Monday, July 31, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 127

கதிராமங்கலம் என்ற பெயரைக் கேட்டவுடன் நம் மனதில் முதலில் எழுவது அங்கு மக்கள் தொடர்ச்சியாகச் செய்து வரும் போராட்டம் தான். ஹைட்ரோ கார்பன், மீத்தேன் ஆகியவற்றை நிலத்தடியிலிருந்து எடுப்பதன் வழி தங்கள் விலை நிலம் பாழடைவதை மனதில் கொண்டு பொது மக்களே வெகுண்டெழுந்து தங்கள் நிலத்தை பாதுகாக்க இந்தத் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.  இந்தக் கதிராமங்கலமும் அதன் அருகாமையில் உள்ள ஊரைப் பற்றியும் தான் உ.வே.சாவுடனான நமது உலாவின் இந்தப் பகுதி அமைகின்றது.

என் சரித்திரம் நூலின் 116 வது அத்தியாயத்தில் கதிராமங்கலம் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன. கதிராமங்கலத்தோடு இணைந்தவாறு கம்பரைப் பற்றிய செய்திகளும் வருவதுதான் இந்த அத்தியாயத்தில் ஒரு சிறப்பு.


உ.வே.சா பதிந்திருக்கும் செய்திகளிலிருந்து பார்க்கும் போது கம்பர் என்பது கம்பராமாயணத்தை எழுதிய அக்கிவியின் உண்மையான பெயரல்ல என்றும், அது ஒரு குடியின் பெயர் என்றும் அறிய முடிகின்றது. ஆக, இது ஒரு குடிப்பெயர் என்றும், அவரது இயற்பெயர் மறைந்து விட, குடிப்பெயரே வழக்கில் வரலாயிற்று என்றும் அறிய முடிகின்றது. அதோடு இக்குடியினர், பழங்காலத்தில் கம்பத்தை வைத்து வழிபாடு செய்பவர் என்ற காரணத்தினால் இவரகளுக்கு இப்பெயர் உருவாகியிருக்கலாம் என்ற செய்தியையும் உ.வே.சா குறிப்பிடுகின்றார். 

கம்பர் பெயரைக் கேட்டால் பலருக்கு அம்பிகாபதி அமராவதி பற்றிய நினைவுகளும் ஒட்டக்கூத்தரைப் பற்றிய சிந்தனைகளும் எழுவதைத் தவிர்க்க முடியாதல்லவா? ஒட்டக்கூத்தரைத் தமிழ்ச் சினிமா காட்டியவாறு புரிந்து கொள்வது தவறு. மாறாக வரலாற்று ரீதியில் ஒட்டக்கூத்தரின் ஆளுமையையும் சோழர்களுக்கான அரச சேவையையும் ஆராய்வது சரியான ஒப்பீட்டிற்கும் ஆய்விற்கும் உதவும். நிற்க.

கம்பர் பிறந்த ஊர் மாயூரத்துக்கு அருகே உள்ள திருவழுந்தூர்.  திரு இந்தளூர் என்ற பெயரே மருவி திருவழுந்தூர் ஆகிவிட்டது.  

உ.வே.சா குறிப்பிடும் கம்பர் பற்றிய சில செய்திகள் இது வரை நாம் கேள்விப்படாதவனவாக உள்ளன. அவற்றையும் காண்போமே.

திருவழுந்தூர் தான் கம்பர் பிறந்த ஊர் என்றாலும் கதிராமங்கலத்திற்கும் கம்பருக்கும் கூட ஒரு தொடர்பு இருக்கின்றது என அறிய முடிகின்றது. அதாவது,  திருவழுந்தூரைத் தேரழுந்தூர் என்றும் குறிப்பிடுகின்றனர். கம்பர் காலத்தில் அறியப்பட்ட வள்ளல்களில் ஒருவரான சடையப்ப வள்ளல்  இருந்த ஊர் இதற்கு வடக்கே உள்ள வெண்ணெய் நல்லூர். இந்த கதிராமங்கலமும் கம்பரோடு ஒரு வகையில் தொடர்புடையதாகவே அமைகின்றது. இதனை கதிராமங்கலம் சென்ற போது அங்கேயே கேட்டு தாம் அறிந்ததை உ.வே.சா பதிகின்றார்.

”கதிர் வேய் மங்கலம்” என்பது இந்த ஊருக்குக் கம்பரால் கிட்டிய பெயர். அதுவே பின்னர் கதிராமங்கலம்  எனப் பெயர் மாற்றம் கண்டிருக்கின்றது. இது நடந்ததன் பின்னனியில் ஒரு செய்தியும் இருக்கின்றது.

கம்பர் ஒரு தாசியிடம் அன்பு கொண்டிருந்தாராம். அவள் வசித்த ஊர் தான் இந்தக் கதிராமங்கலம். தன்னுடைய வீட்டுக்குக் கூரை வேய வைக்கோல் இல்லை என அப்பெண் கம்பரிடம் சொல்ல அவர் சடையப்ப வள்ளளிடம் இதனைச் சொல்ல,  அவர் நெற்கதிர்களையே அறுத்து அவற்றால் கூறை வேயச் சொல்லி அனுப்பி வைத்தாராம். அதனால் கதிர் வேய் மங்கலம் என்ற பெயர் இந்த ஊருக்கு அமைந்தது. 

முதலில் கேள்விப்பட்ட போது இக்கதை தமக்குப் புதிதாக இருந்தது எனக் குறிப்பிடும் உ.வே.சா அந்த ஊரில் மேலும் சிலரை வினவிய போது அவர்களும் இதே கதையையேக் கூறியதாகக் குறிப்பிடுகின்றார்.

கதிராமங்கலத்தைச் சுற்றிப் பார்த்த பின்னர் தேரழுந்தூருக்கும் உ.வே.சா சென்றார். அங்கே கம்பர் மேடு என ஒரு பகுதி உள்ளதாம். இதனை அவர் நண்பர்கள் சுட்டிக் காட்டி இங்கு தான் கம்பர் வாழ்ந்தார் எனச் சொன்னார்களாம். அவ்வூரில் இருக்கும் பெருமாள் கோயிலில் கம்பரின் சிற்பமும் அவர் மனைவியின் சிற்பமும் இருந்ததையும் அவற்றை தாம் பார்த்ததையும் உ.வே.சா பதிகின்றார்,

கம்பர் தன் ராமாயணத்தில் முதன் முதலில் பாடிய பாடலில் வரும் வயிரவபுரம் என்ற ஊருக்கும் சென்றார் உ.வே.சா. கம்பர் தன் பாடலில் குறிப்பிடும் காளிக் கோயில், தான் வயிரவபுரம் சென்ற போது அங்கே இருந்ததாகவும் குறிப்பிடுகின்றார். அக்கோயிலில் உள்ள காளியை  அங்காளியம்மன் என மக்கள் அழைத்தனர் என்றும் பதிகின்றார்.

ஆக, இந்த வயிரவபுரம் காளிக் கோயில், அங்காளியம்மன், கம்பர் மேடு, தேரழுந்தூர் பெருமாள் கோயில் ஆகியன் இன்று எந்த நிலையில் இருக்கின்றன என்று அறிய வேண்டும் என்ற ஆவல் எழுகின்றது. 

Monday, July 24, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 126

சிலப்பதிகாரம் புதிதாய் பிறந்த குழந்தையைப் போல் உ.வே.சாவின் கைகளில் தவழ்ந்தது. இதற்காக அவர் போட்ட உழைப்பு அதிகமல்லவா? நீண்ட கால உழைப்பின் பலனாய்  உருவாகிய இந்த அச்சு நூல் தமிழர் எல்லோரும் படித்து இன்புறும் வண்ணம் தமிழர் அனைவருக்கும் சிறப்பு சேர்த்த ஒரு நூல் அல்லவா?

நூல் அச்சாகி பிரதிகள் கைக்கு வந்தவுடன் தனக்குப் பொருளுதவி செய்தோருக்கெல்லாம் உ.வே.ச பிரதிகளை அனுப்பி வைத்தார். இராமநாதபுரத்தின் மன்னராக இருந்த மு.பாஸ்கர சேதுபதி அவர்களுக்கும் பிரதியை அனுப்பி வைத்தார். மன்னரிடமிருந்து அதற்கு ஒரு பதில் கடிதம் வந்தது. தனக்குச் சிலப்பதிகாரம் நூல் கிடைத்ததாகவும் இந்த அரிய பணியைச் செய்து முடித்தமைக்காக அவரை சமஸ்தானம் பாராட்டுவதாகவும் ஒரு முறை அவரை சமஸ்தானத்துக்கு அழைத்துச் சிறப்புச் செய்ய தாம் நினைத்திருப்பதாகவும்  அக்கடிதத்தில் இருந்தது.  செயற்கரிய காரியங்கள் செய்யும் போது கிடைக்க வேண்டிய புகழும் சிறப்பும் மரியாதையும் புகழும் தானாகவே வந்து சேரும் என்பதற்கு இது நல்ல உதாரணமல்லவா?

அக்காலச் சூழலில், உ.வே.சாவின் தமிழ் நூல் அச்சுப்பதிப்பாக்க முயற்சிகளை நாம் எளிதாக நினைத்து விடக் கூடாது. வரலாற்றில் நிகழ்ந்த ஆயிரமாயிரம் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று தானே என இந்த நிகழ்வை நாம் எளிதாக  எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் தமிழ் மொழியின் மீட்சியில் உ.வேசா செய்தது ஒரு புரட்சி. இதனை நான் புரட்சி எனக் குறிப்பிடுவதற்குக் காரணம் இருக்கின்றது.   

சங்ககாலம், அதற்குப் பின் பக்திகாலம், அதற்குப் பின் சாத்திரங்கள் உருவான காலம் என்பதைத் தாண்டி, அதாவது  கி.பி.15க்குப் பிறகு தமிழ் மொழியில் புதிய நூல் உருவாக்கம் என்பது மிக குறைந்து போயிருந்தது.  எழுதப்பட்ட நூல்கள் பெரும்பாலும் தலபுராணங்களாகவோ அல்லது மணிப்பிரவாள நடையில் அமைந்த சில ஆக்கங்களாகவோ இருந்தன. இதற்கு அக்காலத்தே நிலவிய அரசியல் சூழலையே நாம் முக்கியக் காரணியாகக் கொள்ளலாம்.  அரசர்களும் சிற்றரசர்களும் பிரபுக்களும் ஜமீந்தார்களும்  பொருள் வளத்திலேயே அதிகம் கவனமும் நாட்டமும் செலுத்தியவர்களாக இருந்தமையும் தமிழ் வளர்க்கும் நோக்கத்துடன் சீரிய முயற்சிகளை மேற்கொள்ளாமையையும் குறிப்பிட்டு சொல்லவேண்டியது அவசியமாகின்றது. 

இந்த சூழலில், பண்டைய காலம் போன்று சங்கம் அமைத்து நூல்கள் இயற்றிய  அறிஞர்களின் எண்ணிக்கையும் குறைந்து போயிருந்தது. இடைபட்ட காலங்களில் ஜமீந்தார்களையும் அரசர்களையும் புகழ்ந்து பாடிய நூல்கள் வந்து கொண்டிருந்தன. அப்படிப்பட்ட சூழலில் பண்டைய தமிழ் நூல்களை அச்சாக்கி அதனை குறிப்பிட்ட ஒரு சிலரே வாசிக்க முடியும் என்ற நிலையை மீறி அச்சு நூல் வடிவில் அதனை வெளியிட உ.வே.சா செய்தது ஒரு புரட்சிதான். இது சங்க இலக்கியங்களும் காப்பியங்களும் புத்துயிர் பெறக் காரணமாக அமைந்தன.  இந்த நிகழ்வு தமிழறிஞர்  பலருக்கு இவ்வகை முயற்சிகளை தாமும் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது என்பதை மறுப்பதற்கில்லை. தமிழ் மொழியின் சிறப்பை புகழ்ந்து பேசி மீண்டும் தமிழ் மொழி ஆக்கங்கள் புத்துணர்ச்சியுடன் உலா வர இந்த நூல்கள்  ஆதாரத்தளமாகின. 

தமிழக அறிஞர்கள் மத்தியில் இந்த நூல்களின் வரவு ஆரோக்கியமான சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.  இதனை உ.வே.சா இப்படிப் பதிகின்றார். 

“ சீவகசிந்தாமணியும் பத்துப் பாட்டும் தமிழ் நாட்டில் உலாவத் தொடங்கிய பிறகு பழந்தமிழ் நூல்களின் பெருமையை உணர்ந்து இன்புறும் வழக்கம் தமிழர்களிடையே உண்டாயிற்று. அவற்றின் பின்பு சிலப்பதிகாரம் வெளிவரவே, பண்டைத் தமிழ் நாட்டின் இயல்பும், தமிழில் இருந்த கலைப் பரப்பின் சிறப்பும் யாவர்க்கும் புலப்படலாயின. ‘கண்டறியாதன கண்டோம்’ என்று புலவர்களும் ஆராய்ச்சியாளர்களும் உவகைக் கடலில் மூழ்கினர்.”

சிலப்பதிகார முன்னுரையிலேயே அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு, மணிமேகலை என்னும் பழைய நூல்களைப் பற்றிய குறிப்புக்களை விரிவாக எழுதியிருந்தார். அதோடு தான் இவற்றையும் இன்னும் பல நூல்களையும் பதிப்பிக்க எண்ணம் கொண்டிருப்பதையும் குறிப்பிட்டு எழுதினார்.

இது தமிழறிஞர்களிடையே ஏகோபித்த ஆர்வத்தை உண்டாக்கியது .உ.வே.சா மேலும் மேலும் பல நூல்களை ஆராய வேண்டும். பதிப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு கடிதங்கள் பல ஊர்களிலிருந்து வந்து குவிந்த வண்ணமிருந்தன.

அடுத்து எந்த நூலை அச்சுப் பதிப்பாகக் கொண்டு வரலாம் என யோசிக்கலானார் உ.வே.சா.

மணிமேகலையா? புறநானூறா ? அவர் மனம் யோசைனையில் ஆழ்ந்தது!

Saturday, July 15, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 125

மனதில் கங்கணம் கட்டிக்கொண்டு ஒரு காரியத்தைச் செய்து முடிக்க வேண்டும் எனத் தீவிரமாக உழைத்துக் கொண்டிருப்போம். இப்படித் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கும் போது சில நேரங்களில் ஊக்கக்குறைவு திடீரென்று ஏற்பட்டு நாம் செய்யும் காரியங்களைச் செய்ய முடியாது நம்மை இயங்க விடாது செய்துவிடும். ஏதாவது காரணத்தைக் கற்பித்துக் கொண்டும். வலிய வேறு வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டும் நமது நேரத்தைச் செலவு செய்து கொண்டிருப்போம். செய்து முடிக்க வேண்டிய பணி பாரமாக மனதில் அழுந்தும். உதாரணமாக, சிலர் பணி புரிந்து கொண்டே கல்லூரிகளில் பகுதி நேரமாகப் படித்துக் கொண்டிருப்பார்கள். நல்ல ஊக்கத்துடனும் ஆர்வத்துடனும் சாதிக்க வேண்டும் என்ற கனவுடனும் தொடங்கினாலும் பின்னால் உற்சாகம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து நம் கனவு கனவாகவே ஆகிப்போகும் நிலையை நாமே உருவாக்கியிருப்போம். இத்தகைய நிகழ்வுகள் இந்த வகை அனுபவம் உள்ளோருக்கு மனதில் தொடர்ந்து இருந்து ஒரு வகை குற்ற உணர்ச்சியை உருவாக்கி நம்மேல் நாமே வருத்தப்படும் அளவிற்கு நமது சிந்தனையை எடுத்துச் சென்று விடும். இது மனதிற்கு ஆரோக்கியமானதல்ல. 

இத்தகைய மனச்சோர்வு ஏற்படுவதிலிருந்து தடுப்பதற்கு ஏதும் மருந்துகள் தேவையில்லை. கடைகளில் இன்றைய சூழலில் நாம் பார்க்கும் போது உடலைப் பல வகையில் இயக்கும் வகையில் மருந்துகளை உற்பத்தி செய்து கொண்டேயிருக்கின்றார்கள்.  உடல் உற்சாகம் பெற எனப் பெயரிட்டு மருந்துகளை விற்கின்றார்கள். ஆனால் இவ்வகையான மருந்துகள் ஏற்படுத்தும் பின் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் அந்த நேரத்தில் தேர்வில் கவனம் வைக்கவும், உடல் சோர்வைப் போக்கவும் என சிலர் மருந்துகளைப் பயன்படுத்த ஆரம்பித்து விடுகின்றனர். இந்த ரசாயனங்கள் உடலில் ஏதாவது ஒரு வகையான விரும்பத்தகாத பின் விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. இதற்கு மாற்றாக உடலிலும் மனதிலும் உற்சாகம் நிறைந்திருக்க வேண்டுமென்றால் அதனை நமது சிந்தனைகளை நாம் நிலைப்படுத்துவதன் வழி தான் சாதிக்க முடியும். 

நமது மனம் என்றும் உற்சாகமாக இருக்க வேண்டும் என நினைப்போர் முதலில் தமது சூழலில் இருப்போர் உற்சாகமாக இருக்கின்றவர்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் வருந்திக் கொண்டும், சோக கீதம் பாடிக் கொண்டும், சோம்பேறியாக இருப்பவர்கள் சூழலில் நாம் இருந்தால் அவர்களது நடவடிக்கைகள் நம்மைப் பாதித்து,  நமக்கு உள்ள உற்சாகத்தையும் இழந்து விடுவோம். ஆக, நேரான சிந்தனை கொண்ட, ஆக்ககரமான செயல்பாடுகளில் ஆர்வம் கொண்ட, உழைக்கத் தயங்காத, சுறுசுறுப்பான நபர்களின் சூழலில் இருப்பதும் நல்ல காரியங்களை, உலகில் சாதித்தோரை நமது உதாரணங்களாக எடுத்துக் கொண்டு செயல்படுவதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நாம் ஊக்கம் இழக்கும் வேளையில் நம் சூழலில் இருக்கும் ஒருவரின் செயல் நமக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கலாம். நாம் எப்படி பிறரிடமிருந்து உற்சாகத்தைப் பெறுகின்றோமோ அதே மாதிரி நாமும் நமது செயல்பாடுகளினால் பிறருக்கு ஊக்கமளிக்கும் பண்பு கொண்டோராக இருப்பது நலம். ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொண்டு வாழ்வது தானே மனிதக் குல மாண்பு! 

உ.வே.சா சிலப்பதிகாரப்பதிப்புப் பணிக்காகச் சென்னை வந்து அங்கே தங்கியிருந்து பதிப்பாக்கப் பணிகளைச் செய்து வந்தார். அந்த வேளையில் இராமசாமி முதலியார் காலமானார் என்ற செய்தி கிட்டியது. சிந்தாமணியை அறிமுகப்படுத்தி இப்படிப்பட்ட நூல்களைப் பாருங்கள், என வழிகாட்டியவர் அவர். சிலப்பதிகாரமும், மணிமேகலையும் அச்சுப்பதிப்பாக வரவேண்டும். தன் கண்கள் குளிர அவற்றைக் காண வேண்டும் என்ற பெரும் ஆவலோடு இருந்தார். ஆனால் எதிர்பாராத வகையில் இந்த வருந்தத்தக்க நிகழ்வு நடந்து விட்டது. உ.வே.சா கலங்கிப் போனார். இராமசாமி முதலியாரை நினைத்து வாடினார். அவரை நினைத்து சில செய்யுட்பாக்களை எழுதினார். மனதை ஆற்றிக் கொண்டு தன் அச்சுப்பதிப்புப் பணியைத் தொடர்ந்தார். 

எழுத்துப்பணியில் சமாளிக்க முடிந்த அளவு இதற்கான பொருட்செலவை ஈடுகட்டுவது உ.வே.சா வுக்கு இயலாததாக இருந்தது. ஆக, தனது நண்பர்களுக்கும், திருவாவடுதுறை, குன்றக்குடி, திருப்பனந்தாள் சைவ மடங்களின் ஆதீனத்தலைவர்களுக்கும் கொழும்பு குமாரசாமி முதலியாருக்கும், கும்பகோணம் சாது சேஷையருக்கும் மேலும் பல பணக்காரர்களுக்கும், நூலுக்குப் பொருளுதவி கேட்டு கடிதங்கள் அனுப்பினார். தேவையான தொகை வந்து சேர்ந்தது. அச்சுப்பணி தொடர்ந்தது. 

இறுதிக்கட்ட வேலை முடிந்திருந்தது. அப்போது உ.வே.சா. நார்ட்டன் துரை என்னும் ஆங்கிலேயரின் குமாஸ்தா விசுவநாத சாஸ்திரி என்பவர் ஒருவருடைய இல்லத்தில் தங்கியிருந்து இப்பணிகளைச் செய்து கொண்டிருந்தார். எஞ்சி இருந்தது சிலப்பதிகார அரும்பதவுரைக்கான முகவுரை மட்டுமே. இதனை எழுதிவிட்டால் காலையில் கொடுத்து அதனையும் பதிப்பித்து விட்டால் வேலை முடிந்து விடும். காலையில் இதனைக் கொடுத்தே ஆக வேண்டும் என்ற ஒரு கட்டாய நிலை. ஆனால் எழுத முடியாது அமர்ந்து விட்டார் உ.வே.சா. காலை நான்கு மணிக்கு எழுந்து எழுதி முடித்து கொடுத்து விடுவோமே எனப் படுத்தார். திடீரென்று விழிப்பு வந்தது. அப்போதாவது எழுதலாம் என நினைத்தார். மனம் நினைத்தாலும் எழுத உற்சாகம் பிறக்கவில்லை. இதனை முடித்தால் தானே நூலை முழுதாக்கி கண்ணால் பார்க்கலாம் என்ற வேதனை மட்டும் மனதை வாட்டியது. மனதைச் சமாதான படுத்திக் கொண்டு தூங்க முயற்சித்தார். தூக்கம் வரவில்லை. இது என்ன இரண்டும் கெட்டான் நிலை என தன்னையே குறை சொல்லிக் கொண்டவர் சுவரில் இருந்த ஒரு புகைப்படத்தைப் பார்த்தார். அந்தப் புகைப்படத்தில் இருந்தவரின் தோற்றமும் கம்பீரமும் உ.வே.சாவிற்கு திடீரென்ற உற்சாகத்தைக் கொடுத்தது. எழுந்து உட்கார்ந்தார். காகிதத்தை எடுத்து உடனே முகவுரையை எழுதத் தொடங்கினார். எழுதி முடிக்கவும் காலை விடியவும் சரியாக இருந்தது. காலையில் விசுவநாத சாஸ்திரியிடம் அது யாருடைய புகைப்படம் என வினவினார். அதுதான் நார்ட்டன் துரையின் புகைப்படம் என்று சேஷாத்திரி குறிப்பிட உ.வே.சாவின் மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டது. 

1892ம் வாக்கு.. ஜுன் மாதத்தில் உ.வே.சாவின் கடின உழைப்பின் பலனாகச் சிலப்பதிகார அச்சுப்பணி முழுமை பெற்றது. நூல் வெளிவந்தது. 

இன்று நமக்குக் கிடைக்கும் சிந்தாமணியின் பின் இருக்கும் உ.வே.சாவின் கடின உழைப்பை நம்மில் எத்தனைப் பேர் அறிந்திருக்கின்றோம்? வேறு யாரும் அறிந்திருக்கவில்லையென்றாலும் கூட தமிழாசிரியர்களும் தமிழ் ஆராய்ச்சி மாணவர்களும் அறிந்திருக்க வேண்டியது கடமையல்லவா?

Thursday, July 13, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 124

சிந்தாமணிக்கும் பத்துப்பாட்டு நூல் அச்சுப்பதிப்பாக்கத்திற்கும் ஏட்டுச் சுவடிகள் தேடி அலைந்ததை விடப் பன்மடங்கு உழைப்பினை சிலப்பதிகார உரையைத் தேடும் பணிக்காக உ.வே.சா செலுத்தினார் என்பதைப் பார்க்கின்றோம். சிலப்பதிகாரம் அது எழுதப்பட்ட காலத்து வரலாற்றுச் செய்திகளையும் சொற்பயன்பாடுகளையும் விளக்கக்கூடிய உரையாசிரியரின் துணையோடு அதனை அணுகுவதே சிறப்பாக இருக்கும் என்ற எண்ணமே உ.வே.சா விற்கு இருந்தது என்பதையும் அவர் குறிப்புக்கள் நமக்குக் காட்டுகின்றன. ஏறக்குறையாஇம்பதுக்கும் மேற்பட்ட ஊர்களில் தேடித் திரிந்ததில் கிடைத்த சில நூல்களுடன் சில மூல நூல் பிரதி ஓரிரு உரை என வைத்துக் கொண்டு சிலப்பதிகாரப் பதிப்புப் பணிக்கான வேலைகளைத் தொடங்கினார் உ.வே.சா. அந்தப் பணியில் அவரது கும்பகோணம் கல்லூரி மாணவர்கள் சிலரும் துணைக்கு இணைந்து கொண்டனர். எத்துறையாக இருந்தாலும் சரி.. இப்படி ஆசிரியர்களுக்கு ஆராய்ச்சிப்பணிகளில் உதவுவதன் வழி தானே மாணாக்கர்கள் தாங்களும் நேரடிப் பயிற்சியைப் பெற முடியும். 

மூல செய்யுட்களை பதிப்பிப்பதுடன் கூடுதலாக அச்சு வடிவில் வரும் நூலை வாசிப்போர் சிலப்பதிகாரச் செய்யுட்களை சரியாகப் புரிந்து கொள்ள சில கூடுதல் தகவல்களையும் இணைக்க வேண்டும் என முடிவு செய்து கொண்டார் உ.வே.சா. 

  • அரும்பத அகராதி ஒன்றினைத் தொகுத்தார். அதில் செய்யுளில் இடம் பெறுகின்ற கடினமான சொற்களை பட்டியலிட்டு விளக்கக் குறிப்பு எழுதினார். 
  • சிலப்பதிகாரத்தில் தான் அரியதாகக் கருதும் செய்திகளைப் பட்டியலிட்டு அகராதியாக்கி அதற்கு விஷய சூசிகை எனப் பெயரிட்டார். 
  • அதேபோல செய்யுளில் காணப்படும் அரசர்களின் பெயர்களுக்கு ஒரு அகராதி, நாடுகள், ஊர்கள், மலைகள், ஆறுகள், பொய்கைகள், தெய்வங்கள், புலவர்கள் எனப் பிரித்து ஒவ்வொன்றிற்கும் அகராதி அமைத்தார். 
  • பின்னர் சிலப்பதிகாரத்திற்கான அடியார்க்கு நல்லார் உரையில் தாம் வாசித்த நூலின் பெயர்களையும் ஒரு பட்டியலிட்டார். அவற்றிற்கு அகராதியும், தொகையகராதியும், விளங்கா சொற்களுக்கான மேற்கோளகராதியும், அபிதான விளக்கமும் எழுதினார். 
  • இவற்றோடு சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள் வரலாற்றினர் சுருக்கமாக எழுதினார். அதனை அடுத்து உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் வரலாற்றினை எழுதினார். இவற்றோடு உரையில் வரும் மேற்கோள் நூல்களைப் பற்றிய குறிப்புக்களையும் இணைத்தார். 

இவற்றைத் தயாரித்தவுடன் நூலுக்கான தனது முகவுரையை எழுதத் தொடங்கினார். இறுதியில் எழுதுவதை விட ஆரம்பத்திலேயே முகவுரையை எழுதி பின் அச்சுக்கு வரும் நேரத்தில் கூடுதல் தகவல்களை இணைத்து விடலாம் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. 

இந்தப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. 

ஆய்வுப்பணிகளும் ஆராய்ச்சிகளும் எழுதி முடிப்பதும் மட்டும் போதுமா ஒரு நூலை அச்சுப்பதிப்பாகக் கொண்டுவருவதற்கு? அதற்குத் தேவையான பணமும் அத்தியாவசியமாயிற்றே. 

இவரோடு தொடர்பில் இருந்த கொழும்பு பொ.குமாரசாமி முதலியார் முன்னர் சிலப்பதிகார அச்சுப்பணிக்கான அனைத்துத் தொகையையும் தாமே ஏற்றுக் கொள்வதாகச் சொல்லியிருந்தார். அதனைக் கருத்தில் கொண்டு குமாரசாமி முதலியாரை உ.வே.சா கடிதம் வழி தொடர்பு கொண்டார். அவரோ தாம் ரூ .300 அனுப்புவதாகச் சொல்லி விட்டார். சிலப்பதிகார நூலை முழுமையாகக் கொண்டு வர இந்தப் பணம் போதாது. ஆயினும் இது உதவும் என்பதால் அதனை பெற்றுக் கொண்டார். 

1891ம் ஆண்டு ஜூன் மாதம் கல்லூரியின் கோடை விடுமுறையின் போது சென்னைக்குப் புறப்பட்டார் உ.வே.சா. கடும் உழைப்பின் இறுதிக்கட்ட வேலைகள் அங்கே தொடங்கின. சிலப்பதிகாரம் அச்சு நூலாக வெளிவரும் அந்தப் பொன்னாளும் நெருங்கியது..!

Sunday, July 2, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 123

ஊற்றுமலையில் உ.வே.சாவிற்கு வித்தியாசமான அனுபவம் கிட்டியது. அப்படி ஒரு ராஜபோக அனுபவம் அவருக்கு வாழ்க்கையில் ஒருமுறைதான் கிட்டியது என்றாலும் தனது வாழ்வின் இறுதிக் காலம் வரை அந்த நினைவு அவர் மனதில் நிறைந்திருந்தது.

ஊற்றுமலை என்ற ஊரின் ஜமீந்தார் ஹிருதாலய மருதப்ப தேவர் உ.வே.சா தனது ஜமீன் மாளிகைக்கு வந்து சில காலம் தங்கியிருந்துச் செல்ல வேண்டுமென்று கடிதம் அனுப்பியிருந்தார். ஆக, அங்கே சென்ற போது ஜமீந்தார் மருதப்ப தேவரின் முதல் தோற்றமே அவரை இதுவரை தான் பார்த்த அனைவரிடமுமிருந்து வேறுபடுத்திக் காட்டியது.  ஏனெனில், வேட்டைக்குப் போகும் உடையலங்கார கோலத்தில் அவரும் அவருடன் சிலரும் ஆயுதங்கள் ஏந்திய வகையில் வந்து கொண்டிருந்தனர். உ.வே.சாவைப் பார்த்ததும் அவரை வரவேற்று, அரண்மனைக்குச் செல்லச் சொல்லிவிட்டு தனது வேட்டைப்பணியை முடித்து விட்டு வர அவர் கிளம்பி விட்டார்.

உ.வே.சாவிற்கு மிகப் பிரம்மாண்டமான அறை ஒதுக்கப்பட்டிருந்தது. மாலை எட்டு மணி வாக்கில் இரவு உணவுக்குப் பின்னர் அவர்கள் ஒன்று கூடினர். ஜமீந்தார் சில புலவர்களுடன் அமர்ந்து திருவானைக்கா புராணம் வாசித்துக் கொண்டிருந்தார். புலவர்கள் ஒருவருக்கு ஒருவர் என கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டிருக்க இந்தத் தமிழ்ச்சோலையில் அற்புதம் நிகழ்வதாக என்ணி உ.வே.சா மகிழ்ந்தார். ஜமீந்தார் மிகப் பணிவுடன் உ.வே.சாவிடம் சிலச் செய்யுட்களுக்குப் பொருள் சொல்லக் கேட்டுக் கொண்டார். அவரது பணிவு இவரை மலைக்க வைத்தது. மிக உயரிய நிலையில் இருக்கும் ஒருவர் இவ்வளவு பணிவுடனும் மரியாதையுடனும் பேசுகின்றாரே என வியந்தார்.

வேளா வேளைக்கு நல்ல விருந்துபசாரம். நல்ல சுற்றுச்சூழல். ஜமீந்தாருடனும்  தமிழ்ப்புலவர்களுடன் மனதுக்கிசைந்த இனிய தமிழ் உரையாடல் என நாட்கள் கழிவது உ.வே.சாவிற்குத் தான் சுவர்க்கபுரிக்கு வந்து விட்டோமோ என்ற சிந்தனையை ஏற்படுத்தியது.

ஜமீந்தார் நேரத்தை மிகச் சரியாக பயன்படுத்துபவர் என்பதை உ.வே.சா குறிப்பிடுகின்றார். 

"விடியற்காலை நான்கு மணிக்கே அவர் எழுந்து விடுவார். காலைக் கடன்களை முடித்துக்கொண்டு பால் சாப்பிட்டு விட்டு 6 மணிக்குப் புறத்தே உலாவுவதற்குப் பரிவாரங்களுடன் புறப்படுவார். யானைக்கூடம், குதிரைப்பந்தி, காளைகள் கட்டுமிடம் எல்லாவற்றையும் பார்வையிட்டுக் கொண்டே செல்வார். ஊரைச் சுற்றியுள்ள சாலைகளில் ஒவ்வொரு சாலை வழியாகச் சென்று உலாவி வருவார். அந்தச் சாலைகளெல்லாம் அவராலேயே அமைக்கப்பட்டவை; இருபுறமும் மரங்களைப் பயிராக்கிச் சாலைகளை ஒருங்காக வைத்திருந்தார். தோட்டங்கள் நல்ல முறையில் வளர்க்கப்பெற்று வந்தன. உலாவிவிட்டு வந்து எட்டு மணி முதல் பத்துமணி வரையில் தமிழ்ப் புலவர்களுடன் இருந்து தமிழ் நூல்களைப் படிப்பார். புதிய நூல்களைப் படிப்பதோடு பழைய நூல்களையும் பன்முறை படித்து இன்புறுவார். அவருடன் இருந்த வித்துவான்கள் நல்ல வித்துவப் பரம்பரையினர்; சில பிரபந்தங்களை இயற்றியிருக்கிறார்கள்; பல வருஷ காலமாக அவருடைய ஆஸ்தான வித்துவான்களாகவே இருந்தார்கள். பத்து மணிக்குமேல் கச்சேரிக் கட்டுக்குச் சென்று ஸமஸ்தான சம்பந்தமான வேலைகளைக் கவனிப்பார். பிறகு ஸ்நானம், ஆகாரம் முதலியவற்றை முடித்துக் கொண்டு மீட்டும் பிற்பகல் இரண்டு மணிக்குத் தமிழ் நூல் படிக்க உட்காருவார். நான்கு மணி வரையில் படித்துவிட்டு ஆறு மணி வரையில் ஸமஸ்தான சம்பந்தமான வேலைகளைப் பார்வையிடுவார். ஆறு மணிக்குமேல் தம்மைப் பார்க்க வந்தவர்களுக்குப் பேட்டி அளிப்பார். தம் குடிகளுடைய குறைகளை விசாரிப்பார். அவர்கள் அவற்றை ஓலையில் எழுதிய நீட்டுவார்கள். அவற்றையெல்லாம் பிறகு பார்த்து மறுநாள் தம் கருத்தைச் சொல்லுவார். வேற்றூரிலிருந்து வந்தவர்களுக்குச் சிறிதும் குறைவின்றி உபசாரம் நடைபெறும்." 

​வாழ்நாள் முழுதும் அங்கிருந்தாலும் சலிப்பு வராது எனத் தோன்றினாலும் உ.வே.சா தனது வேலைகளை விட்டு விட்டு அங்கேயே இருந்து விட முடியாதல்லவா? ஆக அங்கிருந்து பிரிய மனமில்லாமல் பிரிந்து வந்தார் உ.வே.சா. ​ஹிருதாலய மருதப்ப தேவர் உ.வே.சாவை வழியனுப்ப சிறிதும் மனமில்லாமல் முயன்றும் தனது தமிழ்ப்பணிகளைத் தொடர வேண்டிய அவசியத்தை ஜமீந்தாரிடம் விளக்கி விட்டு அந்த சுவர்க்கபுரியிலிருந்து புறப்பட்டார் உ,வே.சா. 

அங்கிருந்து புறப்பட்டு  சொக்கம்பட்டி, வாசுதேவநல்லூர், புளியங்குடி ஆகிய ஊர்களுக்குச் சென்று அங்கு தமிழ்ப்புலவர்கள் சிலரைச் சந்தித்து சிலப்பதிகார உரையைத் தேடும் பணியைத் தொடர்ந்தார்.

இந்தப் பயணங்கள் பல புதிய அனுபவங்களைக் கொடுத்தன.

அங்கிருந்து தென்காசிக்கு வந்தார் உ.வே.சா. அங்கு சுப்பையா பிள்ளை என்பவரிடம் தமிழ்ச்சுவடிகள் உள்ள விசயம் அவருக்குக் கிடைத்தது. அங்கு உடனே சென்றார்.

ஆனால் அங்கோ ஏமாற்றமே மிஞ்சியது. சுவடி நூல்களை அவ்வீட்டார் முறையாகப் பாதுகாக்காமல் போனதால் ஒற்றை ஒற்றை ஏடுகளாகவே கிடைத்தன. சில ஒற்றை ஏடுகளை மட்டும் பெற்றுக் கொண்டார் உ.வே.சா.  அதில் சிற்றடகம் என்ற நூலின் செய்யுட்கள் இருந்தன. ஆனால் சிலப்பதிகார உரை கிட்டவில்லை.

சிலப்பதிகாரத்தின் அடியார்க்கு நல்லார் உரையின் பொருளை அறிந்து கொள்ள வேறு உரை நூல்களைத் தேடி உ.வே.சா அலைந்த ஊர்களின் எண்ணிக்கை ஐம்பதிற்கும் மேல் இருக்கும். அன்றையகால சூழலில் தமிழ்ச்சுவடி நூல்களை அச்சுப்பதிப்பாக்க வேண்டும் என்று அவருக்கிருந்த அளப்பறிய ஆர்வம் கொடுத்த உந்துதலினால் தான்  இவ்வளவு பயணங்களையும் உ.வே.சா மேற்கொண்டார் எனத் தயங்காது சொல்லலாம்.