிழ் மொழி கற்று ஐரோப்பாவில் தமிழ் மொழி கல்லூரியில் பாடமாக போதிக்கப்பட வேண்டும் என்று மேற்கொண்ட முயற்சிகளும் வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் நிகழ்வுகள். தமிழ் மொழியில் அமைந்த நூல்களும் ஆவணங்களும் இன்னமும் பல ஐரோப்பிய நூலகங்களிலும், அருங்காட்சியகங்களிலும் பாதுகாக்கப்படுகின்றன என்ற செய்தியை அறிந்து அவற்றை வாசித்து அறிந்து கொள்ள வேண்டியது உலகளாவிய அளவில் தமிழ் மொழியின் நிலையை அறிந்து கொள்ள உதவும்!

துணை குறிப்புக்கள்

  • German Indology, C.S.Mohanavelu
  • தமிழ் மொழியின் முதல் அச்சு புத்தகம், தமிழ்நாடன்
  • Es begann in Tranquebar, Die Geschichte der ersten evangelischen Kirche in Indien, Arno Lehmann
  • German Tamil studies, Arno Lehmann