Tuesday, December 26, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 146

சாதி வலியது. கொடியது!

நூல்களை வாசிப்பதனால் பல அனுகூலங்கள் இருக்கின்றன. அதிலும் இன்று வாசிக்கும்போது, இன்றைய காலகட்டங்களிலிருந்து பின்னோக்கிய செய்திகளைச் சொல்லும் நூல்கள் நமக்கு முக்கிய வரலாற்று ஆவணங்களாகவே திகழ்கின்றன. 

'என் ஆசிரியப்பிரான்' என்ற தனது நூலில் கி.வா.ஜ அவர்கள் தன் ஆசிரியரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய செய்திகளை அவர் மறைவுக்குப் பின்னர் எழுதி வெளியிட்டுள்ளார். 1983ல் இந்த நூல் மகாமகோபாத்தியாய டாக்டர். உ. வே.. சாமிநாதயர் நூல் நிலயத்தின் பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்தது. என் சரித்திரம் நூலின் தொடர்ச்சி எனப் பார்க்கப்படும் நூல் இது எனலாம்.

​இதில் ஆறாம் அத்தியாயத்தில் 'பழைய மரபு' என்ற தலைப்பில் உ.வே.சாவின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு செய்தியைப் பகிர்கின்றார். இது சாதிப்பிரிவினைத் தொடர்பானது. இச்செய்தியை​ ஒதுக்கித் தள்ளி செல்ல முடியாத ஒரு பகுதியாக நான் கருதுவதால்  இந்த நிகழ்வைப் பற்றியும் அதில் உ.வே.சா கொண்டிருந்த சார்பு நிலையைப் பற்றியும் இத்தொடரில் குறிப்பிட வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்.

​கி.வா.ஜா,   ​"அந்தக் காலத்தில் பாண்டிய நாட்டில் கோவில்களில் நாடார்கள் புகுவது இல்லை. எத்தனையோ நாடார்கள் நல்ல பழக்கங்களை உடையவர்களாகவும், சிவ பக்தியில் சிறந்தவர்களாகவும் இருந்தார்கள். என்றாலும் நாடார் என்ற சாதியை எண்ணி, அவர்களைக் கோவிலுக்குள் விடுகிற பழக்கம் இல்லாமல் இருந்தது."  என்று குறிப்பிடுகின்றார்.​

சமூகத்தில் மக்களைச் சாதியால் பிரித்து, இவர்கள் உயர்ந்தவர்கள், இவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற ​கருத்தினை வலியத் திணித்து தாழ்த்தப்பட்டோர் என்ற ஒரு கருத்தைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து தம்மை உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்ளச்செய்த முயற்சிகள் காலம் காலமாகத் தொடர்ந்தாலும், 18ம், 19ம் நூற்றாண்டுகளில் இது மிக அதிகமாகவும் தீவிரமாகவும் இருந்ததோ என நான் ஐயமுறுகின்றேன். சாதிப் பிரிவினையைச் சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்த சில முயற்சிகள் நடந்தன என்பதனையும் அவ்வகையான சில நடவடிக்கைகளில் உ.வே.சாமிநாதையர் தானும் தனது பங்களிப்பை வழங்கியிருக்கின்றார் என்பதுவும் வேதனைத் தரும் உண்மையே.

கி.வா.ஜா அவர்கள் தரும் தகவல்களின் அடிப்படையில், இராமநாதபுரம் ஜமீனைச் சார்ந்த கமுதி என்ற கிராமத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் அச்சமயம் நாடார் சமூகத்தைச் சார்ந்தோர் அக்கோயிலில் நுழைந்தார்கள் என்றும் அதனைப் பலர் தடுத்ததாகவும், இதனால் ஒரு கலகம் ஏற்பட்டதாகவும் அறிய முடிகின்றது. இது 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் அயோத்திதாசப் பண்டிதர், தந்தை பெரியார் போன்றோரின் சீர்திருத்தக் கருத்துக்கள் பொது மக்கள் மத்தியில் பரவத் தொடங்கியதால் ஏற்பட்ட மக்கள் விழிப்புணர்ச்சியின் பலனாகத் தொடங்கிய முயற்சிகளாக இருக்கலாம்.

இராமநாதபுரம் மன்னர் பழைய மரபுகளை மாற்றக்கூடாது என்ற எண்ணம் கொண்டவராம். ஆக, நாடார் சமூகத்தார் கோயிலுக்குள் நுழைந்தமையை எதிர்த்து அவர்கள் மீது நீதிமன்றத்தில் அப்போது ஒரு வழக்கு தொடர்ந்திருக்கின்றார். பல காலமாக இருந்து வரும் பழக்கத்தை மாற்றுவதால் தமக்குப் பழி வரும் என நினைத்து அவர் அப்படிச் செய்திருக்கலாம் என கி.வா.ஜ குறிப்பிடுகின்றார். அவருக்கும் பல நாடார் சமூகத்து நண்பர்கள் இருந்ததாகவும் ஆனாலும் கூட மரபை மீறக்கூடாது என்ற கொள்கையுடன் செய்தார் என கி.வா.ஜ குறிப்பிடுகின்றார்.

​மதுரை நீதிமன்றத்தில் இந்த வழக்கு வந்திருக்கின்றது. மன்னருக்குச் சார்பாக வழக்கில் சாட்சி சொல்ல வந்தவர்களில் உ.வே.சாமிநாதயர் அவர்களும் ஒருவர் என்று கி.வா.ஜ குறிப்பிடுகின்றார். அதில் "நாடார்களைப் பற்றி இழிவாகக் கூறாமல் அவர்களில் எத்தனையோ பக்தர்கள் இருக்கின்றார்கள் என்று சொல்லி, ஆனாலும் மரபு பிறழக்கூடாது என்று வற்புறுத்தினார்" என்று குறிப்பிடுகின்றார்.

தீர்ப்புக் கூறிய நீதிபதி டி.வரதராவ் என்பவர், உ.வே.சே சிறந்த தமிழறிஞர், தமிழுக்குத் தொண்டு செய்தவர், பல அறிய நூல்களை வெளியிட்டு தமிழன்னையின் அன்பைப் பெற்றவர் என்று புகழ்ந்து, ஆகவே அவர் சொல்வது தகுதியாக இருப்பதாகச் சொல்லிப் பாராட்டி தீர்ப்பளித்திருக்கின்றார்.

கொடுமை!

இன்னார் இன்னார்தான் கோயிலுக்குள் செல்லலாம்; இந்தச் சாதியினர்தான் சிவாலயங்களுக்குள் செல்ல பிறப்பால் தகுதி படைத்தவர்கள் என்ற சிந்தனை இவ்வளவு தீவிரமாக இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வரை இருந்தது என்பதை இந்தச் செய்தி நமக்குக் காட்டுகின்றது. மிக அதிகமாக நூல்களை வாசித்தவர், மிகப் பெரும் தமிழ்ப்பணியை ஆற்றியவர், மத வேறுபாடுகள் களைந்து சமண பௌத்த நூல்களை வெளியிட்டவர் என்ற சிறப்புக்களையெல்லாம் பெற்றிருந்தாலும் கூட சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் கவனித்து மனிதருக்குள் அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் தேவையற்றது எனக் கூறாமல் சாதியால் மக்களைப் பிரித்து வைத்த சமூகத்தில் தானும் ஒருவராகவே உ.வே.சாமிநாதையர் தன்னை அடையாளம் காட்டிக் கொள்கின்றார். அவரது காலத்தில் தான் தமிழகத்தின் பல இடங்களில் சாதிக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வந்தன. மக்கள் எழுச்சி மிகத் தீவிரமாக ஏற்பட்டு வளர்ந்த காலகட்டமது. அந்தக் குரல்கள் அவர் செவிகளுக்கும் மனதிற்கும் எட்டவில்லை போலும்.  தனது ஆதரவை சாதிப் பிரிவுகளைத் தக்க வைக்கப் போராடிய ஆதிக்கவர்க்கத்துடன் இணைந்திருக்கும் வகையிலான சார்பு நிலையையே உ.வே.சா கொண்டிருந்தார் என்பது, நாம் விரும்பாவிட்டாலும் உண்மை என்பது புலப்படுகின்றது.

தொடரும்..

சுபா

No comments:

Post a Comment