Sunday, June 25, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 122

கதை கட்டுவது என்பதைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். நம்மைப் பற்றி ஒரு கதையை உருவாக்கி அதனை நாம் யார் என்றே அறியாமல் நம்மிடமே ஒருவர் சொல்வதென்றால் எப்படியிருக்கும் என யோசித்துப் பாருங்கள். இப்படித்தான் ஒரு சம்பவம் உ.வே.சா வாழ்விலும் நடந்தது.

முன்னர் கடையலூர் சென்று ஓலைச்சுவடிகள் தேடியபோது ஒருவரது  இல்லத்தில் ஓலைச்சுவடிகள் உள்ளன என யாரோ சொல்ல அங்கு சென்று பார்த்தபோது ஏடுகளெல்லாம்  மச்சில்  இருந்த ஒரு பெட்டிக்குள் இருந்தன. அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்த போது பலகாலமாக கவனிக்காமல் விடப்பட்ட அப்பெட்டிக்குள் இருந்த ஒலைச்சுவடிகளெல்லாம் எலிப்புழுக்கைகள் நிறைந்து சில்லு சில்லாகிக் கிடந்தன. எலிகள் அவற்றைக் கடித்துத் தின்று ஜீரணித்துப் போட்டிருந்தன என்பதை அக்காட்சி காட்டியது. அதில் கொஞ்சம் மிஞ்சிய ஒரு சுவடியாகக் கிடைத்த சிந்தாமணியை மட்டும் எடுத்துக் கொண்டார். உ.வே.சா. 

இப்போது,  ஏனைய ஊர்களில் தேடி பின்னர் விக்கிரமசிங்கபுரம் வந்திருந்தார் உ.வே.சா. சைவ சித்தாந்தந்தின் தலையாய நூலான சிவஞானபோதத்திற்கு  உரை எழுதிய திருவாவடுதுறை  ஸ்ரீ சிவஞான முனிவர் பிறந்த வீடு அது. அங்கே ஏதேனும் நூல்கள் கிடைக்கலாம் என எண்ணி அங்கிருந்த ஒருவரை வினவினார்,. அவர் அப்பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்து கொண்டிருப்பவர். கடையநல்லூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

இங்கே தமிழ்ச்சுவடிகள் இருப்பதாகச் சொன்னார்கள்.  பழைய ஏட்டுச் சுவடிகள் இருக்கின்றனவா? என உ.வே.சா கேட்க, அப்போது அவர்களுக்கிடையே நிகழ்ந்த உரையாடலைப் பார்ப்போம்.

"
“மிகுதியாக இருந்தன. எல்லாவற்றையும் ஒருவர் கொண்டு போய் விட்டார்” என்று அவர் சொன்னார்.

“யார் அவர்?” என்று மிக்க ஆவலோடு கேட்டேன்.

“கும்பகோணம் சாமிநாதையர் கொண்டு போய் விட்டார்” என்றார் அவர். எனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டேன்.

“அவர் என்ன சுவடிகளைக் கொண்டு போனார்?”

“எவ்வளவோ சுவடிகள் இருந்தன. எல்லாவற்றையும் அவர் கொண்டு போய் விட்டார்.”

அவருக்கு என்னை இன்னாரென்று தெரியாது. அங்கே என்னுடனிருந்த அன்பர்கள் ஒன்றும் விளங்காமல் விழித்தார்கள். இந்த அபவாதம் இன்னும் எவ்வளவு தூரம் விரிவடையும் என்பதைத் தெரிந்து கொள்ளுவதற்காகவே நான் மேலும் மேலும் பல கேள்விகளைக் கேட்டேன். அவர் தம் வீட்டில் பல அருமையான ஏடுகள் இருந்தனவென்றும் அவற்றை நான் கொண்டு போய்விட்டதாகவும் உறுதியாகச் சொன்னார். என்னால் சிரிப்பை அடக்க
முடியவில்லை. 
"

தன் முன்னே இருப்பபர் தாம் தாம் குறை கூறிக்கொண்டிருக்கும் உ.வே.சா   என அறியாமல் அந்த மனிதர் பேசி முடித்தார்.

"
 “நீங்கள் அப்போது அங்கே இருந்தீர்களா?” என்று அந்த உபாத்தியாயரைக் கேட்டேன். சோர்ந்த முகத்தோடு அவர், “நான் தெரியாமல் சொல்லி விட்டேன். நான் அப்பொழுது அங்கே இல்லை. விடுமுறைக்கு ஊர் போயிருந்தபோது என் வீட்டில் இருந்தவர்கள் அப்படிச் சொன்னார்கள்” என்றார். “நல்ல வேளை. இந்த அபவாதத்தை என்னிடம் சொன்னதால் உண்மை எல்லோருக்கும் விளங்கியது. வேறு யாரிடமாவது சொல்லியிருந்தால் நீங்கள் சொல்லுவதை உண்மையாகவே எண்ணியிருப்பார்கள். நான் பிழைத்தேன்” என்றேன்.
"

இப்படி சுவடி தேடல் பணி என்று  மட்டுமல்ல.. தமிழ்ப்பணியிலும் சமூகப்பணியிலும் ஈடுபட்டிருப்போர் தம்  உன்னதமான நோக்கத்தை அறிந்து கொள்ளாது அவதூறு பரப்புபவர்களும், குற்றம் குறை சொல்லி உளறி வைப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

விக்கிரமசிங்கபுரத்தில் சுவடிகள் ஏதும் கிடைக்காத நிலையில் அங்கிருந்து ஒரு வண்டி வைத்துக் கொண்டு புறப்பட்டு ஊற்றுமலைக்குப் புறப்பட்டார் உவே.சா.

அங்கே அவருக்கு அவ்வூரின் ஜமீந்தார் மருதப்ப தேவர் விருந்துபசாரம் செய்யக் காத்திருந்தார். அங்கிருந்த நாட்கள் உ.வே.சாவிற்கு வித்தியாமனதொரு ஆனந்த அனுபவத்தை வழங்கியது.

Saturday, June 10, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 121

சிலப்பதிகாரத்தின் அடிப்படைப் பணிகளைத் தொடங்கிவிட்டாலும் மேலும் சில உரைகள் கிடைத்தால் பணியைச் சரியாகச் செய்ய உதவுமே என உ.வே.சா வின் மனதில் எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. 1891ல் மே மாத வாக்கில்  திருப்பெருந்துறை கோயிலில் திருப்பணி நடந்தேறி முடிந்த பின்னர் அங்கும் சென்று தனது தேடுதலைத் தொடர்ந்தார். உரைகள் ஏதும் கிட்டவில்லை. பின்னர் குன்றக்குடி மடத்திற்கு வந்தார்.இன்றைய நிலையில்,  ஏனைய சைவ திருமடங்களை விட குன்றக்குடி ஆதீனம் நிறைந்த சேவையைச் செய்து கொண்டிருக்கும் ஒரு சிறப்பான சைவ மடம். அங்கும் பல சுவடி நூல்கள் இருந்தன. 

ஆதீனகர்த்தரைப் பார்த்து பேசிய பின்னர் குமாஸ்தா திரு.அப்பாபிள்ளையைப் பார்த்து தான் வந்த நோக்கத்தை நினைவுபடுத்தினார் உ.வே.சா. அவர் சிலப்பதிகார மூலமும் மணிமேகலை மூலமும் திருத்தமான பிரதிகளைக் கொண்டு வந்து கொடுத்தார். இது உ.வே.சாவின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. புது நம்பிக்கையையும் உருவாக்கியது. இந்தச் சுவடிகள் எங்கிருந்து கிடைத்தன என விசாரித்தபோது பக்கத்தில் இருக்கும் முதலைப்பட்டி என்ற ஊரில் உள்ள கவிராயர் குடும்பத்திலிருந்து கிடைத்த பிரதி எனத் தெரிந்தது. 

மிதிலைப்பட்டி என்ற ஊர் தான் முதலைப்பட்டி என்று பேச்சு வழக்கில் மாறிப்போயிருக்கின்றது. இப்படி பல ஊர்கள் தங்கள் இயற்பெயரை இழந்து பேச்சு வழக்குப் பெயருடன் இன்று இருக்கின்றன.

திருத்தமான நூல்கள் ஓரிடத்தில் கிடைக்கும் எனத் தெரிந்ததும் சும்மா இருக்க முடியுமா? உடனே அப்பாபிள்ளை அவர்களையும் ஆதீனத்தில் அனுமதி பெற்று அழைத்துக் கொண்டு மிதிலைப்பட்டிக்கு இருவருமாக அன்று மதியமே சென்று சேர்ந்தார்கள்.

மிதிலைப்பட்டியில் இவர்கள் தேடி வந்த வீடு  ஒரு கவிராயரின் இல்லம்.அவர்களது முன்னோர்கள் சேலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்,  தாரமங்கலம் கோயிலில் திருப்பணி செய்த கட்டியப்ப முதலியார் ஆதரவில் இருந்தவர்கள் என்றும்,  அந்தப்பரம்பரையில் அழகிய சிற்றம்பலக் கவிராயர் என்பவருக்கு மிதிலைப்பட்டியை வெங்களப்ப நாயக்கரென்ற ஜமீந்தார் கொடுத்தார் என்றும், அது முதல் இவர்கள் குடும்பத்தாரின் ஊராக இது அமைந்தது, அதுமட்டுமல்லாது இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களிடமிருந்தும் மருங்காபுரி ஜமீந்தாரிடமிருந்தும் சிவகங்கை ஜம்னீதாரிடமிருந்தும் புதுக்கோட்டை அரசர்களிடமிருந்தும் இப்பரம்பரையினர் ஏராளமானப் பரிசுகளை தங்கள் கல்விப்புலமைக்காகப் பெற்றனர்   என்றும் உ.வே.சா அறிந்து கொண்டார். 

அக்காலத்தில் கவிராயர்களுக்கு ஊரையே தானமாகக் கொடுத்திருக்கின்றார்கள் என்பதை இதுபோன்ற செய்திகளிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றதல்லவா?

இந்தக் குடும்பத்தினர் எவ்வளவோ பிரபந்தங்களும் நூல்களும் இயற்றினர் என்றும் அதற்காகத் தங்கள் மூதாதையர் ஈட்டிய செல்வத்தை இந்தப் பரம்பரையில் உள்ளோர் அனுபவிக்கின்றனர் என்றும் அக்கவிராயரே பெருமையாகச் சொல்லிக் கொண்டதோடு தங்கள் சேகரிப்பில் இருந்த சுவடி நூல்களைக் கொண்டு வந்து காட்டினார்.அவரிடமிருந்த சுவடிகளெல்லாம் திருத்தமாக இருந்தன. அதில் திருவிளையாடற் பயகர மாலை என்ற நூல் ஒன்றும் கிடைத்தது. இந்த நூலின் அச்சுப்பதிப்பை திருவிளையாடற் பயங்கர மாலை என்ற பெயரில் முன்னர் உ.வே.சா பார்த்திருந்தார். பயத்தை நீக்குவதால் பய ஹர என இருக்க வேண்டிய நூலை பயங்கர நூலாக்கி விட்டனரே என நினைத்து சிரித்துக் கொண்டார் உ.வே.சா.

அவர்களுடனேயே மூன்று நாட்கள் தங்கியிருந்து நூலாய்வுகள் செய்து விட்டு அவரிடமிருந்து புரநானூற்றையும், பயகர மாலையையும், மூவருலா வையும் பெற்றுக் கொண்டு திரும்பினார்.

மிதிலைப்பட்டியில் கிடைத்த சிலப்பதிகாரப் பிரதி உ.வே.சாவிற்கு ஆய்வில் மிக உதவுவதாக அமைந்தது. பல இடங்களில் இப்பிரதியில் பாடல்களுக்குத் தலைப்புக்கள் இருந்தன. சிலப்பதிகாரத்துடன் இடைக்கிடையே மணிமேகலை பதிப்புப் பணியிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார் உ.வே.சா. சிலப்பதிகாரப் பதிப்புப் பணிகளைச் செப்பம் செய்யத் தொடங்கினார். மிதிலைப்பட்டி எனும் பெயர் கொண்ட அந்த ஊர் உ.வே.சாவின் மனத்தில் ஒரு தமிழ்க்கோயிலாகவே காட்சியளித்தது.

தமிழ் நாட்டில் சிவ தலங்களும் வைணவ தலங்களும் பல உள்ளன. அவற்றைப் போல தமிழ்த்தெய்வம் குடிகொண்டிருக்கும் தலங்களுள் ஒன்றாக மிதிலைப்பட்டியைக் காண்கின்றேன் எனக்குறிப்பிடுகின்றார் உ.வே.சா.

இப்படி உ.வே.சா உயர்த்திச் சொல்லும் மிதிலைப்பட்டி என்ர அந்தச் சிற்றூரின் இன்றைய நிலை என்ன? இங்குக் கோயிலாகக் குவிந்து கிடந்த சுவடிகள் இன்று என்னவாகின? கேள்வி எழத்தான் செய்கின்றன!

Tuesday, June 6, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 120

சில்லு சில்லாகக் கிடைத்த சிலப்பதிகாரத்துணுக்குகளைப் பொறுக்கி எடுத்து வைத்துக் கொண்டார் உ.வே.சா. உடைந்து கிடந்த அந்தச் சுவடி நூல்களின்  ஏட்டுத் துணுக்குகள் போலவே அவரது மனமும் அப்போது இருந்தது.  இவ்வளவு அஜாக்கிரதையாக  வாய்க்காலிலும் ஆற்றிலும் ஓலைச்சுவடி நூல்களைப் போட்டிருக்கின்றார்களே; நெருப்பில் போட்டு  சடங்குகள் என்ற பெயரில் அழித்திருக்கின்றார்களே, என அவர் மனம் நினைத்து நினைத்து நொந்து போனது. 

அங்கிருந்து புறப்பட்டு  நாங்குநேரி வந்தார் உ,வே.சா. அங்கும் சிலர் வீடுகளுக்குச் சென்று பேசியதில் மனதில் வெறுப்பும் கோபமும் தான் அதிகரித்ததேயன்றி ஆறுதல் கிடைக்கவில்லை. சிலப்பதிகார சுவடிகளின் நல்ல பிரதிகளும் கிடைக்கவில்லை. 

அங்கிருந்து பின் களக்காடு வந்தார். அங்கே இருந்த சைவ மடத்தில் சென்று விசாரித்தபோது அங்கே நல்ல வரவேற்பு உ.வே.சாவிற்குக் கிட்டியது.  மடத்தின் தலைவராகிய சாமிநாததேசிகர் என்பவர் தாமே பெட்டியைக் கொண்டு வந்து சேர்ந்து அமர்ந்து சுவடி நூல்களை இருவருமாக  ஆராய்ந்தனர். அதில் பல பிரபந்தங்களும் புராணங்களும், வடமொழி நூல்களும் இருந்தன.  பத்துப்பாட்டு மூலம் முழுமையாக அங்கு இருந்தது. முன்னர் தாம் தேடியபோது கிடைக்கவில்லையே என மனம் வருந்தினாலும், இரண்டாம் பதிப்பிற்கு உதவும், எனக் கேட்டு அதனை வாங்கி  வைத்துக் கொண்டார் உ.வே.சா. மூன்று நாட்கள் அங்கேயே சைவமடத்தில் தங்கியிருந்து நூல்களை ஆராய்ச்சி செய்து பின் தான் பெற்றுக் கொண்ட சில நூற்களை எடுத்துக் கொண்டு கும்பகோணம் திரும்பினார் உ.வே.சா.

கும்பகோணம் திரும்பியவுடன், இனி சிலப்பதிகாரப் பதிப்புப் பணியைத் தள்ளிப்போடக்கூடாது என மனதில் எண்ணம் எழ, அந்தப் பணியைத் தொடக்கினார் உ.வே.சா. இதுவரை அவருக்குக் கிடைத்த சிலப்பதிகாரப் பிரதிகளையெல்லாம் அலசத் தொடங்கினார்.  அடியார்க்கு நல்லார் உரை, அரும்பத உரை, சிலப்பதிகார மூல நூல்கள் என அனைத்தையும் வைத்துக் கொண்டு ஆய்வு செய்வது அவசியம் என அவருக்குத் தோன்றியது.  ஒரு நூலை பதிப்பிப்பது சுலபமான காரியம் அன்று. அதிலும் சிலப்பதிகாரம் போன்ற பல நூர்றாண்டுகள் பழமையான நூலை, சுவடியிலிருந்து பெயர்த்து அச்சுப்பதிப்பாக்க அந்த நூலைப்பற்றிய தெளிவு முதலில் ஏற்பட வேண்டியது அடிப்படை அல்லவா? நூல் இயற்றப்பட்ட காலத்தில் இருந்த சமய நெறிகள், அதிலும் குறிப்பாக சமண சமய நெறிகள் பற்றிய தெளிவு, வரலாற்றுப்  பின்புலம், சமகால நிகவுகள், அக்கால சமூகச் சூழல், அரசியல் என பல்வகைப்பட்ட பின்புலத்தோடு தான் சிலப்பதிகார நூலில் இடம்பெறும் சொற்களை ஆராயவேண்டும். ஆக இதனைச் செய்வதற்கு உரையாசிரியர்களின் உரை உதவுவது போன்று அரும்பத உரை ஆய்வும் உதவும் என அறிந்து கொண்டார் உ.,வே.சா. 

சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து கொண்டிருந்த வேளையில் சச்சபுட வெண்பா, தாள சமுத்திரம், சுத்தாநந்தப் பிரகாசம் ஆகிய நூல்களையும் வாசிக்கும் வாய்ப்பு கிடைக்க,  சிலப்பதிகாரத்திலும் இந்த மூன்று நூல்களிலும்  வரும் இசைக்கலை பற்றிய நுணுக்கமான விசயங்களை வாசித்து வியந்திருக்கின்றார். தனது நண்பர்களிடமும் இந்தப் பழம் தமிழ் நூல்களில் விவரிக்கப்படும் இசை பற்றிய இச்செய்திகளைக் கூறும் போது ”தமிழில் இவ்வளவு சங்கீத சாஸ்திரங்களா” என்று அவர்களும் வியந்தார்கள்,  என உ.,வே.சா குறிப்பிடுகின்றார். சிலப்பதிகாரம் ஒரு இலக்கியம் என்ற ஒரு கட்டுக்குள்  மட்டுமல்லாது தமிழர் மரபின் பண்பாட்டுக் கூறுகளை பல பரிமாணங்களில்  விளக்கும் ஒரு சிறந்த நூல் என்ற சிந்தனை உ.வே.சாவின் மனதிற்குள் வேரூன்றியது.  இந்தச் சூழலில் உ.வே.சா தன் மன ஓட்டத்தை இப்படிப் பதிகின்றார்.

“இந்தக் கலைகளையும் இவற்றின் இலக்கணத்தைப் புலப்படுத்தும் நூல்களையும் தமிழ் நாட்டினர்  போற்றிப் பாதுகாவாமற் போனார்களே!” என்று இரங்குவேன். நான் இவ்வளவு முயன்றும் சிலப்பதிகார உரையில் வரும் செய்திகள் ஓரளவு விளங்கினவேயன்றி முற்றும் தெளிவாக விளங்கவில்லை. ”

இப்படியே சிலப்பதிகார ஆய்வு தொடர்ந்து கொண்டிருந்தது.

அந்த வேளையில் 1891ம் ஆண்டு பிரான்சிலிருந்து பேராசிரியர் ஜூலியன் வின்சன் என்ற பிரஞ்சுக்காரர் ஒருவரிடமிருந்து  உ.வே.சாவிற்குத் தமிழில் ஒரு கடிதம் வந்தது.  உ.வே.சாவின் சிந்தாமணி அச்சுப் பதிப்பை தாம் பார்க்க நேரிட்டதாகவும் அதன் சிறப்பில் லயித்ததாகவும்.  மேலும் சிலப்பதிகாரம் தொடங்கி ஏனைய மூன்று காப்பியங்களையும் அவர் அச்சுப்பதிப்பாகக் கொண்டு வர வேண்டுமென்றும் கடிதத்தில் குறிப்பிட்டு எழுதியிருந்தார் அவர். தனக்கு மறு கடிதம் எழுதுமாறும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனைப் பற்றி குறிப்பிடுகையில்,  கடல் கடந்த வேற்று நிலத்தில் வாழும்  வேற்று இனத்தவரானாலும்,  தமிழ் உணர்வால் நாங்கள் நண்பர்களானோம், எனக்குறிப்பிடுகின்ரார். உ.வே.சா.

பேராசிரியர் ஜூலியன் வின்சனுக்கு உ.வே.சா பதில் கடிதம் எழுதினார்.  அதில் அங்குச் சிலப்பதிகாரப் பிரதி கிடைக்குமா என்றும் கேட்டு எழுதினார்.  1891ம் தேதி மே மாதம் 7ம் தேதி  அப்பேராசிரியர் எழுதிய பதில் கடிதத்தில் பிரான்சிலுள்ள  Bibliothique Nationale என்ற பெயர்கொண்ட நூலகத்தில்  1000க்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் இருப்பதாகவும், ஆனால் இதுவரை கேட்டலோக் செய்யப்படாததால் என்னென்ன நூல்கள் அங்குள்ளன எனத் தமக்குத் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நூலகத்தில் இன்று தமிழ் நூல்களை காட்டலோக் செய்திருக்கின்றார்கள். ஆனால் அது இன்னமும் முழுமைப்படுத்தப்படவில்லை. அவற்றுள் சில நூல்கள் மின்னாக்கம் செய்யப்பட்டுள்ளன. அரிய பல தமிழ் நூல்கள் இந்த நூலகத்தில் இன்றும் இருக்கின்றன.  அவற்றில் சிலவற்றை   காணும் வாய்ப்பு எனக்கும் கிட்டியதில் எனக்கு  மகிழ்ச்சியேற்பட்டது என்று கூறிக்கொள்வதில் பெருமை கொள்கிறேன் .  இந்த நூலகத்தைப் பற்றி தனிநாயகம் அடிகள் அவர்களும் தமது நூலில் குறிப்பிடுகின்றார். அவர் நேரில் அங்கு சென்றிருந்தபோது அங்குள்ள தமிழ் நூல்களை தாம் பார்த்ததாகவும் தமிழகத்துக்கு வெளியே இத்தனை தமிழ் நூல்கள் பாதுகாக்கப்படுகின்றவா எனத் தாம் வியந்ததாகவும் தனிநாயகம் அடிகள்  குறிப்பிடுகின்றார்.

பேராசிரியர் ஜூலியன் வின்சன் தான் தேடிப்பார்த்து அங்கிருக்கும் சிலப்பதிகார   சுவடி நூலை காகிதத்தில் எழுதி அனுப்புவதாகவும் குறிப்பிட்டு பதில் போட்டார்.

இந்த நிகழ்வை உ.வே.சா. இப்படிக் குறிப்பிடுகின்றார்.

”தமிழ் நாட்டில் தங்கள் பரம்பரைச் செல்வமாகக் கருதற்குரிய ஏடுகளை நீருக்கும் நெருப்புக்கும் இரையாக்கி விட்டவர்களைப் பார்த்து வருந்திய எனக்குப் பல்லாயிர மைல்களுக்கப்பால் ஓரிடத்தில் தமிழன்னையின்
ஆபரணங்கள் மிகவும் சிரத்தையோடு பாதுகாக்கப் பெறும் செய்தி மேலும் மேலும் வியப்பை உண்டாக்கி வந்தது. ஆயிரம் தமிழ்ச்சுவடிகள் பாரிஸ் நகரத்துப் புஸ்தகசாலையில் உள்ளனவென்பதைக் கண்டு, ‘இங்கே உள்ளவர்கள் எல்லாச் சுவடிகளையும் போக்கி விட்டாலும் அந்த ஆயிரம் சுவடிகளேனும் பாதுகாப்பில் இருக்கும்’ என்று எண்ணினேன். மணிமேகலையையும் நான் இடை யிடையே ஆராய்ந்து வந்தேனாதலால் அதன் பிரதி
பாரிஸிலிருப்பதறிந்து அந்நண்பருக்குச் சில பகுதிகளைப் பிரதி செய்து அனுப்பும்படி எழுதினேன். அவர் அவ்வாறே அனுப்பினார்.

தமிழகத்தில் பல தனி நபர்களின் அறியாமையினாலும் அரசின் அலட்சியப்போக்கினாலும் தமிழ் நூல்களும் சுவடிகளும் கவனிப்பாரற்று கிடக்கின்றன. ஏனைய உலக நாடுகளில் ஏதோ ஒரு வகையில் அங்குக் கொண்டு சென்று சேர்க்கப்பட்ட தமிழ் நூல்கள் அங்கு  தக்க முறையில் பாதுகாக்கப்படுகின்றன.  இப்படி அயல் நாடுகளில் தமிழ் நூல்களைப் பாதுகாத்து வைத்திருக்கும் பலருக்குத் தமிழ் மொழி தெரியாது.  ஆனால் அவர்களுக்கு இது ஏதோ ஒரு மொழியில் அமைந்த அறிவுக்கருவூலம் என்பதனால் இதனைப்  பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனை இருக்கின்றது. அறிவுக்களஞ்சியம் எந்த மொழியில் இருந்தாலும் அதனைப் பாதுகாக்க வேண்டும் என்ற பொது நலச் சிந்தனை இருக்கின்றது.  இந்த சிந்தனைக்காக அவர்களைப் பாராட்ட வேண்டும்; போற்ற வேண்டும். அதே வேளை நமது கடமை இந்தத் தமிழ் நூல்களைப் பாதுகாப்பது என்று உணர்ந்து அதற்கேற்ற தக்க நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவும் வேண்டும்!

தொடரும்..

சுபா