Monday, August 7, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 128

சிலப்பதிகாரப்பதிப்பிற்குப் பிறகு அடுத்த நூலை உ.வே.சா அச்சுப்பதிப்பாக்கம் செய்யும் பணியைத் தொடங்குவதற்கு முன்னரே இராமநாதபுரம் ஸ்ரீ பாஸ்கர சேதுபதியிடமிருந்து நவராத்திரி விழாவில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அழைப்பு கிட்டியது.  இந்த விழாவில் கலந்து கொள்வதற்காகக் கல்லூரியில் 10 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு ரயிலேறி ராமநாதபுரம் புறப்பட்டார் உ.வே.சா. கும்பகோணத்திலிருந்து மதுரை வரை ரயிலில் சென்று பின் அங்கிருந்து ராமநாதபுரத்திற்கு மாட்டு வண்டியில் சென்றிருக்கின்றார். 

தமிழ் நாட்டிலிருந்தும் அடுத்த மாகாணங்களிலிருந்தும் பல அறிஞர்களும் கனவாண்களும் அரச குடும்பத்தினரும் இந்த விழாவின் போது அங்கு வந்திருக்கின்றனர்.  இன்றைய இந்தியாவின் மாநிலங்கள் என்ற கருத்து அன்று வழக்கில் இல்லையென்பதால் தமிழகமும் ”வேறு நாடுகளிலுமிருந்தும்” விருந்தினர் வந்தனர் என உ.வே.சா குறிப்பிடுகின்றார். 

சேதுபதி மன்னர்களின் குல தெய்வமாகிய ராஜராஜேஸ்வரி அன்னைக்கு 1008 சங்கம் வைத்து அபிஷேகம் நடைபெற்றது என்றும், பூசைகள், மேளக் கச்சேரி எனத் திருவிழா களைக்கட்டியிருந்ததையும் அறிய முடிகின்றது. 

தமிழ்ப்பண்டிதர்கள் பலரும் சமஸ்கிருதப் பண்டிதர்கள் பலரும், பல ஜமீந்தார்களும், பிரமுகர்களும் நிகழ்ச்சிக்கு விருந்தினர்களாக வந்து கலந்து கொண்டதனால் உ.வே.சா பலரையும் சந்திக்கும் வாய்ப்பை இந்த ஒரே நிகழ்வில் பெற்றார். இது கிடைத்தற்கறியதோர் நல்ல வாய்ப்பாகவே அமைந்தது.  அவர்களுடன் பேசிக் கொண்டு அங்கேயே 10 நாட்களை  செல்வழித்தை மகிழ்வான நாட்களாக உ.வே.சா நினைத்துப் பார்த்துக் குறிப்பிடுகின்றார்.

பத்து நாட்கள் நிகழ்ச்சி முடிந்து சேதுபதி மன்னரிடமிருந்து விடைபெற்றுச் சென்றபோது அவர் உ.வே.சா விற்கு இரண்டு உயர்தர சாதராக்களைப் போர்த்தி தஞ்சை வரும் போது உ.வே.சாவின் புதிய நூல் அச்சாக்க முயற்சிகளுக்கு தாம் நிச்சயம் பொருளுதவி செய்வோம் என்று கூறி வழிச் செலவுக்கு நூறு  ரூபாயும் கையில் கொடுத்து அனுப்பியிருக்கின்றார். நேராக திருவாவடுதுறை ஆதீனத்திற்கு வந்த உ.வே.சா ஆதீனகர்த்தரிடம் அங்கு சமஸ்தானத்தில் நடந்த நிகழ்வுகளை விளக்கி தமக்களித்த சால்வைகளையும் காட்டியிருக்கின்றார். அவற்றைப் பார்த்த  தேசிகர், இவை மிக உயர்ந்தனவாயிற்றே. முன்னூறு ரூபாய் பெறுமே எனச் சொல்ல, அவற்ரை ஆதீனத்தில் கொடுத்து பணமாகப் பெற்றுக் கொண்டால் தனது தேவைக்கு அது உதவுமே என உ.வே.சா வின் எண்ணம் ஓடியது. அதனை இப்படிக் குறிப்பிடுகின்றார்.

“ ​திருவாவடுதுறைக்குப் போய் அம்பலவாண தேசிகரிடம் காட்டிய போது, “மிகவும் உயர்ந்த சம்மானம்; தங்கள் தகுதியை அறிந்து செய்த சிறப்பு இது” என்று பாராட்டினார். 

“இந்த ஆதீன சம்பந்தம் இல்லாவிட்டால் எனக்கு என்ன மதிப்பு இருக்கப் போகிறது?” என்று சொல்லி விட்டு, “இவை இரண்டும் என்ன விலைபெறும்?” என்று கேட்டேன்.

“முந்நூறு ரூபாய்க்கு மேல் இருக்கும்” என்றார் அம்பலவாண தேசிகர்.
“இந்தந் துப்பட்டாவினால் எனக்கு என்ன பிரயோசனம்? இவற்றை இங்கேயே கொடுத்து விடலாமென்று நினைக்கிறேன்.”

“என்ன, அப்படிச் சொல்லுகிறீர்கள்! ஒரு பெரிய சமஸ்தானத்தில் பெற்ற மரியாதை; பத்திரமாக நீங்களே பாதுகாத்து வைத்துக்கொள்ளுங்கள்.” 

“சிலப்பதிகாரம் அச்சிட்டதனால் ஏற்பட்ட சிரமம் இருக்கிறது. அதைத் தீர்க்க வழியில்லை. இந்த இரண்டையும் வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறேன்? தமிழ்த்தாயின் திருப்பணியினால் வந்த கௌவரம் இவை. ஆகையால் இவற்றை மீட்டும் அதற்கே உபயோகப் படுத்துவதுதான் நியாயம்” என்றேன். அம்பலவாண தேசிகருக்கு, நான் அவற்றைக் கொடுத்து விடுவதில் மனமிராவிட்டாலும் என் குறிப்பை அறிந்து மடத்திலேயே அவற்றை எடுத்துக்கொண்டு அவற்றின் விலையாக ரூ. 300 எனக்கு அளிக்கச் செய்தார். நான் அத்தொகையைப் பெற்றுச் சிலப்பதிகாரப் பதிப்பினால் அப்போது இருந்த கடன் தொல்லையினின்றும் நீங்கினேன். கடன் தீர்ந்த சந்தோஷத்தில் தமிழ் நூற்பதிப்பைப் பற்றி யோசிக்கலானேன். ​”

புலவர்களோடு சேர்ந்தே இருப்பது வறுமை என  பொதுவில் சொல்வோம். அதே சூழல்தான் உ.வே.சாவின் நிலையிலும். சிலப்பதிகார அச்சுப்பதிப்புப் பணிக்கு  அவரது உழைப்பு மட்டுமன்றி சொந்தப் பணத்தையும் செலவிட்டு கடனாளியாகவும் ஆகியிருந்த வேளையில் இந்தச் சால்வைகளை விற்றதால் கடனையும் தீர்க்க முடிந்தது. 

அச்சுப்பதிப்பிற்கான  அடுத்த நூலாக எதனைத் தேர்ந்தெடுக்கலாம் என யோசிக்கலானார் உ.வே.சா. மணிமேகலையை விட புறநானூறு ஓலைப் பிரதிகள் அவரிடம் ஓரளவு கிடைத்திருந்தன. ஆக புறனானூறு அச்சுப்பதிப்புப் பணிகளைத் தொடங்கினார்  உ.வே.சா.

இப்படித்தான் நமக்கு இன்று கிடைக்கின்ற சங்கத்தமிழ் நூல்கள் ஒவ்வொன்றாக ஓலைச்சுவடிப் பிரதிகலீலிருந்து அச்சு வடிவில் எளிதில் எல்லோரும் படிக்கும் வகையில் உருவாக்கம் பெறத் தொடங்கின.

தொடரும்..
சுபா

No comments:

Post a Comment