Monday, November 28, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 107

சுப்பிரமணிய தேசிகர் மறைந்த சில நாட்களிலேயே அதாவது 19.1.1988ம் ஆண்டில் தியாகராச செட்டியார் மறைந்தார். ஒரு இழப்பிலிருந்து உ.வே.சா மீள்வதற்குள் அடுத்த இழப்புச் செய்தி திடீரென்று வரும் என்று உ.வே.சா நினைத்திருக்காத தருணம் அது. 

உ.வே.சாவின் கல்வி மற்றும் ஆய்வு தொடர்பான புற வாழ்க்கையில் மிக முக்கியமான மூன்று பேர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, சுப்பிரமணிய தேசிகர் அதற்கடுத்து தியாகராச செட்டியார் ஆகியோர். இவர்கள் மூவரையுமே படிப்படியாக இழக்கும் சூழல் நிகழ்ந்தது. இது இயற்கையின் விதி. இதில் சாமானிய மனிதர்கள் நாம் மாற்றுவதற்கு ஒன்றுமில்லை. மரணத்தின் வழி ஏற்படும் இழப்புக்களைத் தாங்கும் மனமும், அடுத்து அவரவர் வாழ்க்கையைச் சரியான நெறியில் தொடர்வதும் தான் உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய கடமை. நமக்கு வழிகாட்டியாக சிலர் இருந்தது போல நாம் பிறருக்கு வழிகாட்டியாக வாழ்க்கையில் உயரும் நிலையை நாமே தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். 

தியாகராச செட்டியாரின் பிரிவில் வாடிய உ.வே.சா அவரை நினைத்து மனம் வருந்தி சில செய்யுட்களை எழுதினார். இந்த நேரத்தில் பத்துப்பாட்டு ஆராய்ச்சி அவருக்குச் சிந்தனையை ஒருமுகப்படுத்த உதவியது. பேரிழப்புக்களினால் உண்டான வலியை ஆராய்ச்சியின் வழி மறக்கவும் மனதைத் தேற்றிக் கொள்ளவும் உ.வே.சா பழகிக்கொண்டார். ஆனாலும் நெருக்கமாக நம்முடன் பழகியவர்களின் சிந்தனை அவ்வளவு எளிதில் மறையக்கூடியதா என்ன? இதனை அவரே தம் குறிப்பில் இப்படி எழுதுகின்றார். 

"சுப்பிரமணிய தேசிகர், தியாகராச செட்டியார் என்னும் இருவர் பிரிவும் என்னை வருத்தினாலும் பத்துப் பாட்டு ஆராய்ச்சியை நிறுத்தவே இல்லை. அந்தத் துக்கத்தை ஆராய்ச்சியினால் மறக்க எண்ணினேன். இன்னும் ஏட்டுப் பிரதிகள் இருந்தால் நல்ல பாடம் கிடைக்குமென்ற எண்ணம் உண்டாகும். அச்சமயங்களில் சுப்பிரமணிய தேசிகர் இருந்தால் திருநெல்வேலிப் பக்கத்திலிருந்து பல ஏட்டுச் சுவடிகளை வருவித்துக் கொடுப்பாரென்ற நினைவும் கூடவே வரும். நல்ல பகுதிகளைக் காணும் போதெல்லாம் தியாகராச செட்டியார் கேட்டால் 
அளவில்லாத மகிழ்ச்சி கொள்வாரே என்ற ஞாபகம் உண்டாகும்." 

இப்படித்தான்.. யாரை மறக்க நினைக்கின்றோமோ அவர்களைப் பற்றிய சிந்தனைதான் நம் மனதில் அடிக்கடி வந்து நம்மைக் கலங்க வைக்கும். இதனையெல்லாம் பார்த்து கலங்கி விடாது கடந்து செல்லும் போதே நம் மனம் மேலும் உறுதி பெறும். 

பத்துப்பாட்டு ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருந்தது. சிந்தாமணி ஒரு வகையில் சவால்கள் நிறைந்த ஆய்வாக இருந்தது போலவே பத்துப்பாட்டும் எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடியதாக இல்லை. மேலும் பல ஏட்டுப் பிரதிகள் கிடைத்தால் பாட பேதங்களை அலசி ஆராய்ந்து நல்ல பதிப்பைக் கொண்டு வர இயலும் என்ற சிந்தனையில் இருந்தால் உ.வே.சா. இதற்குத் திருநெல்வேலி செல்வது உதவும் எனத் தோன்றவே திருவாவடுதுறையில் புதிய ஆதீனகர்த்தராகப் பதவி ஏற்றிருந்த அம்பலவாண தேசிகருடன் தன் கருத்தைத் தெரிவித்தார், அவரும் திருநெல்வேலியில் இருக்கும் திருவாவடுதுறை மடத்து ஸ்ரீசாமிநாத தம்பிரானுக்குத் தகவல் அனுப்பி உ.வே.சாவின் ஆய்வுக்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். 

ஸ்ரீசாமிநாத தம்பிரான் நெல்லையில் இருந்த கவிராஜ ஈசுவரமூர்த்தி பிள்ளை என்பவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். இவரும் இவரது சகோதரரும் அங்குப் பெரிய செல்வந்தர்கள். அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது மேலை வீதியில் உள்ள அவரது இல்லத்தின் புத்தக அறையை திறந்து காட்டியிருக்கின்றார். பார்த்தபோது உடல் சிலிர்த்துப் போனார் உ.வே.சா. முன்னர் தமிழ்ச்சங்கத்தில் இப்படித்தான் நூல்களை வைத்திருந்தார்களோ புலவர் பெருமக்கள் என நினைத்துக் கொண்டார். அந்தப் புத்தக அறையில் ஏட்டுச் சுவடிகள் அனைத்தும் மிக ஒழுங்காக, தூய்மையாகப் பூச்சிகள் இன்றி எடுஹ்ட்துப் பயன்படுஹ்ட்தும் வகையில் திருத்தமாக வைத்திருந்ததையும் உ.வே.சா குறிப்பிடுகின்றார். அந்த நூல்களையெல்லாம் ஒவ்வொன்றினையும் எடுத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உ.வே.சாவிற்கு எழுந்தது. 

அவற்றை ஒவோன்றாக எடுத்துப் பார்த்து பத்துப்பாட்டு இருக்கின்றதா எனத் தேடினார். ஒன்று கிடைத்தது. ஆனால் அதில் பொருநராற்றுப்படை முதல் நான்கு பாடல்கள் மட்டுமே இருந்தது. உ.வே.சாவைக் கவலை தொற்றிக் கொண்டது. இங்கே கடல் போல இத்தனை நூல்கள் உள்ளன. இங்குக் கூட கிடைக்கவில்லையென்றால் வேறு எங்குக் கிடைக்கப்போகின்றது என யோசிக்கலானார். அவரது கவலை படர்ந்த முகத்தைப் பார்த்து கவிராஜ ஈசுவரமூர்த்தி பிள்ளை காரணம் கேட்க அதற்கு உ.வே.சா, 

"சங்கப் புலவருடைய வீட்டைப்போல விளங்கும் இவ்விடத்தில் தமிழ்ச் செல்வம் முழுவதும் கிடைக்குமென்று முதலில் எண்ணினேன். நான் எதைத் தேடி வந்தேனோ அது முற்றும் கிடைக்கவில்லையே! தமிழுலகத்தில் இந்தத் தமிழாலயத்தைக் காட்டிலும் சிறந்த இடம் எங்கே இருக்கப் போகிறது! இங்கே அகப்படாதது வேறு எங்கே அகப்படும்! சங்கத்துச் சான்றோர்கள் இயற்றிய நூல்களைத் தமிழுலகம் இப்படி ஆதரவின்றிப் போக்கி விட்டதே!” என்று வருத்தத்தோடு கூறினேன். 

“இந்த வீடு ஒன்றுதான் இப்படி இருக்கிறதென்று நீங்கள் நினைக்க வேண்டாம். இங்கே இன்னும் சில வீடுகளில் பல வகையான ஏட்டுச் சுவடிகள் இருக்கின்றன. அங்கேயும் பார்க்கலாம். ஸ்ரீ வைகுண்டம் முதலிய ஊர்களில் பல கவிராயர்கள் வீடுகள் உண்டு. ஆயிரக்கணக்கான ஏடுகளை அவ்வீடுகளிற் காணலாம். ஆகையால் தாங்கள் சிறிதும் அதைரியம் அடையவேண்டாம்” என்று கவிராஜர் சொன்னார். அந்த இடத்திற் கோவில் கொண்டிருந்த தமிழ்த் தெய்வமே எனக்கு அபயங்கொடுப்பதாக எண்ணிப் பின்னும் சுவடிகளை ஆராயலானேன்." என்று மேலும் நம்பிக்கை அளித்தார் கவிராஜ ஈசுவரமூர்த்தி பிள்ளை . 

ஆயிரக்கணக்கில் ஓலைச்சுவடிகள் இருந்தன என உ.வே.சாவின் குறிப்புக்களிலிருந்து அறியும் போது, அந்த ஓலைச்சுவடிகளெல்லாம் இன்று என்ன ஆயின என்ற கேள்வி தான் என் மனதில் எழுகின்றது. இந்தப் பகுதியை வாசித்த போது இந்தப்பகுதியின் கீழ் அடிக்கோடிட்டு வைத்தேன். இவற்றில் எத்தனைப் பாதுகாக்கப்பட்டன? 
எத்தனைச் சுவடி நூல்கள் அழிந்தன? 
எத்தனைச் சுவடி நூல்கள் அறியாமையால் அழிக்கப்பட்டன? 

இவற்றிற்கு விடை தேடத்தான் வேண்டும்.

தொடரும்..
சுபா

Thursday, November 24, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 106

நம்மோடு துணையிருந்து நமது வளர்ச்சியிலும் பங்கெடுத்துக் கொள்பவர்கள் என்றென்றும் நம்முடன் இருக்க வேண்டும் என்றே எப்போதும் நம் மனம் நாடும். அத்தகையோரை மரணம் என்ற ஒன்று அழைத்துக் கொள்ளும் போது அதனை ஏற்றுக் கொள்ள நம் மனம் விரும்புவதில்லை. அதனை  எதிர்கொள்ளும் நிலை  துன்பகரமானதும் கூட. இத்தகைய இழப்புக்கள் தான் வாழ்வின் நிலையாமையை நாம் அனுபவப்பூர்வமாக உணர வைப்பவை. 

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் மறைவு உ.வே.சாவின் வாழ்வில் மறையாத மனக்காயமாக இருந்தது. அவருக்குப் பின்னர் தாயாகவும், தந்தையாகவும், ஆசானாகவும் இருந்து உ.வே.சாவிற்கு பல வகையில் வழிகாட்டியவர் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் சுப்பிரமணிய தேசிகர். அவர் 7.1.1888 அன்று சிவபதம் அடைந்தார் என்றும் அவர் குறிப்பிட்டு ஏற்பாடு செய்திருந்த தம்பிரானே புதிய சன்னிதானமாகப் பொறுப்பெடுத்துக் கொண்டார்  என்ற செய்தி உ.வே.சாவுக்கு எட்டியது.  இது சற்றும் எதிர்பாராத ஒரு அதிர்ச்சிகரமான தகவலாக அமைந்தது. சிந்தாமணி வெளிவந்து அது தரும் மகிழ்ச்சியைக்கூட இன்னமும் முழுமையாக உணராத நிலையில் சட்டென்று நிகழ்ந்த இந்த துன்பகரமான நிகழ்வு உ.வே.சா வின் மனதில் தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியது. கலங்கிய மனத்துடன் திருவாவடுதுறைக்குப் புறப்பட்டார். அப்போது அவரது மன நிலையை இப்படிக் குறிப்பிடுகின்றார்.

"நின்ற இடத்திலே நின்றேன்; ஒன்றும் ஓடவில்லை; புஸ்தகத்தைத் தொடுவதற்குக் கை எழவில்லை. என்னுடைய உடம்பிலே இரத்த ஓட்டமே நின்று விட்டது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. என்னுடைய ஒவ்வொரு முயற்சியையும் பாராட்டி, எனக்கு வந்த பெருமையைக் காணும்போது தாய் குழந்தையின் புகழைக் கேட்டு மகிழ்வது போல மகிழ்ந்து என்னைப் பாதுகாத்த அந்த மகோபகாரியையும் அவர் எனக்குச் செய்த ஒவ்வொரு நன்மையையும் நினைந்து நினைந்து உருகினேன். என் துக்கத்தை ஆற்றிக் கொள்ள வழியில்லை."

தன் வேதனைக்கு வடிகாலாக சுப்பிரமணிய தேசிகரை நினைத்து சில செய்யுட்களையும் வெண்பாக்களையும் இயற்றினார்.  அவற்றுள் இரண்டினைக் குறிப்பிடுகின்றார்.


“தெய்வத் தமிழின் செழுஞ்சுவையைப் பாராட்டும்
சைவக் கொழுந்தின் சபைகாண்ப தெந்நாளோ?”

“இன்றிரப்பார் வந்தா ரிலரென் றியம்புகுணக்
குன்றின்மொழி கேட்டுவகை கூருநாள் எந்நாளோ?”

அந்தப் பாடல்களை வைத்துக்கொண்டு தனிமையிலே வருந்தினேன். என் துரதிருஷ்டத்தை நினைத்து நொந்து கொண்டேன். அன்று இரவே புறப்பட்டு உடன்வந்த சிலருடன் நேரே திருவாவடுதுறையை அடைந்தேன்."

ஆதீனத்தில் அதற்குள் புதிதாக பொறுப்பெடுத்துக் கொண்ட 17வது பட்டம் ஸ்ரீ அம்பலவாண தேசிகர் உ.வே.சா வைப் பார்த்ததும் கணிவுடன் ஆறுதல் கூறிப் பேசினார். மடத்தில் எல்லா பூஜைகளும் கடமைகளும் ஒழுங்குடன் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆனால் இவர் தேடிய உருவமும் அன்பே உருவாக புன்னகையுடன் உ.வே.சாவை வரவேற்கும் சுப்பிரமணிய தேசிகரோ அங்கில்லை. எல்லாம் வெறிச்சோடிப் போனது போன்ற உணர்வினை அடைந்தார் உ.வே.சா.

குரு பூஜையின் இறுதி நாளில் உ.வே.சா புறப்பட்டு விட்டார். அன்று பரிபூரணம் அடைந்த தேசிகரின் நினைவாக இரங்கற்பாடலகளும் புதிய ஆதீனகர்த்தரை வாழ்த்தி செய்யுட்களும் பாடப்பட்டன. அப்போது சுப்பிரமணிய தேசிகரின் நற்செயல்களுள் ஒன்றாகிய  சிந்தாமணி பதிப்பிற்கு உ.வே.சாவிற்கு  உதவியமையை நினைத்து பாடப்பட்ட ஒரு செய்யுளுக்குப்  பழனிக் குமாரத்தம்பிரானென்பவர் விளக்கமளிக்க, அது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.   அதனை உ.வே.சா கீழ்க்காணும் வகையில் பதிகின்றார்.

"ஆதீனத்து அடியாராகிய பழனிக் குமாரத் தம்பிரானென்பவர் தாம் இயற்றிய இரங்கற் பாக்களை வாசித்து வந்தார். அவற்றுள் ஒரு பாட்டின் பகுதியாகிய, “குருமணி சுப்பிரமணிய குலமணியா வடுதுறைப்பாற் கொழித்துக் கொண்ட ஒரு மணி சிந்தாமணியை யுதவுமணி” என்பதற்குப் பொருள்
சொல்லும் போது, “சிந்தாமணியை உதவுமணி” என்ற பகுதிக்கு, ‘இந்த மடத்தில் தமிழ்க் கல்வி கற்று இப்போது கும்பகோணம் காலேஜிலிருக்கும் சாமிநாதையர் சீவகசிந்தாமணியைப் பதிப்பிப்பதற்கு ஊக்கமளித்துப் பிரதி முதலியன கொடுத்த மகாஸந்நிதானத்தின் அருஞ் செயலை நினைத்தும் சொன்னேன்’ என்று ஒரு காரணம் கூறினாராம். அப்போது அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவர், “சைவ மடமாகிய இந்த இடத்தில் ஜைன நூலுக்குச்
சிறப்புத் தருவது நியாயமன்று. சாமிநாதையர் இந்தமடத்திற்கு வேண்டியவராக இருந்தும் உமாபதி சிவாசாரியார் ‘பொய்யே கட்டி நடத்திய சிந்தாமணி’ என்று சொல்லியிருக்கும் ஜைன நூலை அச்சிட்டது தவறு. அதை நாம் கண்டிப்பதோடு அந்த நூல் பரவாமல் இருக்கும்படி செய்ய வேண்டும்” என்றாராம். அவர் அயலூரிலிருந்து வந்து மடத்திற் சில காலம் தங்கியிருந்தவர். எனக்கும் பழக்கமானவரே. அதைக் கேட்ட தம்பிரான்களும் பிறரும் திடுக்கிட்டனர். அவர் பால் அவர்களுக்குக் கோபமும் உண்டாயிற்று. அவரை உடனே எதிர்த்துத் தக்க நியாயங்கள் கூறி அடக்கி விட்டார்கள். என் நண்பராகிய புலிக்குட்டி இராமலிங்கத் தம்பிரான் அவர்மீது சில வசை கவிகளைப் பாடிப் பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்து அவர் காதிற் படும்படி சொல்லிக் காட்டச் செய்தார்."

ஆதீனகர்த்தர் சுப்பிரமணிய தம்பிரான் அவர்களே மத துவேஷம் எனப்பாராமல் சமண காவியமாக இருந்தாலும் சிந்தாமணியை உ.வே.சா அச்சுப்பதிப்பாகக் கொண்டு வரவேண்டுமென்பதில் மிகுந்த ஆர்வம் காட்டியதோடு அப்பணியில் மிக உறுதுணையாகவும் இருந்தவர்.  அதே மடத்திலேயே  ஒருவர், அதிலும் சன்னிதானத்தின் குருபூஜையில் இவ்வாறு பேசியது உ.வே.சா விற்கு பெறும் மன வருத்ததை ஏற்படுத்தியது. 

என்ன செய்வது ?

நல்ல காரியங்கள் செய்தோரை சொற்களால் துன்புறுத்தும் நிகழ்வுகளைத் தயங்காமல் செய்வோரும் இந்த உலகில் இருக்கத்தானே செய்கின்றனர்.  இத்தகையோர் குறுகிய சிந்தனைக் கொண்டவர்களே. அதிலும் குறிப்பாக மதம் தொடர்பான கருத்துக்கள் எழும் போது தீவிர மத சார்பார்பாளர்களாக இருப்போர் பலர் தம் மதத்தைத் தூக்கி பிடித்து உயர்த்திக்காட்ட நினைத்து பிற மதத்தோரிடம் நெருங்குவதும் இல்லை.  அல்லது பிற மதத்து தத்துவங்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதும் இல்லை. இது ஒரு எல்லைக்குள் தம்மை வைத்துக் கொண்டு அதற்குள் மட்டுமே வாழும் நிலையை  இத்தகையோருக்கு வழங்கும். பொது உலக அறிவும் அது தரும் தெளிவும் இத்தகைய நிலையில் இருப்போருக்கு எட்டாக்கனியே!

தொடரும்..
சுபா

Friday, November 18, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 105

சீவகசிந்தாமணி நூல் வடிவம் பெற்றாகி கைகளில் கிடைத்துவிட்டது. அது ஒரு சாதனை நிகழ்வு. ஆனால் அந்தச் சாதனையை நிகழ்த்த உ.வே.சா செலுத்திய உழைப்பு மிக அதிகம். கடமை உணர்வுடன், எடுத்துக் கொண்ட குறிக்கோளில் சிறிதும் சிந்தனை மாற்றம் கொண்டு கைவிட்டு விடாது, செய்ய நினைத்த காரியத்தை நிறைவேற்றி முடித்து விட்டார். ஆனாலும் அச்சகத்தாருக்குக் கொடுக்க வேண்டிய பண பாக்கி அவரை வருத்திக் கொண்டிருந்தது. நூல் வெளிவந்த உடனேயே யாரெல்லாம் பணம் கொடுத்து நூற்களை வாங்கிக்கொள்வதாகச் சொல்லியிருந்தார்களோ அவர்களிடம் தனித்தனியாக, வீடு வீடாகச் சென்றும், கடிதங்களை எழுதி அஞ்சல் வழி அனுப்பி நினைவு படுத்தி பனத்தைப் பெற்று நூலை வழங்குவது என்ற வகையிலும் அவரது பணிகள் தொடர்ந்தன. இது அலுப்பைத் தருவதாகவே இருந்தது.

எவ்வளவு பெரிய அருங்காரியத்தை ஒரு மனிதர் செய்து முடித்திருக்கின்றார்.. வீடு தேடிச் சென்று நூலை வாங்கிக் கொண்டு காசைக் கொடுத்து அவரைக்காப்பாற்றுவோமே.. என்ற எண்ணம் பொதுவாகவே பெரும்பாலோருக்கு இல்லை. இதுதான் யதார்த்தம். கேளிக்கைகளுக்குத் thaamee தேடிச் சென்று பணத்தைச் செலவு செய்யத் துணியும் மக்களுக்கு அறிவுக்கு விருந்தாகும் நல்ல நூற்களை ஆதரிக்கும் பண்பு என்பது இருப்பதில்லை. இது இன்றும் தொடரும் நிலைதான்.

அப்படிக் காசு கொடுத்து நூற்களைப் பெற்றுக்கொள்வதாகச் சொன்னவர்களுள் ஒருவர் பூண்டி அரங்கநாத முதலியார். அவர் வீடுதேடி உ.வே.சா செல்ல, அவர் இல்லாததால் பெரும் அலைச்சலுக்குப் பின்னர் வீடு திரும்புகின்றார். ஆனாலும் அவர் பணம் தந்து உதவுவார் என்று கருதி அவருக்காக, அவரைப்புகழ்ந்து செய்யுள் பாடி அதைக்கடிதமாக அனுப்புகின்றார். அது சென்றடைந்த சில நாட்களில் அரங்கநாத முதலியாரிடமிருந்து ஒப்புக்கொண்ட பணம் வந்து சேர்கின்றது. புகழ்ச்சிக்கு மயங்காதோர் யார்? விரும்புகின்றோமோ இல்லையோ.. துன்பம் ஏற்படும் காலத்தில் பொருள் படைத்தோரையும் வலிமைப்படைத்தோரையும் புகழ வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகின்றது. இது மிகவும் வருத்தம் தரும் ஒரு அனுபவமாகத்தான் இருக்கும். ஆயினும் சூழ்நிலை அறிந்து சிலகாரியங்களைப் பொறுத்துக் கொண்டு சிலவற்றை அனுசரித்துக் கொண்டு செல்ல வேண்டியதும் நமக்குப் பல வேளைகளில் ஏற்பட்டு விடுவதை நமது சொந்த வாழ்க்கையிலேயே சந்தித்திருப்போம். அவற்றையெல்லாம் கடந்து சென்றால் தான் அடுத்தடுத்த காரியங்களை நம்மால் தொடரவும் முடியும் அல்லவா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தியாகராச செட்டியாரைப் பார்க்கும் வாய்ப்பு உ.வே.சாவிற்குக்கிட்டியது. திருச்சிக்கு ஒரு மாணவரைப் பார்க்கும் நிமித்தம் சென்றிருந்த உ.வே.சா, ஸ்ரீரங்கத்தில் பணியில் இருந்தார். திடீரென்று அவர் வீட்டுக்குச் சென்று அவர் வாசல் கதவைத்தட்ட, உ.வே.சாவைப் பார்த்த தியாகராச செட்டியாருக்கு ஆனந்தம் கரை புரண்டது. "உன்னையே நினைத்துக் கொண்டு படுத்திருக்கின்றேன் " எனச் சொல்லிக்கொண்டு வந்து கட்டிப்பிடித்துக் கொண்டாராம். இவ்வளவு அன்பினை அவர் காட்டுவார் என்று எதிர்பாராத உ.வே.சா விற்கு மனமெல்லாம் மகிழ்ச்சி பொங்கியது. சிந்தாமணி பதிப்புப்பணியை உ.வே.சா முடித்தார் என்ற மகிழ்ச்சி தான் அந்த அன்பிற்குக்காரணம் எனச் சொல்லவும் வேண்டுமா?

தாமும் சிலருக்கு சிந்தாமணி நூற்களை கொடுத்து பணம் புரட்டி உ.வெ.சாவிடம் மறு நாள் கொடுத்தார். நேரம் போவது தெரியாமல் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். சிந்தாமணியிலுள்ள தம்மைக் கவர்ந்த இடங்களையெல்லாம் உ.வே.சா வாசித்துக் காட்ட கண்களில் கண்ணீர் மல்க அவற்றைக்கேட்டு ஆனந்தமுற்றிருந்தார் தியாகராச செட்டியார். இப்படிக் கேட்டுக் கொண்டிருந்த தியாகராச செட்டியார், சட்டென்று நூலில் பலருக்கு நன்றி சொல்லியிருக்கும் உ.வே.சா, தன் பெயரை ஒரு இடத்திலும் குறிப்பிடவில்லையே என தன் மனதில் தோன்றிய ஆதங்கத்தை வெளிப்படையாகச் சொன்னார்.

ஒரு சிறிய காரணத்திற்காகத் தியாகராச செட்டியாரின் பெயரை உ.வே.சா அதில் இணைக்கவில்லை. ஆனால் அந்தப் பொழுதில் அது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவர் உணர்ந்தார். தன் வாழ்க்கையில் மகாவித்துவான், ஆதீனகர்த்தர் ஆகிய இருவருக்குப்பிறகு தனக்குப் பல முக்கிய வேளைகளில் உதவியவர் தியாகராச செட்டியார்தான். கும்பகோணம் கல்லூரியில் தனக்கு வாய்த்திருக்கும் ஆசிரியர் பணியை ஏற்படுத்திக்கொடுத்தவரும் தியாகராச செட்டியார்தான். அப்படி இருந்தும் அவர் பெயரைக் குறிப்பிடாமல் விட்டு விட்டது எவ்வளவு பெரிய தவறு என அப்போது அவர் சிந்தனையில் உதிக்க மனம் வருந்தினார். தான் செய்தது தவறு தான் என அவர் முன்னிலையில் ஒப்புக் கொண்டார்.

இந்த நிகழ்வை மனதில் வைத்துக் கொண்ட உ.வே.சா பிற்காலத்தில் தியாகராச செட்டியார் நினைவாக மூன்று காரியங்களைச் செய்திருக்கின்றார்.

  1. தனது பதிப்பாகிய ஐங்குறுநூற்றுப்பதிப்பைத் தியாகராச செட்டியாருக்கு உரிமையாக்கினார் 
  2. கும்பகோணம் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் தமிழ்ப்பாடம் படிக்கும் ஒரு சைவ மாணவருக்கு வருஷம்தோறும் கல்லூரி படிப்பு முடியும் வரை செட்டியார் பெயரில் நாற்பத்தெட்டு ரூபாய் கொடுத்து வந்தார். 
  3. சென்னைக்கு வந்த பிறகு தான் குடியேறிய இல்லத்திற்குத் தியாகராஜ இல்லம் என்று பெயர் சூட்டினார். 


இவை மூன்றையும் செய்த காலத்தில் தியாகராச செட்டியார் உயிருடன் இல்லை. இருந்து பார்த்து மனம் மகிழும் வாய்ப்பினை உ.வே.சாவும் அளிக்கவில்லை, காலமும் அதற்கு இடமளிக்கவில்லை. நமக்கு உதவியோருக்கும், நற்காரியம் செய்வோருக்கும் அவர்தம் வாழ்நாளிலேயே சிறப்பு செய்து அவர்கள் மனம் மகிழ வைப்பது தான் சிறப்பு. அதுவே அவர்களுக்கு மன ஆறுதலைத்தரும் விசயமாக அமையும். இல்லையென்றால் தக்க நேரத்தில் நமது நன்றியைக் காட்டவில்லையே என நம் மனம் நம்மை வாட்டித் துன்புறுத்தும். அது வேதனைத் தரும் ஒரு அனுபவமாக வாழ்நாள் முழுக்க வடுவாக நம் மனதில் பதிந்து விடும்!

தொடரும்.
சுபா

Saturday, November 12, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 104

நல்ல பணிகளைச் செய்யும் போது ஏதேனும் நன்மைகள் நம் வாழ்வில் நிச்சயம் நடக்கும். சிரமங்கள் பல நிறைந்ததுதான் நம் வாழ்க்கை என்ற போதிலும் நன்மையை நினைத்து கடின உழைப்பினைச் செலுத்தினால் நற்பயன்கள் காலம் தாழ்ந்தாலும் கூட நிச்சயமாகக் கிடைக்கத்தான் செய்யும். உ.வே.சா விற்கும் இத்தகைய நன்மைகள் வெவ்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்வில் நடந்திருக்கின்றன.

கடந்த பதிவில் சிந்தாமணி பதிப்புப் பணியை முடித்ததும் அவருக்கு மறுநாள் காலை ஒரு பரிசு கிடைத்தது எனக்குறிப்பிட்டு எழுதியிருந்தேன். அதனைப் பற்றி இந்தப் பதிவில் விளக்குகின்றேன்.

இன்றைக்கு உ.வே.சா தமிழுலகில் அறியப்படுவதற்கு முக்கியக்காரணமாக அமைவது அவரது சங்க இலக்கிய நூற்பதிப்புக்கள் எனலாம். சங்க இலக்கியத்தைப்பற்றிய பரவலான தகவல் தமிழறிஞர்கள் மத்தியில் இல்லாத காலகட்டம் இது. உ.வே.சா.சிந்தாமணி பதிப்புப்பணியில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் தாம் சந்திக்கும் அன்பர்களிடமெல்லாம் அவர்களுக்கு ஏதாகினும் ஒரு வகையில் ஓலைச்சுவடி கிடைத்தால் அவற்றை தமக்கு தருமாறு சொல்லி அதற்குப் பணமும் தாம் தருவதாகச் சொல்லியிருந்தார். இந்தத் தகவலை அறிந்த ஒருவர்தான் உ.வே.சாவைத் தேடிக் கொண்டு ஒரு தமிழ்ச்சுவடி நூல் கட்டுடன் அவரைக் கண்டு இந்த நூலை ஒப்படைத்து விட்டு பணம் பெற்றுச் செல்ல வந்திருந்தார்.

வேலூரில் இருந்த குமாரசாமி ஐயர் என்ற ஒருவர் இந்த நூலை ஏழை வித்துவான்களின் வீடுகளிலிருந்து சேகரித்ததாகவும் அப்படிக்கிடைக்கும் சுவடிகளை தேவைப்படுவோருக்கு விற்று பணம் ஈட்டி வாழ்பவர் என்றும் வந்தவர் மூலம் உ.வே.சா அறிந்து கொண்டார்.

அப்படிக் கொண்டு வந்த அந்த மனிதர் கையில் இருந்த சுவடி நூல் சங்க இலக்கிய நூற்களில் ஒன்றான பத்துப்பாட்டு. இதைப்பார்த்ததும் எத்தகைய மகிழ்ச்சி உ.வே.சாவின் மனத்தை நிறைத்திருக்கும் என ஊகிக்க முடிகின்றதல்லவா? அதிலும் சிந்தாமணிப்பதிப்புப் பணியை அல்லும் பகலும் உழைத்து அதனை முடித்து நூல் கையில் வருகின்ற அன்னாளில் உ.வே.சாவிற்குக் கிடைத்த அரும் பரிசு இந்தப் பத்துப்பாட்டு சுவடி நூல். இந்தச் சுவடி நூலைத்தாம் பார்த்த வேளையில் தம் மனதில் எழுந்த உணர்ச்சிகளை இப்படிப்பதிகின்றார் உ.வே.சா.

‘தமிழன்னையே இவர் மூலம் மேலும் தமிழ்த் தொண்டுபுரிய வேண்டுமென்று கட்டளையிடுகிறாள்’ என்று கருதினேன். உடனே அவர் விரும்பியபடி அவர் கையில் ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுத்து அனுப்பினேன்.

“தாயே, நீ சிந்தாமணியை இந்த ஏழை முகமாக மீட்டும் அணிந்துகொண்டாய். பிற ஆபரணங்களையும் அடியேன் கைப்படும்படி செய்து அவற்றைத் துலக்கும் கைங்கரியத்திலே திருவருளைத் துணையாக வைத்துப் பாதுகாக்க வேண்டும்” என்று மனப்பூர்வமாகத் தமிழ்த்தாயை வேண்டிக் கொண்டேன்.

பத்துப்பாட்டு கிடைத்த பின்னர் அதனை அச்சு நூலாக வெளிக்கொணரும் முயற்சிகளில் ஈடுபட்டதோடு ஏனைய சங்க இலக்கிய நூற்களையும் தேடித்தேடி அவற்றை அச்சு நூலாக்குவதை தம் வாழ்க்கையின் மைய நோக்கமாக அமைத்துக் கொண்டார் உ.வே.சா. இது அவருக்குத் தமிழ் அச்சுப்பதிப்பு உலகத்தில் இன்று மங்கா புகழைத் தந்திருக்கின்றது என்றால் அதில் தவறேதுமில்லை.

தொடரும்

சுபா