Sunday, December 17, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 139

ஜி.யூ போப் எழுதிய கடிதம் உ.வே.சாவிற்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. அறிஞர்களுக்கு ஊக்க மருந்தாக அமைபவை பாராட்டு மொழிகளும் ஆலோசனைகளும் தானே. ஆக, தனது அடுத்த கடிதத்தோடு உ.வே.சா தனது அச்சுப்பதிப்பாகிய புறப்பொருள் வெண்பாமாலை நூல் பிரதி ஒன்றினை அனுப்பி வைத்தார். அதற்கு 21.10.1895 தேதியிட்டு ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தின் பேலியல் காலேஜிலிருந்து போப்பின் கடிதமொன்று பதிலாக வந்தது. 

அக்கடிதத்தில் அந்த நூல் ஆக்ஸ்பர்ட் நூலகத்தில் இடம்பெறுவதாகவும், தான் உடல் ஆரோக்கியம் குன்றி இருப்பதாகவும், உ.வே.சாவின் பதிப்பு முயற்சி மிகச் சிறப்பாக இருப்பதாகவும் குறிப்பிட்டு எழுதியிருந்தார் ஜி.யூ போப். அத்தோடு ”பழந்தமிழ் நூல்களெல்லாம் புதுத் தமிழர்களுக்கு விளங்கும்படி செய்ய வேண்டும். அதற்கு வழி செய்யுங்கள்,,,,,,” என்றும் குறிப்பிட்டிருந்தார். 

பிறகு ஒரு இடைவெளிக்குப் பிறகு 3.1.1896 அன்று தேதியிட்ட ஒரு கடிதம் ஜி.யூ போப் அவர்களிடமிருந்து உ.வே.சாவிற்கு வந்தது. அதில் தான் புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய இரு நூல்களையும் படித்து எளிதில் புரிந்து கொண்டு மகிழ்ந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். தற்சமயம் தான் பாரி, அவன் மகள்கள், கபிலர், கோப்பெருஞ் சோழன், பிசிராந்தையார், பொத்தியார் முதலானவர்களைப் பற்றி ஆராய்ந்து ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருப்பதைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அத்தோடு பல்கலைக்கழகத்தில் சொல்லி ஜி.யூ போப் தான் பதிப்பித்த நாலடியார் நூல் ஒன்றினை ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தில் சொல்லி அனுப்பியதாகவும் அது உ.வே.சாவிற்கு வந்து சேர்ந்ததா என்றும் வினவியிருந்தார். அந்த நூல் உ.வே.சாவிற்கு வந்து சேர்ந்தது. 

ஐரோப்பிய தமிழ் அறிஞர்கள் மிகத் தீவிரமாகத் தமிழ் கற்றதோடு தமிழ் அச்சுப்பதிப்பாக்க முயற்சியில் செயல்பட்டிருந்தமையை இத்தகைய சான்றுக் குறிப்புக்களின் வழி நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது. 

ஜி.யூ போப் எழுதிய  கடிதத்தை வாசித்த உ.வே.சா வின் சிந்தனையை அவரது வரிகளிலேயே வாசிப்பது சுவையானது. இப்படிச் சொல்கின்றார். 

”அவர் அனுப்பச் செய்த நாலடியார் எனக்குக் கிடைத்தது. அவர் எவ்வளவு ஊக்கத்தோடும் ஆவலோடும் தமிழ் நூல்களை ஆழ்ந்து  படிப்பவரென்பதை இக்கடிதத்திலிருந்து உணர்ந்து கொண்டேன். எந்த விஷயத்தையும் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும், தெரிந்ததைப்  பிறருக்கு விளங்கும்படி வெளியிட வேண்டுமென்ற அவர் கொள்கை எனக்கு மிகவும் உவப்பாக இருந்தது. பாரிஸ் நகரத்தில் இருந்த ஜூலியன் வின்ஸோனது தமிழன்பையும் ஆக்ஸ்போர்டிலிருந்த போப்பினுடைய தமிழன்பையும் ஒப்பிட்டுப் பார்ப்பேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு முறையில் சிறப்புடையதாக இருந்தது. இருவரிடத்தும் விடா முயற்சியும் மேற்கொண்ட காரியத்தில் ஆழ்ந்த அன்பும் இருந்தன. நம் நாட்டினரிடத்தில் இக்குணங்கள் இல்லாமையால் சோம்பலுக்காளாகி வாழ்நாளை வீணே கழிக்கின்றனரென்றெண்ணி வருந்தினேன்.” 

அன்று உ.வே.சா மனம் வருந்தியது போன்றே தான் இன்றும் நாம் மனம் வருந்திக் கொண்டிருக்கின்றோம். ஐரோப்பிய தமிழறிஞர்கள் சிலர் நம் தமிழ் மொழியின் பால் ஆர்வத்துடன் ஈடுபட்டு ஆய்வு மேற்கொண்டது போலக்கூட இன்று தரமான ஆய்வுகள் வருவது அருகிவிட்டது. அன்று அந்த அறிஞர்கள் மேற்கொண்ட உழைப்பு இன்று தமிழ் மொழி ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்திலும் ஜெர்மனியிலும் டென்மார்க்கிலும் பாரீசிலும் அறியப்பட்ட உலக மொழியாக இடம்பெறுவதற்கு அடித்தலம் அமைத்த செயல்பாடுகளாக அமைந்தான் என்பதை நம்மில் எத்துணை பேர் அறிந்திருக்கின்றோம்? 

தொடர்ந்து ஜி.யூ போப் அவர்களுக்கு உ.வே.சாவிற்கு கடிதப்போக்கு வரத்து நிகழ்ந்து வந்தது. தாம் புறநானூற்றிலிருந்தும் புறப்பொருள் வெண்பாமாலை நூலிலிருந்தும் பல செய்யுட்கலைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளதாகவும் ஜி.யூ போப் குறிப்பிட்டிருந்தார். ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் இத்தகைய மொழி பெயர்ப்புக்களை வைத்து தனக்கு அவர் புத்தாண்டு செய்தி அனுப்பியதை உ.வே.சா பதிகின்றார். அக்கடிதங்கள் அவருக்கு ஊக்கம் தரும் மருந்தாகவும் அமைந்தன. 

”இத்தகைய உண்மை உழைப்பாளிகளுடைய நட்பினால் தமிழ்ப் பணியில் என் மனம் ஊற்றமடையலாயிற்று. மணிமேகலை ஆராய்ச்சி நடைபெற்று வந்தது.”

தொடரும்.

சுபா

No comments:

Post a Comment