Wednesday, March 25, 2015

ஜொஅன்னா ஆகிய போப்பாண்டவர் ஜோன்

ஏசு கிறிஸ்து சிலுவையில் ஏற்றப்பட்டு கொல்லப்பட்ட பின்னர் அவரது பூத உடலை சடங்குகளுடன் மண்ணில் புதைத்தனர்.   ஆனால் அவரது சிந்தனைகளும் எழுப்பிய கேள்விகளும் அவரது சீடர்கள் வழியாகவும் அவரது கருத்துக்களை ஏற்றுக் கொண்டு அக்கொள்கைகளைப் பறப்ப  செயல்பட்டோர்  பலர்.  படிப்படியாக இக்குழு ஐரோப்பா எங்கும் தம் கருத்துக்களை விரிவாக்க முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டது. அதில் ஒரு குழுவே பைபிளை அடிப்படையாக்கி ஏசு கிறிஸ்துவின் பெயரில் ஒரு மதத்தை நிறுவியது. 2ம் நூற்றாண்டு வாக்கில் இது மதம் என்ற நிலையிலில்லை. கருத்துக்களின் குவியல் என்பதாக மட்டுமே இருந்தது. இக்கருத்துக்களைப் பரவலாக்க நிறுவனப்படுத்துதல் அவசியம் என நினைத்த பலர் அர்ப்பணிப்புத் தன்மையோடு  தனது ஏனைய பொருளியல் அபிலாஷைகளை விடுத்து கிறிஸ்து தத்துவத்தைப் பரப்புவது ஒன்றே வாழ்க்கையின் குறிக்கோள் எனக் கொண்டு இயங்க ஆரம்பித்தது. அப்போதைய ரோமானியப் பேரரசு இந்த எண்ணத்திற்கு அடிப்படை அமைத்து தனது ராஜியத்தின் ஒரு முக்கிய நோக்கமாக இக்கொள்கைகளைப் பரப்புவதை ஏற்றுக் கொண்டது. அந்த வகையில் ரோமானியப் பேரரசு தனது எல்லைக்குட்பட்டிருந்த எல்லா இடங்களிலும் கிறிஸ்துவ மதத்தைப் பரப்பும்  வழிவகைகளை மேற்கொண்டது. அதில் மிக முக்கிய அங்கமாக தனது அரசின் ஒரு பகுதியாகிய வாட்டிக்கன் நகரை கிறிஸ்து மத்திற்கே விட்டுக் கொடுத்தது.

வாட்டிக்கன் சிட்டி ரோமானியப் பேரரசின், அதாவது இப்போதைய இத்தாலி நாட்டின்  மையத்தில் வீற்றிருக்கும் சிறு நகர். நடந்தால் ஒரு 4 மணி நேரத்திற்குள் சுற்றி வந்து விடலாம்.   1929ம் ஆண்டு முதல் தனி நாடு எனும் அங்கீகாரம் பெற்று இயங்கும் சிறப்புடையது இந்த நாடு. 44 ஏக்கர் நிலப்பரப்பும் ஏறக்குறைய 800 மக்களும் இந்த நாட்டிற்கு சொந்தம். வாட்டிக்கனின் மதத் தலைவர் என்ற பொறுப்புடன் நாட்டுத்தலைவர் என்ற பொறுப்பும் போப்பாண்டவருக்கு உண்டு.  வாட்டிகன் சிட்டிக்குத்  தனிக்கொடியும் உண்டு.

வாட்டிகன் கொடி


வாட்டிக்கன் ரோமன் கத்தோலிக்க மதத்தின் மையம்; ரோமன் கத்தோலிக்க மதம் பரவியிருக்கும் எல்லா நாடுகளுக்கும் சமயத் தலைநகரமாக விளங்குவது;  , இம்மதத்தைப் பின்பற்றும் அனைவருக்கும் சமயத் தலைவராக விளங்கும் போப் வீற்றிருக்கும் பீடமாகவும் வாட்டிகன் அமைந்துள்ளது.

வாட்டிக்கனின் உள் விவகாரங்களை விமர்சித்து சில நூல்கள் வந்தாலும் டான் ப்ரவுனின் டாவின்சி கோட் (DaVinci Code) நாவல் ஏற்படுத்திய தாக்கமும் அவரது அதனைத் தொடர்ந்த நாவலான ஏஞ்சல்ஸ் அண்ட் டீமன்ஸ் (Angels and Deamons) நாவல் ஏற்படுத்திய தாக்கமும் போல வேறெதுவும் ஏற்படுத்தியது எனச் சொல்ல முடியாது. டாவின்சி கோட்  நாவல் உண்மையுடன் கற்பனை கலந்த ஒன்று என்றாலும் அது ஏசு கிறிஸ்துவை வேறொரு பரிமாணத்தில் மக்களைப் பார்க்க வைத்தது.  இதுவரை மக்களுக்காக, மக்கள் சேவைக்காக தன் உயிர் நீத்தவர் என மட்டுமே கொண்டிருந்த பார்வையுடன் அவரும் ஒரு பெண்ணால் காதலிக்கப்பட்டதாகவும், காதலித்ததாகவும், இவர்களுக்கு வாரிசு இருந்தததாகவும் ஏசு கிறிஸ்துவின் பிம்பத்தை மாற்றும் கருத்துக்கு இடம் கொடுக்கும் அச்சந்ததியை  ரோமன் கத்தோலிக்க மத வெறியினர் கொன்று விடாமல் இருக்க நிகழ்ந்த விஷயங்களைத் தொட்டுச் செல்வதாகவும் துணிவாக தனது நாவல்களை டேன் ப்ரவுன் படைத்திருந்தார். இவரது நாவலைத் தொடர்ந்து மேலும் சில நூல்கள் இக்கருத்தை ஆராயும் பின்னனியில் வெளிவந்தன.

 இவ்வகை முயற்சிகள் வாட்டிக்கனின் புகழுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தவே செய்தன. இதுவரை கேள்வியாக்கப்படாத சில சிந்தனைகள் கேள்விக்குட்படுத்தப்பட்டன;  தொடர்ந்து கேள்விகள் பல்வேறு வகையில் வெளிவருவதும் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுவதும் சகஜமாகியிருப்பதையும் கடந்த் ஆண்டுகளில்  ஐரோப்பிய சூழலில் காண்கின்றேன்.

உதாரணமாக ஆப்பிரிக்காவின் பல ஏழை நாடுகளில் கத்தோலிக்க மதம் பரப்பும் செயல்பாட்டில் இறங்கியிருக்கும் பாதிரிமார்கள் எய்ட்ஸ் நோயிலிருந்து விடுபடுவதற்காக உலகச் சுகாதார நிறுவனம் வலியுறுத்தும் கருத்தடைச் சாதனங்களை எதிர்ப்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டது.  தொடர்ந்து ஜெர்மனி, ப்ரான்ஸ் ஆகிய நாடுகளில் தொலைகாட்சி செய்திகளில் இவை பேசப்பட்டன.

பெண் புனித அன்னையருக்கான இடம் எப்போதும் இரண்டாம் பட்ஷம் என்பதுவும் இம்மதத்தில் ஒரு பெண் தலைமைத்துவத்தை பெற முடியாது என்பது சட்டமாகவும் இருப்பது. இதுவும் கேள்விக்குறியாக்கப்பட்டு ஐரோப்பாவின் பல நாடுகளில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரும் ஒரு விஷயமாகவே இன்றும் இருக்கின்றது.  இந்தப்  பிரச்சனைகளுக்கு எரியும் தீயில் எண்ணை ஊற்றுவது போல மேலும் ஒரு விஷயம் அமைந்தது. அதாவது போப்பாண்டவர் பட்டியலில் ஒரு பென்ணும் தலைமைப் பீடம் வகித்து சிலகாலங்கள் இருந்தார் என்பதுவும் இது மறைமுகமாக நடந்த ஒன்று என்றும் குழந்தை பிறக்கையில் அவர் இறந்தார் என்ற வகையில் அமைந்த Pope Joan என்ற திரைப்படம். இத்திரைப்படத்திற்கு ஆதாரமாக இருந்த கதை பல நூற்றாண்டுகளாக கதைகளாக உலா வந்தாலும், 13ம் நூற்றாண்டிலேயே குறிப்புக்களில் அமைந்தாலும், இந்தத் திரைப்படம் வந்த பிறகு இது உண்மையோ எனும் கேள்வி அதிகரித்திருக்கின்ற நிலையை மறுக்க முடியாது.

அமெரிக்க நாவலாசிரியர்  Donna Woolfolk Cross எழுதிய நாவலின் அடிப்படையில்  உருவாக்கப்பட்ட படம் இது. முழு விபரங்களையும் விக்கியில் இப்பகுதியில் காணலாம். http://en.wikipedia.org/wiki/Pope_Joan
நானும் இந்தப் படத்தைக் காணும் வாய்ப்பைப் பெறறபோது கதையின் தன்மை, திரைப்படம் என அனைத்தாலும் ஈர்க்கப்பட்டு ஒன்றிப்போய் பார்த்தேன். படம் பார்த்த  பிறகும்  பல நாட்கள் இக்கதை மனதை ஆக்கிரமித்துக் கொண்டுதானிருந்தது.

இக்கதையில் குறிப்பிடப்படும் ஜொஅன்னா பெண் என்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு  போப்பாண்டவர் வடிவத்தில் ஆட்சி செலுத்தவில்லை; மாறாக தன்னை ஒரு ஆணாகவே கத்தோலிக்க பள்ளியில் காட்டிக் கொண்டு கல்வி கற்று பல்வேறு காரணங்களினாலும் வாய்ப்புக்களாலும் அவரது அசையா இறை நம்பிக்கையாலும், அர்ப்பணிப்புத் தன்மையாலும் வாட்டிக்கன் நிர்வாகத்தில் இடம் பெற்று பின்னர் போப்பாண்டவர் பதவிக்கு வருவதாக கதை அமைந்திருக்கின்றது.

இந்த நாவல் மட்டுமன்றி இந்தச்செய்தியைச் சொல்லும் பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன. உதாரணமாக Catholic Encyclopedia, Pope Joan
The Female Pope: The Mystery of Pope Joan by Rosemary and Darroll Pardoe ஆகியவற்றில் இவரைப் பற்றிய குறிப்புக்களை காணமுடியும்.




இன்றைய ஜெர்மனி, அன்றைய ரோமானியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த சமயத்தில் நிகழ்ந்த சம்பவமாகக் கூறப்படுவது இச்சம்பவம். ஜெர்மனியின்  ஒரு சிற்றூரில் பிறந்து வளரும் ஜொஅன்னா எனும் பெண் தன் வயது இளம் பெண்களைப் போலல்லாது கல்வியில் நாட்டம் கொண்டு அதற்காக ஏங்கி தவிக்கின்றாள். அவளது தந்தையோ தீவிர பழமைவாதி. தனது மகன் மட்டும் கல்வி கற்கவேண்டும்; மகள் படிக்கக்கூடாது எனக் கடுமையாகச் சட்டம் போட்டு வைத்திருக்கின்றான்.  ஆனால் ஜொஅன்னா தனது தமையன் குருவிடம் பாடம் கற்கும் சமயத்தில் ஒளிந்திருந்து கேட்டு பாடம் படித்து தன் அறிவின் பரப்பை நாளுக்கு நாள் விரிவாக்கிக் கொண்டே வருகின்றாள்.  ஒரு நாள் தந்தைக்கு இந்த விஷயம் தெரிந்து விட கடுமையாக அடித்து தண்டனை கொடுக்கும் போது குரு ஜொஅன்னாவின் தீவிரத்தைக் கண்டு தந்தையை ஒரு வழியாகச் சமாதானப் படுத்தி ஜொஅன்னாவை குருகுல வாசத்திற்கு அழைத்துச் செல்கின்றார். இங்கிருந்து இவரது மறுபிறவி தொடங்குகின்றது.

நூல்கள் மட்டுமன்றி இணையத்திலேயே பல பக்கங்களில் போப்பாண்டவர் ஜொஅன்னா பற்றிய தகவல்களை வாசிக்க முடிகின்றது. இப்படத்தின் ட்ரெய்லர் யூடியூபில் கிடைக்கின்றது. இதனை  http://www.youtube.com/watch?v=AKF4Lmt3NsM என்ற பக்கத்தில் காணலாம்.

ஜொஅன்னா ஆகிய போப்பாண்டவர் ஜோன்  ஒரு உண்மை நிகழ்வா என நான் கூற முடியாவிட்டாலும் வாசிக்கக் கிடைக்கின்ற தகவல்கள் இல்லை என்று மறுக்க முடியாத, கேள்விக்கு விடைகாணும் முயற்சிகளுக்கு மேலும் கதவுகளைத் திறப்பதாகவே அமைந்திருக்கின்றது. மதமும் மதம் சார்ந்த விஷயங்களும் மிகக் கவனமாகக் கையாளப்பட வேண்டியவை என்ற வகையில் மட்டுமே எனது தனிப்பட்ட சிந்தனைகளைக் கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரையில் தந்திருக்கின்றேன். ஆய்வுலகம் பறந்தது. மேலும் பல உண்மைகள் வெளிவரலாம். அல்லது இவை போன்ற விஷயஙகள் கதைகள் தாம் என முடிவாக்கப்பட்டு  வரலாற்று நூல்களில் இடம் பெறாமலும் போகலாம்.

சுபா​

Sunday, March 15, 2015

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 79

நூல்களில் செய்திகளை வாசித்து அறிவது என்பது ஒரு அனுபவம். இது சிந்தனைக்கு அதிக உழைப்பைக் கொடுக்கும் ஒரு வேலை. உருவகங்கள் நிறைந்த செய்திகள் என்றால் நமது கற்பனை திறனும் அதில் கலந்து துணை புரிய வேண்டும். இல்லையேல் ஒரு குறிப்பிட்ட விசயம் பற்றிய தெளிவு என்பது நமக்கு கிட்டாது. எவ்வளவு கற்பனை திறனும் ஒப்பீட்டுத் திறனும் வாய்க்கப்பெற்றிருந்தாலும் கூட சில விஷயங்களை நேரடி அனுபவத்தின் வாயிலாகப் பெறுவது தான் அவ்விஷயத்தைப் பற்றிய நல்ல தெளிவினை வாசிப்போருக்குத் தர இயலும். இல்லையென்றால் ஒரு யானையை மூன்று வெவ்வேறு இடங்களில் தொட்டுப்பார்த்து யானை என்றால் இது தான் என முடிவினை எட்டும் கண்புலன் இல்லாதோர் நிலைக்கொப்பத்தான் நமது நிலையும் அமையும்.

பாண்டி நாட்டில் சங்கரநயினார் கோயிலில் தரிசனம் முடித்து விட்டு திருவாவடுதுறை ஆதீனகர்த்தரும் அவர் தம் குழுவும் திருச்செந்தூர் நோக்கி தமது பயணத்தைத் தொடர்ந்த போது ஒரு நாள் கரிவலம் வந்த நல்லூர்  அல்லது கருவை என்றழைக்கப்படும் ஊரில் தங்கியிருக்கின்றனர். இந்த ஊரில் இருக்கும் ஆலயத்தைப் பற்றி தாம் முன்னர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் வாசித்து தெரிந்து கொண்ட  நூல்கள் பற்றியும் அப்போது செய்யுள் தமக்குப் புரிந்தாலும் காட்சி புரியாத நிலை இருந்ததனையும் இப்போது நேரில் ஆலய தரிசனம் செய்யும் போது கிட்டிய தெளிவான அனுபவத்தைப் பற்றியும் விவரிக்கின்றார்.

தமிழ்ப்புலவர் பாண்டிய மன்னர் வரதுங்கராம பாண்டியர் இயற்றிய கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி, கருவைக் கலித்துறை யந்தாதி, வெண்பா அந்தாதி ஆகிய மூன்றையும் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் உ.வே.சாவும் ஏனைய மாணவர்களும் பாடம் கேட்டிருக்கின்றனர் என்ற செய்தியும் அக்காலகட்டத்தில் தமிழ்ப் பயிற்சியைத் தொடங்கும் மாணாக்கர்கள் இந்த ஆலயத்தைப் பற்றி குறிப்பிடும் இந்த நூற்களை படித்திருப்பர், இந்த ஆலயத்தைப் பற்றி நன்கு தெரிந்திருப்பர் என்றும் உ.வே.சா அத்தியாயம் 76ல் குறிப்பிடுகின்றார். பாடல்களைப் படித்த போது தமக்குக் கிட்டிய அனுபவம் வேறு நேரில் ஆலயத்தைக் காணும் போது கிட்டிய அனுபவமே வேறு என்றும் உ.வே.சா குறிப்பிடுகின்றார்.

" ....ஸ்தல சம்பந்தமாக அவர் சொன்ன விஷயங்களைக் கொண்டு அப்போது நான் மனத்திலே ஒரு கோயிலைக் கற்பனை செய்திருந்தேன். கண் முன்னே பின்பு அவ்வாலயத்தைக் கண்டபோது அதுவரையில் விளங்காத விஷயங்கள் விளங்கின. பாடல்களின் அர்த்தத்தைக் காதாற் கேட்டபோது அப்பொருள் குறைவாகவே இருந்தது; பால்வண்ண நாதரைக் கண்ணால் தரிசித்த போதுதான் அப்பொருள் நிறைவெய்தியது. ஸ்வாமிக்கு நிழல் அளித்து நிற்கும் பழைய களாச் செடியையும் பார்த்து விம்மித மடைந்தேன்."

இக்காலத்திலும் மாணர்களுக்குக் கல்வி என்பது புத்தகப் படிப்பு என்பது மட்டுமல்லாது அனுபவப் படிப்பாகவும் அமைய வேண்டியது முக்கியமான அம்சம். இதனைக் கருத்தில் கொண்டு வரலாற்று சுற்றுலாக்களைப் பள்ளியில் ஏற்பாடு செய்து மாணவர்களைப் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு அழைத்துச் சென்று காட்டி வரவேண்டும். இது மாணவர்களின் அறிவுத் தேடலுக்கு தெளிவினை வழங்குவதோடு மேலும் தொடர்ந்து வாசித்து தெளிவில்லா விஷயங்களுக்குத் தெளிவினைக் காணும் முயற்சியில் நன்கு உதவும். 

பாண்டிய மன்னர் வரதுங்க ராம பாண்டியர் சிறந்த ஆட்சி செய்த மன்னர் என்றும் நல்ல இலக்கிய ஞானம் பெற்ற புலவர் என்ற தகவலும் இப்பகுதியை வாசிக்கும் போது புரிந்து கொள்ள முடிகின்றது.
 
இந்த ஊருக்கு வந்த சமயம் தன்னிடம் திருவாவடுதுறையில் பாடம் கேட்ட தம்பிரான் ஒருவரை வழியில் உ.வே.சா சந்திக்கின்றார். உ.வே.சாவிற்கு அவரை அடையாளம் காண முடியவில்லை. ஏனெனில் அவர் தோற்றம் அவரை அடையாளம் காண முடியாத நிலைக்கு ஆக்கியிருந்தது. முன்னர் தம்பிரானாக  நீண்ட சடாமுடியுடன் ருத்திராட்சத்துடன் இருந்தவர் இப்போது சாதாரண உடையில் குடும்பஸ்தர் தோற்றத்தில் உலவியது தான் இதற்கு காரணம். ஆனால் அந்த மனிதர் இவரை வணங்கி தம்மை அறிமுகப்படுத்திக் கொள்கின்றார். கொக்கலிங்கத் தம்பிரான்  சொக்கலிங்கம் பிள்ளையாகி விட்டமையைக் குறிப்பிடுகின்றார். ஊர் திரும்பியதும் குடும்ப வாழ்க்கையில் நாட்டம் ஏற்பட்டமையால் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவதாகவும் அங்கே ஊரிலேயே ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பாடம் சொல்வதாகவும் ஊரார் தம்மை நன்கு ஆதரித்து வருவதாகவும் கூறுகின்றார்.

இந்தச் செய்தியை  சுப்பிரமணியத் தம்பிரானிடம் சென்று உ.வே.சாவும் ஏனையோரும் குறிப்பிடுகின்றனர். இதற்கு தம்பிரான் சொல்லும் பதில் சுவையானது. பொருள் பொதிந்தது.

"பிறகு அவர் விடை பெற்றுச் சென்றார். நாங்கள் தேசிகரிடம் சென்று சொக்கலிங்கம் பிள்ளையைப் பற்றிச் சொன்னோம். அவர், “துறவுக் கோலம் பூண்டு அந்நிலைக்குத் தகாத காரியங்களைச் செய்வதை விட இம்மாதிரி செய்வது எவ்வளவோ உத்தமம்” என்று சொல்லிப் புன்முறுவல் பூத்தார்."

காவி உடை தரித்து தன்னைத்  துறவி என வெளியே காட்டிக் கொண்டு ஆனால் மறைமுகமாக குடும்ப வாழ்க்கை நடத்தும் சிலரது நடவடிக்கைகளை இன்றும் கூட அவ்வப்போது கேள்விப்படுகின்றோம்.  இத்தகைய சிலரது போக்குகளால் உண்மையான துறவிகளின் நற்பெயர் கூட களங்கம் பெற்று விடுகின்றது. யார் தூய்மையானோர் யார் ஏமாற்று வாதி எனப் பிரித்துப் பார்க்க முயற்சி செய்யாத மக்கள் பலர் இருக்கும் இக்காலகட்டத்தில் சில ஏமாற்றுவாதிகளால் நல்லோர் நற்பெயரும் பாதிப்படைவது நடக்கின்றது.

பல ஏமாற்றுவாதிகளுக்கு காவி உடை தரித்தால் அதிகம் பணம் பார்க்கலாம் என்ற எண்ணம் ஆழப் பதிந்து விட்டது, இப்படி இருப்பதை விட காவி உடையைக் களைந்து விட்டு நேர்மையான வகையில் தன் பணியைச் செய்யலாம். பணம் சம்பாதிப்பது தான் தன் நோக்கம் என்றால் அதற்கு நேர்மையான பல வழிகள் உள்ளன. இதனை இந்த ஏமாற்று வாதிகள் சிந்திப்பார்களா என்பது தான் கேள்வி.

இன்னொரு செய்தியும் இதில் சிந்திக்கத்தக்கது. தம்பிரானாக   இருந்த போது விலகியிருந்த சாதிப் பெயர் தம்பிரான் கோலம் விட்டு நடைமுறை வாழ்க்கைக்குத் திரும்பிய வேளை வந்து ஒட்டிக் கொண்டு விட்டது. சொக்கலிங்கத் தம்பிரான்,  சொக்கலிங்கம் பிள்ளையாக ஊரார் முன் வலம் வர வேண்டிய சமூகச் சூழல். 

சாதி அன்றைய காலகட்டத்தில் ஆழமாக வேர் ஊன்றி இருந்த நிலையினை இப்பகுதி படம் பிடித்துக் காட்டுவதனையும் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

தொடரும்

சுபா

Saturday, March 14, 2015

என் வீட்டுத் தோட்டத்தில்..!

மலர்களில் ஆர்க்கிட் செடிகள் என் கவனத்தைப் பெறுபவை.  ஆர்க்கிட் மலர்களின் பல வகைகளை மலேசிய வனங்களில் பார்த்திருக்கின்றேன். தற்சமயம் என் வீட்டிலும் இங்கு ஏறக்குறைய் 7 வகை ஆர்க்கிட் மலர்செடிகள் இருக்கின்றன.



சில தினங்களுக்கு முன்னர் கடைக்குச் சென்றிருந்த போது நீல நிறத்தில் ஆர்க்கிட் செடி பூத்திருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு வாங்கி வந்து விட்டேன். ஆனால் வாங்கிய பின்னர்தான் தெரிந்தது இது அடிப்படையில் வெள்ளை நிறத்தில் தான் பூக்கும் என்றும் அதனை நீல மலர்களாக்க விரும்பினால் அதற்கென்று பிரத்தியேகமாக விற்கப்படும் ஒரு ரசாயனப் பொருளை செடியின் வேறில் நீரோடு சேர்ந்து ஊற்றி வர வேண்டும் என்றும்.

எனக்கு இப்படி செய்ய உடன்பாடில்லை. ஆக செடியை அப்படியே வைத்திருக்கின்றேன். இந்த பூக்கள் மலர்ந்து உதிர்ந்ததும் வெள்ளை நிறத்திலேயே வந்தாலும் பரவாயில்லை. இயற்கையாக அதன் இயல்புபடி இருக்கட்டும் இந்த ஆர்க்கிட் என்று தான் மனதிற்கு தோன்றுகின்றது

சுபா

Wednesday, March 11, 2015

குடியரசில் பெரியார் உடன்....! - 10

இளம்பெண்கள் பொட்டுக்கட்டுதல் ஒழிப்பு சட்டம் தொடர்பாக குடி அரசு இதழில் ஒரு தலையங்கத்தில் திரு.ஈ.வே.ரா அவர்கள் குறிப்பிடும் சில விஷயங்கள் அக்கால சூழலில் பொட்டுக் கட்டுதல் பற்றிய சில குறிப்புக்களை வழங்குவதாக இருக்கின்றது. தமிழக சூழலில் பெண்களைக் காமப்பொருளாக சமூக ரீதியாக அங்கீகரிக்கச் செய்யும் ஒரு நடைமுறை வழக்கமாக இவ்வழக்கம் இடம் பெற்றிருக்கின்றது. படிப்படியாக பல சமூக நல விரும்பிகளின் தீவிர முயற்சிகளினாலும் பொது மக்கள் மத்தியில் ஓரளவேனும் இந்த சமூக  அநிதியானது குறைக்கப்பட்டது என்ற போதிலும் இப்போதும் கூட அவ்வப்போது பொட்டுக்கட்டுதல் நிகழ்வதாக  செய்திகள் காண்கின்றோம். 

இந்தத் தலையங்கத்தில் திரு.ஈ.வே.ரா அவர்கள் எழுத்திலிருந்து...
ஆதியில் 14 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்குப் பொட்டுக் கட்டுதல் கூடாதென்று சாஸ்திரத்தால் தடுக்கப்பட்டிருக்கின்றது. ஏனெனில் பொட்டுக்கட்டப்பட வேண்டிய பெண் சாஸ்திரப்படி கன்னிகையாயிருக்க வேண்டுமாதலால்14 வயதிற்குள் தான் இந்த சடங்கு செய்வது வழக்கமாக இருந்து வந்தது. அதாவது எந்தப் பென்ணையும் 14 வயதிற்கு மேல் பொட்டுக்கட்ட எந்தக் கோயில் அதிகாரியும் அனுமதிப்பதில்லை.

ஆனால் இப்பொழுது மேற்படி சட்டம் வந்த பிறகு  16 வயதிற்குக் கீழ்பட்ட பெண்களுக்கு பொட்டுக்கட்டப்பட்டால்  கோயிலதிகாரிகள் குற்றவாளிகள் ஆவதோடு  அந்த விதமாக அனேக கேஸ்கள் நடந்து அந்த 25வது சட்டப்படி தண்டனையும் பெற்றிருக்கின்றார்கள்.

ஆகவே வைதீகர்களது அபிப்ராயப்படி பார்த்தாலும் கூட, சாஸ்திரப்படி 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு கோயில்களில் பொட்டுக்கட்ட மத அனுமதி இல்லையென்று தெரிகின்றது.  இந்தியன் பினல்கோடுபடி  ஒரு மைனர் பெண்ணை பொட்டுக் கட்டுவது குற்றமென்றாலும், பேராசையுள்ள பெற்றோர்கள் சிலர் தங்கள் பெண்களுக்குப் பொட்டுக் கட்ட கோவிலினிடமிருந்து உத்தரவு பெற்று விடுகின்றார்கள்.  இது வியபசாரத்திற்கு அனுமது கொடுப்பதாகுமே அன்றி வேறில்லை. பொதுஜன அபிப்ராயம் இதனை சட்டமாக்க அனுகூலமாயேயிருக்கின்றது. பத்திரிக்கையில் இதனை ஆதரித்து எழுதியும் பொதுக்கூட்டங்களில்   ஆதரித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றியும், சுமார் 13 வருஷத்துக்கு மேற்பட்ட ஆண் பெண் சங்கங்களில் அதை ஆதரித்து தீர்மானங்கள்  நிறைவேற்றியும்  இந்தக் கொடிய பழக்கத்தினால் அல்லலுறும்  சமூகத்தினரே இதை சட்டமாக்க வற்புறுத்தி எழுதியும்  இருக்கின்றனர். ...

இந்த நாள்பட்ட சமூகக் கொடுமையை ஒழிக்க யாருக்கும் ஆட்சேபனையோ எதிர் அபிப்பிராயமோ இருக்கவே முடியாது. இந்தியத் தலைவர்கள் கூறியிருப்பது போல் தேவதாசி என்று ஒரு வகுப்பு இருப்பது இந்து சமுதாயத்திற்கே இழிவானது மல்லாமல் இந்து மதத்திற்கே பெரும் பழியுமாகும். ஒரு தனிப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் இழிவு பெண்ணுலகிற்கே ஏற்பட்டதாகுமாகையால் இவ்வழக்கம் பெண்களின் அந்தஸ்தையும் கௌரவத்தையும் பெரிதும் பாதிக்கக்கூடியதாயிருக்கின்றது. அன்றியும் ஒரு குறிப்பிட்ட ஜாதியையோ, சமூகத்தையோ விபச்சாரத்திற்கு அனுமதி கொடுப்பதும் பின்னர் அவர்களை இழிந்த சமுதாயமாகக் கருதுவதும் பெரும் சமூகக் கொடுமையாகும்

குடி அரசு தலையங்கம் - 23.03.1930


பொட்டுக்கட்டுதல் என்ற சமூக அங்கீகரிப்பு வழங்கப்பட்ட விபச்சாரத்தில் ஒரு பெண்ணை, அதிலும் தன் வாழ்க்கை நிலை பற்றி அடிப்படை அறிவு கூட அற்ற நிலையில் இருக்கும் இளம் பெண்ணை தள்ளுவது எப்படிப்பட்ட ஒரு வருந்ததக்க ஒரு நிலை..? நினைக்கும் போதே மனம் அதிர்ச்சியடைகின்றது. அதிலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இத்தகைய கீழ்மையான நிலைக்குத் தள்ளி அவர்கள் வாழ்க்கையை குலைப்பதை எவ்வகையில் நியாயப்படுத்த முடியும்? தங்கள் குழந்தைகளின் முழு வாழ்க்கையையுமே அஸ்தமனமாக்கும் சிந்தனை எப்படி ஒரு பெற்றோருக்கு வர முடியும்? ஏழ்மை.. பணத்தேவை என்பது ஒரு மனிதரை அவ்வளவு கீழ் நிலைக்கு தள்ளி விடமுடியுமா? 

திரு.ஈ.வே.ரா போன்ற சமூக சீர்திருத்தவாதிகளின் பல தொடர்முயற்சிகள் இத்தகைய சமூகக் கேடுகள் குறைய உதவியிருக்கின்றன என்பதோடு சிந்தனை மாற்றத்தையும் அக்காலகட்டத்தில் மக்கள் மத்தியில் கொண்டுவந்தன என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

சுபா

Saturday, March 7, 2015

மகளிர் தினம் - 2015

உலகெங்கும் நாளைய தினம் மார்ச் 8  சர்வதேச மகளிர் தினம்  கொண்டாடப்பட உள்ளது. உலக நாகரிக வளர்ச்சியில் மிக விரிவாக பல பொருளாதார முன்னேற்றங்களை நாம் கண்டு அதனை நுகர்வோராக இருகின்ற அதே வேளையில் உலகின் எல்லா மூலைகளிலும் பெண்களுக்கு எதிரான பலதரப்பட்ட வன்முறைகள் தொடர்ந்து நடந்து வருவதை தொடர்ந்து அன்றாடம் ஏதாவது ஒரு வகையில் கேள்விப்படுகின்றோம்.

வளர்ச்சி அடைந்த நாடுகளாகட்டும், வளர்ச்சி குறைந்த நாடுகளாகட்டும், பொருளாதார முன்னேற்றம் கண்ட நாடுகளாகட்டும், ஏழை நாடுகளாகட்டும், போர் நிகழும் நாடுகளாகட்டும், சமாதானச் சூழல் கொண்ட நாடுகளாகட்டும்...எல்லா இடங்களிலும் ஏதாவது ஒரு வகையில் பெண்கள் தாக்கப்படுவதும், பெண்ணாக இருப்பதால் சகஜமாக கிடைக்க வேண்டிய பல சௌகரியங்கள் தடுக்கப்படுவதும், இரண்டாம் தர சமூகப் பார்வை இருப்பதும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன.

இந்த நிலையில் பெண்களுக்கு கல்வி என்பது பல வகைகளில் பெண்களின் வாழ்க்கை நலம் பெற அடிப்படையை அமைத்துக் கொடுக்கும் கொடையாக அமைந்திருக்கின்றது. பெண்களுக்கு கல்வியும் அது தரும் தன்னம்பிக்கையும், அதனால் ஏற்படும் மேம்பாடும் மிக உறுதியானவை. ஒரு பெண் நிலையாக நின்று போராட்டங்கள் நிறைந்த இந்த உலகில் தனது வாழ்க்கையையும், தனது குடும்பத்தையும் வழி நடத்திச் செல்ல  அடிப்படையை வகுத்துக் கொடுப்பது கல்வி தான்.

பெண்குழந்தைகளுக்கு கல்வி இன்றியமையாதது. எக்காரணத்தினாலும் பெண்குழந்தைகள், பெண்களின் கல்வி தடைபடுவது நிகழ்ந்தால் அதனை சமூகப் பொறுப்புள்ள ஒவ்வொரு தனி மனிதரும் தடுப்போம். பெண்குழந்தைகள் நல்ல கல்வி பெற இந்த மகளிர் தினத்தில் ஏதாவது ஒரு வகையில் இச்சிந்தனையை பரப்புவோம்.



அன்புடன்
சுபா

என் வீட்டுத் தோட்டத்தில்.. இன்று!

வசந்தம் வந்து விட்டது.. என் தோட்டத்தில்..

அன்னைக்கு எப்படி எல்லா குழந்தைகளுமே முக்கியம்தான் என்றாலும் முதல் குழந்தை மேல் சற்றே சிறிய கூடுதல் பாசம் இருக்கும் தானே.. அதே போல எனக்கும் என் தோட்டத்தில் முதலில் முளைத்துப் பூத்திருக்கும் இந்த மலர்கள் மேல் சற்றே  கூடுதல் பிரியம்.

Crocus  க்ரோக்குஸ் மலர்கள்.. ஒரே ஒரு மலர்தான் ஒரு செடியில் பூக்கும்.. பூவே செடி அளவிற்கு இருக்கும்..  இந்தத் தன்மை கொண்டது இந்த மலர்.

தோட்டத்தில் மஞ்சள் ஊதா,கரும் ஊதா என மூன்று வகை நட்டு வைத்திருக்கின்றேன்.. ஆயினும் இந்த மஞ்சள் செடியே முதலில் பூத்திருக்கின்றது.  நேற்று எடுத்த புகைப்படம். இன்றைய சனிக்கிழமையை இந்த மலர்கள் உங்களுக்கு  மகிழ்ச்சிக்குரியதாக ஆக்கட்டும்.



சுபா

JK's Letters to the Schools - 11

2003க்குப் பிறகு மீண்டும் இத்தொடரை தொடர்கின்றேன்.

இன்று காலை வாசித்த போது எழுந்த கருத்துக்களோடு..

JK's Letters to the Schools - 11

ஜே.கே 15 December 1981 எழுதும் கடிதத்தில் இப்படி எழுதுகின்றார்
  .. We are trying politically, legally and socially to bring order in the outer world in which we are living, and inwardly we are confused, uncertain, anxious and in conflict. Without inward order there will always be danger to human life. ..
The universe in the supreme sense has known no disorder.Nature, however terrifying to man, is always in order.. The universe has its own movement of time.Only when man has ordered his life, will he realize the eternal order....We must learn what is disorder and what is order. Disorder is essentially conflict, self-contradiction and division between becoming and being. Order is a state in which disorder has never existed.- J.K.

மேல் உள்ள வாசகத்தை வாசித்த போது என்னுள்ளே எழுந்த எனது சிந்தனை....கீழே தொடர்கின்றது.

உலகம் ஒரு ஒழுங்குடன் தான் இயங்குகின்றது. உலகத்தில் அங்கத்துவம் பெறுகின்ற மனிதர்களாகிய நாம் உலகம் சுட்டும் முழுப் பரிமாண ஒழுங்குடன் இயங்க, இணைந்து நாம்  இயங்குகின்றோமா என்பதே கேள்வியாகின்றது.

ஒழுங்கு தனி மனிதர் ஒவ்வொருவரிடத்திலும் இருக்க வேண்டிய ஒரு பண்பு.  புறத்தே சமூகத்தில் 'அது சரியில்லை இது சரியில்லை' என சுலபமாகக் குறை கூறித் திரியும் நமக்கு உள்ளே நம் மனத்தினுள்ளே எழுகின்ற எண்ணங்கள், வரையறைகள், நம் செயல்பாட்டை நிர்ணயிக்கும் சிந்தனைகள், ஆகியவை ஒரு ஒழுங்குடன் இயங்குகின்றனவா என்பதை நம்மை நாமே கேட்டு அதனை பரிசோதனைச் செய்வதை பெருவாரியாக புறக்கணித்து விடுகின்றோம். தினம் தினம் நான் என்னுள்ளே கேட்க வேண்டிய கேள்விகள் இவை. தனி மனித சிந்தனை, பதப்படுத்தல் என்பது நிகழ இத்தகைய கேள்வியை ஒவ்வொரு தனி மனிதரும் பிறரை நோக்கிச் சுட்டாமல் தனக்குள்ளேயே..எனக்குள்ளேயே.. நானே கேட்டுக் கொள்ள வேண்டியது ஒழுங்க தனி மனித கடப்பாடாக பேணாடிப்படை விஷயமாக ஆகின்றது.

  • எனது கருத்தில் ஒரு ஒழுங்கு இருக்கின்றதா..?
  • எனது  வாசிப்பின் போது எனது கிரகிக்கும் தன்மையில் ஒரு ஒழுங்கு இருக்கின்றதா..?
  • நான் எடுத்துக் கொண்ட கொள்கையில் ஒரு ஒழுங்கு இருக்கின்றதா..?
  • நான் செய்ய நினைத்த.. செய்து முடிக்க நினைத்த ஒரு விஷயத்தை சாதிக்கும் ஒழுங்கு எனக்கு இருக்கின்றதா..?
  • என் மனதினுள் பொறாமை, வெறுப்பு, கோபம், சோம்பேறித்தனம் போன்ற ஒவ்வாத குணங்கள் வந்து அமர்ந்து கொண்டு ஆட்சி செய்யாமல் தவிர்க்கும்  ஒழுங்கு எனக்கு இருக்கின்றதா..?
  • எதிலும் மெத்தனம்.. நடந்தால் நடக்கட்டும் நடக்காவிட்டால் என்ன என்ற பொறுப்பற்ற தன்மையை விலக்கும் ஒழுங்கு எனக்கு இருக்கினதா?
  • என் மனத் தூய்மை போல, உடல் தூய்மை.. புறத்தூய்மை.. சுற்றுப்புறத்தூய்மை ஆகியவற்றை கண்ணும் கருத்துமாகப் பேணும் மனத்தெளிவும் ஒழுங்கும் எனக்கு இருக்கின்றதா..?
..என்பன தினம் தினம் நான் என்னைக் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள் தான்.

எல்லாவற்றிற்கும் மேலாக.. நாம் வாழும் உலகில் சக மனிதர்களோடு, விலங்குகள், பறவைகள், தாவரங்கள் போன்ற சக உயிரினங்களோடு ஒன்றி ஒத்து வாழ்கின்ற நிலையையே இயற்கை நமக்கு கொடுத்திருக்கின்றது. அதில் நான் மட்டுமே ஒரு உறுப்பினர். எனக்காகவே உலகம் இருக்கின்றது.. நான் என்னை மட்டும் பார்த்துக் கொண்டு போகின்றேன்..பிறர் எப்படி இருந்தால் என்ன.. எப்படி ஒழிந்தால் என்ன.. என் சுயநலன் சுய தேவைகள் ஆகியனவே முக்கியம் என்று உலகப் பார்வையை விரிவாக்காமல், தன்னுளேளே மட்டும் குறுக்கிக் கொண்டு செயல்படும் மனிதர்களாக இருப்பது இந்த உலகத்திற்கு நாம் செய்யும் அநீதி அல்லவா?

சுபா

Tuesday, March 3, 2015

ஜெர்மனியில் உயர்கல்வித் தரம் வாய்ந்தோருக்கு வேலை வாய்ப்பு

இன்று காலை வானொலியில் கேட்ட செய்தி.. ஜெர்மனியில் உயர்கல்வித் தரம் வாய்ந்த அயல் நாட்டவர்களுக்கு வேலை தரும் அனுமதியை திட்டமிட்டு செயல்படுத்தப் போவதாக அரசு முடிவெடுத்துள்ளது. இது படிப்படியாக செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது. அதில் மிக முக்கியம் என்னவென்றால் ஜெர்மானிய மொழி நன்கு எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

தமிழக மாணவர்கள் ஆங்கிலம் கற்பதோடு கூடுதலாக ஜெர்மானிய மொழியும் படிப்பது அதிகமான வேலை வாய்ப்புக்கள் அமைய நல்ல வாய்ப்பினை வழங்கும் என்று எனக்கு தெரிகிறது. இளம் வயதிலேயே மொழிகளை படிக்க பெற்றோர்கள் தூண்ட வேண்டும். குழந்தைகளுக்கு மொழி கற்றல் என்பது இளமையில் மிக எளிமையாக அமையும்.
வேலை வாய்ப்புக்காக என்று மட்டும் இல்லை.. ஜெர்மானிய மொழி ஆங்கில மொழிக்கு வேர் மொழி என்பதோடு பல தத்துவ நூல்கள் ஜெர்மானிய மொழியில் இருக்கின்றன என்பது ஒரு முக்கிய விஷயம்.

ஜெர்மனியோடு இந்திய வர்த்தகத்தொடர்பு என்று எடுத்துக் கொண்டால் குறிப்பிட்ட சில துறைகளை நாம் பட்டியலிடலாம்.
1. கணினி மென்பொருள் துறை - உதாரணமாக கால் செண்டர் வகை பணிகள், எஞ்ஞினியரிங் துறைகள் SAP, Bosch, Daimler,
2.chemical industry, pharmaceutical
3. ப்ரிண்டிங்
4.auto mobile industry
இது தவிர ஏனைய பல துறைகளில் நல்ல பயிற்சி பெற்ற திறன் உடயவர்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது.
உதாரணமாக
-வயதானவர்களைப் பராமரிக்கும் தாதி
-எரி பொருள் ஆய்வுத்துறை
-இயந்திரத்துறை

இவற்றிற்லெல்லாம் வருங்காலத்தில் உள்ளூரில் போதிய பயிற்சி பெற்ற உழைக்கும் சக்தி குறைவாக அமையும் என்று அரசு நினைப்பதால் கல்வித் தகுதி பெற்ற அதே வேளை ஜெர்மானிய மொழியும் நன்கு பேசத் தெரிந்தோருக்கு வேலை வாய்ப்புக்கள் அமையும் என்று தெரிகின்றது.
அருகாமையில் எடுத்துக் கொண்டால் மிக உயரிய வேலையில்லா மக்கள் தொகை எண்ணிக்கை கொண்டிருக்கும் ஸ்பெயின், ரோமேனியா போன்ற நாடுகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டமை தெரிகின்றது. ரஷ்யர்களும் அப்படியே.

இந்த மூன்று நாடுகளிலும் பலர் இப்போது மிகத் தீவிரமாக ஜெர்மானிய மொழி படிக்கின்றனர். குறிப்பாக ஸ்பெயின் பட்டதாரிகள் ஜெர்மானிய மொழி படித்து ஜெர்மனிக்கு வேலை தேடி வருவது கடந்த சில ஆண்டுகளில் நடக்கும் ஒரு விஷயம் தான்.

ஆசிய நாடுகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும். குறிப்பாக சீனா, தாய்லாந்து வியட்நாம் ஆகிய நாடுகளைச் சொல்வேன்.. இவர்கள் மிகுந்த விழிப்புடன் அமெரிக்கா தவிர்த்த ஏனைய மேற்குலகத்திலும் ஐரோப்பிய நாடுகளில் வேலை வாய்ப்புக்களைத் தேடி வந்து பெறுகின்றனர்.
தமிழ் நாட்டிலும் இத்தகைய முயற்சிகளைத் தொடங்கலாம். மற்றொரு மொழி படிப்பது எப்போதுமே கூடுதல் நன்மையைத் தான் தருமே தவிர கீழ்மையைத் தராது.