Monday, February 27, 2017

நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள் - பகுதி 6

தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.

இந்த நூலில் ஆறாவது கட்டுரையாக இடம்பெறுவது தொல்லியல் அறிஞர் ச.செல்வராஜ் அவர்களின் “ தமிழகக்கடற்கரை துரைமுகப்பட்டினங்களும் அகழாய்வுகளும்” என்ற கட்டுரை.

இக்கட்டுரை பண்டைய தமிழகத்தோடு கிரேக்கர்கள் ஏற்படுத்திக் கொண்ட வாணிகத்தொடர்பை விளக்கும் வகையில் தொடங்குகின்றது.

கி.பி.1ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பெரிப்ளூஸ் ஆஃப் எரித்திரியன் சீ என்ற நூலிலும் பின்னர் பிளினி எழுதிய உயிரியல் நூலிலும், தாலமி எழுதிய பூகோள நூலிலும் தமிழகத்தின் கடல் வணிகம், துறைமுகங்கள் பற்றிய தகவல்கள் பல கிடைப்பதாக கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுகின்றார். ஆக சங்க நூல்களில் காண்பது போலவே அயல் நாட்டவர் நூற்களிலும் இக்குறிப்புக்கள் வருகின்றன என்ற செய்தியை இதன் வழி அறிய முடிகின்றது.

சங்ககால துறை முகங்களாக கீழ்க்காணும் பட்டினங்களை இக்கட்டுரை பட்டியலிடுகின்றது.
  1. வசவசமுத்திரம்
  2. அரிக்கமேடு
  3. மரக்காணம்
  4. காரைக்காடு/குடிகாடு
  5. காவிரிப்பூம்பட்டினம்
  6. அழகன்குளம்
  7. கொற்கை


இடைக்காலத் துறைமுகங்களாக  கீழ்க்கண்பவை குறிப்பிடப்படுகின்றன
  1. பெரியபட்டணம்
  2. நாகப்பட்டினம்


இந்த பட்டினங்களின் விளக்கங்களோடு அங்கு கண்டெடுக்கப்பட்ட சான்றுகள் குறிப்பிடப்படுவதும் இக்கட்டுரையின் சிறப்பாக அமைகின்றது.

சங்ககால துறைமுகங்கள் இன்று மறைந்தும் அழிந்தும் விட்டன. ஆனால் இந்தப் பகுதிகளில் விரிவான ஆய்வுகள் மென்மேலும் தொடரப்படும் போது பண்டைய கடல் வணிகம் தொடர்பான புதிய தகவல்கள் மேலும் கிடைக்க வாய்ப்புண்டு!

சுபா

Sunday, February 26, 2017

நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள் - பகுதி 5

தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.

இந்த நூலில் ஐந்தாவது  கட்டுரையாக இடம்பெறுவது தொல்லியல் அறிஞர் ர.பூங்குன்றன் அவர்களின் “ கடல்வழிகளும் போர்களும்” என்ற கட்டுரை.

தமிழகத்தின் கடல் ஆளுமையைப் பற்றி இக்கட்டுரை குறிப்பிடும் வகையில் அமைந்திருக்கின்றது. சங்க இலக்கியத்தில் கடல் வழிகள், கப்பல் போக்குவரத்துக்கள் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன;  மேற்கு கடற்கரை கடற்வழி நகரங்களான மாந்தை, வஞ்சி, முசிறி, நெல்கிண்டா, குட்ட நாடு போன்றவை முக்கிய நகரங்களாக இருந்த செய்திகள் சுட்டப்படுகின்றன.  சங்க இலக்கியம் மாந்தை, வஞ்சி  ஆகிய நகரங்களின் வளத்தைக் கூறுவதையும் கட்டுரை குறிப்பிடுகின்றது.

முசிறி மலை வளமும் கடல் வளமும் பொருந்திய நகராக விளங்கியமை  பரணரின் பாடல் வழி அறிய முடிகின்றது. 

கடல் வணிகம் சிறப்புற்று இருந்தமையால் கி.மு.4ம் நூ. வாக்கிலேயே  சீனத்துப் பட்டு தமிழகம்  கொண்டு வரப்பட்டது என்ற தகவலையும் அறிய முடிகின்றது.

மேற்கு கடற்கரை நகரான மாந்தையின் வளமும் சிறப்பும் சங்க இலக்கியங்களான அகநானூறு, நற்றிணை பாடல்களில் குறிப்பிடப்படுகின்றன.

சேர மன்னன் நெடுஞ்சேரலாதனுக்கும் யவனருக்கும் நடைபெற்ற போர் பற்றியும் இக்கட்டுரை சொல்கின்றது. வட மேற்கிந்தியாவில் ஆண்ட இந்தோ-கிரேக்க மன்னன் ட்ரிமிட்டிஸ்  சேரநாடு வரை  படையெடுத்து வந்து வென்றதாகவும் பின்னர் காரவேலன் அந்த யவன மன்னரை தோற்கடித்தான் என்ற செய்தி இரண்டாம் பத்தில் இடம்பெறுவதையும் கட்டுரையாசிரியர் சுட்டுகின்றார்.

சுவாரசியமான பல தகவல்கள் இக்கட்டுரையில் இருந்தாலும் சில கேள்விகளும் எழுகின்றன. வட இந்தியாவில் ஆண்டவர்கள் யவனர்கள் என சுட்டப்பட்டதன் காரணம் அவர்கள் பூர்வீகமா அல்லது அவர்கள் உண்மையில் கிரேக்கத்திலிருந்து வந்தவர்களா? இந்தோ-கிரேக்க மன்னன் ட்ரிமிட்டிஸ் வென்றான் எனும் போது எந்தப் போரில், எங்கு யாரைத் தோற்கடித்து வென்றான் என்ற விளக்கம் கட்டுரையில் முழுதாக வழங்கப்படவில்லை. 

அன்றைய காலகட்டத்தில் சேரநாடும் இணைந்த வகையில் அகண்ட தமிழகமாக தென் இந்தியா இருந்திருக்கின்றது. சங்கப்பாடல்கள் இங்கெல்லாம் தமிழும் தமிழர் வாழ்வும் சிறப்புற்றிருந்தமையைப் பாடியிருக்கின்றனர். இன்றோ தமிழகத்தின் கடற்கரை நகரங்களில் வாழும் மீனவ மக்கள் ஏழைகளாக அறியப்படுகின்றார்கள்.   இது சரி செய்யப்பட வேண்டிய சமூகப் பிரச்சனையாக நன கருதுகின்றேன்.


சுபா

Sunday, February 19, 2017

நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள் - பகுதி 4

தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.

இந்த நூலில் மூன்றாவது  கட்டுரையாக இடம்பெறுவது தொல்லியல் அறிஞர் முனைவர்.வீ.செல்வகுமார் அவர்களின் “ இலக்கியத்தில் முசிறி, தொல்லியல் பட்டணம்” என்ற கட்டுரை.

சங்க இலக்கியத்தில் சிறப்பாகக் குறிப்பிடப்படும் முசிறி என்ற நகரம் இன்று எந்த நகரம் என்ற ஆய்வினை வெளிக்காட்டும் கட்டுரையாக இக்கட்டுரை அமைகின்றது. முன்னர் இன்றைய பெரியாற்றின் வட கரையில் உள்ள கொடுங்களூர் (திருச்சூர் மாவட்டம்) என நம்பப்பட்டது. ஆனால் அண்மைக்கால ஆய்வுகள் இது எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள  பரவூர் என்ற ஊரிலிருந்து அண்மையில் உள்ள பட்டணம் என்ற நகராகவே இருக்கலாம்  என்று இக்கட்டுரை முன் வைக்கின்றது.

முசிறி சேரர்களின்  கீழ் இருந்த துறைமுகமாக இருந்தது. 

1990களில் ஷாஜன் என்பவர் மேற்கொண்ட கள ஆய்வின் விளைவாகப் பட்டணம் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 2003ல் மேற்கொள்ளப்பட்ட கூட்டாய்வுகள் இந்த நகரின் முக்கியத்தௌவத்தை வெளிப்படுத்தின.. பின்னர் 2007 முதல் 2009 வரை கேரள வரலாற்றுக்கழகம் மேற்கொண்ட அகழாய்வுகள், பட்டணம் மற்றும் கீழைக்கடற்கரையில் அமைந்திருந்த அரிக்கமேடு, அழகன்குளம் போன்ற முக்கியமான வணிக மையமாகத் திகழ்ந்தது என்பதை வெளிப்படுத்தியது.

பட்டணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட  தோணி, படகுத் துறை ஆகியன, படகு பிணைத்து வைக்கப் பயன்படுத்தப்பட்ட தேக்குமரத் தூண்களும் மிகச் சிறப்பானக் கண்டுபிடிப்புக்கள். கி.மு 1 மற்றும் கி.பி.1ம் நூற்றாண்டைச் சார்ந்தவை. இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இதுவரை  1000க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பானைகளின் துண்டுகள் கிடைத்துள்ளன. ஆக பட்டணம்  ஆய்வுகளின் அடிப்படையில் சங்க கால வாழ்விடம் என்பது உறுதியாகின்றது என இக்கட்டுரை குறிப்பிடுகின்றது.

பட்டணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அகண்ட தமிழகத்தின் வரலாற்றுச் செய்திகள் மேலும் பல நமக்குக் கிடைக்கலாம். ஆனால் இடைப்பட்ட காலத்தில் பல தடைகள் இத்தகைய ஆய்வுகள் தொடரப்படாமல் இருப்பதற்கு நிகழ்ந்தன என்பது வருத்தத்திற்குறிய செய்தியே.


சுபா 

Wednesday, February 15, 2017

நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள் - பகுதி 3

இந்த நூலில் மூன்றாவது  கட்டுரையாக இடம்பெறுவது தொல்லியல் அறிஞர் முனைவர்.கி.ஸ்ரீதரன் அவர்களின் “ மாங்குடி அகழ்வாய்வில் கிடைத்த படகுக் குறியீடு பொறித்த பானை ஓடுகள்” என்ற கட்டுரை.


மாங்குடி திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோயில் வட்டத்தில் அமைந்த பகுதி. இங்கு நாயக்கர் புஞ்சை என்ற பகுதியில் செய்யப்பட்ட அகழ்வாய்வில் பெருங்கற்கால பண்பாட்டினைக்காட்டும் கருப்பு-சிவப்பு பானை ஓடுகள், குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், கல்மணிகள் ஆகியன கிடைத்தமைப் பற்றி இக்கட்டுரை விவரிக்கின்றது. 

அதில் கி.மு.2ம் நூ. சேர்ந்த தமிழி  எழுத்து பொறித்த பானை ஓடு குறிப்பிடத்தக்கது அதோடு படகு  போன்ற வடிவம் பொறிக்கப்பட்ட பானையும் இங்கே கிடைத்துள்ளது.  இப்பானையின் கழுத்துப் ப்கௌதியில் படகு வடிவம் கீறப்பட்டுள்ளது. ஒரு படகு துடுப்புடன் இருப்பது போன்ற வடிவில் இது அமைக்கப்பட்டிருக்கின்றது.

இந்த மாங்குடி எனும் சிற்றூர் சங்ககாலத்தில் வணிக வழித்தடத்தில் அமைந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. ஆகையால் வணிகர்கள் வந்து சென்றமையைக் குறிக்கும் அகழ்வாய்வுப் பொருட்கள் பல இங்கு கிடைப்பது இப்பகுதி சங்ககாலத்திலும் அதற்கு முன்னரும் வணிகர்கள் வந்து சென்ற இடமாகும் என்பதற்குச் சான்றாக அமைகின்றது என்பதை இக்கட்டுரை அகழ்வாய்வு தகவல்களோடு முன் வைக்கின்றது.

மாங்குடி மட்டுமன்றி மேலும் இப்பகுதியில் அமைந்துள்ள கிராமங்களில் தொடர்ச்சியாக அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் மேலும் பல தொல்லியல் மற்றும் கடசார் ஆய்வுச்சான்றுகள் நமக்குக் கிட்ட பெரிய வாய்ப்புள்ளது. 

சுபா

Monday, February 13, 2017

நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள் - பகுதி 2

தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.

இந்த நூலில் இரண்டாவது கட்டுரையாக இடம்பெறுவது தொல்லியல் அறிஞர் முனைவர்.கா.ராஜன் அவர்களின் “ இலங்கை, தென்னிந்தியவிற்கு இடையேயான கடல்கடந்த பண்பாட்டு உறவுகள்” என்ற கட்டுரை.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்தியக் கடற்கரை பகுதிகள் கடல்கடந்து பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டிருந்தன என்ற கருத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கட்டுரை இது.

கடல்வழித் தொடர்பால் இரு நாடுகளிலும் காணப்பெறும் மொழி, குகைக்கல்வெட்டுக்கள், நாணயங்கள், முத்திரைகள், மோதிரங்கள், பானையோடுகள் போன்றனவற்றின் ஒத்த அமைப்புக்கள் இரு நிலப்பகுதிகளுக்குமிடையே காணப்படும் பண்பாட்டு ஒற்றுமைகளை உறுதி செய்வதைக் காண்கின்றோம்.

ஒரே வகையிலான இரும்புக்கால ஈமச்சின்னங்களின் எச்சங்கள் இன்று அகழ்வாய்வுகளில் கிடைக்கின்றன.

கி.மு.3ம் நூ என சுட்டப்படும் மாங்குளம் கல்வெட்டுக்களில் காணப்படும் சாத்து, நிகமம் என்ற சொற்கள் வணிகக் குழுக்களைச்சுட்டுகின்றன. ஆக, வரலாற்று தொடக்ககாலத்திலேயே இத்தகைய வணிக குழுக்கள் இடம்பெயர்ந்து நீண்ட தூரம் சென்று வணிகம் செய்தன என அறியமுடிகின்றது.

பண்டைய வணிக வழிகளில் குவியல்களாகவும் உதிரியாகவும் கண்டெடுக்கப்பட்ட ரோமானிய நாணயங்கள் அயலகத்தார் தமிழகம் வந்து வணிகத்தில் ஈடுபட்டமைக்குச் சான்றாக அமைகின்றது.

இலங்கையில் பௌத்த மதத்தை அறிமுகப்படுத்திய அசோகர் காலத்தில் தான் பிராமி எழுத்துக்கள் இலங்கைக்கு அறிமுகமாகின என்ற கூற்றுக்கு மறுப்பாக அனுராதபுரத்தில் நிகழ்த்திய அகழ்வாய்வில் மகதப் பேரரசுக்கு முன்னரே அதாவது கி.மு 4-5 நூ வாக்கிலேயே பிராமி எழுத்துக்கள் இலங்கையில் இருந்தமையைத் தொல்லியல் ஆய்வுகள் காட்டுவதாக இக்கட்டுரை குறிப்பிடுகின்றது.
இன்று மீனவர்கள் என தமிழகத்தில் அறியப்படுவோர் பரதவர்கள் என்பவர்கள். நாவாய், அதாவது கப்பல் வடிவத்துடன் அதனை செலுத்தும் பரதவ சமூகத்து மக்களைச் சுட்டும் ”பரத” என்று பிராமி எழுத்துப் பொறித்த ஒரு பானையோடு இலங்கையில் துவாகலா என்ற பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கப்பலைச் செலுத்தும் மாலுமியாகக், கடலை ஆளும் வணிகராக இந்த பரதவ குல மக்கள் இருந்திருக்கின்றனர் என இரு நிலப்பகுதி ஆய்வுகளும் நல்ல சான்றுகளைத் தருகின்றன.

ஒரு கப்பல் தலைவன் ஒருவனின் இரு மகன்களான சேனா, கோத்திகா ஆகிய இருவரும் இலங்கையில் முதன் முதலில் தமிழ் ஆட்சியை நிறுவினர் (கி.மு 177-155) என மகாவம்சம் நூலின் வழி அறிய முடிகின்றது.

இப்படிப் பல ஆய்வுத்தகவல்களை இக்கட்டுரை வழங்குகின்றது. இலங்கை மட்டுமல்லாது ஏனைய கிழக்காசிய நாடுகளில் தொடர்ச்சியான ஆய்வுகள் செய்யப்படுமானால் தமிழகத்திற்கும் ஏனைய கிழக்காசிய நாடுகளுக்குமான வணிகத் தொடர்புகளும் தமிழின் ஆளுமையும் மேலும் புலப்பட வாய்ப்பு பெருகும் என்ற எண்ணத்தை இக்கட்டுரை வழங்குகின்றது.
-சுபா

Sunday, February 12, 2017

டெக்ஸஸ் மாநிலத்தில் திருக்குறள் ஓதும் போட்டியும் தமிழ்ச்சங்க நிகழ்வுகளும்



சாஸ்தா அறக்கட்டளையின் 10வது திருக்குறள் விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. வட அமெரிக்காவின் டெக்சஸ் மானிலத்தின் தலைநகரான டல்லாஸ் மானிலத்தில் இயங்கும் அமைப்பு இது. இந்த அறக்கட்டளையைத்  தோற்றுவித்து அதனை செவ்வனே செயல்படுத்தி வருகின்றனர் திரு.வேலு திருமதி விசாலாட்சி வேலு இருவரும். இந்த ஆண்டு இந்த அமைப்பு நடத்திய 10வது திருக்குறள் ஓதும் போட்டியின் பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள நான் அழைக்கப்பட்டிருந்தேன்.




260 பேர் திருக்குறள் மனனம் செய்து ஓதும் போட்டியில் கலந்து கொண்டனர். 60 குழந்தைகள் திருக்குறள் பொருட்காட்சியில் பங்கெடுத்துக் கொண்டனர். 20 குழந்தைகள் திருக்குறளைப் பற்றி கட்டுரை எழுதும் போட்டியில் கலந்து கொண்டனர்.

நேற்று டாக்ஸசின் ஃப்ரிஸ்கோ நகரின் செண்டேனியல் உயர் நிலைப்பள்ளியின் அரங்கில் திருக்குறள் ஓதிய அனைவருமே சிறப்பிக்கப்பட்டனர்.

காலையில் 4 வெவ்வேறு அறைகளில் பேச்சுப் போட்டிகள் மாணவர்களின் தமிழ் அறிவு நிலைக்கேற்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை முடித்து திருக்குறள் பொருட்காட்சியும் அதன் விவரணையும் நடைபெற்றது. தனிப்பட்ட முறையில் என்னை மிகக் கவர்ந்த ஒரு நிகழ்வாக இந்தப் பொருட்காட்சிப் போட்டி  அமைந்திருந்தது. இதற்குக்காரணம், பெற்றோர் அல்லது ஏனைய பெரியோரின் துணையின்றி குழந்தைகள் தாமே தாங்கள் உருவாக்கிய காட்சிப்பொருளைத் தாங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் திருக்குறட் பாக்களோடு விளக்கிச் சொல்லி தங்கள் படைப்புக்களை வருகை தந்தோருக்கு விளக்கிக்காட்டினர்.

குழந்தைகளில் பெரும்பாலோர் தட்டுத்தடுமாறி தமிழில் பேசினாலும், திருக்குறளைத் தமிழிலேயே எழுதி வாசித்ததைப் பார்த்தபோது நான் உண்மையில் மனம் மகிழ்ந்தேன். அதுமட்டுமன்றி அக்குறளின் பொருளைத் தக்க உதாரணங்களோடு அவர்கள் விளக்கும் போது எவ்வகையில் அவர்களது புரிதல் என்பது இருக்கின்றது என்பதனையும் என்னால் அறிய முடிந்தது. பொருளுணர்ந்து சொல்வது தானே பயன். இதனை சாஸ்தா அறக்கட்டளைச் சாதித்துக் காட்டியிருக்கின்றது என்பது குறிப்பிடப்பட வேண்டியது.

இந்தப் போட்டிகளுக்குப் பின்னர், மூன்று சொற்பொழிவாளர்களின் உரைகள் நிகழ்ந்தன. பெரும்பாலும் பெரியோர்கள் வந்து கலந்து கேட்டு பங்கெடுத்துக்கொண்டனர் . இந்த கருத்தரங்கில் கலிபோர்னியாவைச் சேர்ந்த திரு.நா.உதயபாஸ்கரன், ஹூஸ்டனைச் சேர்ந்த திரு.கரு.மலர்ச்செல்வன் ஆகியோருடன் எனது சொற்பொழிவும் இடம்பெற்றது.

எனது உரையில் திருக்குறளின் ஐரோப்பிய மொழிகளிலான மொழிபெயர்ப்புக்கள் பற்றிய தகவல்களைக் காட்சிப்படங்களுடன் விளக்கமளித்தேன். எனது உரைக்குப் பின்னர் எழுந்த கேள்விகளும், கருத்துக்களும் வந்திருந்தோர் இத்தகவல்களை மிகுந்த ஆர்வத்துடன் உள்வாங்கிகொண்டிருப்பதை எனக்குப் புலப்படுத்தியது. இது எனக்கு மிகுந்த மன நிறைவை அளித்தது.


இதற்குப் பின்னர் மதியம் நடந்த பரிசளிப்பு விழா மிகக் கோலாகலமாக ஃப்ரிஸ்கோ நகரப் பள்லியின் அரங்கில் நடைபெற்றது.  ஏறக்குறைய 60 பேர் அதிலும் குறிப்பாக டால்லஸ் நகரில் இயங்கு அனைத்து தமிழ்ப்பள்ளிகளிலிருந்தும் வந்து கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வுக்கான முதல் கட்ட திருக்குறள் மனனம் செய்து ஓதும் போட்டி ஜனவரி 28ம் தேதி நடைபெற்றது  என்றும் அன்றைய நாளில் மட்டும் திருக்குறள் ஏறக்குறைய எட்டாயிரத்து அறுநூறு முறை ஓதப்பட்டது என்று அறிந்த போது மெய்சிலிர்த்துப் போனேன். இந்த விழாவினை ஒட்டி நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளில் என எண்ணிப் பார்க்கும் போது நேற்றுவரை இந்த நிகழ்வின் தொடர்பில் ஏறக்குறைய பத்தாயிரம் முறை திருக்குறள் ஓதப்பட்டுள்ளது என்பது ஒரு சாதனை தானே. அதிலும் 10வது ஆண்டு நிறைவு விழாவில் பத்தாயிரம் முறை திருக்குறள் ஒதப்பட்டுள்ளது.. அதிலும் தமிழகம் கடந்த வட அமெரிக்காவின் ஒரு மாநிலத்தில் எனும் போது இதனைச் சிறப்பித்துக் கூற வேண்டியது நம் கடமை அல்லவா?

பரிசளிப்பு மேடையில் எல்லா குழந்தைகளும் மேடையேற்றப்பட்டு நினைவுச்சின்னங்களும் பரிசகளும் பெற்றது ஒரு இனிமையான நிகழ்வு. பரிசுகள் பெற்ற குழந்தைகள் அகமும் முகமும் மலர்ந்து மழலை பேசி ஆடி ஓடி மகிழ்ந்திருந்தனர். அவர்கள் திருக்குறளைப் பெருமையுடன் சொல்லிப் பார்த்து நடமாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த போது எத்தகைய சாதனையை இந்த சாஸ்தா அறக்கட்டளையின் நிறுவனர்களான திரு.வேலு, விசாலாட்சி தம்பதியர் செய்திருக்கின்றனர் என நினைத்து மலைத்து வியந்து மகிழ்ந்தேன்.

இந்த நிகழ்வில் மேலும் ஒரு அதிசயமாக 1330 குறட்பாக்களை மனனம் செய்து ஒப்புவித்த செல்வி சீதாவின் சாதனையைச் சொல்லித்தான் ஆகவேண்டும். குடும்பத்தாரின் ஆதரவும் தூண்டுதலும் மட்டுமன்றி தனது சொந்த விருப்பத்தின் பேரில் திருக்குறளைக் கற்று ஓதுவது மட்டுமல்லாது மிகச் சரளமாகத் தமிழில் மேடையில் பேசினார் இந்த 17 வயது இளம் பெண்.

தமிழ் வாழுமா என பலர் பட்டிமன்றம் வைத்து விவாதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தமிழால் ஒன்றிணைந்தோம்.. திருக்குறளால் தமிழ் வளர்த்தோம் என சாதித்து வருகின்றனர் இந்த டால்லாஸ் பகுதி வாழ் தமிழ் மக்கள். அம்மக்களுக்குத் திருக்குறள் வழி தமிழ் முயற்சிகளை செயல்படுத்தி வரும் சாஸ்தா அறக்கட்டளை நிறுவனர்களுக்கும் ஏனைய அனைத்து தன்னார்வலர்களுக்கும் நான் எமது தமிழ் மரபு அறகக்ட்டளையின் நல்வாழ்த்துக்களையும் அன்பினையும் தெரிவித்துக் கொள்கின்றேன். வளர்க உங்கள் தமிழ்ப்பணி!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை

Saturday, February 11, 2017

நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள் - பகுதி 1

ஸ்டுட்கார்ட்டிலிருந்து அட்லாண்டா பயணம் 10 மணி 45 நிமிடங்கள். 
தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வெளியீடான "நாவாய்" என்ற நூலை வாசித்துக் கொண்டு வந்தேன். கடல் வணிகம், பண்டைய கப்பல் வகைகள், சங்க கால கடல் பயண முயற்சிகள், தமிழக துறைமுகப் பட்டினங்கள் என விரிவாக ஆராயும் பல ஆய்வுக் கட்டுரைகள் நிறைந்த நூல் இது. இதன் விமர்சனத்தை சிறிது சிறிதாக எழுதுகிறேன்.




நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்
++++++++++++++++++++++++
பகுதி 1

தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரை தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.


இந்த நூலில் முதல் கட்டுரையாக இடம்பெறுவது தமிழறிஞர் க.வெள்ளைவாரணம் அவர்கள் எழுதிய ”தமிழகத்தில் தொல்பொருள் ஆய்வின் இன்றியமையாவை’ என்ற கட்டுரையைப் பற்றி சில கருத்துக்கள்.

இக்கட்டுரை ஏறக்குறைய 30 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது என்றாலும் இதன் உட்பொருள் இன்றும் சிந்தனைக்கு அவசியமாகின்றது என்பதனால் நூலில் இணைத்திருக்கின்றனர்.

தமிழக நிலப்பரப்பில் தொடங்கப்பட்ட முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் பற்றிய காலவிபரங்களைக் குறிப்பிடுகின்றார். அதில் குறிப்பாக தலைச்சங்க காலத்தில் தமிழகத்தின் தென்பகுதியில் ஓடிய பஃறுளி என்ற பெயருடைய குமரி ஆற்றைப் பற்றி சிலப்பதிகாரச்சான்றுக்குறிப்போடு விவரிக்கின்றார்.
தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகளில் இன்று மீனவர்கள் என அழைக்கபப்டும் பரதவர்கள் மிக விரிவாக கடல் வணிகத்தில் ஆளுமை செலுத்தியமை பற்றியும், மரக்கலங்கள், திமில் என்ற பெயர் கொண்ட படகுகளை உருவாக்கி தங்கள் கடல் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டமையை விவரிக்கின்றார்.

சங்ககாலத்தில் யவனர்கள் (கிரேக்கர்களும், ரோமானியர்களும்) இப்பகுதிகளுக்கு வணிக நோக்கமாக வந்து சென்றமை இலக்கியச் சான்றுகளுடன் குறிப்பிடப்படுகின்றது. மீன்கள் மட்டுமன்றி உப்பும் மிக முக்கிய வணிகப்பொருளாக இருந்தமையையும் அறிகின்றோம். கடற்கோளினால் முழ்கிய காவிரிப்பூம்பட்டினம், அதன் நகர அமைப்பு பற்றிய செய்திகளும் வழங்கப்பட்டுள்ளன். காவிரிப்பூம்பட்டினம் அமைந்திருந்த, பகுதியில் அரசு கடற்பகுதியில் அகழ்வாய்வுகள் மேற்கொண்டால் தமிழர் தொண்மை, நாகரிகம் பற்றிய பல சான்றுகள் கிடைக்க வாய்ப்புண்டு என்று குறிப்பிடுகின்றார்.

இக்கட்டுரை தமிழக கடற்கரை சார்ந்த நகரங்களில் தொல்லியல் அகழ்வாய்வுகளை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.

இக்கட்டுரை குறிப்பிடும் கருத்துக்கள் இன்றும் தேவையான ஒன்றே. தமிழக கடற்கரைப்பகுதிகளில் போதிய அளவு ஆய்வுகள் இதுவரை முழுமையாக நடத்தப்பட வில்லை என்பது தொல்லியலாளர் பலரது கருத்துக்களாகவே நிற்கின்றன. அரசு விரிவான கடல்சார்ந்த தொல்லியல் ஆய்வுகளுக்கு நிதி உதவி வழங்கி இவ்வகை ஆய்வுகள் நடைபெற உதவ வேண்டியது கடமை.
-சுபா