Sunday, August 27, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 130

புறநானூற்று ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருந்தது. நூல் சங்க காலத்து நடை என்பது மட்டுமல்லாது சங்ககாலத்து வரலாற்று நிகழ்வுகளின் செய்திகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. உ.வே.சாவிற்குத் தமிழக வரலாறு தொடர்பான விசயங்களில் பரிச்சயம் இல்லாமலிருந்தது. ஆக, சந்தேகங்கள் ஏற்படும் இடங்களில் உள்ள செய்திகளை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளவும், மன்னர்கள், தளபதிகள், போர் செய்திகள் ஆகியவை பற்றி மேலதிகத் தகவல் பெறவும் தனக்கு தொடர்பில் இருந்த சில நண்பர்களை அவர் கடிதம் வழி தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டதாக என் சரித்திரத்தில் பதிகின்றார். 

அச்சுப் பதிப்பாக ஒரு நூலைக் கொண்டுவருவதற்கு முன்னர் அதில் சொல்லப்படும் செய்திகளை முறையாக அலசி ஆராய்ந்து விளக்கிப் பதிப்பிக்கும் போது அந்த நூலை வாசிப்போருக்கும் அது பயனளிக்கும் என்பது உ.வே.சாவின் எண்ணமாக இருந்தது என்பதை உணர முடிகின்றது. 

தபால் இலாகாவில் சூபரிண்டெண்டாக இருந்த ஸ்ரீ வி.கனகசபைப் பிள்ளை என்பர் தமிழக வரலாற்றில் மிகுந்த ஆர்வத்துடன் ஆராய்ச்சி செய்து வந்தார் என்றும், அவர் தமிழர் சரித்திரம் எழுத வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆராய்ச்சி செய்து வந்தார் என்றும் உ.வே.சாவின் குறிப்புக்கள் வழி அறியமுடிகின்றது. தனது ஆராய்ச்சியின் வழி தாம் கற்று அறிந்து கொண்ட பல செய்திகளைத் தொகுத்து ஆங்கிலத்தில் "1800 வருஷங்களுக்கு முந்திய தமிழர்" என்ற ஒரு நூலை அவர் எழுதி வெளியிட்ட செய்தியையும் அறியமுடிகின்றது. இந்த வரலாற்றாய்வாளர் உ.வே.சாவிற்கும் நட்பு வட்டத்தில் இருந்தார். அவருக்குக் கடிதம் போட்டுச் சங்க நூல்களில் தென்படுகின்ற வரலாற்று கதாமாந்தர்களைப் பற்றிய விளக்கங்களையும் போர் பற்றிய செய்திகளையும் கேட்டு அறிந்து கொண்டார் உ.வே.சா. இப்படி பலவகையாக சந்தேகங்களைக் களைந்து, பல நூல்களைக் கற்று, குறிப்புக்கள் எழுதி, அகராதிகளையும் தயார்செய்த வகையில் ஒருவாறு புறநானூற்று தயாரிப்பு முழுமை பெற்றது. 

நூலுக்கான தயாரிப்புப் பணிகள் முடிந்தது. கும்பகோணத்திலிருந்து சென்னைக்குப் பயணமானார் உ.வே.சா. புறநானூற்று அச்சுப் பணிகள் 1893ம் ஆண்டு ஜனவரி மாதம் வெ.நா.ஜூபிலி அச்சுக் கூடத்தில் தொடங்கியது. வழக்கம் போல ராமைய்யங்கார் தோட்டத்தில் தங்கிக் கொண்டு அங்கிருந்த படி நூல் அச்சுப்பணிகளைச் செய்யலானார். 

இலங்கையின் யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் சென்னையில் ஒரு அச்சுக்கூடத்தை வைத்திருந்தார் என்றும் அவருடைய அந்த அச்சுக்கூடத்தைச் சதாசிவ பிள்ளை என்பவர் கவனித்து வந்தார் என்றும் உ.வே.சா பதிகின்றார். இடையே ஒரு நாள் அங்குச் சென்ற போது சதாசிவ பிள்ளையிடம் ஒரு புறநானூற்றுப் பிரதி இருந்தது தெரியவந்தது. அதனைச் சதாசிவப் பிள்ளை ஒரு பிரதி எடுத்து இவருக்குத் தபாலில் அனுப்பி வைத்தார். மூலம் முழுவதும் உள்ள நூல் அது. 267ம் செய்யும் முதல் 369ம் செய்யுள் வரை இருந்தது என்றும் உ.வே.சாவின் புறநானூற்று ஆய்வுப் பணியில் இந்தப் பிரதியும் உதவியது என்றும் தெரிகின்றது. 

பணிகள் சிறப்பாக நடந்து வந்தைமையினால் 18 பாசுரங்களின் அச்சுப் பணி நிறைவேறியது. அங்கிருந்து பணியை மேலும் தொடர அவகாசம் இல்லை. கல்லூரி தொடங்கிவிடும் என்பதால் கும்பகோணம் திரும்பும் சூழல் ஏற்பட்டது. திரும்பும் போது சேலம் வழியாக வந்து கரூருக்கும் வந்து அங்கு சில பேருடன் உரையாடி பின் புறப்பட்டு கும்பகோணம் திரும்பினார் உ.வே.சா.

தொடரும்.
சுபா

No comments:

Post a Comment