Friday, July 29, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 99

சீவக சிந்தாமணியை ஏட்டுச் சுவடியிலிருந்து அச்சு நூலாகப் பதிப்பிப்பதற்கு பலர் முயன்றிருக்கின்றார்கள் என்ற செய்தியை என் சரித்திரம் நூலின் தொடர்ச்சியான பதிகளில் காண்கின்றோம். 

உ.வே.சா சென்னையில் தங்கியிருந்து பணிகளைத் தொடர்ந்த போது, அஷ்டாவதானம் சபாபதி முதலியார் என்ற ஒருவரைச் சந்திக்க நேர்கின்றது. உ.வே.சா சிந்தாமணியை உரையுடன் பதிப்பிக்க தாம் வந்திருப்பதாகச் சொன்னவுடன் முதலில் அதிர்ச்சியடைந்து இப்பணியை விட்டு விடும்படி கூற, அது உ.வே.சாவிற்கு அதிர்ச்சியை அளிக்கின்றது. ஆசி வழங்காமல் ஏன் இந்தப் பெரியவர் தடை சொல்கின்றார் என்று குழப்பம் ஏற்படுகின்றது. ஆனால்ம உ.வே.சா மனம் கலங்கவில்லை. ஆனால் அப்பெரியவரோ, பணி ஆரம்பித்திருந்தாலும் கூட பரவாயில்லை. இதனை நிறுத்தி விடவும், என்று சொல்லி தானும் தம் ஆசிரியரும் அந்த முயற்சியில் இறங்கியதாகவும், அது பலனளிக்காது போனதாகவும் பின்னர் ட்ரூ என்ற பாதிரியார் (Rev. W.H. Drew) சிந்தாமணியைப் படித்து பின்னர் அதனைப் பதிப்பிப்பதற்காகவே ஒரு திட்டத்தை தீட்டினார் என்றும், ஆனால் அது பலனளிக்காமல் போனது என்றும் அதுமட்டுமன்றி யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் அவர்களும் இதே முயற்சியை மேற்கொண்டார் என்றும், அதுமட்டுமன்றி உ.வே.சாவின் குருவாகிய மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களும் சோடாவதானம் சுப்பராய செட்டியாரும் இணைந்து முயன்ற நிகழ்வையும் சொல்லிக் காட்டி, இது கடினமானதொரு காரியம். விட்டு விடுவதே நல்லது, என ஆலோசனை வழங்கினார். " யார் தொட்டாலும் நிறைவேறாத இந்த நூலை நீங்கள் பதிப்பிக்கத் துணிந்தீர்களேயென்று அஞ்சுகின்றேன்" எனச் சொல்லி தன் அச்சத்தை வெளிப்படுத்தினார்.


உ.வே.சா இதனைக் கேட்டு தயங்காமல், இவ்வளவு சிரமமான ஒரு நூலை அவர்களெல்லாம் முயன்றிருக்கின்றார்கள் என்றால் அதனைத் தொடர்ந்து செய்து அதனை முடிப்பது தானே சரியான நடைமுறையாகும் என்று சொல்லி, ஒருவர் செய்து முடிக்கவில்லை என்பதற்காக மற்றவர் செய்யக்கூடாது என்றோ செய்தால் தோல்வியே கிட்டும் என்று நம்புவதோ உதவாது என்ற வகையிலும் மிகுந்த உற்சாகத்தோடு பதில் கூறிவிட்டார். இதனை அவரே தன் எழுத்துக்களால் விவரிப்பதைக் காண்போம். 

"ஆனால், அவருடைய வார்த்தைகளால் நான் சிறிதும் அதைரியம் அடையவில்லை. “முன்பு அவர்கள் நிறைவேற்றவில்லை என்ற காரணத்துக்காக நாம் நமது முயற்சியை நிறுத்திக்கொள்வதா? அவர்களெல்லாம் 
முயன்றார்களென்ற செய்தியினாலே இந்த நூல் எப்படியாவது அச்சு வடிவத்தில் வெளியாக வேண்டுமென்ற ஆவல் அவர்களுக்கு இருந்ததென்று தெரியவில்லையா? அந்த விருப்பத்தை நிறைவேற்ற முயல்வது மற்றவர்களுடைய கடமைதானே? என் முயற்சி தடைப்படினும் குறைவொன்றுமில்லை. இறைவன் திருவருளால் இது பலித்தால் தமிழன்பர்களுக்குச் சந்தோஷமுண்டாகாதா? ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் ஆராய்ந்து பதிப்பித்து வருகிறேன், குறைபாடுகள் இருப்பது இயல்பே. அறிவுடையவர்கள் நாளடைவில் அவற்றைப் போக்கி விடுவார்கள்” என்று உத்ஸாகத்தோடு கூறினேன்." 

புதுமையான முயற்சிகளை யாரேனும் செய்யும் போது இத்தகைய வகையிலான தடங்கல்கள் பலவாறு வருவது இயல்பே. பலருக்கு எப்படிச் செய்து முடிக்கப்போகின்றார்கள், வயதில் இளையோராயிற்றே.. நிறையப் பொருள் செலவாகிவிடும்.. உற்சாகம் இழந்து விடும் .. கையைச் சுட்டுக் கொள்வார்கள், என நினைத்து ஆரம்பத்திலேயே புதிய முயற்சிகளைத் தடை செய்ய முயற்சிப்பார்கள். தாங்கள் பெற்ற பாடத்தையே பிறரும் அனுபவிக்க வேண்டாமே என்ற நல்ல எண்ணத்தில் சிலர் சொல்வதாகவும் இருக்கும். ஒரு சிலருக்கோ, நாமே செய்து முடிக்க முடியாத காரியத்தை இவர்கள் எங்கே செய்யப் போகின்றார்கள் என்ற ஒரு வித சிந்தனையும் இருக்கும். 

எது எப்படியோ.. 
ஒரு காரியத்தை செய்து முடிக்க வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டால் அதனைச் செய்து முடிக்கத்தான் வேண்டும். அதற்காக எவ்வகையான உழைப்பு தேவைப்படுமாயினும் அந்த உழைப்பைச் செலுத்தி அக்காரியத்தை முடிக்க முயற்சிப்பவர்கள் தாம்சாதனையாளர்களாக தம்மை உயர்த்திக் கொள்கின்றனர். 

அத்தகைய சாதனையாளர்களாக உருவாக்கம் பெற நம் ஒவ்வொருவராலும் இயலும். அதற்கு உலகுக்கு நன்மை தரும் உயர்ந்த லட்சியமும், தெளிவான எண்ணமும், திட்டமிடுதலும், செயல்பாட்டில் கட்டுப்பாடும் ஒழுங்கும் இருக்க வேண்டும். அத்தகையோராக நம்மை உருமாற்றிக் கொண்டால் சாதனையாளர் பட்டியலில் நாம் ஒவ்வொருவரும் இடம் பெறுவது உறுதியே!

-சுபா

Monday, July 25, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 98

பல சுவடிக்கட்டுக்களை வைத்துக் கொண்டு தொடர்ந்து உ.வே.சா சீவக சிந்தாமணி ஆய்வுகளைச் செய்து வந்தார். இப்படியே தொடர்ந்து பாட பேத ஆய்விலேயே வாழ்நாள் முழுதும் இதிலேயே நாட்கள் செல்வாகிவிடும். இதுவரை செய்த ஆய்வுகளில் செய்துள்ள தயாரிப்புக்களைக் கொண்டு முதல் பதிப்பினைக் கொண்டு வருவோம். அதன் பின்னர் மேலும் திருத்தங்கள் செய்து அடுத்த பதிப்பை பின்னர் வெளியிட முயற்சிக்கலாம் என அவருக்குத் தோன்றியது. இதனையே அவரது நண்பர்களும் ஆலோசனையாகச் சொல்லிக் கொண்டிருந்தனர். 

உண்மைதானே! 
ஆய்வு என எடுத்துக் கொண்டு ஒரு விசயத்தில் இறங்கினால் ஒரு நூலைத் தொட்டால் அது அடுத்த ஒன்றைக் காட்டுகின்றது. அதில் நம் கவனத்தைச் செலுத்தினால் அடுத்த சில நூற்களை அதுகாட்டுகின்றது. ஒரு விசயத்தை நோக்கி நம் ஆய்வு நோக்கம் இருக்கும் போது புதிய புதிய விசயங்கள் வந்து நமக்கு மேலும் பல ஆய்வுச் சிந்தனைகளை வழங்குகின்றன. ஆக இப்படியே சென்று கொண்டிருந்தால் ஆய்வுக்கு என்று தான் முடிவு என்று தோன்றுவதும் இயல்புதானே. 

சரி. பதிப்புப்பணியைத் தொடங்கலாம் என முடிவாயிற்று. ஆனால் ஒரு நூலைப் பதிப்பிப்பது என்பது சாதாரண காரியம் அல்லவே. அதிலும் இன்றைக்கு 150 ஆண்டுக் காலத்திற்கு முன்னர் உள்ள நிலையில் அச்சுப்பதிப்பிற்கு முயற்சித்தவர்கள் பெரும்பாலும் செல்வந்தர்களாகவோ அல்லது செல்வந்தர்களிடம் பொருளாதார உதவி பெற்றோ தான் இவ்வகை பணிகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள். அச்சுக்கூடங்கள் பல வந்து விட்டன இக்காலத்தில். ஆயினும் கூட இன்னமும் எழுத்தாளர்களுக்குப் பொருளாதார பலமும் தேவையாகத்தான் இருக்கின்றது. ஆயினும் சில பதிப்பகங்கள் எழுத்தாளர்களின் படைப்புக்களை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு வகை வெளியீட்டு முயற்சிகளில் இறங்கி உள்ளமையும் இன்று நடப்பில் இருப்பதுதான். இவையனைத்தையும் விட இணைய வழி மின்னூல் பதிப்பு என்பது எழுதுபவருக்கு எந்தச் சிரமமுமின்றி முழு நூலை இணணையத்திலேயே முழு நூலாக வாசகர்களுக்கு வழங்கும் வகையை இன்று தந்திருக்கின்றது. இது நூல் பதிப்பாக்கத்தில் ஒரு புரட்சி என்றால் மிகையில்லை, 

ஆக, பொருளாதார உதவி வேண்டுமே என நண்பர்கள் அவருக்கு யோசனை சொல்லியிருக்கின்றனர். அதாவது புத்தகங்களை வாங்கிக் கொள்கின்றோம் எனச் சொல்லி முன்பணம்  வாங்கிக் கொண்டு அந்தப் பணத்தைக் கொண்டு அச்சுப்பதிப்பைத் தொடங்குவது. பின்னர் நூல் தயாரானது பணம் கொடுத்தோருக்கு நூலைக் கொடுத்து விடலாம் என்பது தான் அந்த யோசனை. முதல் நபராக திருவாவடுதுறை ஆதீனகர்த்தரைச் சென்று சந்தித்து தன் விண்ணப்பத்தை வைத்து விட்டார். உ.வே.சா. அவர் மகிழ்ச்சியுடன், சில நூற்களுக்கான பணத்தை முன்பணமாகக் கொடுக்க இப்படியே பல நண்பர்களையும் அணுகி ஒரு வழியாக ஓரளவு பணம் சேர்ந்தது. 

1886ம் ஆண்டு கல்லூரி கோடை விடுமுறையின் போது அச்சுப்பணியை நிறைவேற்றும் எண்ணத்துடன் சென்னைக்குப் புறப்பட்டார் உ.வே.சா. இராமசாமி முதலியார் சென்னையில் இல்லாமையால் சோடாவதானம் சுப்பராய செட்டியார் இல்லத்திற்குச் சென்று அங்குத் தங்கிக்கொண்டு ஒரு உணவு விடுதியில் உணவுக்கு ஏற்பாடு செய்து கொண்டு அச்சுப்பதிப்புப் பணியைத் தொடங்கினார். சோடாவதானம் சுப்பராய செட்டியார் அச்சுப்பதிப்புப்பணியில் நல்ல அனுபவம் கொண்ட சக்கரவர்த்தி ராஜ கோபாலாச்சாரியார் என்பவரை அறிமுகப்படுத்தினார். 

சுவடி நூல்களை வைத்து அப்படியே பதிப்பிக்கப்போகிறோம் என நினைத்திருந்த உ.வே.சாவிற்கு இவர்தான் சில பகுதிகளைப் பெரிய எழுத்திலும், சில பகுதிகளை சிறிய எழுத்திலும் எப்படிப் பிரித்து அமைப்பது, விசேட உரை, பொழிப்புரை போன்றவற்றை ஒரே தொடர் வரிகளில் புகுத்தாமல் தனித்தனி பாராவாக எப்படி அமைப்பது என்றெல்லாம் விளக்க,  உ.வே.சாவிற்குப் புத்துணர்ச்சி கிட்டியது. 

அவரே சூளை அவதானம் பாப்பையர் வீதியில் உள்ள திராவிட ரத்னாகரம் என்ற அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கலாம் என்று ஆலோசனையும் கூறினார். திராவிட ரத்னாகரம் என்பது தமிழ்க்கடல் என்ற பொருளைத்தருவதால் இதுவே நல்ல சகுனமாக ஒலிக்கின்றது. அங்கேயே சிந்தாமணியைப் பதிப்பிப்பது பொருந்தும் என உ.வே.சா முடிவு செய்தார். "சிந்தாமணி ஒரு கடலில் தானே தோன்றியது. தமிழ்ச்சிந்தாமணி தமிழ்க்கடலிலிருந்து வெளிவருவது நன்மையே" என உ.வே.சாவின் உள்ளம் நினைத்து மகிழ்ந்தது. 

ஒரு உழைப்பாளிக்கு தன் உழைப்பின் பலன் கிட்டும் நேரம் என்பது அளவில்லாத ஆனந்தத்தை தருவது என்பதோடு எவ்வாறு தன் உழைப்பு பலன் தருமோ என தவித்துக் கொண்டிருந்த மனதிற்கு அது ஆறுதலையும் நிம்மதியும் தரும் நேரம் அல்லவா? 95ம்  அத்தியாயத்தில் இந்த நிகழ்வுகளை மிக விரிவாகவே உ.வே.சா விவரிக்கின்றார். 


தொடரும்
சுபா

Tuesday, July 12, 2016

FETNA ஆண்டு விழா 2016


FETNA ஆண்டு விழாவிற்கு வந்து கலந்து கொண்டு இன்று ஜெர்மனிக்கு என் இல்லம் திரும்புகின்றேன். விமான நிலையத்தில் இப்போது.
மனம் FETNA நிகழ்வை நினைத்துப் பாக்கின்றது.
நான் நிகழ்வுக்கு ஒரு நாள் முன்னராகவே வந்திறங்கி விட்டதால் ஏற்பாட்டாளர்கள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கும் போதே அவர்களது பணிச்சுமையை உணர முடிந்தது. ஆண்டு விழா.
அதிலும் வட அமெரிக்கா மட்டுமன்றி கனடா, தமிழகம் மற்றும் ஏனைய பிற நாடுகளிலிருந்தும் பங்களிப்பாளர்கள் வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து நிகழ்வை நடத்த வேண்டும். 1800 பங்கேற்பாள்ர்களுக்கு உணவு ஏற்பாடு. தங்கும் வசதி ஏற்பாடு. சிறப்பு விருந்தினர் மேற்பார்வை என தங்கும் விடுதில் ஏற்பாட்டாளர்கள் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தனர்.
மாலை விருந்து நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உணவு மிகத்தரமான வகையில் அமைந்திருந்தது. FETNA தலைவர் திரு.நாஞ்சில் பீற்றர் பிரத்தியேகமாக தமிழ் மரபு அறக்கட்டளையை அறிமுகப்படுத்தி என்னை பேச அழைத்தமை எனக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியை அளித்தது. தமிழ் மரபு அறக்கட்டளை எனும் எமது தன்னார்வ தொண்டூழிய நிறுவனம் கடந்த 16 ஆண்டுகளாக விரிவான தமிழ் வரலாறு, சுவடி, பழம் நூல்கள் மற்றும் ஆவணங்களை மின்னாக்கம் செய்து பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதை சிறப்பித்துக் கூறி என்னை பேச அழைத்தமை FETNA த.ம.அ மீது கொண்டிருக்கும் மதிப்பை எனக்கு உணர்த்தியது. இதற்காக எனது பிரத்தியேக நன்றியை நான் பதிவு செய்கின்றேன்.
முதல் நாள் அமர்வு இசைக்கச்சேரி, மாணவர் நிகழ்வு, கலை நாட்டிய நிகழ்வுகள் என மிக அருமையாக அமைந்தன. காலை தொடங்கி ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கண்டு களித்தேன். மதியம் எனது அமர்வு. நண்பர் சிவக்குமார் கூடுதல் அக்கறை எடுத்து என் அமர்வுக்கு ஏற்பாடுகளைச் செய்திருந்தார். எல்லா உபகரணங்களும் இருந்தன. அறை முழுதும் ஆர்வலர்கள் வந்து கலந்து கொண்டு எனது 2 மணி நேர உரையையும் வீடியோ வெளியீட்டையும் கண்டு மகிழ்ந்ததோடு தங்கள் கருத்துக்களையும் ஆர்வத்துடன் பதிந்தனர்.
த.ம.அ செய்யும் வரலாற்றுப் பணிகளைப் பற்றி அறிந்ததுமே அதனைப் பாராட்டி தம்மால் இயன்ற அளவு உதவுவோம் என உடனடியாக சிலர் தமது பெயர்களை பதிவு செய்து கொண்டனர். அவ்வகையில் சகோதர சகோதரியர் ராமு இளங்கோ, கீர்த்தி ஜெயராஜ், தினகர், மைதிலி, திரு.திருமதி. வேலு, பேரா.அ.ராமசாமி , தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளர் ஆகியோர் உடனடியாக உதவுவதற்குத் தயாராக தம்மையும் இப்பணிகளில் இணைத்துக் கொண்டனர். முன்னாள் FETNA தலைவர் டாக்டர்.முத்தரசன் அவர்களும் துணைவியார் கற்பகமும் மிகுந்த ஈடுபாட்டுடன் பல பயனுள்ள கருத்துக்களை வழங்கினர். முன்னாள் தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் டாக்டர்.நாகராஜன் நல்ல ஆலோசனைகளையும் கருத்தாகப் பதிந்தார்.
அன்றைய மாலை நிகழ்வில் நடிகர் திரு,அரவிந்தசாமியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். மிக நல்ல சேவை மனப்பாண்மை கொண்டவர் என்பதை அவரது தூய தமிழ் பேச்சிலிருந்து அறிந்து கொண்டேன். பெண் குழந்தைகளுக்கு பள்ளிக் கூடங்களில் சரியான கழிப்பறை வசதி இல்லாமையால் அவர்கள் தங்கள் கல்வியைத் தொடராமல் செல்லும் நிலை எற்படுகின்றது. அதற்காக பள்ளிக்கூடங்களில் கழிப்பறைகளை அமைக்கும் முயற்சியில் தாம் ஈடுபட்டுள்ளதை விவரித்தார். இது சிறந்த சேவை. இவரது சேவைக்கு என் பாராட்டுக்கள்.
அன்று மாலை நிகழ்ந்த கச்சேரியில் டி.எம்.கிருஷ்ணாவின் இசைக்கச்சேரி மிகப் பிரமாதம். ஆனால் நேரம் செல்லச் செல்ல வருகையாளர்கள் ஏறக்குறைய எல்லோருமே அரங்கை காலி செய்து விட்டது வருந்தத்தக்க ஒன்றே. அவரது கச்சேரியை காலையில் ஏற்பாடு செய்திருக்கலாம். அதனை விட்டு மாலையில் அமைந்ததால் கச்சேரி பொதுமக்களை கவரத் தவறி விட்டது என்று சொல்லித்தான் ஆகவேண்டும்.
இரண்டாம் நிகழ்வுகள் பல வகைப்பட்டனவாக இருந்தன. முடிந்தவரை நான் எனக்கு ஆர்வம் தரும் வகையிலான நிகழ்வுகளை பார்த்து ரசித்தும் புதிய நண்பர்களுடன் பேசி த.ம.அ பற்றிய செயல்பாடுகளை விவரித்தும் கலந்துரையாடியும் மகிழ்ந்தேன். அன்று தமெரிக்கா தொலைக்காட்சி பேட்டியும் நடைபெற்றது. அதில் எனக்கு 45 நிமிட பேட்டிக்கு இடம் அளித்து பேட்டி எடுத்த இருவருமே எனது ஞாயிற்றுக்கிழமை பொதுமேடை சொற்பொழிவிற்கும் வந்திருந்து பாராட்டினர்.
பொதுவாகவே வந்திருந்த அனைத்து தமிழ் ஆர்வலர்களுமே தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளைப் பற்றி அறிந்ததும் மிகவும் பாராட்டிப் பேசி தங்கள் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்திக் கொண்டமை எனக்கு மன நிறைவளிக்கும் படி அமைந்தது.
2ம் நாள் மாலை சினிமா இசைக்கச்சேரியும் அதில் கலந்து சிறப்பித்த கலைஞர்களும் வந்திருந்தோரை முழுமையாக மகிழ்வித்தனர். பொதுமக்களும் ஆடிப்பாடி தங்கள் உல்லாச உணர்வை வெளிப்படுத்திக் கொண்டனர்.
எல்லா இடங்களில் இருப்பது போல ஆய்வு தொடர்பான அரங்குகளில் இல்லாத மக்கள் பங்கேற்பை சினிமா நிகழ்ச்சிகளில் காண முடிந்தது. 1800 பேர் கூடக்கூடிய அரங்கம் அன்று மாலை முழுமையாக நிறைந்திருந்தது.
மூன்றாம் நாள் நான் கலிபோர்னியா புறப்பட்டு விட்டதால் என்னால் தனித்தமிழ் இயக்க அரங்கில் கலந்து கொள்ள இயலவில்லை. முன்னரே இந்த கூடுதல் நிகழ்வைப் பற்றி அறிந்திருந்தால் அதில் பங்கேற்றுச் செல்ல முயற்சித்திருப்பேன்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என நான் பெரிதும் எதிர்பார்த்த பேரா.கல்யாணி வரமுடியாது ஆனது என்பதும் கவிஞர் சுகிர்தராணி விசா பிரச்சனைகளால் வர இயலவில்லை என்றும் அறிந்தேன். இத்தகைய ஆண்டு விழாவிற்கு சிறப்பு வருகையாளர்களுக்கு விசா ஏற்பாடுகளை சில மாதங்களுக்கு முன்னரே செய்வது தானே சிறப்பு. அதனை ஏன் கவனம் கொள்ளவில்லை என்பது எனக்கு எழுந்த கேள்வி. இதனைத்தவிர ஏனைய அனைத்துமே மிகச் சிறப்பாக மனம் நிறைந்த வகையில் அமைந்திருந்தன.
எனக்கு தனிப்பட்ட வகையில் எனது பயணப்பெட்டி தொலைந்து பின்னர் அது கிடைக்கும் வரை உதவி செய்த நல்லுள்ளங்கள் சிவக்குமார், விஜயா, தேவி, நிர்மலா ஆகியோரை மறக்க முடியாது. இவர்கள் அனைவருக்கும் என் நன்றி.
FETNA 2016 எனக்கு மன நிறைவளிக்கும் வகையில் அமைந்திருந்தது. தமிழ் மரபு அறக்கட்டளைக்கு பங்கேற்க வாய்ப்பளித்த FETNA நிர்வாகக் குழுவிற்கும் நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கம் மற்றும் மானாட்டுக் குழுவிற்கும் என் மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக் கொள்கின்றேன். வாய்ப்பமைந்தால் அடுத்த ஆண்டு சந்திப்போம்.
அன்புடன்
முனைவர் சுபாஷிணி
ஜெர்மனி

Monday, July 11, 2016

அனிச்ச மலர்கள் - சிறுகதை நூல் விமர்சனம்

அனிச்ச மலர்கள் - சிறுகதை நூல் விமர்சனம்
+++++++++++++++++++++++++++++++++++++++++
முனைவர்.க.சுபாஷிணி

அங்கும் இங்கும் நகர முடியாமல் நீண்ட பயணங்கள் அமைந்து விட்டால் புத்தகங்கள் வாசிப்பது தான் ஒரே வழி.
சான் பிரான்சிச்கோவிலிருந்து சிக்காகோ விமானப்பயணத்தில் தோழி தேமொழி எழுதிய அனிச்ச மலர்கள் நூல் பயண அலுப்பை மறக்கச் செய்தது. அன்றே இந்த நூலைப் பற்றி எனது கருத்தை எழுதி இருக்கலாம். ஆயினும் இரண்டு கதைகளை முழுதாக முடிக்காததால் அதனையும் முடித்து எழுத நினைத்திருந்தேன். இன்று வாசித்து முடித்ததால் இந்த நூல் பற்றிய என் கருத்தை பதிகின்றேன்.
தமிழர்கள் தம் தாயகத்திலிருந்து புலம் பெயர்ந்த பின்னர் வாழ்க்கையைப் புதிதாகத் தொடங்கும் காலகட்டத்தில் தம் தாயகத்துடனான ஒட்டுதல் அதிகமாக இருப்பது இயற்கை. ஆனால் படிப்படியாக மனம் புலம் பெயர்ந்த நாட்டில் அதன் சூழலுக்கேற்ப தம்மை மாற்றிக் கொண்டு அங்கு வாழ்க்கை நிலைபெற்றுப் போகும் போது அந்தச் சூழலுக்கேற்ப மனித மனம் புதிய விசயங்களை ஏற்றுக் கொள்ள பழகி விடுகின்றது. அத்தகைய புதிய விசயங்களைப் பதியும் ஆவணங்களாகவே புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் படைப்புக்கள் அமைந்து விடும் போது அது புதிய இலக்கிய வடிவமாக நமக்கு காட்சியளிக்கின்றது..
தமிழர் புலம் பெயர்ந்த நாடுகள் பல. அதில் அமெரிக்காவிற்கு இந்தியத் தமிழர்களின் வரவு என்பது பல ஆண்டுகளாக நிகழ்வது.
அமெரிக்க வாழ் தமிழர்களின் வாழ்க்கை நிலையை, உள்ளூர் சூழலை படம் பிடித்துக் காட்டும் வகையில்புதிய இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும். தமிழகத்து சூழலை மட்டும் விவரிக்கும் இலக்கியங்கள் மட்டுமே உலகத் தமிழர்களின் பார்வையை பிரதிபலிக்கும் இலக்கியங்களாகி விட முடியாது. புலம் பெயர்ந்த தமிழர்களின் இயல்பான வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் பதிவுகளாக வெளிவரும் புனை கதைகள் அந்த விடுபட்ட இடங்களை நிரப்பும் வகை செய்ய இயலும். அந்த வகையில் இந்தச் சிறு கதைத் தொகுப்பும் அமைகின்றது.
இந்த சிறுகதைத் தொகுப்பு நூலில் ஓரிரு கதைகள் இந்தியச் சூழல் நிகழ்வுகளின் பிரதிபலிப்புக்களாக அமைந்திருக்கின்றன. பெரும்பாலானவை அமெரிக்க சூழலை கதைக் களமாகக் கொண்டிருக்கின்றன.
ஒரு வகையில் கதைகள் சாதாரண நிகழ்வுகளை பதிவது போல அமைவதால் ஆச்சரியப்பட வைக்கும் முடிவையோ திகைப்புக்குள்ளாக்கும் முடிவையோ தரவில்லை. ஓரிரு கதைகள் வாசித்து முடித்த பின்னரும் கதை மாந்தர்களைப் பற்றியும், கதைக் களத்தைப் பற்றியும் யோசிக்க வைக்கின்றன.
இதில் மிகச் சிறந்த கதைகளாக நான் பார்ப்பது நூலின் முதல் கதையான “சிலை அழுதது” என்ற தலைப்பிலான கதையும் “காசியில் பிடிச்சத விடனும்” என்ற தலைப்பிலான கதையும் எனலாம்.
இரண்டுமே வாசிக்கும் வாசகரின் மனதை வலிக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றன.
தேமொழி சின்ன சின்ன நுட்பமான விசயங்களையும் கதையின் ஓட்டத்தில் இணைத்து ஒவ்வொரு விசயங்களையும் வாசகர்கள் மனத்திறையில் காட்சிப்படுத்திப் பார்த்து கதைக்குள் பிரவேசித்து உலா வரும் வகையில் எழுதி இருக்கின்றார்.
மேலும் தொடர்ந்து இவர் சிறுகதைகளைப் படைக்க வேண்டும். ஏனையோர் சாதாரண விசயங்கள் என ஒதுக்கிச் செல்பனவற்றை ஒரு பொருளாக்கி, கதைக்களமாக்கி சாமான்யமான விசயங்களும் கூட முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமையக்கூடும் என்பதைக் காட்டும் திறனுடன் இப்படைப்பை வழங்கியிருக்கின்றார்.
நூலாசிரியர் முனைவர் தேமொழிக்கு என் பாராட்டுக்கள்!