Tuesday, March 20, 2018

மலேசியாவில் சாதி

தகவலுக்காகச் சாதி தொடர்பிலான சில செய்திகளை நான் பதிய வேண்டியது அத்தியாவசியமாகின்றது.

இளம் வயதில் மலேசியச் சூழலில் நான் வளர்ந்த போது சாதி பற்றிய அறிமுகம் எனக்கு சிறிதும் ஏற்படவில்லை. மலாயாவின் தோட்டப்புறங்களுக்கு கடந்த 250 ஆண்டுகளில் கூலித் தொழிளாளியாக வந்தோர், சாதி வேறுபாட்டை அனுசரிக்க முடியாத சூழலில் வாழ்க்கையின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் நிலையில் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு சாதி பேதமின்றி தான் வாழ்ந்தனர்.

மலேசியாவைப் பொறுத்தவரை கடந்த 300 ஆண்டு கால கட்டத்தில் தமிழகத்திலிருந்து வந்தோரில் குறிப்பிடத்தக்க பெரும்பாண்மையில் வந்த சாதிக் குழுக்களாக கவுண்டர்-வன்னியர், பறையர், தேவர்-கள்ளர் என்ற இந்த மூன்று சாதிச் சமூகக் குழுவினரையே குறிப்பிடலாம். சற்று குறைந்த எண்ணிக்கையில் முதலியார், வர்த்தகத்தை விரிவாக்கிய செட்டியார் ஆகியோரை அடுத்த பெரும் குழுவாகச் சொல்லலாம். இலங்கை யாழ்ப்பாணத்து சைவ வேளாளர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்கள். பிராமணர்கள், முத்தரையர்கள் போன்ற சாதியினர் குறைந்த எண்ணிக்கையில் தான் மலேசியாவில் வாழ்கின்றனர்.
இவர்களைத் தவிர்த்து தெலுங்கர்கள் பெருவாரியாக வந்தாலும் அவர்களும் தமிழர்களோடு கலந்து விட்டனர் என்பதைக் காணலாம். இந்தியர்கள் என பொது அடையாளப்படுத்தலில் அடங்கினாலும் பெருவாரியான, அதாவது 95%, தமிழ் மக்கள் தான் எனத் தயங்காது சொல்லலாம். ஏனைய மலையாள, குஜராத்தி, தெலுங்கு மக்களும் தமிழையும் கற்று தமிழ் பேசுகின்றனர். இருப்பினும் குஜராத்தி, தெலுங்கு, கேரள அமைப்புக்களும் செயல்பட்டு வருகின்றன என்பதை மறுக்க முடியாது.
கடந்த 20 ஆண்டு கால சூழலில் இந்த ”தமிழர்” என்ற ஒற்றை அடையாளச் சமூகச் சூழலில் மாற்றத்தைப் பார்க்கிறேன்.
வன்னியர் சங்கம் வந்து விட்டது, செயல்படுகின்றது.
முக்குலத்தோர் சங்கம் செயல்படுகிறது.
பறையர் சமூகத்தைப் பிரதிநிதிக்கும் அமைப்புக்கள் இயங்கி வருகின்றன.
புதிதாக முதலியார் அமைப்பும் தொடங்கியுள்ளதாம்.
இன்றைய மலேசியாவைப் பொறுத்த வரை பொருளாதார ரீதியில் அனைத்து சாதியினருமே நல்லதொரு நிலையில் தான் வாழ்கின்றனர். அரசின் இலவசக் கல்வி அனைவருக்கும் பொதுவான வாய்ப்பினை வழங்கியதால் ஏற்பட்ட சமூக நலன் இது என்று சொல்வேன்.
நான் கல்வி கற்று வளர்ந்த காலத்தில் இல்லாத சாதி தொடர்பான நடவடிக்கைகளை இன்று கேள்விப்படுகின்றேன். வேதனை அடைகின்றேன்.
மலேசியாவில் சாதியை மீள் அறிமுகம் செய்ததில் பெரும் பங்கு தமிழகச் சினிமாத்துறையையே சேரும். எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றி வளர்த்த கதையாக சாதிப்பிரிவினையை வளர்க்கும் தமிழக அரசியல் கட்சி ஒன்று செய்த முன்னெடுப்பால் சாதி ஆர்வம் மேலோங்கி சங்கம் வளர்ந்து இன்று பிரிக்கமுடியாத அமைப்பாக வளர்ந்து நிற்கின்றது.
மலேசிய தமிழர்கள் சற்று சிந்திக்க வேண்டும். மலேசியத் தமிழ்ச்சூழல் தமிழகச் சூழலை விட வேறுபட்டது. மலேசியாவின் ஏனைய இரண்டு பெரும் இனங்களான சீனர்கள், மலாய் இனத்தாரோடு போட்டி போட்டு நாம் வளர வேண்டுமென்றால் ”தமிழர்” என்ற ஒற்றைக் குடையின் கீழ் நாம் இருப்பது மட்டுமே அதற்கு வழிவகுக்கும்.
இந்தச் சூழலில் “தமிழர்” என்ற சிந்தனையை முன்னெடுக்கும் தமிழக அரசியல் கட்சி ஒன்று இங்கு தன் கிளை அமைப்பினைத் தொடங்கி “உன் சாதி என்ன..”. எனக் கேள்வி கேட்டு பிரித்தாளும் முயற்சியைத் தொடங்கியிருப்பதும் வேதனைக்குறிய, கண்டிக்கத்தக்க செயலாகக் காண்கின்றேன்.
மலேசியத் தமிழர்களே...வாருங்கள்..
சாதி அமைப்புக்களை விட்டு விலகி தமிழர் என்ற சிந்தனையோடு நமது செயல்பாடுகளை முன்னெடுப்போம்!
-சுபா