Saturday, May 21, 2016

ஜெர்மானிய மொழி பெயர்ப்பில் திருக்குறள் - வரலாற்று பார்வையில்




முன்னுரை

Dr.K.Subashini

உலகப்பொதுமறை என அழைக்கப்படும் சிறப்புடன் திகழ்வது திருக்குறள். தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்த தமிழ்ப் படைப்புக்களில் தலையாயதாக இடம் பெறும் நூலாகத் திகழ்கின்றது திருக்குறள். உலகில் புழக்கத்தில் உள்ள பல மொழிகளில் மொழி​ ​பெயர்க்கப்பட்ட நூலாகவும் இது திகழ்கின்றது. ஐரோப்பிய மொழிகளில் ஒன்றான ஜெர்மானிய மொழியில் (டோய்ச்) திருக்குறள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு  ஜெர்மானிய மொழி பேசும் மக்கள் மத்தியில் இந்த நூல், தமிழ் இலக்கியத்துக்கு ஓர் அறிமுகமாகிய வரலாற்றுச் செய்தியை விவரிப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

ஜெர்மானிய லூதரன் பாதிரிமார்களின் தமிழக வருகை
இந்திய நிலப்பரப்பில் லூதரன் பாதிரிமார்கள் சபையின் சமய நடவடிக்கைகள் 17ம் நூற்றாண்டு தொடங்கி 18ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டங்களில் நிகழ்ந்தன. இரண்டு மறை ஓதும் பணியில் ஈடுபட்ட பாதிரிமார்களின் தமிழகத்துக்கான வருகையே இதற்கு தொடக்க நிலையை உருவாக்கிய வரலாற்று நிகழ்வாக அமைகின்றது.

லூதரன் கிருஸ்துவ மத பாதிரிமார்கள் மதம் பரப்பும் நோக்கத்துடன் இந்தியாவின் தெற்குப் பகுதிக்கு வருவதற்கு இரு நூற்றாண்டுகளுக்கு முன்னரே கத்தோலிக்க பாதிரிமார்கள் தென்னிந்தியப் பகுதிகளுக்கு வருகை தந்து தென்தமிழகத்தில் குறிப்பாக தூத்துக்குடி பகுதியில் கத்தோலிக்க கிறிஸ்துவ மதம் பரவ ஆரம்ப நிலை பணிகளை மேற்கொண்டனர். 1612ம் ஆண்டில் டேனிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி தஞ்சாவூரின் தரங்கம்பாடி பகுதியில் ஒரு சிறு பகுதியைப் பெறும் உரிமையை ஆண்டுக் கட்டணமாக இந்திய ரூ.3111 செலுத்தி பெற்றனர்.  அச்சமயம் தஞ்சையை ஆண்டு கொண்டிருந்த ரகுநாத நாயக்க மன்னரின் (இவருக்கு அச்சுதப்ப நாயக்கர் என்ற பெயரும் உண்டு) அனுமதியோடு இந்த உரிமை பெறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த அரச ஆணையின் படி 19.11.1620ம் நாள் தரங்கம்பாடியில் டென்மார்க்கின் டேனிஷ் கொடி ஏற்றப்பட்டு தரங்கம்பாடியில் டேனிஷ் தொடர்பு உறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டேனீஷ் வர்த்தகர்கள் தரங்கம்பாடி வந்திறங்கினர். வர்த்தகம் செய்வது மட்டுமே ஜெர்மனியின் மார்ட்டின் லூதர் உருவாக்கிய லூதரேனியன் சமயத்தைப் பின்பற்றத் தொடங்கியிருந்த டேனிஷ் அரசின் நோக்கமாக அமைந்திருக்கவில்லை. வர்த்தகத்தோடு மதம் பரப்பும் சேவையையும் செய்ய வேண்டும் என்பதை மன்னர் விரும்பியதால் 18ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் தமிழகத்தின் தரங்கம்பாடிக்கு டேனிஷ்  அரச ஆணையுடன் முதல் அதிகாரப்பூர்வ மதம் பரப்பும் சமயக் குழு ஒன்று வந்திறங்கியது. இதில் இடம் பெற்றவர்கள் ஜெர்மானிய பாதிரிமார்கள் சீகன்பால்கும் ப்ளெட்சோவும்.

மதம் பரப்பும் பணிக்கு இவர்களுக்கு அடிப்படை தேவையாக இருந்தது தமிழ் மொழித்திறன். தமிழ் மொழியைக் கற்க ஆரம்பித்த சீகன்பால்க், லூத்தரன் பாதிரிமார்கள் தமிழ்கற்க உதவும் வகையில் இலக்கண நூற்களை எழுதினார். பல தமிழ் இலக்கிய நூல்களைத் தாம் கற்று,  ஜெர்மானிய மக்கள் தமிழ் கற்க உதவும் வகையில் சொற்பொருள் அகராதிகளை உருவாக்கினார். அவர் வாசித்த இலக்கிய நூல்களில் திருக்குறளும் அடங்கும் என்ற செய்தியை சீகன்பால்கின் கையெழுத்துக் குறிப்புக்களிலிருந்து அறிய முடிகின்றது. ( Jeyaraj, Daniel and Young, Richard Fox (transl. eds.): Hindu-Christian Epistolary Self-Disclosures: ‘Malabarian Correspondence’ between German Pietist Missionaries and South Indian Hindus (1712–1714), Wiesbaden: Harrassowitz Verlag, 2013, pp. 240 - 241.)  அப்போதைய நிலையில் திருக்குறள் அச்சு வடிவம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒரு செய்தி.

திருநெல்வேலி அம்பலவாண கவிராயர் 1812ம் ஆண்டில் திருக்குறள் மூலபாடம் என்னும் நூலை அச்சு வடிவில் பதிப்பித்தார் என்று அறிகின்றோம். தமிழ் மொழியில் தீவிர பற்றும் ஆர்வமும் கொண்டு நல்ல புலமை பெற்ற ஆங்கிலேயரான அறிஞர் எல்லிஸ் (F.W.Ellis) அவர்கள் 1819ம் ஆண்டில் ஆங்கிலத்திலும் அதன் பின்னர், ப்ரென்சு, ரசிய மொழி, ஸ்வீடிஷ் மொழி, ஜெர்மன் மொழி ஆகிய பிற மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடும், பணியை மேற்கொண்டிருந்தார் என அறிகின்றோம். இதற்கு முன்னரே போர்த்துக்கீசியரான வீரமாமுனிவர்  (Beschi ) அவர்கள் 1730 வாக்கில் முதல் இரண்டு பகுதிகளை மட்டும் லத்தீன் மொழியில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டிருந்தார். வீரமாமு​னிவரின் மொழிபெயர்ப்பின் அடிப்படையில் ஐரோப்பிய சூழலுக்கு லத்தீன் மொழி வாயிலாக திருக்குறள் ஏற்கனவே அறிமுகம் பெற்றிருந்தது என்பதை நாம் அறிகின்றோம்.

ஜெர்மானிய மொழியில் திருக்குறள்






ஆயினும் முதன் முதலில் முழுமையாக ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட நூலாக நமக்குக் கிடைப்பது  ஆகஸ்ட் ஃப்ரெடிக் காம்மெரர் என்ற ஜெர்மானிய லூத்தரன் மதபோதகர் (August Friedrich Cämmerer)  அவர்கள் மொழிபெயர்த்து முன்னுரையும் தந்து எழுதிய நூலாகும். எல்லிஸ் அவர்களின் ஆங்கில மொழி பெயர்ப்பு வெளிவருவதற்கு முன்னரே ஜெர்மானிய டோய்ச் மொழியில் இந்த நூல் வெளியிடப்பட்டிருக்கின்றது.  இந்த நூல் 1803ம் ஆண்டு ஜெர்மனியில் நூரன்பெர்க் (Nurnberg)  நகரில் அச்சு வடிவில் வெளியிடப்பட்டது.







இந்த நூலின் பெயர் Das Thiruvalluvar Gedichte und Denksprueche என்பதாகும். இந்த நூலைப் பற்றிய விரிவான அறிமுகம் ஒன்று 1807ம் ஆண்டு ஜெர்மனியின் நூரன்பெர்க் (Nurnberg)  நகரில் வெளிவந்த  பொது இலக்கிய நாளேடு ஒன்றில் (Allgemeine Literatur Zeitung, 29.June 1807) பதிவாகியுள்ளது என்ற செய்தியையும் அறிய முடிகின்றது.  இந்த நாளேட்டில் ஜெர்மனியிலிருந்து மதம் பரப்பும் பணிக்காக டேனீஷ் அரசின் ஆதரவில் தமிழகத்தின் தரங்கம்பாடிக்குச் சென்ற லூத்தரன் பாதிரிமார்களின் இலக்கியத் தேடல்களை மையப்படுத்தி விவரிக்கும் செய்தியாக இச்செய்தி அமைந்துள்ளது. அதில் சிறு அறிமுகத்துக்குப் பின்னர் இந்த நூலைப்பற்றிய விளக்கம் வருகின்றது. குறள்களின் மொழி பெயர்ப்பு, திருவள்ளுவர் பற்றிய செய்திகள் என்ற வகையில்  காமரர் அவர்கள் படைத்திருக்கும் இப்படைப்பை விவரிக்கின்றது இந்த நாளேட்டுச் செய்தி.



Das Thiruvalluvar Gedichte und Denksprueche  என்ற இந்த  நூல் முழுமையாக ஜெர்மானிய மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது. நூலில் காமெரர் அவர்கள் முதலில்  தனது அறிமுக உரையை பதிகின்றார். தமிழகத்தின் தெய்வ வழிபாடுகள் சமூக நிலைகள், இலக்கியம் என சில தகவல்களை இப்பகுதியில் குறிப்பிடுகின்றார். அடுத்து திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் சில தகவல்களைக் குறிப்பிடுகின்றார். அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த திருவள்ளுவரைப் பற்றிய கதைகளைக் குறிப்பிட்டு திருவள்ளுவரை இந்த நூலில் அறிமுகம் செய்கின்றார்.  அதன் பின் 1330 குறள்களுக்குமான மொழி பெயர்ப்பு இந்த நூலில் பத்து பத்தாக  வரிசையாக வழங்கப்பட்டுள்ளன.



காமெரர் அவர்களுக்குப் பின் தரங்கம்பாடி வந்த ஜெர்மானிய அறிஞர் கார்ல் க்ரவுல் அவர்கள் Der Kural des Tiruvalluver (Graul, Karl) என்ற நூலை எழுதி வெளியிட்டார். இது கிழக்கு ஜெர்மனியின் லைப்ஸிக் (Leipzig:) நகரில் 1856ம் ஆண்டில் நூல் வடிவம் கண்டது. இந்த நூலின் பெயரின் தமிழாக்கம் திருவள்ளுவரின் குறள் என்பதாகும். 216 பக்கங்கள் கொண்ட இந்த  நூலில் க்ரவுல் அவர்கள் தனது முன்னுரை,  பரிமேலழகரின் உரை, அதற்கான தனது முன்னுரை எனத் தொடங்குகின்றார். திருக்குறளின் நேரடி மொழி பெயர்ப்பு என்றில்லாமல் நல்லெண்ணங்கள், நற்கருத்துக்கள், அரசரின் மாண்பு, பண்பற்ற இச்சையின் பண்பு என்பது பற்றி திருக்குறள் கூறும் கருத்தை முன் வைத்து இந்த நூலைப் படைத்திருக்கின்றார். காதலில் களவு, பெற்றோர் சம்மதத்துடனான திருமணம் என்ற தகவல்களையும் குறிப்பிட்டு திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு என இறுதிப்பகுதியையும் சேர்த்து இந்த நூலை உருவாக்கியிருக்கின்றார். க்ரவுல் அவர்கள் தமிழ் இலக்கணத்தில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

முடிவுரை
ஜெர்மனி மட்டுமன்றி ஜெர்மன் மொழியான டோய்ச் மொழி பயண்பாட்டில் உள்ள ஏனைய நாடுகளான டென்மார்க், சுவிஸர்லாந்து, ஆஸ்திரியா போன்ற நாடுகளிலும் இந்த இருநூல்களும் பொது மக்கள் வாசிப்பிற்கும் ஆசிய நாடுகளின் இலக்கியங்களை ஆராய விரும்புவோர் மத்தியிலும் அறிமுகமாக வழி ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

ஆயினும் இந்த மொழி பெயர்ப்பும் இவற்றில் உள்ள வரலாற்றுத் தகவல்களும் முழுமையான பார்வையைத் தரும் வகையில் உள்ளனவா என்பது ஒரு கேள்வியே. உதாரணமாக தனது சூழலில் தமிழ் சமூக கட்டமைப்பில் உயர்சாதி என அழைக்கப்படும் மக்களிடம் மட்டுமே தமிழும் தமிழ் இலக்கியமும் கற்றமையினால் திருவள்ளுவரைப் பற்றிய நிலைப்பாட்டை ஒரு குறிப்பிட்ட பார்வையில் வைத்து சில பகுதிகளில் விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளமையை அறிய முடிகின்றது. இது திருவள்ளுவரின் பின்புலத்தையும் கருத்தின் ஆழத்தையும் மொழி பெயர்ப்பில் சரியாக உட்படுத்தவில்லையோ என்ற அஐயத்தை ஏற்படுத்​த​த் தவறவில்லை. திருக்குறளைப் பற்றியும் திருவள்ளுவரைப் பற்றியும் விரிவான ஆய்வுத் தரவுகள் கிடைக்கின்ற இக்காலகட்டத்தில் ஜெர்மானிய மொழியில் மீண்டும் திருக்குறள் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு  ஜெர்மானிய டோய்ச் மொழியில் மீள்பதிவு செய்யப்பட வேண்டியது அவசியக்கடமையாகின்றது. இதனைச் செய்வதன் வழி திருக்குறளைச் சரியான பார்வையுடன் ஜெர்மானிய மொழி பேசுவோர் மத்தியில் மீண்டும் அறிமுகப்படுத்த இயலும். தமிழ் மொழி ஐரோப்பிய சூழலில், அதிலும் குறிப்பாக ஜெர்மானிய மொழி பேசும் மக்கள் வாழும் நாடுகளில் அறியப்படாத மொழி அல்ல. குறிப்பிட்ட  ஒரு சில பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையின் வழி தமிழ் போதிக்கப்படுவது இங்கு நிகழ்கின்றது. இந்த ஐரோப்பிய மாணவர்களுக்கு மீள்வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்டு சமகால ஆய்வின் அடிப்படையில் திருக்குறள் மீண்டும் ஜெர்மானிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வழங்கப்பட வேண்டியது மிக முக்கிய நடவடிக்கை என்பதில் ​ஐயத்திற்கு இடமில்லை.

Monday, May 16, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 95

​திருவிடைமருதூருக்கான தலபுராணமான ஸ்ரீ மத்தியார்ச்சுன மான்மியம் என்ற நூலை அச்சு நூலாக கொண்டுவரும் பிரதான நோக்கத்தில் உ.வே.சா சென்னை கிளம்பினார் என்றாலும் கூட அவருக்குச் சென்னையைச் சுற்றி பார்த்து அந்த நகரையும் மக்களையும் அறிந்து கொள்வதில் மிகுந்த பேராவல் இருந்தது. இதனை வெளிப்படையாகவே அவர் தன் சுயசரிதையில் குறிப்பிடுகின்றார்.  சென்னையில் அவர் இருந்த காலம்  2 வாரங்களுக்கு சற்று மேல். அந்த நாட்களில் பலரையும் அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்  இராமசாமி முதலியார். 

தமிழ் எழுத்துலகில் 19ம் நூற்றாண்டு பிரபலங்களான பலரும் இந்த அறிமுகம் பெற்ற பட்டியலில் அடங்குகின்றனர். ஜட்ஜ் முத்துசாமி ஐயர், ஸர். வி. பாஷ்யமையங்கார், ஸ்ரீநிவாச ராகவையங்கார், பம்மல் விஜயரங்க முதலியார், ரகுநாதராயர் முதலிய பல கனவான்களுடைய நட்பு அவருக்கு ஏற்பட்டது. பிரஸிடென்ஸி காலேஜிற்குச் சென்று பூண்டி அரங்கநாத முதலியாரையும், தொழுவூர் வேலாயுத முதலியாரையும் சந்தித்தார்.  அவர்கள் மூலம் சேஷகிரி சாஸ்திரியாரையும் தமிழ்ப் பண்டிதர் கிருஷ்ணமாசாரியாரது அறிமுகம் கிட்டியது. புரசபாக்கம் அஷ்டாவதானம் சபாபதி முதலியார், சோடசாவதானம் சுப்பராய செட்டியார், கதிர்வேற்கவிராயர், காஞ்சீபுரம் இராமசுவாமிநாயுடு, கோமளீசுவரன் பேட்டை இராசகோபாலபிள்ளை, சூளை அப்பன் செட்டியார், சூளை சோமசுந்தர நாயகர், திருமயிலை சண்முகம் பிள்ளை முதலிய வித்துவான்களைப் பார்த்துப் பேசி மகிழ்ந்தார். சென்னையில் இருந்த ஒவ்வொரு நாளும் தனது கோச்சு வண்டியில் இராமசாமி முதலியார் காஸ்மோபோலிடன் க்ளப், பிரசிடென்சி காலேஜ் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று இவர்களுடன் இருந்து பேசி மகிழ்ந்து வருவது மகிழ்ச்சிகரமாக நிகழ்த்து கொண்டிருந்தது. 

இந்தத் தமிழ்ப்பெரியோர்களது பெயர்களையெல்லாம் பார்க்கும் போது மிகத் தெளிவாக பிள்ளை, ஐயர், ஐயங்கார், முதலியார், செட்டியார், நாயக்கர், நாயுடு போன்ற சமூகத்தைச் சேர்ந்தோரே  19ம் நூற்றாண்டு காலகட்டத்தில் அறியப்பட்ட தமிழறிஞர்களாக இருந்திருக்கின்றனர் என்பதை இவர்களது பெயர்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிகின்றது. இதற்கு முக்கியக் காரணமாக அமைவது இச்சமூகத்தைச் சார்ந்தோரே கல்வி ஞானத்தை அனுபவிக்கும் வாய்ப்பை பெருவாரியாக அந்தக் காலகட்டத்தில் பெற்றிருந்தனர் என்பது கேள்விக்கு இடமின்றி அமைகின்றது. அக்காலத்தில் கல்விக்கூடங்களாக அமைந்தவை வேத பள்ளிக்கூடங்களும், சைவ வைஷ்ணவ மடங்களும், சில தமிழ்க்கலாசாலைகளும் மட்டுமே. ஆங்கிலேய கல்வி முறையில் உருவாக்கப்பட்ட பள்ளிக்கூடங்கள் சிறிது சிறிதாக பெருக ஆரம்பித்த பின்னர் இந்த நிலையில் பெருமளவில் மாற்றம் ஏற்பட்டது என்பதோடு சமூகத்தின் எல்லா தளத்தைச் சார்ந்தோரும் கல்வி கற்கும் வாய்ப்பும் ஏற்பட்டது.  இன்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை, தான் சார்ந்திருக்கும் சாதி சமூகத்தின் பெயரையும் தன் பெயரோடு இணைத்துக் கொள்வது ஒரு வழக்கமாக இருந்திருக்கின்றது. இது இவர்களைச் சமூக ரீதியாக பிரித்து அடையாளம் காணும் தன்மையாக இருந்திருக்கின்றது. இத்தகைய நிலை 20ம் நூற்றாண்டு வாக்கில் தான் படிப்படியாக மாற்றம் காண ஆரம்பித்தது என்பதும் அதற்கு பல்வேறு சீர்திருத்த முயற்சிகள் நடந்தன என்பதும், பல போராட்டங்கள் நிகழ்ந்தன என்பதும் வேதனைக்குறிய, ஆனால் மறைக்காமல் சுட்டிக்காட்டப்பட வேண்டியவையே. 

கல்வி என்பது அனைவருக்கும் சமமானது. அடிப்படை கல்வியைப்  பெறும் உரிமை ஒரு நாட்டின் எல்லா பிரஜைக்கும் இருக்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்று. அடிப்படைக் கல்வி இலவசமாக ஒரு நாட்டில் வழங்கப்படும் போதே அந்த நாடு தன் மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும் நாடு என்ற பெருமையை ஏற்க முடியும். கல்வியை வியாபாரப்படுத்தி கல்விக்கூடங்கள் வியாபாரக்கூடங்களாக மாறும் நிலை வரும் போது அது நாட்டு மக்களுக்கு சரியான முறையான  கல்வி எல்லா தரப்பு மக்களுக்கும் கிடைக்காமல் ஆவதற்கு வழி ஏற்படுத்தி விடுகின்றது என்பது உண்மை.

சரி. சென்னையில் இருந்த காலகட்டத்தில் உ.வே.சா சில இடங்களுக்குச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கின்றார். அருங்காட்சியகங்கள், பொருட்காட்சி சாலை, புத்தகசாலை, கல்லூரிகள், கோயில்கள், கடற்கரை என தாம் பார்த்தவற்றையெல்லாம் மகிழ்ச்சியுடன் பட்டியலிடுகின்றார் உ.வே.சா.அத்தோடு தான் சந்தித்துப் பேசிய மனிதர்களின் குண நலன்களையும் வியந்து போற்றுவதையும் என் சரித்திரத்தில் வாசித்து மகிழ முடிகின்றது.

"வித்துவான்களையும் அறிஞர்களையும் பார்த்துப் பழகியது கிடைத்தற்கரிய பெரிய லாபமாகத் தோன்றியது. சிறந்த உத்தியோக பதவியை வகித்த பெரியவர்களெல்லாம் அடக்கமாகவும், அன்பாகவும் இருப்பதைக் கண்டு நான் வியந்தேன். கும்பகோணத்தில் பதினைந்து அல்லது இருபது ரூபாய் சம்பளம் பெறும் குமாஸ்தா செய்யும் அட்டகாஸத்தையும் ஆடம்பரத்தையும் கண்ட எனக்கு அப்பெரியவர்களுடைய நிலை மிக்க ஆச்சரியத்தை உண்டாக்கியது."

இது இன்றும் பலரிடையே நாம் காணும் குண நலன்கள் தான். ஒரு சிலர் தமது பதவியை மட்டும் வைத்து செய்து கொள்ளும் பெருமையை என்னும் போது அவர்களது அறியாமையை நினைத்து சிரிப்புத்தான் வருகின்றது.  தன்னை மிக உயரிய மனிதராகவும் ஏனையோரை மதிக்காமலும் நடக்கும் நிலையையும் பார்க்கின்றோம். தன்னை விட பதவியில் குறைந்தவர் என்றாலோ அல்லது எளிய பணி புரிகின்றார்கள் என்றாலோ அடிப்படை மரியாதைச் சொற்களைப் பயன்படுத்தி கூப்பிடுவதைக் கூட பலர் வழக்கத்தில் கொண்டிருப்பதில்லை. இந்த ஆணவம் நிறைந்த குணங்கள் மனிதப்பண்புகளுக்கு விரோதமானவை அல்லவா?

ஸ்ரீ மத்தியார்ச்சுன மான்மியம் நூலுக்கான அச்சு வேலை முடிந்ததும் தான் வந்த பயணம் வெற்றிப் பயணமாக முடிந்த மகிழ்ச்சியில் உ.வே.சா கும்பகோணம் திரும்பினார்.

தொடரும்..
சுபா

Thursday, May 5, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 94

உ.வே.சாவின் சீவகசிந்தாமணி ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டேயிருந்தது. அவரது கல்லூரி ஆசிரியர் தொழிலுக்கிடையில் தினம் தினம் சிந்தாமணி வாசிப்பையும், அதனைப் புரிந்து கொள்ளும் முயற்சியையும் அவர் தொடர்ந்து கொண்டிருந்தார். 

தமிழ் எழுத்துக்கள் என்பவை காலம் தோறும் பல மாற்றங்களைப் படிப்படியாகக் கொண்டிருந்தது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இன்றைக்கு நாம் காணும் தமிழ் எழுத்துக்களுக்கான வரிவடிவமானது இதே போல இன்றைக்கு  150 ஆண்டுகளுக்கு முன்பு வரை தெளிவான வகையில் இல்லாத நிலை, வாசித்தலில் சிக்கலை ஏற்படுத்தும் ஒரு சவாலாக இருந்தது என்பது முக்கிய விசயம். பலரது கைவண்ணத்தில் எழுதப்பட்ட ஓலைச்சுவடி பிரதிகள் என்பன, எழுத்துத் தோற்றத்தில் மாற்றங்களை எப்படி உள்ளடக்கியதாக இருக்கின்றதோ அதே போல, எழுத்துப் பிழைகளைக் கொண்டதாக இருக்கும் சூழலும் இருந்திருக்கும் என்பதை ஒதுக்கி விட முடியாது. அத்தகைய ஓலைச்சுவடிகளை வைத்துக் கொண்டு ஒன்றுக்குப் பலமுறை வாசித்து வாசித்து முதலில் அவ்வரிகள் ஒவ்வொன்றும் சொல்லும் பொருளைத் தன் காலத்துத் தமிழ் நடையில் எழுதுவது என்பது ஒரு சவால். அதற்கடுத்து, அவற்றை முழுமையாக பொருளுணர்ந்து அதற்கு உரை விளக்கம் எழுதுவது என்பது அதற்கடுத்த மிகப்பெரிய சவாலாக உ.வே.சாவிற்கு இருந்தது. இவை கடினமான ஒரு செயல் என்றாலும் மனம் தளராமல் இப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார் உ.வே.சா.

நம்மில் பலருக்கு ஒரு சில விசயங்களில் ஏதோ ஒரு காரணத்திற்காகத் திடீரென்று ஆர்வம் தோன்றும். ஆகா ஓகோவென்று அதனைப் பற்றி பேசுவோம். இதைச் செய்வேன், அதைச் செய்வேன்,  என சபதம் எடுத்துக் கொள்வது போல பேசுவோம். ஆனால் நாளடைவில் அந்த ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போய், அந்த விசயமே மனதில் முற்றும் முழுதுமாக மறைந்து போயிருக்கும்.  

ஏதாவது ஒரு காரியத்தில் நமக்கு ஆர்வம் தோன்றினால் அதனைப் பற்றி நாம் ஆழமாகச் சிந்தித்து அதனால் ஏற்படும் நன்மை தீமைகளைப் பற்றி அலசிப் பார்த்து, அக்காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்னர் மிகத்தெளிவான அவ்விசயம் தொடர்பான சிந்தனையை மனதில் கொண்டிருக்க வேண்டும். ஆர்வத்துடன் ஈடுபடத் தொடங்கினால் முற்றும் முழுதுமாக அதில் நம் கவனத்தைச் செலுத்த  வேண்டும். அதனைச் செய்ய மனதில் கட்டுப்பாடும் ஒழுங்கும்  மிக முக்கியம். இன்று தொடங்கினோம். நாளை ஆர்வம் போய்விட்டது என்று காரணம் சொல்பவர்களால் எந்தக் காரியமும் செயல்வடிவம் பெற்றதில்லை. பெறவும் முடியாது! 

ஆக, ஆழமான சிந்தனை, சிந்தனையை செயல்வடிவப்படுத்தும் ஏற்பாடுகள், அதனைச் செய்து முடிக்கும் கட்டுப்பாடு ஆகிய அனைத்துமே நமக்கு இருக்கும் போதுதான் ஒரு காரியத்தைச் சரியாக நம்மால் செய்து முடித்து சாதனையாளராகத் திகழ முடியும். அந்த வகையில் உ.வே.சா தான் எடுத்துக் கொண்ட மாபெரும் காரியமான சீவக சிந்தாமணி பதிப்புப் பணியில் நம் கண் முன்னே நல்லதொரு உதாரணமாகத் திகழ்கின்றார். 

இந்த ஆய்வுப் பணி தொடர்ந்து கொண்டிருக்கும் போது சென்னைக்கு மாற்றலாகிச் சென்றிருந்த இராமசாமி முதலியாரும் இடைக்கிடையே கடிதத்தொடர்பின் வழி உ.வே.சாவிற்கு ஊக்கமளித்தும் சில உபயோகமான தகவல்களைத் தொடர்ந்து வழங்கியும் வந்தார்.  கும்பகோணம் கல்லூரியில் உ.வே.சாவிற்குப் பணி அமைத்துக் கொடுத்த தியாகராச செட்டியாரும் இடைக்கிடையே ஆர்வமும் ஊக்கமும் தந்து சில கலந்துரையாடல்களிலும் உதவி வந்தார்.

இக்கால கட்டத்தில் தியாகராச செட்டியார் பூவாளுர்ப் புராணத்தை அச்சுப்பதிப்பாக வெளியிட்டார் என்ற செய்தியையும் அறிகின்றோம்.

அந்த வருடம் அதாவது 1885 மார்ச் மாதம் கும்பகோணத்தில் மகாமகம் திருவிழா நடைபெற்றிருக்கின்றது. அதன் போது திருவாவடுதுறை மகாசன்னிதானம் சுப்பிரமணிய தேசிகர் நேரில் வந்திருந்து கோயில் காரியங்களில் கலந்து கொண்டார் என்பதையும் மடம் சார்பில் சில நிகழ்வுகள் நடந்தேறின என்பது பறிய செய்திகளையும் அறிய முடிகின்றது.

சென்னைக்குச் சென்று இராமசாமி முதலியாருடன் தங்கியிருந்து  சீவக சிந்தாமணி வாசிப்பில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் உ.வே.சாவிற்கு இருந்தது. அப்படி கலந்துரையாடும் போது தெளிவு கிட்டாத பகுதிகளுக்குத் தெளிவு பிறக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. இதே சிந்தனையில் அவரிருந்தார்.

நாம் ஒரு விசயத்தை ஆழமாக விரும்பினால் அது கைகூடும் என்பது சாத்தியமே. நம் மனத்தின் வலிமை அது. 

கும்பகோண மகாமகத்தின் போது, திருவாவடுதுறை மடத்தின் கீழ் உள்ள திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி  ஆலய விசாரணைக் கருத்தா பதவியில் இருந்த சுப்பிரமணியத் தம்பிரான் என்பவர்  மகாசன்னிதானத்தை, இந்த திருவிடைமருதூர் தல புராணத்தை  வசன நடையில் திருமடத்தின் சாரிபில் எழுதி  அந்த நூலை அச்சில்கொண்டு வரவேண்டும் என்பதை அவரது வின்ணப்பமாக வைத்தார்.

இந்தப் பணியை உ.வே.சா செய்வதாக முடிவாகியது.  உ.வே.சா, திருவிடைமருதூருக்கு ஞானக்கூத்தன் என்பவர் எழுதிய ஒரு தமிழ்ப்புராணத்தையும் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் எழுதிய புராண நூல் ஒன்றையும் வாசித்து வசன நடையில் ஒரு புராணத்தை உருவாக்கினார். இதனை மகாசன்னிதானத்திடம் வாசித்துக் காட்டியபோது இதனை விரைவில் அச்சில் கொண்டு வர சென்னைக்குச் சென்றால் தான் முடியும் என்று மகாசன்னிதானம் முடிவெடுக்கவே,  சென்னைக்கு ஒருவர் இதன் நிமித்தம் செல்ல வேண்டும் என்ற அவசியம் உருவானது. 

கும்பகோணம் கல்லூரியில் விடுமுறை காலம் வரவே எல்லாம் கூடி வருகின்றது என்ற எண்ணம் அனவருக்கும் மனதில் தோன்ற, உ.வே.சா சென்னைப்பட்டணம் சென்று, நேரில் இந்த திருவிடைமருதூர் புராண வசன நடை நூலை  அச்சுப்பதிப்புப் பணி செய்து, பணியை முழுமை செய்து விட்டு வரவேண்டும் என்று ஆதீனகர்த்தர் முடிவெடுத்தார்.இந்த நிகழ்வை உ.வே.சா இப்படி விவரிக்கின்றார்.

"உங்களுக்கு இப்போது லீவு காலமாக இருப்பதால், நீங்களே சிரமத்தைப் பாராமல் சென்னபட்டணம் சென்று நேரில் இருந்து காரியத்தை
முடித்துக் கொண்டு வரலாம். செலவு சிறிது அதிகமானாலும் காரியம் மிகவும் உயர்ந்தது” என்றார். அவர் வார்த்தை கரும்பு தின்னக் கூலி தருவதாகச் சொல்லுவது போல இருந்தது. அதுவரையில் சென்னையையே பார்த்திராத எனக்கு அந்த நகரத்துக்குப் போய் ஆங்குள்ள அறிவாளிகளோடு பழக வேண்டுமென்ற விருப்பம் இருந்தது. அன்றியும் சேலம் இராமசுவாமி முதலியாரைக் கண்டு சில காலம் உடனிருந்து சிந்தாமணியைப் படித்துக் காட்ட வேண்டுமென்ற ஆவலும் உண்டு. இவற்றை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு இந்தக் காரியம் ஏற்பட்டது நமது நல்லதிருஷ்டமே என்று நான் எண்ணி, அவ்வாறே சென்று புஸ்தகத்தை அச்சிட்டுக் கொண்டு வருவதாக
ஒப்புக்கொண்டேன். " 

சென்னையே இதுவரை சென்றிராத உ.வே.சாவிற்கு இந்த அரிய வாய்ப்பு கிட்டியது. தன்னிடம் படித்துக் கொண்டிருந்த சிதம்பரம் சாமிநாதையர், சிதம்பரம் சோமசுந்தர முதலியார் ஆகியோரை அழைத்துக் கொண்டு சென்னைக்குப் புறப்பட்டார். செல்வது திருவிடைமருதூர் புராண அச்சுப்பதிப்புப் பணிக்குத்தான் என்றாலும் மனம் சீவக சிந்தாமணி வாசிப்பிலும் இராமசாமி முதலியாருடன் கழிக்கப்போகும் நாட்களிலுமே லயித்துக் கொண்டிருந்தது உ.வே.சாவிற்கு!

Monday, May 2, 2016

குறத்தியாற்றில் ஒரு பயணம்: குறத்தியாறு - நூல் விமர்சனம்

முனைவர்.க.சுபாஷிணி





கதைகள் இல்லையென்றால் உலகமே சுவாரசியமற்றுத்தான் இருக்குமோ?

எத்தனை எத்தனை கதை சொல்லிகள் இந்த உலகில் தோன்றி மறைந்து விட்டார்கள். கதை சொன்னவர்கள் மறைந்து விட்டாலும் சொன்னவர்கள் சொல்லிச் சென்ற கதைகள் மேலும் தன்னை வியாபித்துக் கொண்டு சலிக்காமல் வளர்ந்து வருவதைத்தான் உலகம் முழுவதும் காண்கின்றோம்.

உலகப் பெரும் நாகரிகங்களான மெசபட்டோமிய, அசிரிய, எகிப்திய, சுமேரிய, கிரேக்க, ரோமானிய, கெல்ட் சமூகத்திய, இந்திய நாகரிகங்கள் அனைத்திலும் புராணக்கதைகள் என்ணற்றவை தோன்றின. புராணக்கதைகள் மனிதர்களை மையக் கதாமாந்தர்களாகக் கொண்டனவாக இருந்தாலும் அதில் முக்கியத்துவம் பெறுவதாக அமைவது மாயா ஜாலங்கள் தாம். புராணங்கள் வழி புதுப்புது கடவுளர்கள் படைக்கப்பட்டார்கள். படைக்கப்பட்ட கடவுளர்களுக்கு உருவங்கள் வழங்கப்பட்டன. அவர்களுக்குக் தனித்தனி தன்மைகள் வழங்கப்பட்டன. புராணங்களில் படைக்கப்பட்ட அக்கடவுளர்களிலேயே நல்லவர்களும் இருந்தார்கள், தீமை செய்யும் அசுரர்களும் இருந்தார்கள். புராண அவதாரங்கள் சில வேளைகளில் தவறுகள் செய்து அதனால் அவர்கள் தண்டனை பெறப்படும் நிகழ்வுகளையும் கதை சொல்லிகள் புராணங்களில் சேர்த்துக் கொண்டார்கள்.  தவறுகள் செய்வது, தண்டனை பெறுவது அல்லது சாபம் பெறுவது, பின்னர் பெற்ற சாபத்திலிருந்து மீள்வதற்காகப் பிராயச்சித்தம் செய்வது, பின்னர் அப்புராண கதாமந்தர்கள் தங்கள் செயல்களால் கடவுளர்களாக மக்கள் மனதில் நிலைபெறுவது என்பது வழி வழியாக உலகம் முழுவதும் எல்லா நாகரிகங்களிளும் நிகழ்ந்திருக்கின்றது.  நிலத்தின் தன்மையில் மாறுபட்டாலும், நாட்டின் எல்லைகள் வேறுபட்டாலும், பேசும் மொழிகள் வேறுபட்டாலும், வாழ்க்கை முறைகளில் மாறுபாடுகள் இருந்தாலும், மனிதர்கள் அடிப்படையில் ஒன்றுதானே. ஆக, புராணங்களைப் படைத்தல் என்பவை எல்லா மக்களிடத்திலேயும் ஆதிகாலம் தொட்டு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் ஒரு தடையற்ற நிகழ்வாகவே அமைகின்றது.

மனித குலத்தின் தேடுதல் என்பது அடிப்படை தேவைகளான  உணவு, உடை, பாதுகாப்பு, சந்ததி விருத்தி என்பது மட்டுமன்றி காணும் பொருள்களிலிருந்து காணாப்பொருளைத்தேடும் முயற்சிகளிலும் வியாபித்துக்கொண்டே செல்லும் தன்மை படைத்தது. இந்தத் தேடுதல்கள் தொடரும் போது மனிதர்கள்  தாம் கற்பனையில் உருவாக்கிய படைப்புக்களை ஏனையோருக்குச் சொல்லும் கதைசொல்லியாக அவதாரம் எடுக்கின்றனர்.

கதை சொல்லிதான் புராணங்களில் கடவுளர்களையும் தேவர்களையும் அசுரர்களையும்  படைக்கும் பிரம்மா. அவரே பலம் பொருந்தியவர். அவர் கற்பனையில் உதிக்கும் செயற்பாடுகளின் வடிவமாகவே புராணங்களில் உருவாக்கப்பட்ட கடவுளர்களும் கதாமாந்தர்களும் செயல்படுவர்.

மனிதரின் கற்பனைக்கு ஏது எல்லை? யாராலும் தடை செய்ய இயலாத, தகர்க்க முடியாத, நிறுத்த  முடியாத அசுர சக்தி ஒரு தனி மனிதரின் கற்பனைக்கு உண்டு. அதற்குச் சுதந்திரம் கொடுத்து கற்பனையை வளர விட்டால் அது  இயற்கையில் இல்லாதவையை இருப்பதாக்கிக் காட்டும் வல்லமையைக் காட்டி சக்தி கொண்டு பரிமளிக்கும். கதைசொல்லிகள் என்போர் காலம் காலமாகச் சொல்லிய  கதைகளால் தான் சமயங்கள் வளர்ந்தன; கருத்துருவாக்கங்கள் வளர்ந்தன. கதைகளை நம்புவோரும் இருந்தனர்; அதே வேளை கதைகள் தோற்றுவிக்கும் மாய ஜாலத்தை எதிர்த்துப் போராடும் கருத்து சித்தாந்தகளும் பிறந்தன.

தமிழக நாட்டார் வழக்காற்றியல் என்பது ஏராளமான புனைக்கதைகளை, புராணங்களைத் தன்னிடத்தே கொண்ட வளமான களமாகத் திகழ்கின்றது. தமிழகத்தின் ஒவ்வொரு கிராமமும் தன்னிடத்தே ஆயிரமாயிரம் கதைகளைப் புதைத்து வைத்திருக்கின்றது. காலங்காலமாக மக்கள் சொல்லி வரும் கதைகள் சில வேலைகளில் அச்சு அசல் மாறாது தொடரும் வகையிலும் கிடைக்கின்றன. சில வேளைகளில் அக்கதைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அடிப்படைகள் திரிக்கப்பட்டு புது வடிவமெடுக்கும் கதைகளும் இருக்கின்றன. கிராமங்களில் இருக்கும் கதைகளே ஒவ்வொரு ஊருக்கும் தன்னை அக்கிராமங்கள் அடையாளப்படுத்திக் கொள்ள அமையும் சின்னங்களாக அமைந்து விடுகின்றன. இந்தக் காரணத்தால், இப்புனைக்கதைகளும் புராணங்களும் அந்த  கிராமத்திலிருந்து பிரித்தெடுக்கமுடியாத சொத்துக்களாக அமைந்து விடுகின்றன.

குறத்தியாறு, இப்படி ஒரு கதை சொல்லியின் முயற்சியில் வெளிவந்திருக்கும் ஒரு சிறிய காப்பியம். கௌதம சன்னாவின் எழுத்தில் கற்பனை குதிரையான மனோரஞ்சிதத்தின் முதுகில் ஏறிக்கொண்டு வாசகர்களைப் பறக்க வைக்கும் முயற்சி இந்த நாவல். உயிர்மை பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டிருக்கும் இந்த நாவல் 2014ம் ஆண்டில் வெளிவந்தது.

முதலில் படிக்கும் போது நாவலின் மைய நிகழ்வு என்ன என்பதை அறிந்து கொள்ள முடியாத வகையில் நம்மை மலைக்க வைக்கின்றது கௌதம சன்னாவின் எழுத்து நடை. அடர்ந்த காட்சிப்படிமங்கள் வரிக்கு வரி அமைந்திருப்பதால் கதைக்களத்தை உருவகப்படுத்த முதலில் நம்மை நாம் மனத்தளவில் தயார்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியமாகின்றது.  நூலாசிரியரின் எழுத்து கவித்துவமாக இருப்பதால் வாசிக்கும் போது கருத்தை உள்வாங்கி , அதனை மணக்கண்ணில் காட்சிப்படுத்திக் காணும் போது படிப்படியாக நிகழ்வுகளை நம் கண் முன்னே கொண்டு வர முடிகின்றது. எளிதான வாசிப்பை எதிர்பார்க்கும் வாசகர்களைத் திணரடிக்கும் எழுத்து ஆசிரியருடையது. ஒவ்வொரு வரியையும் காட்சிப்படுத்தி அதன் உட்பொருளைப் புரிந்து கொள்ள அதீதமான பொருமை, வாசகருக்கு இந்த நாவலைப் பொறுத்தவரை அத்தியாவசியமாகின்றது.

இந்த நாவலில் கதாநாயகன் என்றோ கதாநாயகி என்றோ தனி நபர் சுட்டப்படவில்லை. ஒரு ஆறு இங்கு நாவலின் பிரதான கதாபாத்திரமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.  இதுவும் கூட  ஏனைய சமகால நாவல் படைப்புக்களிலிருந்து இந்த நாவலை வித்தியாசப்படுத்துகின்றது என்று கருதுகின்றேன்.

வட சென்னையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமத்தின்  மொன்னேட்டுச் சேரி இந்த நாவல் நடக்கும் கதைக்களம். இரண்டு கதை சொல்லிகள் இந்த நாவலில் வருகின்றார்கள். செம்பேட்டுக் கிழவனும் பித்தன் கண்ணாயிரமும் தங்கள் பங்கை சுவாரசியமாகச் சொல்லி விட்டு, கதை கேட்போரை ஏங்க வைத்து எதிர்பார்ப்பினை உருவாக்கி விட்டு சென்று விடுகின்றனர்.

செம்பேட்டுக்கிழவனிடம் கதை கேட்க வந்து நிற்கும் சிறுசுகளும் பெரிசுகளும் காட்டும் ஆர்வம் கிழவரை அசைக்க வில்லை. தான் நினைக்கும் போதுதான் கதையைச் சொல்வேன் என்னும் கிழவரின் பிடிவாதம், கதை சொல்வதிலும் கூட கால நேரம் உண்டு என்பதையும் , கதைசொல்லி மனம் வைத்தால் தான் கதை சொல்லுதல் என்பது நிகழும் என்பதையும் காட்டுவதாக அமைகின்றது. ஒரு கதை சொல்லுதல் என்பது உளவியல் ரீதியான  இயக்கம். அந்த இயக்கம் கதையில் தோய்ந்து கதாமந்தர்கள் தங்கள் பணியைச் செய்ய  முயலும் தக்க சமயமானது கதை சொல்லியின் உள்ளத்தில் உருவாகும் போது தான் அந்த இயக்கத்தின் தொடக்கம் நடைபெறும்.  அது நிகழும் வரை கதாமாந்தர்கள் உறைந்து நிற்பது தான் உண்மை.  இயக்கம் தொடங்கியதும் கதையின் வேகம் கூடக்கூட கதாமந்தர்களின் நடவடிக்கைகள் நிகழ்வதும், அதில் கதை கேட்போர் லயித்துப் போய் தன் சுயத்தை மறந்து கதையில்  கலப்பது என்பதும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பினைந்தவை.

குறத்தி நதிக்கான புதிய புராணம் அங்கேயே  அதே ஊரில் பிறந்து வளர்ந்து அந்த கிராமத்திலேயே வழி வழியாக சொல்லப்பட்ட  கதைகளை கேட்டு வளர்ந்த ஒரு கதாசிரியரால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது இந்த நாவலில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு உயிர்கொடுக்கும் அம்சமாக  அமைந்திருக்க்கின்றது. இது தனிச்சிறப்பு. கிராமத்தின் ஒவ்வொரு மூலை முடுக்குகளையும், இயற்கையின் அசைவுகளையும், வயல் வெளிகளையும், ஆற்று மணலின் தன்மையை விளக்குவதிலேயும் அங்கேயே பிறந்து வளர்ந்து ஒவ்வொரு நொடிப்பொழுதையும் தன் மனதில் குறித்து வைத்து,  வழி வழிச் செய்திகளின் அடுக்கில்  தன் சிந்தனைகளை பதிந்திருக்கும் நிலை  ஆசிரியரின் எழுத்துக்களில் முழுமையாக பரிமளிக்கின்றது.


ஒரு வகையில் நோக்கும் போது கதையில் குறத்தி தொடர்பான செய்திகள் வரும் பகுதி குறைவாகவே இருப்பதாக வாசிக்கும் வாசகரை எண்ண வைக்கின்றது. குறத்தி மாய ஜாலம் நிறைந்தவளாகவும், வசீகரப்படுத்தும் தன்மை மிக்கவளாகவும், பின்னர் அவளது துயரச்சம்பவம்  சிறிதே விளக்கப்படுதலும் பின்னர் குறத்தி ஆற்றிற்குப் பெயர் கொடுத்து மறைவதாகவும்  மட்டும் காட்டப்படுவதாக உணரமுடிகின்றதே தவிர ஏனைய கதாமாந்தர்களைப் போன்ற இயல்புத்தன்மையை குறத்திக்கு நாவலாசியர் காட்டி மேலும் குறத்தி தொடர்பான செய்திகளை சொல்லத்தவரி விட்டாரோ என்றே எண்ணத்தோன்றுகின்றது.

இந்த நாவலில் இரண்டு பகுதிகள் மனதை உலுக்கும் சக்தி படைத்த காட்சி அமைப்பைக் கொண்டவையாக அமைந்திருக்கின்றன.  முதலில், காட்டிற்கு வேட்டையாடச் செல்லும் எல்லாளன் எய்த அம்பு தாக்கி சாகும் நிலையிலிருக்கும் சூல்கொண்ட பெண் யானையின் வலி. இந்த வலியை விவரித்திருக்கும் பாங்கு உணர்வுகளைத் தொட்டு மனதை வருந்திக் கரைய வைக்கும் வகையில் அமைக்கபப்ட்டிருப்பது இந்த நாவலில் இருக்கும்  மாபெரும் சிறப்பு. தாக்கப்பட்டது யானைதான் என்றாலும் உயிருள்ள ஒரு கர்ப்பிணிப்பெண் தாக்கப்படும் போது ஏற்படும் அதே உணர்வலைகளை நாவலாசிரியர் வாசகர்களுக்கு ஏற்படுத்தி விடுகின்றார்.

அதே போல இந்தக் கதையில் மையைப் புள்ளியாக அமையும் பகுதி மனதில் அதிர்வினை உண்டாக்கும் தனமையுடையதாக அமைகின்றது. அணல் கொதிக்கும் மணலாற்றில் குறத்தி குழந்தையை முதுகுத்தூளியில் தூக்கிக் கொண்டு நடக்கின்றாள். வீட்டிற்கு விரைத்து சென்று தன்னையும் தன் குழந்தையையும் கொதிக்கும் அணலிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற துரித உணர்வு. ஆயினும் மனித உடலால் தாங்கக் கூடிய வேதனையின் அளவு ஓரளவு தானே.  அந்த சூழலில் நிகழும் சம்பவமும், குறத்தியின் செயல்பாடும் சராசரி கதைகளிலிருந்து இந்தக் கதையை வேறுபடுத்திப் பார்க்க வைப்பதாய் அமைந்திருக்கின்றது. தான் இறந்து விட்டதாக நினைத்த குழந்தை ஒருமுறை கண் இமை திறந்து பார்த்து புன்னகைத்து உயிர் விடும் அச்சமயம்.. குற்த்தியின் உயிர் மூச்சை அக்கணம்  நிற்க வைக்கும் வேதனை வலிகளை ஓரிரு வரிகளில் சொன்னாலும் கூட வாசிப்போர் உணரும் வகையில் இப்பகுதியை ஆசிரியர் வடித்திருப்பது அபாரம்.  இப்பகுதி வெகுவாக நாவல்களில் புனிதப்படுத்தப்பட்ட தாய்மை பண்பின் கோணத்திலிருந்து மாறுபட்டு நிற்கின்றது என்றாலும், இந்த நிகழ்வு நடக்கும் போது நொடிக்கு நொடி குறத்தியின் சூழலும் அவளது நடவடிக்கைகளும், சங்கதியை விளக்கும் பாங்கில், அரிதாரமற்ற வாழ்க்கை நிலை வெளிப்படுகின்றது.

இந்த நாவலில் பிரமிக்க வைக்கும் வகையில் ஏராளமான  பகுதிகளில் ஆசிரியரின் காட்சிப்படுத்தும் திறன் அமைந்திருக்கின்றது.  அதில் மிகச்சிறப்பாக  என்னை ஆச்சரியப்படுத்தியவை இடுகாட்டில் பிணம் எரிக்கும் சூழலும் அதனைச்சார்ந்த நிகழ்வுகளும் என்று சொல்லலாம். உதாரணமாக ஒன்பதாம் அத்தியாயத்தில் கூறப்படும் பகுதி ஒன்று.

".. வெந்து மீந்த கபாலமும், இதயம் வெந்து வெடித்து எரிந்து கரைந்து, எரியாமல் மிஞ்சிய நெஞ்சகக் கூடும், காலும் கையுமாய் மிஞ்சி, நாய் கவ்வ பயந்த கொடு இடுகாட்டிலுறங்கிடும் பித்தன் ..." என பித்தனைப் பற்றி விவரிக்கும் போது இடுகாட்டை விளக்கும் தன்மையைக்குறிப்பிடலாம்.

".. பிணமெரிக்கும் ராவில் திமிரியெழும் சுவாலைப் பொணம் அவன் தடியடி வாங்கி பணிந்து படுக்கிறது. வெந்த இதயம் வெடித்துக் கிளம்ப  பறக்கிறது தீய்ச்சாம்பல். அணலேறி, கொதியும் மிகவேறி மண்டைக் குளம் பீய்ச்சிவழிகிறது கர்ண நாசிவழி. "   பதின்மூன்றாம் அத்தியாயத்தில் வரும் இந்தக் காட்சி அமைப்பும் இடுகாட்டுக் காட்சியை நம் கண்முன்னே கொண்டு வரும் விதமாக அமைகின்றது.

கிராமப்புர நாட்டுபுர வழக்கில் இன்றும் இருக்கும்  காப்புக் கட்டுதல், விரதம் இருத்தல் என்பன போன்ற சடங்குகள் பற்றிய செய்திகளும் கதையின் ஊடே வருகின்றமை இந்த நாவலுக்கு நாட்டார் வழக்காற்றியல் தன்மை நிறைந்த படைப்புக்களில் இணையும் அங்கீகாரத்தையும் அளிக்கின்றது.

தான் தேடுவது எதுவென்றே அறியாமல் தேடும் பித்தன் கன்ணாயிரத்தின் நிலையில் தான் மனிதர்கள் நாம் எல்லோருமே இருக்கின்றோம். தேடு பொருள் மாறு பட்டாலும் கூட தேடுதல் தொடர வேண்டும். தேடுதல் இருக்கும் வரை உடலில் உயிர் இருக்கும் என்பதால்..

...புராணங்கள் இன்றும் பிறக்கின்றன. புராணக்கதாமாந்தர்கள் இன்றும் அவதாரம் எடுக்கின்றனர். மனித குலம் உள்ள மட்டும் புராணக்கதைகள் உருவாக்கம் என்பது தொடர் நிகழ்வாக நிச்சயம் இருக்கும்.

​இந்த நாவல், தமிழ் எழுத்துலகிற்கு பழமையும், புதுமையும், நிஜங்களும் கற்பனைகளும் கலந்ததொரு வித்தியாசப் படைப்பு. இத்தகைய முயற்சிகள் வரவேற்கப்படவேண்டியது அவசியம்.