Sunday, December 31, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 150

வயதாகிவிட்டது. இனி செய்வதற்கு என்ன இருக்கின்றது, என வருந்திக் கொண்டிருப்பவர்கள் பலர். வயதை ஒரு பொருட்டாகக் கருதாது சிந்தனாசக்தி இயங்கிக் கொண்டிருக்கும் வரை பணி செய்து கொண்டிருக்கும் மனிதர்கள் தான், தனது ஒவ்வொரு நாட்களையும் வாழ்கின்றார்கள். பயனுள்ளதாக்குகின்றார்கள்!

உ.வே.சாவின் இறுதி நாள்வரை தொய்வே இல்லாமல் அவர் பணியாற்றியிருக்கின்றார்.

1942ம் ஆண்டு ஜனவரி மாதம், உ.வே.சா, தன் வீட்டின் மேல் மாடியிலிருந்து கீழே வரும்போது படியில் விழுந்து கால் முறிவு ஏற்பட்டது. வயோதிகக் காலம் வேறு. படுத்தப் படுக்கையாகி விட்டார். அந்தக் காலகட்டத்தில் இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்ததன் பிரதிபலிப்பு தமிழகத்தின் மெட்ராஸிலும் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான ஒரு வீடு திருக்கழுக்குன்றத்தில் இருந்தது. அங்கே போய் தங்குவதே சரியான பாதுகாப்பாக இருக்கும் என உறவினரும் நண்பர்களும் சொல்ல அங்கே சென்று விட்டார். நூல்களையும் சுவடிக்கட்டுக்களையும் விட்டு வருகின்றோமே என்ற வருத்தம் அவருக்கு மனம் முழுதும் நிறைந்திருந்தது நூல்களைப் பிரிந்து அவரால் இருக்க முடியாததால் அவரது சேகரிப்புக்களைத் திருக்கழுக்குன்றத்து வீட்டிற்குக் கொண்டு வர வைத்தார்கள். மெட்ராஸிலிருந்து பத்து மாட்டு வண்டிகளில் இந்த நூல்களைக் கொண்டு சென்றார்கள் எனக் குறிப்பிடுகின்றார் கி.வா.ஜ. அந்த வேளையில் கம்பராமாயணத்தையும் தேவாரப்பதிகங்களையும் சீரிய பதிப்பாக வெளியிட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்ததால் அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தார். அதே ஆண்டு தனது வாழ்வில் மிக முக்கிய இடம் வகித்தவர்களுள் ஒருவரான வித்துவான் தியாகராச செட்டியார் அவர்களது வாழ்க்கைச் சரிதத்தையும் வெளியிட்டார். தன் வீட்டின் பெயரையும் 'தியாகராச விலாசம்' என உ.வெ.சா பெயரிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

ஏப்ரல் மாதம் 28ம் தேதி இந்த உலகை விட்டு உ.வே.சா அவர்களது உயிர் நீங்கியது. தமிழ் உலகில் நீங்காப்புகழை மட்டும் எடுத்துக் கொண்டு தனது உறவினர்களையும், நண்பர்களையும், தனது மாணாக்கர்களையும் தான் நேசித்த நூல்களையும், இவ்வுலகையும் விட்டு நீங்கினார்.

உ.வே.சா அவர்களின் மறைவுச் செய்தி தமிழ் உலகில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது என்பதை அவருக்கு வந்து சேர்ந்த இரங்கற்பாக்கள் சான்று பகர்கின்றன.

தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் ஆராய்ச்சி, தமிழ் நூல் அச்சுப்பதிப்பாக்கம், மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தல் என்ற சிந்தனையுடனே அவர் செலவிட்டிருப்பதை அவரது வாழ்க்கைச் சரித்திரம் காட்டுகிறது. தேடல்.. தேடல்.. தேடல்.. என அவர் நிகழ்த்திய தேடலில் நமக்குக் கிடைத்தவை தமிழின் அருந்தவச் செல்வங்கள். ஏறக்குறைய 100 நூல்கள் அவர் பதிப்பித்தும் எழுதி வெளியிட்டும் எனத் தமிழ் உலகிற்குக் கிடைத்திருக்கின்றன. அவற்றுள் சங்கத்தமிழ் நூற்பதிப்பும், காப்பிய நூற்பதிப்பும் அவர் உழைப்புக்கு மகுடமாக அமைகின்றன.

உ.வே.சாவின் ஆய்வு உத்தி என்பது வெறும் நூல்களை அலசுவது மட்டுமன்று. பலதரப்பட்ட மக்களுடனும் கலந்து பேசுவதன் வழி தனக்குக் கிடைக்கும் அனுபவங்களையும் அறிவுத் தெளிவையும் அவர் தனது ஆராய்ச்சியின் ஒரு பகுதியாகவே பயன்படுத்தியிருக்கின்றார். உதாரணமாக 'நினைவு மஞ்சரி பாகம் 1', எனும் நூலில் வரும் இடையன் எறிந்த மரம் என்ற கட்டுரையில் அவர் விவரிக்கும் சம்பவம் சுவையானது.

அதன்படி, 1937ம் ஆண்டு திருப்பனந்தாள் காசி மடத்திற்குச் சென்றிருந்த போது மடத்தில் மாடுகளை மேய்ப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஒரு இடையன் ஒருவரிடம் தாம் பேசிக் கொண்டிருந்தபோது தமக்கு அந்த இடையனின் பேச்சிலிருந்து செய்யுளுக்குப் பொருள் கிடைத்தது என்று குறிப்பிடுகின்றார். அந்த மனிதர், இடையர் சமூகத்தில் வழங்கப்படும் பழமொழிகளைச் சொல்லியிருக்கின்றார். "நல்லெருமை நாகு, நற்பசு சேங்கன்று, ஆடு கிடாய், அடியாள் பெண்பெற" என்று அவர்கள் வழக்கில் சொல்லி வாழ்த்துவார்களாம். நாகு எனும் சொல் பெண் எருமையைக் குறிப்பது என விளக்குகின்றார்.

அதோடு 'இடையர்கள் ஆடுமாடுகளுக்கு உணவு அளிப்பதற்காக மரக்கிளைகளை வெட்டிச் சாய்ப்பார்கள்' என்றும் அவர்களது வாழ்வியல் முறையை விளக்கியிருக்கின்றார் அந்த இடையன். ஏன் அடியோடு வெட்டுவதில்லை, என உ.வே.சா கேட்க, அதற்கு அந்த இடையனோ "அப்படி வெட்டிவிட்டால் அந்தக் கிளை பிறகு உபயோகமில்லாமற் போய்விடும். நாங்கள் வெட்டும் கிளையோ மரத்தோடு ஒட்டிக்கொண்டிருப்பதால் மறுபடியும் தழைக்கும்." என்று விளக்கம் சொல்லியிருக்கின்றார். இந்த விளக்கத்தை தாம் கேட்டபோது, 'இடையன் எறிந்த மரம் முழுவதும் அறாமல் அரைகுறையாக உயிர் வைத்துக் கொண்டிருக்கும்' என்ற எண்ணத்தை அவன் கூறிய விடை உண்டாக்கியது என்றும்,  "இடைமகன் கொன்ற வின்னா மரத்தினேன்" (1914), என்ற சீவக சிந்தாமணி அடி ஞாபகத்திற்கு வந்தது.' எனவும் குறிப்பிடுகின்றார் உ.வே.சா.

அதோடு, அந்த 'இடையன் சொல்லிவந்த செய்திகள் இலக்கியப் பொருளைத் தெளிவாக விளக்கின. இலக்கியங்களில் இடையர்களைப் பற்றி வருணிக்கும் இடங்களில், 'ஒடி யெறிதல்' என ஒரு தொடர் வரும். "ஒடிய எறிதல்" என்பதே அவ்வாறு விகாரப்பட்டு வந்தது. இடையர்கள் ஒடிய எறியார்களே அன்றி அற்றுவிடும்படி எறியார்கள் என்பதை அத்தொடர் குறிப்பதை அப்போது தெளிவாக நான் உணர்ந்தேன்', எனக் குறிப்பிடுகின்றார்.

உ.வே.சா கேட்கக் கேட்க அந்த இடையனுக்கும் ஆர்வம் மேலிடுகின்றது. மேலும் ஒரு பழமொழி சொல்கின்றார். " 'இடையன் வெட்டு அறா வெட்டு' என்ற பழமொழியைத் தான் சொல்லுகிறேன். எங்கள் கைப்பழக்கத்தை அந்தப் பழமொழி தெரிவிக்கிறதே." என்றார் அந்த இடையன். பெரியதிருமொழி பாசுரம் ஒன்றில் இதே உவமை வரும் செய்யுளான,
*"படைநின்ற பைந்தாமரையோடணி நீலம்
மடை நின் றலரும் வயலாளி மணாளா
இடய னெறிந்த மரமேயொத் திராமே
அடைய வருளா யெனக்குன்ற னருளே!"
என்ற செய்யுள் உடன் உ.வே.சாவிற்கு நினைவு வந்து அதன் பொருளை தெளிவு படுத்தியதை நினைத்து வியந்து எழுதுகின்றார்.


கல்வி என்பது புத்தகப்படிப்பால் மட்டும் வருவதன்று. வாழ்க்கையில் அன்றாடம் நாம் காணும், அனுபவிக்கும், செயல்படுத்தும் ஒவ்வொரு சிறு சிறு விசயங்கள் கூட தனி ஒரு மனிதருக்குக் கல்வியைப் புகட்டிக் கொண்டேயிருக்கின்றன.

நம் மனம் திறந்திருக்கும் போது உலகம் நமக்குக் காட்டும் புதிய பாடங்களைப் பார்த்து அறிந்து, நம் கற்றலை நாம் மேம்படுத்திக் கொண்டே நம் சிந்தனையில் வளர்ச்சி காண முடியும். நம் முன்னோர்கள் சொல்லிவிட்டார்கள், அதனால் செய்கிறேன் என்பதோ, முன்னோர்களுக்குத் தெரியாதது இன்றைய நமக்குத் தெரிந்து விடப்போகின்றதா என சிந்தனைச் செயல்பாட்டை அடக்கிக் குறுக்கி வாழ்வதோ, முன்னோர்கள் செய்தவற்றைக் கேள்வி கேட்காமல் செய்வதே மரபு, பண்பு என்று சொல்லிக் கொண்டிருத்தலோ கல்வி அறிவை வளர்க்காது. மாறாக மூடத்தனத்தையே வளர்க்கும்.

வாழ்க்கையில் மேன்மை என்பது தானாகக் கிடைத்து விடாது. அதற்குக் கடும் உழைப்பு வேண்டும். புதியன தேடிக் கொண்டேயிருத்தல் வேண்டும். சலிக்காத உழைப்பு வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபட தயக்கமும் அச்சமும் இல்லாதிருக்க வேண்டும். இத்தகைய பண்புகளுக்கு உதாரணமாகத் தான் வாழ்ந்து மறைந்திருக்கின்றார் உ.வே.சா.

உ.வே.சாவை வணங்கிப் போற்றுவது என்பது ஒரு புறமிருக்க, அவர் நிகழ்த்திய தொய்வில்லாப் பணி போல இன்னும் அச்சுக்கு வராத ஏராளமான தமிழ் ஓலைச்சுவடிகளைப் பதிப்பாக்கம் செய்யவேண்டிய கடமையை முன்னெடுப்பதே சாலச்சிறந்தது. இன்று பலர், உ.வே.சாவைப் போற்றுகின்றோம் என்க் கூறிக்கொண்டு,  நிகழ்ச்சிகளை நடத்தி பொன்னாடை போர்த்தி பேசி, சிலாகித்துச் செல்வதால் மட்டும் என்ன பயன் விளைந்து விடப்போகின்றது?

எண்ணற்ற சுவடி நூல்கள் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலும், இந்தியாவிலும், ஐரோப்பிய, அமெரிக்க, ஆசிய நாடுகளின் நூலகங்களிலும் ஆவணப்பதுகாப்பு மையங்களிலும் உள்ளன. அவை அப்படியே பெட்டிக்குள் முடங்கிக் கிடப்பதால் தமிழ் உலகுக்கு என்ன பயன்? அவற்றைத் தேடிக் கண்டுபிடித்து, அவற்றைப் பற்றிய தகவல்களைத் தமிழ் கூறு நல்லுலகம் அறியச் செய்வதும், அவற்றை இன்றைய கணினி தொழில்நுட்பத்தின் துணை கொண்டு பதிப்பாக்கம் செய்து வெளியிடுவதும் அவசியம் அல்லவா? அத்தகைய பணியில் தமிழ் மரபு அறக்கட்டளை ஈடுபட்டு வருகின்றோம் எனச் சொல்லிக் கொள்வதில் என் மனம் பெருமை கொள்கின்றது.

'என் சரித்திரம்' நூலில் உ.வே.சாவுடன் நான் சென்ற உலா, எனக்கு வரலாற்று ரீதியான பல செய்திகளை வழங்கியது. 19ம் 20ம் நூற்றாண்டு தமிழ் அச்சுப்பதிப்பாக்க முயற்சிகள் தொடர்பான, நான் அறிந்திராத பல கோணங்களை அவரது எழுத்துக்கள் எனக்குத் தெளிவு படுத்தின. அவரது தளராத முயற்சிகள் என்னுள்ளே தேடுதலில் ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்தன. தமிழ் உலகம் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை உ.வே.சா என்பது உண்மை!

முற்றும்

சுபா

No comments:

Post a Comment