Sunday, September 17, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 133

சீவக சிந்தாமணி அச்சுப் பதிப்பிற்குப் பின்னர் உ.வே.சா விற்குச் சங்க இலக்கிய நூல் பற்றிய அறிமுகம் ஏற்படவே அவர் பத்துப் பாட்டு அச்சுப்பதிப்பாக்கத்தை முடித்திருந்தார் என்பதை முந்தைய பதிவுகள் சிலவற்றிற்கு முன்னர் குறிப்பிட்டிருந்தேன். பத்துப்பாட்டு என்பது எட்டு புலவர்களால் இயற்றப்பட்ட ஒரு தொகுப்பாகும். பத்துப்பாட்டில் இடம்பெறும் தொகுப்புகளில் ஆறு தொகுப்புக்கள் புறத்திணைப் பாடல்கள் என்றும், மூன்று தொகுப்புக்கள் அடங்கிய செய்யுட்கள் அகத்தினைப் பாடல்கள் என்றும், எஞ்சிய ஒன்று அகப்புறப்பாட்டு என்ற வகையிலும் அமைகின்றன. 

புறத்தினைப்பாடல்கள் என வகைப்படுத்தப்படுபவை திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி , மலைபடுகடாம் ஆகியன. அகத்தினைப்பாடல்கள் எனப்படும் வகையில் அமைவன முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய மூன்றுமாகும். நெடுநல்வாடை அகப்புறப்பாட்டு என வகைப்படுத்தப்படுகிறது. 

பத்துப்பாட்டு அச்சுப்பதிப்பாக்கத்திற்குப் பின்னர் சிலப்பதிகாரத்தை அச்சு நூலாக உ.வே.சா வெளியிட்டமையும் அதன் தொடர்பில் நடந்த நிகழ்வுகளையும் முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். அப்பணிகளினூடே சங்கத்தமிழ் பாடல் தொகுப்புக்களில் ஒன்றான புறநானூற்றுப் பதிப்பை உ.வே.சா தொடங்கினார். சிலப்பதிகாரப் பணி முடிவுற்ற பின்னரும் கூட உடனே இந்த நூலை அவரால் வெளியிட இயலாத சூழல் இருந்தது. இடையில் 1893ம் ஆண்டு அவரது தந்தையாரின் இழப்பு அவருக்குப் பணிச்சுமையை மேலும் அதிகரித்தது. ஆகவே அந்த ஆண்டு புறநானூற்றுப் பதிப்பை முழுமைப்படுத்த முடியாத சூழலே தொடர்ந்தது. 

புறநானூறு என்பது சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை எனப்படும் தொகுப்பில் அமைகின்ற ஒரு தொகுப்பாகும் 

புறநானூற்றுப்  பாடல் தொகுப்பில் இடம்பெறும் பாடல்களை எழுதிய புலவர்களின் பெயர் பட்டியல் நீளமானது. நூற்றைம்பத்தாறு புலவர்கள் எழுதிய பாடல்களின் தொகுப்பு இது என அறியப்படுகின்றது. இவர்களுள் பதினைந்து பெண்பார்புலவர்களும் அடங்குவர். புறநானூற்றுப்பாடல்கள் பண்டைய சங்ககால வரலாற்றுச் செய்திகளும் சமூக வழக்குகளையும் இன்று நாம் ஆராய்ந்து அறிந்து கொள்ள உதவும் சான்றுகளுள் ஒன்றாக அமைகின்றது. 

உ.வே.சாவின் பதிப்புப்பணி 1894ம் ஆண்டு மீண்டும் முனைப்புடன் தொடங்கியது. புறநானூற்றுப் பாடல்களை ஆராய்ந்ததில் அவருக்குக் கிடைத்த பல தகவல்களைத் தொகுத்து நூலில் ஒரு அகவலாக இணைத்தார். தனது ஆய்வு எவ்வகையில் நிகழ்ந்தது என்பதையும் தாம் ஆராய்ந்த சுவடிகளில் பல சேதமுற்றிருந்த நிலையையும் வாசிப்போர் உணர்வதற்காக  அறிமுகமாக நூலில் இணைத்தார். அகம் புறம் என்னும் இருவகைப் பொருளின் தன்மையையும் வாசிப்போர் புரிந்து கொள்ளும் வகையில் நூலின் முகவுரையில் இதனை விளக்கி எழுதி இணைத்தார். 

புறநானூற்றுப் பாடல்களில் வருகின்ற செய்திகளைக் கொண்ட பண்டைய தமிழகத்தின் சரித்திரத்தை அறிந்து கொள்ளவும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு உதவும் எனக் கருதி பாடல்களில் வருகின்ற நாடுகள், கூற்றங்கள், ஊர்கள், மலைகள், ஆறுகள் ஆகியவற்றின் பெயர்களை அகராதி வரிசையில் தொகுத்து அமைத்து நூலில் இடம்பெறச் செய்தார். அத்துடன் தனது உரையில் மேலும் இவ்வாறு குறிப்பிடுகின்றார். 
"இத் தமிழ் நாட்டின் பழைய சரித்திரங்களைத் தெரிந்து கொள்ளுதலிலும் தெரிவித்தலிலுமே பெரும்பாலும் காலம் கழித்து உழைத்து வரும் உபகாரிகளாகிய விவேகிகள், இந்நூலை நன்கு ஆராய்ச்சி செய்வார்களாயின் இதனால் பலர் வரலாறுகள் முதலியன தெரிந்து கொள்ளுதல் கூடும்", என்கின்றார். 

புறநானூற்று அச்சுப் பதிப்புப் பணிகள் நிறைவடைந்தன புறம் நானூற்றில் 267ம் பாடலும் 269ம் பாடலும் முற்றிலுமாக கிடைக்கவில்லை. இலங்கையின் யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் சென்னையில்  ஒரு அச்சுக்கூடத்தை வைத்திருந்தார்.   அந்த அச்சுக்கூடத்தைச் சதாசிவ பிள்ளை பாதுகாத்து வந்தார். அவர் ஒரு புறநானூற்றுப் பிரதி  ஒன்றினை பிரதி எடுத்து இவருக்குத் தபாலில் அனுப்பி வைத்தார்.   உ.வே.சா பெற்றுக் கொண்ட பதிப்பில் ​267ம் செய்யும் முதல் 369ம் செய்யுள் வரை கிடைத்தவற்றை உ.வே.சா  என் சரித்திரம் நூலில் குறிப்பிடுகின்றார். ஆயினும் அவரது பதிப்பில் பாடல் எண் 267, 268 ஆகியன விடுபட்டே இருந்திருக்கின்றன. மேலும் 282ல் சில சொற்கள், 283ல் சில சொற்கள் 284ல் சில சொற்கள்285ல் சில சொற்கள் என மேலும் சில செய்யுட்களிலும் முழுமையான பாடல்கள் கிடைக்கவில்லை.  328ல் முதல் சில வரிகள் கிட்டவில்லை. இப்படி சில் சொற்கள் கிடைக்காத நிலையிலேயேதான் இப்பதிப்பு வெளிவந்துள்ளது 328ம் பாடலின் தொடக்கம் கிடைக்கவில்லை. இவை மூன்று முழுமை பெறா பாடல்கள் என்ற நிலையில் புறநானூறு அச்சுப்பதிப்பாகத் தயாராகியிருந்தது. 1894ம் ஆண்டு செப்டம்பர் மாதம் புறநானூற்றுப் பதிப்பு நிறைவேறியது. உ-வே-சா பதிப்பித்த எட்டுத் தொகை நூல்களுள் இதுவே முதன்மையானது. நூல் வெளிவந்தது. அப்போதைய தன் மன நிலையை உ.வே.சா இப்படித்தான் குறிப்பிடுகின்றார். 

"புத்தகம் முடிந்து பார்க்கும்பொழுது, ‘நானா இவ்வளவும் செய்தேன்!’ என்று எனக்கே பிரமிப்பாக இருந்தது. இறைவன் திருவருளை வழுத்தினேன். புத்தகத்தின் அமைப்பைப் பார்த்து நண்பர்களெல்லாம் பாராட்டி எழுதினர். சேலம் இராமசுவாமி முதலியாரும், பூண்டி அரங்கநாத முதலியாரும் பார்த்து இன்புறுவதற்கில்லையே என்ற வருத்தம் மாத்திரம் எனக்கு ஏற்பட்டது."

புறநானூற்றுப் பதிப்பு  123 ஆண்டுகளுக்கு முன்னர் இதே செப்டம்பர் மாதம் தான் நிகழ்ந்திருக்கின்றது என்பது  இந்தப் பதிவை நான் எழுதும் போது எனக்கு வியப்பளித்தது. 

தொடரும்...

சுபா

Monday, September 11, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 132

துன்பம் வரும்போது ஒன்றுக்கடுத்து இன்னொன்று என வரிசையாக அமைந்து விடுமானால் அதிலிருந்து மீள்வதற்கு அசாத்தியமான மன உறுதி கட்டாயம் ஒருவருக்கு வேண்டும். துன்பத்திலே உயர்வு தாழ்வு காண முடியுமா என்ற கேள்வி எழலாம். துன்பத்தை அனுபவிப்போருக்கு, அந்த நேரத்தில் ஒருவரது முழு கவனத்தையும் அத்துன்பம் எடுத்துக் கொண்டு வேறு விசயங்களில் கவனம் செலுத்த முடியாதவாறு ஒரு நிலையை உருவாக்கினால் அது உயர்ந்த துன்பம் தான். சில வகை துன்பங்களுக்கு ஓரிரு நாட்களில் விடை கிடைக்கலாம். துன்பமே நன்மையாகவும் ஆகலாம். ஒரு சில வகை துன்பங்களோ என்றும் மனதை விட்டு அகலாத தன்மை கொண்டவையாக அமைந்து விடுகின்றன. இத்தகைய துன்பங்கள் வாழ்வில் மறக்கவியலாத கீறலை உருவாக்கி வைத்து விட்டுச் செல்லும் போது அதன் பாதிப்பு கால ஓட்டத்தில் ஓரளவு குறைந்தாலும், முழுமையாகக் குறையாமல் மனதில் ஒரு மூலையில் இருந்து கொண்டு அவ்வப்போது வலியை உணர்த்திக் கொண்டே தானிருக்கும். இத்தகைய அனுபவத்தைத் தரவல்லது மரணம். இந்தத் துன்பத்தை மனிதர்களாகப் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் போது அதிலிருந்து வெளிவருவதற்கு அசாத்தியமான மன உறுதி என்பது அவசியமாகின்றது. காலம் தான் பல வகை துன்பங்களுக்கும் மாற்று மருந்தாக அமைகின்றது. 

மனிதராகப் பிறந்தவர் அனைவருமே இன்ப துன்பம் என்ற சுழற்சியிலே மாட்டிக் கொண்டவர்கள் தானே. எப்போதுமே ஒரே சீராக நம்மைச் சுற்றிய நிகழ்வுகள் இருப்பதில்லை. 

புறநானூற்றுப் பதிப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேலையில் இத்தகைய துன்ப நிகழ்வுகள் உ.வே.சாவின் வாழ்க்கையில் நிகழ்ந்தன. 

சங்கீதத்தில் மிகத் தேர்ந்தவர் என்பதுடன் உ.வே.சாவிற்கு மிக நெருக்கமாக இருந்தவரான மகா வைத்தியநாதய்யர் 27.1.1893ம் ஆண்டு காலமானார். திருவாவடுதுறை ஆதினகர்த்தருக்கும் நல்ல நெருக்கமான தொடர்பில் இருந்தவர் இவர். இவரது மறைவு உ.வே.சாவைப் பாதித்தது போலவே, ஆதீனகர்த்தரையும் மிகவும் பாதித்தது என்ற குறிப்பை நூலில் காண்கிறோம். 

அதே ஆண்டில் உ.வே.சாவின் தாயும் தந்தையும் உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டனர். தாயாரின் உடல் நிலை மிக கவலைக்கிடமான நிலையில் இருந்த வேளையில் தந்தையாரின் உடல் நலமும் திடீரென்று அதிகமாக பாதிப்புற்றது. அக்டோபர் மாதம் 7ம் தேதி உ.வே.சா வின் தந்தையார் வேங்கட சுப்பையர் காலமானார். நிறைந்த சிவபக்தி கொண்டவரான இவர் இறக்கும் தறுவாயில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் தியான மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார் என்றும் இறக்கும் தருவாயில் மகனை அருகில் அழைத்து "சிவபக்தி பண்ணிக் கொண்டிரு" என சொல்லிவிட்டு சிவகதி அடைந்தார் என்பதையும் உ.வே.சா நூலில் குறிப்பிடுகின்றார். 

உ.வே.சாவின் அந்த நொடிப்பொழுது வரையில் வீட்டுப் பொறுப்பு அனைத்தையும் தந்தையாரே முன் நின்று கவனித்துக் கொண்டிருந்தார். அது உ.வே.சா முழுக்க முழுக்க கல்லூரிப் பணிகளில் கவனம் செலுத்தவும், தமிழ்ச் சுவடிகளைத் தேடி அலைந்து ஆராய்ந்து பதிப்பிக்கவும் அவருக்கு வாய்ப்பாக அமைந்தது. வீட்டு விசயங்களில் மனம் அலைபாயாமல் ஆராய்ச்சியில் மனம் முழுமையாக ஈடுபட இது பெரிதும் உதவியது. ஆனால் தந்தையாரை இழந்த அந்தக் கனத்திலிருந்து ஆய்வுப் பணியுடன் குடும்பச் சுமையும் உ.வே.சாவிடம் வந்தடைந்தது. தந்தையை இழந்த துயரம் அவர் மனதை மிகவும் பாதித்து விட்டது என்பதைத் தன் தந்தையை நினைத்து அவர் எழுதிய செய்யுட்கள் வெளிப்படுத்துகின்றன. தந்தையாரின் இறப்பும், குடும்பச் சுமையும் உ.வே.சாவின் தமிழ்ப்பணியைச் சற்று சுனங்கச் செய்தன. 

இரண்டு மரணங்கள் ஒரே ஆண்டில் நிகழ்ந்து வேதனையில் ஆழ்த்த, அவ்வேளையில் உ.வே.சாவுக்குப் பலமுறை தக்க வேளைகளில் உதவிய பூண்டி அரங்கநாத முதலியார் காலமானார் என்ற செய்தி கிட்டியது. 10.12.1893ம் ஆண்டு இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. 

பூண்டி அரங்கநாத முதலியார் செல்வாக்கு மிக்கவராக இருந்தார் என்பதோடு பல தமிழ் அமைப்புக்களின் தலைமைப் பதவியையும் வகித்து வந்தவர் . அவரது இழப்பு தமிழுலகுக்குப் பெரும் இழப்பு என தமிழ்ச்சான்றோர் பலர் வருந்தியமையை உ.வே.சாவின் எழுத்துக்களின் வழி அறிய முடிகின்றது. தமிழ்ப்புலமையும் ஆங்கிலப்புலமையும் பெற்றவர், மிகுந்த செல்வந்தர் என்பதோடு தமிழ் அமைப்புக்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர் என்பதால் அதிகமான நட்பு வட்டத்தைப் பெற்றவராக இருந்தார் பூண்டி அரங்கநாத முதலியார். ஆக நண்பர்கள் பலர் கேட்டுக் கொள்ள பூண்டி அரங்கநாத முதலியாரின் இழப்பை நினைத்து சில செய்யுட்களை எழுதினார் உ.வே.சா. 

உ.வே.சா தன் வாழ்வில் மூன்று பெரும் இழப்புக்களை அந்த ஆண்டில் சந்தித்திருந்தார். இன்னமும் புறநானூற்றுப் பதிப்பு முழுமையடையாமலேயே இருந்தது. 
தொடரும்..
சுபா

Sunday, September 3, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 131

ஒரு செயலில் நாம் ஈடுபட்டிருக்கும் போது அச்செயலுக்குத் தொடர்ச்சியான வேறு சில தேவைகள் நம் கண்முன்னே வந்து நிற்கும் போது அவற்றையும் செய்யத் தொடங்கலாமா, என்ற எண்ணம் நம் மனதில் எழுவதை நமது அனுபவங்களில் பார்த்திருப்போம். பல வேளைகளில் இப்படியானச் செயல்கள் நமது முதன்மை நோக்கத்தை நாம் அடையமுடியாமல் செய்துவிடும் அபாயமும் உண்டு. பல வேளைகளில் புதிய பாதைகள் நமக்கே ஏற்படுவதும் அதனால் நமது சுய வளர்ச்சி என்பது மிகப்படுதலுக்கான வாய்ப்புகள் அதிகரிப்பது என்ற நிலையும் ஏற்படும் சாதகமான நிலையும் ஏற்படுவது உண்டு. ஆக, எது நமக்குத் தேவை, எந்த வழியைத் தேர்ந்தெடுப்பது, எதனில் முழு கவனத்தைச் செலுத்துவது என்பதை நாம்தான் சுயமாக நமது தேவைக்கும், மனத்தின் எண்ண ஓட்டங்களுக்கும், சூழலுக்கும், ஏற்றவாறு தேர்ந்தெடுத்து செயல்படவேண்டும். 

உ.வே.சா புறநானூற்றுப் பதிப்பு வேலையைத் தொடங்கி விட்ட காலகட்டம் இது. சென்னையில் பாதி வேலையை முடித்து விட்டு கல்லூரி தொடங்கியதால் கும்பகோணத்திற்குத் திரும்பி வந்து தனது கல்லூரிப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலம் அது. புறநானூறு அச்சுப்பதிப்பில் இணைப்பதற்காகப் புறநானூற்று அகராதியை ஒன்றினைத் தயாரித்துச் செம்மை படுத்தினார், அப்போது கல்லூரியில் முதல்வராக இருந்தவர் பில்டெர்பெர்க் என்னும் ஆங்கிலேயர் ஒருவர். உ.வே.சாவின் அச்சுப்பதிப்புப் பணிகளை அறிந்திருந்தமையினால் இவர்பால் அவருக்கு நிறைந்த அன்பு இருந்தது. உ.வே.சா பதிப்பித்த சீவக சிந்தாமணி அச்சுப்பதிப்பை இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்திற்கும் ஏனைய சில கல்வி மையங்களுக்கும் அனுப்பி வைத்ததோடு அங்கிருந்து நூலைப்பெற்றுக் கொண்டமைக்கான நன்றிக்கடிதங்களையும் அவர்கள் எழுதி அனுப்பச் செய்திருக்கின்றார். 

அந்தக் காலத்தில் கல்லூரியில், கல்லூரிப் படிப்பு என்பது மட்டுமன்றி நாடக அரங்கேற்றங்களும் நடைபெற்றிருக்கின்றன. ஷேக்ஸ்பியரின் Midsummer Night's Dream என்ற நாடகத்தைத் தமிழில் மொழி பெயர்த்து நடத்தியிருக்கின்றனர். கல்லூரி ஆசிரியர்களில் ஒருவராகிய நாராயணசாமி ஐயர் என்பவர் இந்த மொழிபெயர்ப்பைச் செய்ய, அதனைத் திருத்தம் பார்த்து மேலும் சில பாடல்களையும் தாமே எழுதி இணைத்துக் கொடுக்க, நடுவேனிற் கனவு என்ற பெயரில் இந்த நாடகம் அரங்கேற்றம் கண்டது என்ற செய்தியும் உ.வே.சா குறிப்புக்களின் வழி அறியமுடிகின்றது. 

இதன் தொடர்ச்சியாக ஷேக்ஸ்பியர் எழுதிய ஆங்கில நாடகங்களை ஆங்கில மொழி தெரிந்த ஒருவர் உதவியோடு வாசித்து தமிழ் படுத்தினால் என்ன, என்ற யோசனை உவே.சாவிற்கு எழுந்தது. அதேபோல சாகுந்தலம் போன்ற நூல்களைத் தமிழ் படுத்தி எழுதலாமே என்றும் தோன்றியது. உ.வே.சாவின் நலனில் அக்கறை கொண்ட சிலரோ, புதிதாக உ.வே.சா வசன நடையில் நூல்கள் எழுதினால் கல்லூரி பாட நூலாக அமைக்கலாம் என்பதோடு நல்ல பொருளும் வரும் என்றும் ஆலோசனைக் கூறினர். இந்தச் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு, செய்யலாமா வேண்டாமா, என யோசித்துக் கொண்டிருந்தார் உ.வே.சா. 

பழந்தமிழ் நூலாராய்ச்சியில் ஒன்றிப்போன உள்ளத்திற்கு இந்தப் புதிய சிந்தனைகள் நிலையான நிறைவைத் தராது என்றே அவரது எண்ண ஓட்டம் இருந்தது. ஆக, வேறு திசையில் செல்லாது தனது நோக்கம் கெடாது, பழந்தமிழ் நூல்களைத் தேடி ஆராய்ந்து அவற்றை அச்சுப்பணியாக்கம் செய்ய வேண்டும் என்ற ஒன்றைச் செய்வதையே தம் குறிக்கோளாக நிலையாக்கிக் கொண்டார் உ.வே.சா. 

திருத்தருப்பூண்டி நகரில் அப்போது முன்ஸீபாக இருந்த வடக்குப்பட்டு த.சுப்பிரமணிய பிள்ளை என்ற ஒருவர் ஆங்கிலப்புலமை பெற்றிருந்தாலும் தமிழ் மொழி இலக்கியங்களில் நிறைந்த ஆர்வத்தைக் கொண்டிருந்தார். அவர் முருகப்பெருமானைத் துதித்து அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் ஓலைச்சுவடிகளைத் தேடி ஆராய்ந்து கொண்டிருந்தார். பலரிடம் உள்ள சுவடிகளைப் பெற்று, பாடபேதம் கண்டு ஆராய்ந்து திருப்புகழை முழுமையான அச்சுப்பதிப்பாக கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் சுப்பிரமணிய பிள்ளை அவர்களுக்கு இருந்தது. நிறைந்த உழைப்பைச் செலுத்தி இப்பணிகளை அவர் செய்து வந்தார். உ.வே.சாவிற்கு அவரது அறிமுகம் கிடைத்தது. திருப்புகழ் பதிப்புப்பணியில் அவருக்கிருந்த ஆர்வத்தைக் கண்டு அவர் பால் உ.வே.சாவிற்கு மேலும் அன்பு உண்டாயிற்று. திருப்புகழ் பணியை சுப்பிரமணிய பிள்ளை செய்து கொண்டிருக்கும் போது அச்சுப் பிரதிகளில் புருப் பார்க்கும் பணியில் உ.வே.சாவும் அவருக்கு உதவினார். புறநானூற்றுப் பதிப்புப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தன. 

அவ்வேளையில் உ.வே.சாவின் மனதை வறுத்தும் துன்பகரமான நிகழ்வு ஒன்று அவர் வாழ்வில் நடந்தது.