Monday, November 28, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 107

சுப்பிரமணிய தேசிகர் மறைந்த சில நாட்களிலேயே அதாவது 19.1.1988ம் ஆண்டில் தியாகராச செட்டியார் மறைந்தார். ஒரு இழப்பிலிருந்து உ.வே.சா மீள்வதற்குள் அடுத்த இழப்புச் செய்தி திடீரென்று வரும் என்று உ.வே.சா நினைத்திருக்காத தருணம் அது. 

உ.வே.சாவின் கல்வி மற்றும் ஆய்வு தொடர்பான புற வாழ்க்கையில் மிக முக்கியமான மூன்று பேர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, சுப்பிரமணிய தேசிகர் அதற்கடுத்து தியாகராச செட்டியார் ஆகியோர். இவர்கள் மூவரையுமே படிப்படியாக இழக்கும் சூழல் நிகழ்ந்தது. இது இயற்கையின் விதி. இதில் சாமானிய மனிதர்கள் நாம் மாற்றுவதற்கு ஒன்றுமில்லை. மரணத்தின் வழி ஏற்படும் இழப்புக்களைத் தாங்கும் மனமும், அடுத்து அவரவர் வாழ்க்கையைச் சரியான நெறியில் தொடர்வதும் தான் உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய கடமை. நமக்கு வழிகாட்டியாக சிலர் இருந்தது போல நாம் பிறருக்கு வழிகாட்டியாக வாழ்க்கையில் உயரும் நிலையை நாமே தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். 

தியாகராச செட்டியாரின் பிரிவில் வாடிய உ.வே.சா அவரை நினைத்து மனம் வருந்தி சில செய்யுட்களை எழுதினார். இந்த நேரத்தில் பத்துப்பாட்டு ஆராய்ச்சி அவருக்குச் சிந்தனையை ஒருமுகப்படுத்த உதவியது. பேரிழப்புக்களினால் உண்டான வலியை ஆராய்ச்சியின் வழி மறக்கவும் மனதைத் தேற்றிக் கொள்ளவும் உ.வே.சா பழகிக்கொண்டார். ஆனாலும் நெருக்கமாக நம்முடன் பழகியவர்களின் சிந்தனை அவ்வளவு எளிதில் மறையக்கூடியதா என்ன? இதனை அவரே தம் குறிப்பில் இப்படி எழுதுகின்றார். 

"சுப்பிரமணிய தேசிகர், தியாகராச செட்டியார் என்னும் இருவர் பிரிவும் என்னை வருத்தினாலும் பத்துப் பாட்டு ஆராய்ச்சியை நிறுத்தவே இல்லை. அந்தத் துக்கத்தை ஆராய்ச்சியினால் மறக்க எண்ணினேன். இன்னும் ஏட்டுப் பிரதிகள் இருந்தால் நல்ல பாடம் கிடைக்குமென்ற எண்ணம் உண்டாகும். அச்சமயங்களில் சுப்பிரமணிய தேசிகர் இருந்தால் திருநெல்வேலிப் பக்கத்திலிருந்து பல ஏட்டுச் சுவடிகளை வருவித்துக் கொடுப்பாரென்ற நினைவும் கூடவே வரும். நல்ல பகுதிகளைக் காணும் போதெல்லாம் தியாகராச செட்டியார் கேட்டால் 
அளவில்லாத மகிழ்ச்சி கொள்வாரே என்ற ஞாபகம் உண்டாகும்." 

இப்படித்தான்.. யாரை மறக்க நினைக்கின்றோமோ அவர்களைப் பற்றிய சிந்தனைதான் நம் மனதில் அடிக்கடி வந்து நம்மைக் கலங்க வைக்கும். இதனையெல்லாம் பார்த்து கலங்கி விடாது கடந்து செல்லும் போதே நம் மனம் மேலும் உறுதி பெறும். 

பத்துப்பாட்டு ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருந்தது. சிந்தாமணி ஒரு வகையில் சவால்கள் நிறைந்த ஆய்வாக இருந்தது போலவே பத்துப்பாட்டும் எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடியதாக இல்லை. மேலும் பல ஏட்டுப் பிரதிகள் கிடைத்தால் பாட பேதங்களை அலசி ஆராய்ந்து நல்ல பதிப்பைக் கொண்டு வர இயலும் என்ற சிந்தனையில் இருந்தால் உ.வே.சா. இதற்குத் திருநெல்வேலி செல்வது உதவும் எனத் தோன்றவே திருவாவடுதுறையில் புதிய ஆதீனகர்த்தராகப் பதவி ஏற்றிருந்த அம்பலவாண தேசிகருடன் தன் கருத்தைத் தெரிவித்தார், அவரும் திருநெல்வேலியில் இருக்கும் திருவாவடுதுறை மடத்து ஸ்ரீசாமிநாத தம்பிரானுக்குத் தகவல் அனுப்பி உ.வே.சாவின் ஆய்வுக்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். 

ஸ்ரீசாமிநாத தம்பிரான் நெல்லையில் இருந்த கவிராஜ ஈசுவரமூர்த்தி பிள்ளை என்பவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். இவரும் இவரது சகோதரரும் அங்குப் பெரிய செல்வந்தர்கள். அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது மேலை வீதியில் உள்ள அவரது இல்லத்தின் புத்தக அறையை திறந்து காட்டியிருக்கின்றார். பார்த்தபோது உடல் சிலிர்த்துப் போனார் உ.வே.சா. முன்னர் தமிழ்ச்சங்கத்தில் இப்படித்தான் நூல்களை வைத்திருந்தார்களோ புலவர் பெருமக்கள் என நினைத்துக் கொண்டார். அந்தப் புத்தக அறையில் ஏட்டுச் சுவடிகள் அனைத்தும் மிக ஒழுங்காக, தூய்மையாகப் பூச்சிகள் இன்றி எடுஹ்ட்துப் பயன்படுஹ்ட்தும் வகையில் திருத்தமாக வைத்திருந்ததையும் உ.வே.சா குறிப்பிடுகின்றார். அந்த நூல்களையெல்லாம் ஒவ்வொன்றினையும் எடுத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உ.வே.சாவிற்கு எழுந்தது. 

அவற்றை ஒவோன்றாக எடுத்துப் பார்த்து பத்துப்பாட்டு இருக்கின்றதா எனத் தேடினார். ஒன்று கிடைத்தது. ஆனால் அதில் பொருநராற்றுப்படை முதல் நான்கு பாடல்கள் மட்டுமே இருந்தது. உ.வே.சாவைக் கவலை தொற்றிக் கொண்டது. இங்கே கடல் போல இத்தனை நூல்கள் உள்ளன. இங்குக் கூட கிடைக்கவில்லையென்றால் வேறு எங்குக் கிடைக்கப்போகின்றது என யோசிக்கலானார். அவரது கவலை படர்ந்த முகத்தைப் பார்த்து கவிராஜ ஈசுவரமூர்த்தி பிள்ளை காரணம் கேட்க அதற்கு உ.வே.சா, 

"சங்கப் புலவருடைய வீட்டைப்போல விளங்கும் இவ்விடத்தில் தமிழ்ச் செல்வம் முழுவதும் கிடைக்குமென்று முதலில் எண்ணினேன். நான் எதைத் தேடி வந்தேனோ அது முற்றும் கிடைக்கவில்லையே! தமிழுலகத்தில் இந்தத் தமிழாலயத்தைக் காட்டிலும் சிறந்த இடம் எங்கே இருக்கப் போகிறது! இங்கே அகப்படாதது வேறு எங்கே அகப்படும்! சங்கத்துச் சான்றோர்கள் இயற்றிய நூல்களைத் தமிழுலகம் இப்படி ஆதரவின்றிப் போக்கி விட்டதே!” என்று வருத்தத்தோடு கூறினேன். 

“இந்த வீடு ஒன்றுதான் இப்படி இருக்கிறதென்று நீங்கள் நினைக்க வேண்டாம். இங்கே இன்னும் சில வீடுகளில் பல வகையான ஏட்டுச் சுவடிகள் இருக்கின்றன. அங்கேயும் பார்க்கலாம். ஸ்ரீ வைகுண்டம் முதலிய ஊர்களில் பல கவிராயர்கள் வீடுகள் உண்டு. ஆயிரக்கணக்கான ஏடுகளை அவ்வீடுகளிற் காணலாம். ஆகையால் தாங்கள் சிறிதும் அதைரியம் அடையவேண்டாம்” என்று கவிராஜர் சொன்னார். அந்த இடத்திற் கோவில் கொண்டிருந்த தமிழ்த் தெய்வமே எனக்கு அபயங்கொடுப்பதாக எண்ணிப் பின்னும் சுவடிகளை ஆராயலானேன்." என்று மேலும் நம்பிக்கை அளித்தார் கவிராஜ ஈசுவரமூர்த்தி பிள்ளை . 

ஆயிரக்கணக்கில் ஓலைச்சுவடிகள் இருந்தன என உ.வே.சாவின் குறிப்புக்களிலிருந்து அறியும் போது, அந்த ஓலைச்சுவடிகளெல்லாம் இன்று என்ன ஆயின என்ற கேள்வி தான் என் மனதில் எழுகின்றது. இந்தப் பகுதியை வாசித்த போது இந்தப்பகுதியின் கீழ் அடிக்கோடிட்டு வைத்தேன். இவற்றில் எத்தனைப் பாதுகாக்கப்பட்டன? 
எத்தனைச் சுவடி நூல்கள் அழிந்தன? 
எத்தனைச் சுவடி நூல்கள் அறியாமையால் அழிக்கப்பட்டன? 

இவற்றிற்கு விடை தேடத்தான் வேண்டும்.

தொடரும்..
சுபா

Thursday, November 24, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 106

நம்மோடு துணையிருந்து நமது வளர்ச்சியிலும் பங்கெடுத்துக் கொள்பவர்கள் என்றென்றும் நம்முடன் இருக்க வேண்டும் என்றே எப்போதும் நம் மனம் நாடும். அத்தகையோரை மரணம் என்ற ஒன்று அழைத்துக் கொள்ளும் போது அதனை ஏற்றுக் கொள்ள நம் மனம் விரும்புவதில்லை. அதனை  எதிர்கொள்ளும் நிலை  துன்பகரமானதும் கூட. இத்தகைய இழப்புக்கள் தான் வாழ்வின் நிலையாமையை நாம் அனுபவப்பூர்வமாக உணர வைப்பவை. 

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் மறைவு உ.வே.சாவின் வாழ்வில் மறையாத மனக்காயமாக இருந்தது. அவருக்குப் பின்னர் தாயாகவும், தந்தையாகவும், ஆசானாகவும் இருந்து உ.வே.சாவிற்கு பல வகையில் வழிகாட்டியவர் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் சுப்பிரமணிய தேசிகர். அவர் 7.1.1888 அன்று சிவபதம் அடைந்தார் என்றும் அவர் குறிப்பிட்டு ஏற்பாடு செய்திருந்த தம்பிரானே புதிய சன்னிதானமாகப் பொறுப்பெடுத்துக் கொண்டார்  என்ற செய்தி உ.வே.சாவுக்கு எட்டியது.  இது சற்றும் எதிர்பாராத ஒரு அதிர்ச்சிகரமான தகவலாக அமைந்தது. சிந்தாமணி வெளிவந்து அது தரும் மகிழ்ச்சியைக்கூட இன்னமும் முழுமையாக உணராத நிலையில் சட்டென்று நிகழ்ந்த இந்த துன்பகரமான நிகழ்வு உ.வே.சா வின் மனதில் தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியது. கலங்கிய மனத்துடன் திருவாவடுதுறைக்குப் புறப்பட்டார். அப்போது அவரது மன நிலையை இப்படிக் குறிப்பிடுகின்றார்.

"நின்ற இடத்திலே நின்றேன்; ஒன்றும் ஓடவில்லை; புஸ்தகத்தைத் தொடுவதற்குக் கை எழவில்லை. என்னுடைய உடம்பிலே இரத்த ஓட்டமே நின்று விட்டது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. என்னுடைய ஒவ்வொரு முயற்சியையும் பாராட்டி, எனக்கு வந்த பெருமையைக் காணும்போது தாய் குழந்தையின் புகழைக் கேட்டு மகிழ்வது போல மகிழ்ந்து என்னைப் பாதுகாத்த அந்த மகோபகாரியையும் அவர் எனக்குச் செய்த ஒவ்வொரு நன்மையையும் நினைந்து நினைந்து உருகினேன். என் துக்கத்தை ஆற்றிக் கொள்ள வழியில்லை."

தன் வேதனைக்கு வடிகாலாக சுப்பிரமணிய தேசிகரை நினைத்து சில செய்யுட்களையும் வெண்பாக்களையும் இயற்றினார்.  அவற்றுள் இரண்டினைக் குறிப்பிடுகின்றார்.


“தெய்வத் தமிழின் செழுஞ்சுவையைப் பாராட்டும்
சைவக் கொழுந்தின் சபைகாண்ப தெந்நாளோ?”

“இன்றிரப்பார் வந்தா ரிலரென் றியம்புகுணக்
குன்றின்மொழி கேட்டுவகை கூருநாள் எந்நாளோ?”

அந்தப் பாடல்களை வைத்துக்கொண்டு தனிமையிலே வருந்தினேன். என் துரதிருஷ்டத்தை நினைத்து நொந்து கொண்டேன். அன்று இரவே புறப்பட்டு உடன்வந்த சிலருடன் நேரே திருவாவடுதுறையை அடைந்தேன்."

ஆதீனத்தில் அதற்குள் புதிதாக பொறுப்பெடுத்துக் கொண்ட 17வது பட்டம் ஸ்ரீ அம்பலவாண தேசிகர் உ.வே.சா வைப் பார்த்ததும் கணிவுடன் ஆறுதல் கூறிப் பேசினார். மடத்தில் எல்லா பூஜைகளும் கடமைகளும் ஒழுங்குடன் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆனால் இவர் தேடிய உருவமும் அன்பே உருவாக புன்னகையுடன் உ.வே.சாவை வரவேற்கும் சுப்பிரமணிய தேசிகரோ அங்கில்லை. எல்லாம் வெறிச்சோடிப் போனது போன்ற உணர்வினை அடைந்தார் உ.வே.சா.

குரு பூஜையின் இறுதி நாளில் உ.வே.சா புறப்பட்டு விட்டார். அன்று பரிபூரணம் அடைந்த தேசிகரின் நினைவாக இரங்கற்பாடலகளும் புதிய ஆதீனகர்த்தரை வாழ்த்தி செய்யுட்களும் பாடப்பட்டன. அப்போது சுப்பிரமணிய தேசிகரின் நற்செயல்களுள் ஒன்றாகிய  சிந்தாமணி பதிப்பிற்கு உ.வே.சாவிற்கு  உதவியமையை நினைத்து பாடப்பட்ட ஒரு செய்யுளுக்குப்  பழனிக் குமாரத்தம்பிரானென்பவர் விளக்கமளிக்க, அது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.   அதனை உ.வே.சா கீழ்க்காணும் வகையில் பதிகின்றார்.

"ஆதீனத்து அடியாராகிய பழனிக் குமாரத் தம்பிரானென்பவர் தாம் இயற்றிய இரங்கற் பாக்களை வாசித்து வந்தார். அவற்றுள் ஒரு பாட்டின் பகுதியாகிய, “குருமணி சுப்பிரமணிய குலமணியா வடுதுறைப்பாற் கொழித்துக் கொண்ட ஒரு மணி சிந்தாமணியை யுதவுமணி” என்பதற்குப் பொருள்
சொல்லும் போது, “சிந்தாமணியை உதவுமணி” என்ற பகுதிக்கு, ‘இந்த மடத்தில் தமிழ்க் கல்வி கற்று இப்போது கும்பகோணம் காலேஜிலிருக்கும் சாமிநாதையர் சீவகசிந்தாமணியைப் பதிப்பிப்பதற்கு ஊக்கமளித்துப் பிரதி முதலியன கொடுத்த மகாஸந்நிதானத்தின் அருஞ் செயலை நினைத்தும் சொன்னேன்’ என்று ஒரு காரணம் கூறினாராம். அப்போது அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவர், “சைவ மடமாகிய இந்த இடத்தில் ஜைன நூலுக்குச்
சிறப்புத் தருவது நியாயமன்று. சாமிநாதையர் இந்தமடத்திற்கு வேண்டியவராக இருந்தும் உமாபதி சிவாசாரியார் ‘பொய்யே கட்டி நடத்திய சிந்தாமணி’ என்று சொல்லியிருக்கும் ஜைன நூலை அச்சிட்டது தவறு. அதை நாம் கண்டிப்பதோடு அந்த நூல் பரவாமல் இருக்கும்படி செய்ய வேண்டும்” என்றாராம். அவர் அயலூரிலிருந்து வந்து மடத்திற் சில காலம் தங்கியிருந்தவர். எனக்கும் பழக்கமானவரே. அதைக் கேட்ட தம்பிரான்களும் பிறரும் திடுக்கிட்டனர். அவர் பால் அவர்களுக்குக் கோபமும் உண்டாயிற்று. அவரை உடனே எதிர்த்துத் தக்க நியாயங்கள் கூறி அடக்கி விட்டார்கள். என் நண்பராகிய புலிக்குட்டி இராமலிங்கத் தம்பிரான் அவர்மீது சில வசை கவிகளைப் பாடிப் பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்து அவர் காதிற் படும்படி சொல்லிக் காட்டச் செய்தார்."

ஆதீனகர்த்தர் சுப்பிரமணிய தம்பிரான் அவர்களே மத துவேஷம் எனப்பாராமல் சமண காவியமாக இருந்தாலும் சிந்தாமணியை உ.வே.சா அச்சுப்பதிப்பாகக் கொண்டு வரவேண்டுமென்பதில் மிகுந்த ஆர்வம் காட்டியதோடு அப்பணியில் மிக உறுதுணையாகவும் இருந்தவர்.  அதே மடத்திலேயே  ஒருவர், அதிலும் சன்னிதானத்தின் குருபூஜையில் இவ்வாறு பேசியது உ.வே.சா விற்கு பெறும் மன வருத்ததை ஏற்படுத்தியது. 

என்ன செய்வது ?

நல்ல காரியங்கள் செய்தோரை சொற்களால் துன்புறுத்தும் நிகழ்வுகளைத் தயங்காமல் செய்வோரும் இந்த உலகில் இருக்கத்தானே செய்கின்றனர்.  இத்தகையோர் குறுகிய சிந்தனைக் கொண்டவர்களே. அதிலும் குறிப்பாக மதம் தொடர்பான கருத்துக்கள் எழும் போது தீவிர மத சார்பார்பாளர்களாக இருப்போர் பலர் தம் மதத்தைத் தூக்கி பிடித்து உயர்த்திக்காட்ட நினைத்து பிற மதத்தோரிடம் நெருங்குவதும் இல்லை.  அல்லது பிற மதத்து தத்துவங்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதும் இல்லை. இது ஒரு எல்லைக்குள் தம்மை வைத்துக் கொண்டு அதற்குள் மட்டுமே வாழும் நிலையை  இத்தகையோருக்கு வழங்கும். பொது உலக அறிவும் அது தரும் தெளிவும் இத்தகைய நிலையில் இருப்போருக்கு எட்டாக்கனியே!

தொடரும்..
சுபா

Friday, November 18, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 105

சீவகசிந்தாமணி நூல் வடிவம் பெற்றாகி கைகளில் கிடைத்துவிட்டது. அது ஒரு சாதனை நிகழ்வு. ஆனால் அந்தச் சாதனையை நிகழ்த்த உ.வே.சா செலுத்திய உழைப்பு மிக அதிகம். கடமை உணர்வுடன், எடுத்துக் கொண்ட குறிக்கோளில் சிறிதும் சிந்தனை மாற்றம் கொண்டு கைவிட்டு விடாது, செய்ய நினைத்த காரியத்தை நிறைவேற்றி முடித்து விட்டார். ஆனாலும் அச்சகத்தாருக்குக் கொடுக்க வேண்டிய பண பாக்கி அவரை வருத்திக் கொண்டிருந்தது. நூல் வெளிவந்த உடனேயே யாரெல்லாம் பணம் கொடுத்து நூற்களை வாங்கிக்கொள்வதாகச் சொல்லியிருந்தார்களோ அவர்களிடம் தனித்தனியாக, வீடு வீடாகச் சென்றும், கடிதங்களை எழுதி அஞ்சல் வழி அனுப்பி நினைவு படுத்தி பனத்தைப் பெற்று நூலை வழங்குவது என்ற வகையிலும் அவரது பணிகள் தொடர்ந்தன. இது அலுப்பைத் தருவதாகவே இருந்தது.

எவ்வளவு பெரிய அருங்காரியத்தை ஒரு மனிதர் செய்து முடித்திருக்கின்றார்.. வீடு தேடிச் சென்று நூலை வாங்கிக் கொண்டு காசைக் கொடுத்து அவரைக்காப்பாற்றுவோமே.. என்ற எண்ணம் பொதுவாகவே பெரும்பாலோருக்கு இல்லை. இதுதான் யதார்த்தம். கேளிக்கைகளுக்குத் thaamee தேடிச் சென்று பணத்தைச் செலவு செய்யத் துணியும் மக்களுக்கு அறிவுக்கு விருந்தாகும் நல்ல நூற்களை ஆதரிக்கும் பண்பு என்பது இருப்பதில்லை. இது இன்றும் தொடரும் நிலைதான்.

அப்படிக் காசு கொடுத்து நூற்களைப் பெற்றுக்கொள்வதாகச் சொன்னவர்களுள் ஒருவர் பூண்டி அரங்கநாத முதலியார். அவர் வீடுதேடி உ.வே.சா செல்ல, அவர் இல்லாததால் பெரும் அலைச்சலுக்குப் பின்னர் வீடு திரும்புகின்றார். ஆனாலும் அவர் பணம் தந்து உதவுவார் என்று கருதி அவருக்காக, அவரைப்புகழ்ந்து செய்யுள் பாடி அதைக்கடிதமாக அனுப்புகின்றார். அது சென்றடைந்த சில நாட்களில் அரங்கநாத முதலியாரிடமிருந்து ஒப்புக்கொண்ட பணம் வந்து சேர்கின்றது. புகழ்ச்சிக்கு மயங்காதோர் யார்? விரும்புகின்றோமோ இல்லையோ.. துன்பம் ஏற்படும் காலத்தில் பொருள் படைத்தோரையும் வலிமைப்படைத்தோரையும் புகழ வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகின்றது. இது மிகவும் வருத்தம் தரும் ஒரு அனுபவமாகத்தான் இருக்கும். ஆயினும் சூழ்நிலை அறிந்து சிலகாரியங்களைப் பொறுத்துக் கொண்டு சிலவற்றை அனுசரித்துக் கொண்டு செல்ல வேண்டியதும் நமக்குப் பல வேளைகளில் ஏற்பட்டு விடுவதை நமது சொந்த வாழ்க்கையிலேயே சந்தித்திருப்போம். அவற்றையெல்லாம் கடந்து சென்றால் தான் அடுத்தடுத்த காரியங்களை நம்மால் தொடரவும் முடியும் அல்லவா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தியாகராச செட்டியாரைப் பார்க்கும் வாய்ப்பு உ.வே.சாவிற்குக்கிட்டியது. திருச்சிக்கு ஒரு மாணவரைப் பார்க்கும் நிமித்தம் சென்றிருந்த உ.வே.சா, ஸ்ரீரங்கத்தில் பணியில் இருந்தார். திடீரென்று அவர் வீட்டுக்குச் சென்று அவர் வாசல் கதவைத்தட்ட, உ.வே.சாவைப் பார்த்த தியாகராச செட்டியாருக்கு ஆனந்தம் கரை புரண்டது. "உன்னையே நினைத்துக் கொண்டு படுத்திருக்கின்றேன் " எனச் சொல்லிக்கொண்டு வந்து கட்டிப்பிடித்துக் கொண்டாராம். இவ்வளவு அன்பினை அவர் காட்டுவார் என்று எதிர்பாராத உ.வே.சா விற்கு மனமெல்லாம் மகிழ்ச்சி பொங்கியது. சிந்தாமணி பதிப்புப்பணியை உ.வே.சா முடித்தார் என்ற மகிழ்ச்சி தான் அந்த அன்பிற்குக்காரணம் எனச் சொல்லவும் வேண்டுமா?

தாமும் சிலருக்கு சிந்தாமணி நூற்களை கொடுத்து பணம் புரட்டி உ.வெ.சாவிடம் மறு நாள் கொடுத்தார். நேரம் போவது தெரியாமல் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். சிந்தாமணியிலுள்ள தம்மைக் கவர்ந்த இடங்களையெல்லாம் உ.வே.சா வாசித்துக் காட்ட கண்களில் கண்ணீர் மல்க அவற்றைக்கேட்டு ஆனந்தமுற்றிருந்தார் தியாகராச செட்டியார். இப்படிக் கேட்டுக் கொண்டிருந்த தியாகராச செட்டியார், சட்டென்று நூலில் பலருக்கு நன்றி சொல்லியிருக்கும் உ.வே.சா, தன் பெயரை ஒரு இடத்திலும் குறிப்பிடவில்லையே என தன் மனதில் தோன்றிய ஆதங்கத்தை வெளிப்படையாகச் சொன்னார்.

ஒரு சிறிய காரணத்திற்காகத் தியாகராச செட்டியாரின் பெயரை உ.வே.சா அதில் இணைக்கவில்லை. ஆனால் அந்தப் பொழுதில் அது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவர் உணர்ந்தார். தன் வாழ்க்கையில் மகாவித்துவான், ஆதீனகர்த்தர் ஆகிய இருவருக்குப்பிறகு தனக்குப் பல முக்கிய வேளைகளில் உதவியவர் தியாகராச செட்டியார்தான். கும்பகோணம் கல்லூரியில் தனக்கு வாய்த்திருக்கும் ஆசிரியர் பணியை ஏற்படுத்திக்கொடுத்தவரும் தியாகராச செட்டியார்தான். அப்படி இருந்தும் அவர் பெயரைக் குறிப்பிடாமல் விட்டு விட்டது எவ்வளவு பெரிய தவறு என அப்போது அவர் சிந்தனையில் உதிக்க மனம் வருந்தினார். தான் செய்தது தவறு தான் என அவர் முன்னிலையில் ஒப்புக் கொண்டார்.

இந்த நிகழ்வை மனதில் வைத்துக் கொண்ட உ.வே.சா பிற்காலத்தில் தியாகராச செட்டியார் நினைவாக மூன்று காரியங்களைச் செய்திருக்கின்றார்.

  1. தனது பதிப்பாகிய ஐங்குறுநூற்றுப்பதிப்பைத் தியாகராச செட்டியாருக்கு உரிமையாக்கினார் 
  2. கும்பகோணம் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் தமிழ்ப்பாடம் படிக்கும் ஒரு சைவ மாணவருக்கு வருஷம்தோறும் கல்லூரி படிப்பு முடியும் வரை செட்டியார் பெயரில் நாற்பத்தெட்டு ரூபாய் கொடுத்து வந்தார். 
  3. சென்னைக்கு வந்த பிறகு தான் குடியேறிய இல்லத்திற்குத் தியாகராஜ இல்லம் என்று பெயர் சூட்டினார். 


இவை மூன்றையும் செய்த காலத்தில் தியாகராச செட்டியார் உயிருடன் இல்லை. இருந்து பார்த்து மனம் மகிழும் வாய்ப்பினை உ.வே.சாவும் அளிக்கவில்லை, காலமும் அதற்கு இடமளிக்கவில்லை. நமக்கு உதவியோருக்கும், நற்காரியம் செய்வோருக்கும் அவர்தம் வாழ்நாளிலேயே சிறப்பு செய்து அவர்கள் மனம் மகிழ வைப்பது தான் சிறப்பு. அதுவே அவர்களுக்கு மன ஆறுதலைத்தரும் விசயமாக அமையும். இல்லையென்றால் தக்க நேரத்தில் நமது நன்றியைக் காட்டவில்லையே என நம் மனம் நம்மை வாட்டித் துன்புறுத்தும். அது வேதனைத் தரும் ஒரு அனுபவமாக வாழ்நாள் முழுக்க வடுவாக நம் மனதில் பதிந்து விடும்!

தொடரும்.
சுபா

Saturday, November 12, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 104

நல்ல பணிகளைச் செய்யும் போது ஏதேனும் நன்மைகள் நம் வாழ்வில் நிச்சயம் நடக்கும். சிரமங்கள் பல நிறைந்ததுதான் நம் வாழ்க்கை என்ற போதிலும் நன்மையை நினைத்து கடின உழைப்பினைச் செலுத்தினால் நற்பயன்கள் காலம் தாழ்ந்தாலும் கூட நிச்சயமாகக் கிடைக்கத்தான் செய்யும். உ.வே.சா விற்கும் இத்தகைய நன்மைகள் வெவ்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்வில் நடந்திருக்கின்றன.

கடந்த பதிவில் சிந்தாமணி பதிப்புப் பணியை முடித்ததும் அவருக்கு மறுநாள் காலை ஒரு பரிசு கிடைத்தது எனக்குறிப்பிட்டு எழுதியிருந்தேன். அதனைப் பற்றி இந்தப் பதிவில் விளக்குகின்றேன்.

இன்றைக்கு உ.வே.சா தமிழுலகில் அறியப்படுவதற்கு முக்கியக்காரணமாக அமைவது அவரது சங்க இலக்கிய நூற்பதிப்புக்கள் எனலாம். சங்க இலக்கியத்தைப்பற்றிய பரவலான தகவல் தமிழறிஞர்கள் மத்தியில் இல்லாத காலகட்டம் இது. உ.வே.சா.சிந்தாமணி பதிப்புப்பணியில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் தாம் சந்திக்கும் அன்பர்களிடமெல்லாம் அவர்களுக்கு ஏதாகினும் ஒரு வகையில் ஓலைச்சுவடி கிடைத்தால் அவற்றை தமக்கு தருமாறு சொல்லி அதற்குப் பணமும் தாம் தருவதாகச் சொல்லியிருந்தார். இந்தத் தகவலை அறிந்த ஒருவர்தான் உ.வே.சாவைத் தேடிக் கொண்டு ஒரு தமிழ்ச்சுவடி நூல் கட்டுடன் அவரைக் கண்டு இந்த நூலை ஒப்படைத்து விட்டு பணம் பெற்றுச் செல்ல வந்திருந்தார்.

வேலூரில் இருந்த குமாரசாமி ஐயர் என்ற ஒருவர் இந்த நூலை ஏழை வித்துவான்களின் வீடுகளிலிருந்து சேகரித்ததாகவும் அப்படிக்கிடைக்கும் சுவடிகளை தேவைப்படுவோருக்கு விற்று பணம் ஈட்டி வாழ்பவர் என்றும் வந்தவர் மூலம் உ.வே.சா அறிந்து கொண்டார்.

அப்படிக் கொண்டு வந்த அந்த மனிதர் கையில் இருந்த சுவடி நூல் சங்க இலக்கிய நூற்களில் ஒன்றான பத்துப்பாட்டு. இதைப்பார்த்ததும் எத்தகைய மகிழ்ச்சி உ.வே.சாவின் மனத்தை நிறைத்திருக்கும் என ஊகிக்க முடிகின்றதல்லவா? அதிலும் சிந்தாமணிப்பதிப்புப் பணியை அல்லும் பகலும் உழைத்து அதனை முடித்து நூல் கையில் வருகின்ற அன்னாளில் உ.வே.சாவிற்குக் கிடைத்த அரும் பரிசு இந்தப் பத்துப்பாட்டு சுவடி நூல். இந்தச் சுவடி நூலைத்தாம் பார்த்த வேளையில் தம் மனதில் எழுந்த உணர்ச்சிகளை இப்படிப்பதிகின்றார் உ.வே.சா.

‘தமிழன்னையே இவர் மூலம் மேலும் தமிழ்த் தொண்டுபுரிய வேண்டுமென்று கட்டளையிடுகிறாள்’ என்று கருதினேன். உடனே அவர் விரும்பியபடி அவர் கையில் ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுத்து அனுப்பினேன்.

“தாயே, நீ சிந்தாமணியை இந்த ஏழை முகமாக மீட்டும் அணிந்துகொண்டாய். பிற ஆபரணங்களையும் அடியேன் கைப்படும்படி செய்து அவற்றைத் துலக்கும் கைங்கரியத்திலே திருவருளைத் துணையாக வைத்துப் பாதுகாக்க வேண்டும்” என்று மனப்பூர்வமாகத் தமிழ்த்தாயை வேண்டிக் கொண்டேன்.

பத்துப்பாட்டு கிடைத்த பின்னர் அதனை அச்சு நூலாக வெளிக்கொணரும் முயற்சிகளில் ஈடுபட்டதோடு ஏனைய சங்க இலக்கிய நூற்களையும் தேடித்தேடி அவற்றை அச்சு நூலாக்குவதை தம் வாழ்க்கையின் மைய நோக்கமாக அமைத்துக் கொண்டார் உ.வே.சா. இது அவருக்குத் தமிழ் அச்சுப்பதிப்பு உலகத்தில் இன்று மங்கா புகழைத் தந்திருக்கின்றது என்றால் அதில் தவறேதுமில்லை.

தொடரும்

சுபா

Sunday, October 30, 2016

தென்னிந்திய சமூகப்புரட்சியின் தந்தை - அயோத்திதாசப் பண்டிதர்

நூல்:
தென்னிந்திய சமூகப்புரட்சியின் தந்தை 
அயோத்திதாசப் பண்டிதர் 

தொகுப்பாசிரியர்: கௌதம சன்னா 

கடந்த சில ஆண்டுகளில் அயோத்திதாசப் பண்டிதர் பற்றிய தகவல்களைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் மடலாடற் குழுமத்தில் அவ்வப்போது ஒரு சில உறுப்பினர்கள்  பகிர்ந்து வருவதை வாசித்திருக்கின்றேன். அதில் மிக முக்கிய விசயமாக அமைவது பண்டிதரின் பெருமுயற்சியில் தொடர்ச்சியாக வெளிவந்த ஒரு பைசா தமிழன் பத்திரிக்கையின் முழுமையான மின்னூல் நம் சேகரத்தில் இணைந்த நிகழ்வு எனலாம். அவ்வப்போது அவரது ஆக்கங்களை வாசித்தறிய  வேண்டும் என நான் முயன்றாலும் தொடர்ச்சியான பல பணிகள் எனது கவனத்தை வேறு வகையில் செலுத்தியது என்பதை மறுப்பதற்கில்லை. அண்மையில் ஒரு குறிப்பைத்தேட எனது இல்ல நூலகத்தை அலசியபோது நண்பர் ஒருவர் வழங்கிய "தென்னிந்திய சமூகப்புரட்சியின் தந்தை - அயோத்திதாசப் பண்டிதர்" என்ற நூல் கிட்டியது. சென்ற வாரம் பாரிஸ் பயணத்தின் போது தொடங்கி பின் முடிக்க இயலாமல் சென்ற நிலையில் இன்று ஏனைய பக்கங்களை வாசித்தேன். 

நூலின் தொகுப்பாசிரியர் திரு.கௌதம சன்னா இரு பகுதிகளாக இந்தத் தொகுப்பு நூலைப் பிரித்து வாசிப்புக்கான தகவல்களைத் தொகுத்திருக்கின்றார். முதல் பாதி, பண்டிதரின் எழுத்துக்களாகப் பரவலாக வெவ்வேறு விசயங்களைத் தொட்டுச் செல்வதாக அமைந்திருக்கின்றது. மறுபாதி அயோத்திதாசப் பண்டிதரைப்பற்றியும் அவர் நடத்திய தமிழன் பத்திரிக்கை பற்றியும், தமிழ் பௌத்தம் பற்றியும், பண்டிதரின் மறைவுக்குப் பின்னர் தொடரப்பட்ட முயற்சிகளைப்பற்றியும் என அமைந்துள்ளது. 

"அயோத்திதாசப் பண்டிதர் என்பவர் யார்" என அறிந்து கொள்ள விரும்புவோருக்கு அறிமுகமாக அமைவதுடன் 19ம் நூற்றாண்டின் இறுதி தொடங்கி தமிழ்ச் சமுதாயத்தின் சீர்திருத்த முயற்சியில் அவரது பங்கு எத்தகையது என்பதைத் தெளிவு குறையாது விளக்கும் ஆதாரச்சான்றுகள் நிறைந்த தரமான நூலாகவும் அமைந்துள்ளது இந்த நூல். அதில் குறிப்பாக பண்டிதரின் எழுத்துக்களின் வழியே வாசகர்களை, அவரை அறிந்து கொள்ள செய்த முயற்சி வரவேற்கத்தக்கது. 

வாழ்க்கை குறிப்பு, எங்குப் பிறந்தார்.. என்ன செய்தார். என்றெல்லாம் நூலைக் கொண்டு செல்லாமல், பண்டிதரின் வாழ்க்கை நோக்கமாக அமைந்திருக்கின்ற அவரது சமூகச்சீர்திருத்தக் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அனைத்துக் கட்டுரைகளும் இடம்பெற்றிருக்கின்றன என்பது மிகச் சிறந்த ஒரு விசயம் என்றே கருதுகிறேன். பண்டிதரின் தமிழன் பத்திரிக்கையிலிருந்து சிறு கட்டுரைகளின் தொகுப்பாக முதற்பகுதியில் இணைந்திருப்பவை சொல்லும் செய்திகள் பண்டிதரின் சிந்தனையில் முழுமையாக ஒடம்பெற்றிருந்த சமூக நிலையை வெளிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றன. உதாரணமாக, 
  • அக்கால பெண்களின் கல்வி அபிவிருத்திக்கு யார் தடையாக இருக்கின்றனர் என்ற அலசல் 
  • மக்களிடையே கல்வி அறிவு பெருகுவதால் நன்மையா அல்லது சாதிப்பற்று பெருகுவதால் நன்மையா என்ற அலசல் 
  • விதவைப் பெண்களின் துன்பங்கள், அவர்களை மறுமணம் செய்து கொடுக்காமல் துன்பத்தில் ஆழ்த்தும் ஆண் சமூகத்தின் மீதான தனது கண்டனம் 
  • சாதிபேதம் ஏற்படுத்தும் சமூகச்சீரழிவு 
  • சமயக்கூடங்களில் சாதிகளும் வேஷங்களும் 
  • மனிதன் தன்னை எப்படி உயர்த்திக் கொள்ள வேண்டும் 
  • சாதிகளற்ற சமுதாயம் 
...என அமைந்திக்கும் கட்டுரைகளைக் குறிப்பிடலாம். 

இதன் தொடர்ச்சியாக அமைந்திருக்கும் புத்தரைப்பற்றியும் பௌத்தத்தைப் பற்றியும் பண்டிதர் எழுதிய நீண்ட கட்டுரை ஒன்றும் இடம்பெறுகின்றது. இது புத்தரின் வரலாற்றை விரிவாக எடுத்துரைப்பதோடு பௌத்த கொள்கைகளை விளக்கும் வாசிப்புப்பொருளாகவும் அமைந்துள்ளது. 

அயோத்திதாசப் பண்டிதரைப்பற்றிய அறிஞர் அன்பு.பொன்னோவியம் அவர்களின் விரிவான கட்டுரை இந்த நூலுக்குத் தனிச்சிறப்பினை வழங்குகின்றது. காரணம், பகுதி பகுதியாக சில கட்டுரைகளின் வழி பண்டிதரைப்பற்றிய அறிமுகத்தை முதல் பகுதியில் பெறும் வாசகர்களுக்கு ஒரு தொகுப்பாக இக்கட்டுரை அமைந்திருப்பதே எனலாம். இக்கட்டுரையில் தமிழன் பத்திரிக்கையில் பல பகுதிகளிலிருந்து தகவல்களைப் பதிந்து அதற்கான தனது கருத்துக்களையும் வழங்கி சீர்திருத்தக்கருத்துக்கள் அக்கால கட்டத்திற்கு எத்தகைய தேவையாக அமைந்தன என்று வலியுறுத்துவதோடு அச்சீர்திருத்தக்கருத்துக்கள் தொடர்ந்து ஒரு சிலரால் பிற்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அயோத்திதாசர் அம்முயர்சிகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தமையின் முக்கியத்துவத்தைப்பதியும் ஆவணமாக இக்கட்டுரை அமைகின்ரது எனலாம். 

இந்த நூலில் தொகுப்பாசிரியர் புகைப்படங்களோடு வழங்கியிருக்கும் சில நூல்களைப் பற்றிய தகவல்கள் சுவாரசியமாக உள்ளன. பண்டிதர் எழுதிய "தென்னிந்திரர் தேச புத்த தர சாஷியக்காரர்கலில் ஒருவளாகிய பாரதமாதா ஔவையார் எனும் ஸ்ரீ அம்பிகையம்மன் வரலாறு", "அரிச்சந்திரன் பொய்கள்" என்பனவற்றோடு திரிசிரபுரம் ஆ.பெருமாள் பிள்ளை எழுதிய "ஆதி திராவிடர் வரலாறு" (1922) ஆகியவற்றைக்குறிப்பிட்டுச் சொல்லலாம். நான் தேடி மின்னாக்கம் செய்ய நினைக்கும் நூற்களின் பட்டியலில் இவையும் இப்போது அடங்கும். 

தென்னிந்திய ஆதிதிராவிட அமைப்புக்கள் பற்றிய செய்திகளும் "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற கருத்தியலின் ஆரம்பக்கால முயற்சிகளைப்பற்றிய தகவல்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 

கல்வி அறிவு ஒன்று மட்டுமே மனிதக்குலத்தை உயர்த்தக்கூடியது. அந்தக்கல்வி என்பது ஒரு நாட்டின் மக்களுக்கு எந்தப்பாரபட்சமும் இல்லாமல் வழங்கப்படவேண்டும் என்ற கருத்தினை அயோத்திதாசார் தனது காலத்தின் தேவையறிந்து வலியுறுத்தியிருக்கின்றார். அந்த வேண்டுகோள் இன்னமும் முழுமையாக நிறைவடையவில்லை என்பது கசப்பான உண்மையாகத்தான் உள்ளது. 

  • மக்களும் அவர்களின் நோக்கமும், என ஆராயும் போது,  
  • அறிவாளிகள் தாம் தங்கள் அறிவால் மக்களையும் நாட்டையும் வழி நடத்த வேண்டும், 
  • ஆட்சியிலுள்ளோர் ஆளுமையில் அறத்தைக் கடைபிடித்தலின் அவசியம், 
  • வணிகர் எத்தன்மைகளுடன் வணிகம் செய்யவேண்டும் 
  • வேளாளர் நிலத்தின் தன்மைக்கேற்ற விவசாயத்தை எவ்வாறு திட்டமிட்டுச் செயல்படுத்த வேண்டும் 
..என விவரிக்கும் பண்டிதரின் கருத்துக்களும், புராணக்கதைகள் என்பன மக்களை மூடர்களாக்காமல் மக்களின் அறிவு விருத்திக்கு உதவுவனவாக இருக்க வேண்டும் என விவரிக்கும் பகுதிகளும் ப்ளேட்டோவின் "தி ரிப்பப்ளிக்" நூலில் சாக்ரட்டீஸ் அடிமண்டீசுடன் பேசும் உரையாடல்களைத்தான் எனக்கு  நினைவுறுத்தின. 

சமூக சீர்திருத்தம் என்பது எல்லா மக்களுக்கும் சமதர்மமாக, எல்லோரும் குடிமக்களே என்ற பார்வையுடன், மக்களுக்கான நீதி குறையாது அமைந்திருக்க வேண்டியது அரசின் தலையாய கடமை . அதனை வலியுறுத்தும் பண்டிதரின் எழுத்துக்கள் முக்கியமானவை. அதிலும் குறிப்பாக இன்றைய நடைமுறையில் மிக மிகத் தேவை என்று நான் கருதுகிறேன். 

எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய பண்டிதரின் முயற்சியைச் சொல்லும் தொகுப்பாசிரியரின் கட்டுரை மிக அருமை. 

நூலில் இடம்பெற்றிருக்கும் தகவல்களுக்கு இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் ஒவ்வொன்றும் சிறப்பு சேர்க்கின்றன. நல்லதொரு முயற்சி. அயோத்திதாசர் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர் அனைவருக்கும் மட்டுமல்லாது சமூக நீதி, சமூக நலன் என்ற வகையிலான ஆய்வுகளில் ஆர்வம் காட்டுவோருக்கும் இது நல்ல நூலாக அமைகின்றது. நல்லதொரு நூலை வாசித்த திருப்தியை இந்த நூல் வழங்கியிருக்கின்றது! 


நூல் குறிப்பு விபரங்கள்
க.அயோத்திதாசப் பண்டிதர் நூற்றாண்டு (1914-2014) நினைவேந்தல் மலர்
தொகுப்பாசிரியர்: கௌதம சன்னா
அச்சாக்கம்: முல்லை அச்சகம், சென்னை - Tel 044-42663840
விலை ரூ 150/-

தென்னிந்திய சமூகப்புரட்சியின் தந்தை அயோத்திதாசப் பண்டிதர்

நூல் விமர்சனம் - முனைவர் சுபாஷிணி

தென்னிந்திய சமூகப்புரட்சியின் தந்தை 

அயோத்திதாசப் பண்டிதர்


தொகுப்பாசிரியர்: கௌதம சன்னா



கடந்த சில ஆண்டுகளில் அயோத்திதாசப் பண்டிதர் பற்றிய தகவல்களைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் மடலாடற் குழுமத்தில் அவ்வப்போது ஒரு சில உறுப்பினர்கள் பகிர்ந்து வருவதை வாசித்திருக்கின்றேன். அதில் மிக முக்கிய விசயமாக அமைவது பண்டிதரின் பெருமுயற்சியில் தொடர்ச்சியாக வெளிவந்த ஒரு பைசா தமிழன் பத்திரிக்கையின் முழுமையான மின்னூல் நம் சேகரத்தில் இணைந்த நிகழ்வு எனலாம். அவ்வப்போது அவரது ஆக்கங்களை வாசித்தறிய வேண்டும் என நான் முயன்றாலும் தொடர்ச்சியான பல பணிகள் எனது கவனத்தை வேறு வகையில் செலுத்தியது என்பதை மறுப்பதற்கில்லை. அண்மையில் ஒரு குறிப்பைத்தேட எனது இல்ல நூலகத்தை அலசியபோது நண்பர் ஒருவர் வழங்கிய "தென்னிந்திய சமூகப்புரட்சியின் தந்தை - அயோத்திதாசப் பண்டிதர்" என்ற நூல் கிட்டியது. சென்ற வாரம் பாரிஸ் பயணத்தின் போது தொடங்கி பின் முடிக்க இயலாமல் சென்ற நிலையில் இன்று ஏனைய பக்கங்களை வாசித்தேன்.

நூலின் தொகுப்பாசிரியர் திரு.கௌதம சன்னா இரு பகுதிகளாக இந்தத் தொகுப்பு நூலைப் பிரித்து வாசிப்புக்கான தகவல்களைத் தொகுத்திருக்கின்றார். முதல் பாதி, பண்டிதரின் எழுத்துக்களாகப் பரவலாக வெவ்வேறு விசயங்களைத் தொட்டுச் செல்வதாக அமைந்திருக்கின்றது. மறுபாதி அயோத்திதாசப் பண்டிதரைப்பற்றியும் அவர் நடத்திய தமிழன் பத்திரிக்கை பற்றியும், தமிழ் பௌத்தம் பற்றியும், பண்டிதரின் மறைவுக்குப் பின்னர் தொடரப்பட்ட முயற்சிகளைப்பற்றியும் என அமைந்துள்ளது.
"அயோத்திதாசப் பண்டிதர் என்பவர் யார்" என அறிந்து கொள்ள விரும்புவோருக்கு அறிமுகமாக அமைவதுடன் 19ம் நூற்றாண்டின் இறுதி தொடங்கி தமிழ்ச் சமுதாயத்தின் சீர்திருத்த முயற்சியில் அவரது பங்கு எத்தகையது என்பதைத் தெளிவு குறையாது விளக்கும் ஆதாரச்சான்றுகள் நிறைந்த தரமான நூலாகவும் அமைந்துள்ளது இந்த நூல். அதில் குறிப்பாக பண்டிதரின் எழுத்துக்களின் வழியே வாசகர்களை, அவரை அறிந்து கொள்ள செய்த முயற்சி வரவேற்கத்தக்கது.

வாழ்க்கை குறிப்பு, எங்குப் பிறந்தார்.. என்ன செய்தார். என்றெல்லாம் நூலைக் கொண்டு செல்லாமல், பண்டிதரின் வாழ்க்கை நோக்கமாக அமைந்திருக்கின்ற அவரது சமூகச்சீர்திருத்தக் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அனைத்துக் கட்டுரைகளும் இடம்பெற்றிருக்கின்றன என்பது மிகச் சிறந்த ஒரு விசயம் என்றே கருதுகிறேன். பண்டிதரின் தமிழன் பத்திரிக்கையிலிருந்து சிறு கட்டுரைகளின் தொகுப்பாக முதற்பகுதியில் இணைந்திருப்பவை சொல்லும் செய்திகள் பண்டிதரின் சிந்தனையில் முழுமையாக ஒடம்பெற்றிருந்த சமூக நிலையை வெளிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றன. உதாரணமாக,
-அக்கால பெண்களின் கல்வி அபிவிருத்திக்கு யார் தடையாக இருக்கின்றனர் என்ற அலசல்
-மக்களிடையே கல்வி அறிவு பெருகுவதால் நன்மையா அல்லது சாதிப்பற்று பெருகுவதால் நன்மையா என்ற அலசல்
-விதவைப் பெண்களின் துன்பங்கள், அவர்களை மறுமணம் செய்து கொடுக்காமல் துன்பத்தில் ஆழ்த்தும் ஆண் சமூகத்தின் மீதான தனது கண்டனம்
-சாதிபேதம் ஏற்படுத்தும் சமூகச்சீரழிவு
-சமயக்கூடங்களில் சாதிகளும் வேஷங்களும்
-மனிதன் தன்னை எப்படி உயர்த்திக் கொள்ள வேண்டும்
-சாதிகளற்ற சமுதாயம்
...என அமைந்திக்கும் கட்டுரைகளைக் குறிப்பிடலாம்.

இதன் தொடர்ச்சியாக அமைந்திருக்கும் புத்தரைப்பற்றியும் பௌத்தத்தைப் பற்றியும் பண்டிதர் எழுதிய நீண்ட கட்டுரை ஒன்றும் இடம்பெறுகின்றது. இது புத்தரின் வரலாற்றை விரிவாக எடுத்துரைப்பதோடு பௌத்த கொள்கைகளை விளக்கும் வாசிப்புப்பொருளாகவும் அமைந்துள்ளது.

அயோத்திதாசப் பண்டிதரைப்பற்றிய அறிஞர் அன்பு.பொன்னோவியம் அவர்களின் விரிவான கட்டுரை இந்த நூலுக்குத் தனிச்சிறப்பினை வழங்குகின்றது. காரணம், பகுதி பகுதியாக சில கட்டுரைகளின் வழி பண்டிதரைப்பற்றிய அறிமுகத்தை முதல் பகுதியில் பெறும் வாசகர்களுக்கு ஒரு தொகுப்பாக இக்கட்டுரை அமைந்திருப்பதே எனலாம். இக்கட்டுரையில் தமிழன் பத்திரிக்கையில் பல பகுதிகளிலிருந்து தகவல்களைப் பதிந்து அதற்கான தனது கருத்துக்களையும் வழங்கி சீர்திருத்தக்கருத்துக்கள் அக்கால கட்டத்திற்கு எத்தகைய தேவையாக அமைந்தன என்று வலியுறுத்துவதோடு அச்சீர்திருத்தக்கருத்துக்கள் தொடர்ந்து ஒரு சிலரால் பிற்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அயோத்திதாசர் அம்முயர்சிகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தமையின் முக்கியத்துவத்தைப்பதியும் ஆவணமாக இக்கட்டுரை அமைகின்ரது எனலாம்.

இந்த நூலில் தொகுப்பாசிரியர் புகைப்படங்களோடு வழங்கியிருக்கும் சில நூல்களைப் பற்றிய தகவல்கள் சுவாரசியமாக உள்ளன. பண்டிதர் எழுதிய "தென்னிந்திரர் தேச புத்த தர சாஷியக்காரர்கலில் ஒருவளாகிய பாரதமாதா ஔவையார் எனும் ஸ்ரீ அம்பிகையம்மன் வரலாறு", "அரிச்சந்திரன் பொய்கள்" என்பனவற்றோடு திரிசிரபுரம் ஆ.பெருமாள் பிள்ளை எழுதிய "ஆதி திராவிடர் வரலாறு" (1922) ஆகியவற்றைக்குறிப்பிட்டுச் சொல்லலாம். நான் தேடி மின்னாக்கம் செய்ய நினைக்கும் நூற்களின் பட்டியலில் இவையும் இப்போது அடங்கும்.

தென்னிந்திய ஆதிதிராவிட அமைப்புக்கள் பற்றிய செய்திகளும் "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற கருத்தியலின் ஆரம்பக்கால முயற்சிகளைப்பற்றிய தகவல்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

கல்வி அறிவு ஒன்று மட்டுமே மனிதக்குலத்தை உயர்த்தக்கூடியது. அந்தக்கல்வி என்பது ஒரு நாட்டின் மக்களுக்கு எந்தப்பாரபட்சமும் இல்லாமல் வழங்கப்படவேண்டும் என்ற கருத்தினை அயோத்திதாசார் தனது காலத்தின் தேவையறிந்து வலியுறுத்தியிருக்கின்றார். அந்த வேண்டுகோள் இன்னமும் முழுமையாக நிறைவடையவில்லை என்பது கசப்பான உண்மையாகத்தான் உள்ளது.
மக்களும் அவர்களின் நோக்கமும், என ஆராயும் போது,
-அறிவாளிகள் தாம் தங்கள் அறிவால் மக்களையும் நாட்டையும் வழி நடத்த வேண்டும்,
-ஆட்சியிலுள்ளோர் ஆளுமையில் அறத்தைக் கடைபிடித்தலின் அவசியம்,
-வணிகர் எத்தன்மைகளுடன் வணிகம் செய்யவேண்டும்
-வேளாளர் நிலத்தின் தன்மைக்கேற்ற விவசாயத்தை எவ்வாறு திட்டமிட்டுச் செயல்படுத்த வேண்டும்
..என விவரிக்கும் பண்டிதரின் கருத்துக்களும், புராணக்கதைகள் என்பன மக்களை மூடர்களாக்காமல் மக்களின் அறிவு விருத்திக்கு உதவுவனவாக இருக்க வேண்டும் என விவரிக்கும் பகுதிகளும் ப்ளேட்டோவின் "தி ரிப்பப்ளிக்" நூலில் சாக்ரட்டீஸ் அடிமண்டீசுடன் பேசும் உரையாடல்களைத்தான் எனக்கு நினைவுறுத்தின.
சமூக சீர்திருத்தம் என்பது எல்லா மக்களுக்கும் சமதர்மமாக, எல்லோரும் குடிமக்களே என்ற பார்வையுடன், மக்களுக்கான நீதி குறையாது அமைந்திருக்க வேண்டியது அரசின் தலையாய கடமை . அதனை வலியுறுத்தும் பண்டிதரின் எழுத்துக்கள் முக்கியமானவை. அதிலும் குறிப்பாக இன்றைய நடைமுறையில் மிக மிகத் தேவை என்று நான் கருதுகிறேன்.

எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய பண்டிதரின் முயற்சியைச் சொல்லும் தொகுப்பாசிரியரின் கட்டுரை மிக அருமை.

நூலில் இடம்பெற்றிருக்கும் தகவல்களுக்கு இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் ஒவ்வொன்றும் சிறப்பு சேர்க்கின்றன. நல்லதொரு முயற்சி. அயோத்திதாசர் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர் அனைவருக்கும் மட்டுமல்லாது சமூக நீதி, சமூக நலன் என்ற வகையிலான ஆய்வுகளில் ஆர்வம் காட்டுவோருக்கும் இது நல்ல நூலாக அமைகின்றது. நல்லதொரு நூலை வாசித்த திருப்தியை இந்த நூல் வழங்கியிருக்கின்றது!

நூல் கிடைக்குமிடம்;
கரிசல் பதிப்பகம்
வேளச்சேரி, சென்னை.
தொடர்புக்கு 04422451444
+919445376080
விலை ரூ 150/-

Friday, October 28, 2016

ஹிட்லரின் நாட்குறிப்பு

ஹிட்லரைப் பற்றிய பேச்சுக்கள் எழுந்தால் நாசி கொடுங்கோல் ஆட்சி என்பது மட்டுமே பலர் மனதில் நிற்கின்றது. அவரை விட கொடுமையான ஆட்சியை உலகம் முழுவதும் பலர் நடத்தியிருக்கின்றனர். ஆயினும் அது ஒப்பீட்டு அளவில் பேசப்படுவதில்லை. ஹிட்லரின் நாசி அரசின் கொடுமைகளுக்கு மறுபக்கமாக அவரது பல சீரிய குணங்களை, நடைமுறை பழக்க வழக்கங்களை, நிகழ்த்திய கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையை, பொருளாதார அடிப்படை கொள்கைகளை, அவரது அரசியல் ஆளுமையை பேசத்தயங்குகின்றனர் . இதற்கு முக்கியக் காரணம் ஹிட்லரைப் பற்றிய பொதுவாசிப்பு என்பது பலருக்கு இல்லாமை என்பதே எனக் கருதுகிறேன்.

ஹிட்லர் டைரி எழுதும் பழக்கம் கொண்டிருந்தார். அவரை ஓரளவு புரிந்து கொள்ள நினைப்போருக்கு அது உதவும் முக்கிய ஒரு ஆவணம்.

அதிலிருந்து ஒரு நாள் குறிப்பொன்றை பகிர்கிறேன்.

June 22 1941 -Wed :
Invaded Russia. Eggs for lunch - hard boiled again - I hate that. Must speak to Eva about it.

1941ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி:
ரசியாவிற்குள் படையெடுப்பு. முட்டைகள் மட்டுமே மதிய உணவு. மீண்டும் அதிக நேரம் அவித்த முட்டைகள். அவற்றை வெறுக்கிறேன். இதனைப்பற்றி ஏவாவிடம் பேசவேண்டும்.
-சுபா

கேள்வி கேட்டால்..



கேள்வி கேட்டால் தவறு என சொல்லி சொல்லி வளர்த்த சூழலில் கேள்விகளே கேட்காமல் சொன்னவற்றை சுய நிந்தனையின்றி ஏற்றுக் கொள்ளும் குழந்தைகள் நிலை மிகப் பரிதாபமானது. அவர்கள் சிந்திக்கவே பயப்படுவார்கள். 

சென்ற ஆண்டு டிசம்பரில் நான் தேவகோட்டை சேர்மன் மாணிக்கம் அரசு பள்ளிக்குச் சென்றிருந்தேன். அங்கு சந்தித்த மாணவர்கள் மிக சுறுசுறுப்பனாவர்கள் என்பதோடு சொன்ன தகவல்களைக் கவனத்துடன் கேட்டு எனது உரைக்கு ஏற்ற வகையில் கேள்விகளைக் கேட்டார்கள். ஒருவர் விட்டு ஒருவர் என ஆர்வத்துடன். இவர்களின் மேல் ஏற்பட்ட ஆரவத்தினால் ஜெர்மனி திரும்பும் முன் மீண்டும் ஒரு முறை சென்றிருந்தேன். இந்த ஆண்டும் இந்த மாணவர்களைச் சந்திக்க 1/2 நாள் எனது தமிழகப் பயணத்தில் ஒதுக்கியுள்ளேன். அருமையான மாணவ்ர்கள். அருமையான ஆசிரியர்கள். குறிப்பாகத் தலைமை ஆசிரியர் திரு.சொக்கலிங்கம் மிகப் பாராட்டுதலுக்குறியவர்.


Thursday, September 22, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 103

என் சரித்திரம் நூலின் நூறாவது அத்தியாயம் சிந்தாமணி அச்சுவடிவம் பெற்று நூலாக வெளிவந்த நிகழ்வை விவரிக்கும் ஒரு பகுதி. சிந்தாமணியைப் பதிப்பிக்கும் போது அது தக்க முறையில் தமிழ் மக்களைச் சென்று சேரவேண்டும் என்ற பெரிய ஆதங்கம் உ.வே.சாவிற்கு இருந்ததை இந்த அத்தியாயத்தில் காண்கின்றோம்.

சீவக சிந்தாமணியின் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களோடுகடஹியின் நாயகனான சீவகனின் கதையை இணைக்கவேண்டும் என முயற்சித்து அதனை முகவுரையில் எழுதினார். தனக்கு அறிமுகமான சமண இலக்கியவாதிகளிடம் அதனைக்காட்டி தவறுகள் திருத்தி வைத்துக் கொண்டார்.பின்னர் நூலாசிரியரான திருத்தக்கதேவரது வரலாற்றைச் சமணர்கள் தமக்குள்ளே வழிவழியாக சொல்லி வந்த கர்ணபரம்பரை கதைகளின் உள்ள விசயங்களைத் தேர்ந்தெடுத்து அதனை வசன் நடையில் தயாரித்து அதனையும் சமண இலக்கியவாதிகளிடம் காட்டி வேண்டிய திருத்தங்களை உட்புகுத்தி தயார் செய்தார். அதோடு நிற்காமல், சீவகன் சரித்திரத்தில் அவனுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புப் பெயர்களை தனியாகப் பட்டியலிட்டு அதனை அபிதான விளக்கம் என தனிப்பகுதியாகத் தயாரித்து வைத்துக் கொண்டார். இவற்றோடு சீவக சிந்தாமணியின் பெருமைகளை விளக்கும் முகமாக ஒரு விளக்கப்பகுதி போன்று முகவுரை ஒன்றையும் தயார்செய்தார்.

இவற்றையெல்லாம் மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்த்து சரி செய்து நூலில் இணைக்க அச்சகம் அனுப்பி வைத்தார். யாரும் தம்மை குரை கூறிவிடக்கூடாது, தவறுகள் நூலில் வந்து விடக்கூடாது என மிகுந்த கவனத்துடன் இப்பணியைச் செய்து வந்தார். அவரது அப்போதைய மன நிலையை இப்படிக் குறிப்பிடுகின்றார்.

அதனோடு ‘பிழையென்று தோற்றும்படி விஷயங்களை எழுதக்கூடாது’ என்ற நினைவும் இருந்தது. ஆதலின் நான் எழுதியதைப் பலமுறை பார்த்துப் பார்த்து அடித்தும் திருத்தியும் ஒழுங்கு படுத்திக் கொண்டேன். பழக்க மில்லாமையால் ஒவ்வொரு வாக்கியத்தையும் எழுதி முடிக்கும்போது சந்தேகமும் பயமும் உண்டாயின. ‘வான்மீகத்தை இதனோடு ஒப்பிடுவது சரியோ? பிழையோ? ஸம்ஸ்கிருத வித்துவான்கள் ஏதாவது சொன்னால் என்ன செய்வது? என்றும், ‘பிற்கால நூல்களுக்கு வழிகாட்டி என்று சொல்லுகிறோமே; ஜைன நூலாகிய இதை அப்படிச் சொல்லு வதால் சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் நம்மேல் சினம் உண்டாகுமோ?’ என்றும் கலங்கினேன். ‘நம் மனத்திற்குச் சரியென்று தோற்றியதை எழுதி விடுவோம்; பிறகு தவறென்று தெரிந்தால் மாற்றிக் கொள்வோம்’ என்று துணிந்து எழுதலானேன்.

சிந்தாமணியைப் பதிப்பிக்கத்தொடங்கிய நாள் முதல் தனக்குக் கிடைத்த சிந்தாமணி ஏட்டுச் சுவடிகளையெல்லாம் ஒவ்வொன்றையும் தேர்ந்தெடுத்து வைத்துப் பாட பேதங்களை ஆராய்ந்து பதிப்புப்பணியில் ஈடுபட்டிருந்தார் உ.வே.சா. இது கடினமான ஒன்றே.

பதிப்புப்பணி என்பது ஒவ்வொரு பதிப்பாசிரியரையும் பொருத்து மாறுபடும் ஒன்று. சில பதிப்பாசிரியர்கள் சுவடி நூலில் உள்ள பிழைகளை மாற்றங்கள் ஏதும் செய்யாமல் அப்படியே பதிப்பதே முறை என்ற கொள்கையைக் கொண்டிருப்பர். உதாரணமாகப் பேராசிரியர் வையாபுரிப்பில்ளையவர்களின் பதிப்புப்பணி பாணி இத்தகையது எனலாம். ஒரு சிலர் சுவடி நூல்களில் உள்ள எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் ஆகியனவற்றை மாற்றித் திருத்திய நூலாகக் கொண்டு வரவேண்டும் என்ற வகையில் செயல்படுவர். ஆக, பதிப்பாசிரியரின் எண்ணத்தைப் பொறுத்தே பதிப்புப்பணி முயற்சிகள் நடந்தன என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

சிந்தாமணி ஆய்வின் போது வெவ்வேறு சுவடிகளில் இருந்த பாடபேதங்களைப் பார்த்து தான் வருந்தியமையும் ஆக தக்க இடத்தில் திருத்தங்களை உட்புகுத்தி சில மாற்றங்களைச் செய்வது அவசியம் என்ற கருத்து ஏற்படவே திருத்தங்களை செய்து பணிகளை முடித்தார். இதனை உ.வே.சா இப்படிக் குறிப்பிடுகின்றார்.

ஏட்டுச் சுவடிகளிற் கண்ட பாடங்களின் வேறுபாட்டைக் கண்டு கண்டு என் மனம் புண்ணாகியிருந்தது. இன்னபடி இருந்தால் பொருள் சிறக்குமென்று எனக்குத் தோற்றின இடங்களிலும் பிரதியில் உள்ளதையே பதிப்பித்தேன். என்னுடைய கருத்தையோ, திருத்தத்தையோ சிந்தாமணியில் ஏற்றாமல் மிகவும் ஜாக்கிரதையாகக் கவனித்துப் பதிப்பித்தேன். பதிப்பிக்கத் தொடங்கிய நூல் எனக்கு ஒரு தெய்வ விக்கிரகம்போல இருந்தது. அதன் அழுக்கைத் துலக்கிக் கவசமிட்டுத் தரிசிக்க வேண்டுமென்பதே என் ஆசை; ‘கை கோணி இருக்கிறது, வேறுவிதமாக அமைக்கலாம்; நகத்தை மாத்திரம் சிறிது திருத்தலாம்’ என்ற எண்ணம் எனக்கு உண்டாகவில்லை. அதன் ஒவ்வோரணுவிலும் தெய்விக அம்சம் இருக்கிறதென்றே நம்பினேன். அழுக்கை நீக்கி விளக்குவதற்கும், அங்கத்தையே வேறுபடுத்துவதற்கும் உள்ள வித்தியாசத்தை நன்றாக அறிந்திருந்தேன். இக்கருத்தை, ‘புராதனமான தமிழ் நூல்களும் உரைகளும் பண்டைவடிவம் குன்றாதிருத்தல் வேண்டுமென்பதே எனது நோக்கமாதலின் பிரதிகளில் இல்லாதவற்றைக் கூட்டியும். உள்ளவற்றை மாற்றியும், குறைத்தும் மனம் போனவாறே அஞ்சாது பதிப்பித்தேனல்லேன். ஒரு வகையாகப் பொருள் கொண்டு பிரதிகளில் இருந்தவாறே பதிப்பித்தேன். யானாக ஒன்றுஞ் செய்திலேன்’ என்று புலப்படுத்தினேன்.

தக்கக் காலத்தில் உடவியோரை நன்றியுடன் நினைத்துப் பார்ப்பது சான்றோருக்கு அழகு. இதனைக் கருத்தில் கொண்டு தனக்கு பல்வேறு வகையில் சிந்தாமணி அச்சுப்பதிப்பாக்கத்தில் உதவிய அன்பர்களுக்கு நன்றி கூறி நன்றியுரை பகுதி ஒன்றையும் நூலில் இணைத்தார். இவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு சென்னைக்குப் புறப்பட்டார். சென்னையை அடைந்து அச்சகத்தாரிடம் அனைத்தையும் கொடுத்து அதனை முழுமை பெறும் பணியைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அச்சகத்திலேயே அன்றிரவு படுத்து உறங்கினார்.

சீவக சிந்தாமணி அச்சுப்பதிப்புப் பணி முடிவுற்றது.

நூல் அச்சு வடிவில் வெளிவந்தது.

அந்த நாளில் உ.வேசாவிற்குஒரு பரிசு அவர் இருக்கும் இடம் தேடி வந்தது. உ.வே.சா இன்று தமிழ்த்தாத்தா எனக் கற்றோராலும் தமிழ் அன்பர்களாலும் சிறப்பிக்கப்படும் ஒரு நிலையை அவருக்குக் ஏற்படுத்திக் கொடுத்த ஒரு பரிசு அது.


சீவக சிந்தாமணி - ஓலைச்சுவடி நூல்
மதுரை அமெரிக்கன் கல்லூரி நூலகத்தில்


தொடரும்...!

சுபா

Sunday, September 11, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 102

மெட்ராசிலிருந்து கும்பகோணம் திரும்பிய பின்னர் கல்லூரி வேலைகளுக்கிடையிலேயே சிந்தாமணி பதிப்புப்பணியை உ.வே.சா தொடர்ந்து வந்தார். அச்சாகி வருகின்ற தாட்களை எழுத்துப் பிழைகள் பார்த்துச் சரி செய்து அதனை அனுப்புதல் என்பது ஒரு பணி. இது சற்றே அதிக காலத்தை எடுக்கும் ஒரு பணிதான். இதற்கும் மேலாக பொருளாதாரப் பிரச்சனை என்ற ஒன்றும் இருக்கின்றது. இந்தக் காலத்திலேயே ஒரு நூலைத் தகுந்த பதிப்பகத்தாரைத் தேடி அச்சிட்டு வெளியிட்டுக் கொணர்வது என்பது எளிதான ஒன்றாக இல்லை என்பதை அறிவோம். ஆக, இன்றைக்கு நூற்றைம்பது ஆண்டுக்கு முன்னிருந்த நிலையை ஊகித்துப் பார்க்கையில், அது எவ்வளவு சிரமங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு பணி என ஓரளவு நாம் ஊகிக்கலாம், அல்லவா?

சிந்தாமணிப்பதிப்பிற்காக அச்சகத்தார் அச்சுக்கூலி, காகிதங்களுக்கான விலை ஆகியனவற்றைத் தெரிவித்துக் கேட்கும் போது அப்பணத்தைத் தகுந்த நேரத்தில் அனுப்பி வைக்க முடியாமல் திண்டாடிப்போனார் உ.வே.சா. பொருளாதார உதவி செய்கின்றோம் என அவருக்குச் சம்மதித்து கையெழுத்து வைத்துக் கொடுத்த நண்பர்களில் சிலரே பணத்தை அனுப்பி வைத்தனர். ஏனையோர் மறந்து விட்டனர் அல்லது ஒதுக்கி விட்டனர். அவர்களுக்கு நினைவூட்டும் வகையில் கடிதம் எழுதுவது, பின்னர் வருகின்ற பணத்தைச் சேகரித்து அச்சகத்தாருக்கு அனுப்புவது என்பதே ஒரு சுமையான வேலையாகிப்போனது உ.வே.சாவிற்கு.

அத்தகைய ஒரு காலகட்டத்தில் பாரங்களை அச்சிடக் காகிதம் தேவைப்பட்டபோது அச்சுக்கூடத்து உரிமையாளர் பணம் அனுப்பினால் தான் அச்சுப்பணி தொடரும் எனக் கூறிவிட்டார். என்ன செய்வது எனத் தெரியாது திகைத்த உ.வே.சாவின் நிலையைக் கேள்விப்பட்ட சி.வை.தாமோதரம் பிள்ளையவர்கள் தமக்குத் தெரிந்த ஒரு காகிதக் கடைக்காரரான சண்முகஞ்செட்டியாரை உ.வே.சா தொடர்பு கொண்டு காகிதங்களை முதலில் பெற்றுக் கொண்டு பின்னர் காசு கொடுக்கலாம் என்ற வகையில் பேசி ஒரு ஏற்பாட்டினை செய்து கொடுத்தார். இது தக்க நேரத்தில் கிடைத்த ஒரு உதவியாக அமைந்தது. தேவைப்பட்ட காகிதத்தின் விலை நூற்றைம்பதுரூபாய் மட்டுமே.
ஆகக் காகிதம் கிடைத்தது.
அச்சுப்பணி தொடர்ந்தது.
உ.வே.சா. கல்லூரியில் பணிபுரியும் ஏனைய ஆசிரிய நண்பர்களிடம் கடன் வாங்கி அந்த நூற்றைம்பது ரூபாயையும் கொடுத்து விட்டார்.

இத்தகைய இக்கட்டான, தர்ம சங்கடமான நிலைகள் ஏற்படும் போது அவர் மனம் புண்படாமல் இருந்திருக்குமா?

ஒரு நூலை வெளிக்கொணர அவர் அனுபவித்தச் சிரமங்களைப் போலத்தான் இன்றும் கூட தமிழ் மொழி வளர்ச்சி, வரலாற்றுப்பாதுகாப்பு என உழைக்கும் தன்னார்வலர்களாகிய நம்மில் பலர் சிரமங்களை அனுபவிக்கின்றோம். பணம் படைத்தோருக்கு மனம் இல்லை. தாய்மொழியாகிய தமிழின் மாண்புகளையும் நிலத்தின் வரலாற்றையும் பாதுகாக்க வேண்டிய கடமை உள்ள அரசுக்கோ இத்தகைய விசயங்களின் மீது நாட்டமுமில்லை, அக்கறையுமில்லை, ஆர்வமுமில்லை. ஆகத், தமிழ்ப்பணி என்பது என்றென்றுமே தனிமனிதர்கள் சிலரது முயற்சிகளினாலும் சிறு சிறு குழுக்கள் அல்லது அமைப்புக்களினாலும் தான் வளர்த்தெடுக்கப்படுகின்றது என்பது மறுக்கப்பட முடியாத ஒன்றே!

அன்றைய கால சூழலில் சமண இலக்கியங்கள் என்பன சுவடியாக சமணர்கள் இலக்கிய சூழலுக்குள்ளே மட்டுமே வழக்கில் இருந்தன. சமயம் என்ற ஒரு வகைப்படுத்தலுக்குள் மொழியை வைத்துப் பார்க்கும் மனப்பான்மை கொண்ட கற்றோர் உலகமாக அக்காலகல்விச்சூழலும் கற்றோர் சூழலும் இருந்தன. வைஷ்ணவ இலக்கியங்களை வைஷ்ணவர்கள் மட்டுமே வாசிப்பது போற்றுவது என்பதும், சைவ இலக்கியங்களையும் தத்துவங்களையும் சைவர்கள் மட்டுமே போற்றுவது என்பதும் பொதுவாக இருந்த சூழல். இதில் விதிவிலக்குகளாக சில உண்டு. மறுப்பதற்கில்லை. ஆயினும் பொது நிலை என்பது ஒரு குறிப்பிட்ட சமயத்தைப் பேணுவோர் அதன் வரையறைக்குள்ளேயே நின்று அதற்குள் உள்ள மதம் தொடர்பான இலக்கியங்களை வாசித்தல் போற்றுதல் என்றே அச்சூழல் அமைந்திருந்தது.

அத்தகைய ஒருசூழலில், பிறப்பால் சைவ சமயத்தைச் சேர்ந்த உ.வே.சா, சமண இலக்கியமான சீவக சிந்தாமணியை ஆய்ந்து நேரம் செலவிட்டு, பணத்தையும் உழைப்பும் மட்டுமல்லாது தன் முழு கவனத்தையும் கூடச் செலவிட்டு இப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்க ஒரு முயற்சியே. தமிழ் ஆய்வு என்பது சமய சார்பு அற்று, மொழிக்கு முக்கியத்துவம் தரப்படும் பண்புடன் அமைய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதாகவே உ.வே.சாவின் சிந்தாமணிப் பதிப்பும் ஈடுபாடும் அமைந்தது.

அக்காலத் தமிழ்ச்சூழல் சைவ வைணவ மதங்கள் வெகுவாகப் பேணப்பட்ட காலம் என்பதால் வேற்று மத இலக்கியங்களை அறிந்தோர் இவருள் சிலரே. ஆகச் சிந்தாமணியை சரியான முறையில் அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம் என்ற கருத்து உ.வே.சா மனதில் உருவாகியது. சிந்தாமணியின் நாயகனை விவரித்தும் இக்காப்பியத்தின் ஆசிரியரை விவரித்தும் இதே நூலில் முகவுரை எழுதவேண்டியது அவசியம் என்று உணர்ந்து உ.வே.சா அதனை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்

தொடரும்..
சுபா

Thursday, September 1, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 101

உ.வே.சா சென்னையில் சிந்தாமணி  பதிப்பிற்காக வந்து சேலம் இராமசாமி முதலியார் இல்லத்தில் தங்கியிருந்த காலகட்டம் அது. தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஒரு அறையில் அவர் தங்கியிருந்தார்.  இரவும் பகலும் தனிமையில் அமர்ந்து ஒவ்வொரு ஏடுகளையும் வாசித்துப் பதம் பிரித்து, அச்சுப் பிரதிகளைக் கையெழுத்துப் பிரதிகளோடு ஒப்பிட்டு ப்ரூப் பார்த்து நூல் பதிப்புப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.

இடையில் ஒரு நாள் இராமசாமி முதலியார் உ.வே.சாவை சென்னை காஸ்மோபோலிட்டன் கிளப்பிற்கு அழைத்துச் சென்று அங்கு பில்லியர்ட்ஸ் விளையாடிக் கொண்டிருந்த பூண்டி அரங்கநாத முதலியாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். சிந்தாமணி நூல் பதிப்பிற்குத் தான் நன்கொடை சேகரிப்பதைச் சொன்னதும் நூறு ரூபாய் தருவதாக கையொப்பமிட்டு அந்த நன்கொடை நோட்டு புத்தகத்தை தன் ஏனைய நண்பர்களிடம் காட்டி மேலும் பலரது கையொப்பங்களைப்  பெற்றுத்தருவதாகச் சொல்லி வாங்கிக் கொண்டதோடு, தாம் கூறியபடியே மேலும் நன்கொடைக்கு ஏற்பாடும் செய்து கொடுத்தார் பூண்டி அரங்கநாத முதலியார்.

இந்தப் பகுதியை வாசிக்கும் போது, இன்றைக்கு ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் பொருளாதார ஏற்றம் உள்ளவர்கள் அன்றைய மெட்ராசில் கிளப்புகளுக்குச் செல்வது என்பது ஒரு வகையான பேஷனாகவும், ஆங்கிலேய நாகரிகத்தின் தாக்கத்தில் பில்லியர்ட்ஸ் விளையாட்டு  தமிழகத்திற்கும் அறிமுகமாகி இருந்தமையும் தெரிகின்றது.

சிந்தாமணி பதிப்பு வேலை முழுமையையும் 1886ம் ஆண்டு கோடை விடுமுறையிலேயே செய்து முடித்து விடவேண்டும் என்ற எண்ணத்துடன் தான் உ.வே.சா மெட்ராஸ் வந்திருந்தார். ஆனால் அவர் நினைத்தபடி அனைத்தையும் தயாரித்து முடிக்க முடியவில்லை. கோடை விடுமுறையும் முடியும் நிலையில் இருந்தமையால் கும்பகோணம் திரும்ப வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது.  அதுவரை 144 பக்கங்களுக்கான பணிகள் முற்றுப்பெற்றிருந்தன. அதாவது சிந்தாமணியில் 18 பாரங்கள் அச்சாகியிருந்தன.  இந்த நிலையில் பதிப்புப் பணிகள்  தொடர்ந்து நடக்க வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு தனக்கு அச்சுக்கோப்புக்கள் தயாராகத்தயாராக அனுப்பும்படி சொல்லி கிளம்பி விட்டார். உத்தியோகம் தானே வருமானத்தைக் கொடுக்கக்கூடியது? நிரந்தர உத்தியோகம் அவர் குடும்பத்தை வழி நடத்த மிக முக்கியமாக இருந்ததோடு அவர் விரும்பிய வகையில் மாணவர்களுக்குப் போதிப்பது என்பதும் அவருக்கு மனமகிழ்ச்சியைத் தந்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனாலும்  இந்தக் குறிப்பிட்ட சூழலிலோ, அவர் மனம் கும்பகோணம் செல்வதற்கு விருப்பம் இல்லாமல் தான் இருந்தது. சிந்தாமணி பதிப்புப் பணியிலேயே முழு ஆர்வமும் மனமும் கவனமும் அக்கரையும் அவருக்கு இருந்தது. பிரியக்கூடாதவர்களை விட்டுப் பிரியும் துயரத்துடனேயே    மெட்ராஸிலிருந்து உ.வே.சா புறப்பட்டார்.  

தொடரும்..

சுபா

Tuesday, August 23, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 100




என் சரித்திரம் நூலோடு எனது உலா இன்றுடன் 100வது பதிவை எட்டுகின்றது. இத்தொடரில் என்னுடைய,  அதாவது 2012ம் ஆண்டு ஜூலை மாதம் வெளிவந்த முதல் பதிவில்,   நான் குறிப்பிட்டிருப்பது போல என் சரித்திரம் நூலை நான் எனது இளம் பிராயத்தில் முதலில் வாசித்திருக்கின்றேன். பின்னர் மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2012ம் ஆண்டு லா பால்மா தீவிற்குச் சென்றிருந்தபோது, அந்த ஒரு வார விடுமுறை காலத்தில் மீண்டும் வாசித்தேன். 

முன்னர்  எனது பதின்ம வயதில் படித்ததற்கும் இப்போது மீண்டும் வாசிப்பதற்கும் புரிதலில் எத்தனையோ வேறுபாடுகளை நான் உணர்ந்தேன்.  உ.வே.சாவின் இந்த நூலை வாசிப்பது என்பது வேறு. அதில் அவரது ஒவ்வொரு சொல்லுக்கும் வாக்கியங்களுக்கும் பின் உள்ள பொருளுடன் இணைந்து பயணிப்பது என்பது வேறு. முதல் வாசிப்பில் எனது அனுபவம் என்பது சொல்லுக்குச் சொல், வாக்கியத்துக்குப் பின் வாக்கியத்தின் பொருள் என்ற அளவில் அமைந்தது. எனது அடுத்த வாசிப்பிலோ அனுபவம் மாறுபட்டது. இந்த மாறுபட்ட அனுபவத்திற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னாக்கப்பணிகளில் எனது ஈடுபாடும் அதில் எனது செயல்பாடுகளும். 

எனது கடந்த 17 ஆண்டுகால தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணி அனுபவத்தில், தமிழ் மொழி தொடர்பான பல முயற்சிகள் நிகழ்ந்துள்ளன. மின்னாக்கப்பட்டறைகள், ஆவணத் தேடல்கள், ஆவணப்  பாதுகாப்புப்பணிகள், வாசிப்புக்கள், ஆய்வுகள், சொற்பொழிவுகள்.. இப்படித் தமிழ் மொழி தொடர்பான நடவடிக்கைகள்  என் தேடலையும் அதன் வழி நிறைவேறுகின்ற ஆக்கச்செயல்களையும்  சாத்தியப்படுத்தியிருக்கின்றன. அந்த ஒவ்வொரு காரியத்தின் பின்னனியிலும்  அமைந்த உழைப்பு என்பது எளிமையான பாதைகளை மட்டுமே கொண்டதல்ல. பல நேரங்களில் ஏமாற்றங்கள். பல நேரங்களில் தோல்விகள். பல வேளைகளில் சோர்வும் அயர்வும், என முயற்சிகளின் தொடர்ச்சியை பாதிக்ககூடிய, தடைகளை உருவாக்கக் கூடிய அனுபவங்கள் பலவற்றை இந்தக்  களப்பணி அனுபவம் எனக்குக் கொடுத்திருக்கின்றது. இந்தக்  கடின முயற்சி படிப்படியான  வெற்றியையும் அளிக்கத் தவறவில்லை.  இளம் தலைமுறையினரிடையே வரலாற்றுப் பாதுகாப்பு, புராதனச் சின்னங்கள் பாதுகாப்பு என்ற சிந்தனைகளைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணமும் என் மனதில் நிரைந்திருப்பதால் இப்பணிகள் தொய்வில்லாது தொடர்கின்றன.  இத்தகைய பணிகளில் இருக்கும் போது, வாழ்க்கையில் தனது தமிழ்க்கல்வித்தேடலுக்கு மிக முக்கிய இடத்தை அளித்த உ.வெ.சா எழுதிய அவரது சரித்திரம், ஒரு வகையில்  அதே போன்றதொரு ஆர்வத்தில் ஈடுபட்டிருக்கும் எனக்கும்  உந்துதலாக அமைந்து விட்டது என்பதை நான் மறுப்பதற்கில்லை.

என் சரித்திரம் நூலில் என்னை மிகக் கவர்ந்த பல செய்திகள்  இருக்கின்றன. அவை எல்லாவற்றிலும் மிக முக்கியமாக நான் காண்பது, ஒரு ஆசிரியர் தன் மாணவருக்குக் காட்டும் அன்பும், ஒரு  மாணவர் தன் ஆசிரியருக்குக் காட்டும் அன்பும். இது போலியான மரியாதை அல்ல. ஆத்மார்த்தமான நேசத்தின் விளைவால் தோன்றும் உணர்ச்சிகளின் அனுபவங்கள்.

மகாவித்வான்  மீனாட்சி சுந்தரம் பிள்ளை தன் மாணாக்கர்களிடத்தில் கல்வி போதித்தலோடு தன்  அன்பினை பகிர்ந்து கொண்ட தன்மை என்பது, ஆசிரியர்  தொழிலின்  மதிப்பை மிக உயர்த்திக் காட்டும் நல் உதாரணம். மாணவர் என்போர், கல்வியே உயிராகக் கருதி, அக்கல்வியத் தரும் ஆசானே அனைத்தும் என்று எண்ணும் எண்ணத்திற்கு உதாரணமாக உ.வே.சா திகழ்கின்றார்

கல்வியில் நாட்டம் உள்ள அனைவருக்குமே இவர்கள் இருவரும் மிகச் சிறந்த  உதாரணங்கள் எனக் கருதுகின்றேன். 

இந்த நூலில் வாசிப்போர் கண்களில் நீரை வரவழைக்கும் உணர்ச்சிகரமான பகுதிகள் சில உள்ளன. குறிப்பாக மகாவித்வானின் மறைவு. விடுமுறையில் இருக்கின்றோம், நூலை வாசிக்கின்றோம் என்பதையும்  மறந்து, இப்பகுதியை வாசித்துக் கொண்டிருக்கும் போது என் கண்களில் கண்ணீர் வழிந்ததை என்னால்  இன்றும் மறக்க இயலவில்லை. அவரது துக்கத்திற்குள் வாசிப்போரையும் அழைத்துச் சென்று  அவர் துயரை பகிர்ந்து கொண்டுள்ளார் உ.வே,சா என்றே கூறுவேன்.

என் சரித்திரம் உ.வே.சாவின் இறுதிக்காலங்களில் அவர் கைப்பட எழுதியவை. அதுமுடிவுறும் முன்னரே அவர் மறைந்தார். ஆயினும் கூட எழுதிய பக்கங்களின் எண்ணிக்கையில் ஏறக்குறைய 60% க்கும் குறையாமல் தனது ஆசிரியர் தொடர்பில் அமைந்த செய்திகளிளேயே உ.வே.சா வலம் வருகின்றார். அதன் பின்னர்  பெரும்பாலும் தனது ஆசிரியர் தொழில், தனது பதிப்புப் பணிகள் என செல்கின்றது. சீவக சிந்தாமணிப் பதிப்பு அவர் வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல் என்பதை அவர் இந்த  நூலில் அதற்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவததைக் கொண்டு உணர முடிகின்றது.

உ.வே.சா வலம் வரும் வழியே நாமும் உலா செல்வோம்.

உலா தொடரும்..!
சுபா

Sunday, August 21, 2016

ஜோக்கர் - திரைப்படம்

நேற்று மாலை ‪#‎ஜோக்கர்‬ தமிழ்த்திரைப்படம் பார்த்தேன். திரைப்படமா, நிஜ நிகழ்வா என பிரித்தரியமுடியாத படி இந்தத் திரைப்படம் இருக்கின்றது.

ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை என்பது அத்தியாவசியமான ஒன்று. இதற்கு மக்கள் போராட வேண்டியிருக்கின்றதே. அந்தப் போராட்டத்தைக் கூட சாதகமாக்கிக் கொண்டு அதில் சுய லாபம் பார்க்கும் கூட்டமாக சிலர் இருக்கின்றனரே, என்ற வேதனையை இந்தத் திரைப்படம் என்னுள்ளே ஏற்ப்படுத்தியது.

எளிய மக்கள் வாழவும் முடியாது சாகவும் முடியாது என்பது பரிதாபமானது. கழிப்பறை பல வீடுகளில் இன்றளவும் கூட இல்லை என ஒரு நிலை இருப்பது இதுவரை ஆண்டு வந்த அரசுகள் பொதுமக்களுக்கான தம் கடமைகளைச் சரியாக ஆற்றவில்லை என்பதற்கான அறிகுறிதான். சுதந்திர இந்தியாவில் இன்னமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் கழிப்பறை வசதி வீட்டில் இல்லாது இருக்கின்றார்கள் எனும் போது ஆடம்பரமான அரச நிகழ்வுகளுக்கு மட்டும் கோடிக்கணக்கில் பணம் செலவழிக்க மனம் வருகின்றதே என்பது வருந்த வைக்கும் ஒரு விசயம் என்பதை புறந்தள்ளி விட்டுப் போக இயலவில்லை.

இவ்வகை போராட்டங்களில் பொது மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுத்தால் தான் இந்தப் பிரச்சனைகள் ஒரு பிரச்சனை என்றே பார்க்கப்படும். ஆக, பொதுமக்கள் இத்தகைய சமூகப் போராட்டங்களில் இணைந்து கொண்டு அவற்றை முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு ஆதரவு தரவேண்டும்.

தமிழ்த்திரைப்படம் கனவுலக தொழிற்சாலை அல்ல. நிஜத்தையும் காட்டும் படங்கள் எடுக்கலாம் என்பதற்கு உதாரணமாக இந்தத் திரைப்படம் இருக்கின்றது. படத்தின் இயக்குனருக்கும் படத்திற்ககா உழைத்த அனைவருக்கும் என் பாராட்டுதல்களோடு இத்தகைய விழிப்புணர்ச்சியை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற சிந்தனைக்காக நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
-சுபா

Sunday, August 7, 2016

அடிமை முறையும் தமிழகமும்

அடிமை முறையும் தமிழகமும் – நூல் பற்றிய என் சிந்தனைகள் 

ஆ.சிவசுப்பிரமணியன் 


ஆ.சிவசுப்பிரமணியணின் நூற்களை இந்த ஆண்டு தான் அறிமுகம் கிடைக்கப்பெற்று நான் வாசிக்க ஆரம்பித்தேன். பாளையங்கோட்டையில் நண்பர்முனைவர்.கட்டளை கைலாசம் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, எனது மானுடவியல் தொடர்பான ஆர்வத்தைப் பார்த்து அவர் ஆ.சிவசுப்பிரமணியணின் நூற்களை வாசிக்க வேண்டும் என குறிப்பிட்டதும், பின்னர் முனைவர்.தொ.பரமசிவம் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது அவரும் வலியுறுத்திப் பேசி, சில புத்தகங்களின் பெயரைச் சொல்லி உடனே வாசிப்பது நல்லது எனச் சொன்னதும் எனக்கு இவரது நூற்களை வாங்கி வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியமையால் இவரது ஆக்கங்கள் சிலவற்றை வாசிக்கத் தொடங்கினேன். தமிழ்க்கிருத்துவம், தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி, ஆகியவற்றைக் கடந்த சில வாரங்களில் வாசித்து முடித்து, இன்று அடிமை முறையும் தமிழகமும் என்ற நூலை வாசித்தேன். அதிகாலை தொடங்கி மதியம் நூலை வாசித்து முடித்தாகிவிட்டது. நூலிற்குள் நான் செய்த பயணமோ சங்க காலம் தொடங்கி இக்காலம் வரை, என்றமைந்த நீண்ட பயணம்! 

நூலில் ஆசிரியர் அடிமை முறையின் தோற்றத்தை பற்றி விளக்குவதோடு தொடங்குகின்றார். உலகின் உயர்ந்த நாகரிகங்களாகப் போற்றப்படுகின்ற அனைத்து நாகரிகங்களிலும் பிரிக்கப்படமுடியாத வரலாற்று அங்கமாக அடிமை முறை இருந்தமையை இப்பகுதி விளக்குகின்றது. உலக அதிசங்களுள் இடம் பெறுகின்ற சீனப்பெருஞ் சுவரும் எகிப்தின் பிரமிடுகளும் அடிமைகளின் உழைப்பாலும் ரத்தத்தாலும் கட்டியவை தான் என வாசித்த போது உலக அதிசயங்களின் மேல் இருந்த பிரமிப்பு கரைந்து அவற்றைக் கட்டியவர்களின் வலியே மனதை நிறைத்தது. 

உலகப் பார்வையிலிருந்து சுருக்கி தமிழகத்திற்கு வருகின்றார். சங்க காலத்தில் அடிமை முறை இருந்தது. ஆம். இருந்தது எனச் சொல்லி, போரில் தோற்ற மன்னர்களின் மகளிர் „கொண்டி மகளிர்“ என இருந்தமையை பட்டினப்பாலை ஆசிரியர் குறிப்பிடுவதைச் சுட்டி விளக்குகின்றார். திருவள்ளுவரின் இரு குறள்களைச் சுட்டி, அடிமை முறை இருந்தது என்பதோடு, உள்ளூர் அடிமைகளென்பதோடு மேலை நாட்டு அடிமைகளை மன்னர்கள் வாங்கி வாயிற்காப்பாளராக வைத்திருந்தமையையும் குறிப்பிடுகின்றார். 

அடிமை முறை வளர்ச்சியுற்றதும் அதன் தன்மையில் அதிகார பலம் சார்ந்ததாகவும் வலுப்பெற்ற காலம் பிற்காலச் சோழர் காலமெனச் சொல்லி, போர்க் காலத்தில் அடிமைகள் உருவாக்கப்படுதலும் அவர்களின் உடல் உழைப்பு எவ்வகைப் பணிகளுக்கு பயன்பட்டன என்றும் விளக்குகின்றார். முக்கியமாக வீட்டடிமைகள் என்ற விளக்கம் புதுமையானது, தேவையானது. ஏனெனில், அடிமைகளாக தம்மை கோயில்களுக்குப் பெண்டிரும் சில ஆண்களும் தம்மை விரும்பி அர்ப்பணித்துக் கொண்டார்கள் என்ற சாயம் பூசப்பட்ட கூற்றுகளுக்கு மாற்றாக, பெற்றோர் பட்ட தீரா கடன் என்ற காரணத்தினாலும் குழந்தைகள் அடிமைகளாக விற்கப்பட்ட நிலையை விரிவாகக் காணமுடிகின்றது. அப்படி விற்கப்பட்டோர் அவர்களை வாங்கியவர்களுக்கு அடிமைகளாக ஆக்கப்பட்டனர். 

அந்தணர்களும், வேளாளர்களும், அரசர்களும், அரசு அதிகாரிகளும் கோயிலுக்கும், மடங்களுக்கும் அடிமைகளைத் தானமாகவோ விலைக்கோ கொடுத்த செய்திகளைக் குறிப்பிடுகின்றார். நினைத்துப் பார்க்கின்றேன். இந்தக் கொடுமையான நிலையில் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் துன்பம் ஒரு பொருட்டாக யாருக்கும் படாத நிலையில் பண்டமாற்று போல இந்த மனிதர்கள் நடத்தப்பட்டிருக்கின்றனர் என்பதை அறிய முடிகின்றது. ஒரு சான்றாக கி.பி 1235ம் ஆண்டு கல்வெட்டு என அறியப்படும் திருக்கொறுக்கையில் உள்ள கோயிலில் உள்ள கல்வெட்டு 100க்கும் மேற்பட்ட ஆண் பெண் அடிமைகளின் பெயர்களைத் தாங்கி நிற்பது பற்றிய செய்தியை அறிய முடிகின்றது. 

தேவரடியார்கள் என்போர் சமூகத்தில் உயர் நிலையில் இருந்தார்கள், எனவே அவர்கள் தெய்வீக அடிமைகள், என பகட்டான சொல்லுக்குள் சொல்லிவிட முடியாது என பளிச்சென்று விளக்குகின்றார். தானே தம்மை கோயிலுக்கு அர்ப்பணித்துக் கொண்டோம் என்பதற்கும், பண்டமாற்று போல ஒரு கோயிலிருந்து மறு கோயிலுக்கு விற்பது என்பது ஒரு வகை வியாபார நிலை என்பதையும் கணக்கில் கொள்ளும் போது, கோயில் அடிமைகளின் நிலையில் வெவ்வேறு தன்மைகள் இருந்தன என்பதையும், அனைத்துத் தேவரடியார்களும் பக்தி உணர்வினால் கோயில் பணிக்கு வந்தோர் என்று கூறிவிடமுடியாது என்பதையும் தெளிவு படுத்துகின்றார். 

அடிமை முறையில் கிடைக்கும் தண்டனைகளின் துரம் தாங்காது ஓடிப்போனோரைக் கண்டு பிடித்து , தண்டித்து மீண்டும் வேலை வாங்கிய விசயம் 3ம் குலோத்துங்கன் கல்வெட்டாக திருவாலங்காட்டு கல்வெட்டில் உள்ளமையைச் சான்று தருகின்றார். 

கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், அடிமையானோர் தாம் மட்டும் அடிமை என்றில்லாமல் தங்கள் பரம்பரையே அடிமை என எழுதிக் கொடுத்த சான்றுகள் சில ஓலைச் சுவடிகளில் இருப்பதைக் காண்கின்றோம். 
..சந்திராதித்தர் உள்ளவரை 
..பரம்பரை பரம்பரையாக 
..வழியடினை 
..யானும் எம் வம்சத்தானும் 
..இவர்களையும் இவர்கள் வர்க்கத்தாரையும் 
..எங்களுக்கு கிரமாகதமாய் வருகின்ற 

என்ற வாக்கியங்களின் படி வழிவழியாக தன் சந்ததியினரையும் அடிமைகளாக்கிய நிலைய ஓலை நூல்களிலிருந்து அறிகின்றோம். 

பின்னர் நாயக்கர் கால ஆட்சியில் அடிமை முறை பற்றி ஆய்வு செல்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை நாயக்கர் காலத்தில் சமூக அநீதிகள் என்பன படிப்படியாக அங்கீகாரத்துடன் வளர்த்தெடுக்கப்பட்ட கால கட்டம். 13ம் நூற்றாண்டில் இபான் பத்துடா என்ற ஆப்பிரிக்க முஸ்லீம் பயணி இரண்டு அடிமைப் பெண்களை தாம் வாங்கியது பற்றி தனது பயனக்குறிப்பில் எழுதியிருக்கின்றார். பல்வேறு வகையான அடிமை சாசனங்கள் இந்தக் காலகட்டத்தில் இருந்தமை ஓலைகளிலிருந்து காணமுடிகின்றது. உதாரணமாக ஒரு ஓலைப்பகுதி இப்படி செல்கின்றது. 
„ பறையன் பேரில் அமை சாதனம் பண்ணி குடுத்தபடி யென்னுதான பறையன் சந்தோசி மகன் ராயனை கொள்வார் கொள்ளுவார் யென்றுனான் முற்கூற கொள்வோம் கொள்வோம். 
.. 
பவுத்திர பாரம்பரையம் சந்திர சூரியாள் உள்ளமட்டும், கல்லும் காவேரியும், பில்லும் பூமியும் உள்ளமட்டும் ஆண்டு அனுபவிச்சுக் கொண்டு யெய்ப்பற்பட்ட தொழிலும்...“ 

உள்ளூரில் அடிமைகள் விற்றல் வாங்கல் என்பது மட்டுமன்றி அயல் நாடுகளுக்கு அடிமைகளாக்கப்பட்டோர் விற்கப்பட்டது பற்றியும் அறிகின்றோம். கிபி 1660ல் நடந்த ஒரு விவரம் பற்றி ஏசு சபை ஆவணம் தெரிவிக்கின்றது. அதாவது சொக்கநாத நாயக்கர் (1659-1682) காலத்தில் தமிழகத்தில் பஞ்சம் அதிகரிக்க மக்கள் உணவின்றி வாடிச் செத்தனர். ஒரு சிலரை டச்சுக்காரர்கள் உணவளித்து சற்று தேற்றிக் கப்பலேற்றி அடிமைகளாகக் கொண்டு சென்று விற்றிருக்கின்றனர். என்ன கொடுமை!! 

தொடர்ச்சியாக ஆங்கில ஆட்சிமுறை காலத்தில் கொத்தடிமைத்தனம் பற்றிய செய்திகள் வருகின்றன. பல ஆவணங்கள் அக்கால அடிமை முறை பற்றி விளக்குகின்றன. ஒரு சில மீட்புப்பணி போன்றவையும் நடந்தாலும் ஆங்கிலேய ஆட்சியாளர்களும் இந்திய சூழலில் உள்ள கொத்தடிமை முறை அங்கீகரிக்கப்பட்ட ஒரு நடைமுறை என்றே அதிகார வர்க்கத்துக்குத் துணையாக இருந்து கொண்டு அடிமைத்தனத்தை ஒழிக்க முழு மனதுடன் ஒத்துழையாத நிலையையும் காண்கின்றோம். உதாரணமாக 1800ல் தஞ்சை மாவட்ட கலெக்டர் பள்ளர் பறையர் குல அடிமைகள் அம்மாவட்டத்திலிருந்து வெளியேறிய போது நில உடமையாளர்களிடம் பணிபுரிவதை நிர்ப்பந்திக்க வேண்டும் என்று போலீசுக்கு ஆலோசனை கூறிய சான்றினைக் காண்கின்றோம். இன்னொரு உதாரணத்தில் , 1828ல் பிராமண நிலவுடமையாளரிடம் பணிபுரிந்த சில பள்ளர், குல அடிமைகள் திருச்சி மாவட்டம் வந்து விட, அவர்களைக் கண்டித்து திருச்சி கலெக்டர் ஒரு கடிதம் எழுதித் திருப்பி அனுப்பியுள்ளார். இப்படி வரிசையாக சில உதாரணங்கள் அடிமைகளாக இருந்தோர் மீள நினைத்த போதிலும் அரசாங்கமே அதற்கு முட்டுக்கட்டையாக இருந்த நிலையக் காட்டுவதாக அமைகின்றன. 

„அவர்கள் இந்த மண்ணின் அடிமைகள். அவர்கள் சார்ந்திருக்கும் பண்ணையை விட்டுச் செல்லும் உரிமையற்றவர்கள்“ என கலெக்டர் ஒருவர் எழுதிய கடிதம் அக்காலக் கொடுமைகளை நமக்குப் புலப்படுத்துவதாக உள்ளது. 

இந்தியாவில் அடிமை ஒழிப்பு சட்டம் 1843ல் நிறைவேற்றப்பட்டது. ஆனால் படியாள் முறை, பண்ணையாள் முறை என்ற வடிவில் அடிமைத்தனம் தொடராமல் இல்லை. எழுதப்படிக்கத் தெரியாத அடிமைகளை சான்றிதழ்கள் மூலம் ஏமாற்றி பண்ணை கூலியாட்களாக வைத்துக் கொள்ளும் நிலையையும் சுட்டிக் காட்டுகின்றார். 

„தமிழகத்தில் அடிமைகள் இருந்தது, விலங்குகளைப் போல அவர்களுக்குச் சூட்டுக்குறி இடப்பட்டதும், பொருள்களைப் போல விற்கப்பட்டதும், வாங்கப்பட்டதும், தானமளிக்கப்பட்டதும், சீதனமாகக் கொடுக்கப்பட்டதும், ஆள்பவர்களின் துணையுடன் அடக்கி ஒடுக்கப்பட்டதும் வரலாற்று ரீதியில் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மையாகும்“ என ஆசிரியர் நூலின் இறுதிப்பகுதியில் குறிப்பிடுகின்றார். 

அடிமைத்தனத்தின் இன்னொரு வகையாக ஒப்பண்டஹ்க் கூலிகள் மூரையைச் சுட்டிக் காட்டுகின்றார். இலங்கைக்கு தேயிலைத்தோட்டத்தில் உழைக்க ஒப்பண்டஹ்க் கூலிகளாகச் சென்றோர், மலேயா, சிங்கை , தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்றோரும் அடிமை முறையில் ஒரு வகையை அனுபவித்தவர்கள் தாம். 

அடிமைகளாக மக்கள் ஆக்கப்படும் செயல்பாடுகள் சட்ட ரீதியாகத் தடை செய்யப்பட்ட போதிலும் இன்றும் வேறு வகையில் அடிமைத்தனத்தைப் பிரயோகிக்கு நடைமுறை இருக்கத்தான் செய்கின்றது. அடிமை முறை என்ற நடைமுறையைச், „சடங்கு, சம்பிரதாயம், வழி வழி ஆச்சாரம்“ என்ற அழகான சொற்களால் மூடிமறைக்கும் முயற்சிகளும் தொடர்ந்து நடந்து கொண்டுதானிருக்கின்றன. 

தான் அடிமை எனவே அடிபணிந்து போவேன், என ஒருவர் அடிமைத்தனத்திலிருந்து மீளாதிருக்கும் வகையில் மூளைச்சலவை செய்யப்பட்டிருப்பதும் நீண்ட கால சிந்தனையின் பிரதிபலிப்புத்தான். 

இந்த நிலையில், நல்ல கல்வி மட்டுமே இந்த அடிமைத்தளையிலிருந்து மனிதர்களை முற்றிலுமாக விடுவிக்கக் கூடிய பண்டோரா மாயப்பெட்டி! 

----------------------------------------
பதிப்பு - நியூ சென்சுரி புக் ஹவுஸ், சென்னை

Monday, August 1, 2016

கபாலி திரைப்படம் பற்றிய சில சிந்தனைகள்..!

திரைப்படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை கதைத்தொடர்ச்சி, அதனை படமாக்கிய விதம், காட்சிகளுக்கு ஏற்ற பின்னனி இசை என ஒவ்வொன்றும் என் மனதைக் கவர்ந்தன.
 கபாலி ஒரு பொழுது போக்கு வகையிலான ஒரு படம் என்பதையும் மீறி பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களையும்  இப்படத்திற்கான முயற்சி தொடங்கிய நாள் தொட்டு உருவாகி இருந்ததையும், பின்னர் படம் வெளிவந்த பின்னர் எழுத்துலக பிரபலங்கள் தொடங்கி பலரும் இப்படம் தொடர்பான  தங்கள் கருத்துக்களைப் பதிந்து வருகின்றார்கள் என்பதையும் வாசித்து வருகின்றேன்.

மலேசிய சூழலைப் பின்னனியாகக் கொண்ட படம் என்பது இப்படத்தின் மேல் எனக்குத் தனிப்பட்ட முறையில் இருந்த ஒரு ஈர்ப்பு. தமிழ்ப்பட நட்சத்திரங்களில் பலரது நடிப்பில் வந்த திரைப்படங்களைப் பார்த்து கதை பிடிக்கும் போது அதில் லயித்துப் போவேன்.
படம் முழுவதும் அனைத்து கதாபாத்திரங்களும் மிகச்சிறப்பாக நடித்திருக்கின்றனர். ஒருவரையும் குறை சொல்லமுடியவில்லை.  தனித்து நிற்கும் நாயகர்களாக ரஜினிகாந்தின் கபாலி கதாபாத்திரம் நிற்கின்றது. அதற்குப் பக்க துணையாக யோகி, குமுதவல்லி, டோனி லீ, அமீர்,  தமிழ்நேசன், வீரசேகரன், லோகா  ஆகியோரது கதாபாத்திரங்கள் என்னைக் கவர்ந்தன. ஏனைய கதாபாத்திரங்களையும் சொல்லலாம். பட்டியல் நீளும். ரஜினிகாந்திற்கு நடிப்பில் இது ஒரு திருப்புமுனை என்று கருதுகின்றேன். இதே போன்ற சமூக சிந்தனையை மையமாகக் கொண்ட படங்களில் நடிப்பதை நான் வரவேற்கின்றேன்.

மலேசிய தமிழர்களின் வரலாற்றை அதிலும் குறிப்பாக கூலித் தொழிலாளிகளாகத்  தமிழர்கள் புலம்பெயர்ந்த கதை.. தோட்டத் துண்டாடல், சீனத் தொழிளாலிகளுக்கும் இந்திய வம்சாவளி தொழிலாளர்களுக்கும் இடையிலான சம்பள வேற்றுமை, .. அதில் காட்டப்படும் பாரபட்சம் என்பன படத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. ஏனையோருக்கு இது சாதாரண ஒரு காட்சியாக மட்டும் படத்தில் தோன்றியிருக்கலாம். மலேசிய சூழலில் பிறந்தாலும் மலேசிய காலணித்துவ ஆட்சிகால வரலாற்றை அறிந்தவர்களால் மட்டும் தான் இத்தகைய சில காட்சிகளின் நூதனமான  பின்னனிகளை அறிந்து கொள்ள முடியும்.

படத்தின் தொடக்கம் என்னை மிக கவர்ந்தது. படக்காட்சியில் கவனம் வைத்ததால் நடிக நடிகையர் பெயரைக் கூட  வாசிக்க மறந்து போனேன்.  காவல் துறையின் அறையில் கபாலி பற்றி விவாதிக்கும் காட்சி, முற்றிலும் மலாய் மொழியில் வந்துள்ளது. இது பாராட்டத்தக்கது. இது மிக இயல்பான தன்மையை படத்திற்குத் தந்தது. ஆனால் கீழே அதற்கு தமிழில் மொழிமாற்றம் கொடுத்திருக்கலாம். மாறாக ஆங்கிலத்தில் மட்டுமே காட்டப்பட்ட்து. இதனை ஒரு குறையாகச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். ஏனெனில், ஆங்கிலம் தெரியாத தமிழ் வாசகருக்கு மலாய் மொழிப் பேச்சின் சரியான வாசகங்கள் சரியாகச் சென்று சேர சிரமம்  ஏற்பட்டிருக்கும். அதே போல இறுதிக் காட்சிகளில் டோனி லீ ஒரு பிறந்த நாள் நிகழ்வில் பேசும் சீன மொழிப் பேச்சிற்கும் அதே வகையில் தமிழ் வாசகத்தைக் கொடுத்திருக்கலாம்.

படத்தில் பேசப்பட்ட   பல வாசகங்கள் என்னை மிக மிகக் கவர்ந்தன. குறிப்பாகச் சில காட்சிகள்..
கபாலி சிறையிலிருந்து வெளிவரும் போது காவல் அதிகாரியிடம் பேசுவது..
கபாலி pet shop (விலங்கு பறவைகள் விற்பனை) இடத்தில் வில்லனைத்தாக்கி விட்டு நடந்து வரும் போது பேசுவது..
தோட்டத்து உதவி மேளாளரிடம் சண்டை போடும் போது கபாலி பேசும் வாசகங்கள்..
தமிழ்நேசன் கதாபாத்திரத்தின் பேச்சுக்கள்..
இறுதிக்காட்சியில் வீரசேகரன் கபாலி வசனங்கள் ..
குமுதவல்லியை 25 ஆண்டுகள் கழித்து பார்க்கும் போது குமுதவல்லி பேசும் வாசகங்கள்..
கபாலியை ஊக்கமூட்டும் வகையில் குமுதவல்லி..
..இப்படி  பல காட்சிகளில் வசனங்கள் என்னைக் கவர்ந்தன.

காட்சி அமைப்பும் அக்காட்சிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களும் மிக நுணுக்கமாக ஆய்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டுல்ளன என்பதைக் காண முடிந்தது.

உதாரணமாக கபாலி சிறையிலிருந்து வெளிவந்து காரில் பயணம் செய்யும் போது தமிழ்நேசனை நினைவு கூறும் காட்சி, துன் சம்பந்தன் கட்டிடத்தைக் கடக்கும் போது வருவதாகக் காட்டப்படுவது, தமிழ்நேசன் - துன் சம்பந்தன் அவர்களைப் போன்ற ஒரு கதாபாத்திரமாக, அதாவது தோட்டத்தொழிலாளர் நலனுக்காக உழைத்த மனிதராக நினைவு கூற வைக்கின்றது.  இறுதிகாட்சி படமாக்கப்பட்ட இடம், அதன் பின்னனியில் இரட்டைக் கோபுரம் ஆகியன இரண்டு ஆளுமைகளுக்கும் சிந்தனைகளுக்கும் இடையில் நடக்கும் போரின் தன்மையை விவரிக்கும் வகையில் ”மெட்டபோரிக்கலாக” அமைந்திருந்த்து.

படத்தில் பின்னனி இசை அபாரம். அதன் தாக்கத்திலிருந்து இன்னமும் நான் மீளவில்லை.
கானா பாலாவின் பாடல், அதற்கான நடனம், காட்சி இவை பிரமாண்டம். மிக ரசித்தேன்.

படத்தில் இயல்பாக மலாய் கலந்த தமிழ் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.  மலேசியத்தமிழர்களின் தனித்துவமான தமிழிலேயே படம்.. அதே வகையான பேச்சு ஒலி..   எனக்கு இது மிகப் பிடித்தது. ” காடி, நாட்டான், சடையன், வெடப்பு,.. இப்படி பல சொற்கள்..    படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மலேசியாவில் இருந்து கொண்டு அங்கே நடக்கும் ஒரு நிகழ்வை பார்ப்பது போல என்னைத் தடுமாற வைத்து விட்டது.

இரண்டு காட்சிகள் என் கண்களில் கண்ணீரை வரவழைத்தன.
1. பல ஆண்டுகளுக்குப் பின்னர் கபாலியும் குமுதவல்லியும் சந்திக்கும் காட்சி
2. தமிழ்நேசன் கபாலியைச் சந்திக்கும் போது பேசும் காட்சி  
பென்ஸ் கார் மலேசிய மக்களின் கனவு.  இதே வகை மாடலில்   ஒன்றை வீட்டில் வைத்திருந்தோம் . அது படம் பார்க்கும் போது நினைவு வந்த்து.

தனிப்பட்ட முறையில் படத்தின் இயக்குனருக்கு என் நன்றியைச் சொல்லித்தான் ஆகவேண்டும். படத்தில் வரும் இரண்டு கதாநாயகிகளின்  நல்ல கதாபாத்திரங்கள் இப்போதுதான் சினிமா துறை பெண்களை மதிக்க ஆரம்பித்திருக்கின்றது என்ற நம்பிக்கையை எனக்குக் கொடுத்த்து. ஏனெனில் பெரிய கதாநாயகர்கள் நடிக்கும் படங்களில் வரும் கதாநாயகிகள் பெரும்பாலும் அறிவில்லாத அழகு பொம்மைகளாக, தவறு செய்து விட்டு கன்னத்தில் அறை வாங்கி மகிழ்பவர்களாக, முட்டாள்களாக என இருப்பதை விட்டு, அறிவுள்ள, வீரமிக்க, வேலை செய்யத் தயங்காத,  அதே நேரம், அன்பும் கணிவும், தன்னை அழகாகக் காட்டிக் கொள்ளும் தன்னம்பிக்கை மிகுந்த கதாபாத்திரமாக அமைத்திருந்தமை மிகச் சிறப்பு. நாகரிகமான மரியாதையான ஆடை அமைப்பும் மிகச் சிறப்பு.

கூலித்தொழிலாளியாக வந்தோர் கூலிகளாகத்தான் இருக்க வேண்டும் என்பது சட்டமல்ல.  நல்ல வகையில் உழைத்து  முன்னேறக்கூடிய திறமை வாய்ந்த அனைவருமே வாழ்க்கையில் உயர முடியும் அப்படி உயர்பவர்களுக்கு தகுந்த மரியாதையைக் கொடுக்கத்தான் வேண்டும் என்பதை கதை பார்ப்போரை கொஞ்சமாவது சிந்திக்க வைக்கும்.

மலேசிய இந்தியர்களை இப்போது பாதித்திருக்கும் மிக முக்கியச் பிரச்சனைகளாக இருப்பவை கேங்ஸ்டரிசம், போதைப்பொருள் பயன்பாடு ஆகியனதான். இதனை மையமாக வைத்து படம் செய்திருப்பது மிகுந்த பாராட்டுக் குறியது. எப்படியெல்லாம் இளம் தலைமுறயினர் வாழ்க்கையை ஒரு சிலர் சீரழிக்கின்றனர் என நான் மலேசியா செல்லும் போதெல்லாம் நண்பர்களுடன் பேசி வருந்திக் கொண்டிருப்பேன். அதே வருத்தத்தின் பிரதிபலிப்பை இப்படத்தில் எந்த வித ”கோஸ்மெட்டிக் டச்-அப்” ஏதும் இன்றி  உணர்ந்தேன்.

தமிழகத்தின் சாதிக்கொடுமைகள் மலேசியத் தமிழர்கள் மத்தியிலும் பரவி வருகின்றது. சாதியால் மக்களைப் பிரித்து வைத்து உயர் சாதியில் பிறந்தால் தான் மரியாதை உயர்வு என நினைப்போருக்கெல்லாம் சாட்டையடி கொடுப்பது போன்ற வசனங்களும் காட்சி அமைப்புக்களும் பரவலாக வந்துள்ளமை பாராட்டுக்குறியது.  இந்தப் படம் பார்த்த பிறகாவது சாதி சங்கம் வைத்து நடத்திக் கொண்டிருக்கும்  மலேசியத் தமிழர்கள் திருந்தி அவற்றைக் கலைத்து  விட்டு ஒற்றுமையாக நாம் எல்லோரும் தமிழர்கள் என வாழ ஆரம்பிப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன்.  இந்திய தேசத்தில் இந்தச் சாதி என்னும் தொழு நோயை, தொற்று நோயை அழிப்பது சுலபமான காரியமல்ல.  அதற்கு கபாலி போன்ற, குமுதவல்லி போன்ற அமீர், போன்ற சிந்தனை கொண்டோரும், யோகி போன்ற துடிப்புமிக்க இளைஞர்களும் தேவை.

இப்படம் மலேசியத் தமிழர்களில் கூலித்தொழிலாளியாக வந்து சொல்லொணாத் துன்பதை சந்தித்த மக்களை உலகத் தமிழர்கள் நினைத்துப் பார்க்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. இதே வரலாற்றுப் பார்வையில் இதுவரை நான்கு ஆவணப்  படங்களை நான் வெளியிட்டிருக்கின்றேன் என்பது எனது வெளியீடுகளை அறிந்தோருக்குத் தெரியும். அவற்றுடன் கபாலியும் உலகத் தமிழர்களுக்கு மலேசிய தமிழர்களின் அதிலும் குறிப்பாகத் தோட்டத் தொழிலாளர் நிலையை காட்டியிருக்கின்றது.  மலேசியத் தமிழர்களைப் பற்றி உலகத்தமிழர்களைப் பேச வைத்த ஒரு படம் என்ற ரீதியில் இயக்குனருக்கும் இதற்காக உழைத்த அனைவருக்கும் ஒரு மலேசியத் தமிழரான எனது பாராட்டுதல்களையும் நல்வாழ்த்துக்களையும் பதிவதில் மகிழ்கிறேன்.

-சுபா